உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, May 17, 2009

ஏன் எழுதினேன்? ஏன் நிறுத்தினேன்? ஏன் தொடங்கினேன்?

மூன்று கேள்விகள். மூன்றுக்கும் பதில் அளிப்பது முக்கியமா என்று தெரியவில்லை. ஆனாலும், மீண்டும் பிளாக் எழுதத் தொடங்குவதற்கு முன்பாக, எனக்கு ஓர் ஆரம்பம் தேவைப்படுவதால், அந்த பதில்களை இங்கே எழுதுகிறேன்.

முதல் கேள்வி: ஏன் எழுதினேன்?

ஏதோ ஒரு நப்பாசை. எல்லாரும் பிளாக் எழுதுகிறார்களே, நாமும் எழுதிப் பார்ப்போமே என்கிற நப்பாசை. தவிர, நான் பிளாக் எழுதவேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தவர்கள் என் குழந்தைகள் ஷைலஜாவும் ரஜ்னீஷும். ஆகவே ரொம்ப சுறுசுறுப்பாக ஆரம்பத்தில் சில எழுதினேன். மற்றபடி எனக்கு இதில் அவ்வளவு ஆர்வம் அப்போதும் இல்லை; இப்போதும் இல்லை!

இரண்டாவது கேள்வி: ஏன் நிறுத்தினேன்?

இதற்கு நிறைய காரணங்கள்.

ஆர்வமில்லை என்பது முதல் காரணம். தவிர, பிளாக் என்பது எதை வேண்டுமானாலும் கிறுக்குகிற பொதுச் சுவராக இருக்கிறது. அதில் நானும் போய் ஏதாவது கிறுக்க வேண்டுமா என்ற ஓர் எண்ணம். மூன்றாவது... பிளாக் எழுதத் தொடங்கியதும் எனக்கு ஏகப்பட்ட உபதேசங்கள்... கேலிகள்... 'ஐயையே! ஒரு முன்னணிப் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்துகொண்டு பிளாக் எப்படி எழுதுவதென்று தெரியவில்லையே! இத்தனை நீளமாகவா எழுதுவது? இன்னின்ன பிளாக்குகளைப் போய்ப் பாருங்கள்' என்று வந்த மெயில்கள்.

சரிதான் என்று அந்தக் குறிப்பிட்ட பிளாக்குகளைப் போய்ப் பார்த்தால், அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள், என்ன சொல்ல வருகிறார்கள் என்று எனக்குப் புரியவே இல்லை. ஒரே தலை சுற்றல். நான்காவதாக, இடுகை, பின்னூட்டங்கள், அங்கதச் சுவை என எனக்கு ஜீரணமாகாத ஒரு வித வித்தியாசத் தமிழ். அட, என்னவோ மனதில் தோன்றியதை எழுதினோம், இதற்கு இத்தனை நக்கலா என்று தோன்றிவிட்டது. பிளாக் எழுதுவதை நிப்பாட்டிவிட்டேன்.

இன்னும்கூட காரணங்கள் இருக்கின்றன. மறுபடி உபதேச மழை பொழியத் தொடங்கிவிடப் போகிறதே என்று இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

சரி, மீண்டும் ஏன் எழுதத் தொடங்கினேன்?

இப்போதும் என் குழந்தைகளின் விருப்பம்தான் முதல் காரணம்.

இரண்டாவது, பிளாக் என்பது நான் நினைத்த மாதிரி பொதுச் சுவர் இல்லை; அங்கே பல நல்ல விஷயங்களும் உள்ளன என்று பா.ராகவன், எஸ்.ராமகிருஷ்ணன், மாலன், ஞாநி, இட்லி வடை, லக்கி லுக் இன்ன பிற பிளாக்குகளைப் பார்த்த பின் புரிந்தது. தவிர அவற்றில், நான் மிரண்ட மாதிரியான 'பிளாக் தமிழ்' காணப்படவில்லை. சரி, நாமும் எழுதுவோமே என்று ஒரு துணிச்சல் மீண்டும் வந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, என் முகம் அறிந்த மற்றும் முகமறியா நண்பர்கள், அலுவலக நண்பர்கள், என்னோடு அவ்வப்போது தொடர்பு கொள்ளும் ஒரு சில வாசகர்கள், சில எழுத்தாள நண்பர்கள், மின்னஞ்சல் மூலமாக மட்டுமே தொடர்பு கொண்ட நண்பர்கள் எனப் பலர், 'ஏன் ரவி பிளாக் எழுதறதை நிறுத்திட்டீங்க?' என்று உண்மையான அக்கறையுடன் கேட்டார்கள்.

இதோ, மீண்டும் எழுதத் தொடங்கிவிட்டேன்.

0 comments: