உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, January 10, 2016

என் புகுந்த வீடு - 4

முன்குறிப்பு: ‘நீங்கள் விகடனில் சேர்ந்து பத்துப் பதினைந்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். எனவே, நீங்கள் இந்தப் பதிவில் தொடரும் போடுவதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. ’ என்பதாக செல்போனிலும், ஃபேஸ்புக் உள்டப்பியிலும்,  திரு.சுரேஷ்கண்ணன் உள்படப் பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். தொடரும் போடுவது சுவாரஸ்யத்துக்காக அல்ல. இது கற்பனைக் கதை இல்லை. எனவே, இதில் சுவாரஸ்யத்தையும் திடுக் திருப்பங்களையும் வலிந்து திணிக்கவும் முடியாது. நடந்தவற்றை ஞாபகப்படுத்திக்கொண்டு என்போக்கில் எழுதிக்கொண்டு போகிறேன். எல்லாவற்றையும் ஒரே பதிவில் எழுதிவிட முடியாது; படிப்பவர்களுக்கும் அலுப்புத் தட்டும் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வருகிறேன். எனவேதான், இடையில் தொடரும் போட வேண்டிய கட்டாயம். மற்றபடி, சுவாரஸ்ய  நோக்கம் காரணமில்லை.
தேறுமா, தேறாதா?

விகடனில் இந்த முறையும் வேலை கிடைக்கப் போவதில்லை என்கிற அவநம்பிக்கையோடும் ஏக்கத்தோடும் நான் மேலும் காத்திருக்கப் பொறுமையின்றி எழுந்தேன். அதே நேரம், ரிசப்ஷனிஸ்ட் பத்மினி என்னிடம் “நீங்கதானே ரவிபிரகாஷ்? உங்களை மேலே வீயெஸ்வி சார் வரச் சொன்னார்” என்றார்.

மேலே போனேன். “வாங்க ரவிபிரகாஷ், நீங்க விகடன்ல சேர்ந்தாச்சு!” என்று கைகுலுக்கினார் வீயெஸ்வி. “நம்ம ஸ்டாஃப்களையெல்லாம் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன் வாங்க” என்று அவரது அறையை விட்டு என்னை வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்.

இப்போதுள்ள இதே கட்டடம்தான். ஆனால், அன்றைக்கு உள்கட்டமைப்பு முற்றிலும் மாறுபட்டிருந்தது. முதல் மாடியில் நுழையும்போதே எதிரில் ஆசிரியரின் அறை இருக்கும். அதற்கு முன்பாக இடப்புறம் திரும்பும் நடைவழியில் இடப்புறமாக மதன் சார், ராவ் சாருக்கான அறைகளும், வலப்புறம் மீட்டிங் ஹாலும் இருக்கும். நேரே சென்றால், பெரிய ஹால். ஹாலின் கடைசியில் ஓரமாக வீயெஸ்வி மற்றும் பிரகாஷ் எம்.சுவாமிக்கான (அவர் அப்போது ஜூனியர் விகடன் பொறுப்பேற்றிருந்தார்)  தனி அறைகள் இருந்தன.

வீயெஸ்வியுடன் ஹாலுக்கு வந்தேன். ஹால் நடுவில் பெரிய இடம் விட்டு, ஓரமாக மேஜை, நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. இந்தப் பக்கம் ஒன்றும், அந்தப் பக்கம் ஒன்றுமாக இரண்டு கேபின்கள் இருந்தன. ஒன்றில் அப்போதைய விகடன் பொறுப்பாசிரியர் சுபா வெங்கட் இருந்தார்; மற்றொன்றில் ஜூனியர் விகடனின் பொறுப்பாசிரியர் கே.அசோகன் இருந்தார். இருவரிடமும் என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார் வீயெஸ்வி.

 பின்னர் ஹால் ஓரங்களில் அமர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்த ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் ஆசிரியர் குழுவினரிடம் ஒவ்வொருவரிடமாக என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். ரா.கண்ணன், உபைதுர்ரஹ்மான், கௌதம், ஆரோக்கியவேல் ஆகியோரை முதல் நாள் சந்தித்தது நினைவிருக்கிறது.

பின்னர் இரண்டாம் மாடிக்குச் சென்றோம். அங்கே பி.சுவாமிநாதன், சிவகுமார் மற்றும் பலரைச் சந்தித்தேன். தவிர, புரூஃப் ரீடர்கள் எனப் பத்து பேர் இருந்தனர்.

அடுத்து, டிடிபி செக்‌ஷனுக்கு என்னை அழைத்துப் போனார் வீயெஸ்வி. அங்கே ஏழெட்டு சிஸ்டம்களில் ஏழெட்டுப் பேர் அமர்ந்து கையெழுத்துப் பிரதிகளைப் பார்த்து கம்போஸ் செய்துகொண்டிருந்தார்கள். தினகர், ரேவதி என இருவர் அவர்களுக்குத் தலைமையாக இருந்தார்கள்.

கையெழுத்துப் பிரதி கம்போஸ் ஆகி வந்ததும், முதலில் அந்த பிரிண்ட் அவுட் புரூஃப்ரீடர்களிடம் போகும். அவர்கள் அனைவரும் ஒரு சுற்று அதைப் படித்துத் திருத்துவார்கள். பின்பு உதவி ஆசிரியர்களிடம் அந்த ஃபைனல் பிரிண்ட் அவுட் வரும். அவர்கள் எடிட் செய்து, திருத்தங்கள் செய்வார்கள். இப்படி ஏழெட்டு முறை திருத்தப்பட்டு,  இறுதி பிரிண்ட் அவுட் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்டிடம் போகும்.

மூன்றாவது மாடியில் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்கள் இருந்தார்கள். நீளமும் அகலமுமான பழைய கால தேக்கு மர மேஜையில் பிரபு, வேதா இருவரும் பெரிய பெரிய சார்ட் அட்டைகளில் பிரமாண்டமாக தலைப்பு எழுத்துக்களை எழுதிக்கொண்டும், அவற்றில் சில அட்டைகளை புத்தக அளவில் நறுக்கி வைத்துக்கொண்டு, அதில் மேட்டர் இடம்பெறும் பகுதியை அளந்து பென்சிலால் கோடு போட்டுத் தயார் செய்து வைத்துக்கொண்டும் இருந்தார்கள். அவர்களிடம் ஒரு டப்பா ரப்பர் சொல்யூஷன் இருந்தது. வரும் பிரிண்ட் அவுட்களைக் கத்தரித்து லே-அவுட்டுக்கேற்ப படங்களுக்கு இடம் விட்டு அந்த அட்டைகளில் ரப்பர் சொல்யூஷனால் ஒட்டுவார்கள். இப்படி ஒரு புத்தகத்துக்கான பக்கங்கள் அனைத்தும் அட்டைகளாகத் தயாரானதும் அவை ஸ்கேன் செய்யப்பட்டு, பிளேட் போடப்பட்டு, பிரஸ்ஸுக்குப் போகும். இதெல்லாம் நான் சாவி பத்திரிகையிலேயே பார்த்ததுதான். அங்கே டிடிபி-க்குப் பதிலாக ஹேண்ட் கம்போஸிங் செய்து, டிரெடில் மெஷினில் பிரதி எடுத்து, புரூஃப் படிக்கத் தருவார்கள். அதை ‘கேலி’ என்போம்.

லே-அவுட் செக்‌ஷனில் தலைமை ஓவியராக விவேக் இருந்தார். நான் விகடனில் இவரின் நகைச்சுவை ஓவியங்களைப் பார்த்து ரசித்துள்ளேன். தவிர, ஓவியர் வாணியும் அவ்வப்போது வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை விகடன் அலுவலகத்துக்கு வந்து, ஜோக்குகளுக்குப் படங்கள் வரைந்து தந்துவிட்டுப் போவார். விகடனிலேயே இதுவரை மிக அதிக காலம் பணிபுரிந்த ஓவியர்/ ஊழியர் அவர்தான். சுமார் 45 வருடங்கள்!

அங்கே அவருக்கென்று ‘போடியம்’ மாதிரி ஒரு மேஜை இருந்தது. அதில் சார்ட் அட்டை வைத்து,  நின்றுகொண்டேதான்  வரைவார். ஒரு ‘ஸ்ப்ரே கன்’னும் உண்டு. சின்ன ஸ்பூன் மாதிரி இருக்கும் அதில் கொஞ்சம் வாட்டர் கலர் விட்டு, ஸ்விட்ச் போட்டால், பூ மாதிரி தெளிக்கும். அதை கோட்டுப் படத்தின் மீது தேவையான இடத்தில் காண்பித்தால் ஷேடு விழும். அந்தக் கால ஓவியங்களில் அது ரொம்ப ஃபேமஸ். இன்றைய கணினி யுகத்தில், இதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறபோது ரொம்பத் தமாஷாக இருக்கிறது.

மூன்றாம் மாடியில் நான் பார்த்த இன்னொரு முக்கிய விஷயம் போட்டோ லைப்ரரி. ஜார்ஜ் என்பவரும், அவருக்கு உதவியாக ரவி என்பவரும் அதற்கு இன்சார்ஜாக இருந்தார்கள். பேங்க் லாக்கர் மாதிரி வரிசையாக இழுவைப் பெட்டிகள் கொண்ட, நீளமும் அகலமுமான ஒரு அலமாரி. தவிர, கூடவே, அடையாளக் கார்டுகள் கொண்ட ஒரு சின்ன பெட்டி. நாம் ஒரு போட்டோ கேட்டால், உடனே அந்த ஐடி கார்டுகளைத் தள்ளி, அடையாளக் குறியீட்டைக் கண்டுபிடிப்பார்கள். பின்பு, கரெக்டாக அந்த அலமாரியில் குறிப்பிட்ட இழுவைப் பெட்டியை இழுப்பார்கள். அதில் வரிசையாக ப்ரவுன் கவர்களில் படங்கள் இருக்கும். மேலே எழுத்துக்கள் இருக்கும். குறிப்பிட்ட ஒரு கவரை மேஜை மேல் எடுத்துப் போட்டுக் கவிழ்ப்பார்கள். கொட்டும் புகைப்படங்களிலிருந்து நமக்குத் தேவையான புகைப்படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைக்கு எல்லாமே டிஜிட்டல் மயமாகி, கம்ப்யூட்டரில் ஸேவ் ஆகியுள்ளது.

எல்லாரையும் அறிமுகம் செய்துகொண்டுவிட்டுக் கீழே வந்தேன்.  முதல் தள ஹாலில், நட்ட நடுவே ஒரு மேஜை, நாற்காலி போடப்பட்டு இருந்தது. ‘இதுதான் உங்கள் ஸீட்!’ என்றார் வீயெஸ்வி. மற்ற உதவி ஆசிரியர்கள் எல்லாம் ஓரங்களில் வரிசையாக இருக்க, நான் மட்டும் துண்டாக நட்ட நடுவில் அமர்ந்திருப்பது சற்றுக் கூச்சத்தை ஏற்படுத்துவதாயிருந்தது. எனக்கான நாற்காலியில் அமர்ந்தேன். மேஜை இழுப்பைத் திறந்தேன். பால் பாயிண்ட் பென்கள், ஒரு முழு பென்சில், பென்சில் ஸ்க்ரூ, பிளாஸ்டிக் ஸ்கேல், ஒரு ஸ்க்ரிப்ளிங் பேட், ஜெம் க்ளிப் பாக்கெட், குண்டூசிகள் நிறைந்த குஷன் டப்பி என அனைத்தும் முறையாக வைக்கப்பட்டிருந்தன.

சற்று நேரத்தில் ஓர் அட்டெண்டர் என் மேஜையில் ஒரு பெரிய கதைக் கட்டை வைத்துவிட்டுப் போனார். “இதை நீங்க படிச்சு, செலக்ட் பண்றதை ஒரு குறிப்போடு இணைச்சு, தனியா எடுத்து என்கிட்ட கொடுங்க” என்றார் வீயெஸ்வி. குறிப்பு எழுதவென தனியாக அச்சடிக்கப்பட்ட அரைப் பக்கத் தாள்கள் இருந்தன. அதில் முதல் பரிசீலனை, இரண்டாம் பரிசீலனை, பொறுப்பாசிரியர் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு எனக் கட்டங்கள் இருந்தன. முதல் பரிசீலனையில் என் குறிப்பை எழுதிக் கொடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு சிறுகதையும் இந்த இரண்டு மூன்று கட்டப் பரிசீலனைகளைத் தாண்டினால்தான் ஆசிரியரின் கவனத்துக்கே போகும். அவர் படித்து ஒப்புதல் அளித்தபின்புதான் அது குறித்த தகவல் கடிதம் சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்குப் போகும்.

முதல் ஒரு மாதம் தள்ளுவது பெரும்பாடாக இருந்தது. சாவியில் பரபரப்பாக இருந்துவிட்டு, இங்கே நாளும் பொழுதும் கதைகளைப் படித்துத் தேர்ந்தெடுத்துக்கொண்டு இருப்பது போரடித்தது.

ஒருநாள்... வழக்கம்போல் சிறுகதைகளைப் படித்துப் பரிசீலித்துக் கொண்டிருந்தேன். நான் பொதுவாக, முதலில் ஓரிரு பாராக்களைப் படிப்பேன்; பின்னர் கடைசி பாராவைப் படிப்பேன். அந்தக் கதை தேறுமா, தேறாதா என்று தெரிந்துவிடும். தேறாதவற்றைப் பெருக்கல் குறி போட்டு ஒதுக்கி வைத்துவிடுவேன். இப்படி 100 கதைகள் கொண்ட கட்டை மிகச் சாதாரணமாக ஒரு நாளில் படித்துப் பரிசீலித்துக்கொண்டு இருந்தேன்.

இதை அன்று என் அருகில் வந்து நின்று கவனித்துக்கொண்டு இருந்த வீயெஸ்வி அவர்கள், “என்ன படிக்கிறீங்க? இப்படி நுனிப்புல் மேய்ஞ்சா என்ன அர்த்தம்? முழுசா படிக்க வேணாமா? இப்படித்தான் ஆரம்பத்துலேர்ந்தே படிச்சிட்டிருக்கீங்களா?” என்றார். விகடனில் ஒவ்வொரு கதையையும் முழுமையாகப் படித்துப் பரிசீலிப்பதே வழக்கம் என்றார்.

“முழுக்கப் படிக்க வேண்டியதில்லை சார்! ஒரு கதையைப் படிக்க ஆரம்பிக்கும்போதே அது தேறுமா, தேறாதா என்று என்னால் சொல்லிவிட முடியும். இருந்தாலும், கிளைமாக்ஸையும் படிக்கிறேன்” என்றேன். அவர் சமாதானமாகவில்லை.

“இல்லை.  இது சரியில்லை. நீங்கள் ஒதுக்கிய கதைகளில் நல்ல கதை இருந்தால் என்ன செய்வது?” என்றார்.

அதற்கு நான் சொன்ன பதில் அவரைத் துணுக்குறச் செய்திருக்க வேண்டும். ‘என்ன இவன், சேர்ந்து இன்னும் ஒரு மாதம்கூட ஆகவில்லை; இப்படிச் சொல்கிறானே இவன்!’ என்று நினைத்திருக்க வேண்டும்.

“நான் இங்கு வந்ததிலிருந்து இதுவரைக்கும் சுமார் 1000 கதைகளுக்கு மேல் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். அதில் முதல் கட்ட பரிசீலனையில் நான் தேர்ந்தெடுத்தது பத்துப் பன்னிரண்டு இருக்கலாம். மீதி என்னால் ஒதுக்கப்பட்ட கதைகள் அத்தனையும் மேலே மீசை மனோகரிடம் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு வரச் சொல்லுங்கள். யாரிடமேனும் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். (அப்போது விகடனின் பரிசீலனைக்கு வரும் சிறுகதைகள், வெளியே தரமான எழுத்தாளர்கள் சிலரிடமும் முதல் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டு வந்தன.) அவற்றிலிருந்து ஒரே ஒரு சிறுகதையையேனும் யாரும் இது நல்ல கதை என்று தேர்ந்தெடுத்துக் கொடுத்துவிட்டால், இந்த மாதத்துக்கான சம்பளம்கூட வாங்காமல் நான் இந்த வேலையை விட்டுப் போய்விடுகிறேன்” என்றேன்.

“என்னவோ போங்க!” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் வீயெஸ்வி.

அந்த ஆண்டு இறுதிக்குள், விகடனுக்கு வரும் சிறுகதைகளைப் பரிசீலிக்கும் முறையை துரிதப்படுத்தினேன் நான். அது பற்றி விரிவாக அடுத்த வாரம்.

(இன்னும் சொல்வேன்)  

1 comments:

ரசனையாக உள்ளது. தொடர வேண்டுகிறேன் 👌👌👌