உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, April 22, 2012

சிரிப்பிலே வளர்ந்தேன்!


சில நாட்களுக்கு முன்னால், ஹ்யூமர் கிளப் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ‘சிரிப்பிலே வளர்ந்தேன்’ என்னும் தலைப்பில் பேசினேன். தலைப்புக்கும் நான் பேசினதுக்கும் அத்தனை பொருத்தம் இருந்த மாதிரி தெரியவில்லை. என்றாலும், என் பேச்சைக் கேட்ட அனைவரும் ரசித்துச் சிரித்தார்கள். அது போதும் எனக்கு. என் பேச்சை ரெக்கார்ட் செய்திருந்தான் என் மகன். ஆனால், தெளிவாகக் கேட்கவில்லை. ஒரே இரைச்சலாக இருந்தது. எனவே, என் ஞாபகத்தில் இருந்தவற்றை ஒலிப்பதிவோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒருவழியாக இந்தப் பதிவை எழுதிவிட்டேன். நான் அங்கே புகைப்படம் எதுவும் எடுக்கவில்லை. இந்தப் படம் எனது முக நூல் நண்பர் எஸ்.எஸ்.ஆர்.சுகுமாரின் ஃபேஸ்புக்கிலிருந்து சுட்டது.

சிரிப்பிலே வளர்ந்தேன்!

னைவருக்கும் வணக்கம்.

இன்னிக்குக் கூட்டத்தை சிரிப்பு இறைவணக்கத்தோடு தொடங்கினது புதுமையா இருந்தது. அதனால நானும்சிரிப்பிலே வளர்ந்தேன்என்கிற என் உரையை சிரிப்போடயே தொடங்கலாம்னு நினைக்கிறேன். (செல்போனில் பதிவு செய்திருந்த குழந்தையின் சிரிப்புச் சத்தத்தை மைக் மூலம் அரங்கமெங்கும் பரப்புகிறேன்!)

இந்தச் சிரிப்பைக் கேட்கும்போது எத்தனை ஆசையா இருக்கு பாருங்க. நம்ப மனசுக்கு எவ்ளோ உற்சாகமா இருக்கு. நம்முடைய துயரங்கள் எல்லாம் அடியோடு காணாம போன மாதிரி ஒரு ஃபீலிங் கிடைக்குதா, இல்லியா? சிரிப்பின் வலிமை இதுதான்!

இது ஒரு குழந்தையின் சிரிப்புங்கிறதும் ஒரு காரணம். ஏன்னா, இது கள்ளங்கபடு இல்லாத வெள்ளைச் சிரிப்பு. ஆமா, நாமெல்லாம் குழந்தை போல கள்ளங்கபடு இல்லாம சிரிச்சோம்னா நம்ம சிரிப்பும் நமக்குள்ளே மட்டுமில்லாம, நம்மைச் சுத்தி இருக்கிறவங்க மனசுக்குள்ளும் உற்சாகத்தை ஏற்படுத்தும். அதைவிட்டுட்டு, சிரிக்கிறேன்பேர்வழின்னும்க்குக்கும்ம்ம்... ராஜசேகர்... எதப் பத்தியும் கவலைப்படாதே! அவனைப் போட்டுத் தள்ளிடு!’னு நம்பியார் சிரிப்பு சிரிச்சா, அது வேலைக்காகாது! ஏன்னா அது வில்லன் சிரிப்பு!

ஆமா! சிரிப்பிலேயே பலவகை இருக்குங்க. வில்லன் சிரிப்பு, விஷமச் சிரிப்பு, நமுட்டுச் சிரிப்பு, நயவஞ்சகச் சிரிப்பு, அசட்டுச் சிரிப்பு, அதிகாரச் சிரிப்புன்னு... ‘நானே ராஜான்னு ஒரு படம். அதுல கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு பாட்டுல, ‘சிரிப்பு... அதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு!’ன்னு விதம் விதமா சிரிச்சுக் காண்பிச்சுப் பாடியிருப்பார்.

மா, சிரிக்கணும்... சிரிக்கணும்கிறாங்களே, எதுக்குச் சிரிக்கணும்? சிரிக்கிறதனால ஏதாவது பலன் உண்டா? உண்டு.

1993-ல் விஞ்ஞானிகள் கூடி, மனிதனோட எண்ணங்களுக்கும் உடல் நிலைக்கும் ஏதாவது தொடர்பு உண்டான்னு ஆராய்ச்சி பண்ணாங்க. அதுலே ஒரு முக்கியமான விஷயம் தெரிய வந்தது. அது என்னன்னா... நமது எண்ணங்களுக்கும் மன நிலைக்கும் ஏத்தபடி நம்ம உடல்ல இயங்குகிற செல்களோட நோய் எதிர்ப்புச் சக்தி கூடுது, அல்லது குறையுது என்பதுதான் அது.

நமது நரம்புகள் ஒரு ரசாயனத்தை வெளியிட்டபடியே இருக்குதாங்க. இந்த ரசாயனத்துக்கு CGRP’ன்னு பேரு. இதுதான் நரம்புகளுக்கு அடியில் இருக்கிற நோய் எதிர்ப்புச் சக்தி செல்களோட இயல்பை ஊக்குவிக்குதாம். நமது மன அலைக்கு ஏற்ப, நமது எண்ணங்களுக்கு ஏற்ப இந்த 'CGRP' ரசாயனம் அதிகமா உற்பத்தியாச்சுன்னா நம்ம உடல்ல நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகமாகும்.

சரி, எப்படி நாம நம்ம எண்ணங்களைக் கொண்டு இந்த ரசாயனத்தை அதிகப்படுத்திக்கிறது? ரொம்பச் சுலபம். நாம மனசு விட்டுச் சிரிச்சா போதும். நாம மனசு விட்டுச் சிரிக்கிறபோதெல்லாம் இந்த 'CGRP' (Calcitonin gene-related peptide) ரசாயனம் அதிகமா சுரக்குதுன்னு அந்த ஆராய்ச்சி மூலமா நிரூபிச்சிருக்காங்க.

அது மட்டுமில்லீங்க... ‘உலகின் மிகச் சிறந்த மருந்து - மனம் விட்டுச் சிரிப்பதே!”ன்னு நியூயார்க் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆர்தர்ஸ்டோன் தன் ஆய்வின் மூலம் உறுதி செய்திருக்கிறார். நாம் சிரிக்கும்போதெல்லாம் 'இம்யூனோகுளோபுலின்-ஏ' [IMMUNOGLOBULIN-A] அப்படீங்கிற நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரிக்குதாம். இது பாக்டீயாக்கள், வைரஸ் கிருமிகள், புற்றுநோய்த் திசுக்கள் இதையெல்லாம் நம்ம  உடம்புக்குள்ளே போகவிடாம தடுத்துடுதுதாம். இதனால, மனம் விட்டுச் சிரிப்பவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியோடு நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக உயிர் வாழலாம்னு அடிச்சு சொல்றார் இந்த புரொஃபசர்.

அவ்வளவு ஏங்க... ‘வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்னு நம்ம மூதாதையர்கள் ரொம்ப காலத்துக்கு முன்னாடியே இதைக் கண்டுபிடிச்சு ரொம்ப எளிமையா சொல்லிட்டுப் போய்ட்டாங்க. நம்மவங்க சொன்னா யாரு கேக்கறாங்க. யாராவது ஃபாரின்காரங்க சொன்னா, பிரமிச்சுக் கேட்போம் இல்லீங்களா, அதுக்காகத்தான் ஃபாரீன் சயிண்டிஸ்ட், ஃபாரின் புரொஃபசர் பத்தியெல்லாம்  இங்கே எடுத்து விட்டேன்.

ஃபாரின்லலாம் பார்த்தீங்கன்னா, ஆஸ்பத்திரிகள்ல நகைச்சுவை வீடியோ காட்சிகள் ஓடிக்கிட்டே இருக்கும். சிரிச்சுக்கிட்டே இருந்தா, அந்த பேஷண்ட்டை சீக்கிரமா குணப்படுத்திட முடியும்னு அங்குள்ள டாக்டர்கள் நினைகிறாங்க. இங்கேயும் சில ஆஸ்பத்திரிகள்ல டி.வி. ஓடிக்கிட்டிருக்கு. ஆனா என்ன, அங்கேயும் மெகா சீரியல் அழுகைதான்!

சிரிப்போட பெருமைகளைப் பத்திச் சொல்லிக்கிட்டே போகலாம். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ன்னை ஏன் இங்கே சிறப்பு விருந்தினரா கூப்பிட்டாரு சிரிப்பானந்தானு நேத்திக்கெல்லாம் யோசனை பண்ணிட்டே இருந்தேன். எனக்கும் சிரிப்பும் எத்தனை கிலோ மீட்டர்னு தெரியாம நம்மளைக் கூப்பிட்டுட்டாரேன்னு நினைச்சேன். இத்தனை பெரிய நகைச்சுவை ஜாம்பவான்கள் கூடியிருக்கிற இந்தக் கூட்டத்துக்கு மத்தியில நம்மளைக் கொண்டு வந்து நிறுத்தி, பேசச் சொல்லியிருக்காருன்னா இவருக்கு எவ்வளவு பெரிய தில்லு இருக்கணும்னும் யோசிச்சேன். அப்புறம் புரிஞ்சு போச்சு... இவன் நல்லபடியா பேசினா சரி... அல்லது தக்காபுக்கானு ஏதாவது உளறினாலும் அது இதைவிடப் பெரிய தமாஷா இருக்கும்னு முடிவு கட்டிட்டாருன்னு புரிஞ்சுடுச்சு. சிக்கிட்டாண்டா சின்னச்சாமின்னு இதோ உங்க முன்னாடி வந்து நின்னாச்சு.

நான் ஆனந்த விகடன்ல முதன்மைப் பொறுப்பாசிரியரா வேலை செய்யறேன். ஆனந்தம்னா மகிழ்ச்சி. விகடம்னா சிரிப்பு. அதாவது, ஆனந்த சிரிப்பு! நான் ஆனந்த சிரிப்பு; இவரு சிரிப்பானந்தா! நல்லாருக்கில்லே பொருத்தம்! ஒருவேளை அதனாலயும் என்னைக் கூப்பிட்டிருப்பாரோ?!

னந்த விகடனுக்கு வரதுக்கு முன்னால சாவி பத்திரிகைல பொறுப்பாசிரியரா இருந்தேன். சாவி சார் ரொம்ப நகைச்சுவையானவர். அவர் சொல்ற உதாரணம் ஒவ்வொண்ணும் நகைச்சுவையோட, பளீர்னு மனசுல தைக்கும்படியா இருக்கும்.

ஒருமுறை, ஒரு பத்திரிகைல அரைப் பக்கத்துக்கு ஒரு ஜோக் போட்டிருந்தாங்க. ஜோக் என்னவோ சின்னதுதான். படமும் பெரிசில்லே. ரெண்டு பேர் பேசிக்கிற மாதிரி ஜோக். அதுக்கு அரைப் பக்கம் தேவையே இல்லே. ஆனாலும், பக்கத்தை ரொப்பணும்னு அந்தப் பத்திரிகையோட லேஅவுட் ஆர்ட்டிஸ்ட் எண்ண பண்ணியிருந்தார்னா, ஜோககை கொஞ்சம் சாய்ச்சா மாதிரி லேஅவுட் பண்ணி, ஓரங்கள்ல விழற காலியிடங்கள்ல கோடுகள் போட்டு, ஒருமாதிரி சமாளிச்சிருந்தார். அவரும்தான் என்ன பண்ணுவார் பாவம்!

அதை எங்கிட்டே காண்பிச்சு சாவி சார் சொன்னார்... “இங்கே பார் ரவி, ரெண்டு ஜோக் போட வேண்டிய இடத்துல ஒரு ஜோக் போட்டு நிரப்பியிருக்காங்க. இது எப்படியிருக்குன்னா... ஒரு ட்ரெயின்ல போறோம். எதிர் சீட்டு காலியா இருக்கு. மூணு நாலு பேர் உட்கார வேண்டிய சீட்டு. அதுல ஒரே ஒருத்தன்தான் உட்கார்ந்திருக்கான். அவன் உட்கார ஓரமா ஒரு இடம் போதும். ஆனா நிறைய இடம் காலியா இருக்கே. அதையெல்லாம் அனுபவிச்சுட வேண்டியதுதான்னு முடிவு பண்ணவன் மாதிரி, நடுவுல உட்கார்ந்து இந்தப் பக்கம் காலை நீட்டிக்கிட்டு, அந்தப் பக்கம் சரிஞ்சு, சாய்ஞ்சு உட்கார்ந்து, கையைக் காலை இங்கேயும் அங்கேயுமா நீட்டிக்கிட்டு உட்கார்ந்திருப்பான். அந்த மாதிரி இருக்கு இந்த லேஅவுட்டு!” இன்னிக்கும் பத்திரிகைகளில் லேஅவுட்டைப் பார்க்கிறபோது, இது எனக்கு ஞாபகம் வரும். நகைச்சுவையோட சொன்னா எந்த ஒரு விஷயமும் மனசுல பளிச்சுனு பதியும்கிறது இது ஒரு நல்ல உதாரணம்.

சாவி சார் இன்னொரு பிரமாதமான ஜோக் சொன்னார்... ஒரு கஞ்சப் பிசினாறிக் கணவன். மனைவிக்கு நகை நட்டு வாங்கித் தரமாட்டான்; ஒரு நாள் கிழமைன்னா புடவை எடுத்துத் தரமாட்டான். அவ்வளவு ஏன், ஜாலியா ஒரு நாளைக்கு வெளியிலே ஒட்டலுக்குக் கூப்பிட்டுப் போய் டிபன் காபிகூட வாங்கித் தரமாட்டான்னா பார்த்துக்குங்க.

அவன் ஒரு நாள், தவிர்க்கவே முடியாம பெண்டாட்டியோட ஒரு ஹோட்டலுக்குப் போகும்படி ஆயிடுச்சு. உள்ளே போய் உட்கார்ந்தாங்க. ’என்ன சாப்பிடறே? ஆளுக்கு ரெண்டு இட்லி சொல்லவா?’ன்னு கேட்டான் கணவன். “இட்லியெல்லாம் வேணாங்க. அதையெல்லாம் வீட்லயே பண்ணி சாப்பிட்டுக்கலாம். ஏதாவது ஸ்வீட் இருந்தா வாங்குங்களேன்னா மனைவி. “அப்படியா... சரின்னு யோசிச்ச கணவன், “இன்னொரு குலோப்ஜாமூன் வேணா வாங்கித் தரவா?”ன்னு கேட்டான்.

அவளுக்குப் புரியலை. “இன்னொரு குலோப்ஜாமூனா? ஏங்க... இப்பத்தாங்க ஹோட்டலுக்கே வந்திருக்கோம். இனிமேதான் ஸ்வீட்டுக்கே ஆர்டர் பண்ணப் போறீங்க. அதுக்குள்ளே இன்னொண்ணான்னு கேக்கறீங்க?”

அடியே! என்ன மறந்துட்டியா? இல்ல மறந்துட்டியான்னு கேக்கறேன். 12 வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி ஒரு தடவை இந்த ஹோட்டலுக்கு வந்தப்போ உனக்கு ஒரு குலோப்ஜாமூன் வாங்கிக் கொடுத்தேனே! நல்லா ஞாபகப்படுத்திப் பாருன்னான் கணவன்.

இது எப்படியிருக்கு? இப்படியும் இருக்காங்க சில பேரு. “பேரைப் பாரு ரஞ்சனாம் ரஞ்சன். சரியான கஞ்சன்!”னு மனசுக்குள்ள முணுமுணுத்துக்கிட்டா அவன் பெண்டாட்டி.

ப்படி ஒவ்வொருத்தர் பேரையும் அவரவரோட கேரக்டருக்கேத்த மாதிரி மாத்தி வெக்கிறதும் ஒரு நகைச்சுவைதான்.

நடிகர் ராமராஜன் நிறைய கிராமிய கதாபாத்திரங்கள்ல நடிச்சப்போ அவரை கிராமராஜன்னு சொன்னாங்க இல்லியா! சரி, அவரே சினிமாவுக்கு பதிலா நிறைய மேடை நாடகங்கள்ல நடிச்சிருந்தா அவரை எப்படிக் கூப்பிடலாம்? டிராமாராஜன்னு கூப்பிடலாம்.

என்னோட நண்பர் ஒருத்தர் தன் கீழ வேலை செய்யற பையனை, “டேய் மடசாமி! இங்கே வாடா! மடசாமி, சாருக்கு சேர் எடுத்துப் போடுடா!”ன்னே சொல்வாரு. “என்ன சார், அவன் பேரு மாடசாமி. அதைப் போய் மடசாமி, மடசாமின்னு கூப்பிடறீங்களே!”ன்னு கேட்டேன். “இல்லப்பா! உனக்குத் தெரியாது. அவன் சரியான அசமஞ்சம். மாங்கா மடையன். அதான் மடசாமின்னு கூப்பிடறேன்!” என்றார்.

எங்க ஆபீசுக்குப் பக்கத்துல ஒரு நடமாடும் குளிர்பானக் கடை உண்டு. அங்கே தினமும் மோர், ஜூஸ்னு ஏதாவது வாங்கிக் குடிப்போம். விலை ரொம்ப சீப்தான். 5 ரூபா. ஆனா ஒண்ணு... ஜூஸோ, மோரோ எதுவுமே திக்கா இருக்காது. தண்ணியா இருக்கும். ஒருநாள் அவர் கிட்டேஎன்னாங்க உங்க பேரு?”ன்னு கேட்டேன். “பன்னீர்செல்வம் சார்னாரு. உடனே, “இனிமே தண்ணீர்செல்வம்னு மாத்தி வெச்சுக்கன்னுட்டேன். “ஆகட்டுங்கன்னாரு அசராம!

கொஞ்ச நாளைக்கு முன்னால, “எம் பேரு தணிகாசலம். கடந்த 25 வருஷமா பத்திரிகைகள்ல துணுக்குச் செய்திகள் எழுதிட்டு வர்றேங்கன்னு சில துணுக்குச் செய்திகளோடு வந்து நின்னார் ஒருத்தர். ”அடடே, அப்ப நீங்க துணுக்காசலம்னு சொல்லுங்கன்னேன். சிரிச்சுட்டாரு.

ங்கே எல்லாரும் டாக்டர்- பேஷண்ட் ஜோக்ஸ் சொன்னீங்க. நல்லா இருந்துது. நானும் எனக்குத் தெரிஞ்ச ஜோக்ஸைச் சொல்றேன்.

1) ஒரு ஆபரேஷன் தியேட்டர். பேஷண்ட் படுத்திருக்காரு. கத்தி, கத்திரிக்கோலையெல்லாம் தூக்கிப் போட்டுப் பிடிச்சு விளையாடிட்டே வந்தாரு டாக்டர். பேஷண்ட் பதற, “பயப்படாதீங்க. டாக்டருக்குக் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் ஜக்ளிங் தெரியும்னா நர்ஸ்.

2) அதே மாதிரிதான் இன்னொரு ஆபரேஷன் தியேட்டர். மத்தவங்க எல்லாம் வாயில் பச்சைத் துணி கட்டிக்கிட்டு வர, ஆபரேஷன் செய்யப்போகிற டாக்டர் மட்டும் கண்ணுல துணி கட்டிக்கிட்டு வந்தாரு. பேஷண்ட் பார்த்து குழம்பிப் போய், நர்ஸ் கிட்டே கேட்க... “அது வேற ஒண்ணுமில்லைங்க, டாக்டருக்கு ரத்தத்தைப் பார்த்தா கொஞ்சம் அலர்ஜி! அவ்வளவுதான். நீங்க பயப்படாதீங்கன்னாளாம் நர்ஸ்.

3) ஆபரேஷனுக்குத் தயாரா ஒரு பேஷண்ட். ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடி! பேஷண்ட் பயத்தோட, “ஏன் டாக்டர்... நீங்க கத்தியால என் வயித்தைக் கீறும்போது வலிக்காதே?”ன்னு ஒரு சந்தேகத்துக்குக் கேட்டார். உடனே டாக்டர், “நல்லவேளை... ஞாபகப்படுத்தினீங்க! ஏன் நர்ஸ்... இந்தக் கத்தியையெல்லாம் சாணை பிடிச்சு வெக்கச் சொன்னேனே, வெச்சீங்களா?”ன்னு கேட்டாராம். பேஷண்ட்டோட நிலமை எப்படி இருந்திருக்கும்னு பார்த்துக்குங்க.

4) டாக்டர் தர்மராஜன் தன்னோட கிளினிக்கை மாடியில வெச்சிருந்தாரு. கீழே ஒரு போர்டு. டாக்டர் எம்.தர்மராஜன், மேலே போகும் வழின்னு அறிவிப்பு. சொல்லுங்க, ஒரு பய போவானா? இதுல, எம்ங்கிற எழுத்து மேல இருந்த புள்ளியை வேற ஒரு போக்கிரி அழிசசுட்டான். எம். தர்மராஜன் எமதர்மராஜன் ஆயிட்டாரு.

5) இன்னொரு டாக்டர்... எலும்பு சிகிச்சை மருத்துவர். அவர் கிட்டே கால் முறிவு ஏற்பட்டு ஒரு பேஷண்ட் வந்தார். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததுல, முழங்காலுக்குக் கீழே ரெண்டு மூணு துண்டா உடைஞ்சு போயிருந்துது எலும்பு.

கால்ல பலமா அடிபட்டிருக்கே. ஆபரேஷன் பண்ணிக் கட்டு போடுறேன். இன்னும் ரெண்டு மாசத்துக்கு மாடிப்படியெல்லாம் ஏறி இறங்காதீங்க. கட்டு அவுத்த பிறகு நானே சொல்றேன்ன்னர் டாக்டர். அடுத்து 15 நாள் கழித்து வரச் சொன்னார். பேஷண்ட் வந்தார். டாக்டர் டெஸ்ட் செய்தார். “மாடிப்படி ஏறி இறங்கலே இல்லே! நான் சொன்னதை கரெக்டா ஃபாலோ பண்றீங்கதானே?”ன்னு கேட்டார். ஆமா சார்! மறுபடி 15 நாள் கழித்து வந்தார். திரும்பவும் அதே கேள்வி. ஆமா சார், கரெக்டா ஃபாலோ பண்றேன். இப்பெல்லாம் மாடிப்படி ஏறி இறங்கறதில்லை. ஆமா, எப்ப சார் கட்டு அவுப்பீங்க?”ன்னு கேட்டார் பேஷண்ட்.

அதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு? கால் பூரணமா குணமாக வேணாமா?” சிடுசிடுத்தார் டாக்டர்.

அதுக்கில்லே டாக்டர், எப்போலேர்ந்து நான் மாடிப்படி ஏறி, இறங்கலாம்னு தெரிஞ்சா...” ன்னு இழுத்தார் பேஷண்ட்.

தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க? கொஞ்சம் பேசாம இருங்க. இப்பத்தான் கால் எலும்பு மெதுவா கூடிட்டு வருது. கொஞ்சம் பொறுமையா இருக்க முடியாதா உங்களால?”ன்னு சீறினார் டாக்டர்.

அதுக்கில்லே டாக்டர், நீங்க மாடிப்படி ஏறி இறங்கக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டீங்க. அதனால, ஒவ்வொரு முறை இங்கே வரும்போதும், நான் இருக்கிற மூணாவது மாடியிலேர்ந்து டிரெயினேஜ் பைப்பைப் பிடிச்சு இறங்கி வரதுக்குள்ள எனக்குப் போதும் போதும்னு ஆயிடுது டாக்டர்னார் பேஷண்ட்.

, இப்படியிருக்கு நிலவரம்! அதனால, எல்லாரும் நல்லா சிரிங்க; வாய்விட்டுச் சிரிங்க; மனசு விட்டுச் சிரிங்க. ஆனா, தனியா மட்டும் சிரிச்சுடாதீங்க. சிரிக்கிறப்போ யாரையாச்சும் பக்கத்துல வெச்சுக்கறது நல்லது. தனிமையில அழலாம். தப்பில்லை. பாக்குறவங்களும் தப்பா நினைக்கமாட்டாங்க. ஆனா, தனிமையில சிரிச்சுக்கிட்டிருந்தா, அவனவனும் பக்கத்துல வர பயப்படுவான். ‘கொஞ்சம் அது போலருக்கு... கிட்ட போனா கடிச்சு கிடிச்சு வெச்சுடப் போறான்னு நம்மளைப் பத்தி தப்பா யோசிப்பான். அப்புறம் நம்ம பொழைப்பு சிரிப்பா சிரிச்சுடும்.

ஆகவே, கூட்டமா சிரிங்க. குதூகலமா சிரிங்க. இப்படியொரு கூட்டத்தை மாதா மாதம் நடத்திக்கிட்டு வர்ற சிரிப்பானந்தா உண்மையிலேயே இதன்மூலம் சத்தமில்லாம ஒரு பெரிய சமூக சேவை பண்ணிட்டு வர்றார்னுதான் சொல்வேன். அடுத்த முறையும் சிறப்பு விருந்தினரா இல்லேன்னாலும், சிரிப்பு விருந்தினரா வந்து இங்கே கலந்துக்க விரும்பறேன்.

நன்றி! வணக்கம்.


13 comments:

இது நான் ஏற்கனவே கேட்ட உரை தான் என்றாலும் தங்கள் எழுத்துக்களில் மீண்டும் படிக்க அருமையாக உள்ளது
 
தனியா படிச்சதுனாலே தனியாவே சிரிச்சுக்கிட்டேன்!!!அப்புறம் சுற்றும் முற்றும் பார்த்துக்கிட்டேன்! நல்ல வேளை யாருமில்லை!
 
அந்த கூட்டத்தில் நீங்கள் பேசியவைகளை நானும் ரெகார்ட் செய்து வைத்திருக்கிறேன். நீங்கள் பேசியதை சரியாகவே எழுத்தில் கொண்டு வந்துள்ளீர்கள்! பதிவாக நான் போடலாம் என்று யோசித்து வைத்திருந்தேன். சோம்பல் போட்டியில் என்னை நீங்கள் வென்று விட்டீர்கள்.
 
சிறப்பு விருந்தினரா இல்லேன்னாலும், சிரிப்பு விருந்தினரா வந்து இங்கே கலந்துக்க விரும்பறேன்.//
welcome!!!!
 
//12 வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி ஒரு தடவை இந்த ஹோட்டலுக்கு வந்தப்போ உனக்கு ஒரு குலோப்ஜாமூன் வாங்கிக் கொடுத்தேனே!// உங்கள் அத்தனை ஜோக்குகளும் அருமை. நான் நன்றாக ரசித்து சிரித்தேன். இந்தக் கூட்டத்துக்கு சிறப்பு பேச்சாளர் தகுதிக்கு நீங்கள் பொருத்தமான ஆள்தான்.
 
அற்புதம் சார்! இன்னும் எங்கள் உறுப்பினர்கள் உங்களது பேச்சு பற்றி தொலைபேசித்த வண்ணம் உள்ளனர்.
சிரிப்பானந்தா
 
அற்புதம் சார்! இன்னும் எங்கள் உறுப்பினர்கள் உங்களது பேச்சு பற்றி தொலைபேசித்த வண்ணம் உள்ளனர்.
சிரிப்பானந்தா
 
இதைப் படித்தவுடன் எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது.ரொம்ப நாளைக்கு முன்னால் நான் ஹ்யூமர் கிளப் பில் மெம்பராக இருந்தேன்..அப்போது, வருட சந்தா 50/- அதை திடீரென்று 100/- என்று மாற்றினார்கள்.மெம்பர்களை உற்சாகப் படுத்த, ஆளுக்கு ஒரு ஜோக் சொல்ல சொன்னார்கள், மைக்கை பிடித்துக் கொண்டு..என் முறை வந்தது.
நான் சொன்னது இது தான்:

“....இந்த ஹ்யூமர் க்ளப்ல சிரிக்கணும்னா, வருஷத்துக்கு நூறு ரூபாய் அழணும்!..”
 
siri(a)ppa irunthathu
 
எல்லாரும் நல்லா சிரிங்க; வாய்விட்டுச் சிரிங்க; மனசு விட்டுச் சிரிங்க. ஆனா, தனியா மட்டும் சிரிச்சுடாதீங்க. சிரிக்கிறப்போ யாரையாச்சும் பக்கத்துல வெச்சுக்கறது நல்லது.

சிரிப்பில் மலர்ந்த சிங்காரப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
 
அருமையாக வெகு சிறப்பாகவும் வெகு சிரிப்பாகவும் உள்ளது.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
 
Sema Flow...அடிக்கடி அப்டேட் செய்யுங்க...புண்ணியமா போகும்...:)
 
hii.. Nice Post

Thanks for sharing

Best Regarding.