உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, June 10, 2012

கொதித்தார் சாவி; குலைந்தேன் நான்!

ற்கெனவே இரண்டு முறை சாவி சாரிடம் கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் அவரிடமே சேர்ந்ததற்குக் காரணம், சாவி சார் மீது எனக்கிருந்த அளப்பரிய மரியாதையும் அபிமானமும்தான்! சாவி சாருக்கும் என் மீது மிகவும் அன்பு இருந்தது. அவர் என் மீது கொண்ட கோபமும்கூட என் நன்மைக்காகத்தான் என்பது எனக்கு அந்த வயதில் புரியவில்லை.

இரண்டாம் முறை அவரிடம் சேர்ந்தபோது, சாவி சாரிடம் நான் சொன்னேன்... “என்னடா இவன், அடிக்கடி வேலையை விட்டுட்டு ஓடிடறானே, இவனை எப்படி நம்பி வேலையில சேர்த்துக்கிறதுன்னு நினைக்காதீங்க சார்! எனக்குப் பக்குவமில்லாத வயசு; பக்குவப்படாத மனசு. இனி உங்களை விட்டு நான் விலக மாட்டேன். நீங்களாக என்னை வேண்டாம் என்று வேலையை விட்டு நீக்காதவரை நானாக இந்த வேலையை விட்டுப் போகமாட்டேன். இது சத்தியம்!” என்று சொன்னேன்.

அதன்படியே, அந்த முறை அவரிடம் சேர்ந்து, அவரின் எந்த கோப தாபத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிக்கொண்டு இருந்த நேரத்தில்தான், அந்தப் பயணம் அமைந்தது.

வழக்கமாக ஆண்டுக்கு மூன்று முறை, சாவி எடிட்டோரியலில் பணியாற்றும் எங்களை ஊட்டி, வெலிங்டன், பெங்களூர் என மாறி மாறி அழைத்துப் போவார் சாவி சார். எடிட்டோரியல் மீட்டிங்கும் ஆச்சு, எங்களை உல்லாசப் பயணம் அழைத்துச் சென்று சந்தோஷப்படுத்தியதாகவும் ஆச்சு! அந்த நாட்கள் எல்லாம் சுகமானவை!

அந்த முறை பெங்களூருக்குச் செல்வது எனத் திட்டமிட்டார் சாவி. அதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. பெங்களூரில் ஒரு வீடு வாங்குகிற யோசனையில் இருந்தார் சாவி. அது தொடர்பாக அங்கே அவருக்குச் சில பல வேலைகள் இருந்தன.

அந்த முறை எங்களோடு ராணிமைந்தனும், நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியும் சுற்றுலாவில் கலந்துகொண்டார்கள். பெங்களூரில் லால்பாக் அருகே உள்ள பிரபல ஹோட்டலான எம்.டி.ஆருக்கு எதிரே ஒரு லாட்ஜில் மூன்று ரூம்கள் போடப்பட்டன. ஒன்றில் சாவி சாரும் ராணி மைந்தனும் தங்கிக் கொள்ள, மற்ற இரண்டு அறைகளில் சாவி எடிட்டோரியலைச் சேர்ந்த எங்களோடு பாக்கியம் ராமசாமி தங்கினார்.

சாவி சாரின் உறவினர் ஒருவர் பெங்களூரில் டிராவல்ஸ் நடத்தி வந்தார். அவர் சாவி சாரின் உபயோகத்துக்கென ஒரு காரை அளித்திருந்தார். அது எந்நேரமும் அந்த லாட்ஜ் வளாகத்திலேயே டிரைவரோடு காத்திருக்கும். சாவி சாருடன் காலையில் ஒரு சிட்டிங் உட்கார்ந்து டிபன், காபி சாப்பிட்டுக்கொண்டே, சாவி இதழில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றியும், புதிய பகுதிகள் பற்றியும் விவாதிப்போம். மதியம் 1 மணியை நெருங்கியதும், மீட்டிங்கை முடித்துக்கொண்டு, சாவி சார் காரில் கிளம்பிச் சென்றுவிடுவார், தன் சொந்த வேலைகளைப் பார்க்க. நாங்கள் அந்த ஹோட்டலிலேயே சாப்பிட்டுவிட்டு, பெங்களூரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிடுவோம். மாலை ஏழு மணிக்கு அறைக்குத் திரும்பி, டிபன் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் சாவி சார் அறையில் ஒரு சின்ன மீட்டிங் நடத்திவிட்டு, இரவு பத்து மணிக்கு எங்கள் அறைக்குத் திரும்புவோம். வழக்கமாக ஒவ்வொரு சுற்றுலாவிலும் இதுதான் வாடிக்கை.

அந்த முறை பெங்களூர் போன முதல் இரண்டு நாட்களும் எந்தப் பிசிறும் இல்லாமல் அனைத்தும் வழக்கப்படியே நடந்தன. மூன்றாம் நாள் காலையில் எடிட்டோரியல் மீட்டிங்குக்கு உட்கார, நாங்கள் தயாராகி, சாவி சார் அறைக்குச் சென்றோம்.

“இன்னிக்கு எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. மதியம் 1 மணிக்கு மீட்டிங்கை வெச்சுப்போம். நான் அதுக்குள்ளே வந்துடுவேன். நீங்களும் அதுக்குள்ளே போய், ஏதாவது பர்ச்சேஸ் பண்ணணும்னா பண்ணிக்கிட்டு, சாப்பிட்டுட்டு வந்துடுங்க” என்று சொல்லிவிட்டு, ராணி மைந்தனுடன் காரில் கிளம்பிச் சென்றார்.

நானும் பாக்கியம் ராமசாமியும் மற்றவர்களும் வெளியே கிளம்பினோம். இந்த மாதிரி வெளியூருக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லும்போதெல்லாம், எங்கள் செலவுக்கென்று அனைவரின் கைகளிலும் தலா 500 ரூபாய் கொடுப்பார் சாவி சார். மூன்று நாள் தங்கினோம் என்றால், தலா 1500 ரூபாய் கிடைக்கும். அதில் நாங்கள் எங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக் கொள்வோம். எங்களின் தனிப்பட்ட செலவுகளைச் செய்து மகிழ்வோம். சாப்பாட்டுச் செலவு பொதுவானது. அதற்கான தொகையை மொத்தமாக என்னிடம் கொடுத்திருப்பார். லாட்ஜ் ஹோட்டலிலேயே சாப்பிட்டால் அது ரூம் பில் கணக்கில் சேர்ந்துவிடும். இந்த மாதிரி வெளியே சாப்பிடுவதைக் கணக்கு வைத்துக்கொண்டு மீதியை, ஊர் திரும்பியதும் சாவி சாரிடம் கொடுத்துவிடுவேன்.

அன்று காலையில், வழக்கம்போல் பெங்களூர் தெருக்களில் சுற்றினோம். நான் அடிக்கடி நேரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். மதியம் 1 மணிக்கு மீட்டிங் என்றிருக்கிறாரே சாவி சார் என்பதால், பதறிப் பதறி அனைவரையும் ‘போதும் பார்த்தது; சாப்பிட்டுவிட்டு ரூம் திரும்புவோம். குறித்த நேரத்துக்குள் வரவில்லையென்றால் சாவி சார் கன்னாபின்னாவென்று திட்டுவார்’ என்று, அனைவரையும் விரட்டி விரட்டி அழைத்துக்கொண்டு நாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு வந்தபோது மணி 12:30.

சாவி சாரின் வழக்கமான கார் அங்கே காணோம். ‘சரி வாருங்கள், சார் வருவதற்குள் இங்கேயே சாப்பாட்டை முடித்துக்கொண்டு, அவர் அறைக்குப் போகலாம்’ என்று சொல்லி, அங்கேயே மதிய உணவை முடித்துக்கொண்டோம். மேலே எங்கள் அறைகளுக்கும் சாவி சாரின் அறைக்கும் இடையில் ஏழெட்டு அறைகள் இருந்தன. சாவி சார் அறை பூட்டப்பட்டு இருந்தது.

நாங்கள் எங்கள் அறைக்குச் சென்றோம். மணி 1. சன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். கீழே கார்கள் நிறுத்தும் பகுதி முழுக்கக் கண்ணுக்குத் தெரிந்தது. சாவி சாரின் கார் மட்டும் இல்லை. திரும்பவும் அறைக்குள் சென்று, “சாவி சார் போன வேலை முடியவில்லை போலிருக்கிறது. அவர் இன்னும் அறைக்குத் திரும்பக் காணோம்!” என்று சொல்லிவிட்டு, டி.வி. பார்க்கத் தொடங்கினோம். சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தோம். அன்றைக்கு இரவு எங்களுக்கு டிரெயின்.

சற்று நேரம் கழித்து, மீண்டும் வெராண்டாவுக்கு வந்து சன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். சாவி சாரின் காரைக் காணவில்லை. மீண்டும் அறைக்குள் போய்விட்டேன். “1 மணிக்கு மீட்டிங் என்று சொல்லிவிட்டு இன்னும் வராமல் இருக்கிறாரே சார்..? மணி 2 ஆகப் போகிறதே!” என்று அலுத்துக்கொண்டபடி, ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், எங்கள் அறைக் கதவு தட்டப்பட்டது. எழுந்து போய்த் திறந்தேன். இறுகிய முகத்துடன் நின்றுகொண்டு இருந்தார் ராணி மைந்தன்.

“ரவி, உன்னை சார் கூப்பிட்டார்!” என்றார். “என்னது... சாவி சார் வந்துவிட்டாரா? தெரியாதே! கீழே அவரின் காரை காணோமே?” என்று சொல்லியபடியே ராணி மைந்தனுடன் போனேன்.

சாவி சாரின் அறைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனதுதான் தாமதம், ருத்ரமூர்த்தியாக நின்றுகொண்டு இருந்தார் சாவி சார்.

அவரது முகத்தில் கொதித்த கோபக் கனலைக் கண்டு நடுநடுங்கிப் போனேன் நான்.

- அடுத்த பதிவில் தொடர்கிறேன்.
.


7 comments:

அருமை....
தொடர்ச்சிக்கு காத்திருப்போம்!!

- ரோமிங் ராமன்.
 
அருமை.. தொடர்ச்சிக்காக காத்திருப்போம்!!- ரோமிங் ராமன்.
 
தொடருங்கள் சார்.
 
அடாடா... கார் ரிப்பேராகிவிட ஏதும ஆட்டோ பிடித்து வந்திருப்பாரோ..? அவரின் கோபத்தை எப்படி சமாளித்தீர்கள். அதன்பின் நடந்தது என்ன..? ஏராளமான கேள்விகள் என்னுள். சீக்கிரம் தொடருங்கள் சார்...
 
வெரி வெரி சஸ்பென்ஸ். கார் இல்லாமலேயே வந்துவிட்டாரா சாவி சார்?
 
அடிக்கடி கோபப் படும் நபர்களுடன் பணியாற்றுவது மிகக் கடினமாக்கும்.

அதிலும் அனிச்ச மலர் போல் நான் இருந்து தொலைத்தால் அது ரொம்ப ரொம்ப கஷ்டம் !!
 
செம இண்ட்ரஸ்டிங்...

சாரி சார். நீங்க அஞ்சி நிலைகுலைந்த சம்பவமென்றாலும் இப்போ கேட்குறதுக்கு இண்டரெஸ்ட்டா இருக்கு :-)