உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, February 14, 2016

என் புகுந்த வீடு - 8

கோடியில் ஒருவர்!
சாவி பத்திரிகையில் 1986 மே முதல் 1995 ஏப்ரல் வரை  நான் பணியாற்றிய அந்த ஒன்பது ஆண்டுகளில், முதல் மூன்று ஆண்டுகளைத் தவிர மற்ற ஆறு ஆண்டுகளும் பத்திரிகையின் முழுப் பொறுப்பையும் என்னை நம்பி ஒப்படைத்திருந்தார் ஆசிரியர் சாவி.

பத்திரிகையில் அவர் கட்டுப்பாட்டில் இருந்த விஷயங்கள் தலையங்கம், கார்ட்டூன், கேள்வி-பதில், ஜோக்ஸ் ஆகியவை மட்டுமே! எப்போதேனும் குறிப்பிட்ட ஒரு விஷயம் பற்றிய கட்டுரையையோ, அல்லது குறிப்பிட்ட நபரின் பேட்டியையோ வெளியிடச் சொல்வார். அதைத் தவிர, பத்திரிகைத் தயாரிப்பின் அன்றாட நடவடிக்கைகள் எதிலும் அவர் தலையிட்டதில்லை.

தலையங்கத்தை அவரே எழுதுவார். சில நேரம் ராணிமைந்தன் எழுதித் தர, அதை சாவி சார் திருத்திக் கச்சிதமாக்குவார். சாவி சாரின் மாப்பிள்ளைகளில் ஒருவரான அர்த்தநாரி சிறந்த எழுத்தாளரும்கூட. ஆங்கிலத்தில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழிலும் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் சில காலம் தலையங்கம் எழுதித் தந்துகொண்டிருந்தார். அதையும் சாவி சார் பார்த்துத் திருத்தி, எடிட் செய்து கொடுப்பார்.

பொதுவாக, தலையங்கம், கார்ட்டூன் இவை இரண்டும் ஒரு பத்திரிகைக்கு மிக முக்கியம் எனப் பிடிவாதமாக அவற்றை சாவி அவர்கள் தமது பத்திரிகையில் திணித்ததே இல்லை. பல காலம் அவை இரண்டும் இல்லாமலே சாவி இதழ்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆனந்த விகடனைப் பொறுத்தவரையில் தலையங்கமும் கார்ட்டூனும் அதன் இரு கண்களாக, காலம் காலமாக இருந்து வருகின்றன. அந்த இரண்டையும் பங்களிக்கக்கூடிய திறமையான எழுத்தாளர்களும் கார்ட்டூனிஸ்ட்டுகளும் தொடர்ந்து விகடனுக்குக் கிடைத்துக்கொண்டிருப்பதும் அதற்கு ஒரு காரணம்.

சாவி சார் ஆனந்த விகடனில் எஸ்.எஸ்.வாசனிடமும் பணியாற்றியிருக்கிறார்; அவருக்குப் பின் அவரின் புதல்வர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களிடமும் பணியாற்றியிருக்கிறார். எஸ்.எஸ்.வாசன் அவர்களிடம் தலையங்கத்தின் டிராஃப்ட் ரெடி செய்து புரூஃப் எடுத்து அனுப்பினால், அவரே உட்கார்ந்து அதில் அடித்தல் திருத்தல் செய்து, பக்காவாகச் செய்து கொடுத்துவிடுவாராம். பாலசுப்ரமணியனின் பாணி வேறு!

நான் அறிந்தவரையில், உதவி ஆசிரியர்களுக்குள் டிஸ்கஸ் செய்து, என்ன தலைப்பில் தலையங்கம் எழுதலாம் என யோசித்து முடிவு செய்து, முதலில் ஒருவர் எழுத, இன்னொருவர் அதில் திருத்தங்கள் செய்ய, ஃபைனல் புரூஃப் ஆசிரியரின் பார்வைக்குப் போகும். அவர் ஆசிரியர் குழுவில் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, தலையங்கத்தில் செய்யவேண்டிய திருத்தங்கள் குறித்து டிஸ்கஸ் செய்வார். பின்னர் திருத்தப்பட்ட தலையங்கம் மீண்டும் ஆசிரியரின் பார்வைக்குப் போகும். அதில் சின்னச் சின்ன திருத்தங்கள் செய்வார். அது ஃபைனலாகி, அச்சுக்குப் போகும்.

