உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, February 02, 2010

ஞாநியின் குறும்படமும் புத்தக வெளியீடும்!

‘என் வாழ்க்கை என் கையில்’ என்கிற நூல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பு ஞாநியிடமிருந்து SMS-ல் வந்தது. கடந்த இரண்டு முறையாக கேணிக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை; தவிர, ஞாநி உடல் நிலை பாதிக்கப்பட்டுத் தேறி வந்த பின்பு சென்று பார்க்கவில்லை என்கிற காரணத்தால், கண்டிப்பாக இந்த நூல் வெளியீட்டு விழாவுக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு, நேற்றைய ஞாயிற்றுக் கிழமை கே.கே.நகரில் உள்ள ஞாநியின் இல்லத்துக்குச் சென்றேன். அங்கேயேதான் புத்தக வெளியீட்டு விழா!

ஞாநி உடலளவில் மெலிந்திருந்தார். குரலில் மட்டும் அதே பழைய கம்பீரம்!

சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தவர்களை அறிமுகம் செய்து பேசினார் ஞாநி. ஒருவர் ஸ்ரீராம் - அடலசன்ட் பருவத்தில் உள்ள ஒரு பெண்ணை மையமாக வைத்துக் குறும்படம் இயக்கித் தரும் வாய்ப்பை வழங்கியவர். மேற்படி குறும்படம் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பானதாம். புத்தக வெளியீட்டு விழாக் கூட்டத்தின் இறுதியிலும் அந்தப் படம் திரையிடப்பட்டது.

இன்னொருவர் (பதிவிட இரண்டு நாள் ஆனதால் பெயர் மறந்துவிட்டது) ராஜீவ் காந்தி யூத் ஃபவுண்டேஷனில் ஓர் உயர் அதிகாரி. வாழ்க்கைத் திறன் எனப்படும் 'LIFE SKILLS' தொடர்பான புத்தகங்களை வெளியிட்டு வருகிறது அந்த அமைப்பு. மற்றவர் ஒரு பெண்மணி. ‘லைஃப் ஸ்கில்ஸ்’களைப் பயிற்றுவிப்பவர்.

மற்ற இருவரை எனக்குத் தெரியும். ஒருவர் வசந்தி தேவி. 71 வயது. கல்லூரி முதல்வராகப் பணியாற்றி, பின்பு துணை வேந்தர் நிலைக்கு உயர்ந்த கல்வியாளர். இவரது பேட்டிகளையும் கட்டுரைகளையும் விகடனில் வெளியிட்டுள்ளோம். இன்னொருவரை எல்லோருக்குமே தெரியும். நடிகர் நாசர்.

ஞாநி அறிமுக உரை நிகழ்த்தி முடிந்ததும், (தமிழ், தமிழ் என்று குரல் கொடுக்கிற ஞாநி ‘ஸஹ்ருதயர்கள்’ என்கிற சமஸ்கிருத வார்த்தையை இரண்டு மூன்று தடவை தன் பேச்சில் வலிந்து குறிப்பிட்டார். ஒருமித்த இதயமுள்ளவர்கள் என்று அழகான தமிழில் சொல்லியிருக்கலாம். எதற்காக இந்த சமஸ்கிருதத் திணிப்பு என்று தெரியவில்லை.) அவரின் நீண்ட நாளைய சிநேகிதி பத்மாவதி ‘லைஃப் ஸ்கில்ஸ்’ என்றால் என்ன என்பது பற்றி ஒரு முன்னுரை கொடுத்தார்.

வாழ்க்கைத் திறன்கள். அதாவது, நான் யார் என்று அறிந்து கொள்வது முதல் படி. நான் யார், என் பலம் என்ன, பலவீனம் என்ன என்றெல்லாம் அலசி ஆராய்ந்து உணர்வது. அடுத்ததாக மற்றவர்களைப் பற்றிப் புரிந்துகொள்வது. பின்பு அவர்களுக்கும் நமக்கும் இடையிலான தொடர்பு... என ஒவ்வொரு படியாகக் கடந்து, நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வது எப்படி என்பதைக் கற்றுத் தரும் ஒரு வொர்க்‌ஷாப் இது. அலுவலகத்தில் வேலை பார்க்கும் கிளார்க்கோ, திரைப்படத் துறையில் இயங்கும் தொழிலாளியோ, மேனேஜரோ, படிக்கிற பள்ளி மாணவரோ, பாலியல் தொழில் புரியும் பெண்களோ... யாருக்குமே அவரவர் துறை சார்ந்து இந்த வாழ்க்கைத் திறன்களை எப்படி அமல்படுத்திக் கொள்வது என்பதைப் பயிற்றுவிக்கும் ஒரு பயிற்றுநராக இயங்கிக்கொண்டு இருப்பவர் பத்மாவதி.

இந்த லைஃப் ஸ்கில்ஸ் என்கிற வார்த்தையே, ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு வழிகாட்டுதல் திட்டமாக உருவானதுதான் என்றார் பத்மாவதி. பின்னர் படிப்படியாக அதை மற்றவர்களுக்கும் விரிவுபடுத்தமுடியும் என்று ஆராய்ந்து செயல்படுத்தி வருவதாகச் சொன்னார்.

சிறப்பு விருந்தினர்களில் நாசரின் பேச்சுதான் இயல்பாகவும் எளிமையாகவும் இருந்தது. தன் வாழ்க்கையிலிருந்தே ஒரு சின்ன சம்பவம் சொல்லி விளக்கினார்.

பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்த பின்பு நேரே சினிமாவுக்கு வராமல் சில காலம் அவர் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் மேஜை துடைக்கும் பணியாளாக, வெயிட்டராகப் பணியாற்றியதைச் சொன்னார். பின்பு ரூம் சர்வீஸ் செய்வதற்கு ஒன்பது மாதம் பயிற்சி கொடுத்தார்களாம். உணவுத் தட்டில் முள் கரண்டி எந்தப் பக்கம் இருக்கவேண்டும், ஸ்பூன்களை எப்படி வைக்க வேண்டும், நாப்கினை எப்படி மடித்து வைக்க வேண்டும் என்பதிலிருந்து எதை எதை எப்படி சர்வ் செய்ய வேண்டும் என்பது வரை சொல்லிக் கொடுப்பார்களாம். அந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, அறை ஒன்றில் தங்கியிருந்த ஒரு வெள்ளைக்காரருக்கு தான் முதன்முறையாக ஒரு கப் காபி சர்வ் செய்தது பற்றிச் சொன்னார். அறைக்குள் நுழைந்து பவ்வியமாக அவருக்கு காபி சர்வ் செய்துவிட்டுச் சரியாகச் செய்துவிட்டோம் என்கிற பெருமிதத்தோடு வெளியேறிய சிறிது நேரத்தில் அவரை மேனேஜர் சுனில் அழைத்தாராம்.

“என்ன பண்ணினே இன்னிக்கு?” என்று சுனில் கேட்க, அறை எண் --ல் உள்ள வெள்ளைக்காரருக்கு காபி சர்வ் பண்ணியதைச் சொன்னார் நாசர்.

“எப்படி சர்வ் பண்ணே?” என்று சுனில் திரும்பக் கேட்க, நாசர் இடுப்பை வளைத்து பவ்வியமாக வழங்கியதாகச் சொல்ல, “நீ என்ன அவனுக்கு அடிமையா? எதுக்கு இடுப்பை வளைத்துக் குனியறே? கம்பீரமாக நிமிர்ந்து பெருமிதத்தோடு மிடுக்காக அல்லவா காபியை சர்வ் செய்திருக்க வேண்டும்?” என்று கேட்டாராம் சுனில்.

“எந்த ஒரு வேலையுமே கேவலமானது இல்லை; எதிராளிக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்பதற்காக நம்மை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பது இல்லை போன்ற பல லைஃப் ஸ்கில் பாடங்களை அவரிடம் நான் அப்போது கற்றேன்” என்று நாசர் சொன்ன விதம் ரசிக்கத்தக்கதாக இருந்தது.

கடைசியாக, ஒரு வளர் இளம் பெண்ணின் பிரச்னை ஒன்றையும் லைஃப் ஸ்கில்ஸையும் இணைத்து ஞாநி இயக்கி, விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான குறும்படத்தைத் திரையிட்டார்கள்.

ப்ளஸ் டூ படிக்கிற பெண். எப்போதுமே மூன்றாம் ரேங்க். வாலிபால் சேம்பியன். அவளுக்குத் தன் வீட்டில் வார இதழ்கள் கொண்டு போடும் பையன் மீது ஒரு ஈர்ப்பு. படிப்பில் கவனம் சிதறுகிறது. 13-வது ரேங்க். எதற்கு வாழ வேண்டும் என்று பாத்ரூமில் தற்கொலை செய்து கொள்ளப் போகும்போது, வாசலில் புத்தகம் போடும் பையனுக்குப் பணம் தர வேண்டும் என்று அம்மாவின் குரல் கேட்கிறது. வெளியே வருகிறாள். அந்தப் பையன் இல்லை. அவனது தம்பி. எல்லோரும் தங்கள் சொந்த ஊருக்கே போய்விடப் போவதாகச் சொல்கிறான்.

அன்று அவளும் மற்ற மாணவிகளும் ஒரு லைஃப் ஸ்கில் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். பயிற்றுநராக நாசர். அவர் லைஃப் ஸ்கில்ஸின் அடிப்படையான பத்துக் கட்டளைகள் பற்றிச் சொல்லிவிட்டு, ஒரு குட்டிக் கதை சொல்கிறார். தன் நண்பனான குரங்கை தன் மனைவிக்கு விருந்தாகக் கொடுக்க ஏமாற்றி அழைத்துச் செல்லும் முதலையின் கதை அது. கதையின் முடிவில், அந்தப் பத்துக் கட்டளைகளும் இந்தக் கதையில் இருக்கு, கண்டுபிடியுங்க என்று சொல்லி முடிக்கிறார். எல்லா மாணவர்களும் கலைகிறார்கள்.

அந்தப் பெண் மட்டும் சுரத்தில்லாமல் இருப்பதைக் கண்டு அவளை அழைத்து விசாரிக்கிறார். (நாசர் அவளை இதற்கு முன்பே ஒரு கிரீட்டிங்ஸ் கடையில் சந்தித்திருக்கிறார்.) அவள் தன் பிரச்னையைச் சொல்கிறாள்.

“இதெல்லாம் பிரச்னையே இல்லை. அப்பாவோட ஸ்கூட்டர்ல போயிருக்கே. ஸ்கூட்டர் விலை என்னன்னு தெரியுமா உனக்கு? ஒரு லிட்டர் பெட்ரோல் விலை என்னன்னு தெரியுமா? துவரம் பருப்பு கிலோ என்ன விலைன்னு தெரியுமா? தெரியாது. அதனால தப்பில்லை. அதெல்லாம் உன் அப்பா, அம்மாவோட பொறுப்பு. இன்னிக்கு உன்னோட கடமை நல்லாப் படிச்சு மார்க் வாங்குறதுதான். ஒவ்வொரு பருவத்துலயும் நமக்குன்னு சில வேலைகள் இருக்கு. அதை நாம அப்பப்போ சரியா செய்துக்கிட்டுப் போனா போதும். எந்தக் குழப்பமும் வேணாம். படி. வாலிபால் விளையாடு. எல்லாம் சரியாயிடும்” என்று புத்திமதி சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அந்தப் பேப்பர் போடும் பையன் அவளைத் தனியாகச் சந்தித்து, வடபழனியில் மாலை மாற்றிக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்கிறான். இவள் தெளிவாக, ‘சொந்தமா பிரிண்ட்டிங் பிரஸ் வைக்கப் போறேன்னியே, உன் லட்சியம் என்னாச்சு? நான் நல்லா படிச்சு முன்னுக்கு வரணும். நம்மளோட கடமை அதுதான். கல்யாணத்தைப் பத்தி யோசிக்க இது நேரம் இல்லை. நமக்கு அது பத்தி இப்போ தெரியாது; புரியாது. அதுக்குன்னு நேரம் வரும்போது அதைப் பத்தி யோசிக்கலாம். இப்ப நான் தெளிவா இருக்கேன்’ என்று சொல்லிவிட்டு வந்துவிடுகிறாள்.

ஒரு சிறுகதை படித்த திருப்தி. ஆரம்பத்தில் அனைவரின் நடிப்பும் பேச்சும் ரொம்பச் செயற்கையாகத் தெரிந்தது. போகப் போக இயல்புக்கு வந்தது. அந்தப் பெண் ரொம்ப க்யூட். நாசர் மிக இயல்பான நடிப்பு.

“ஏன் எப்பவும் மூன்றாம் ரேங்க்கே வாங்குறே? அட்லீஸ்ட் ரெண்டாம் ரேங்க் கூட வாங்க மாட்டேங்கிறியே? இத்தனைக்கும் ரெண்டாம் ரேங்க் வாங்கின பெண் எடுத்திருக்கும் மார்க்கைவிட நீ நாலு மார்க்தான் கம்மி! கொஞ்சம் முயற்சி பண்ணிப் படிச்சிருந்தா நீ ரெண்டாம் ரேங்க் வாங்கியிருக்கலாமில்லே?” என்று அந்தப் பெண்ணின் அப்பா கேட்க, அதற்கு அந்தப் பெண் சொல்லும் பதில் வேடிக்கையாக இருக்கிறது.

“நாலு மார்க் எடுக்கணும்னா நான் இன்னும் கூடுதலா அரை மணி நேரம் படிக்கணும். அப்படிக் கூடுதல் அரை மணி நேரத்தைப் படிப்புக்கு ஒதுக்கினேன்னா, என்னால வாலிபால் விளையாட முடியாது. ஆனா, வாலிபால் டோர்னமெண்ட்ல கலந்துகிட்டுச் சாம்பியன் ஆகணும்னு எனக்கு ஆசை” என்கிறாள். அதென்ன, அரை மணி படிச்சா, நாலு மார்க்; ஒரு மணி படிச்சா எட்டு மார்க்னு படிப்புக்குக் கணக்கு உண்டா என்ன?

அதேபோல, நாசர் சொல்லும் முதலை-குரங்கு கதையிலும் ஒரு சின்ன நெருடல். முதலை தன் நண்பன் குரங்கை விருந்து கொடுப்பதாகச் சொல்லி ஏமாற்றி தன் இடத்துக்கு அழைத்துச் செல்லும்போது, மனசு குறுகுறுக்க, விருந்து கொடுக்க அல்ல; அதன் வயிற்றைத் தன் மனைவிக்கு விருந்தாக அளிக்க என்கிற உண்மையைச் சொல்கிறது. குரங்கு தந்த மாம்பழங்களே அத்தனை ருசியாக இருந்தால், அந்த மாம்பழங்களை அவ்வளவு காலமும் தின்று செரித்த வயிறு எத்தனை ருசியாக இருக்கும் என்று மனைவி முதலை ஆசைப்பட்டதன் விளைவே அது. உடனே குரங்கு, ‘அடடா! இதை முதல்லேயே சொல்லியிருக்கக்கூடாதா? நான் என் வயிற்றைக் கழற்றி மரத்திலேயே காயப் போட்டிருக்கிறேனே?’ என்று சொல்லவும், திரும்பவும் அதை எடுத்து வருவதற்காக இக்கரைக்குப் பயணமாயின இரண்டும். தன் இடம் வந்ததும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டது குரங்கு.

இந்தக் கதையில் மனைவி முதலை குரங்கின் ஈரலைத்தான் புசிக்க விரும்பும்; வயிற்றை அல்ல. விருந்துக்கு என வருகிற குரங்கு வயிற்றைக் கழற்றிக் காயப் போட்டுவிட்டா வரும்? ரொம்ப லாஜிக் பார்க்க வேண்டாம்தான். ஆனால், மூலக் கதையில் ஈரல் என்று (ஞாநி வெளியிட்டுள்ள ‘என் வாழ்க்கை என் கையில்’ புத்தகத்தில் இந்தக் கதையில் ஈரல் என்று சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.) வருவதை குறும்படத்தில் வயிறு என ஏன் மாற்ற வேண்டும் என்று புரியவில்லை.

