உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, October 27, 2017

ஜாய்ஃபுல் சிங்கப்பூர்… கலர்ஃபுல் மலேசியா! - 3

பார்க்க முடியுமா, முடியாதா?


‘சிங்கப்பூர் போய் வருவதற்கு, விசா செலவெல்லாம் உள்பட உங்கள் நாலு பேருக்கும் சேர்த்து ரூ.50,000-க்குள் முடித்துத் தருகிறேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள்’ என்று திரு.பாலச்சந்தர் நம்பிக்கையும் உத்தரவாதமும் கொடுத்ததுமே - அதாவது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் - திரு.சுரேஷ் தவிர, சிங்கப்பூரில் நமக்குத் தெரிந்தவர்கள் வேறு யார் இருக்கிறார்கள் என்று குடும்பமாக உட்கார்ந்து, ஒரு குட்டி ‘பிக்பாஸ்’ மீட்டிங் போட்டோம்.

மகள் ஷைலு, தன் தோழி ஒருத்தி அங்கே இருக்கிறாள்; ஆனால், எங்கே இருக்கிறாள், அவள் மொபைல் எண் என்ன என்று இனிமேல்தான் யாரிடமாவது விசாரிக்க வேண்டும் என்றாள்.

“என் அண்ணன்… அதாங்க, என் பெரியப்பா மகன் கண்ணன் சிங்கப்பூரில்தான் இருக்கிறார்” என்றார் மனைவி. “ஆனா, ரொம்ப நாளாச்சு அவரைப் பார்த்து. சின்ன வயசில் திருச்சியில் எல்லாரும் ஒண்ணா இருந்தோம். அப்புறம் அவர் படிச்சு, சிங்கப்பூரில் வேலை கிடைச்சு, அங்கே போய் செட்டிலாகி 20, 25 வருஷம் ஆயிடுச்சு. அப்புறம் அவங்களோடு டச் விட்டுப் போச்சு. அவருக்குக் கல்யாணம் நடந்தது, குழந்தைகள் பிறந்தது, வளர்ந்ததுன்னு எதுவுமே தெரியாது. இப்ப அவங்க சிங்கப்பூர்ல எங்கே இருக்காங்க, அவங்க டெலிபோன் நம்பர் என்னனு எதுவுமே தெரியாது. எங்க அக்காகிட்ட வேணா கேட்டுப் பார்க்கிறேன்” என்றார்.

“25 வருஷம் ஆயிடுச்சுன்னா உங்களையெல்லாம் அவர் நினைவு வெச்சிருப்பாரா? அந்நிய மனுஷங்க மாதிரி நாம அங்கே போய்த் தங்கறது சரியா இருக்குமா?” என்று கேட்டேன்.

“போன வருஷம் அவரோட பிள்ளை கல்யாணம் பெங்களூர்ல நடந்ததே… ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு நம்மோட அட்ரஸையெல்லாம் தேடிக் கண்டுபிடிச்சு, இன்விடேஷன் அனுப்பினாரே? நாமெல்லாரும்கூட அந்தக் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தோமே, ஞாபகம் இல்லையா? அந்தக் கல்யாணத்துலதான் எங்க மன்னியை (அண்ணி) நான் முதன்முதல்ல பார்த்தேன். ஆனா, கல்யாண பரபரப்புல அதிகம் யாரோடயும் பேசிக்க முடியலை…” என்று பேசிக்கொண்டே போன மனைவியைத் தடுத்து, “ஆமா, ஞாபகம் இருக்கு. அந்த இன்விடேஷன் இப்ப இருக்கா உன்கிட்ட?” என்று கேட்டேன்.

அடுத்த பிக்பாஸ் கூட்டத்துக்குள் (சிங்கப்பூர் டூர் தொடர்பான எங்களோட சண்டே பிக்பாஸ் கூட்டத்தைச் சொன்னேங்க!) அந்த இன்விடேஷனைத் தேடி எடுத்துவிட்டார் மனைவி. நான் எதிர்பார்த்ததுபோலவே அதில் திரு. கண்ணனின் சிங்கப்பூர் முகவரியும் மொபைல் எண்ணும் இருந்தன. உடனே, வாட்ஸப் காலில் தொடர்புகொண்டோம். விஷயத்தைச் சொன்னோம்.

“நீங்க எப்போ இங்கே வர்றதா இருக்கீங்க?” என்றார். அப்போது எதுவும் தீர்மானமாகியிருக்கவில்லை. ஜூலை இறுதி வாரத்தில் ஆஃபர் போடுவார்கள் என்றாரே பாலச்சந்தர்… அதை மனதில் வைத்துக்கொண்டு,  “ஆகஸ்ட் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் இருக்கலாம். இன்னும் டிக்கெட் புக் செய்யவில்லை” என்றோம். “அடடா…” என்றார். “என்ன..?” என்றோம் புரியாமல்.

“மருமகளின் பிரசவத்துக்காக என் வொய்ஃப் அமெரிக்கா போயிருக்கா. செப்டம்பர் 15 தேதிக்கு மேலதான் வருவா. இப்போ நான் மட்டும்தான் இங்கே தனியா இருக்கேன். நீங்க வந்தீங்கன்னா தங்கிக்கலாம்; அதுல ஒண்ணும் பிரச்னை இல்லை. மத்தபடி, சாப்பாட்டுக்கு உங்களுக்கு நான் உதவ முடியாதே என்று பார்க்கிறேன்!” என்றார்.

“ஓகே! பரவாயில்லை. சாப்பாட்டுக்கு நாங்க எங்கேயாவது வெளியில பார்த்துக்கறோம்” என்றோம்.

“ஐயோ! இங்கெல்லாம் ரொம்ப காஸ்ட்லி! அது மட்டுமில்லாம, ஹோட்டல்னு போனீங்கன்னா கடல் ஜந்துக்கள் அத்தனையும் டேபிள்ல கடைபரப்பி வெச்சுடுவாங்க. நீங்க செப்டம்பர் லாஸ்ட் வீக் வர ட்ரை பண்ணுங்களேன்” என்றார். 

“சரி, அப்படியே செய்யறேன்” என்றேன். அதன்பின், சிங்கப்பூர் பயணம் பற்றிய பேச்சு வீட்டிலேயே நின்றுபோயிற்று.

ஆகஸ்ட் மூன்றாம் தேதி, டிராவல் ஏஜென்ட் பாலச்சந்தர் அழைத்து, “சார், ஆஃபர் போட்டிருக்கிறார்கள். உடனே வந்தீங்கன்னா சிங்கப்பூருக்கு டிக்கெட் போட்டுடலாம். ரூ.4,000-க்குள்ளதான் ஆகுது. ஆகஸ்ட் 15-லேர்ந்து செப்டம்பர் 20 வரைக்கும் ஆஃபர் போட்டிருக்கான். நான் சொன்னபடி ரூ.50,000-க்குள்ள எல்லா செலவையும் முடிச்சுக்கலாம்” என்றார்.

உடனே போய் டிக்கெட் பதிவு செய்தேன். “ஆகஸ்ட் 10-க்குப் பிறகு விசாவுக்கு அப்ளை பண்ணலாம் சார்! இப்ப ஒண்ணும் அவசரமில்லே” என்றார் பாலச்சந்தர்.

செப்டம்பர் முதல் தேதி சிங்கப்பூர் சென்று இறங்குகிற மாதிரி ஃப்ளைட் டிக்கெட் புக் செய்துவிட்டு, திரு. சுரேஷுக்குத் தகவல் கொடுத்தபோதுதான், எதிர்பாராமல் அவருக்கு நேரிட்ட நெருக்கடியைச் சொன்னார். சுரேஷ் குடும்பத்துக்குச் சிரமம் கொடுக்கிறோமே, வேறு மாற்று ஏற்பாடு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

அலுவலக நண்பர் ஒருவர் சமீபத்தில் சிங்கப்பூர் சென்று திரும்பியிருந்தார். அவர் டூர் பேக்கேஜில் போய் வந்திருந்தார். எதற்கும் இருக்கட்டும் என்று அவரிடம் விசாரித்தேன். அங்கே உள்ள சிவா என்கிற தன் நண்பரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்துப் பேசிப் பார்க்கச் சொன்னார். பேசினேன். “தாராளமாக வாருங்கள்” என்று அழைத்தார். ஆனால், ‘அங்கே அவர் தங்கியுள்ள இடம் மிகச் சிறிது. நாங்கள் குடும்பமாகத் தங்கியிருக்கத் தோதுப்படாது’ என்று அவருடன் பேசியதில் புரிந்தது.

மற்றபடி, வேறு என்ன செய்யலாம் என்று கையைப் பிசைந்துகொண்டேன்; மண்டையை உடைத்துக்கொண்டேன். ஒரு வழியும் புலனாகவில்லை. சரி, திரு.சுரேஷ் அவர்களிடம் சொல்லி, இருப்பதற்குள் விலை மலிவான ஹோட்டலில் ரூம் புக் பண்ணித் தரச் சொல்ல வேண்டியதுதான் என்கிற எண்ணத்துக்கு வந்துவிட்டேன்.

ஆகஸ்ட் 15 தேதி வாக்கில், திரு.கண்ணன் அவர்களிடமிருந்து போன். “உங்க சிங்கப்பூர் ட்ரிப் எந்த அளவுல இருக்கு?”

“செப்டம்பர் முதல் தேதி காலையில சிங்கப்பூர் வர மாதிரி டிக்கெட் புக் பண்ணியிருக்கோம். பத்து நாள் அங்கே இருப்போம். ஆனா, எங்க தங்கறதுன்னு, சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு எதுவும் பிளான் பண்ணலை…”

நான் முடிப்பதற்குள்ளாக அவரே குறுக்கிட்டார்… “செப்டம்பர்ல வரீங்களா? நல்லதா போச்சு. தாராளமா வாங்க. என் வொய்ஃபும் ஆகஸ்ட் லாஸ்ட்ல வந்துடுவா. வெளியில எல்லாம் சாப்பிட வேணாம். எல்லாம் மீன், நண்டுன்னு கடல்வாழ் உயிரினமாதான் இருக்கும். செலவும் எக்கச்சக்கமா ஆயிடும். அதெல்லாம் வேணாம். இங்கேயே தாராளமா எத்தனை நாள் வேணாலும் தங்கிக்கலாம்; சாப்பிட்டுக்கலாம். கீதா (அண்ணி) உங்களுக்குக் கையிலயும் அழகா பேக் பண்ணிக் கொடுத்துடுவா. டோண்ட் வொர்ரி! நீங்க கிளம்பி வாங்க, மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கறேன்!” என்று உற்சாகக் குரலில் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தார்.

கூடவே, “உங்க ஃப்ளைட் நாலேகால் மணிக்கு சாங்கி ஏர்போர்ட்டுக்கு வருதுன்னு நினைக்கிறேன். நானே வந்து உங்களைப் பிக்கப் பண்ணிக்கிறேன்” என்றார்.

விஷயத்தை திரு.சுரேஷிடம் சொன்னேன். ஆனால், உறவினர் வீட்டில் தங்கப்போவதாகச் சொல்லவில்லை. அவரைப் போலவே ஒரு நண்பர் வீட்டில் தங்கப்போவதாகச் சொன்னேன். காரணம் உண்டு.

சுரேஷ் தம்பதி, என் உறவினர்களுக்கும் மேலானவர்கள். நாங்கள் சிங்கப்பூர் பயணத்துக்குத் திட்டமிட்டதிலிருந்து சிங்கப்பூர் விசா பெறுவதற்கு, அங்கே யார் வீட்டில் தங்கப்போகிறோமோ அவரிடமிருந்து முறைப்படி ஒரு கடிதம் கேட்பார்கள் என்பதிலிருந்து, அங்கே சிங்கப்பூர் டாலருக்கு என்ன செய்வது, போக்குவரத்துக்கு என்ன செய்வது என்பது வரை, எல்லாவற்றிலும் அவர்கள்தான் எங்களைச் சரியான முறையில் வழிநடத்தினார்கள். எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு நெருக்கடி ஏற்பட்டும்கூட, ‘பரவாயில்லை, அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்’ என்று அழைத்த அன்புக்கு முன், “இல்லை. என் உறவினர் ஒருவர் அங்கே இருக்கிறார். நான் அங்கேயே தங்கிக் கொள்கிறேன்” என்று சொல்ல எனக்குச் சற்றுத் தயக்கமாக இருந்தது. எனவேதான், மற்றொரு நண்பர் வீட்டில் தங்கிக்கொள்வதாகச் சொன்னேன்.  

“இல்ல சார், எங்களுக்குச் சங்கடமா இருக்கு. அங்கே உங்களுக்கு வசதிப்படுமோ, படாதோ… நீங்க கிளம்பி இங்கேயே வந்துடுங்க. என் உறவுக்காரங்க 5-ம் தேதி கிளம்பிப் போயிடுவாங்க. அப்புறம் 6, 7, 8 மூணு நாளும் ஃப்ரீதான். இதுக்கிடையில மலேசியா போகணும்னு பிளான் பண்ணியிருந்தீங்களே, அதையும் முடிச்சுக்குங்க. ஆக, முதல்ல ஒரு மூணு நாள்தான். அட்ஜஸ்ட் பண்ணி இருந்துக்கலாம். நீங்க வேற எங்கயும் தங்க வேணாம். இங்க வாங்க, பார்த்துக்கலாம்!” என்று அன்போடு வற்புறுத்தினார்கள் சுரேஷ் தம்பதியர்.

“இல்லை, உங்களுக்கு எதற்கு வீண் சிரமம்? அந்த நண்பரே ஏர்போர்ட்டுக்கு வந்து அழைத்துப் போவதாகச் சொல்லியிருக்கிறார் என்றேன். அவரின் முகவரியைக் கேட்டார் சுரேஷ்.

சொன்னதும், “வேண்டாம் சார், அவர் சாங்கி ஏர்போர்ட்லேர்ந்து 30 மைல் தொலைவுல இருக்கார். அவர் அவ்ளோ தூரம் அங்கிருந்து வர வேணாம். நாங்க இங்கே பக்கத்துல இருக்கோம். நாங்களே வந்து உங்களைப் பிக்கப் பண்ணிக்கிறோம். நாலு மணி நேரம் பிளேன்ல உட்கார்ந்துட்டு வர்றது உங்களுக்கு ரொம்ப டயர்டா இருக்கும். இங்கே விடியற்காலை நாலேகால் மணின்னாலும் உங்க நேரப்படி மணி 2. அதனால, இங்கே வந்து படுத்து, ஒரு நாலு மணி நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு, அப்புறம் டிபன் சாப்பிட்டுட்டுக் கிளம்பிப் போங்க. அப்பத்தான் அன்னிக்கு ஒரு அரை நாளாவது வேஸ்ட் பண்ணாமல் சுத்திப் பார்க்க முடியும்” என்றார் சுரேஷ்.

“அப்படியே செய்கிறோம்” என்றேன். அதன்பின், சுரேஷ் தம்பதியின் ஆலோசனைப்படி முதல் மூன்று நாள்கள், அதாவது செப்டம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் ‘நண்பர்’ வீட்டில் தங்குவதென்றும், 4, 5 இரண்டு நாட்களும் மலேசியப் பயணத்தை முடித்துக்கொண்டு நேரே திரு.சுரேஷ் வீட்டுக்கு வந்துவிடுவது என்றும், பின் அங்கே 6, 7, 8 ஆகிய நாள்களில் மீண்டும் சிங்கப்பூரை ஒரு வலம் வருவது என்றும், பின் அங்கிருந்தே சென்னைக்குப் பயணமாவது என்றும் ஏற்பாடாகியது.

ஆக, இடத்துக்கோ சாப்பாட்டுக்கோ பிரச்னை இல்லை என்று தெளிவானதும், சிங்கப்பூரின் லேண்ட்மார்க்கான பிரசித்தி பெற்ற அந்த நீருமிழும் சிங்கச் சிலையையும், மலேசியாவில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் பத்துமலை முருகனையும் நேரிலேயே போய்ப் பார்த்துவிட்ட வந்த மாதிரியே ஒரு மனநிறைவும் சந்தோஷமும் உண்டானது.

ஆனால், சிங்கப்பூர் கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்பு… அந்தச் சந்தோஷம் அடியோடு காணாமல் போனது.


(பயணம் தொடரும்)

0 comments: