உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, September 16, 2009

எனையாண்ட இசை அரசர்கள்... அரசிகள்!

னிதனை மனிதனாக வாழ வைத்துக்கொண்டு இருப்பவை கலைகள்தான். கலைகள் மட்டும் இல்லையென்றால், மனிதனுக்கும் மிருகத்துக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. ஓவியம், நடனம், இசை, இலக்கியம், நடிப்பு, எல்லாம் கலந்த திரைப்படம் என அடிப்படைக் கலைகள் ஏழெட்டு உள்ளன. அத்தனைக் கலைகளிலும் என்னை மிகவும் ஈர்ப்பது இசைக் கலைதான். என்னை அதிகம் சந்தோஷப்படுத்துவது இசைக் கலைதான். இசையை ரசிக்க எந்த அறிவும் தேவையில்லை; எந்த புத்திசாலித்தனமும் தேவையில்லை. காதுகள் பழுதடையாமலிருந்தால் போதுமானது! உட்கார்ந்த இடத்திலிருந்தபடியே சொர்க்கத்தில் உலாவிவிட்டு வரலாம்.

டி.எம்.சௌந்தரராஜன்:
என்னைக் கவர்ந்த இசை அரசர்கள், இசை அரசிகள் என்று இந்தப் பதிவை எழுதத் தொடங்கும்போதே இசை அரசர்களுக்கெல்லாம் அரசராக, இசைச் சக்கரவர்த்தியாக, ஏழிசை வேந்தராக என் நினைவில் முதலாவதாக வந்து நிற்பவர் திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள்தான். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து, அதாவது 40 வருடங்களாக அவரின் பாடல்களைக் கேட்டு ரசித்து வருகிறேன். இன்னமும் அலுக்கவில்லை. அவரை நேரில் சந்தித்து, அவரின் அன்புக்குப் பாத்திரமானதை என் பாக்கியமாகக் கருதுகிறேன். அவரைப் பற்றி இந்த வலைப்பூவில் நிறையவே முன்பு எழுதியிருக்கிறேன். சமயம் வரும்போது இன்னும் எழுதுவேன்.

சீர்காழி கோவிந்தராஜன்:
இவரின் திருப்பதி வேங்கடாசலபதி பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘திருப்பதி மலை வாழும் வெங்கடேசா...’ என்று எங்களூர் சினிமா கொட்டகையில் இவர் குரலெடுத்துப் பாடினால், படம் தொடங்கப்போகிறது என்று அர்த்தம். ‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்...’ என்று இவர் உச்ச ஸ்தாயியில் சொல்லும்போது நம்பாமல் இருக்க முடியவில்லை. ‘சாட்டைக் கையில் கொண்டு காளை ரெண்டு...’ என்று இவர் அவசர கதியில் பாடிய பாடலும், ‘சிவசங்கரி...’ பாடலின் இறுதியில் ‘திருதிருதோம்...’ என்று படு ஸ்பீடாக இவர் உச்சரிக்கும் ஸ்வரப்பிரஸ்தாரங்களும் அற்புதமானவை. இவரின் ‘சமரசம் உலாவும் இடமே’ பாடலைக் கேட்டால், நாமே ஒரு சித்தராக, ஞானியாக ஆகிவிட்டது போன்ற எல்லாம் கடந்த பற்றற்ற நிலைக்கு ஆளாவோம்.

சின்ன வயதில் இவரின் இரண்டு பாடல்களை நான் டி.எம்.எஸ். பாடியது என்று நினைத்திருக்கிறேன். அற்புதமான அந்தப் பாடல்களில் ஒன்று, ‘வணங்காமுடி’ படத்தில் இடம்பெறும் ‘மலையே உன் நிலையை நீ பாராய்... கலைஞன் கை உளியாலே காவியச் சிலையான மலையே உன் நிலையை நீ பாராய்’ பாடல். படத்தில் சிவாஜி பாடும் பாட்டு இது. மற்றொரு பாடல், ‘மாம்பழத் தோட்டம், மல்லிகைக் கூட்டம், மணக்க வரும் மாலைப் பொழுதோடு...’. எம்.ஜி.ஆர். படப் பாடல் இது. என்ன படம் என்று நினைவில்லை.

சி.எஸ்.ஜெயராமன்:
வயதான குரலாக ஒலித்தாலும், அதில் கம்பீரமும் மிடுக்கும் இருக்கும். சிவாஜியை மனதிலிருந்து ஒதுக்கிவிட்டுக் கேட்டால், இவரின் ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...’, ‘அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம்’, ‘காவியமா, ஓவியமா’, ‘நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே’ ஆகிய பாடல்கள் எல்லாமே எனக்குப் பிடித்தமானவைதான். சம்பூர்ண ராமாயணத்தில் ராவணனுக்கு இவர் பாடிய பாடல்கள் அதி அற்புதமானவை. ‘இன்று போய் நாளை வா என, எனை ஒரு மனிதன் புகலுவதோ’ என்று பெரிய சிவன் சிலையின் காலடியில் அமர்ந்து ராவணனாக டி.கே.பகவதி பாடும்போது, ஒரு மாவீரனின் கம்பீரமும், அதே சமயம் தோல்விமுகத்தில் இருக்கிற கழிவிரக்கமும் சி.எஸ்.ஜெயராமனின் குரலில் சேர்ந்து ஒலிக்கும். ராகங்களைக் குறிக்கும் பாடலும் அருமைதான். இவையெல்லாவற்றையும்விட நான் திரும்பத் திரும்பக் கேட்டு ரசிப்பது ‘ரத்தக்கண்ணீர்’ படத்தில் எம்.ஆர்.ராதாவின் குரலுடன் சேர்ந்து ஒலிக்கும் ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது’ பாடல்தான்!

பி.பி.ஸ்ரீனிவாஸ்:
உருக்கமான பாடல்களை இவர் பாடிக் கேட்கும்போது உண்டாகும் பரவசமே தனி! பேசும்போது கணீரென்று, கம்பீரமாக ஒலிக்கும் இவர் குரல் பாடும்போது மட்டும் மென்மையாகக் குழைவது எனக்கு ஓர் ஆச்சரியம்! ஜெமினி கணேசன், பாலாஜி போன்றோருக்கு இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே எனக்குப் பிடிக்கும். இந்திப் பாடகர் கிஷோர்குமாரின் பாடல்களில் ஒரு சிறப்பம்சம் உண்டு. பாடிக்கொண்டு இருக்கும்போதே ‘ஹைலுலு ஹைலுலு ஹைலுலூ...’ என்று குரலை உருட்டுவார். ‘ஜிந்தகி ஏக்சஃபர் ஹைசுஹானா...’ பாடலில் இந்த குரல் வித்தையைச் செய்வார். இது ‘யோட்லிங்’ எனப்படும். இப்படிப் பாடுவது கஷ்டம். தமிழில் அந்த வித்தையைச் செய்து காட்டியவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்தான்!

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்:
மிகவும் மென்மையான குரலுக்குச் சொந்தக்காரர். இவர் பாடிய பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அடிமைப்பெண்ணில், ‘ஆயிரம் நிலவே வா...’, வீட்டுக்கு வீடு படத்தில் ‘அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம் மங்கை இவள் முகம் நவரச நிலவு’, சுமதி என் சுந்தரியில் ‘பொட்டு வைத்த முகமோ’, ராஜா படத்தில் ‘இரண்டில் ஒன்று, நீ என்னிடம் சொல்லு’, ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’யில் ‘உச்சி வகிர்ந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி’, ‘நியூ’ படத்தில் ‘சக்கர இனிக்கிற சக்கர’, ‘சந்திரமுகி’யில் ‘தேவுடா தேவுடா’, லேட்டஸ்ட்டாக ‘சிவாஜி’யில் ‘பல்லேலக்கா’ என நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். பி.பி.ஸ்ரீனிவாசுக்குப் பிறகு தமிழில் கிஷோர்குமாரின் அந்த ஹைலுலு குரல் வித்தையைச் செய்து காட்டியவர் எஸ்.பி.பி.தான். ‘காலங்களில்... ராகங்களில்...’ பாட்டைக் கேட்டிருந்தால் தெரியும். இவர் இந்தியில் பாடிய, குறிப்பாக லதா மங்கேஷ்கரோடு இணைந்து பாடிய ‘ஹம் ஆப்கே ஹைன் கோன்’ பாடல்கள் அனைத்துமே எனக்குப் பிடிக்கும்.

இளையராஜா:
இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி இவரை ஒரு பாடகராகவும் எனக்குப் பிடிக்கும். ‘ஓரம்போ... ஓரம்போ... ருக்குமணி வண்டி வருது’, ‘ஒரு மஞ்ச குருவி என் நெஞ்சைத் தழுவி...’, ‘சாமக்கோழி ஹேய் கூவுதம்மா’ எனப் பல பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டு ரசித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் ஏதோ ஒரு பத்திரிகை பேட்டியில் இவர் ‘டி.எம்.எஸ்ஸுக்கு சரியான பாவத்தோடு பாடத் தெரியவில்லை’ என்று சொல்லியிருந்ததைப் படித்ததிலிருந்து, ‘என்ன இப்படிச் சொல்லியிருக்கிறார்? டி.எம்.எஸ்ஸுக்குப் பாவத்தோடு தெரியவில்லை என்றால், வேறு யாருக்குத் தெரியும்? இவர் இதை மனப்பூர்வமாகத்தான் சொல்லியிருக்கிறார் என்றால், இவர் சிறந்த இசையமைப்பாளர்தானா என்பதே சந்தேகம்தான்!’ என்கிற கோபம் எழுந்ததில், அதன்பின் அவர் இசையமைக்கும் பாடல்களில் எல்லாம் குறையே தெரிந்தது எனக்கு. டி.எம்.எஸ்ஸும் படவுலகை விட்டு ஒதுங்கி, ரொம்ப காலம் கழித்துதான் மீண்டும் இளையராஜாவின் இசையை ரசிக்கத் தொடங்கினேன். சமீபத்தில் விகடனில் வெளியான டி.எம்.எஸ்-இளையராஜா சந்திப்புக் கட்டுரையில், ‘தமிழ் சினிமாவில் ஒரே ஒரு ஆண் குரல் டி.எம்.எஸ். குரல்தான்!’ என்று இளையராஜா மனம்விட்டுச் சொன்னதிலிருந்து பழையபடி இளையராஜாவின் ரசிகனாகிவிட்டேன்.

இன்னும் எம்.கே.டி.பாகவதர், ஏ.எம்.ராஜா, டி.ஆர்.மகாலிங்கம், திருச்சி லோகநாதன் என எனக்குப் பிடித்த பாடகர்கள் பலரைப் பற்றியும் சொல்லலாம். இந்திப் பாடகர்களில் நான் அதிகம் விரும்பிக் கேட்பது கிஷோர் குமார், உதித் நாராயணன் (இவர் இங்கேயும் வந்து தமிழைக் கடித்துத் துப்புவதைத்தான் சகிக்க முடியவில்லை), சுக்வீந்தர் சிங் ஆகியோரின் பாடல்களை.

பி.சுசீலா:
இசை அரசிகளுக்கு வருவோம். சந்தேகமில்லாமல் முதலிடத்தில் இருப்பவர் பி.சுசீலாதான். டி.எம்.எஸ் பாடியவற்றில் என்ன பாட்டு பிடிக்கும் என்று கேட்டால், எதைச் சொல்வது, எதை விடுவது என்று எனக்குக் குழப்பம் வரும். அப்படி அத்தனையுமே பிடித்தமான பாடல்கள்தான். அதுபோல பி.சுசீலாவின் பாடல்களிலும் எந்த பாட்டைச் சொல்வது, எதை விடுவது என்று எனக்குத் தெரியவில்லை. ‘ராதையின் நெஞ்சமே, கண்ணனுக்குச் சொந்தமே’ பாட்டிலிருந்துதான் பி.சுசீலாவைப் பிரத்தியேகமாகக் கேட்கத் தொடங்கினேன். அந்தப் பாடல் என்னை எங்கோ இழுத்துக்கொண்டு போனது போல் உணர்ந்தேன். அந்தப் பாடலின் ராகமா, பி.சுசீலாவின் குரல் வளமா எதுவென்று தெரியவில்லை... என்னை மயக்கத்தில் ஆழ்த்தியது. ‘மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ...’, ‘ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்’ என்று சொல்லிக்கொண்டே போகலாம். பி.சுசீலாவின் பாடல்களில் அவர் இழுக்கும் ராக ஆலாபனை அதியற்புதமாக இருக்கும். விதவிதமான சிரிப்புகளையே ராகமாக இசைப்பார். ஓர் உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், ‘வாராயோ வெண்ணிலாவே’ பாட்டைச் சொல்லலாம். இது போல இன்னும் நிறையப் பாடல்கள்!

மற்ற எந்தப் பாடகிக்கும் இல்லாத ஒரு சிறப்பு இவரிடம் உண்டு. டி.எம்.எஸ். எப்படி எம்.ஜி.ஆருக்கு, சிவாஜிக்கு, ஜெய்சங்கருக்கு என நடிகர்களுக்கேற்பத் தன் குரலையும் பாணியையும் மாற்றிப் பாடினாரோ, அதே போல நடிகைகளுக்கு ஏற்பத் தன் குரலையும் பாணியையும் மாற்றிப் பாடியவர் பி.சுசீலா. ஆனால், இதை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆண் குரலில் கம்பீரமும், குழைவும் மாற்றிக் கொடுக்க முடிகிற அளவுக்குப் பெண் குரலில் சாத்தியம் இல்லை. என்றாலும், தன்னால் முடிந்தவரை அதைச் சாத்தியப்படுத்திக் காட்டியிருப்பார் பி.சுசீலா. அவர் சரோஜாதேவிக்குப் பாடுகிறபோது அதில் ஒரு கொஞ்சல் இருக்கும்; அதுவே தேவிகாவுக்குப் பாடுகிறபோது அதில் அத்தனைக் குழைவு இருக்காது. ஜெயலலிதாவுக்குப் பாடுகிறபோது அதில் ஒரு மிடுக்கு தெரியும். பி.சுசீலா ஒவ்வொரு நடிகைக்கும் பாடிய பாடல்களைத் தனித் தனித் தொகுப்புகளாகப் பிரித்துக்கொண்டு கேட்டால், நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும். உதாரணத்திற்குச் சில பாடல்களைச் சொல்கிறேன். ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ பாட்டில் ஜெயலலிதாவுக்கே உரிய மிடுக்கு பி.சுசீலாவின் குரலில் ஒலிப்பதைக் கவனியுங்கள். ‘லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்... தகதிமிதா’ பாட்டில் சரோஜாதேவியின் கொஞ்சல் இருப்பதைக் கவனியுங்கள். ‘அழகே வா... அலையே வா’ பாடலில் தேவிகா களை கட்டுவது தெரிகிறதா? அவ்வளவு ஏன்... ‘அழகிய தமிழ் மகள் இவள்...’ பாடலில், ‘கோவை இதழ் இதோ இதோ... கொஞ்சும் கிளி அதோ அதோ’ என்று பி.சுசீலா பாடும்போது மஞ்சுளா மாதிரியே இருக்கிறதே! ஹேட்ஸ் ஆஃப் பி.சுசீலா!

எல்.ஆர்.ஈஸ்வரி:
மின்சாரக் குரல் இவருடையது. இந்தப் ‘பட்டத்து ராணி’யை இந்தி லதா மங்கேஷ்கராலும் கிட்டே நெருங்க முடியவில்லை. இவர் பாடிய ஒவ்வொரு பாட்டுமே ‘விர்’ரென்று நரம்புகளில் போதை ஊசியை ஏற்றுவது போலிருக்கும். ‘வந்தாள் என்னோடு...’, ‘அடி என்னடி உலகம்’ எனச் சொல்லிக்கொண்டே போகலாம். எலந்தப்பயத்துக்கு ஈடு இணை உண்டா? ‘முப்பது பைசா மூணு முழம்...’ இன்னும் முப்பது வருடங்களுக்குத் தாங்கும். ‘நானென்பதென்ன... நீ என்பதென்ன...’ என்று இவர் நிதானமாகப் பாடியதுகூட என்னைக் கிறங்கடித்தது. ‘காதோடுதான் நான் பேசுவேன்’ பாட்டில் எத்தனை ஈரம்? இவர் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிக அமைதியாகப் பாடிய பாடல், ‘தபால்காரன் தங்கை’ படத்தில் வரும் ‘தெரிஞ்சுக்கோ... ஐயா தெரிஞ்சுக்கோ! கொஞ்சம் போகட்டும், மனசு மாறட்டும்...’ என்கிற பாடல். அதே படத்தில் இவர் பாடியிருக்க வேண்டிய ஒரு கிளப் பாடலை பி.சுசீலா பாடியிருப்பார். அந்தப் பாடல் என்னவென்று மறந்துபோய்விட்டது. எல்.ஆர்.ஈஸ்வரியின் பாட்டுதான் ஞாபகத்தில் இருக்கிறது.

தவிர, ‘செல்லாத்தா, எங்க மாரியாத்தா’, ‘தாயே கருமாரி, எங்கள் தாயே கருமாரி’, ‘உலகாளும் உமையவளே உன் பாதம் பணிந்து நின்றேன்’, ‘கற்பூர நாயகியே கனகவல்லி’, ‘வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்’ என இவர் பாடிய அம்மன் பாடல்கள் அத்தனையும் பக்தி ரசம்!

எஸ்.ஜானகி:
‘சிங்கார வேலனே, தேவா’வில் நாதஸ்வரத்தோடு போட்டி போட்டுப் பிரமிக்க வைத்த குரல் இவருடையது. ’வசந்த காலக் கோலங்கள், வானில் விழுந்த கோடுகள்’ என்கிற இவருடைய பாடல் பி.சுசீலாவின் ‘ராதையின் நெஞ்சமே’வுக்குச் சமம். ‘ஆழக் கடலில் தேடிய முத்து...’, ‘ராசாவே... உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க’ போன்ற பாடல்கள் எல்லாம் மனசைப் பிசைபவை. ‘கண்ணா நீ எங்கே’ பாட்டை மழலையான குழந்தைக் குரலில் பாடி அசத்தினார். ‘டாடி டாடி, ஓ மை டாடி’ என்று மௌனகீதங்களில் கொஞ்சம் வளர்ந்த பையன் குரலில் பாடி ஆச்சரியப்படுத்தினார். ‘முதல்வனே... வனே... வனே...’வுக்குப் பிறகு ஏதாவது பாடியிருக்கிறாரா என்று தெரியவில்லை. இந்தி ஆஷாபோன்ஸ்லே குரலும் இவர் குரலும் ஒன்றே போல் இருப்பது ஆச்சரியம்!

வாணிஜெயராம்:
ஸ்பஷ்டமான ஸ்வர நிரவல்களோடு பாடுவதில் திறமைசாலி. இவரின் பாடல்கள் பெரும்பாலும் நம்மால் பாடிப் பார்க்க, அவ்வளவு ஏன், ஹம்மிங் செய்து பார்க்கக்கூட முடியாத அளவுக்குக் கஷ்டமாக இருக்கும். எப்படி இந்தப் பாடலை இவர் இத்தனைச் சுலபமாகப் பாடியிருக்கிறார் என்று இவரின் ஒவ்வொரு பாடலைக் கேட்கும்போதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ‘மேகமே... மேகமே... பால் நிலா தோன்றுதே’ என்று இவர் பாடிய பாடலை மனசுக்குள்கூட அதே பாவத்தில் என்னால் பாடிப் பார்க்க முடியவில்லை. இதற்காகத்தானோ என்னவோ, எந்தக் கஷ்டமுமே இல்லாமல் ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு, நெய் மணக்கும் கத்திரிக்கா...’ என்று இவரைப் பாட வைத்து அழகு பார்த்தார் இளையராஜா.

சித்ரா:
பி.சுசீலாவைப் போன்ற இதமான குரல் வளம். ‘சின்னக்குயில் பாடும் பாடல் கேட்குதா’ தொடங்கி, ‘ஒவ்வொரு பூக்களுமே’ வரையில் இவர் பாடிய அத்தனைப் பாடல்களுமே அமிர்தம்தான்!

இன்னும் ஜமுனா ராணி, ஜிக்கி, எஸ்.பி.ஷைலஜா, ஜென்ஸி, பி.எஸ்.சசிரேகா என சிறப்பாகப் பாடும் பாடகிகள் பட்டியல் நீண்டது. பாடகர்களில் ஒரு சி.எஸ்.ஜெயராமன் போல பாடகிகளில் கே.பி.சுந்தராம்பாள் குரல் மிடுக்கும் கம்பீரமும் கொண்டது. ‘ஞானப்பழத்தைப் பிழிந்து...’, ‘பழம் நீயப்பா’, ‘ஏழுமலை இருக்க எனக்கென்ன மனக்கவலை...’, ‘சென்று வா மகனே சென்று வா’ என இவர் பாடிய ஒவ்வொரு பாடலுமே உணர்ச்சி கொப்பளிக்கும் ரகம்.

ன்றைக்குப் பாடுகிறவர்களும் எந்தக் குறையுமில்லாமல் மிக அருமையாகத்தான் பாடுகிறார்கள். பழைய பாடகர்கள் போல யார் எந்தப் பாட்டைப் பாடுகிறார் என்று எனக்கு இனம் காணத் தெரியவில்லை. ஓரளவு சுசித்ராவின் குரல் புரிகிறது. மற்றபடி சாதனா சர்கம், ஸ்ரேயா கோஷல், மதுஸ்ரீ எனப் பலர் பாடுகிறார்கள். பாடகர்களிலும் ரமேஷ் ஐயர், கார்த்திக், கே.கே. என்று பெயர்கள் கேள்விப்படுகிறேன். பாட்டைக் குறை சொல்லலாமே தவிர, இவர் பாடியதால் கெட்டது என்று ஒரு பாடலும் இல்லை. வஞ்சனையில்லாமல் அத்தனை பேருமே அற்புதமாகப் பாடுகிறார்கள்.

‘டாடி மம்மி வீட்டில் இல்லே...’ என்கிற பாட்டில், ‘தக்...தக்...தங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானே...’ என்று பாடகியின் குரல் ஏறி இறங்கி குதியாட்டம் போடுகிறது. ‘மியாவ் மியாவ் பூனே...’ பாடலும் ரசனையாகத்தான் இருக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜ், தேவிஸ்ரீபிரசாத், விஜய் ஆண்டனி என்று திறமையான இசையமைப்பாளர்களுக்கும் பஞ்சமில்லை. நா.முத்துக்குமார், பா.விஜய் போன்ற திறமையான பாடலாசிரியர்களும் இருக்கிறார்கள்.

ஆனாலும், அந்தக் கால கண்ணதாசன் பாடல்களைப் போல உள்வாங்கி மகிழக்கூடிய பாடல்கள் இன்றைக்கு உண்டா? இருந்தால் எனக்குச் சொல்லுங்கள்! கேட்டு ரசிக்கிறேன்.
.

11 comments:

போவோமா ஊர்கோலம் பாடியவர் ஸ்வர்ணலதாவாச்சே ?
 
அன்புள்ள திரு.எஸ்.ஆர்.கே., தாங்கள் புது வரவா? தங்களுக்கு அன்பான வரவேற்பு! ‘போவோமா ஊர்கோலம்’ பாடியவர் ஸ்வர்ணலதாதான். நான் முடிக்கவே இல்லை. அதற்குள் ‘கோலங்கள்’ சீரியல் ஆரம்பித்துவிட்டதென்று அவசரமாக அடித்தவரையில் (ஒருமுறை சரிபார்க்காமல்) அப்படியே பப்ளிஷ் போட்டுவிட்டுப் போய்விட்டேன். எனினும், தங்கள் கருத்தைப் பின்னூட்டத்தில் சேர்த்துள்ளேன். இத்தனை விரைவாக எனது பதிவைப் படித்துத் தங்கள் கருத்தைத் தெரியப்படுத்தியது உண்மையிலேயே என்னை மகிழச் செய்கிறது. நன்றி! நன்றி!
 
//ஆனாலும், அந்தக் கால கண்ணதாசன் பாடல்களைப் போல உள்வாங்கி மகிழக்கூடிய பாடல்கள் இன்றைக்கு உண்டா? இருந்தால் எனக்குச் சொல்லுங்கள்! கேட்டு ரசிக்கிறேன். - ரவிபிரகாஷ்//

ஆனாலும், அந்தக் கால கண்ணதாசன் பாடல்களைப் போல உள்வாங்கி மகிழக்கூடிய பாடல்கள் இன்றைக்கு உண்டா? இருந்தால் எனக்குச் சொல்லுங்கள்! கேட்டு ரசிக்கிறேன். - அ. நம்பி
 
SRK புதியவர் இல்லையே! சத்யராஜ்குமார் தான். ஏற்கனவே உங்கள் வலைப்பதிவில் பின்னூட்டம் இட்டுள்ளாரே! எல்லா பின்னணி பாடகர்கள்/பாடகிகள் பற்றிய தங்களின் கணிப்பு அருமை.

ரேகா ராகவன்.
 
பதியம் இட்டிருந்த பழைய பாடல்களை உங்கள் பதிவின் மூலம் இந்த மதியம் புதுப்பித்துக் கொண்டேன் மனதில்.
-கே.பி.ஜனா.
 
அருமை. தொடர் பதிவா போட்டு இருந்தால் பொறுமையாக படிக்கலாம்.

மீண்டும் படித்து விட்டு வருகிறேன்.
 
டி.எம்.எஸ்.-பி.சுசீலா காம்பினேஷனில் வந்த எல்லாப் பாடல்களுமே காவியம்தான்! பதிவுக்கு நன்றி!
 
கிருபாநந்தினி
இசையால் நம்மையெல்லாம் கவர்ந்திழுத்தவர்களை அழகாய் விவரித்திருக்கிறீர்கள். நன்றி பிரகாஷ்...

இவர்களைப்போல் மீண்டும் இன்றிருக்கும் சூழலில் எவரும் வருவதற்கு சாத்தியமில்லை.

மிக நல்ல பதிவு...

பிரபாகர்.
 
திரு.அ.நம்பி: தங்களின் பின்னூட்ட பாணியை ரசித்தேன். என்றாலும், ‘அந்தக் கால... அந்தக் கால...’ என்றால், ‘பெரிசுங்களுக்கு வேற வேலையில்லை’ என்பது மாதிரி சிறுசுங்க நினைச்சுடப் போறாங்க!

திரு.ராகவன்: ஆமாம்! எஸ்.ஆர்.கே. மெயில் அனுப்பியிருந்தார்.

திரு.கே.பி.ஜனா: பதியம் - மதியம்; தாங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறீர்கள்!

திரு.சூர்யா: தொடர் பதிவாகத்தான் போடணும்னு நினைச்சேன் சூர்யா! பொறுமை இல்லை. ஒட்டுமொத்தமா சுருக்கிப் போட்டுட்டேன்.

கிருபாநந்தினி: டி.எம்.எஸ் - பி.சுசீலா காம்பினேஷன் என்று தாங்கள் குறிப்பிட்டதைப் படித்த பின்புதான் பி.சுசீலா பற்றிய என் முக்கிய கருத்து ஒன்றைக் குறிப்பிட மறந்து போனது நினைவுக்கு வந்தது. பி.சுசீலா பற்றிய குறிப்பில் அதை இப்போது கடைசி பாராவாகச் சேர்த்துள்ளேன். நன்றி!

பிரபாகர்: பின்னூட்டத்துக்கு நன்றி பிரபாகர்!
 
மிகவும் நன்று
 
இசை ஜாம்பாவன்களை ரசித்த தாங்களும் ஒரு ரசிக ஜாம்பவான் தான் சந்தேகமில்லை. பாலுஜி மீது தாங்கள் வைத்துள்ள அன்பு என்னை புல்லரிக்க செய்துவிட்டது. மிக்க நன்றி.

pls visit. www.myspb.blogspot.com and http://paasaparavaikal.blogspot.com