உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, November 05, 2017

ஜாய்ஃபுல் சிங்கப்பூர்… கலர்ஃபுல் மலேசியா! - 4

கிளம்பியாச்சு!


சிங்கப்பூருக்கு டிக்கெட் புக் செய்ததிலிருந்து, தினமுமே எங்கள் வீட்டில் இரவு 10 மணிக்கு ‘பிக்பாஸ்’ கூட்டம் நடக்கும். என்னென்ன பேக் எடுத்துப் போகவேண்டும், புதிதாக ட்ராலி பேக் வாங்க வேண்டுமா, வெளியில் சுற்றுவதென்றால், முதுகில் சுமக்கும் பைகள் வாங்கினால் சௌகர்யமாக இருக்குமா, திடும் திடுமென அங்கே மழை பெய்யும் என்கிறார்களே, எனில், ஃபேன்ஸி குடைகள் வாங்கிக்கொள்ளலாமா என்றெல்லாம் பேசி, முடிவெடுப்போம். திரு. கண்ணனிடமும் திரு. சுரேஷிடமும் பேசி, எங்கள் ஐடியாக்களைப் பகிர்ந்துகொண்டு, அவர்களின் ஆலோசனைகளையும் கேட்டுக் கொள்வோம். எங்கெங்கே சுற்றிப் பார்க்க வேண்டும், என்றைக்கு எந்த இடத்தைப் பார்ப்பது, எதற்கு எவ்வளவு கட்டணம் என்றெல்லாம் என் மகன் ரஜ்னீஷ் கூகுளில் தேடி, யூடியூபில் தேடி, ஒருவாறு ஒன்பது நாள்களுக்கான சிங்கப்பூர் சுற்றுலாத் திட்டத்தை வடிவமைத்து வைத்திருந்தான். அதையும் அவர்கள் இருவரிடமும் பகிர்ந்துகொண்டு, அவர்களின் யோசனைகளையும் கேட்டோம்.

இப்படியாக எல்லாமே சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான், எங்கள் சந்தோஷம் மொத்தமும் வடிந்துபோகிற மாதிரியான சூழல் உண்டானாது.

கிளம்புகிற ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு இரண்டு நாள் முன்பு, அதாவது 28-ம் தேதி திங்கள்கிழமை, அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, எனக்குத் தலைச்சுற்றலும் மயக்கமுமாக இருந்தது. அரைநாள் ஓய்வெடுத்துக்கொண்டு, தூங்கி ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும் என்று கிளம்பி, வீட்டுக்கு வந்து படுத்தேன். படுத்ததுதான் தெரியும், மறுநாள் காலையில்தான் கண் விழித்தேன். உடம்பு கணகணவெனக் கொதித்துக்கொண்டிருந்தது.

“எழுப்புறேன், எழுப்புறேன்… எழுந்திருக்கவே இல்லை நீங்க. என்னடாயிதுன்னு பயமா போயிடுச்சு எனக்கு. ஊருக்கு வேற போகணும். உடனே போய் டாக்டரைப் பாருங்க” என்றார் மனைவி கவலையாக.

எழுந்து நிற்கவே முடியாமல் கால்கள் வெலவெலத்தன. என் பலம் மொத்தமும் வடிந்துபோனாற்போல் இருந்தது. நின்றாலே கண்களில் பூச்சி பறந்தது. உடம்பு தட்டாமாலை சுற்றியது. அடுத்த தெருவில் உள்ள குடும்ப மருத்தவரின் ஆஸ்பிட்டலுக்குப் போனேன்.

ஜுரத்துக்கு ஊசி போட்டார். ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டும் என்றார். ஏற்றிக்கொண்டேன். வீடு வந்து மீண்டும் படுத்தேன்.

மறுநாள் புதன்கிழமை, இன்னும் மோசமாகியது உடம்பு. போதாக்குறைக்கு மகனுக்கும் அதே பிரச்னை. அதே உடம்பு. அவனும் ஜுர வேகத்தில் படுத்துவிட்டான்.

மகள் ஷைலஜா, தன் தோழியுடன் சேர்ந்து ஒரு குறும்படம் எடுத்துக்கொண்டிருந்தாள். இரவு பகல் பாராமல் ஷூட்டிங், எடிட்டிங் என்று பிஸியாக இருந்தாள். எல்லாவற்றையும் ஞாயிற்றுக்கிழமைக்குள் முடித்துவிட்டு திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நான்கு நாட்களும் வீட்டில் தங்கி ரெஸ்ட் எடுக்கும்படி முன்பே அவளிடம் சொல்லியிருந்தோம். சிங்கப்பூர் சுற்றுலாவில் நிறைய தூரம் நடக்க வேண்டியிருக்கும் என்பதால், அதற்கேற்ப எங்கள் உடலாரோக்கியத்தைத் தயார் செய்துகொள்ளும்பொருட்டு, எங்கள் பிக்பாஸ் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது. இதற்கு அவள் தலையாட்டினாலும், திட்டமிட்டபடி அவர்களால் ஞாயிற்றுக்கிழமை தங்கள் பணிகளை முடிக்க முடியவில்லை. அவளும் இதோ வந்துவிடுவேன், அதோ வந்துவிடுவேன் என்று திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால், வந்தபாடில்லை.