ஆனால், விகடனில் சாவி சார் பணியாற்றிய காலத்தில் இருந்த முறை வேறு. சாவி சாரின் வாய்மொழியாகவே அதை இங்கு தருகிறேன்.

“தலையங்கம் நான் எழுதுவேன். மணியன் எழுதுவார். முகுந்தன்னு ஒருத்தர் இருந்தார். அவரும் எழுதுவார். சில சமயம் டிஸ்கஸ் பண்ணி எழுதறதும் உண்டு. முதல்ல ஒரு டிராஃப்டை ரெடி பண்ணுவோம். கம்போஸ் பண்ணுவோம். ‘தலையங்கம் ரெடி சார்’னு ஒருத்தர் போய் பாலு கிட்டே சொல்லுவார். ‘வரச் சொல்லுங்கோ’ன்னுவார் பாலு.

கம்போஸ் ஆன ‘கேலி’யை எடுத்துண்டு எல்லோரும் போவோம். அவர் முன்னே உட்காருவோம் (Galley என்பது நியூஸ்பிரிண்ட் தாளில் டிரெடில் மெஷினில் எடுத்த புரூஃப்.).

‘என்ன டாபிக்?’னு கேட்பார். சொல்லுவோம். ‘யாராவது ஒருத்தர் வாய்விட்டுப் படியுங்கோ’ன்னுவார். எங்கள்ல யாராவது படிப்போம்.

படிக்கிறதுன்னா வெறுமே வரிகளைப் படிச்சிண்டு போறது இல்லே. தலைப்புன்னு சொல்லிட்டு தலைப்பைப் படிக்கணும். மேற்கோள் குறிகள் தொடங்கினா, ‘இன்வெர்ட்டட் கமாஸ் பிகின்’னு சொல்லிட்டு அந்த வரியைப் படிக்கணும். சிங்கிள் கொட்டேஷனா இருந்தா அதையும் சொல்லிட்டுதான் அந்த வார்த்தையை, வரியைப் படிக்கணும். அதுபோல, முடிக்கும்போதும் ‘இன்வெர்ட்டட் கமாஸ் எண்ட்’ சொல்லணும். கமா வர இடத்துல கமா, முற்றுப்புள்ளி வர இடத்துல ஃபுல்ஸ்டாப்னு சொல்லிட்டுதான் மேலே படிக்கணும். அடுத்த பாராவா இருந்தா மறக்காம நெக்ஸ்ட் பாரான்னு சொல்லிட்டுதான் அந்தட் பாராவைப் படிக்க ஆரம்பிக்கணும்.

நாங்க படிக்க ஆரம்பிச்சதும் பாலு கைகளைக் கட்டிண்டு, கண்களை மூடிண்டு தியானத்துல உட்கார்ந்திருக்கிற மாதிரி அமைதியா இருப்பார். படிக்கிறவரைத் தவிர வேற யாரும் பேசக்கூடாது. அதுபோல தலையங்கத்தை முழுசா படிச்சு முடிக்கிற வரைக்கும் அவரும் குறுக்கிட மாட்டார்.

அன்னிக்கு அப்படித்தான், முகுந்தன் தலையங்கத்தைப் படிக்கிறார். நாங்கள்ளாம் பக்கத்துல அமைதியா உட்கார்ந்திருக்கோம். பாலு வழக்கம்போல கைகளைக் கட்டிண்டு, கண்களை மூடிண்டு, அமைதியா உட்கார்ந்திருக்கார்.

