உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, March 31, 2010

ராஜேஷ்குமாருடன் ஒரு நாள்..!

னந்த விகடன் பத்திரிகையில் வாசகர்களுக்கு வெளியிட்ட ஒரு போட்டி சம்பந்தமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோவை சென்று, கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரைச் சந்திக்க வேண்டியிருந்தது.

கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக, ‘சாவி’ காலத்திலிருந்தே எழுத்தாளர் ராஜேஷ்குமாருடன் எனக்குப் பழக்கம் உண்டு. இதில் வேடிக்கை என்னவென்றால், ராஜேஷ்குமாரை நான் நேரில் சந்தித்துப் பேசியது இது இரண்டாவது முறைதான். இன்னும் சரியாகச் சொல்லப்போனால், முதல் முறை என்றுகூடச் சொல்லலாம். காரணம், முதல் முறை அவரைச் சந்தித்தது பட்டுக்கோட்டை பிரபாகர் மகள் திருமண வைபவத்தில். வெறுமே ஒரு புன்னகை, ஒரு ஹலோவுக்கு மேல் அந்தக் கும்பலில் அவரோடு பேச முடியவில்லை.

ஞாயிறு காலையில் கோவை போய் இறங்கியதும், நண்பர் செந்தில்நாயகம் ஸ்டேஷனுக்கு வந்து, என்னை அன்புடன் வரவேற்றுத் தமது காரில் என்னை ராஜேஷ்குமார் வசிக்கும் வடவள்ளி பகுதிக்கு அழைத்துச் சென்றார். போகிற வழியில், ‘மருதமலை 6 கி.மீ.’ என்கிற அறிவிப்பு கண்ணில்பட, “அட! மருதமலை கோவைக்கு இத்தனை அருகிலா இருக்கிறது!” என்று என் வியப்பைத் தெரிவித்தேன். “ஆமாம் சார்! வரீங்களா, அங்கே போயிட்டு அப்புறம் ராஜேஷ்குமார் வீட்டுக்குப் போவோம்” என்றார். சம்மதித்தேன்.

கார் நேரே மருதமலைக்குச் சென்றது. எட்டு மணிக்குள்ளாகவே அங்கே நாற்பதுக்கும் மேற்பட்ட கார்கள் நின்றிருந்தன. நாளை திங்களன்று பங்குனி உத்திரம். அந்த விசேஷம்கூடக் காரணமாக இருக்கலாம் என்று நினைத்தேன். நேற்று சென்னை சென்ட்ரலில் கிளம்பியபோது, ஆண்களும் பெண்களும் சிறுவர் சிறுமிகளுமாகச் சுமார் ஐந்நூறு அறுநூறு பேர் செவ்வாடை தரித்து, தலையில் ஒரு கலசம் ஏந்தி, குஞ்சலங்கள் ஜோடித்த மாலையொன்றை இருபக்கமும் தொங்கவிட்டபடி ரயிலில் ஏறினார்கள். விசாரித்தபோது, அவர்கள் பங்குனி உத்திரத்தை முன்னிட்டுப் பழநி முருகனுக்குப் பால் குடம் ஏந்திச் செல்கிறவர்கள் என்றும், ஈரோட்டில் இறங்கிப் பழநிக்குச் செல்வார்கள் என்றும் தெரிந்தது.

மருதமலைப் படிகளில் ஏறுமிடத்தில் சாண்டோ எம்.எம்.சின்னப்பா தேவர் படம் பெரிதாக வைக்கப்பட்டிருந்தது. மருதமலையை எடுத்துக் கட்டிச் சிறப்பித்தவர் தேவர்தானே! பாலபிஷேகம் டிக்கெட் வாங்கினோம். மருதமலை முருகனைக் கண்ணாரக் கண்டு தரிசித்தோம். கோயிலைச் சுற்றி வருகையில், ‘பாம்பாட்டிச் சித்தர் குகை’ என்கிற போர்டைப் பார்த்துவிட்டுக் கடந்தோம். ‘பார்வதியும் சிவனாரும் மிதித்த மலை, இங்கு பாம்பாட்டிச் சித்தர் வந்து வசித்த மலை’ என்கிற ‘திருவருள்’ படப் பாடல் டி.எம்.எஸ். குரலில் மனசுக்குள் ஒலித்தது.

பின்பு, அங்கிருந்து கிளம்பி ராஜேஷ்குமார் வீட்டுக்கு வந்தோம். மலையோரம் ரம்மியமான சூழலில், அமைதியாக இருக்கிறது அவர் வீடு. கையோடு எடுத்துச் சென்றிருந்த, விகடன் பிரசுரம் வெளியிட்ட என்னுடைய ஐந்து புத்தகங்களையும் அவருக்குக் கொடுத்தேன்.

பின்னர், ‘இனி மின்மினி’ தொடர்கதை, விசாரணை சீரியல், சாவி சார், காஞ்சிப் பெரியவர், நித்யானந்தர் என ஒரு மணி நேரம் போல் உரையாடினோம். காஞ்சிப் பெரியவர் மீது ராஜேஷ்குமார் மிகுந்த மரியாதையும் பக்தியும் வைத்திருக்கிறார் என்பதை அவர் பேச்சிலிருந்து அறிய முடிந்தது. காஞ்சிப் பெரியவர் பற்றி அவர் சொன்ன தகவல் ஒன்று: பெரியவருக்கு, மடத்தில் இருந்த சிஷ்யர் ஒருவர் கீரையைச் சமையல் செய்து பரிமாறுவது வழக்கமாம். அப்படி ஒருநாள் அவர் கீரை பரிமாற, அதைச் சாப்பிட்ட பெரியவர் அந்தச் சீடரை அழைத்து, “இனிமே நீ எனக்காக கீரை சமைக்க வேணாம்” என்றாராம். சிஷ்யருக்கு ஒன்றும் புரியவில்லையாம். “ஏன் சுவாமி! கீரை நன்னாயில்லையா?” என்று குழப்பத்தோடு கேட்கவும், பெரியவர் புன்னகைத்தபடியே, “ரொம்ப நன்னாருக்கு. அதனாலதான் வேணாங்கறேன். என் நாக்கு இந்தச் சுவைக்கு அடிமையாகிடக்கூடாது பாரு!” என்றாராம்.

உரையாடலின் முடிவில், முதல் நாளே ராஜேஷ்குமார் அன்புக் கட்டளை இட்டிருந்தபடி, காலை டிபனை அவரோடு அமர்ந்து உண்டோம், நானும் நண்பர் செந்தில்நாயகமும்! மைசூர்பாகு, புட்டு, இட்லி, பொங்கல், வடை என ஏக தடபுடல் செய்துவிட்டார் ராஜேஷ்குமாரின் துணைவியார்.

பின்பு, விடைபெற்று நட்சத்திர ஓட்டல் அலங்காருக்கு வந்தோம். ராஜேஷ்குமார் தன் தந்தையார், துணைவியார் மற்றும் மைத்துனரோடு அவரது காரில் வந்தார். விகடனில் அறிவித்திருந்தபடி, போட்டியில் வெற்றி பெற்ற வாசகர்கள் ராஜேஷ்குமாரோடு கலந்துரையாடினார்கள். உற்சாகமும் மகிழ்ச்சியும் கலகலப்பும் கொண்டாட்டமுமான ஒரு சந்தோஷ சந்திப்பாக அமைந்தது அது.

அது முடிந்து, மதியம் பஃபே விருந்து! வாசகர்கள் ராஜேஷ்குமாரோடு சேர்ந்து நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். தவிர, அங்கே வந்திருந்த ஐ.டி. மாணவர் பட்டாளம் ஒன்று, ராஜேஷ்குமார் வந்திருப்பதை அறிந்து, ஓடி வந்து மொய்த்துக் கொண்டது; செல்போனில் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டது; ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டது. அந்த ஓட்டலின் மேனேஜரும் ராஜேஷ்குமாரின் விசிறியாம். அவரும் வந்து ராஜேஷ்குமாரோடு சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

வாசகர் சந்திப்புக்கு ஓட்டலிலேயே ஏ.சி. அறை, பின்னர் பஃபே விருந்து மற்றும் டின்னரில் அத்தனை பேரும் ஒன்றாக அமர்ந்து உண்ண இடம் ரிசர்வ் செய்வது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் கச்சிதமாக ஏற்பாடு செய்திருந்தார் நண்பர் செந்தில்நாயகம். வந்திருந்த வாசகர்களை வரவேற்றுத் தக்க முறையில் கவனித்து அனுப்பினார் நண்பர் லோகநாதன். புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினார் ராஜேஷ். ராஜேஷ்குமார்-வாசகர்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடந்தேறியதற்கு இவர்கள் மூவரின் பங்களிப்பும்தான் காரணம்.

எனக்கு மதியம் 3:20-க்கு டிரெயின். இரண்டரை மணி சுமாருக்கு, நண்பர் செந்தில்நாயகம் என்னைத் தமது காரில் கொண்டு வந்து கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் விட்டுவிட்டுப் போனார். ஸ்டேஷனிலேயே கொஞ்ச நேரம் அங்கும் இங்கும் உலாத்தினேன். பின்னர், ரிசப்ஷனில் என் டிக்கெட்டைக் காண்பித்து எத்தனாவது பிளாட்பாரம் என்று விசாரித்தபோது, “இந்த டிரெயின் இங்கே வராது. போத்தனூர் ஸ்டேஷனுக்கு உடனே போங்க!” என்று விரட்டினார். இங்கே இருப்புப்பாதை பணிகள் நடந்துகொண்டு இருப்பதால், சேரன், வைகை தவிர மற்ற ரயில்கள் இங்கே வராதாம், இன்னுமொரு பத்து நாளைக்கு.

உடனே வெளியேறி, ஒரு கால்டாக்ஸி பிடித்து, சுமார் 6 கி.மி. தொலைவில் உள்ள போத்தனூர் சென்றேன். எந்தப் பயணமானாலும் மிக முன்னதாகவே ஸ்டேஷனுக்கு வந்துவிடும் என் பழக்கம், இப்போது டிரெயினைத் தவறவிடாமல் இருக்க உதவியது.

‘ரப்திசாகர் எக்ஸ்பிரஸ்’ என்பது டிக்கெட்டில் காணப்படும் பெயர். கால்டாக்ஸி ஓட்டுநரிடம் இது பற்றிச் சொன்னபோது, “சார், அது ரப்திசாகர் இல்லை சார்! சகாப்திசாகர்” என்றார். போத்தனூர் ஸ்டேஷனில் சென்று விசாரித்தால், அவர்களுக்கு ரப்திசாகரும் தெரியவில்லை; சகாப்திசாகரும் தெரியவில்லை. “3:20 டிரெயின்தானே! அது கோரக்பூர் எக்ஸ்பிரஸ். இப்ப வண்டி வரும்” என்றார்கள்.

கன்ஃபார்ம் ஆகாத என் டிக்கெட்டின் பி.என்.ஆர். நம்பரைத் தட்டி அங்குள்ள கம்ப்யூட்டரில் தேடியபோது, என் கோச் எண்ணும், சீட் எண்ணும் தெரிந்தது.

சில விநாடிகளில் வண்டி வரவும், ஏறி என் இடத்தில் அமர்ந்துகொண்டேன். சில நிமிடங்களிலேயே புறப்பட்டுவிட்டது.

கோவை போகையில் வழித்துணையாக வந்த மகாஸ்ரீ அன்னைக்கும், பத்திரமாகச் சென்னைக்கு வழியனுப்பிய மருதமலையானுக்கும் மனசுக்குள் நன்றி சொல்லிக்கொண்டேன்.

.

Thursday, March 18, 2010

பொய் ஆராய்ச்சி!

‘பொய்யாமை’ என்னும் தலைப்பில் வள்ளுவர் பத்து குறட்பாக்களை இயற்றியுள்ளார்; அந்தக் குறள்களை ஊன்றிப் படித்தால், பொய் சொல்வதில் மொத்தம் ஒன்பது ரகம் உண்டு என்பது புரியும்.

கொஞ்சம் இருங்கள்... பொய் ஆராய்ச்சி என்று தலைப்பிட்டுவிட்டு எழுதத் தொடங்கும் ஆரம்ப வரியே இத்தனைப் பெரிய பொய்யாக இருந்தால், உங்களால் ஜீரணிக்க முடியாது. வாய்மை என்னும் தலைப்பில் மட்டும்தான் வள்ளுவர் குறட்பாக்கள் எழுதியுள்ளார். பொய்யாமை என்றொரு அதிகாரமே கிடையாது!

அது இருக்கட்டும்... பொய்யில் மொத்தம் ஒன்பது ரகப் பொய்கள் உண்டென்பது என் ஆராய்ச்சியில் நான் கண்ட உண்மை.

ஏற்கெனவே எனது மற்றொரு வலைப்பூவான ‘என் டயரி’யில் ‘பொய்யிலே பிறந்து...’ என்றொரு பதிவு எழுதினேன். அதற்குத் தமிழிஷ்-ஷில் 28 பேர் ஓட்டளித்திருந்தார்கள்; 43 பேர் அதைச் சிலாகித்துப் பின்னூட்டம் போட்டிருந்தார்கள்! (மகா பொய்!)

அந்தப் பதிவில், பொய் சொல்வதற்கு எத்தனைச் சாமர்த்தியம் வேண்டும், நாம் நடைமுறை வாழ்க்கையில் என்னென்ன பொய்களைச் சொல்கிறோம் என்று எழுதியிருந்தேன்.

சின்ன வயதில் (ஏன்... இப்பவும்தான்!) நான் நிறையப் பொய் சொல்லுவேன். அதையெல்லாம் என் அப்பா எப்படியோ கண்டுபிடித்து, என்னைச் சக்கையாகப் பிரம்பால் விளாசிவிடுவார். அதற்காக நான் பொய் சொல்வதை விடவில்லை. அப்பாவிடம் மாட்டிக்கொள்ளாமல் சாமர்த்தியமாகப் பொய் சொல்வது எப்படி என்று யோசித்து யோசித்துப் பொய் சொல்லி, அதில் பிஹெச்.டி வாங்குகிற அளவுக்குத் தேறிவிட்டேன்.

இதனால் நான் அறிந்துகொண்ட ஓர் உண்மை என்னவென்றால், அடியோ உதையோ, வசவோ பிள்ளைகளைத் திருத்தாது; அவர்களையே எது சரி, எது தப்பு என்று யோசிக்க விடுவதுதான் அவர்கள் உண்மையாக இருக்க, உண்மையே பேசச் செய்வதற்கான ஒரே வழி என்பதுதான்!

சரி, அது இருக்கட்டும்! பொய் சொல்வதில் ஒன்பது ரகங்கள் உண்டு என்று சொன்னேன் அல்லவா? அவை என்னென்ன என்று பார்ப்போமா?

1. சாதுவான பொய்:

“என்னுடைய சமீபத்திய வலைப்பதிவை நீங்கள் படித்தீர்களா சார்?” என்று சகபதிவர் யாரேனும் ஆவலோடு கேட்டால், “மன்னிக்கணும் சார்! படிக்கணும்னுதான் நினைச்சிருந்தேன். அடுத்தடுத்து வேலை வந்ததுல ஆபீஸ்ல முடியலை. சரி, வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையா படிச்சுடுவோம்னுதான் தீர்மானிச்சேன். ஆனா பாருங்க, என்னவோ பிராப்ளம்... நெட் கனெக்ட் ஆகவே இல்லே! போன் பண்ணிச் சொல்லியிருக்கேன். அநேகமா இன்னிக்கு நாளைக்குச் சரியாயிடும். முதல் வேலை உங்க பதிவைப் படிக்கிறதுதான். ஆமா, என்ன எழுதியிருக்கீங்க?” என்று சீரியஸாகக் கேட்பது சாதுவான பொய்க்கு உதாரணம். அவர் சொன்னாலும், அதை நாம் படிக்கப்போவது இல்லை என்பது வேறு விஷயம். இருந்தாலும், அவர் மனசு நோகக்கூடாது என்பதற்காகச் சொல்கிற பொய்யானதால், இது சாத்விகமான பொய்யில் சேர்த்தி.

இதே மாதிரிதான், சிலரின் பதிவுகளை முழுதாகப் படிக்காமலே அதிலிருந்து சில வரிகளை கட் அண்ட் பேஸ்ட் போட்டுவிட்டு, வெரி நைஸ் என்றோ, அல்லது ஸ்மைலி சிம்பலோ போட்டுப் பின்னூட்டம் இடுவதும் சாதுவான பொய்யில் அடங்கும்.

2. பரபரப்புப் பொய்:

பிறர் கவனத்தை ஈர்ப்பதற்காகச் சொல்லப்படும் பொய் இது. “நேத்து ராத்திரி நான் சினிமா பார்த்துட்டு பைக்ல வந்துட்டிருக்கேன்... கோடம்பாக்கம் பிரிட்ஜ் கிட்ட வரும்போது இங்கிட்டு நாலு பேர், அங்கிட்டு நாலு பேர் சுத்தி வளைச்சு மடக்கிட்டான்ல. எனக்கு ஈரக் கொலையை அறுந்துபோச்சு! ஏதோ ஒர்த்தன் ரெண்டு பேர்னா சமாளிக்கலாம். எண்ணி எட்டு பேர்... எஸ்கேப் ஆவுறதுதான் புத்திசாலித்தனம்னுட்டு சட்டுனு கியரை மாத்தி ரெய்ஸ் பண்ணி, வண்டியை 120-ல விரட்டினேன் பாருங்க...” - இப்படி நம் கற்பனைக்கேற்றவாறு சுவாரசியமாக பில்டப் செய்துகொண்டு போகலாம். இதுவும் யாருக்கும் எந்த உபத்திரவமும் இல்லாத பொய்!

3. தற்காப்புப் பொய்:

ஆபீசுக்கு லேட்டாக வந்து மேனேஜரிடம் டோஸ் வாங்கினால், வீட்டில் வயதான தாத்தா, பாட்டியைப் பரலோகம் அனுப்பிவைத்துவிட்டு வருவதாக புருடா விட்டுத் தப்பிக்கிறோமல்லவா, அந்த வகைப் பொய் இது! “ஆபீஸ் விட்டு நேரா வீட்டுக்கு வராம எங்கே இவ்வளவு நேரம் சுத்திட்டு வரீங்க?” என்று அதட்டும் மனைவியைச் சமாளிக்கக் கணவன்மார்கள் சொல்லும் பொய்களும் இந்த ரகத்தைச் சேர்ந்தவை.

4. பந்தா பொய்:

கையில் பைசா இல்லை என்று சொல்லிக்கொள்ள வெட்கப்பட்டு, அவமானப்பட்டு, “சேஞ்சா இல்ல... தௌசனாதான் இருக்கு. ஒரு ஃபிஃப்டி ருப்பீஸ் இருந்தா கொடுங்க. நாளைக்குத் தரேன்” என்று கேட்பது பந்தா பொய்! “டி.வி-யே சுத்த வேஸ்ட் சார்! நம்ம டயத்தைக் கெடுக்கும். சும்மாவா சொன்னாங்க அதை ‘இடியட் பாக்ஸ்’னு...” என்று என்னென்னவோ சொல்லி, சில ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் டி.வி. வாங்க இயலாதவர்கள் பந்தாவாகப் பொய் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இப்ப கலைஞர் புண்ணியத்தில் பலருக்கு கலர் டி.வி. கிடைத்துவிட்டது. அது சரி, பந்தா பொய்க்கு வேறு காரணமா இல்லை?

5. ஏமாற்றுப் பொய்:

பிறரை ஏமாற்றி, அதில் நாம் நன்மை பெறுவதற்காகச் சொல்லப்படும் பொய் இது. உதாரணமாக, “சார்! அவசரமா எனக்கு இப்ப பணம் தேவைப்படுது. அதுக்காகத்தான் இந்த பைக்கை விக்கிறேன். நல்ல கண்டிஷன்ல இருக்கு. கண்ணை மூடிக்கிட்டு இருபதாயிரம் கொடுக்க ரெடியா இருக்காங்க. ஆனா, மூணு தவணைல தரேங்கிறாங்க. எனக்கு இப்ப அவசரமா பணம் வேணும். நீங்க பதினெட்டு கொடுங்க, போதும்!” என்று பேரம் பேசி, பத்தாயிரம்கூடப் பெறாத வண்டியைப் பதினைந்தாயிரத்துக்கு அவர் தலையில் கட்டுவது இந்த ரகத்தில் சேரும்.

6. அபாண்டப் பொய்:

நமக்குப் பிடிக்காதவர்கள்மீது அபாண்டமான பழிகளையும் வதந்திகளையும் பிறரிடம் பரப்புவது அபாண்டப் பொய்க் கணக்கில் சேரும். சினிமா நட்சத்திரங்களைப் பற்றிய கிசுகிசுக்கள் பெரும்பாலும் இந்த ரகம்தான்!

7
. மௌனப் பொய்:

நாமாக எந்தப் பொய்யையும் நம் வாயால் சொல்லவில்லை என்றாலும், நமக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லாமல் மழுங்குணியாக இருப்பதும் பொய்யில் சேர்த்திதான். அதுவே மௌனப் பொய்!

8. காதல் பொய்:

காதலியிடம் அவள் அழகையோ, புத்திசாலித்தனத்தையோ பாராட்டிக் காதலன் சொல்வதெல்லாமே அநேகமாக காதல் பொய்யில் அடங்கும்! காதலிகள் மறந்தும் இத்தகைய பொய்களைச் சொல்வதில்லை.

9. கவிதைப் பொய்:

கவிஞர்கள் கவிதையில் அழகுக்காகச் சொல்கிற உவமானங்கள் மட்டுமல்ல; நாம் கூட அவ்வப்போது கவிஞர்களாகி இத்தகைய கவிதைப் பொய்களை அவிழ்த்துவிடுவதுண்டு. “போன வாரம் ஊட்டி போயிட்டு வந்தேன். ஹப்பா! என்னமா ஒரு சில் வெதர் தெரியுமா, மொத்த நகரமுமே ஏ.சி. பண்ணினாப்ல... அத்தனை இதமா இருந்தது உடம்புக்கு! இங்கே வந்ததும் அப்படியே ஆளைத் தூக்கி அடுப்புல வெச்சாப்ல எரியுது உடம்பு!” இந்த மாதிரி வர்ணனைகள் எல்லாம் கவிதைப் பொய்யில் அடங்கும்.

இப்போதைக்கு இவ்வளவுதான்! இன்னும்கூட யோசித்தால் திகில் பொய், சும்மனாங்காட்டி பொய், விபரீதப் பொய், அசட்டுப் பொய், தமாஷ் பொய் எனப் பல ரகங்கள் கிடைக்கலாம்.

மொத்தத்துல, விதம் விதமா பொய் சொல்லுங்க; சுவாரசியமா சொல்லுங்க; அடுத்தவருக்கு ஆபத்தில்லாம சொல்லுங்க. என்ஜாய்!
.

Thursday, March 11, 2010

‘நானும் ஒரு பால குமாரன்தான்!’

ழுத்தாளர் பாலகுமாரனை சமீபத்தில் அவரது வீட்டில் சந்தித்தேன். சக்தி விகடனில் அவரை எழுத வைக்க எண்ணம்.

நேரில் சந்திப்பதற்கு முன்பாக அவரோடு தொலைபேசியில் உரையாடி, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஏற்கெனவே ‘சாவி’யில் பணியாற்றிய காலத்தில் அவரது அறிமுகம் எனக்கு உண்டு என்பதையும் தெரிவித்து, சக்தி விகடனில் தொடர் எழுதுவது பற்றிக் கேட்டேன். “நேரில் வாருங்கள், பேசுவோம்” என்றார்.

நேரில் சென்றபோது, “அடடே! வாங்க ரவிபிரகாஷ்! இப்போ தெரியுது. போனில் சொல்லும்போது எனக்குச் சட்டுனு உங்களை ஞாபகத்துக்கு வரலை” என்றார்.

பாலகுமாரன் என்னை நினைவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவரோடு எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு என்று சொல்ல முடியாது. தவிர, அவரோடு தொடர்பு விட்டுப்போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. நான் விகடனில் சேர்ந்த பிறகு, ‘அப்பம் வடை தயிர்சாதம்’ என்றொரு தொடர்கதை எழுதினார். அப்போது அவருடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியிருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் மகள் திருமணம் விஜயா மஹாலில் (பெயர் சரியா என்று தெரியவில்லை. பழைய நாகேஷ் தியேட்டர் என்றுதான் என் மனதில் பதிந்திருக்கிறது.) நடந்தபோது, பாலகுமாரனும் வந்திருந்தார். அருகில் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். என்றாலும், அது அவர் நினைவில் இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

‘சாவி’ காலத்தில், பாலகுமாரன் பலமுறை சாவி இல்லத்துக்கு வந்திருக்கிறார். நட்புரிமையோடு எங்களுடன் பேசுவார்; பழகுவார். அப்போது அவர் அடிக்கடி சஃபாரி டிரெஸ் அணிந்துதான் நான் பார்த்திருக்கிறேன். நாற்பது வயதுக்குரிய இளமையோடும் சுறுசுறுப்போடும் இருப்பார். மாலன், சுப்ரமண்யராஜு, பாலகுமாரன் இவர்களெல்லாம் பணியாற்றிய காலம் சாவியின் பொற்காலம்.

சாவி பத்திரிகையில் பாலகுமாரன் எழுதிய ‘மெர்க்குரிப் பூக்கள்’, இன்றளவும் பேசப்படும் அற்புதமான ஒரு தொடர்கதை. எழுத்தாளர் சுஜாதாவிடம் வாசகர்களுக்கு உள்ள அபரிமிதமான ஈர்ப்பைப் போன்று ஒரு வசீகர ஈர்ப்பை பாலகுமாரனுக்கும் கொண்டு சேர்த்த கதை அது. அதைப் படித்துவிட்டு லட்சக்கணக்கான வாசகர்கள் பாலகுமாரனின் அபிமானிகள் ஆனார்கள்.

கடலூரில் நடந்த என் உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொள்ள நான் சென்றிருந்தபோது, நானும் பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதிக்கொண்டு இருப்பவன் என்று அறிந்து, என்னிடம் வந்து அரட்டை அடித்த டீன் ஏஜ் பெண்கள் பலரும் கேட்ட ஒரு கேள்வி... இன்றைக்கும் நன்றாக ஞாபகம் இருக்கிறது - ‘நீங்கள் பாலகுமாரனைச் சந்தித்துப் பேசியிருக்கிறீர்களா?’ “பேசியிருக்கிறேன்; அவரோடு கைகுலுக்கியும் இருக்கிறேன்” என்று ஒருவேளை அப்போது நான் சொல்லியிருந்தால், என் வலது கையை எடுத்து அவர்கள் முத்தமிட்டிருப்பார்கள் என்பது நிச்சயம். அவர்களின் கண்களில் அப்படி ஒரு ஆர்வ மின்னல் தெறித்ததை நான் பார்த்தேன்.

ஆனால், நான் அப்போது சென்னைப் பக்கமே வந்திருக்கவில்லை. ஆகவே, “ஏன் கேட்கிறீர்கள்?” என்று கேட்டு வைத்தேன். “நாங்கள் அத்தனை பேருமே பாலகுமாரன் ரசிகைகள். ஹைய்ய்யோ! என்னமா எழுதறாரு!” என்று சிலாகித்தார்கள். “நானும் ஒரு பால குமாரன்தான்” என்றேன். அப்போது என் வயது 22, 23-தான் இருக்கும். என் நகைச்சுவை(?!) அவர்கள் காதில் ஏறவேயில்லை. பாலகுமாரன் எழுத்து பற்றி ரொம்ப நேரம் மாய்ந்து மாய்ந்து பேசிக்கொண்டே இருந்தார்கள்.

பின்னர் பல ஆண்டுகள் கழித்து ‘சாவி’ பத்திரிகையில் பணியில் சேர்ந்த பிறகுதான் எனக்கு பாலகுமாரனின் அறிமுகம் கிடைத்தது. சாவி இதழ் பொறுப்பு முழுக்க என் கைக்கு வந்த பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பாலகுமாரனை நான் ஒரு தொடர்கதை எழுதும்படி கேட்டுக்கொண்டேன். ‘பந்தயப் புறா’ என்னும் தலைப்பில் எழுதினார். வாராவாரம் டாணென்று திங்கள் கிழமையன்று அந்த வாரத்துக்கான அத்தியாயம் வந்துவிடும்.

அந்நாளைய இளமை பாலகுமாரனுக்குப் பிறகு அவரை நான் ஆனந்த விகடனில் பார்த்தது முற்றிலும் மாறுபட்ட ஒரு தோற்றத்தில். கவிஞர் வாலி போன்று நீண்ட வெண் தாடியும், நீள் தலைமுடியுமாக, ஒரு சாமியார் தோற்றத்தில் பாலகுமாரனைக் கண்டபோது, காதல் ரசம் சொட்டச் சொட்ட, கணவன் மனைவியின் அந்தரங்க அன்பைப் பிழியப் பிழிய எழுதிய அந்த மெஸ்மரிஸ எழுத்தாளரா இவர் என்று ஆச்சரியப்பட்டுப் போனேன். ‘அப்பம் வடை தயிர்சாதம்’ எழுதும் பாலகுமாரனாகப் பக்குவப்பட்டிருந்தார்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். பாலகுமாரனின் அழைப்பின்பேரில் சென்று, அவர் வீட்டினுள் நுழைந்தபோது, தவறிப்போய் ஏதாவது கோயிலுக்குள் நுழைந்துவிட்டோமோ என்று ஒரு கணம் திகைப்பு உண்டாயிற்று. ஹாலே ஒரு மினி கோயிலாக மாறியிருந்தது. சுவரில் பிரமாண்ட ராம்சுரத்குமார் படம்; பின்னணியில் திருவண்ணாமலை; பக்க அலமாரிகளில் சுவாமி படங்கள், விக்கிரகங்கள்; மேலே மாவிலை போன்று வண்ணமயமான தோரணம்; தேருக்கு நான்கு புறங்களிலும் தொங்கவிடுவது போன்ற வண்ண வண்ணத் தொம்பைகள்; சற்று முன்னால் ஒரு பீடத்தில், பித்தளையால் ஆன அம்பாள் விக்கிரகம் ஒன்று; எதிரே ஓர் அலங்காரத் தொட்டியில் தண்ணீர்; அதில் மிதக்கும் புஷ்பங்கள்; கமகமக்கும் சாம்பிராணி வாசனை, விபூதியும் குங்குமமும் கலந்த வாசனை என அந்தக் கூடமே தெய்வீகம் ததும்பி வழிந்தது.

ஆளை விழுங்கும் சோபாக்கள் ஒன்றில் அமர்ந்து, புதைந்தேன். எதிரே பாலகுமாரன். ஒரு யோகி போன்று கண்களை மூடி, ஒவ்வொரு வார்த்தைக்கும் போதிய இடைவெளி கொடுத்து, நிறுத்தி நிதானமாக, சில சமயம் கொஞ்சம் கூடுதலாகவே கால இடைவெளி தந்து பேசிய பாணி, யாரோ ஒரு முனிவரிடம் பேசிக்கொண்டு இருப்பதான உணர்வையே எனக்குத் தந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் பழகிய அந்த பாலகுமாரன் யாரோ!

சக்தி விகடனில், ரமண மகரிஷியின் சரித்திரத்தை ஆதியோடந்தமாக எழுதுவதாகச் சொன்னார் பாலகுமாரன். ரமணர் பற்றி நூற்றுக்கணக்கில் புத்தகங்களைக் கரைத்துக் குடித்து, ஒரு பெரிய ஆராய்ச்சியே சமீப காலங்களில் செய்து வந்திருக்கிறார் அவர். சக்தி விகடனுக்காக நான் சென்று கேட்டதும், மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார்.

நான் சென்றிருந்த நேரத்தில், அங்கே ஒரு திரையுலகப் பிரபலமும் தன் குடும்பத்தோடு வந்திருந்தார். வந்தவர் சோபாவில் அமராமல், நேரே சென்று அந்த அம்பாள் சிலையின் முன் தரையில் சப்பணமிட்டு அமர்ந்து, தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். அவரின் மனைவி பாலகுமாரனின் மனைவியோடு பேசிக்கொண்டு இருக்க, அவரின் பதின் வயதுகளில் இருந்த பையனும் பெண்ணும் சோபாவில் அமர்ந்தார்கள்.

நான் பாலகுமாரனிடம் விடைபெற்றுக் கிளம்பவிருந்த சமயத்தில் அந்தத் திரையுலகப் பிரபலம் தியானம் கலைந்து எழுந்தார். எழுந்தவர் நேரே பாலகுமாரனிடம் வந்தார். பாலகுமாரன் சோபாவில் அமர்ந்திருக்க, அவரின் கால்களில் அந்தத் திரையுலகப் புள்ளி சாஷ்டாங்மாக விழுந்து நமஸ்கரித்தார். உடனே எழுந்திருக்கவில்லை. அப்படியே கிடந்தார். “ம்... போறும்! போறும்! ம்... எழுந்திரு, போறும்!” என்று பாலகுமாரன் பலமுறை சொன்ன பிறகுதான் மெதுவாக எழுந்தார்.

அவரிடம் பாலகுமாரன் என்னை அறிமுகம் செய்வித்து, “சக்திவிகடனுக்காகத் தொடர் கட்டுரை கேட்டு வந்திருக்கார்” என்றதும், அந்தத் திரையுலகப் பிரபலம் எனக்கு வணக்கம் சொன்னார். பதிலுக்குக் கைகூப்பி அவரை வணங்கி, விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன்.

அந்தத் திரையுலகப் பிரபலம்... சொன்னால் நம்பமாட்டீர்கள் - அவர், ராஜ்கிரண்!
.