புதன்கிழமை காலையில் நானும் மகனும் மீண்டும் அதே டாக்டரிடம் போனோம். “சார், நாளை சிங்கப்பூருக்குக் கிளம்புவதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டோம். இந்த நிலையில் நிற்கவே முடியாமல், உடம்பு தள்ளாடுகிறது. முற்றிலும் வலுவிழந்து கிடக்கிறது. தவிர, எத்தனை டம்ளர் தண்ணீர் குடித்தாலும் நாக்கு வறண்டுபோய்க் கிடக்கிறது. வயிறு முட்டத் தண்ணீர் குடித்தாலும், நாக்கு காய்ந்தே கிடக்கிறது. எதையும் சாப்பிட முடியவில்லை. இந்தச் சுற்றுலா நல்லபடியாக நிறைவேற வேண்டுமே என்று கவலையாக இருக்கிறது. ஏதாவது செய்து எங்கள் உடம்பைத் தேற்றுங்கள்” என்றோம்.

அவர் மீண்டும் ஆளுக்கொரு ஊசியைப் போட்டுவிட்டு, இருவரையும் மீண்டும் தலா இரண்டு பாட்டில் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொள்ளச் சொன்னார். அப்படியே செய்தோம்.

வீட்டுக்கு வந்து நானும் என் மகனும் ஆளுக்கொரு மூலையில் சுருண்டு படுத்தோம். வெளியுலகில் என்ன நடக்கிறது, டி.வி-யில் என்ன நிகழ்ச்சி போய்க்கொண்டிருக்கிறது, இப்போது மணி என்ன ஆகிறது என்று எதுவுமே தெரியாமல், மயங்கிக் கிடந்தோம்.

சிங்கப்பூர் புறப்பட வேண்டிய வியாழனன்று காலை… இருவருக்கும் ஜுரம் சற்றும் விட்டபாடில்லை. எழுந்து உட்காரக்கூட எங்களால் முடியவில்லை. குறும்படத் தயாரிப்பில் மும்முரமாக இருந்த என் மகள் ஷைலஜாவும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபாடில்லை.

மணி மதியம் 2-ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. எல்லாவற்றையும் எடுத்து பேக் செய்ய வேண்டும். இரவு 8:20-க்கு செக் இன் டயம். மாலை 7 மணிக்கெல்லாம் ஏர்போர்ட்டில் இருப்பது நல்லது என்று சொல்லியிருந்தார் திரு. சுரேஷ். ஆனால், எல்லோரும் இப்படிப் படுத்துக் கிடப்பதைப் பார்த்து ரொம்பவே கலங்கிப் போனார் என் மனைவி. “யாருக்கும் எந்த உடம்பும் இல்லாமல் இந்தப் பிரயாணத்தை நல்லபடியாகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவேற்றிக் கொடு தாயே!” என்று மகாஸ்ரீ அரவிந்த அன்னை படத்தின் எதிரே அமர்ந்து அழத் தொடங்கிவிட்டார்.

மதியம் 3 மணிக்கு, மகள் ஷைலஜா வந்தாள். ராத்திரியும் பகலுமாக குறும்படத் தயாரிப்பில் ஈடுபட்ட களைப்பு அவள் முகத்தில். எங்கள் நிலையைக் கண்டு அவளும் பதறிப்போனாள்.
நாங்கள் வேறு வழியின்றி, எங்களை திடப்படுத்திக்கொண்டு, எழுந்து உட்கார்ந்தோம். மகாஸ்ரீ அன்னையிடம் பிரார்த்தித்துக்கொண்டு, பயண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தோம்.

மாலை 6 மணிக்குள் பேக்கிங்கையெல்லாம் ஒருவழியாக முடித்து, ஏற்கெனவே போட்டு வைத்த செக் லிஸ்ட்படி, எதுவும் விட்டுப்போகாமல் எடுத்துக்கொண்டாகிவிட்டதா என்று சரிபார்த்தோம். 6:30 கால் டாக்ஸி வரவழைத்தோம்.

அன்னையை வணங்கினோம். அறைகளைப் பூட்டிக்கொண்டோம். வெளியே வந்து, வாசல் கதவைப் பூட்டினோம்.

உடல் அசதியும் களைப்பும் ஒருபுறம் இருந்தாலும், ஒரு பெரிய கனவைப் பூர்த்திசெய்துகொள்ளும் சந்தோஷத்துடன் காரில் ஏர்போர்ட் நோக்கிப் பயணப்பட்டோம்.


(பயணம் தொடரும்)  

0 comments: