உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, June 12, 2012

சாவியை நிறுத்தினார் சாவி!


 
டுகடு முகத்துடன் நின்றுகொண்டு இருந்த சாவி சாரைப் பார்த்ததுமே, அடி வயிற்றில் கத்தி சொருகிய மாதிரி ஒருவித பயமும் படபடப்பும் நடுக்கமும் உண்டானது எனக்கு. என்னைப் பார்த்ததுமே கோபத்தில் பட்டாசாக வெடிக்கத் தொடங்கிவிட்டார் சாவி சார்.

என்ன நினைச்சுக்கிட்டிருக்கே நீ உன் மனசிலே? இங்கே என்ன வெட்டியா வந்து தின்னுட்டு, குடிச்சுக் கும்மாளம் போட்டுக் கூத்தடிக்கவா உங்களையெல்லாம் செலவு பண்ணிக் கூட்டிட்டு வரேன்? 1 மணிக்கு மீட்டிங்னு சொன்னா டாண்ணு 1 மணிக்கு அத்தனை பேரும் இங்கே வந்து நிக்க வேணாமா? 1 மணிக்கு மீட்டிங்னு சொல்லியிருக்கோமேனு நான் என் வேலையையெல்லாம் அப்படி அப்படியே போட்டுட்டு12:30-க்கெல்லாம் வந்து இங்கே தேவுடு காத்துக்கிட்டு இருக்கேன். கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு? பொறுப்பாசிரியர்னு சொல்லிக்க வெக்கமாயில்லே உனக்கு? போறும்... இங்கேயே இப்பவே சாவி பத்திரிகையை மூடிட்டேன். போய் எல்லார்கிட்டயும் சொல்லு, போ! எக்கேடோ கெட்டுப் போங்க. எனக்குக் கவலை இல்லே! உங்களுக்கே பொறுப்பும் அக்கறையும் இல்லாதப்ப நான் மட்டும் எதுக்கு உங்களைப் பத்திக் கவலைப்படணும்?...” என்று என்னைப் பேசவே விடாமல் சடசடவென்று பொரிந்து தள்ளியவர், ராணிமைந்தன் பக்கம் திரும்பி, “ராணி, எல்லாத்தையும் எடுத்து பேக் பண்ணு. உடனே ரூமை காலி பண்றோம்!” என்றார்.

ராணிமைந்தனும் சாவி சாரின் பெரிய சூட்கேஸில் துணிமணி, பொருள்களை அடுக்கத் தொடங்க, நான் மெதுவாக, “சார், நாங்க 12:30-க்கே வந்துட்டோம். கீழே பார்த்தேன். வழக்கமா நிற்கிற உங்க காரைக் காணலே. அதான், நீங்க இன்னும் வரலையோன்னு...” என்று தயங்கித் தயங்கிச் சொல்ல, முன்னிலும் உக்கிரத்தோடு என்னைப் பார்த்த சாவி சார், “வரலையோன்னு நினைக்கிறதோட ஏன் நிறுத்திட்டே? அங்கேயே செத்து எனக்குக் காரியம் பண்ணி முடிச்சுட்டாங்கன்னு நினைச்சுக்கிறதுதானே?” என்றார். எனக்கு அடுத்துப் பேசவே வார்த்தை வரவில்லை.

சாவி சாரே தொடர்ந்து, “வந்திருந்தா என்ன பண்ணியிருக்கணும்? நேரே என் ரூமுக்கு வந்திருக்கணுமா இல்லையா? நேரே உங்க ரூம்ல போய் இழுத்துப் போர்த்திட்டுப் படுத்துட்டா என்ன அர்த்தம்? பத்திரிகை மேல உனக்கே அக்கறை இல்லை. வேறென்ன சொல்றது? போ, போ! என் கண்ணு முன்னால நிற்காதே! உன்னைப் பார்க்கப் பார்க்கப் பத்திக்கிட்டு வருது எனக்கு. மேற்கொண்டு ஏதாவது சொல்றதுக்குள்ளே ஓடிப்போயிடுங்க எல்லாரும்! இனிமே யாரும் வேலை அது இதுன்னு அங்கே வந்து நிற்க வேணாம். பத்திரிகையை இழுத்து மூடியாச்சு. நான் சொன்னா சொன்னதுதான்!” என்றவர், தயாரான பெட்டிகளில் ஒன்றை எடுத்துக் கொள்ள, ராணிமைந்தன் பெரிய சூட்கேஸை எடுத்துக் கொள்ள, வந்திருந்த சாவியின் உறவினர் மற்ற பொருள்களை எடுத்துக் கொள்ள, அனைவரும் அறையை விட்டு வெளியேறினர். சாவி சார் மிகக் கோபமாக கால்களை வேக வேகமாக எடுத்து வைத்து, யாரையும் லட்சியமே செய்யாமல் வெராண்டாவில் நடந்து, படிகளில் வேகமாக இறங்கிப் போனார். பின்னாலேயே போய் அவரைச் சமாதானப்படுத்த முயன்ற எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியிடமும் கோபமாக ஏதோ சொன்னார் சாவி. விறுவிறுவென அனைவரும் கீழே இறங்கிப் போய், டாக்ஸி ஒன்றைச் சடுதியில் பிடித்து, மளமளவென்று ஏறிக் கிளம்பிப் போயே போய்விட்டனர். அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டன. அடை மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருந்தது. நாங்கள் அநாதைகள் போல் நின்றுகொண்டு இருந்தோம்.

பின்னர், மெதுவாக எங்கள் அறைக்குத் திரும்பினோம். அன்றைக்கு இரவு 9 மணிக்கு மேல்தான் எங்களுக்கு டிரெயின். அதுவரை என்ன செய்வது? தெரியவில்லை. அருகில் உள்ள லால்பாக்குக்குப் போய்ப் பொழுதைக் கழிக்கலாம் என்றால், சாவி சார் தன் உறவினர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த பின்பு, ஒருவேளை கோபம் தணிந்து போன் செய்தாலும் செய்யலாம் என்று ஒரு எண்ணம் எங்களை வெளியே போக விடாமல் தடுத்தது. சாவி சார் போன் செய்வார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தோம்.

மூன்று மணி சுமாருக்கு போன் வந்தது. எடுத்துப் பேசினேன். ராணிமைந்தன்தான் பேசினார். “ரவி, கிளம்பி வரும்போது அங்கே எங்க ரூம்ல சாவி சாரோட பெரிய டர்க்கி டவல் ஒண்ணை மறதியா விட்டுட்டு வந்துட்டோம்னு நினைக்கிறேன். உனக்குத் தெரியுமில்லையா, சார் எப்பவும் தோள்ல போட்டிருப்பாரே, அந்த மஞ்சள் டர்க்கி டவல்தான்! போய் இருக்கான்னு பார்த்து, இருந்தா எடுத்துக்கிட்டு சென்னை வந்துடுங்க!” என்றார்.

துண்டு இருந்தால், அதைக் கொண்டு போய்க் கொடுக்கும் சாக்கிலாவது சென்னையில் சாவி சாரை சந்தித்துச் சமாதானம் செய்யலாம் என்று மெல்லியதாக ஒரு நம்பிக்கை என் நெஞ்சில் துளிர்த்தது.

சரி சார்! ஆனா, சாவி சார் என்ன இப்படிக் கோபப்பட்டுட்டாரு! நாங்க நெஜம்மாவே 12:30-க்கெல்லாம் ரூமுக்கு வந்தாச்சு. சாவி சாரின் குணம் தெரிஞ்சு, எல்லாரையும் விரட்டி அழைச்சுக்கிட்டு வந்தேன். வேணா கேட்டுப் பாருங்க. நான் பண்ணின ஒரே தப்பு, காரைக் காணோம்னதும் சாரும் வரலைபோலன்னு நினைச்சுட்டதுதான்!” என்றேன்.

கார்லதான் வந்தோம் ரவி, வெளியிலேயே சாரையும் என்னையும் இறக்கிவிட்டுட்டுக் கார் போயிடுச்சுநாங்க சார் சொன்ன மாதிரி 12:30-க்கே ரூமுக்கு வந்துட்டோம். மணி ஒண்ணாகியும் உங்களைக் காணோம்னதும் சாருக்கு பிரஷர் ஏறிடுச்சு” என்றார் ராணி.

அப்படியும் உங்க அறைப் பக்கம் வந்து எட்டிப் பார்த்தேன் சார். கதவு மூடியிருந்தது...”

காலிங் பெல் அடிச்சியா?”

