நான் அப்போது ஐந்தாம் வகுப்போ ஆறாம் வகுப்போ படித்துக்கொண்டு இருந்ததாக ஞாபகம். பத்திரிகைகளில் நகைச்சுவைத் துணுக்குகள் மட்டும் படிப்பதுண்டு. அதிலும் பல புரியாது.
தினமணி கதிரில் ஒரு சின்ன அறிவிப்பு பார்த்தேன். 'பெட்டி வந்துவிட்டது; சாவி வரவில்லை. எனவே, கட்டுரை அடுத்த இதழில்தான் ஆரம்பமாகும்.'
எனக்கு இது புரியவில்லை. என் தந்தையிடம் கேட்டேன். அவர் சொன்னார்... 'சாவி என்ற பெயரில் ஒரு பத்திரிகையாளர் இருக்கிறார். அவர் குறிப்பிட்ட பிரமுகரை பேட்டி காண டெல்லி போயிருக்கிறார். அவர் இன்னும் சென்னை வந்து சேரவில்லை. அவர் வந்ததும் கட்டுரை எழுதத் தொடங்குவார் என்பதைத்தான் அப்படிப் புதுமையாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்'.
சாவி டெல்லி போனாரா, மும்பை போனாரா அல்லது முஜிபுர் ரஹ்மானைப் பேட்டியெடுக்க பாகிஸ்தான் போனாரா என்பதெல்லாம் சரியாக நினைவில் இல்லை. ஆனால், 'பெட்டி வந்துவிட்டது; சாவி வரவில்லை' என்கிற அந்தப் புதுமையான அறிவிப்பு மட்டும் அழுத்தமாக மனதில் பதிந்திருக்கிறது. அன்றிலிருந்தே சாவி என்கிற அந்த மாமனிதர் மீது எனக்குப் பெரிய இமேஜ் விழுந்துவிட்டது. பின்னாளில் அவரிடமே நான் நேரடியாக ஜர்னலிசம் பயிலப் போகிறேன் என்று எனக்கு அப்போது தெரியாது.
சாவி பத்திரிகையில் சேர்ந்து, அவரிடம் மூன்று முறை கோபித்துக்கொண்டு வேலையை உதறிவிட்டு வெளியேறி, வேறு பத்திரிகையில் பணியாற்றி, பின்னர் மீண்டும் அவரிடமே சேர்ந்த கதைகள் உண்டு. அவற்றில், இரண்டாவது முறை நான் வெளியேறியபோது சேர்ந்த பத்திரிகை அமுதசுரபி.
சாவியில் கிடைத்த சம்பளம் அதில் கிடைக்கவில்லை. சம்பளத்தில் மர்மம் என்ன வேண்டிக் கிடக்கிறது? சாவியில் மாசச் சம்பளம் 1,000 ரூபாய். அமுதசுரபியில் எனக்குக் கிடைத்தது 750 ரூபாய்.
இதற்கிடையில், போலீஸ் செய்தி, மின்மினி ஆகிய பத்திரிகைகளை நடத்திக் கொண்டு இருந்தவர் தனது மேனேஜரை அனுப்பி என்னை அழைத்து வரச் சொன்னார். போயிருந்தேன். 'மின்மினி பத்திரிகையைப் பார்த்துக்கொள்ள ஒரு ஆசிரியர் தேவை. நீங்கள் வருகிறீர்களா?' என்று என்னைக் கேட்டார். 'வருகிறேன்' என்றேன்.
'சம்பளம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?' என்றார்.
அதிகபட்சமாக அப்போது என் வாயில் வந்த தொகை 1,500 ரூபாதான். அதைச் சொன்னேன். ஆனால் குறிப்பாக இன்னொன்றும் சொன்னேன்... 'சம்பளம் எனக்கு ஒரு பொருட்டில்லை. ஆனால், பத்திரிகை இம்ப்ரின்ட்டில் பொறுப்பாசிரியர் என்று என் பெயரைப் போடவேண்டும்' என்றேன்.
சம்மதித்தார்.
சந்தோஷமாக விடைபெற்று வீடு வந்தேன். மறுநாள் அமுதசுரபி அலுவலகத்தில் ஆசிரியர் விக்கிரமன் அவர்களிடம் (மனசுக்குள் சற்று மிதப்பலாக) என் ராஜினாமா கடிதத்தை நீட்டினேன். மின்மினி பத்திரிகையின் பொறுப்பாசிரியர் ஆகவிருப்பதைச் சொன்னேன்.
'எங்கிருந்தாலும் வாழ்க' என்று வாழ்த்தி, 'அங்கே ஏதாவது பிரச்னை என்றால், நீங்கள் யோசிக்காமல் இங்கே மீண்டும் வரலாம். அமுதசுரபியின் கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும்' என்றார் விக்கிரமன்.
மறுநாள், கையில் வழக்கம்போல் ஒரு டிபன் பாக்ஸில் சாப்பாடு எடுத்துக்கொண்டு, பஸ் பிடித்து, யானை கவுனி போனேன். அங்கேதான் பழநியப்பா தியேட்டர் அருகில் போலீஸ் செய்தி பத்திரிகை அலுவலகம் இருந்தது.
கீழேயே காத்திருக்க வைத்தார்கள். முதலாளி பூஜையில் இருக்கிறார் என்றார்கள். சுலபத்தில் சந்திக்க முடியவில்லை. எனக்கு உள்ளுக்குள் எதோ குறுகுறுவென்றது.
மூன்று மணி நேரம் காத்திருந்த பிறகு, மேலே அழைத்தார். போனேன்.
'சம்பளம் எல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்லை. ஆனா, பொறுப்பாசிரியர்னு உங்க பேரைப் போடறதுல சிக்கல் இருக்கு. அது மட்டும் முடியாது. மத்தபடி இன்னிக்கே பொறுப்பு ஏத்துக்குங்க. நல்ல வேலை செய்யுங்க' என்றார்.
'மன்னிக்கணும். நான் முன்னேயே தீர்மானமாகச் சொன்னேன், சம்பளம் எனக்குப் பிரச்னை இல்லை. பெயர்தான் முக்கியம் என்று. இம்ப்ரின்ட்டில் என் பெயரைப் போடுவீர்களா, மாட்டீர்களா?' என்று கேட்டேன்.
'சாரி, அது முடியாது!' என்றார்.
'மன்னிக்கணும். என்னாலும் இந்த வேலையை ஏத்துக்க முடியாது' என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
செந்திலை நம்பி கவுண்டமணி வேலையை உதறிவிட்டு, அங்கே ஏமாந்ததும் மீண்டும் கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டே நம்பியார் முன் போய் தலையைச் சொறிந்தபடி நிற்பாரே, அப்படியாகிவிட்டது என் நிலைமை.
அப்போதுதான் மகாஸ்ரீ அன்னையிடம் முதன்முதலாக என் வேண்டுதலை ஒரு சவாலாக முன்வைத்தேன்.
'அம்மா... உண்மையிலேயே நீங்கள் அருள் தரும் அன்னை என்றால், எனக்கு 1,500 ரூபாய் சம்பளத்தில், குறிப்பாக பொறுப்பாசிரியர் பதவியோடு ஒரு வேலை வாங்கித் தாருங்கள், பார்க்கலாம்!' என்று மனசுக்குள் வேண்டிக்கொண்டேன்.
என்ன ஆயிற்று? என் வேண்டுதல் நிறைவேறியதா?
பின்னர் பார்ப்போம்.
Friday, May 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அமுதசுரபியைவிட்டு விலகி மின்மினி போனீர்களே..அங்கு உங்களை பொருப்பாசிரியர் என்று போடமுடியாது என்று கூறிவிட்டபின் மகாஸ்ரீ அன்னையை வேண்டிக்கொண்டீ
ர்களே..தொடர்ந்து எழுதாமல் ஸஸ்பென்ஸில் விட்டுவிட்டீர்..அன்னை நிச்சயமாக வழிகாட்டியிருப்பார்..இல்லையெனில்,இப்பொழுது விகடன் பொருப்பாசிரியராக நீங்கள் கொடிகட்டி
பறப்பதற்கு வேறு என்ன முகாந்திரம் இருந்திடமுடியும்? மின்மினியில் சேராமல் போனதே உங்கள் நல்லதுக்குத்தான் என்று நான் நினைக்கிறேன். நிற்க,
உங்களோடு நான் நடத்திய தொலைபேசி உரையாடல்களை வைத்தே, ஒரு பிளாக் எழுதிவிட்ட நீங்கள், மெய்யாகவே புதுமையானவர்;
உலகைப் புரிந்துகொண்டவர்தான்..
ஐயமேயில்லை..உங்கள் பிளாக் எழுதும் பணி தொடரட்டும்..வளரட்டும்
அன்புடன்,
சரோஜ் நாராயணசுவாமி
இப்போதுதான் முதன்முறையாய் உங்கள் தளத்திற்கு வருகிறேன். (லதானந்திற்கு நீங்கள் இட்ட பின்னூட்டம் வழியாக)..
மிக்க மகிழ்ச்சியாய் உள்ளது. தங்கள் எழுத்துக்களை இணையத்தில் காண்பதற்கு..
நன்றிகள்!!
உங்கள் பத்திரிக்கையுலக அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுங்கள். படிக்கக் காத்திருக்கிறேன்.
ஸ்ரீ....
தொடருங்கள். வாழ்த்துக்கள்.
நன்றி.
Post a Comment