உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, June 24, 2012

என்னோடு இருக்கிறார் சாவி சார்!

சாவி சாரின் சதாபிஷேகத்துக்குப் பின்னர், அவரை நான் அதிகம் சந்திக்கவில்லை. சாவி பத்திரிகையை திருவேங்கடம் என்பவர் வாங்கி, நடத்திக்கொண்டு இருந்தார். சாவி சாரே அதற்கு ஆசிரியராக இருந்து நடத்தினார். முன்னர் ஆனந்த விகடனில் பணியாற்றிய எஸ்.வரதராஜன் என்பவர் சில காலமும், பாக்கியம் ராமசாமி அவர்கள் சில காலமும் சாவி சாருக்கு உதவியாக இருந்து நடத்திக் கொடுத்தார்கள். சாவி சாரின் கோப தாபங்கள் தொடர்ந்ததில், அவர் ஆசிரியர் பொறுப்பிலிருந்து சீக்கிரமே விலகிக்கொண்டார். பின்பு, திருவேங்கடம் அவர்களே ஆசிரியராக இருந்து நடத்தி வந்தார் என நினைக்கிறேன். பின்பு, அவரும் தொடர்ந்து பத்திரிகையை நடத்த இயலாமல் நிறுத்திவிட்டார். எப்படியோ... சாவி பத்திரிகை மறுபிறவி எடுத்தும், இரண்டு இரண்டரை ஆண்டுகள் மட்டுமே வெளியாகி நின்று போனது வருத்தத்துக்குரிய விஷயம்.

அதற்குப் பின்னர் சாவி சார் மந்தைவெளியில் இருந்த தமது மகள் ஜெயந்தி வீட்டில் செட்டிலாகி, பூரண ஓய்வில் இருந்தார். அங்கே அவரும் மாமியும் மட்டும்தான். மகள் ஜெயந்தியும் மருமகனும் பேரக் குழந்தைகளும் ஆஸ்திரேலியாவில் இருந்தனர்.

இந்த நிலையில்தான் சாவி சார் ஒரு நாள் என்னை விகடன் அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். நெடுநேரம் விகடனில் என் பணிகள் குறித்து விசாரித்தார். விகடனில் என்னைச் சேர்த்துக்கொள்வதற்கு முன்பு, விகடன் சேர்மன் பாலசுப்பிரமணியன் அவர்கள் என்னைப் பற்றி அவரிடம் விசாரித்ததையோ, அதற்கு சாவி சார் என்னைப் பற்றி ஆஹா, ஓஹோ என்று பாராட்டிச் சொன்னதையோ என்னிடம் சொல்லவே இல்லை. அப்போது மட்டுமல்ல; கடைசி வரைக்கும்கூட இது பற்றி சாவி சார் சொல்லவில்லை. நானும்கூட அவரிடம் இது குறித்துப் பேசி, நன்றி தெரிவிக்கவில்லை.

அன்றைய தொலைபேசி உரையாடலின் இறுதியில், முடிந்தால் தன்னை வந்து சந்திக்குமாறு சொன்னார் சாவி. “கண்டிப்பா ஒரு நாள் வரேன் சார்” என்றேன். “அப்படிப் பொதுவா சொன்னா, என்னிக்காவது ஒரு நாள் போய்க்கலாம்னு தோணும். போகவே கைவராது. அதனால, யாரையாவது போய்ச் சந்திக்கணும்னா என்னிக்குன்னு ஒரு டேட்டை ஃபிக்ஸ் பண்ணிக்கோ. அப்பத்தான் அந்தச் சந்திப்பு நிகழும். சரி, உன்னால என்னிக்கு இங்கே வரமுடியும், சொல்லு?” என்றார். “நீங்களே சொல்லுங்க சார், என்னிக்கு வரட்டும்? இந்த ஞாயித்துக்கிழமை வரட்டுமா?” என்றேன். “வா! அவசியம் வா! வரும்போது வொய்ஃபையும் குழந்தைகளையும் அழைச்சுக்கிட்டு வா! காலையில 10 மணிக்கு இங்கேயே சாப்பிடற மாதிரி வா!” என்றார்.

அதன்படியே காலையில் ஆட்டோ பிடித்து, மனைவி, குழந்தைகளோடு மந்தைவெளி போனேன். சாவி சாரும், மாமியும் மிகவும் மகிழ்ச்சியோடும் அன்போடும் வரவேற்றார்கள். ஜூஸ் கொடுத்தார்கள். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். விகடனில் என் வேலை, குடும்ப விஷயங்கள், குழந்தைகளின் நலன் எனப் பேச்சு பொதுவானதாகவே இருந்தது. விகடனில் தான் பணியாற்றியபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார் சாவி. விகடன் சேர்மன் பாலசுப்பிரமணியன் அவர்களின் நினைவாற்றல், கருணை உள்ளம், மிக நேர்மையான குணம் எனப் பலவற்றை அனுபவ உதாரணங்களுடன் சொன்னார்.

பிறகு, 11 மணி அளவில், “வா, வெளியே ஓர் ஓட்டலில் போய் சாப்பிட்டுட்டு வரலாம்! மாமியால இப்பல்லாம் வெறும் ரசம் மட்டும்தான் சமைக்க முடியுது!” என்று மாமியையும் எங்களையும் அழைத்துக்கொண்டு காரில் கிளம்பினார். முன்பக்கத்தில் டிரைவருக்கு அருகில் சாவி சார் ஏறிக்கொள்ள, பின் சீட்டில் மடியில் குழந்தைகளை அமர்த்திக்கொண்டு நானும் மனைவியும் அமர்ந்துகொண்டோம். அருகில் மாமி.

கார் நேரே அண்ணா சாலையில் இருந்த மதுரா ஓட்டலுக்குச் சென்றது. அனைவருக்கும் மீல்ஸ் ஆர்டர் செய்தார். குழந்தைகள் உள்பட திருப்தியாகச் சாப்பிட்டோம். பின்னர் அனைவருக்கும் ஐஸ்க்ரீம் வந்தது. குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான். பின்னர் ஒரு பாக்கெட் நிறைய சாக்லேட்ஸ் வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுத்தார். கிளம்பினோம்.

“காரை பீச் ரோடு வழியா மெதுவா விடு!” என்றார். வெயில் இல்லை. நல்ல காற்று வேறு! மீண்டும் சாவி சாரின் இல்லத்துக்குத் திரும்பினோம்.


சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். சாவி சார் ஒரு கணினி வாங்கியிருந்தார். அதில் கம்போஸ் செய்யவும், ஸேவ் செய்யவும் பழகிக்கொண்டு இருப்பதாகச் சொன்னார். கணினி அருகேயே நான் போயிராத காலம் அது. எனவே, இந்த வயதில் சாவி சார் கணினி கற்றுக்கொள்கிறாரா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “கொஞ்சம் காசு சேர்த்து நீயும் ஒண்ணு வாங்கிப் போடு! உன் வேலைக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்!” என்றார். ‘ஏதோ ஆர்வத்தில் சொல்கிறார். எனக்கெதற்கு கம்ப்யூட்டர்? அநாவசியம்!’ என்றுதான் அப்போது நினைத்தேன்.


பிறகு, மாமியை அழைத்து, உள்ளே சென்று பீரோவிலிருந்து என் மனைவிக்காக வைத்திருந்த புடவையை (ஜப்பான் சில்க்) எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கும்படி சொன்னார். வெற்றிலை பாக்கு, குங்குமச் சிமிழ், ரவிக்கை பிட் உள்பட ஒரு தட்டில் புடவையை வைத்து என் மனைவியிடம் கொடுத்தார் மாமி. குழந்தைகளுக்கு பலூன் பாக்கெட், குட்டிக் குட்டி பொம்மைகள் அடங்கிய ஒரு பெட்டி, காற்றுத் தலையணை, ஃபாரின் செண்ட், யூஸ் அண்ட் த்ரோ ரேஸர்கள் 50 அடங்கிய ஒரு பாக்கெட் என என்னென்னவோ தந்தார்.


மணி மதியம் 3 இருக்கும். விடைபெறுகிற நேரம் வந்தது.


“ரவி, நீ குடும்பத்தோடு இங்கே வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். அடிக்கடி நீ மட்டுமாவது வந்துண்டு போயிண்டு இரு ரவி!” என்றவர், “உனக்குன்னு நான் ஒண்ணுமே தரலை. இந்தா, இது பழசுதான்! என் ஞாபகார்த்தமா இதை வெச்சுக்கோ!” என்று தன் கையில் பல ஆண்டுகளாகக் கட்டிக்கொண்டிருந்த வாட்ச்சைக் கழற்றி என் கைகளில் தந்தார்.


எனக்குக் கண்கள் கலங்கிவிட்டன. அவரையும் மாமியையும் மனைவியோடு நமஸ்கரித்து எழுந்து, அந்த வாட்சைப் பெற்றுக்கொண்டேன். (படத்தில் இருப்பது சாவி சாரின் வாட்ச்தான்!)

அந்த வாட்ச்சைப் பார்க்கிறபோதெல்லாம், சாவி சாரே என்னோடு இருந்து, தைரியம் சொல்லி, ஊக்கம் கொடுத்து, ஆசீர்வதித்து வழிநடத்துவதான ஒரு திருப்தி எனக்குள் எழுவது உண்மை!
.


5 comments:

nekizum ninaivukal
 
keezhai.a.kathirvel
arumai sir
 
அரிய பொக்கிஷம். சாவி சாருடைய அன்பும் நெருக்கமும் கிடைக்கப் பெற்ற பாக்கியசாலியான உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன் நான்.
 
மீண்டும் ஒருமுறை.... ச்சே.. என்னமோ போங்க சார். சாவி சாரின் அருகில் இருந்து பனி புரிந்ததே பெரிய பாக்கியம். அவரைப் பற்றி இன்னும் எழுதுங்கள். ஒரு புத்தகமாக போடலாம்.
 
அடிக்கடி இப்போதெல்லாம் சந்தித்தாலும் கடிகாரத்தைப்பார்க்காமல் இருந்துவிட்டேனே! அடுத்த முறை உங்களைப் பார்க்கும்போது கடிகாரத்தியும் பார்ப்பேன்.