உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, December 27, 2015

என் புகுந்த வீடு - 2

விகடனில் முதல் நாள்..!


னந்த விகடன் எனும் கோட்டைக்குள் நுழைந்து, பெரியவர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களைச் சந்தித்ததை நினைவுகூர்கிறேன். 

அதற்கு முன் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்! ஆனந்த விகடன் பொன்விழா கொண்டாடிய நேரத்தில் நான் சென்னை வந்திருந்தேன். 1980, நவம்பர் மாதத்தில், மூன்று நாள் விழா நடந்தது. கிராமத்திலேயே பிறந்து வளர்ந்திருந்தபடியால், மிகுந்த கூச்ச சுபாவத்துடன் இருந்த நான், ஆர்வம் இருந்தும் விழாவில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டேன். ஆனால், விழா பற்றிய செய்திகளை ஆனந்த விகடனில் படித்து மகிழ்ந்தேன். ஆனந்த விகடனில் வேலைக்குச் சேர வேண்டும் என்ற எண்ணம் என்னுள்ளத்தில் வலுவாக எழுந்தது. ஆனாலும் உள்ளூர ஏதோ பயம்; தயக்கம்!

இந்நிலையில், ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, எந்தத் திட்டமும் இல்லாமல், ஒருநாள் கிளம்பி ஆனந்த விகடன் அலுவலகம் போனேன். இப்போதுள்ள அதே இடம்தான்! ஆனால், அப்போது விகடன் அலுவலகத்தின் முன்னால் எந்தக் கட்டடமும் இல்லை. மவுன்ட் ரோடிலிருந்து பார்த்தாலே விகடன் ஆபீஸ் தனியாகத் தெரியும். ’ஆனந்த விகடன்’ என மிக நீளமான போர்டு கண்ணில் படும். உள்ளே போக, வெளியே வர என இரண்டு ‘கேட்’டுகள்! 

உள்ளே போனேன். கீழே, வரவேற்பாளர் ஒருவர் டைப்ரைட்டிங் மெஷினோடு உட்கார்ந்திருந்தார். நான் போனதும் தடுத்து நிறுத்தி, “யாரைப் பார்க்கணும்?” என்றார். “ஆசிரியரை” என்றேன்.  “அப்பாயின்ட்மென்ட் இருக்கா?” என்றார். “இல்லை” என்றேன். “எதற்காகப் பார்க்கணும்?” என்றார். “வேலை கேட்கலாம்னு...” என்று இழுத்தேன். ”அப்படி உட்கார்ந்து அப்ளிகேஷன் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க. வீட்டுக்கு லெட்டர் வரும். அப்புறம் வந்து பாருங்க” என்றார். நான் பேப்பர், பேனா எதுவும் கொண்டு போயிருக்கவில்லை. அதனால், “சரி சார், நாளைக்கு வந்து பார்க்கிறேன்” என்று சொல்லி, விடைபெற்று வந்துவிட்டேன்.

அதற்கப்புறம் ஒரு மூன்று வருடம் பாண்டிச்சேரி வாசம், விழுப்புரத்தில் சொஸைட்டி ஆபீசில் வேலை, காணையில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் நடத்தியது எனப் பலவிதமாகக் கழிந்தது.

கிராமத்தில் குப்பை கொட்டிக்கொண்டிருந்தது போதும்; சென்னை வந்து செட்டிலாகி, ஏதேனும் வேலை தேடிக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து, 1984-ம் ஆண்டு, காணை கிராமத்திலிருந்து நானும் என் தம்பியுமாகக் கிளம்பி, மாத வாடகை ரூ.100/-க்கு சென்னை எம்.ஜி.ஆர். நகரில், வள்ளலார் தெருவில் ஓர் இடம் பார்த்துக் குடியேறினோம். உடனே, ஆனந்த விகடன், கல்கி, தினமணி கதிர் எனப் பல பத்திரிகைகளில் அதுவரை வெளியாகியிருந்த என் சிறுகதைகளை ஜெராக்ஸ் எடுத்து இணைத்து, ஆனந்த விகடனில் வேலைக்கு விண்ணப்பித்தேன். அடுத்த சில நாள்களில், ‘தற்சமயம் தங்களுக்குப் பொருத்தமான வேலை எதுவும் காலி இல்லாததால், தங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலிக்க இயலவில்லை’ என விகடனிலிருந்து பதில் வந்தது.

அதன்பின், நண்பர் மார்க்கபந்து மூலம் ‘ஆம்ப்ரோ’ பிஸ்கட் கம்பெனியில் சேர்ந்ததும், பின்னர் எழுத்தாளர் புஷ்பாதங்கதுரையின் சிபாரிசில் 1987-ம் ஆண்டு ‘சாவி’ பத்திரிகையில் சேர்ந்ததும் தனிக் கதை.

1995 மார்ச் இறுதியில் சாவி பத்திரிகை நிறுத்தப்பட்டதும், ஓர் அரைப் பக்கத் தாளில், எந்த மேலதிக விவரமும் இல்லாமல், ‘சாவி பத்திரிகையில் பணியாற்றினேன். பத்திரிகை இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. தங்களிடம் பணியாற்ற விரும்புகிறேன்’ என்று ஆனந்த விகடனுக்குச் சிக்கனமாக இரண்டே வரிகளில் விண்ணப்பம் எழுதிப் போட்டேன். மேலும், குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி-யும், அப்போது அதன் ஆசிரியராக இருந்த  சுஜாதாவும் முன்பு வாக்களித்ததை மனதில் கொண்டு, அங்கேயும் ஒரு அப்ளிகேஷன் தட்டிவிட்டேன். 

இதனிடையில், ஓவியர் அரஸ் சிபாரிசின்பேரில், அன்றைய உள்துறைச் செயலர் நாகராஜன் புதிதாகத் தொடங்கியிருந்த சுதேசமித்திரன் நாளேட்டில் (அப்போது சுதாங்கன் அதற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்தார்.) போய் வேலைக்கும் சேர்ந்துவிட்டேன். அந்தப் பத்திரிகை தொடர்ந்து வெளிவராது என, அங்கு சேர்ந்த மூன்றாம் நாளே என் உள்ளுணர்வு சொல்லியதால், வேலையிலிருந்து நின்றுவிட்டேன்.

குமுதத்திலிருந்து (சுஜாதாவிடமிருந்து) அழைப்பு வந்தது. போனேன். ‘இங்கே சப்-எடிட்டர் வொர்க் மாதிரி தற்சமயம் எதுவும் இல்லை. கொஞ்ச நாள் ரிப்போர்ட்டரா இருங்க. சமயம் வந்ததும் சப்-எடிட்டராகலாம்’ என்றார். மறுத்துவிட்டு வந்துவிட்டேன்.

மறுநாள் காலையில், ஓவியர் அரஸ்ஸுக்கு போன் செய்து, நான் சுதேசமித்திரனிலிருந்து விலகிவிட்ட தகவலைச் சொன்னேன். “அதிருக்கட்டும்... விகடனுக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கீங்களா?” என்றார். “ஆமாம்” என்றேன். “உடனே வந்து, இங்கே ராவ் சாரைப் பாருங்க” என்றார்.

அன்றைக்கே போனேன். ஓவியர் அரஸ் அனுப்பியதாகச் சொல்லி, ராவ் சாரைப் பார்க்க வேண்டும் என்றேன். அவர் வந்திருக்கவில்லை. காத்திருந்த நேரத்தில் வீயெஸ்வி சார் அழைப்பதாகத் தகவல் வந்தது. மேலே படியேறி, விகடன் எடிட்டோரியலுக்குப் போனேன். வீயெஸ்வி சாரின் தனியறைக்கு வழிநடத்தப்பட்டேன்.

நேர்முகத் தேர்வு மாதிரி இல்லாமல், சாவியில் நான் என்ன பண்ணிக்கொண்டு இருந்தேன், சாவி எப்படிப்பட்டவர் என்று பொதுவான கேள்விகளையே அவர் கேட்டார். நானும் யதார்த்தமாகப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தேன். இதற்குள் ராவ் சார் வந்துவிட, அவர் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார் வீயெஸ்வி.

ராவ் என்னைக் கேட்ட ஒரே கேள்வி... “அரஸ் உங்களுக்கு ரொம்ப ஃப்ரெண்டா?”

இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குக் குழப்பமாக இருந்தது. ஃப்ரெண்டுதான் என்று சொன்னால், சிபாரிசுக்கு இங்கே இடமில்லை என்று சொல்லி மறுத்துவிடுவார்களா அல்லது அவர் இங்கே எனக்கு பலமாக சிபாரிசு செய்திருந்து, ‘ஃப்ரெண்டெல்லாம் இல்லை. தெரியும்’ என்று பட்டும்படாமல் சொல்லி வைக்கப்போக, அதனால் வாய்ப்பு நழுவிவிடுமா என்று குழப்பமாக இருந்தது. ‘இதைச் சொல்லலாமா, அதைச் சொல்லலாமா என்று குழப்பம் வந்தால், எது உண்மையோ அதைச் சொல்லிவிடுவதே மேல்’ என்று ஒரு பொன்மொழி உள்ளது. அதன்படி செயல்பட்டு, “ஆமாம். நல்ல நண்பர். பத்திரிகை ரீதியாகப் பழக்கம்” என்றேன்.

பின்னர், நாங்கள் மூவருமாய் ஆசிரியர் பாலசுப்ரமணியனின் அறைக்குள் போனோம். சாவி சாரை முதன்முதல் பார்த்தபோது உண்டான அதே உதறல் இவர் முன்பும் எனக்கு ஏற்பட்டது. “வாங்கோ... உக்காருங்கோ!” என்றார் எங்கள் மூவரையும்.

வீயெஸ்வி என்னை ஆசிரியருக்கு “சாவியிலிருந்து வந்திருக்கார். ரவிபிரகாஷ்” என்று சுருக்கமாக அறிமுகப்படுத்த, “அப்ளிகேஷன் பார்த்தேன். எங்க கிட்டேர்ந்து பதில் வரதுக்குள்ள குமுதத்துக்குப் போயிருக்கீங்க. சுதேசமித்திரன்ல சேர்ந்திருக்கீங்க. ஏன் இந்த அவசரம்?” என்றார் ஆசிரியர் எடுத்த எடுப்பில்.

“இங்கே நிச்சயம் வேலை கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லை. நாலு இடத்துல கல் விட்டுப் பார்த்தா ஏதாவது ஒரு காய் விழாதாங்கிற நப்பாசைதான்! திடீர்னு சாவி பத்திரிகை மூடப்பட்டதும், நடுக்கடல்ல விழுந்து தத்தளிக்கிற மாதிரி ஓர் உணர்வு. அவசரத்துக்கு எந்தக் கட்டையாவது கிடைக்காதா பிடிச்சுக்கன்னு அலைபாய்ஞ்சேன். அதான்..!” என்றேன்.

“குமுதத்துல ஏன் சேரலை?” என்றார்.

“எனக்கு ரிப்போர்ட்டிங் வராது. தெரியாது. அரசியல்வாதிங்க கிட்டேயும், சினிமாக்காரங்க கிட்டேயும் பேட்டிக்காகக் காத்திருக்க எனக்குப் பிடிக்காது. சாவியிலும் நான் ரிப்போர்ட்டிங் பண்ணினதில்லை. டெஸ்க் வொர்க்தான். ஆனா, குமுதத்துலே என்னை ரிப்போர்ட்டரா இருக்கச் சொன்னாங்க. அதான் வேண்டாம்னு வந்துட்டேன்!”

“விகடனைப் பொறுத்தவரைக்கும் நிருபர்களுக்குப் பஞ்சமில்லே. டெஸ்க் வொர்க் பண்ணத்தான் ஆளில்லை. நீங்க சாவி கிட்டே எட்டு வருஷம் வேலை பார்த்திருக்கீங்க. அதை விடப் பெரிய தகுதி வேண்டியதில்லை. நீங்க இங்கே ஜாயின் பண்ணலாம். ஆனா, முதல்ல கான்ட்ராக்ட்லதான் வேலை செய்யணும். அதான் இங்கே முறை. கான்ட்ராக்ட்ல வேலை செய்யறப்போ உங்களுக்கு விகடனைப் பிடிக்கணும்; விகடனுக்கு உங்களைப் பிடிக்கணும்.பரஸ்பரம் திருப்தி இல்லேன்னா விலகிக்கலாம். கான்ட்ராக்ட் முடிஞ்சு சில மாசமோ, சில வருஷமோ புரொபேஷன் பீரியட் இருக்கும்! அதுக்கப்புறம்தான் உங்க வேலை நிரந்தரமாகும்.  நீங்க நல்லா வேலை செய்வீங்க. அதுல எனக்குச் சந்தேகமில்லே. ஆனா, அங்கே நீங்க தனியாளா ஒரு பத்திரிகையைப் பார்த்து, சுதந்திரமா முடிவெடுத்துப் பழக்கப்பட்டிருக்கீங்க. உங்களுக்கு மேலே சாவி மட்டும்தான்! இங்கே அப்படியில்லே. உங்களுக்கு மேல பல சீனியர்ஸ் இருக்காங்க. அவங்களோடு இணைஞ்சு வேலை செய்ய வேண்டியிருக்கும். ஈகோ க்ளாஷ் ஆகலாம். மத்தபடி, ஒரு பிரச்னையும் இல்லே. ஒண்ணாந்தேதிலேர்ந்து நீங்க இங்கே வந்து வேலை செய்யலாம். அன்னிக்கே உங்கஅப்பாயின்ட்மென்ட் ஆர்டரையும் வாங்கிக்கலாம். பெஸ்ட் ஆஃப் லக்!” என்று கைகுலுக்கினார் ஆசிரியர்.

விடைபெற்று வெளியே வந்தேன். ராவ், வீயெஸ்வி இருவரிடமும் விடைபெற்று வெளியேறி, வீட்டுக்கு வந்தேன். 

அது மார்ச் கடைசி. ஏப்ரல் முதல் தேதிக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள்தான் இருந்தன.

அந்த மூன்று நாட்களும் மூன்று யுகங்களாக நகர்ந்தன. 

எக்கச்சக்க ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் கனவுகளோடும் முதல் தேதியன்று விகடன் அலுவலகத்துக்குச் சென்றேன்.

எனக்குப் பெரிய இடியையும் ஏமாற்றத்தையும் தந்தது ஏப்ரல் 1.

(இன்னும் சொல்வேன்)

3 comments:

அட என்ன சார்...
விகடன் சேர்மன் பற்றி நினைவுத் தொடர் எழுதறீங்கனு பார்த்தால்...
தொடர்கதையில்ல எழுதறீங்க, சஸ்பென்ஸ் வச்சி?

(பகுதி - 1ம் படித்தேன்!)
 
Eagerly awaiting for the next sharing
 
மிகவும் சுவாரசியமான ஒரு தொடரைப் போல் உள்ளது. வார இதழ்களைப் போல் ஒரு குறிப்பிட்ட தினத்தில் வந்தால் நன்றாக இருக்கும். கடந்த ஞாயிறு முதலே நான் எதிர்பார்த்திருந்தேன்.