உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, November 12, 2017

ஜாய்ஃபுல் சிங்கப்பூர்... கலர்ஃபுல் மலேசியா! - 5

சிங்கப்பூர் எங்களை அன்புடன் வரவேற்றது!

முதல் வெளிநாட்டுப் பயணம். அந்தப் பரவசமும், விமான நிலையச் சூழலும், கண்ணாடிக் கதவு வழியே வெளியே தெரிந்த இண்டிகோவும், விமானத்துள் ஏறி அமர்ந்தபோது உண்டான சந்தோஷமும் சேர்ந்துகொண்டு, எங்கள் உடல்நலக் குறைவை சற்று மறந்து இருக்கும்படிச் செய்தன.

டிக்கெட்டில் போட்டிருந்தபடியே மிகச் சரியாக இரவு 9:50-க்கு ‘இண்டிகோ’ சுறுசுறுப்பாகி, உயிர்த்தெழுந்தது. ஏர்ஹோஸ்டஸ் மூவரில் இருவர் விமானத்தின் இரு ஓரங்களிலும், ஒருவர் மையமாகவும் பொம்மைபோல் நின்றபடி, காதுகேளாதவருக்கான செய்தி வாசிப்பாளர்கள்போல சைகையாலேயே, பெல்ட் அணிவித்துக்கொள்ளும் முறை பற்றியும், மூச்சுத் திணறல் ஏற்பட்டால் ஏர்பேகை எப்படி எடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும், மொபைல்களை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கினார்கள்.

‘ர்ர்ர்ரும்ம்ம்ம்ம்ம்…’ என்று உறுமியபடி மெதுவாக நகரத் தொடங்கியது ‘இண்டிகோ’. அரைவட்டமாகச் சுற்றி வந்து, ரன்வேயில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பின்பு ‘க்ரக்… க்ரக்… க்ரக்…’ என்று சிலிர்த்துக்கொண்டு, முன்னைக்காட்டிலும் பெரிதாகச் சத்தம் எழுப்பியபடி தடதடவென்று வேகம் எடுத்து, ரன்வேயில் ஓடியது. குட்டி வட்ட ஜன்னல் வழியே கலர் கலர் விளக்குகளாய் சென்னை விமான நிலையம் கடந்துபோனது.

படு வேகமெடுத்து ஓடிய இண்டிகோ, சில நொடிகளில் தரையுடனான தன் தொடர்பைத் துண்டித்துக்கொண்டதை உணர முடிந்தது. கிடுகிடுவென விமானம் உயரே, உயரே, உயரே எழும்பிப் பறக்கத் தொடங்கியது. அதன்பின்பு சுற்றிலும் இருள்.

மனசுக்குள் குதூகலம் நிரம்பி வழிந்தது. சின்ன வயசு சிங்கப்பூர்க் கனவு இதோ நிறைவேறிக்கொண்டே இருக்கிறது.

இங்கே ஒரு சின்ன வேடிக்கையைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

சிங்கப்பூர் போய்வருவதற்கான டிக்கெட் இ-மெயிலில் கிடைத்தபோது, முதல் பார்வையில் ஒரு சின்ன குழப்பம் ஏற்பட்டு, பின்பு சுதாரித்துத் தெளிவு பிறந்தது.

இங்கே சென்னையில் 9:50-க்குக் கிளம்பும் விமானம் அங்கே சிங்கப்பூரில் விடியற்காலை 4:20-க்குத் தரையிறங்குகிறது. ஆறரை மணி நேரக் கணக்கு. அதுவே சிங்கப்பூரில் விடியற்காலை 5:40-க்குக் கிளம்பும் விமானம் இங்கே சென்னையில் காலை 7:10-க்கெல்லாம் தரையிறங்கிவிடுகிறது. அதாவது, பயணம் வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே! எப்படி இது சாத்தியம்?

சிம்பிள். நமக்கும் சிங்கப்பூருக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம். இங்கே காலை 7 மணி என்றால், அங்கே காலை 9:30 மணி. எனவே, இங்கே 9:50-க்குக் கிளம்பும் விமானம் 4 மணி நேரம் பறந்து, அங்கே நம் கணக்குப்படி நடுநிசி 1:50-க்கு லேண்ட் ஆகிறது. ஆனால், சிங்கப்பூர் நேரப்படி அது 4:20 மணி. அதேபோல், அங்கே சிங்கப்பூர் நேரப்படி 5:40-க்குக் கிளம்புகிற விமானம் 4 மணி நேரம் பறந்து, இங்கே சென்னையில் சிங்கப்பூர் நேரப்படி 9:40-க்கு லேண்ட் ஆகிறது. அதாவது, நம் சென்னை நேரப்படி அப்போது காலை 7:10-தான்.

அடிக்கடி விமானப் பயணப் பயணமாக வெளிநாடு செய்பவர்களுக்கு இதொன்றும் புதிய விஷயமல்ல. முதன்முறையாக, நேர வித்தியாசமுள்ள வெளிநாட்டுக்குப் பயணப்படுகிறோம் என்பதால், எங்களுக்கு இது சற்று வேடிக்கையாக இருந்தது. அவ்வளவுதான்!

காலை 4:20-க்கு அங்கே சிங்கப்பூரில் சென்று இறங்கினோம். ஏர்போர்ட்டுக்குள் வந்து எங்கள் லக்கேஜ்களைப் பொறுக்கிக்கொண்டு, இமிகிரேஷன் க்யூவில் நிற்கும்போது, விமான நிலையத்தைச் சுற்றிலும் கண்களால் துழாவினேன். பெரிய எழுத்தில் ‘நல்வரவு’ என அழகு தமிழில் வரவேற்றது சிங்கப்பூர். தமிழன் என்கிற முறையில் எனக்கு அது பெருமையாகவே இருந்தது.

சிங்கப்பூர் அரசு மொழிகளில் தமிழும் ஒன்று. மற்றவை ஆங்கிலம், மாண்டரின் மற்றும் மலாய். ஏர்போர்ட் மட்டுமல்ல, எம்.ஆர்.டி ரயில்களில், பஸ்களில் என எல்லா இடங்களிலும் அழகு தமிழில் அறிவிப்புப் பலகைகள் இருப்பதைப் பார்த்தேன். தவிர, ரயில்களில் அடுத்த ஸ்டேஷன் நெருங்குவதை அறிவிக்கும் குரல், நல்ல திருத்தமான உச்சரிப்பில் அழகு தமிழில் ஒலிக்கிறது.

‘நல்வரவு’ போர்டை ரசித்துக்கொண்டே தலையைத் திருப்பியபோது, கண்ணாடிக் கதவுக்கு வெளியே திரு.சுரேஷ், அவரின் மனைவி திருமதி ஜெயஸ்ரீ இருவரும் நின்று கையசைத்தது தெரிந்தது. பதிலுக்கு நாங்களும் கையசைத்தோம்.

வெளியே வந்ததும், இரண்டு டாக்ஸி பிடித்தார் சுரேஷ். இரண்டும் தாராள இட வசதியோடு பெரிய சைஸ் கார்களாகத்தான் இருந்தன. 

“ஏன், ஒரே ஒரு டாக்ஸி போதாதா? அட்ஜஸ்ட் பண்ணி உட்கார்ந்து போய்விடலாமே?” என்றேன்.

“இல்லை. இங்கெல்லாம் ஸ்ட்ரிக்டாக நாலு பேருக்கு மேல் ஏற்றமாட்டார்கள்” என்றார் சுரேஷ். அந்த விநாடியிலிருந்தே சிங்கப்பூர் டிராஃபிக்கின் கட்டுப்பாடும் ஒழுக்கமும் எனக்குப் புரியத் தொடங்கிவிட்டது.

முதல் டாக்ஸியில் திருமதி சுரேஷ், என் மனைவி, மகள் மூவரும் செல்ல, அடுத்த காரில் திரு.சுரேஷ், நான், என் மகன் என மூவரும் பின்தொடர்ந்தோம்.

டாக்ஸி டிரைவர்கள் எல்லாரும் பெரும்பாலும் சீனர்களாகவே இருக்கிறார்கள். சீன உச்சரிப்புடன்கூடிய ஆங்கிலம் பேசுகிறார்கள். முகத்தில் மாறாத புன்னகை. ‘வெல்கம்’ சொல்லி வரவேற்கிறார்கள். இறக்கிவிடும்போது அழகாகக் கையசைத்து ‘பை’ சொல்லி வழியனுப்பிவிட்டுத்தான் காரை நகர்த்துகிறார்கள். 

பத்திரிகைகளில் சீன ஆக்கிரமிப்புகள் பற்றியும், அடாவடித்தனம் பற்றியும், இந்தியாவை வளைக்க பாகிஸ்தானோடு சேர்ந்து அது செய்யும் சதித்திட்டங்கள் பற்றியும் படித்துப் படித்து, சீனர்கள்மீது எனக்கு ஏற்பட்டிருந்த இனம்புரியாத ஒரு வெறுப்பானது, சிங்கப்பூர் சீன டிரைவர்களின் கனிவான முகத்தையும் பொறுமையையும் பார்த்து, ரொம்பவே அகன்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.   
பத்து நிமிட நேரத்தில் ‘ஸீமீ’ ஏரியாவில் உள்ள சுரேஷ் தம்பதியரின் குடியிருப்புக்குள் டாக்ஸிகள் சென்று நின்றன. இங்கெல்லாம் யாரும் டாக்ஸி என்று சொல்வதில்லை. கேப் (Cab) என்றே சொல்கிறார்கள். இனி, நாமும் அப்படியே சொல்வோம்.

16-வது மாடியில் உள்ள அவர்களின் பிளாட்டுக்குச் சென்றோம். காலிங் பெல் அடித்ததும், கதவைத் திறந்து, இடுங்கிய கண்களும், முகம் முழுக்கச் சிரிப்புமாக, ‘ஹாய்’ என வரவேற்றார் ஒரு சீனப் பெண்.


(பயணம் தொடரும்) 

0 comments: