உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, September 20, 2009

கையெழுத்து வேட்டை!

வி.ஐ.பி-க்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு, பத்திரிகைத் துறையில் இருப்பதால் எனக்குக் கிடைத்தது. எனினும், அவர்களை முதன்முறையாக நேரில் சந்திக்கும்போது எனக்கு எந்தவிதமான சிலிர்ப்போ, பரவசமோ ஏற்படவேயில்லை. பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களை மட்டும்தான் நானாக விரும்பிப் போய்ச் சந்தித்தேன். (நான் சந்திக்க விரும்பும் மற்றொருவர் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்.) அப்போதும்கூட மகிழ்ச்சிதான் உண்டாயிற்றே தவிர, ஒரு வி.ஐ.பி-யைச் சந்திக்கிறோம் என்கிற பரவச உணர்வு எதுவும் உண்டாகவேயில்லை.

நான் விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரியில் படித்தபோது, அங்கே ஆண்டுவிழாவுக்குப் பிரதம விருந்தாளியாக வந்து கலந்துகொண்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நான் சிவாஜியின் அதி தீவிர ரசிகன். என்றபோதிலும் அன்றைக்கு அவரிடம் கைகுலுக்கவோ, உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவோ, ஆட்டோகிராஃப் வாங்கிக்கொள்ளவோ எனக்குத் தோன்றவே இல்லை. என் நண்பர்களுக்கு இதில் ஆச்சரியமான ஆச்சரியம்!

ஒரு சினிமா ஸ்டுடியோவின் லைட்பாயைக்கூட சிவாஜி தோளில் தட்டியிருப்பார்; கை கொடுத்திருப்பார். அவரை அவரின் கார் டிரைவரோ, பணியாட்களோ நித்தம் நித்தம் அருகில் நின்று பேசியிருப்பார்கள். அவருடன் யார் யாரோ நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பார்கள். அந்நாளில் விழுப்புரத்தில் நடைபாதை கைரேகை ஜோசியக்காரர்கள் இரண்டு மூன்று பேர் தங்கள் பின்னால் பெரிய போர்டு வைத்து, அதில் சினிமா நட்சத்திரங்களுக்குக் கைரேகை பார்க்கிற மாதிரி புகைப்படங்கள் வைத்திருப்பார்கள். எம்.ஜி.ஆருக்கு கைரேகை பார்க்கிற மாதிரி, சிவாஜிக்கு, ஜெய்சங்கருக்கு, கே.ஆர்.விஜயாவுக்கு, உஷாநந்தினிக்கு என பல சினிமா நட்சத்திரங்கள் அருகில் அமர்ந்து அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பார்கள். எனவே, வி.ஐ.பி-க்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதில் என்ன பெரிய விசேஷம் இருக்கிறது என்பது இன்றுவரை எனக்குப் புரிந்ததே இல்லை.

அதேபோல்தான் அவர்களின் ஆட்டோகிராஃப் பெறுவதும்! எஸ்.எஸ்.எல்.சி. முடித்தபோது என்னோடு படித்த அத்தனை பேரும் ஆளுக்கொரு ஆட்டோகிராஃப் புத்தகம் வாங்கி, ஒரு கடமை போல் தலைமை ஆசிரியர், இதர ஆசிரியர்கள், சக மாணவர்கள் என அனைவரிடமும் கையெழுத்து வேட்டை நடத்தினார்கள். அது எதற்கு என்று புரியாமலே நானும் அந்த வேட்டையில் கலந்துகொண்டேன். சிலர் நாலைந்து ஆட்டோகிராஃப் புத்தகங்களைக் கையெழுத்துக்களால் நிரப்பி விட்டதாகப் பெருமையோடு சொல்லிக் கொண்டார்கள். யார் அதிகம் பேரின் கையெழுத்தைச் சேகரிக்கிறார்கள் என்பதில் ஒரு போட்டியே நடந்தது. வெறுமே கையெழுத்துப் போட்ட ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் ஏதாவது அட்வைஸ், பொன்மொழி எழுதிக் கையெழுத்துப் போடும்படி கெஞ்சிக் கூத்தாடிய மாணவர்களும் உண்டு. சில மாணவர்கள் இதற்காகவே நிறைய பொன்மொழிகளை மனப்பாடம் செய்து வந்திருந்தனர். சிலர் பழைய பொன்மொழிகளைத் திரித்து, சொந்தக் கற்பனையைக் கலந்து, புதுமை மொழிகளாக எழுதிக் கையெழுத்திட்டனர். அந்த ஆட்டோகிராஃப் புத்தகம் இப்போது என்னிடம் இல்லை. அதைப் பத்திரப்படுத்தி வைக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றவே இல்லை.

இப்படிக் கையெழுத்துக்களை வாங்கிச் சேகரித்து, அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று எனக்கு அன்றைக்கும் தெரியவில்லை; வி.ஐ.பி-க்களின் ஆட்டோகிராஃபை வாங்கி வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று இன்றைக்கும் புரியவில்லை. இது பற்றிய ஒரு பதிவை எழுதவேண்டும் என்று நான் யோசித்துக்கொண்டு இருந்த சமயத்தில், ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதிக்காக 1938-ம் வருட இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது ஓர் ஆச்சரியம்! நான் என்னவெல்லாம் எழுத நினைத்திருந்தேனோ அவற்றை அன்றைக்கே ஒரு கட்டுரையாக வடித்திருந்தார் ஒருவர். வெறுமே ‘வி.கே’ என்று மட்டுமே அதை எழுதியவரின் இனிஷியல் கொடுக்கப்பட்டு இருந்தது. ‘கையெழுத்து வேட்டை’ என்னும் தலைப்பில் 2.1.1938 விகடன் இதழில் வெளியான அந்தக் கட்டுரை கீழே.

கையெழுத்து வேட்டை

பூலோகத்திலே பைத்தியக்காரர்கள்தான் ஜாஸ்தி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பைத்தியம். ஒவ்வொரு பைத்தியமும் ஒரு தனி விநோதம். எனக்குப் பாடவே தெரியாது. ஆனால் எல்லாப் பாட்டும் பாடம். எந்தப் பாட்டுக்கு அடி சொன்னாலும் சரி, கடைசிச் சரணம் வரை ஒப்பித்து விடுவேன். புதிதாய் யார், எங்கே, என்ன பாட்டுப் போடுகிறார்கள் என்று தேடுவேன். அவை அச்சுக்கு வருவதற்கு முன்னால் நான் எழுதிப் பாடம் பண்ணி விடுவேன். அதனால் எனக்கு என்ன பயன் என்று கேட்டால், எனக்குச் சொல்லத் தெரியாது.

பெரிய மனிதர்களிடம் கையெழுத்து வேட்டையாடுகிற வர்கள் வேறொரு தினுசு பைத்தியங்கள். அவர்களிடம் எனக்குக் கோபமே வருவதில்லை. அதற்குப் பதிலாக அனுதாபம் உண்டு. அவர்களை பார்க்கும் போதெல்லாம் ‘ஐயோ, பாவம்!’ என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன். மகாத்மா காந்தியிடமிருந்தும், ராஜாஜியிடமிருந்தும், ஸர் ஸி.வி.ராமனிடமிருந்தும் அவர்கள் கேட்பதெல்லாம் ஒரே ஒரு கையெழுத்துதான். அது கிடைத்துவிட்டால் போதும், அவர்கள் ஜன்மம் ஸாபல்யமாகிவிடும்.

ராஜாஜியும், ஸர் ஸி.வி.ராமனும் போடு என்றால், கையெழுத்துப் போட்டு விடுகிறார்கள். ஜவாஹர்லால்ஜிகூடத் தன் அவசரத்தை மறந்து, நீட்டின கடுதாசியிலெல்லாம் கையெழுத்துப் போட்டுக் கொண்டே இருந்துவிடுகிறார். ஆனால் மகாத்மா காந்தி மட்டும் கையெழுத்தை சும்மா போடுவதில்லை. “ஏதாவது தட்சிணை கொடு, ஹரிஜன சேவைக்கு” என்று பிடுங்கி விடுகிறார். ஆனால், இந்த வேட்டைக்காரர்கள் அதற்கும் அஞ்சுவதில்லை. தட்சிணை சகிதம் வந்து, கடுதாசியுடன் அதையும் நீட்டிவிடுகிறார்கள்.

இந்தக் கையெழுத்தை எல்லாம் அவர்கள் என்ன செய்வார்கள்? கண்ணாடி போட்டு மாட்டுவார்களா? அல்லது, புஸ்தகமாக பைண்டு பண்ணி அலமாரியில் வைத்துப் பூஜை செய்கிறார்களா? அந்த ரகசியம் எனக்குத் தெரியவில்லை. அவர்களைக் கேட்டாலும் சொல்லுவதில்லை; கண்ணைச் சிமிட்டிக்கொண்டு சிரிக்கிறார்கள்.

இந்த மாதிரி சிரிப்பு ஒரு தரம் என்னை ரொம்பச் சந்தேகத்துக்குள் ஆழ்த்தி விட்டது. ஒருவேளை தீய எண்ணத்துடன் கையெழுத்து வாங்கிக் கொள்ளுகிறார்களோ? அதே மாதிரி தாமும் கையெழுத்திட்ட கடிதங்கள், பிராமிஸரி நோட்டுகள், நற்சாக்ஷிப் பத்திரங்கள் இவற்றை சிருஷ்டித்துப் பயன்படுத்திக் கொள்ளுகின்றனரோ என்று பயந்தேன். ஆனால், அந்தப் பேர்வழிகளுடைய அசட்டுக் களை என் சந்தேகங்களை எல்லாம் விரட்டி விட்டது. போக்கிரியாய் இருப்பதற்கும் கொஞ்சமாவது சமர்த்து வேண்டாமா?

பிறகு இவர்கள் என்னதான் பண்ணுவார்கள் தங்கள் வேட்டையை? அப்படி ஒருவரிடம் கேட்டேன். ‘கையெழுத்துப் பித்து’ என்று மட்டும் சுருக்கமாகச் சொல்லித் தப்பித்துக்கொண்டு விட்டார்.

பிறர் கையெழுத்தை வேட்டையாடுகிறவர்கள் டில்டன், மகம்மதலி ஜின்னா, காமா, டின்ஷா மேத்தா, சியாங் கே ஷேக், தேவிகா ராணி என எல்லா நாமங்கள் மீதும் சமமான பக்தி, சமமான மரியாதை வைத்திருக்கிறார்கள். பிரஸித்தி பெற்றவர்களையெல்லாம் கையெழுத்துடன் பிடித்துவிடுவதுதான் இவர்கள் நோக்கம். ஆனால், அவற்றை என்ன செய்கிறார்கள்? காட்சி சாலைகளில் காண்பிக்க ஏற்பாடு செய்கிறார்களா?

யாருக்குத் தெரிகிறது? உயிர்களை எல்லாம் வேட்டையாடிக் கொண்டு போகிறான் யமன். அவற்றை அவன் என்ன பண்ணுகிறான் என்று யாராவது நிச்சயமாகக் கூற முடியுமா? அத்தனை மர்மம் இந்த வேட்டையிலும் இருக்கிறது. சரி, நான் ஏன் இந்தப் பைத்தியங்களைப் பற்றி எழுதுகிறேன்? அதற்குக் காரணம் உங்களால் சொல்ல முடியுமா? அது போலத்தான்!
.

6 comments:

நானும் உங்க கட்சி தான். என் அப்பா தினமும் ஹிந்து பேப்பரில் வரும் தலையங்கத்தை எழுதிக் காட்டச் சொல்லுவார். தெரியாத ஆங்கில வார்த்தைகளுக்கு கீழே கோடு போடச் சொல்லுவார். பின்பு அதற்கு அர்த்தமும் சொல்லித் தருவார்.ஆங்கிலமும் கத்துக்கிட்டு கையெழுத்தையும் அழாக எழுத மாத்திக்கிட்டேன். இதிலே இன்னொருத்தர் கையெழுத்தை வாங்கி என்ன பண்ணப்போறோம்னு நானும் ஆட்டோகிராப் வாங்கியதில்லை. நல்ல பதிவு.

ரேகா ராகவன்.
 
சும்மா சொல்லப் படாது, விழுந்து விழுந்து சிரித்தேன்... முதல் 'விழுந்து' உங்க பதிவின் விஷய நகைச்சுவைக்கே. இரண்டாவது 'விழுந்து' 1938 -லேயே கையெழுத்து பித்துக்ளைப் பற்றி பிய்த்து உதறி 'விட்'டிருக்கிற வி.கே. யின் நகைச்சுவை அருவிக்கே! -- கே.பி. ஜனா
 
பிரகாஷ் எனக்கும் இதுபோல் நிகழ்ந்திருக்கிறது. 85 வாக்கில் நான் ஒரு தீவிரமான ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். கோயம்புத்தூர் இரயில் நிலையத்தில் பார்த்து கையெழுத்து வாங்க தோன்றவில்லை. மற்றுமொரு சமயம் மும்பை இந்தியா கேட்டில் ரவி சாஸ்திரியை ஒரு கார் விளம்பர ஷூட்டிங்கில் பார்த்தபோதும் கையெழுத்து வாங்கவில்லை.

முழு பதிவையும் படித்ததும் அப்பாடா என்றிருந்தது.

நன்றி பிரகாஷ்.

பிரபாகர்.
 
சுற்றுலா போனால் புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்கிறோமே, ஏன்? ஒரு சந்தோஷம்தான்! பழைய கடிதங்களை எடுத்துப் படிக்கும்போது ஒரு சந்தோசம் உண்டாவதில்லையா? அதுபோல், விஐபி-க்களின் கையெழுத்தைப் பெற்றால், இவர்களோடெல்லாம் நாம் பழகியிருக்கிறோம் என்கிற ஒரு சந்தோசம் ஏற்படும். நானும் எம்.எஸ். உள்பட பல பிரபலங்களின் கையெழுத்தை சேகரித்து வைத்திருக்கிறேன். அது ஒன்றும் அத்தனை அசட்டுத்தனமாக எனக்குத் தெரியவில்லை. அது ஒரு பொழுதுபோக்கு. அவ்வளவுதான். நீங்கள் ரொம்பத்தான் நக்கலடித்திருக்கிறீர்கள்.
 
கிருபாநந்தினி
திரு.ராகவன்,
உங்க பின்னூட்டத்தைப் படிச்சதும் எனக்கு உங்க அப்பா கிட்டே ஆட்டோகிராஃப் வாங்கியே ஆகணும் போலிருக்கு!

திரு.கே.பி.ஜே.,
தாங்கள் சொல்வது போல், காலத்தை வைத்து யோசிக்கும்போது, வி.கே-வின் கட்டுரை உண்மையிலேயே ரொம்ப அசத்தலான ஒன்றுதான்!

திரு.பிரபாகர்,
மற்றவர்கள் விழுந்து விழுந்து கையெழுத்துக்களைச் சேர்க்கிறபோது நாம் அதற்கு முயற்சியே எடுக்கவில்லையே, நாம் ஒருவேளை அசடோ என்று மனசின் ஒரு மூலையில் குண்டூசி முனையளவு ஒரு எண்ணம் இருந்தது. தங்கள் பின்னூட்டத்தைப் படித்தபோது எனக்கும்தான் அப்பாடா என்றிருந்தது. உண்மையில் உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்!

கிருபாநந்தினி! ஸ்டாப்... ஸ்டாப்! அசட்டுத்தனம் என்று நான் எங்கே சொன்னேன்? பைத்தியக்காரத்தனம் என்று - இல்லை; அதுகூட நான் இல்லை - அந்த வி.கே-தான் 1938-ல் சொன்னார். என்னை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க மேடம்?
 
/

கிருபாநந்தினி! ஸ்டாப்... ஸ்டாப்! அசட்டுத்தனம் என்று நான் எங்கே சொன்னேன்? பைத்தியக்காரத்தனம் என்று - இல்லை; அதுகூட நான் இல்லை - அந்த வி.கே-தான் 1938-ல் சொன்னார். என்னை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க மேடம்?
/

ஹா ஹா
எஸ்க்கேப் ஆகிறார் விடாதீங்க!
:)))