ஞாநியின் நான்காவது கேணிக் கூட்டம் இன்று நடந்தது. சென்ற முறை பாலு மகேந்திரா பேசியதில் எனக்கு அத்தனை சுவாரசியம் இல்லாமல் இருந்தது. அவர் பெரிய இயக்குநர்தான். அவரது அழியாத கோலங்கள், மூடுபனி ஆகிய படங்களைப் பார்த்துப் பிரமித்திருக்கிறேன். ஆனால், கேணிக் கூட்டத்தில் அவர் புதிதாக எதையும் சொல்லிவிடவில்லை என்பதோடு, என்னை அதிகம் ஈர்ப்பதாகவும் இல்லை அவர் பேச்சு. எனவே, இந்த முறை கேணிக் கூட்டத்துக்குப் போகாமல் இருந்துவிடலாம் என்றுதான் கடைசி நிமிஷம் வரையில் தீர்மானித்திருந்தேன். என்றாலும், வருபவர் மகேந்திரன் என்பதால், போய்த்தான் பார்ப்போமே என்று போனேன்.
திரு.மகேந்திரனை சாவியில் பணியாற்றிய காலத்தில் தெரியும். சாவி சாரின் அத்யந்த நண்பர் அவர். நான் அங்கே வேலை செய்த காலத்தில் மகேந்திரன், சாவி சார் இல்லத்துக்கு இரண்டு முறை வந்திருக்கிறார். கன்னங்கள் எல்லாம் ஒட்டிப்போய், குச்சியாக மெலிந்திருந்தார். அப்போது அவருடன் பேசியிருக்கிறேன். பழகியதில்லை.
ஒரு முறை (நான் சாவியில் சேருவதற்கு முன்பு) சாவி பத்திரிகை விழா ஒன்று பெங்களூரில் நடந்தது. சாவி சாரோடு திரு.மகேந்திரனும் சென்றிருந்தார். அதற்கு முந்தைய வாரத்தில், வாரம் ஒரு ஊர் என்கிற வரிசையில் பெங்களூரைப் பற்றி சாவி இதழில் எழுதியிருந்தவர் (கார்த்திகா ராஜ்குமார் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை.) ‘அங்கே பெண்கள் கூப்பிட்டால் வந்துவிடுவார்கள்’ என்ற தொனியில் ஏதோ எழுதிவிட்டிருந்தார். இதை மனதில் கொண்டு, பெங்களூர் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் விழாவின்போது கலாட்டா செய்ய, செருப்பும் அழுகிய முட்டைகளும் பறக்க, மகேந்திரனை பத்திரமாக அழைத்து வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது சாவி குழுவினருக்கு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
‘பதினாறு வயதினிலே’ படத்துக்கு அடுத்தபடியாக ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண் பெற்ற படம், மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’தான். விகடனில் பொக்கிஷம் பகுதிக்காக எழுத்தாளர் சுஜாதா மற்றும் நடிகை லட்சுமியுடன் தான் நடத்திய உரையாடலை மறு பிரசுரம் செய்யும்படி கேட்டிருந்தார் மகேந்திரன்.
குடிப்பழக்கம் அதிகம் கொண்டவர் மகேந்திரன். இப்போது குறைத்துக் கொண்டாரா, விட்டுவிட்டாரா என்று தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன், ஒரு டி.வி. பேட்டியின்போதுகூட குடி மயக்க நிலையில்தான் அவர் பேசினார். பேச்சு குழறலாக இருந்தது. ஒரு மகா கலைஞன் தன்னைப் பாழடித்துக் கொள்கிறாரே என்று வேதனையாக இருந்தது.
ஆனால், இன்றைக்கு மகேந்திரனைப் பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. கம்பீரமாக இருந்தார். முழு ஆரோக்கியத்துடன், தெம்பாகத் தெரிந்தார். குரல் பிசிறில்லாமல் கணீரென்று இருந்தது. அவர் பேசியதிலும் புதிதாகத் தெரிந்து கொள்ள எனக்கு எதுவும் இல்லையென்றாலும், அவர் பேசிய விதமே இனிமையாக இருந்தது. ஒரு தோழமையோடு, சிநேகித பாவத்தோடு பேசினார். தான் பெரிய டைரக்டர் என்கிற பந்தா எதுவும் அவரிடம் துளியும் இல்லை. ஆத்மார்த்தமாகப் பேசினார்.
புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன் ஆகிய மூவரின் எழுத்துக்கள்தான் தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று குறிப்பிட்டார். மலையாளத்தைப் பொறுத்தவரை எம்.டி.வாசுதேவன் நாயர் போன்ற பலரின் எழுத்துக்கள் பிடிக்கும் என்றார். சினிமாவிலும் இலக்கியத்திலும் மலையாளப் படைப்பாளிகள் அளவுக்குத் தமிழில் இன்றைக்கு இல்லை என்பது மகேந்திரனின் அபிப்ராயம். சத்யஜித்ரேவை சிறந்த இயக்குநராகத்தான் எனக்குத் தெரியும். ஆனால், அவர் ஒரு நல்ல எழுத்தாளரும்கூட; நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார் என்று குறிப்பிட்டார் மகேந்திரன்.
உமாசந்திரனின் கதையைத்தான் மகேந்திரன் அப்படியே ‘முள்ளும் மலரும்’ என்று சினிமாவாக இயக்கியதாக நான் இத்தனை நாள் நினைத்துக்கொண்டு இருந்தேன். மகேந்திரன் இன்றைக்குப் பேசியதிலிருந்து, படம் மூலக் கதையிலிருந்து ரொம்பவே வேறுபட்டிருக்கும் என்று தோன்றுகிறது. கதாநாயகன் காளி ஒரு விஞ்ச் ஆபரேட்டர் என்பது வரைதான் அந்தக் கதையில் தன்னை ஈர்த்தது; மற்றதையெல்லாம் தானே ஜோடித்துக்கொண்டதாகச் சொன்னார்.
ரஜினி பற்றியும் பேசினார். அற்புதமான நடிகர் சிவாஜி, எந்திரன் என்று ஒரு இமேஜில் சிக்கி வீணாகப் போய்விட்டது குறித்துத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். உண்மைதான். அதாவது, ரஜினி அற்புதமான நடிகர் என்பது உண்மைதான். எங்கேயோ கேட்ட குரல், நான் வாழ வைப்பேன், புவனா ஒரு கேள்விக்குறி ஆகிய படங்கள் அவரின் நடிப்புத் திறமைக்குச் சான்று. ஆனால், அதற்காக அப்படியான படங்களில் மட்டும்தான் ஒரு நடிகர் நடிக்க வேண்டும் என்பது இல்லை. ஒரு பெரிய ஆடியன்ஸைக் கவர வேண்டுமானால் பில்லா, முரட்டுக் காளை, சிவாஜி போன்ற படங்களிலும் நடிக்கத்தான் வேண்டும். அதே சமயம் குணச்சித்திர நடிப்புக்கு வாய்ப்புள்ள படங்களிலும் ரஜினி நடிக்க வேண்டும். கமல் கச்சிதமாக அதைச் செய்து வருகிறார். என்ன... இரண்டு விதமான படங்களிலும் இரண்டையும் அங்கங்கே கலந்து சிண்டைப் பிய்த்துக் கொள்ள வைத்து விடுகிறார்.
சரி, மகேந்திரனுக்கு வருவோம். அவரின் உதிரிப் பூக்கள் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியைப் பார்த்து நெஞ்சு கனக்காதவர்கள் இருக்க முடியாது. கை கொடுக்கும் கை என்று, தான் ஓர் உருப்படாத படம் கொடுத்ததாகச் சொன்னார். நானும் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். ரஜினியின் மனைவியாக ரேவதி, பார்வையற்றவராக வருவார்; சின்னி ஜெயந்த அறிமுகமான படம் என்பதைத் தவிர, கதை எதுவும் ஞாபகமில்லை. ஆனால், மகேந்திரன் சொல்வதுபோல் அது அத்தனை மோசமான படம் இல்லை என்று நினைக்கிறேன்.
ஒருவர் சாதனையாளர் என்றால், அவர் மட்டும் கிரீடம் சூட்டிக் கொள்கிறார்; அவரை அந்த இடத்துக்கு உயர்த்தியதற்கு எத்தனை எத்தனையோ பேரின் பங்களிப்பு இருக்கும்; அவர்களை யாருக்கும் தெரிவதில்லை; இந்தச் சாதனையாளர்களும் சொல்வதில்லை; தன் மூளை, தன் உழைப்பு என்று பெயரைத் தட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள் என்று குறிப்பிட்டார் மகேந்திரன்.
பிரீமெச்சூர்ட் பேபியாக பிறந்த தன்னை, உயிர் பிழைப்பது கடினம் என்கிற நிலையில், தன் வயிற்றின் மீது வைத்து அந்தச் சூட்டில் வைத்துக் காப்பாற்றி உயிர் கொடுத்த சாரா என்கிற டாக்டர் மட்டும் இல்லையென்றால், இன்றைக்குத் தான் இங்கே நின்றுகொண்டு பேசியிருக்க முடியாது என்றார்; தான் கணக்குப் பாடத்தில் ரொம்ப வீக் என்றும், எஸ்.எஸ்.எல்.சி-யில் தேறவே மாட்டோம் என்று நினைத்திருந்தபோது, கணக்கில் சரியாக 25 மார்க் (அன்றைக்கு அதுவே பாஸ் மார்க்) எடுத்து பாஸ் செய்திருந்ததையும் குறிப்பிட்டவர், தன் பேப்பரைத் திருத்திய எந்த ஆசிரியரோ ஆசிரியையோ முகம் அறியாத தன் மீது இரக்கம் கொண்டு மார்க்குகளை அள்ளி வழங்கியிருக்காவிட்டால், தான் கல்லூரியில் சேர்ந்திருக்க முடியாது, அங்கே வருகை தந்த எம்.ஜி.ஆரைச் சந்தித்திருக்க முடியாது, அவர் மூலம் சினிமாவுக்கு வந்திருக்க முடியாது; எனவே, நான் இன்றைக்குப் பரவலாக அறியப்பட்டிருப்பதற்கு அந்த முகம் தெரியாத டீச்சரும் ஒரு காரணம் என்றார்.
அதீத தன்னடக்கமும் ஒருவகையான அகம்பாவம்தான் என்பது என் கருத்து. ஆனால், மகேந்திரனின் பேச்சில் தூய்மை இருந்தது; சத்தியம் இருந்தது. அவர் தன் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் இருப்பதாக உண்மையிலேயே நினைத்துக் கொள்ளவில்லை; தான் ஆகச் சிறந்த படைப்பாளி என்பதான எண்ணம் எதுவும் அவர் தலைக்குள் ஏறவில்லை என்பது அவர் பேச்சிலிருந்து புலனாகியது.
இன்றைக்கு கேணி கூட்டத்துக்குப் போகவேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் போனேன். மனசுக்கு இதமாக இருந்தது. மகேந்திரன் என்கிற அந்த மகோன்னத கலைஞருக்கு நன்றி!
.
Sunday, September 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ரேகா ராகவன்.
Post a Comment