இல்லை சார்! வழக்கமா நீங்க ரெண்டு பேரும் அறைக்குத் திரும்பிட்டீங்கன்னா, அறைக் கதவு விரியத் திறந்துதான் இருக்கும். அதனால தூரத்திலேர்ந்தே பார்த்துட்டு, வரலைன்னு நினைச்சுப் போயிட்டேன். இதெல்லாம் யதேச்சையா நடந்த விஷயங்கள். இதுக்கு சார் இத்தனைக் கோபப்படணுமா? முதல் ரெண்டு நாளும் நல்லாத்தானே போச்சு? இன்னிக்கும் டிரெயின் ராத்திரிதான். அதுவரைக்கும் பத்திரிகை பத்திப் பேசியிருக்கலாமே?” என்றேன்.

சரி, விடு ரவி! சாரோட குணம்தான் உனக்குத் தெரியுமில்லே? அவருக்கு என்னவோ இன்னிக்கு மூடு சரியில்லே! விடு! அறையில சாரோட துண்டு இருந்தா எடுத்துட்டுப் போயிடுங்க. அதைச் சொல்றதுக்காகத்தான் போன் பண்ணினேன்!” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தார் ராணிமைந்தன்.

இன்றைய தினம் போல் அன்றைக்கு செல்போன் வசதிகள் இல்லை. இருந்திருந்தால், ராணிமைந்தனுக்கு போன் போட்டு, “எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேட்டுத் தெரிந்துகொண்டிருக்க முடியும். இத்தனைப் பிரச்னைகள் ஏற்பட்டிருக்காது.

சரி, சாவி சார் இடத்திலிருந்து போன் வந்துவிட்டது. இனிமேல் வெளியே லால்பாக் வரை போய் வரலாம் என்று முடிவு செய்தோம். அதற்கு முன்னதாக, சாவி சாரின் அறைக்குள் போய் (சாவியை ஒப்படைக்கவில்லை. எங்களிடம்தான் இருந்தது.) துண்டு இருக்கிறதா என்று பாத்ரூம் உள்படத் தேடிப் பார்த்தேன். இல்லை. இதை போன் போட்டு ராணிமைந்தனிடம் உடனே தெரிவித்துவிட்டேன். “அவ்வளவுதானா, வேற ஒண்ணுமில்லையா?” என்றார். “இல்லை சார்!” என்றேன் நான் வெள்ளந்தியாக. “சரி” என்று போனை வைத்துவிட்டார்.

பின்பு, நடந்தே லால்பாக் போனோம். ஏதேதோ பிடிப்பில்லாமல் பேசிக்கொண்டே சுற்றினோம். மனசெல்லாம் ரணமாக இருந்தது. எதிலும் பிடித்தமில்லாமல் இருந்தது. சீக்கிரம் இரவு 9 மணியாகி, அறைகளைக் காலி செய்து, சாவிகளை ஒப்படைத்துவிட்டு, எப்போதடா ரயில்வே ஸ்டேஷனை அடைவோம் என்றாகிவிட்டது.

ஒருவழியாக மாலை 7 மணி ஆயிற்று.

அவரவர் பெட்டி, படுக்கைகளை எடுத்துக்கொண்டு, கீழே இறங்கிப் போய், ரிசப்ஷனில் சாவிகளை ஒப்படைத்தபோது, ஒரு திடுக்கிடும் விஷயம் தெரிய வந்தது. சாவி சார் அறைகளுக்கான வாடகையை மட்டும்தான் செட்டில் செய்துவிட்டுப் போயிருந்தார். எக்ஸ்ட்ரா பெட் வாங்கியது, அறைக்குள் வரவழைத்து காலை காபி, டிபன் சாப்பிட்டது, மதிய உணவு சாப்பிட்டது என்கிற வகையில் இன்னும் சில ஆயிரங்களை நாங்கள் கட்ட வேண்டியிருந்தது. பதறிவிட்டோம்.

அவரவரிடம் உள்ளதைத் திரட்டினோம். நல்லவேளையாக, அன்றைய தினம் காலையில் சாவி சார் எங்கள் செலவுக்காகக் கொடுத்திருந்த பணத்தை யாரும் முழுசாகச் செலவு செய்திருக்கவில்லை என்பதால், தேவையான பணம் தேறிவிட்டது. ஒருவழியாகக் கட்டி ரசீது பெற்றுக்கொண்டு, ஆட்டோ பிடித்து, ஸ்டேஷனை அடைந்தோம். சாவி சாரும் ராணிமைந்தனும் மட்டும் மறுநாள் இரவு கிளம்பி வருவதாகத்தான் பிளான்!

மறுநாள் காலையில் சென்னையை அடைந்தோம்.

அனைவருக்கும் உறுதியான நம்பிக்கை என்னவென்றால்... ‘சாவி சார் இப்படிக் கோபப்பட்டுக் கத்துவது ஒன்றும் புதிதில்லை; அவரது சுபாவமே இப்படித்தான்! சாவியை மூடிவிடப் போகிறேன் என்று இதற்கு முன்பும் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறார். ஆனால், செய்ய மாட்டார். காரணம், பத்திரிகைதான் அவர் மூச்சு! எனவே, எல்லாரும் நாளை வழக்கம்போல் சாவி அலுவலகத்துக்குச் செல்வோம். பணிகளை வழக்கம்போல் தொடருவோம்!’

ஆனால், எனக்கு மட்டும் அந்த நம்பிக்கை சுத்தமாக இல்லை. சாவி சார் இந்த முறை பத்திரிகையை நிஜமாகவே மூடிவிட்டார் என்று தோன்றியது. என்ன சமாதானம் செய்தாலும் ஏற்கமாட்டார் என்று தோன்றியது. அவருடைய கோபத்தின் உக்கிரம் அந்த அளவுக்கு வீர்யம்!

மறுநாள் - நாங்கள் போய் சாவி சாரைப் பார்த்தோமா?

- சொல்வதற்கு இன்னும் கொஞ்சம் மிச்சம் உள்ளது. அடுத்த பதிவில் சொல்கிறேன்.6 comments:

கட்டுரை செம விறு..விறு..
 
அரியலூர் மாரிமுத்து
interesting and tempting to read
 
சாவி சார் அதன் பின்னர் பத்திரிகையை தொடரவில்லை என்பது தெரியும். ஆனால் சமாதான முயற்சிகள் பலன் தரவில்லையா? மீண்டும் சென்னையில் சந்தித்த போது அவர் என்ன சொன்னார் என்ற கேள்விகள் இன்னும என்னுள் தொக்கி நின்கின்றன. அடுத்த பதிவை எதிர்நோக்கி ஆவலுடன்...
 
"சாவி வார இதழ் ஏன் நின்றுவிட்டது" என்கிற கேள்வி - சாவி வார இதழ் நின்ற நாளில் இருந்தே என் மனதில் அழுத்திய கேள்வி. பதினெட்டு வருஷங்கள் கழித்து விடை கிடைத்திருக்கிறது. நின்று போன அந்த கடைசி வார இதழில் வந்த எனது சிறுகதை இது.

காயங்கள்...


அந்த நாளில் எங்களை போல வளரும் எழுத்தாளர்களாய் இருந்த பலருக்கு சாவி வார இதழ் நின்று போனது மிக பெரிய அதிர்ச்சி. சாவி வார இதழ் நின்றது தெரியாமல் - கடைக்காரரிடம் "ஏன் சாவி வரல... ஏன் சாவி வரல" என்று கேட்டது ஞாபகத்திற்கு வருகிறது. 93, 94ம் ஆண்டுகளில் என்து பத்து சிறுகதைகள் சாவியில் வந்திருந்தது. அதற்காக இப்போது தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். "யோகி" என்கிற பெயரில் எழுதினேன்.
 
குலுங்கக் குலுங்க "வாஷிங்டன் திருமணத்தில்" நம்மை எல்லாம் சிரிக்க வைத்த சாவி சார் கோபக் காரரா?

அதன் பின் வந்த "விசிறி வாழை"யில் மெல்லிய உணர்வுகளைப்

பிரதிபலித்த சாவி சார் கோபக் காரரா?

போங்க சார் நீங்க பொய் சொல்றீங்க !!!
 
இந்தப் பதிவு எழுதி முழுசா பத்து நாள் ஆயிடிச்சி. அடுத்த பதிவை இன்னும் எழுதலை. இப்படியிருந்தீங்கன்னா சாவி சார் விண்ணுலகில் இருந்து கோச்சுப்பார். சீக்கிரம் எழுதுங்க சார்.