கடவுள் உண்டா, இல்லையா என்பது பன்னெடுங்காலமாக ஒரு தீராத விவாதத்திற்குரிய விஷயமாக இருந்து வருகிறது. எனக்குக் கடவுள் நம்பிக்கையும் இல்லை; அதே சமயம், இல்லை என்று மறுப்பதற்குரிய சரியான ஆதாரங்களும் என்னிடம் இல்லை. கடவுள் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வது பலவிதங்களில் எனக்கு வசதியாக இருக்கிறது. ஒரு கஷ்டம், தோல்வியின்போது மன நிம்மதியை இழக்காமல் இருக்கவும், இந்தக் காயங்கள் எல்லாம் ஒரு நாள் சரியாகும்; எல்லாவற்றையும் விடப் பெரிதான சக்தி ஒன்று இருக்கிறது; அது எனக்கான நியாயத்தை வழங்கும் என்று சோதனைகளின்போது நிமிர்ந்து நிற்கவும் ஒரு கடவுள் எனக்குத் தேவைப்படுகிறார்.
மற்றபடி, கடவுள் தன்னை இல்லை என்று மறுப்பவனைப் பார்த்தும் சிரிக்கிறார்; உண்டு உண்டு என்று வாதத்திற்குச் செல்பவனைப் பார்த்தும் சிரிக்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
ஆனால், மனித மூளைக்கு எட்டாத ஏதோ ஒரு மிகப் பெரிய சக்தி இருக்கவே செய்கிறது. நாம் கற்கக் கற்க நமது அறியாமையின் பிரமாண்டம் புலனாவது போல, விஞ்ஞானம் புதிய புதிய உண்மைகளைக் கண்டுபிடிக்கப் பிடிக்க, அந்த மிகப் பெரிய சக்தியின் விஸ்வரூபம் கூடிக்கொண்டே போகிறது.
நான் பாண்டிச்சேரி அன்னையின் பக்தன். அன்னை கடவுளா, கடவுளின் தூதுவரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், முழு மனதோடு அவரிடம் பிரார்த்தித்துக்கொண்ட எதுவும் வீண் போனதில்லை. முதல் முறை அன்னையிடம் என் வேண்டுதல் பலித்தபோது, என்னுள் இருந்த நாத்திக மனசு 'இது ஏதோ காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை' என்றே கூவியது.
அடுத்த முறை, அடுத்த முறை என நான் வேண்டிக்கொண்ட ஒவ்வொன்றுமே சிலிர்க்க வைக்கும் விதத்தில் பலித்துக்கொண்டே வந்தபோது, 'ஒவ்வொரு முறையுமா பழம் விழும்?' என்று யோசித்தேன்.
அமுதசுரபி பத்திரிகையில் சிறிது காலம் வேலை செய்தபோதுதான் அன்னையைப் பற்றி நான் அதிகம் தெரிந்துகொண்டேன். இத்தனைக்கும், அதற்குப் பல வருடங்களுக்கு முன்பே நான் சில ஆண்டுகள் பாண்டிச்சேரியில் வசித்திருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் நான் அரவிந்தாஸ்ரமத்துக்கோ, மணக்குள விநாயகர் கோயிலுக்கோ போனதில்லை. எல்லாவற்றுக்கும் நேரம் என்று ஒன்று வேண்டியிருக்கிறதே!
அமுதசுரபி மாத இதழில் அன்னையைப் பற்றி கர்மயோகி என்பவர் தொடர் கட்டுரை எழுதி வந்தார். அதைப் பிழை திருத்தும்போதுதான் அன்னையின் மகிமை பற்றி எனக்குத் தெரிய வந்தது. அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பாக ஒன்று எழுதியிருந்தார்... 'உங்கள் தகுதிக்கு மீறியது என்று உங்களுக்கே நிச்சயமாகத் தெரிந்தால், அதை உங்களுக்கு அளிக்கச் சொல்லி அன்னையிடம் பிரார்த்தனையாக வைக்காதீர்கள். சில விஷயங்கள், உங்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டியிருந்து, ஏதோ காரணத்தால் அது கிடைக்காமலே தள்ளிப் போய்க்கொண்டு இருந்தால், அதை நிறைவேற்றித் தரும்படி அன்னையிடம் பிரார்த்தியுங்கள்; அன்னை நிச்சயம் அருளுவார்!'. இந்த வரி என்னைக் கவர்ந்தது.
நானே என்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொள்ளக் கூடாது; இருந்தாலும் இங்கே சொல்லவேண்டியிருக்கிறது... சின்ன வயதிலிருந்தே எனக்குப் பேராசை என்பதே கிடையாது. அதே சமயம், எனக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டியது கிடைக்காமல் போனால், நான் சோர்ந்து விடுவேன். எனவே, அன்னையிடம் நான் வைக்கும் பிரார்த்தனைகள் நியாயமானவையாகவே இருக்கும் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை.
அமுதசுரபி வேலையை விட்டு வேறொரு பத்திரிகையை நம்பிப் போய் வசமாக ஏமாந்தேன். அப்போதுதான் அன்னையிடம் முதன்முதலாக என் பிரார்த்தனையை, அன்னைக்குச் சவால் விடும் ஒரு தோரணையில் முன்வைத்தேன். அந்த என் பிரார்த்தனையை அன்னை உடனே எந்தத் தடங்கலுமின்றி நிறைவேற்றித் தந்தார். அதுதான் அன்னையின் மகிமையை நான் உணர்ந்துகொண்ட முதல் நேரடி அனுபவம்.
அதன்பின், எனது திருமணம்; எனக்கு மிகச் சரியான ஒரு துணையை நான் மனைவியாக அடைந்ததற்கும் அன்னையின் அருள்தான் காரணம் என்று நம்புகிறேன். அதையடுத்து, சாவி பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது நடந்த ஒரு விபரீதம்; அதிலிருந்து என்னை மீட்டெடுத்த அன்னையின் அருள், இப்போது நினைத்தாலும் சிலிர்க்கச் செய்கிறது. பின்னர், ஆனந்த விகடனில் வேலைக்குச் சேர்ந்ததுகூட அன்னையின் அருளால்தான் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.
நான் பிளாக் எழுதத் தொடங்கும்போது, அன்னையின் அருளை விவரிக்கும் கட்டுரையிலிருந்துதான் தொடங்கவேண்டும் என்று யோசித்து வைத்திருந்தேன். ஆனால், நான் ஏதோ கதை விடுகிறேன் என்று நினைத்துவிடுவார்களோ, அல்லது ரத்தக்கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதா சொல்வது போல, 'என்னமோ இவன்தான் கடவுளுக்குச் செக்ரெட்டரி மாதிரி பேசறானே' என்று எண்ணிவிடுவார்களோ என்ற எண்ணத்தில்தான் எழுதாமல் விட்டேன்.
அன்னையின் அருளால் எனக்கு நிகழ்ந்த ஒவ்வொரு அனுபவத்தையும் அடுத்தடுத்துப் பதியவிருக்கிறேன். அன்னையின் அருளைப் பரப்புவதற்காக அல்ல; அப்படி நான் நினைத்துக்கொண்டால் என்னைவிட கர்வி, என்னைவிட அகம்பாவி உலகில் வேறு யாரும் இருக்கமாட்டார்.
சாவியில் நடந்த விபரீதத்திலிருந்து அன்னை என்னை மீட்டெடுத்தது உண்மையிலேயே சிலிர்க்க வைக்கும் ஒரு த்ரில் அனுபவம். அதைப் பிறகு ஒருநாள் பார்க்கலாம்.
முதலில், அன்னையின் அருளைப் பெற்ற எனது முதல் அனுபவத்தை எழுதுகிறேன்.
Thursday, May 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
காத்திருக்கிறேன்.தொடர்ந்து எழுதுங்கள்.
Post a Comment