உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, September 11, 2009

சில நேரங்களில் சில மரணங்கள்..!

ரண்டு நாட்களாக மரணம் பற்றியே என் நினைவுகள் சுற்றிச் சுழன்றுகொண்டு இருக்கின்றன. சிறு வயதில் மரணம் பற்றி ரொம்பவே பயந்திருக்கிறேன். அப்போதெல்லாம், என் உள்ளங்கையில் ஏதோ ஒரு ரேகையைச் சுட்டிக் காண்பித்து, இந்த ரேகை உள்ளவர்களுக்கெல்லாம் சாவு வராது என்று எனக்குத் தைரியமூட்டியிருக்கிறார் அப்பா.

மரணம் என்பது பயமுறுத்தும் ஒன்றல்ல. எப்போது பிறந்தோமோ அப்போதே மரணத் தேதியும் குறிக்கப்பட்டுவிடுகிறது. மகான்கள், உலுத்தர்கள், ஆஸ்திகர்கள், நாஸ்திகர்கள், சாதனையாளர்கள், சோம்பேறிகள், வீரர்கள், கோழைகள், புத்திசாலிகள், மடையர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் எனப் பலரும் நாளும் இறந்துகொண்டே இருக்கிறார்கள். எனவே, மரணம் என்பது ஏதோ நமக்கு மட்டுமே புதிதாக வருவது அல்ல, பயந்து சாக!

ஆனால், மரணம் வரும் விதம் கவலையளிப்பதாக, அச்சுறுத்துவதாக சிலருக்கு அமைந்துவிடுகிறது. தூக்கத்தில் உயிர் பிரிதல் ஓர் வரம். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நோயில் பல மாதங்கள் கிடந்து அவதிப்பட்டு, அல்லது விபத்தில் சிக்கி வேதனைப்பட்டு என, மரணம் அடைவதற்கு முந்தைய காலம் சிலருக்கு அதிக துயரத்தை, பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. நெருங்கிய உறவினர்களைப் பிரிவது துயரமானதாக இருக்கிறது. நம் அன்புக்குரிய நண்பர்களை, அபிமான நடிகர்களை, தலைவர்களை இழப்பது அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. ராஜசேகர ரெட்டியின் அகால மரணத்தின் அதிர்ச்சி தாங்காமல் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்துகொண்டும் இறந்தார்கள் என்பது, ரெட்டியின் மரணத்தை விடவும் கவலை அளிப்பதாக இருக்கிறது.

என்னைப் பாதித்த சில மரணங்களை நினைவுகூர்கிறேன்.
னக்கு நினைவு தெரிந்து, அமரரான அரசியல் தலைவர் அறிஞர் அண்ணா. அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் பத்து கி.மீ. தூரத்தில் இருந்த காணை என்கிற கிராமத்தில்தான் அப்போது நாங்கள் வசித்தோம். அண்ணா முதலமைச்சராக இருந்த சமயம் அது. காணை கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பிளாக் டெவலப்மெண்ட் அலுவலகக் கட்டடத்தைத் திறந்து வைப்பதற்காக அண்ணா வந்திருந்தார். BDO அலுவலக வளாகத்தின் உள்ளேயே இருந்த இடத்தில் பெரிய ஷாமியானா பந்தல் போடப்பட்டு, மேடை அமைக்கப்பட்டு, எதிரே பார்வையாளர்களுக்காக ஏராளமான மடக்கு ஸ்டீல் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. என் அப்பா அங்கே பள்ளி ஆசிரியராக இருந்தார். அண்ணாவும் அவரோடு வந்திருந்தவர்களும் மேடையில் அமர்ந்திருக்க, எதிரே முன் வரிசை நாற்காலிகளில் அப்பாவும் மற்ற ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள்.

அண்ணாவின் பெருமை, புகழ் பற்றி எனக்கு அப்போது எதுவும் தெரிந்திருக்கவில்லை. என்றாலும், அவரைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வம். ஆனால், உள்ளே நுழைய முடியவில்லை. கூட்டம் நெருக்கியடித்தது. தவிர, போலீஸ் என் போன்ற சிறுவர்களைக் கிட்டேயே நெருங்க விடாமல் துரத்திவிட்டது. அண்ணாவின் குரலை மட்டும் புனல் ஸ்பீக்கர்களில் தெளிவாகக் கேட்டது ஞாபகம் இருக்கிறது. பிறகு, ஜீப்பில் ஏறிக் கிளம்பினார். கேட் அருகில் நானும் ஓரமாக நின்று அவருக்குக் கையசைத்து விடை கொடுத்தேன். அண்ணாவும் பொதுவாக எங்கள் பக்கம் பார்த்துக் கையசைத்தது, ஏதோ குறிப்பாக என்னைப் பார்த்துக் கையசைத்ததாக எனக்குத் தோன்றியது. சந்தோஷமாக இருந்தது.

அண்ணா முழுதாக இரண்டு ஆண்டுகள்கூட தமிழக முதல்வராக இல்லை. அவருக்கு அறுபது வயது ஆவதற்குள்ளாகவே காலன் அவரை நம்மிடம் இருந்து பிரித்துவிட்டான். வரதன் என்று எனக்கு ஒரு வகுப்புத் தோழன். அவன் அண்ணா மறைந்த அன்று, தன் வீட்டில் சாப்பிடாமல் பட்டினி கிடந்து, அண்ணா படத்தின் முன்பு விளக்கேற்றி வைத்து, நாளெல்லாம் அழுதுகொண்டே இருந்தான். விடிய விடிய அழுதுகொண்டு இருந்தான். மறுநாள் காலையில் அவன் வீட்டுக்குப் போய்ப் பார்த்தபோதும் அழுதபடியேதான் இருந்தான். பின்னர், இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு வந்தான். நான் உள்பட யாரிடமும் அவன் சரியாகவே பேசவில்லை.

அண்ணா எந்த அளவுக்கு ஜனங்களில் நெஞ்சில் பதிந்திருந்தார் என்பதற்கு இது உதாரணம். அண்ணாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னையில் கூடிய கூட்டம்தான், ஒருவரின் மறைவுக்காகக் கூடிய மிக அதிகமான கூட்டம். இது கின்னஸ் ரெக்கார்ட்!
டுத்ததாக, என்னை பாதித்த தலைவரின் மறைவு, தந்தை பெரியாரின் மறைவு. அப்போது நான் விழுப்புரத்தில் பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். என் அப்பா சங்கீதமங்கலம் என்னும் கிராமத்தில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்தார். தந்தை பெரியார் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததுமே பள்ளிக்கு விடுமுறை விட்டுவிட்டார் அப்பா. பெரியார் மந்திரிப் பதவி எதிலும் இல்லாதவர். எனவே, அவர் மறைவுக்கு கல்வித் துறை உயர் அதிகாரியின் அனுமதி இல்லாமல் இப்படித் தன்னிச்சையாக விடுமுறை விடக் கூடாது; சிக்கல்கள் வரும் என்று சக ஆசிரியர்கள் அப்பாவை எச்சரித்தனர். “பெரியார் மறைவுக்காகப் பள்ளிக்கு விடுமுறை விட்டது தவறு என்று என்னை வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்வார்கள் என்றால், செய்துகொள்ளட்டும். எனக்குக் கவலை இல்லை” என்று உறுதியாக விடுமுறை விட்டுவிட்டார். ஆனால், எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை.
வர் மறைந்த இரண்டு வருடங்களில் பெருந்தலைவர் காமராஜர் மறைந்தார். விழுப்புரம் மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி என மூன்றுக்கும் அவர் கையால் பரிசு வாங்கினேன். ஒவ்வொரு முறை என் பெயரை அறிவிக்கும்போதும் ஓடிப் போய் மேடை ஏறி அவரிடம் பரிசு வாங்குவதும், பின்பு கீழே இறங்கி வந்து முன் வரிசையில் தரையில் உட்கார்ந்துகொள்வதும், அடுத்த பரிசுக்காக என்னை அழைக்க, மீண்டும் ஓடிப் போய்ப் பரிசு பெறுவதுமாக இருந்தபோது, அவர் என் தோளைப் பற்றி, “பொடிப்பயலே! இருந்து எல்லாப் பரிசையும் வாங்கிட்டுப் போன்னேன்!” என்று சிரித்துக்கொண்டே சொன்னது கனவு போல இருக்கிறது.
டிகையர் திலகம் சாவித்திரியின் மரணம் என்னை வருத்தப்பட வைத்தது. எனக்குத் தெரிந்து முதன்முதலாக ஒரு சினிமா நட்சத்திரத்தின் மரணம் அது. 1981-ல் அவர் இறப்பதற்கு முன்பு ஒரு வருடமோ அல்லது அதற்கும் அதிகமாகவோ அவர் கோமாவில் இருந்தார். கோமா என்கிற வார்த்தை பரவலாக அப்போதுதான் பரிச்சயமாகியது. வார்த்தை மட்டுமல்ல; அப்படி ஒருவர் இறக்காமல், ஆனால், மயக்க நிலையிலேயே இத்தனைக் காலம் இருக்கமுடியும் என்பதும் அப்போதுதான் தெரிய வந்தது. அவர் உடல் நலம் பெற வேண்டி, ஜெமினி கணேசன் குமுதம் பிரார்த்தனை கிளப் பகுதியில் வாசகர்கள் அனைவரையும் பிரார்த்தித்துக் கொள்ளும்படி கேட்டிருந்தார். நானும் பிரார்த்தித்துக் கொண்டேன். ஆனால், சாவித்திரி கோமாவிலிருந்து மீளாமலேயே இறந்துவிட்டார்.
ன்னைத் திடுக்கிட வைத்த மரணம், பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் மரணம். 1984-ல் நான் முன்னே சொன்ன அதே காணை கிராமத்தில் (என் அப்பா ஆசிரியர் என்பதால், பல ஊர்களுக்கு அடிக்கடி மாறுதல் வரும். 1984-ல் கடைசியாக மீண்டும் காணைக்கு மாறுதலாகி வந்தவர், அங்கேயே தொடர்ந்து எட்டு ஆண்டுகள் வேலை செய்து, பணி ஓய்வு பெற்றார்.) டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் வைத்து நடத்தி வந்தேன். இந்திரா இறந்துவிட்டார் என்பது ரேடியோவில் அவசரச் செய்தியாகச் சொல்லப்பட்டு, நாடே பரபரப்பாகியது. உடனடியாக நான் என் இன்ஸ்டிட்யூட்டுக்கு விடுமுறை விட்டுவிட்டேன். மாலையில் விசேஷ செய்தித்தாள்கள் படங்களுடன் வெளியாகின. பாதுகாவலர்களாலேயே இந்திரா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ‘இப்படியும்கூட நடக்குமா’ என்று நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
சி’ ஷோபாவின் மரணம் இன்றளவும் மர்மமாக இருக்கிறது. அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டாரா, அல்லது அவரைக் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கியதுபோல் செட்டப் செய்தார்களா என்கிற புதிர் விடுபடவில்லை. பாலுமகேந்திராவைக் குற்றவாளியாக்கிச் செய்திகள் வந்தன. அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று ஷோபாவின் தாயார் போலீசில் புகார் கொடுத்தார். கால ஓட்டத்தில் கரைந்துபோய்விட்டது ஷோபாவின் மரணம். அவர் நடித்த பசி, முள்ளும் மலரும், நிழல் நிஜமாகிறது, அழியாத கோலங்கள் போன்ற படங்களை இன்றைக்குப் பார்த்தாலும், ‘அடடா! ஒரு நல்ல நடிகையைத் தமிழ்த் திரையுலகம் இழந்துவிட்டதே!’ என்கிற வருத்தம் உண்டாகத்தான் செய்கிறது.
ன்னால் மட்டுமல்ல, உலகத் தமிழ் மக்கள் எவராலும் வெகு நாள் வரைக்கும் ஒப்புக்கொள்ளவே முடியாத மரணம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மரணம். நான் அப்போது சாவி வார இதழில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். சாவி கலைஞர் அபிமானி. எனவே, வழக்கம்போல் எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கேலி செய்து கட்டுரைகள், கேள்வி பதில்கள், கார்ட்டூன் என சாவி வார இதழைத் தயாரித்து, அந்த லேஅவுட் அட்டைகளை பாஸிட்டிவ் எடுக்க நடராஜா கிராஃபிக்ஸுக்கு அனுப்பிவிட்டு, நான் வீட்டுக்குப் போய்விட்டேன். விடியற்காலையில் எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. பதறிப்போனேன்.

இந்த நிலையில் சாவி இதழ் வெளியானால், அது எத்தனை கெட்ட பெயரைச் சம்பாதிக்கும்! என்ன செய்வதென்று புரியாமல் பதைபதைத்து காலை ஆறு மணிக்கெல்லாம் சைக்கிளில் சாவி சார் வீட்டுக்குப் பறந்தேன். வழியெல்லாம் வன்முறை வெறியாட்டங்கள். தெருவோடு பைக்கில் போகிறவர்களை இறங்கித் தள்ளிக்கொண்டு போகச் சொல்லும் கும்பல்கள், கார் ஹெட்லைட்டை குண்டாந்தடியால் அடித்து உடைக்கும் ரவுடிகள்... சைக்கிளில் சென்ற ஒரு முதியவரை ஒரு 14, 15 வயதுச் சிறுவன் வழிமறித்து, “யோவ் பெர்சு! இறங்கித் தள்ளிட்டுப் போய்யா! இப்படி சைக்கிள் மெறிச்சுக்கினே போனீன்னா ஊடு போய்ச் சேர மாட்டே” என்று அவரது சைக்கிளின் முன் மட்கார்டில் தன் கையிலிருந்த கட்டையால் டொம் என்று ஒரு போடு போட்டுச் சப்பையாக்கினதை என் கண்ணால் பார்த்தேன். அருண் ஹோட்டலிலிருந்து அண்ணா நகர் வரைக்கும் சைக்கிளைத் தள்ளியபடி நடந்தேதான் போகவேண்டியிருந்தது.

நான் வந்ததும், என் பொறுப்பு உணர்வைக் கண்டு மகிழ்ந்தார் சாவி சார். பாராட்டினார். அதே சமயம், “என்ன ரவி! அங்கங்கே கலவரமா இருக்கு. இந்த நிலையில நீ வரணுமா? உனக்கு ஏதாவது ஆகியிருந்தா என்ன பண்றது? நான் பார்த்துக்க மாட்டேனா?” என்றார்.

“சரி சார்! இப்போ பத்திரிகையில எந்தப் பக்கத்தைன்னு நிறுத்தி, வேற தயார் பண்ண முடியும்? ஏதாவது ஒரு பக்கம்னா சமாளிக்கலாம்” என்றேன் புரியாமல்.

“ இந்த வாரம் பத்திரிகையையே நிறுத்த வேண்டியதுதான். வேற வழியில்லே!” என்றார். “பிரஸ்ஸுக்குச் சொல்லிட்டேன், பிரிண்ட் பண்ண வேண்டாம்னு.”

அந்த வார சாவி இதழ் வெளியாகவில்லை. அடுத்த வார இதழில், முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் அமரரானதை முன்னிட்டு, சாவி இதழை அந்த வாரம் நிறுத்தி அஞ்சலி செலுத்தியதாக ஒரு குறிப்பு எழுதிவிட்டார் சாவி.
ராஜீவ் காந்தியின் மரணம் மிகத் துயரமானது. வேதனை நிறைந்தது. நாட்டை அதி விரைவாக முன்னேற்றத் துடித்த ஓர் இளம் தலைவர் அவர். அவரின் படுகொலையிலிருந்துதான், விடுதலைப் புலிகள் மீது தமிழக மக்களுக்கு இருந்த பிடிப்பு அறவே விலகியது. அந்த துர்ச் சம்பவம் மட்டும் நிகழ்ந்திருக்கவில்லையானால், நிச்சயம் இலங்கை அரசியல் வேறு மாதிரியாக அமைந்திருக்கும்.
சில்க் ஸ்மிதாவின் மரணமும் என்னைப் பாதித்த ஒன்று. அவரின் உடல் வனப்பு மீதோ, நடிப்பு மீதோ, ஆட்டத்தின் மீதோ எனக்குச் சற்றும் ஈர்ப்பு இருந்தது இல்லை. சொல்லப்போனால் கொஞ்சம் வெறுப்புக்கூட! ‘சுமங்கலி’ படத்தில் சிவாஜியுடன் நடிப்பார். அவருக்குப் பதிலாக வேறு ஒரு நடிகையை சிபாரிசு செய்தாராம் சிவாஜி. ‘முடியாது. வேண்டுமானால் உங்களுக்குப் பதிலாக வேறு நடிகரைப் போட்டுக் கொள்கிறேன்’ என்றாராம் தயாரிப்பாளர். இப்படி ஒரு செய்தியை வார இதழ் ஒன்றில் படித்ததிலிருந்து சில்க் என்றால் எனக்கு எட்டிக்காய்.

ஆனால், கடைசி சில ஆண்டுகளில், சில்க் ரொம்பவும் நல்லவர் என்றும், வெளியே தெரியாமல் பலருக்கு உதவி வருகிறார் என்றும் கேள்விப்பட்டு, அவர் மீது எனக்கு இருந்த கோபம் சற்றுத் தணிந்திருந்தது. இந்நிலையில்தான் அவரின் தற்கொலை. அது 1996. நான் ஆனந்த விகடனில் சேர்ந்திருந்த புதிது. சுமார் என்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது பேட்டி ‘கடைசி பேட்டி’ என்கிற முக்கியத்துவத்தோடு விகடனில் வெளியானது. விஜயா ஹாஸ்பிட்டலில் வெராண்டாவில் சில்க் ஸ்மிதாவின் உடம்பு கிடத்தப்பட்டிருந்தது என்று போய் வந்த புகைப்பட நண்பர் பொன்ஸீ சொன்னபோது, சில்க் மீது பச்சாத்தாபம் ஏற்பட்டது. எத்தனைப் புகழ் வாய்ந்த நடிகை... அவரின் முடிவு இப்படியா அமைய வேண்டும்!
ன்னைக் கதறி அழச் செய்த மரணம், சாவி சாரின் மரணம். அவரை அப்போலோவில் போய்ப் பார்த்து வந்த அனுபவத்தை விகடனில் எழுதினேன். அதன்பின் கிட்டத்தட்ட இரண்டு வாரம் கோமாவில் இருந்து மரணித்தார் சாவி. பெரியதொரு மாலையை வாங்கிக்கொண்டு அவர் வீட்டுக்குப் போகும் வரைக்கும் திடமாக இருந்தேன். ஹாலில் கிடத்தப்பட்டிருந்த அவர் உடலைக் கண்டதும் மாலையை அவர் மீது போட்டுவிட்டுக் குமுறி அழுதுவிட்டேன். ஓவியர் அரஸ்தான் என்னைத் தூக்கி அப்பால் நகர்த்திப் போய் ஆசுவாசப்படுத்தினார். மகன்கள் வெளிநாடுகளில் இருந்தனர். பெரிய மாப்பிள்ளையே சாவி சாருக்குக் கொள்ளி வைத்தார்.

சாவி சார் கடைசியாகக் கலந்துகொண்ட நிகழ்ச்சி, அவரின் பயோகிராஃபியான ‘சாவி 80’ புத்தக வெளியீட்டு விழா. கலைஞர் தலைமை. நன்றியுரையின்போது, சாவி தமது ஆத்ம நண்பரான கலைஞரை வானளாவப் புகழ்ந்து, நன்றி சொல்லிக்கொண்டு இருந்தபோதே மயங்கி விழுந்து, அவரை உடனடியாக அப்போலோவில் கொண்டு சேர்த்தார்கள். நினைவு வராமலேயே மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டார் என் குருநாதர்.
சிவாஜி கணேசனின் மரணம் என்னைக் கலங்கச் செய்தது. நான் சிவாஜியின் தீவிர ரசிகன் என்கிற ஒரே காரணம்தான். நான் விழுப்புரம் கலைக் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோது, ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சிவாஜியைத்தான் அழைத்திருந்தார்கள். பல மாணவர்களும் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்க, நான் விழா முடிவதற்குள் வெளியேறிச் சென்றுவிட்டேன். சிவாஜியின் வெறி பிடித்த ரசிகனாக இருந்தும், நான் அவரின் ஆட்டோகிராஃப் வாங்காதது சக மாணவர்களுக்கெல்லாம் ஆச்சரியம்! ‘நான் அவரின் நடிப்புக்குத்தான் ரசிகன்; அவரின் ஆட்டோகிராஃபை வைத்துக்கொண்டு நான் செய்யப்போவது ஒன்றுமில்லை!” என்கிற என் உண்மையான பதில் அவர்களுக்குத் திருப்தி தருவதாக இல்லை. நேற்றும் இன்றும் நாளையும்கூட சிவாஜிக்கு மிஞ்சின நடிப்புத் திலகம் இல்லை, இருக்கவும் முடியாது என்பதே என் கருத்து.
டைசியாக, சுஜாதா! எழுத்தாளர் சுஜாதா. அவரை அப்போலோவில் பார்த்து வந்த அனுபவங்களை நான் இந்த வலைப்பூவில் அன்றே எழுதியிருக்கிறேன். அவருடனான பல நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்கள் உண்டு. சாவி காலத்திலிருந்து அவரோடு பழகியவன். நதி போல் ஓடிக்கொண்டு இருந்த தமிழ் நடைக்கு ஒரு மின்சாரம் பாய்ச்சி, ராக்கெட்டாகச் சீறிப் பாய வைத்தவர் சுஜாதா. அவருக்கு சாகித்ய அகாடமி உள்ளிட்ட உயரிய விருதுகள் எதுவும் வழங்கப்படாததில் எனக்கு வருத்தமே! அவரது மரணம் தமிழ் இலக்கிய உலகுக்கு நிச்சயமாக ஒரு பேரிழப்பு.

நம்பியார், நாகேஷ், பிரபாகரன், மைக்கேல் ஜாக்சன் எனப் பல பிரபலங்கள் மரணமடைந்துகொண்டே இருப்பதைப் பார்க்கிறேன். சிலர் தன் பணி முடிந்து, ஓய்வு பெற்றவர்கள். சிலர் பணி முடிவதற்குள்ளாகவே டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள். மரணத்துக்குதான் நல்லவன், கெட்டவன், வேண்டியவன், வேண்டாதவன் என்கிற பேதமெல்லாம் இல்லையே!
.

4 comments:

உங்களுக்கு சுவாரசிய பதிவர் என்று ஒரு விருது கொடுத்திருக்கிறேன். அருமையாக எழுதுவதற்கு என் பாராட்டுகள். ஏற்கனவே இந்த விருது கொடுக்கப்பட்டிருந்தால் என் கவனக் குறைவுக்கு மன்னியுங்கள். :-)

http://koottanchoru.wordpress.com/2009/09/12/சுவாரசிய-பதிவர்-விருது/

அன்புடன்
ஆர்வி
 
படித்து முடித்ததும்" நினைவில் நின்றவர்களை நினைவில் நிறுத்திய மிக நல்ல பதிவு "என்று பின்னூட்டம் போட வேண்டும் என்று நினைத்து இதோ போட்டு விட்டேன் .

ரேகா ராகவன்
 
நல்ல தொகுப்பு.
 
பாதித்த மரணங்களைப் பற்றிய நினைவுகளும் பாதித்தன. சற்று நேரம் அமைதியாக அப்படியே இருக்க வைத்தது. சிறந்த பதிவு. -- கே. பி. ஜனா