உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, October 20, 2017

ஜாய்ஃபுல் சிங்கப்பூர்… கலர்ஃபுல் மலேசியா! - 2

தங்க முடியுமா, முடியாதா?


சிங்கப்பூருக்கான ஃப்ளைட் டிக்கெட், விமானத்தின் தரத்தைப் பொறுத்து, ரூ.9,000-லிருந்து தொடங்கி, ரூ.30,000, ரூ.40,000, ரூ.60,000 என நீள்கிறது. சில நேரங்களில், சில விமான சேவைகளில் ‘ஆஃபர்’ போடுவார்கள். ரூ.1000, ரூ.2,000 எனக் குறைப்பார்கள். ஆக, போக வர ஒருவருக்கு எப்படியும் குறைந்தபட்சம் ரூபாய் 14,000 ஆகும். நாலு பேருக்கு அதுவே ரூ.56,000. அப்புறம் விசா செலவு. சிங்கப்பூர் விசா தனி, மலேசியா விசா தனி. சிங்கப்பூர் மல்ட்டிபிள் விசா என்று எடுக்க வேண்டும்; அப்போதுதான் இடையில் மலேசியா போய் தலைகாட்டிவிட்டு மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும். மலேசிய விசா ஆறு மாதத்துக்கானது. ஏற்கெனவே விசாரித்த டிராவல் ஏஜென்ட்டுகள் இந்த விசா செலவே ரூ.40,000 வரை ஆகும் என்றார்கள். ஆக, பயணச் செலவு மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்.

சிங்கப்பூரில் ஆரம்ப ஹோட்டல் ரூம் செலவே ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் நம்ம ரூபாய் மதிப்பில் ரூ.18,000 அல்லது ரூ.20,000. ஏழு நாட்களுக்கென்றால், அதுவொரு ஒண்ணரை லட்சம் ரூபாய். அப்புறம் இருக்கவே இருக்கிறது சாப்பாட்டுச் செலவு. சிங்கப்பூரில் நம் சைவ உணவுகள் கிடைப்பது அரிது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான லிட்டில் இந்தியா, சிராங்கூன் தெரு போன்றவற்றில் சங்கீதா, சரவணபவன் போன்ற சைவ உணவகங்கள் இருக்கக்கூடும். ஆனால், சிங்கப்பூரைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் சாப்பாட்டுக்கென்று பல கிலோமீட்டர் பயணித்து இங்கே வந்துகொண்டிருக்க முடியுமா?

தவிர, சிங்கப்பூரில் எல்லாமே காஸ்ட்லி! நம்ம ஊர் மதிப்பில் நான்கு மடங்கு. இங்கே ரூ.50-க்கு ஒரு ஐஸ்க்ரீம் வாங்கிச் சாப்பிட முடியுமானால், அங்கே அதற்கு சிங்கப்பூர் பணத்தில் ஐந்து டாலர் எடுத்து வைக்க வேண்டும். அதாவது, கிட்டத்தட்ட 250 ரூபாய். ஆக, ஏழு நாள் சாப்பாட்டுக்கு எங்கள் நால்வருக்கும் ரூ.70,000 தேவைப்படும்.

ஆக, அப்படியிப்படி மூணேகால் லட்ச ரூபாய். அவ்வளவுதான் செலவா?

காசை செலவழித்துக்கொண்டு அவ்வளவு தூரம் போகிறோம்; சிங்கப்பூரில் பிரசித்திபெற்ற ஸ்கைபார்க் ஹோட்டலின் உச்சியில் ஏறி நின்று, சிங்கப்பூரை ஏரியல் வியூவில் பார்க்காவிட்டால் எப்படி? ஜெயன்ட் வீல் மாதிரி பிரமாண்ட ஃப்ளையர் நம்மை உயரே கொண்டுபோய் ‘எங்கள் ஊரைப் பார், அதன் அழகைப் பார்’ என்று காட்டிக்கொண்டிருக்கிறது. அதில் ஏறிப் பார்க்காவிட்டால் ஜென்மம் எப்படிச் சாபல்யமாகும்? அதை விடுங்கள், யுனிவர்சல் ஸ்டுடியோ, செந்தோஸா பார்க் இவற்றையெல்லாம் பார்க்க வேண்டாமா? 

ஒவ்வொன்றுக்கும் அனுமதிக் கட்டணம் ஒருவருக்கு 35 டாலர், 25 டாலர் என்கிற அளவிலேயே இருந்தன. நாலு பேருக்கு சராசரியாக 100 டாலர். ஏழு நாட்களுக்கு இப்படிச் சுற்றிப் பார்க்கிற செலவு மட்டுமே 700 சிங்கப்பூர் டாலர். நம்ம ஊர் மதிப்பில் ரூ.35,000.

இதற்கு நடுவில் மலேசியா போய் வருகிற ஐடியாவும் இருக்கிறது. அங்கே போய் வருவதற்கான போக்குவரத்து செலவு, ஓட்டல் ரூம் செலவு, சாப்பாட்டுச் செலவு, சுற்றிப் பார்க்கிற செலவு என, என்னதான் குறைந்த பட்ஜெட் போட்டாலும் ரூ.50,000-வது ஆகும்.

இப்படியாக விழிபிதுங்கிக்கொண்டிருந்த நிலையில்தான், டிராவல் ஏஜென்ட் பாலச்சந்தர் எனக்கு அறிமுகமானார். அவரிடம் என்னுடைய சிங்கப்பூர் கனவைச் சொன்னேன். “நீங்க எப்போ சிங்கப்பூர் போவதாக பிளான் வெச்சிருக்கீங்க?” என்று கேட்டார்.

“பிளானெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. எப்ப வேணா போகலாம். ஃப்ளைட் டிக்கெட் விலையெல்லாம் சகாயமா அமையறப்போ போய்க்கலாம். பட்ஜெட் டூர்தான் என் பிளான்!” என்றேன்.

“அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ஜூலை மாசக் கடைசியில ஆஃபர் போடுவாங்க. ஆகஸ்ட், செப்டம்பர்னு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள்ள போயிட்டு வர மாதிரி பிளான் பண்ணிக்கலாம். பாதிக்குப் பாதி டிக்கெட்ல போயிட்டு வந்துடலாம்!” என்று நம்பிக்கை ஒளி ஊட்டினார் பாலச்சந்தர்.

சரி, சிங்கப்பூரில் ஏழு நாள்கள் தங்குவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டுமே?

சட்டென்று என் நினைவுக்கு வந்தவர் திரு. சுரேஷ். என் நாற்பதாண்டு கால நண்பர் திரு.மார்க்கபந்து அவர்களின் இரண்டாவது புதல்வர்.

இங்கே ஒரு சின்ன தகவல். ஆனந்த விகடனில் நான் எழுதிய முதல் சிறுகதை ‘விளக்கில் விழுந்த விட்டில்’. அது 1980-ல் வெளியானது. அந்தக் கதையைப் படித்துவிட்டு, ரொம்ப இம்ப்ரெஸ்ஸாகி, விகடன் அலுவலகத்தில் என் முகவரியை வாங்கி, நீளமான பாராட்டுக் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார் திரு.மார்க்கபந்து. அதில் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம் சுவாரஸ்யமானது. கதையில் ஓரிடத்தில் நான், ‘கதாநாயகியைப் பெண்பார்த்துவிட்டுப் போன இளைஞர்கள் பட்டியல் சுந்தர், சுரேஷ், மகேஷ் என நீண்டது’ என எழுதியிருந்தேன். ‘வேடிக்கை பார் ரவி, என் மூத்த மகன் பேரு சுந்தர்; இரண்டாவது மகன் பேரு சுரேஷ்; மூன்றாவது பையன் மகேஷ்’ என்று குறிப்பிட்டிருந்தார் மார்க்கபந்து. இந்த யதேச்சையான ஒற்றுமை, அவருக்கும் எனக்குமான நட்பை மேலும் இறுக்குவதில் ஓர் காரணியாகச் செயல்பட்டது.

1981-ல் நான் வேலை தேடி சென்னைக்கு வந்திருந்தபோது, திரு.மார்க்கபந்துவின் இல்லத்துக்குச் சென்றேன். அவர் அப்போது தலைமைச் செயலகத்தில் செக்‌ஷன் ஆபீசராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரின் தந்தையார் திரு.கல்யாணராமன் அவர்கள் பழம்பெரும் எழுத்தாளர். 1938, 40-களில் ஆனந்த விகடனில் நகைச்சுவைக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். அவரது ஜென்ம நட்சத்திரம் ‘மகரம்’ என்பதால், மகரம் என்கிற புனைபெயரில் அவர் கட்டுரைகள் எழுதிவந்தார்.

திரு.மார்க்கபந்துவின் மூத்த மகன் அப்போதுதான் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்திருந்தார் என நினைக்கிறேன். மற்ற இரண்டு பிள்ளைகளும் 9-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம்.

அந்த 9-ம் வகுப்பு மாணவரான சுரேஷ்தான் இன்றைக்கு சிங்கப்பூரில் ஸ்டேண்டர்ட் சார்ட்டர்டு பேங்க்கில் பணிபுரிகிறார். அவரின் துணைவியார் ஜெயஸ்ரீ, நம்ம ஊர் ரேவதி சங்கரன், மெனுராணி செல்லம் போல கிச்சன் கில்லாடி. குங்குமம் தோழி, அவள் விகடன், மங்கையர் மலர் எனப் பல பத்திரிகைகளில் சுவையான ரெசிப்பிக்களை வழங்கியுள்ளார். சமையல் கலை தொடர்பாகப் பல புத்தகங்களும் எழுதியுள்ளார். விகடன் பிரசுரம் வெளியிட்ட அவரின் ‘சிறுதானிய உணவுகள்’ விற்பனையில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. வரும் புத்தகக் காட்சிக்கு இதன் நான்காவது பதிப்பு வெளியாகிறது.

அந்த ஜெயஸ்ரீ - சுரேஷ் தம்பதியைத் தொடர்புகொண்டேன். விஷயத்தைச் சொன்னேன்.

“தாராளமாக வாங்க. இடத்தைப் பத்தியோ, சாப்பாட்டைப் பத்தியோ கவலைப்படவே வேணாம். இங்கேயே தங்கிக்கலாம். என்னிக்கு வரீங்கன்னு சொல்லுங்க” என்று உற்சாகமாக வரவேற்றார்கள்.

ஆனால், ஃப்ளைட் டிக்கெட்டை புக் செய்துவிட்டு, ‘ஆகஸ்ட் 31 புறப்பட்டு செப்டம்பர் முதல் தேதி காலை சிங்கப்பூர் வருகிறோம். முழுசாக ஒன்பது நாள்கள் அங்கே இருக்கிறோம். பின்பு அங்கிருந்து செப்டம்பர் 9-ம் தேதி சென்னை புறப்படுகிறோம்’ என்று தகவல் கொடுத்ததும், அவர்கள் சற்று தர்மசங்கடத்துக்குள்ளானார்கள்.

அவர்களின் சங்கடத்துக்குக் காரணம் இருந்தது. நாங்கள் ஆகஸ்ட் மாதம் வருவோம் என்று எண்ணியிருந்தார்கள் அவர்கள். ஆனால், செப்டம்பர் முதல் ஒன்பது நாள்கள் சிங்கப்பூரில் தங்கப்போகிறோம் என்றதும், அவர் தர்மசங்கடமுற்றதற்குக் காரணம், சரியாக அதே தினங்களில் அவரின் உறவினர்கள் சிலர் அங்கே வந்து தங்குவதாக இருந்ததுதான்.

இருந்தாலும் பெரிய மனதோடு, “பரவாயில்லை வாங்க, அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்!” என்று அன்போடு அழைத்தார்கள் ஜெயஸ்ரீசுரேஷ் தம்பதியர். எங்களை முழுமையாக உபசரிக்க முடியாமல், தேவையான வசதி செய்துகொடுக்க முடியாமல் போகுமே, எங்களை நெருக்கடிக்கு ஆளாக்கும்படி ஆகிவிட்டதே என்கிற வருத்தம் அவர்களின் குரலில் இழையோடுவதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

அவர்களுக்குச் சிரமம் தர விரும்பாமல், சிங்கப்பூரில் தங்குவதற்கான மாற்று வழிகளைத் தேட ஆரம்பித்தேன்.

(பயணம் தொடரும்)

0 comments: