டூர் கிளம்பும்போது ஆசிரியர் எஸ்.பாலு அவர்கள் தன் வீட்டிலிருந்து இட்லி, தோசை, தொட்டுக்கொள்ள மிளகாய்ப்பொடி, எள்ளுப்பொடி, பருப்புப் பொடி எனப் பலவிதமான அயிட்டங்களைத் தயார் செய்து எடுத்துக்கொண்டு வந்துவிடுவார். பயண வழியில், தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில் ஓரமாக வேனை நிறுத்தி, மரங்களின் கீழ் நிழலாக ஒரு பெரிய பவானி ஜமுக்காளத்தை விரித்து அமர்ந்துகொண்டு, எல்லோரும் சாப்பிடுவார்கள்.
அப்படி ஒருமுறை, அனைவரும் அமர்ந்து சிற்றுண்டி அருந்திக்கொண்டு இருந்தபோது, சாவி சார் அருகில் இருந்த ஒரு பூவரசு மரத்திலிருந்து ஒரு கிளையை ஒடித்தார். ஏராளமான இலைகளுடன்கூடிய அந்தக் கிளையைக் கண்டதும், ஆசிரியர் பாலுவுக்கு ஜாலி பெட் ஆர்வம் துளிர்த்துவிட்டது.
அவர் உடனே ஆசிரியர் சாவியைப் பார்த்து, “இதிலே எத்தனை இலைகள் இருக்கும்னு சொல்லுங்க, பார்க்கலாம்!” என்று கேட்டார். “400, 500 இலைகள் இருக்கலாம்!” என்றார் சாவி. “இல்லை. எண்ணிக்கையைச் சரியா சொல்லுங்க. நானூறா, ஐந்நூறா?” என்று கேட்டார் ஆசிரியர் பாலு. “நானூறு” என்றார் சாவி. “சரி, இதிலே 250 இலைகள்தான் இருக்குன்னு நான் சொல்றேன். என்ன பெட்?” என்றார் பாலு உற்சாகத்துடன்.
அதைத் தொடர்ந்து, அங்கிருந்த மற்றவர்கள் ஆளாளுக்கு ஓர் எண்ணிக்கையைச் சொன்னார்கள். யார் சொன்ன எண்ணிக்கை கிட்டத்தட்ட நெருக்கமாக வருகிறதோ, அவருக்கு மற்றவர்கள் தலா 100 ரூபாய் கொடுக்கவேண்டும் என்று பந்தயம் முடிவாகியது. உடனே அந்தக் கிளையிலிருந்து ஒவ்வொரு இலையாகப் பிய்த்து அனைவருமே எண்ணத் தொடங்கினார்கள். மொத்த இலைகளையும் பிய்த்து எண்ணி முடிக்க ஏறத்தாழ அரை மணி நேரமாகியிருக்கலாம். மொத்த எண்ணிக்கை, கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் சொன்ன எண்ணிக்கைக்கு நெருக்கமாக வந்தது. உடனே பாலு சார் தன் கைப்பையைத் திறந்து அனைவரின் சார்பாகவும் தானே அந்தப் பந்தயத் தொகையை, இலைகளின் எண்ணிக்கையைச் சரியாகச் சொன்ன அந்த உதவி ஆசிரியருக்கு அப்போதே வழங்கினாராம்.
இந்தத் தகவலைச் சொல்லிவிட்டு, “இலையாவது, எண்ணுறதாவது... இதுக்கு ஒரு பெட் அவசியமா? பாலுவுக்கு இதென்ன வேண்டாத வெட்டிவேலை என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், தனக்கும் சக ஊழியர்களுக்கும் இடையே ஒரு நெருக்கத்தை உண்டாக்கவும், அவர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்தை வைத்துப் பண உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும்தான் அவர் அடிக்கடி இப்படி அல்ப காரணங்களுக்காக பெட் கட்டி விளையாடுகிறார் என்பதைப் பிறகு புரிந்துகொண்டேன்” என்றார் ஆசிரியர் சாவி.
அவர் சொன்ன இன்னொரு பெட் சம்பவம் சுவையானது.
ஆசிரியர் பாலுவுடன் சாவி மற்றும் அன்றைக்கிருந்த உதவி ஆசிரியர்கள் பலரும் சுற்றுலாப் பொருட்காட்சிக்குச் சென்றிருக்கிறார்கள். விதம் விதமான கடைகளை ஜாலியாகச் சுற்றிப் பார்த்துக்கொண்டே வந்தவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, ஆசிரியர் பாலுவுக்கு பெட் வைத்து விளையாடும் ஆசை முளைத்துவிட்டது.
வழக்கம்போல் ஏதோ ஓர் அல்ப காரணத்துக்கான பந்தயம்தான். ஆனால், பெட் என்ன தெரியுமா? பந்தயத்தில் ஆசிரியர் பாலு தோற்றுவிட்டால், மற்ற அனைவருக்கும் அந்தச் சுற்றுலாப் பொருட்காட்சிக் கடைகளிலிருந்து அப்போதே, அங்கேயே அவரவர் கேட்கும் ஏதேனும் ஒரு பொருளை வாங்கிப் பரிசளிப்பார். நாளை என்று ஒத்திப் போடமாட்டார். அதுவே, பந்தயத்தில் ஆசிரியர் ஜெயித்துவிட்டால், அனைவரும் சேர்ந்து அவர் கேட்கும் பொருளை வாங்கித் தரவேண்டும்.
பந்தயம் என்ன என்பது ஞாபகத்தில் இல்லை (என் ஞாபகத்தில் அல்ல; ஆசிரியர் சாவியின் ஞாபகத்திலேயே இல்லை). ஆனால், அந்தப் பந்தயத்தில் ஆசிரியர் பாலு தோற்றுவிட்டார். முன்பே சொன்னதுபோல், நண்பர்களிடம் தோற்றாலும் சந்தோஷம்தான், பெரிய மனிதர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களுக்கு.
“சரி, கேளுங்கோ! நீங்க கேட்பதை இப்போதே, இந்த க்ஷணமே வாங்கித் தரேன்” என்றார் பாலு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கேட்டார்கள். ஒருத்தர் பிளாஸ்க் கேட்டார். மற்றவர் பெண்டுலம் கடிகாரம் கேட்டார். வேறொருத்தர் மடக்கு நாற்காலி கேட்டார். இப்படி ஆளாளுக்கு ஒவ்வொன்று கேட்க, அனைத்தையும் உடனுக்குடன் வாங்கித் தந்தார் ஆசிரியர் பாலு. எல்லாமே 100 ரூபாய், 200 ரூபாய்க்குள் முடிகிற பொருள்கள்.
இப்போது கடைசியாக ஆசிரியர் சாவியின் முறை. “சொல்லுங்கோ சாவி, உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டார் ஆசிரியர் பாலு.
குறும்புத்தனமும் புத்தி சாதுர்யமும் சமயோசிதமும் நிரம்பியவர் சாவி சார் . அதனால்... “பாலு, ஞாபகம் வெச்சுக்கோங்க. நாளைக்குன்னு ஒத்திப் போடாம இப்போதே, இந்த க்ஷணமே நான் கேட்பதை வாங்கித் தரேன்னு சொல்லியிருக்கீங்க!” என்ற பீடிகையுடன், ஆசிரியர் பாலுவை அங்கிருந்த ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். அது எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்கும் கடை.
அங்கே மிக மிக விலை உயர்ந்ததான ரேடியோவும் கிராமபோன் பிளேயரும் இணைந்த ஒரு ‘டெக்’கைக் காண்பித்து, அதைத் தனக்கு வாங்கித் தரும்படி கேட்டார் சாவி. அதன் விலை கிட்டத்தட்ட ரூ.5,000. அந்தக் காலத்தில் அது மிக அதிக தொகை. ஜாலியாக வேடிக்கை பார்க்க வந்த இடத்தில் அத்தனை பெரிய தொகையை எடுத்து வந்திருக்க மாட்டார் பாலு சார், இதை வைத்தே அவரை மடக்கிவிடலாம் என்கிற உத்தேசத்தில் சாவி சார் அதைக் கேட்டு வைக்க, “அதுக்கென்ன, தாராளமா வாங்கிக்கோங்க!” என்று இடுப்பு வேட்டி மடிப்பில் முடிந்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தாராம் ஆசிரியர் பாலசுப்ரமணியன்.
சாவி சார் உடனே பதறி, “இல்லை பாலு! உங்களை மடக்கணும்கிறதுக்காகத்தான் அப்படிக் கேட்டேன். எனக்கு இது வேண்டாம். ஏதாவது சின்ன பரிசாக வாங்கிக் கொடுங்கள்” என்று சொல்ல, “இல்லையில்லை. நான் சொன்னால் சொன்னதுதான். நீங்கள் கேட்டதுபோல் அந்த டெக் உங்களுக்குதான். பிடியுங்கள் 5,000 ரூபாய்” என்றார் பாலு.
மற்றவர்கள் மயக்கம் போடாத குறை. பாலு சார் எங்கே இத்தனை பெரிய தொகையை எடுத்து வந்திருப்பார் என்றெண்ணி, சொற்பத் தொகையில் ஒரு பரிசை வாங்கிக்கொண்டோமே, சாவி சாருக்கு அடித்ததே பம்பர் பிரைஸ் என்று பொருமித் தீர்த்துவிட்டார்கள்.
தர்மசங்கடமாகிவிட்டது சாவி சாருக்கு. வேண்டாமென்றாலும் பாலு கேட்கமாட்டேனென்கிறார். மற்றவர்களுக்கு இதனால் தன் மீது கசப்பு உணர்ச்சி வந்துவிடுமோ என்று அதை வாங்கிக் கொள்ளத் தயக்கம்! இறுதியில்...
“பாலு, உங்க கிட்டே நான் இப்போ ஒரு உண்மையைச் சொல்லிடறேன். நீங்க இடுப்புல எக்கச்சக்கமான பணம் முடிஞ்சு வெச்சிருக்கிறது எனக்கு ஏற்கெனவே தெரியும். அது தெரிஞ்சு, வேணும்னேதான் இத்தனை பெரிய பரிசுப் பொருளை வாங்கித் தரமுடியுமான்னு கேட்டேன். இது தப்பு. எனக்கு இது வேண்டாம்!” என்று மீண்டும் மறுத்தார் சாவி.
“என்கிட்டே பணம் இருக்கிறது உங்களுக்குத் தெரிஞ்சாதான் என்ன? அதுக்கும் நான் உங்க கிட்டே பெட் கட்டினதுக்கும் என்ன சம்பந்தம்? இதோ பாருங்கோ சாவி, என்னை வாக்குத் தவறினவனா ஆக்கிடாதீங்கோ!” என்று ஸ்ட்ரிக்டாகச் சொன்ன பாலசுப்ரமணியன், சாவி சார் விரும்பியபடியே அந்த ரேடியோ கம் கிராமபோன் பிளேயரைப் பரிசுப் பொருளாக பிடிவாதமாக வாங்கிக் கொடுத்துவிட்டாராம்.
நான் விகடனில் பணியில் சேர்ந்த பின்னர், 1997 வாக்கில் என நினைக்கிறேன்... சாவி சார் ஆசிரியர் பாலசுப்ரமணியனைச் சந்திக்க விரும்பினார். அதை இவரிடம் சொல்லி, ஆசிரியர் சாவியை நானே சென்று அழைத்து வந்தேன். மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு பத்திரிகைப் பிதாமகர்கள் இருவரும் மனம் விட்டு, நெகிழ்ந்து பழைய ஞாபகங்களைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தபோது, நானும் அருகிலேயே இருந்தேன்.
அப்போது இந்த சுற்றுலா பொருட்காட்சி பெட் விஷயத்தை நினைவுகூர்ந்தார் ஆசிரியர் சாவி. “ஆமாம், நல்லா ஞாபகம் இருக்கு. அன்னிக்கு என்கிட்டே அவ்வளவு தொகை இருந்தது உங்களுக்குத் தெரியும்னும் எனக்கு முன்பே தெரியும்!” என்றார் ஆசிரியர் பாலு.
“தெரியுமா? எப்படி? அத்தனை பணத்தை நீங்க இடுப்பு வேட்டியில் முடிஞ்சு வெச்சிருக்கிறது யாருக்குமே தெரியாதே! இத்தனைக்கும் நீங்க நீளமான ஜிப்பா வேற போட்டிருந்தீங்களே! அப்படியிருக்கிறப்போ எனக்குத் தெரியும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார் சாவி, ஆச்சரியத்துடன்.
“அதுவா... அதிக பணம் இருந்ததால என் கை தன்னிச்சையா என் இடுப்பு மடிப்பை அடிக்கடி தொட்டுத் தொட்டுப் பார்த்துட்டிருந்துது. மத்தவங்க யாரும் அதை கவனிக்கலே. ஆனா, நீங்க மட்டும் கவனிச்சதை நான் கவனிச்சேன். நாளைக்குன்னு ஒத்திப் போடாம இன்னிக்கே நீங்க கேக்கற பரிசை நான் வாங்கித் தரேன்னு சொன்னதும், சரிதான், என்கிட்டே பெரிய தொகை இருக்கு, அதை இடுப்புல முடிஞ்சு வெச்சிருக்கேன்னு யூகம் பண்ணிட்டீங்க. மிக விலை உயர்ந்த பரிசுப் பொருளை நீங்க கேட்டப்பவே அது ஊர்ஜிதமாயிடுச்சு. உங்களோட அந்த அதீதமான ஆப்சர்வேஷனுக்கான பரிசாதான் அந்தப் பொருளை நான் வாங்கிக் கொடுத்தேன். உண்மையான பத்திரிகையாளனுக்கு அப்படியான கழுகுப் பார்வை வேணும்!” என்றார் எஸ்.பாலசுப்ரமணியன்.
பத்திரிகையுலக மேதைகள் இருவரிடம் பணிபுரிந்த பாக்கியம் எனக்கு. இந்த ஒரே ஒரு தகுதிதான் என்னை சுமார் 30 ஆண்டுகளாக இந்தப் பத்திரிகையுலகில் தாக்குப் பிடித்துக்கொண்டிருக்க வைத்திருக்கிறது.
(இன்னும் சொல்வேன்)
2 comments:
Post a Comment