உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, January 24, 2016

என் புகுந்த வீடு - 5

வானுயர நின்றவர்!

னது முதல் சிறுகதை, ‘கரிநாக்கு’ என்னும் தலைப்பில் கல்கி 17.9.1978 இதழில் வெளியானது!

கல்கி இதழின் பரிசீலனைக்கு அந்தக் கதையை நான் அனுப்பி 20  நாள் கூட ஆகியிருக்கவில்லை; கதை பிரசுரமாகி, புத்தகம் சங்கீதமங்கலம் கிராமத்திலிருந்த எங்கள் வீட்டுக்குத் தபாலில் வந்தது. நான் அப்போது நாலைந்து கி.மீ. தொலைவில் இருந்த அனந்தபுரம் டவுனுக்கு, டைப்ரைட்டிங் கிளாஸ் சென்றிருந்தேன். எஸ்.எஸ்.எல்.சி. முடித்து வீட்டில் நாலைந்து வருடமாக தண்டச்சோறாக இருந்ததால், பஸ்ஸையெல்லாம் எதிர்பார்க்காமல் தினமும் நடந்தே போய் வருவது வழக்கம்.

தபாலில் வந்த கல்கி பத்திரிகையை வாங்கிப் புரட்டிப் பார்த்த என் அப்பா, அதில் என் சிறுகதை பிரசுரமாகியிருந்ததைக் கண்டதும் பெரிய இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார். அவர் கை கால்கள் படபடத்து, வெடவெடத்துவிட்டன. எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் அவர். அவருக்கு நேர்மாறாக எதற்கும் உணர்ச்சிவசப்படாதவன் நான்.

நான் எழுத்தாளனாகவேண்டும் என்பது அப்பாவின் ஆசை. சாவி, மணியன், சுஜாதா போல் நானும் பெரிய எழுத்தாளனாகவேண்டும் என்று கனவு கண்டு, கதைகள் எழுத என்னை ஊக்குவித்தவர் அவர்தான். அப்படி இருக்கையில், நான் எழுதிய முதல் சிறுகதையே தேர்ந்தெடுக்கப்பட்டு, பத்திரிகையில் பிரசுரமானதில் அவருக்குப் படபடப்பு ஏற்பட்டதில் வியப்பில்லை.

கல்கி புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவரும் பொடிநடையாகவே நடந்து அனந்தபுரம் வந்து, டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டுக்கு வந்துவிட்டார். என்னை உடனே கிளம்பச் சொல்லி அழைத்தார். கிராமம் என்பதால் ஒரு மணி நேரக் கணக்கெல்லாம் இல்லாமல், தொடர்ந்து அரை நாள்கூடப் பயிற்சி செய்துகொண்டிருப்பேன். ஆனாலும், அப்பா வந்து என்னவோ அவசரம் என்று அழைத்ததால், உடனே கிளம்பினேன்.

வீடு திரும்பும் வழியில், “ரவி, ஒண்ணு சொல்வேன். படபடப்பு ஆகக்கூடாது. நல்ல விஷயம்தான். ஆனா, ரொம்ப உணர்ச்சிவசப்படாதே. அதிக சந்தோஷத்துல ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடக்கூடாது...” என்று எக்கச்சக்கமாக பில்டப் கொடுத்துவிட்டு, பைக்குள்ளிருந்து கல்கி புத்தகத்தை எடுத்து என்னிடம் நீட்டினார். அவர் அதை என்னிடம் கொடுக்கும்போது அவர் விரல்கள் நடுங்கியதை கவனித்தேன். புத்தகத்தை வாங்கிப் புரட்டிப் பார்த்தேன். என் கதை ‘கரிநாக்கு’ அதில் மூன்று பக்க அளவில் பிரசுரமாகியிருந்தது. ‘ஸோபிலா’ என்றொரு ஓவியர் படம் வரைந்திருந்தார்.

பார்த்துவிட்டு, புத்தகத்தை அப்பாவிடமே கொடுத்துவிட்டேன். “பரவாயில்லையே! ரெண்டு மூணு மாசம் ஆகும்னு நினைச்சேன். கதை அனுப்பி பதினஞ்சே நாள்ல பிரசுரமானது ஆச்சர்யம்தான்!” என்றேன்.

“சந்தோஷத்துல கத்தணும்போல இருக்கா?” என்று கேட்டார். “எதுக்குக் கத்தணும்? கதை வந்ததுல சந்தோஷம்தான். பத்திரிகையில வேலை செய்யறவங்களே கதை, கட்டுரையெல்லாம் எழுதிப்பாங்கன்னுதான் நினைச்சிட்டிருந்தேன். வெளியிலேர்ந்து யாராவது அனுப்பினாலும் சிபாரிசு வேண்டியிருக்குமோன்னு நினைச்சேன். அது எதுவும் இல்லாம, கதை வெளியானது ஆச்சர்யம்தான். சந்தோஷம்தான். அதுக்கு மேல என்ன இருக்கு?” என்றேன்.

“படபடப்பா வர்றதா?” என்று கேட்டார். “எதுக்குப் படபடப்பு வரணும்? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. இன்னொரு கதை எழுதிப் போடலாம். நல்லா இருந்தா தேர்ந்தெடுப்பாங்கன்னு நம்பிக்கை வந்திருக்கு. அவ்வளவுதான்!” என்றேன்.

“புஸ்தகத்துல உன் பேரைப் பார்த்ததும் எனக்குப் படபடன்னு வந்துடுச்சு, தெரியுமா! அம்மா எனக்கு என்னவோ ஆகிப்போச்சுன்னு பயந்துட்டா!” என்றார்.

அப்பா இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டது எனக்கு வியப்பை அளித்த மாதிரி, நான் கொஞ்சம்கூட உணர்ச்சிவசப்படாதது அப்பாவுக்கு ஆச்சர்யம் அளித்தது.

முதல் கதை மட்டுமல்ல, அடுத்தடுத்து நான் எழுதி அனுப்பிய 12 சிறுகதைகள் கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், சாவி, தினமணி கதிர் ஆகிய பத்திரிகைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிரசுரம் ஆகியபோதும் நான் ரொம்பவெல்லாம் உணர்ச்சிவசப்படவில்லை. அதே போல், அதன்பின் அனுப்பிய சிறுகதைகள் சில பத்திரிகைகளிலிருந்து ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்னும் குறிப்போடு திருப்பியனுப்பப்பட்டபோதும் நான் பெரிதும் வருத்தமுறவில்லை. அப்பாதான் ரொம்ப ஏமாற்றமடைந்தார். சம்பந்தப்பட்ட பத்திரிகை மீது கடும் கோபம் கொள்வார். “சே... எவ்வளவு நல்ல கதை! இதைப் போய்த் திருப்பி அனுப்பியிருக்கானே! இந்த வாரம் அந்தப் புஸ்தகத்துல ஒரு கதை வந்திருக்கு. சுத்த தண்டம்! அதையெல்லாம் பிரசுரம் பண்றான். நல்ல கதையைத் திருப்பறானே!” என்று பத்திரிகையைத் திட்டித் தீர்ப்பார். எனக்குச் சிரிப்பாக இருக்கும்.

‘மாடு காத்துக்கொண்டிருக்கிறது’ என்னும் தலைப்பில் தினமணி கதிருக்கு (பெரிய சைஸ்) ஒரு கதை எழுதிப் போட்டேன். நான் அதுவரை எழுதியதிலேயே அது கொஞ்சம் நீளமான கதை. எனவேதான் அதை தினமணி கதிருக்கு அனுப்பினேன். கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகியும் கதை பிரசுரம் ஆகவும் இல்லை; எனக்குத் திருப்பி அனுப்பப்படவும் இல்லை. இந்நிலையில் அந்தக் கதையை வேறு பத்திரிகைக்கு அனுப்பப் போவதாகவும், எனவே உங்கள் பத்திரிகையில் இதைப் பிரசுரிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு, தினமணி கதிருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டுவிட்டு, அதை வேறு பத்திரிகைக்கு அனுப்பினேன். அங்கிருந்து அது ஒரு மாதத்தில் திரும்பியது. பின்பு அதை இன்னொரு பத்திரிகைக்கு அனுப்பினேன். அங்கிருந்தும் ஓரிரு மாதங்களில் திரும்பியது. இப்படியாக அந்தக் கதை நாலைந்து பத்திரிகைகளில் இருந்து திரும்பி, கடைசியாக ஆனந்த விகடனின் பரிசீலனையில் இருந்தது.

இந்த நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, எந்த முன்னறிவிப்புமே இல்லாமல் மேற்படி கதை தினமணி கதிரில் ஒரு வரிகூடக் குறைக்கப்படாமல் ஆறு பக்கங்களில் விஸ்தாரமாகப் பிரசுரம் ஆகி, புத்தகம் வீட்டுக்கு வந்தது. ஓவியர் வர்ணம் அதற்குப் படம் வரைந்திருந்தார்.

கதை சிறந்த முறையில் தினமணி கதிரில் பிரசுரமானது ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், ஆனந்த விகடன் பரிசீலனைக்கும் அதை அனுப்பியிருக்கிறேனே, அங்கும் ஒருவேளை அது தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிரசுரமாகிவிட்டால் விகடன் என்னைத் தவறாக நினைத்துக் கொள்ளப் போகிறதே என்று பதற்றமும் கவலையுமாக, உடனே என் நிலையை விளக்கி ஒரு கடிதம் எழுதிப் போட்டேன். தகவலுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதத்துடன் அந்தக் கதையை அங்கிருந்து திருப்பி அனுப்பினார்கள்.

பின்பு, தினமணி கதிருக்கும் ஒரு கடிதம் எழுதிப் போட்டேன். ‘கதையைப் பிரசுரித்தது குறித்து மகிழ்ச்சி. ஆனால், என் கதையைப் பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுத்துள்ளது குறித்து எனக்குத் தகவல் தெரிவிக்கப்படவே இல்லை. தவிர, அதை வேறு வேறு பத்திரிகைகளுக்குப் பரிசீலனைக்கு அனுப்பியபோதெல்லாம் ஒவ்வொரு முறையும் உங்கள் பத்திரிகைக்கு அதுகுறித்துக் கடிதம் எழுதி, அதைப் பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரே கதை இரண்டு பத்திரிகைகளில் பிரசுரமானால் இருவருமே அல்லவா என்னைத் தவறாக நினைப்பீர்கள்? எனக்கல்லவா கெட்ட பெயர் ஏற்படும்?’ என்று சற்றுக் கோபமாகவே கடிதம் எழுதிப் போட்டேன். அதற்கும் அங்கிருந்து எந்த பதிலும் இல்லை.

ஆனால், அதன்பின்பும் தினமணி கதிரில் நான் பல சிறுகதைகள் எழுதியுள்ளேன். அவற்றை வெளியிட முதல் கதை போல் அதிக காலம் எடுத்துக்கொள்ளவில்லை. அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் பிரசுரமாகிவிடும்; அல்லது, திரும்பிவிடும்.

இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், என்னைப் பொறுத்த வரையில் கதை தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி; திரும்பி வந்தால் ஏமாற்றம். ஆனால், எந்தத் தகவலும் இல்லாமல் மாதக் கணக்கில் காத்திருக்க வைத்தால் கடுப்பும் கோபமும்தான் ஏற்படும். எனவே, ரிசல்ட் உடனடியாகத் தெரிந்துவிட வேண்டும் எனக்கு. என்னதான் வேலைப் பளு இருந்தாலும், ஒரு கதை அனுப்பி ஒரு மாதத்துக்குள் அதைப் பரிசீலித்து அந்த எழுத்தாளருக்கு ரிசல்ட் சொல்ல முடியவில்லை என்றால், அதில் அர்த்தமே இல்லை என்ற கருத்து உடையவன் நான்.

ஆனந்த விகடனில் வேலை கிடைத்து, சிறுகதைகளைப் பரிசீலிக்கும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டபோது, சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்க அதுவரை அங்கே கடைப்பிடிக்கப்பட்டுக்கொண்டிருந்த முறை எனக்கு அயர்ச்சியைத் தந்தது. நோக்கம் நல்ல நோக்கமாக இருக்கலாம். ஆனால், இதனால் சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கு எந்தத் தகவலும் இல்லாமல், அவர் அனுப்பிய கதை பரிசீலிக்கப்படுவதற்கே ஒரு வருடம், ஒன்றரை வருடம் ஆகும் என்கிறபோது, அவருக்குச் சலிப்பும் கடுப்பும் ஏற்படும் என்பதே உண்மை! எனவே, பரிசீலனையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று முனைந்தேன்.

மீசை மனோகரிடம் சென்று, பரிசீலிக்க வேண்டிய கதைகள் எத்தனை உள்ளன, திருப்பி அனுப்ப வேண்டியவற்றைத் திருப்பி ஆயிற்றா, தேர்ந்தெடுக்கப்பட்ட கதை குறித்த தகவல் சம்பந்தப்பட்ட கதாசிரியருக்கு அனுப்பப்பட்டதா போன்ற தகவல்களை விசாரித்தேன். அவர் சொன்ன விஷயங்கள் என்னை அதிர வைத்தன.

3000-க்கும் மேற்பட்ட கதைகள் இன்னும் பரிசீலனையில் இருந்தன. 300 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அது குறித்த விவரம் எழுத்தாளருக்கு அனுப்பப்பட்டிருந்தன. அவற்றில் 100-க்கும் மேற்பட்ட கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வருடத்துக்கு மேலாகியும் பிரசுரம் காணாதிருந்தன. ஓர் இதழில் அதிகபட்சம் ஐந்து கதைகள்தான் பிரசுரிக்க முடியும் என்கிற நிலையில், பிரசுரமாவதில் கால தாமதமாவது இயல்புதானே?

இந்நிலையில், இன்னும் மீதமுள்ள கதைகளைப் படித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்; அவற்றை எப்போது பரிசீலித்து முடிப்பது, அவற்றில் தேர்ந்தெடுக்கப்படும் கதைகளை எப்போது பிரசுரிப்பது?! மலைப்பாக இருந்தது.

ஒரு வாரத்துக்கு சுமார் ஐம்பது கதைகளுக்கும் மேல் பரிசீலனைக்கு வந்துகொண்டிருந்த நிலையில், கைவசம் ஒரு மாதத்துக்குத் தேவையான, அதாவது 20 சிறுகதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டால் போதுமானது. மற்றவற்றைத் திருப்பி அனுப்பிவிடுவதே உசிதமானது. முடிவு தெரியாமல் காத்திருப்பவர்கள் மட்டுமல்ல; தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிரசுரம் ஆகாமல் வருடக்கணக்கில் காத்திருப்பவர்களும் அல்லவா எரிச்சலுக்கும் சலிப்புக்கும் ஆளாகியிருப்பார்கள்?

எனவே, நான் ஒரு முடிவுக்கு வந்தேன். இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 300 கதைகளிலிருந்து மிக மிகச் சிறப்பான கதைகளாக ஒரு 20 கதைகளை வடிகட்டித் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அவற்றை அடுத்தடுத்த வாரங்களில் வெளியிடுவதாக சம்பந்தப்பட்ட கதாசிரியருக்குத் தகவல் அனுப்புவது; மற்ற கதைகளை ஏதேனும் தகுந்த காரணம் சொல்லித் திருப்பி அனுப்பிவிடுவது; இன்னும் பரிசீலிக்க வேண்டிய 3000 கதைகளையும் அதிரடியாக ஒரு மாதத்தில் படித்து முடிப்பது.

இந்த என் முடிவை ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்களை நேரில் சந்தித்துச் சொன்னேன். அதற்கான காரணத்தையும் விளக்கமாக எடுத்துரைத்தேன். அவர் புரிந்துகொண்டார். ஆனால், “தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளைத் திருப்பி அனுப்புவது வாக்கு தவறுவதற்குச் சமம்; அதை நான் செய்ய மாட்டேன்” என்றார். “300 கதைகள் உள்ளன சார்! ஒரு வாரத்துக்கு ஐந்து கதைகள் வீதம் இவற்றைப் பிரசுரித்து முடிக்க 60 வாரங்கள், அதாவது இன்னும் ஒரு வருடத்துக்கு மேல் ஆகும் சார்!” என்றேன். “சரி, என்ன செய்யலாம்?” என்றார். பிரசுரக்கிறோம் என்று சொல்லிவிட்டு, ஏதோ ஒரு காரணம் சொல்லித் திருப்பி அனுப்புவதில் அவருக்கு உடன்பாடே இல்லை. அது பத்திரிகை தர்மமில்லை என்பது அவர் கருத்து.

என்றாலும், வேறு வழியில்லை! தவிர, வருடக் கணக்காக வைத்திருந்த கதைகளைப் பிரசுரித்தபோது, ஒரு சில கதைகள் சில மாதங்களுக்கு முன்பு வேறு பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளதாக வாசகர்களிடமிருந்து கடிதங்கள் வந்திருந்தன. கதாசிரியர்களைக் குற்றம் சொல்லியும் பயனில்லை. பொறுமை இழந்துதான் அவர்கள் தங்கள் கதைகளை வேறு பத்திரிகையின் பரிசீலனைக்கு அனுப்பியிருக்கக்கூடும். சில கதைகள் பிரசுரமானபோது, சம்பந்தப்பட்ட கதாசிரியரின் உறவினர்களிடமிருந்து, ‘அவர் இப்போது இல்லை. இறந்துபோய்விட்டார். ஆனந்த விகடனில் தன் கதை பிரசுரமாவதைப் பார்க்க வேண்டும் என்று ஏங்கினார்..’ என்கிற ரீதியில் கடிதங்கள் வந்தன.

இதையெல்லாம் ஆசிரியரிடம் சொல்லி, “கைவசம் பிரசுரத்துக்குத் தேர்வான கதைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், தங்கள் கதையைப் பிரசுரிப்பதில் ஏற்படும் கால தாமதத்துக்கு வருந்துகிறோம். இந்நிலையில், தங்களை மேலும் காத்திருக்க வைப்பதில் அர்த்தமில்லை என்பதால், தங்கள் கதையை இத்துடன் திருப்பி அனுப்புகிறோம். மற்றபடி, தங்களின் இந்தச் சிறுகதை மிகச் சிறப்பானது என்பதில் சந்தேகம் இல்லை. தங்களின் எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்!” என்கிற கடிதத்துடன் அவற்றைத் திருப்பி அனுப்பிவிடுவதே சரி என்றேன்.

மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். பின்பு,  அவர் அந்தக் கடிதத்தில் சேர்க்கச் சொன்ன ஒரு தகவல், அவர் மீதான மரியாதையை வானம் வரை உயர்த்தியது.

அவர் சொன்னார்...

(இன்னும் சொல்வேன்)

3 comments:

சிறுகதை எழுத்தாளன் என்ற முறையில், தங்கள் இந்தக்கட்டுரையைப் படிக்க எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். தொடரட்டும்.
 
நன்றி சார்...சில இடங்களில் மனம் விட்டு சிரித்தேன்....அருமையான அனுபவ தொடர்...தயவு செய்து தொடரவும்...
 
Sir...Please continue the post...