முகுந்தன் தலையங்கத்தை நிறுத்தி, நிதானமா, தெளிவா படிச்சு முடிச்சுட்டு அமைதியா இருக்கார்.

“முடிஞ்சுடுத்தா? இன்னும் ஏதாவது வரிகள் இருக்கா?”ன்னு கேட்டார் பாலு.

“அவ்வளவுதான் சார்!”னார் முகுந்தன்.

“சரி, இந்தாங்கோ பேனா. நான் சொல்ற கரெக்‌ஷன்களை அப்படியே சைடுல குறிச்சுக்குங்கோ. சொல்லட்டுமா?”ன்னார் பாலு.

“ம்... சொல்லுங்க சார்!”னு தயாரானார் முகுந்தன். மறுபடியும் பாலு கண்களை மூடிண்டார்.

“முதல் பாராவுல நாலாவது வரியில ‘பேதம்’கிற வார்த்தைக்குப் பதிலா ‘வேற்றுமை’ன்னு போட்டுக்கோங்கோ. அப்புறம், ரெண்டாவது பாராவின் கடைசி வாக்கியத்தை முதல் பாராவின் கடைசி வாக்கியமா கொண்டு வாங்கோ. அங்கேதான் அது இன்னும் ஆப்டா பொருந்தறது. ஆச்சா?

மூணாவது பாராவுல ரெண்டாவது வரியில ‘போர்க்கொடி எழுப்பி’ன்னு போட்டிருக்கேள். அவா போர்க்கொடியெல்லாம் எழுப்பலே. அது தப்பு. அதை டெலீட் பண்ணிடுங்கோ.

நாலாவது பாராவுல முதல் இரண்டு வாக்கியங்களை சுழிச்சு வெச்சுக்கோங்க. அதை என்ன பண்ணணும்னு அப்புறம் சொல்றேன். அடுத்த வரி, நியாயமா டபுள் கொட்டேஷன்ல ஆரம்பிக்கணும். போட்டிருந்து, படிக்கும்போது சொல்ல மறந்துட்டேளோ என்னவோ! டபுள் கொட்டேஷன் போடலைன்னா போட்டுக்கோங்க. அது எங்கே முடியறது தெரியுமா, ’உரிமைகளைப் பெறுவோம்’கப்புறம் டபுள் கொட்டேஷன் எண்ட். சரியா?

அஞ்சாவது பாராவுல  கடைசி சென்ட்டென்ஸ் மட்டும் வேண்டாம். அது அங்கே அநாவசியம். நீக்கிடுங்கோ. மத்தபடி அதுல வேற எந்தத் திருத்தமும் இல்லை.

இப்போ, அங்கே நாலாவது பாராவுல ரெண்டு சென்ட்டென்ஸை சுழிக்கச் சொன்னேனே, அதை இங்கே ஆறாவது பாராவா போட்டுக்கோங்க. தலையங்கத்துக்கு முத்தாய்ப்பா ஒரு ஃபினிஷிங் கிடைச்ச மாதிரி இருக்கும்.” என்ற பாலு, “இப்போ நான் சொன்ன கரெக்‌ஷனையெல்லாம் செய்துட்டு ஒரு தடவை படியுங்கோ!” என்றார்.

படிச்சார் முகுந்தன். என்ன ஆச்சரியம்...! தலையங்கம் மிகக் கச்சிதமா , கோர்வையா அமைஞ்சிருந்தது. அவர் நீக்கச் சொன்ன வரி இப்போ எங்களுக்கும் தேவையில்லேன்னுதான் பட்டது. அதே மாதிரி அவர் சொன்ன மாற்றங்கள், திருத்தங்கள் எல்லாம் 100 சதவிகிதம் ஒத்துக்கறாப்ல இருந்தது. முடிவும் நச்சுனு அமைச்சிருந்துது. மொத்தத்துல, முன்னே இருந்த சிக்கல்கள், குழப்பங்கள் எல்லாம் காணாம போய், ரொம்பத் தெளிவா இருந்துது தலையங்கம்.

இத்தனைக்கும் அவர் புரூஃபை கையிலேயே வாங்கலை. வெறுமே படிக்கச் சொன்னார். அதைக் காதால கேட்டு உள்வாங்கிண்டார். முகுந்தன் படிக்கப் படிக்க, பாலுவின் மனசுக்குள்ளே ஒரு வெள்ளைப் பேப்பர்ல அந்த வார்த்தைகள் அச்சுக் கோத்தாப்ல தோணியிருக்கும்னு நினைக்கிறேன். அதை மானசீகமா பார்த்துதான் அத்தனை கரெக்‌ஷன்களையும் துல்லியமா சொன்னார். இத்தனை அபூர்வமான நினைவாற்றல் லட்சத்துல ஒருத்தருக்கு, கோடியில ஒருத்தருக்குதான் அமையும்! அப்ப்பா...! மெரண்டுட்டேன். என்ன மாதிரி மனுஷர் இவர்!”

விகடன் ஆசிரியர்   பாலசுப்ரமணியன் பற்றி சாவி சார் அன்று சொன்னபோது, கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்கிறாரோ என்றுதான் நினைத்தேன். பின்னாளில் எனக்கே நேரடியாக வேறொரு விதத்தில் அந்த அனுபவம் கிடைத்த பிறகு, சிலிர்த்துப் போனேன்.

விகடன் ஆசிரியரின் நினைவாற்றல் பற்றி மட்டுமல்ல... தான் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி, மற்றவர்கள் தன்னிடம் பணிபுரியும் உதவி ஆசிரியர்கள் என்றெல்லாம் பாராது, மிகவும் நட்புரிமையோடு எளிமையாய் அவர் பழகிய விதம், விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பாங்கு, அவரிடம் இருக்கும் சமையல் கலை, அடிக்கடி அனைவரையும் அழைத்துக்கொண்டு காரில் டூர் போன அனுபவங்கள் எனப் பலவற்றை சாவி சார் என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

பெட் கட்டி விளையாடுவதில் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனுக்கு அலாதி பிரியம் உண்டாம். தான் அந்தப் பந்தயத்தில் தோற்றாலும் அவர் அதற்காகக் கவலைப்பட மாட்டாராம். அந்தப் பலன் தன்னைச் சேர்ந்தவர்களுக்குத்தானே போகிறது என்று மகிழ்ச்சியோடு அந்தத் தோல்வியை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வாராம்.

அப்படி ஒருமுறை பாலு சாரோடு பெட் கட்டி விளையாடியபோது, தான் அடித்த பம்பர் பிரைஸைப் பற்றி ரசனையோடு சொல்லியிருக்கிறார் சாவி சார்.

(இன்னும் சொல்லுவேன்)

4 comments:

//இத்தனை அபூர்வமான நினைவாற்றல் லட்சத்துல ஒருத்தருக்கு, கோடியில ஒருத்தருக்குதான் அமையும்! அப்ப்பா...! மெரண்டுட்டேன். என்ன மாதிரி மனுஷர் இவர்!”//

உண்மையிலேயே இதைப்படித்த நானும் மிரண்டுதான் போனேன். அபூர்வமான + ஆச்சர்யமான மனிதர் !

தங்களின் இந்தத்தொடர் படிக்கப்படிக்க எனக்கு மிகவும் ஆனந்தமாக உள்ளது. தொடரட்டும். வாழ்த்துகள்.
 
அபாரம்
 
Thank you sir...waiting for your posts...
 
அற்புதம் சார். இப்படி ஒரு அபூர்வமான மனிதரோடு அத்தனை நெருக்கமாகப் பழகியிருக்கும் உங்களை நினைத்தால் பொசபொசவெறு பொறாமையாக இருக்கிறது.பர்சனலாக ஒன்று கேட்க வேன்டும். அதை உள்பெட்டிக்கு வந்து கேட்கிறேன். - பட்டுக்கோட்டை பிரபாகர்