‘என் வாழ்க்கை என் கையில்’ தலைப்பு அருமையானது. இந்த லைஃப் ஸ்கில் பற்றி ‘படையப்பா’ படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து ‘கிக்கு ஏறுதே’ பாடலில் மிக அழகான வரிகளை எழுதியிருப்பார். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு அது. அதில் கிட்டத்தட்ட கண்ணதாசனை நெருங்கியிருப்பார் வைரமுத்து.

‘தாயைத் தேர்ந்தெடுக்கும் தந்தையைத் தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை;
முகத்தைத் தேர்ந்தெடுக்கும் நிறத்தைத் தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை;
பிறப்பைத் தேர்ந்தெடுக்கும் இறப்பைத் தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை.
எண்ணிப் பார்க்கும் வேளையிலே
உன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில் உண்டு
அதை வென்று எடு!’

ஞாநியின் புத்தகம் இதைத்தான் விரிவாக எடுத்துச் சொல்லும் என்று நினைக்கிறேன். இன்னும் படிக்கவில்லை. படித்த பின்னர் அது பற்றி எழுதுகிறேன்.

கொசுறு செய்தி: ஞாநியின் அடுத்த கேணிக் கூட்டம் வருகிற 14-ம் தேதி. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன்.
.

6 comments:

அருமையான நிகழ்ச்சி.அழகான பகிர்வு.
 
அட்டகாசமான கட்டுரை. இதே இவ்வளவு சுவையா இருக்கே.... இதை டைப் செஞ்ச விரல்கள் எப்படி இருக்கும்?
 
வரமுடியாமல் போனது வருத்தமாக இருக்கிறது. நாசர் பேச்சு அசத்தல். அருமையா பதிவு பண்ணிருக்கீங்கண்ணா
 
குரங்கு-முதலை கதையில அந்தக் குரங்கு சாப்பிட்டது நாவல் பழம்னுதான் நான் சின்ன வயசுல படிச்சிருக்கேன். ஈரல் வயிறானது மாதிரி நாவல் பழம் மாம்பழமாயிடுச்சுங்களாண்ணா?!
 
நான் 2 ஆம் தேதியே அனுப்பியிருந்த பின்னூட்டம் வெளிவரவில்லை... எதாவது பிழை எங்காவது இருக்கலாம் ...
அதில் நான் சொல்ல வந்த விஷயங்கள் பெரும்பாலும் சக பதிவர்கள் குறிப்பிட்டுவிட்டார்கள்( நகாப்பழம் உட்பட.... )
விட்ட விஷயங்கள் இரண்டு
1 . நேர்முக வர்ணனை மாதிரி சிறப்பாக இருந்தது.
2 . கடைசியில் படையப்பரின் பாடல் போட்டது உற்சாகமாக இருந்தது.
 
+ நன்றி ராஜா!

+ லதானந்த்! அடடா... விரல்களை ஆபீஸ்லேயே வெச்சுட்டு வந்துட்டேனே! :)

+ அதிஷா வரவு அதிஷயமா இருக்கே! பின்னூட்டத்துக்கு தேங்க்ஸ்!

+ கதையில் இருந்த இன்னொரு தப்பை சரியா கண்டுபிடிச்சிருக்கீங்க கிருபாநந்தினி! நான்கூட கவனிக்கலை! சுட்டிக்காட்டியதற்கு நன்றி!

+ பத்மநாபன், முந்தின பின்னூட்டம் வரவில்லையே? சரி விடுங்க! அடுத்தது வந்திருச்சில்லே! சலிக்காமல் அலுக்காமல் அடுத்த முறையும் முயன்றதற்கு டபுள் தேங்க்ஸ்!