மறக்க முடியுமா?
சாவி பத்திரிகையில் நான் பணியாற்றிய காலத்தில், சாவி சார் இன்னொரு பத்திரிகையாளரைப் பற்றி அதிகம் வியந்து என்னிடம் சிலாகித்துப் பேசியது விகடன் சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களைப் பற்றித்தான்.
அதற்கு முன்பே திரு.எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களைப் பற்றி ஓரளவு நான் அறிந்திருந்தாலும், 80-களில் விகடன் பரிசீலனைக்கு நான் அனுப்பிய சிறுகதை தொடர்பாக, புதிதாக எழுதத் தொடங்கும் ஓர் எழுத்தாளனுக்கே உரிய (?) ‘தார்மீக’(!) கோபத்தோடு கடிதம் வாயிலாக அவரோடு வாதப் பிரதிவாதத்தில் ஈடுபட்ட நேரத்தில் அவர் காட்டிய பெருந்தன்மையை இரண்டு முறை அனுபவரீதியாக உணர்ந்திருந்தாலும், சாவி சார் விகடன் சேர்மனைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட பல விஷயங்கள் திரு.எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் மீது எனக்கிருந்த மரியாதையையும் வியப்பையும் பல மடங்கு உயர்த்தின. இயன்றவரை நினைவுகூர்ந்து ஒவ்வொன்றாகப் பகிர்ந்துகொள்கிறேன்.
முதலில், விகடன் சேர்மனின் நினைவாற்றல்!
ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் ஆனந்த விகடன் ஆசிரியர் குழுக் கூட்டம், ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெறும். அவர் தமது பழைய ஆசிரியர் குழாம் அனுபவங்கள், பறவை வளர்ப்பு, சினிமா என சுவாரஸ்யத்தோடு பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள, நாங்கள் வாய் பிளந்து, வியப்போடு கேட்டுக்கொண்டிருப்போம்.
ஒருமுறை, ஞாபகசக்தி பற்றிப் பேச்சு ஓடியது. “மறதி என்பது பெரிய வரம். தேவையில்லாத குப்பைகளை மனசுல சுமக்க வேணாம். உங்களுக்கெல்லாம் எந்த ஒரு விஷயமும் சட்டுனு மறந்து போயிடுதுன்னு சொல்றதைக் கேக்கறப்போ எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. என்னால எந்த ஒரு விஷயத்தையும் மறக்கவே முடியலே. மறக்கணும் நினைக்க நினைக்க அந்த விஷயம் இன்னும் இன்னும் ஆழமாதான் மனசுல பதியுது. மனசே பாரமாகித் திணறிக்கிட்டிருக்கேன் நான்” என்றார்.
“ஒரு விஷயம் நம்ம மனசுல பதியுறதும் பதியாததும், அந்த விஷயத்தின் முக்கியத்துவத்தைப் பொறுத்ததுதான், இல்லையா சார்?” என்று கேட்டேன் நான்.
“உண்மைதான்! ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் முக்கியம், முக்கியமில்லாததுங்கிற பாகுபாடே இல்லாம, எல்லாமே என் மனசுல அழுத்தமா பதிஞ்சுடுது. அதுதான் கஷ்டமா இருக்கு!” என்றார். தொடர்ந்து...
“ஒரு உதாரணம் சொல்றேன்... கொஞ்ச நாளைக்கு முன்னால உறவு முறைகள் பற்றிப் பேசினோம் இல்லையா..? அப்போ உங்க பாட்டி பேர் என்ன, அத்தை பேர் என்ன என்றுகூடக் கேட்டேனே, ஞாபகம் இருக்கா?” என்றார்.
ஆமாம்! அது நடந்து நாலைந்து மாதங்கள் இருக்கும். அந்தக் காலத்தில் அப்பா, பெரியப்பா, அத்தை, அவர்களின் வாரிசுகள் எனக் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் 30, 40 பேருக்கு மேல் வாழ்ந்தது, இன்றைக்குப் பெற்றோர்களைக் கொண்டு போய் முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டுப் பிள்ளைகள் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் போய் செட்டிலாகிவிடுவது, வெளிநாடுகளில் பெற்றவர்கள் இறுதிக் காலத்தில் தங்கள் வாரிசுகள் தங்களை வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்று கருதாமல், தங்களுக்கென பணத்தைச் சேமித்துக்கொண்டு தாங்களே தனி ஃப்ளாட் எடுத்து சொந்தக் காலில் தங்க விரும்புவது, சீனியர் சிட்டிஸன்களுக்கு அங்குள்ள மரியாதை... எனப் பலவிதமாக அப்போது பேச்சு ஓடியது.
அதன் ஓர் அங்கமாகத்தான் ஆசிரியர் என்னிடம், “உங்க பாட்டி பேர் என்ன? அத்தை பேர் என்ன? உங்களால சொல்ல முடியுமா?” என்று கேட்டிருந்தார். சொன்னேன்.
“உங்களால சொல்ல முடியுது. ஆனா, இனிமே வர ஜெனரேஷன்கிட்டே கேட்டுப் பாருங்க. அவங்களால சொல்ல முடியாது. அந்தக் கூட்டுக் குடும்ப முறை கொஞ்சம் கொஞ்சமா சிதைஞ்சுக்கிட்டே வருது. நமக்கு உறவுகள் முக்கியம். மாமா, அத்தை, அவர்களின் பிள்ளைகள், ஒன்றுவிட்ட சித்தப்பா, ஒன்றுவிட்ட நாத்தனார் என்று நமது உறவு முறைகள் நீளும். வெளிநாடுகளில் இந்தக் கட்டமைப்பைப் பார்க்க முடியாது. அவர்களின் வாரிசுகள் கொஞ்சம் தலையெடுத்ததுமே சொந்தக் காலில் நிற்கத் தொடங்கிவிடுவார்கள். அவர்களே உருண்டு, புரண்டு, வாழ்க்கையில் அடிபட்டு, முன்னுக்கு வருவார்கள். அப்பா, அம்மாவைச் சார்ந்து இருக்க மாட்டார்கள். இங்கே அப்படி இல்லை. பையனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கிற வரைக்கும் அவனுக்குப் பெற்றோர் பாதுகாப்பாக இருப்பார்கள்...” என்று, அன்றைக்கு வேறொரு டாப்பிக்கில் பேசிக்கொண்டிருந்தார் ஆசிரியர்.
“ஆமா சார், ஞாபகம் இருக்கு. என்னோட பாட்டி பேர், அத்தை பேர் என்னன்னு கேட்டீங்க...” என்று நான் பதில் சொல்லத் தொடங்கும்போதே, “இருங்க. நான் சொல்றேன்” என்று தடுத்தார் ஆசிரியர். அடுத்து...
“உங்க பாட்டி பேர் லட்சுமி; அத்தை பேர் அலமேலு. கரெக்டா?” என்று அவர் கேட்க, சிலீரென்று உறைந்தாற்போல் ஆனேன் நான். மிகச் சரியே அவர் சொன்னது.
“எப்படி சார்...?” என்று வியப்பின் உச்சத்தில் கொஞ்சம் கத்தியேவிட்டேன். நான் மட்டுமல்ல; கூட்டத்தில் இருந்த அத்தனை பேருமே ஆசிரியரின் இந்த அபார நினைவாற்றலைக் கண்டு அசந்துபோய்விட்டார்கள்.
“அன்னிக்கு வேற எதுக்கோ பேசினோம். அப்போ பேச்சோடு பேச்சாகச் சொன்ன உங்க பாட்டி, அத்தை பேர்களை ஞாபகம் வெச்சுக்கணும்னு எனக்கென்ன அவசியம்? ஆனா, அன்னிக்கு நீங்க சொன்னது இன்னமும் தெளிவா ஞாபகம் இருக்கே! மனசுல வந்து விழற ஒவ்வொரு தகவலும் அப்படியே வஜ்ரம் போட்ட மாதிரின்னா ஒட்டிக்கிறது. இதுதான் என்னோட பிராப்ளமே!” என்று ஆசிரியர் சொன்னபோது ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றோம் நாங்கள்.
விகடன் சேர்மனின் நினைவாற்றல் குறித்து ஆசிரியர் சாவி பல ஆண்டுகளுக்கு முன்னால் என்னிடம் பகிர்ந்துகொண்ட தகவல் இதைவிட ஆச்சரியம் தரக்கூடியது. நம்பவே முடியாதது.
நம்ப முடியாத காரணத்தினால்தானோ என்னவோ, ஆசிரியர் சாவி அன்று அதைச் சொன்னபோது அதை ஒரு தகவலாக மட்டுமே கேட்டுவிட்டு, கொஞ்சம்போல் ஆச்சரியப்பட்டுவிட்டு, அத்தோடு மறந்துவிட்டேன்.
இப்போது நேரடி அனுபவமாக அதை நானே உணர்ந்தபோது, அன்று அவ்வளவாக ஆச்சரியப்படாததற்கும் சேர்த்து வியப்பு, திகைப்பு, சிலிர்ப்பு என சகலவிதமான உணர்ச்சிகளுக்கும் ஆளானேன்.
சரி, சாவி சார் பகிர்ந்துகொண்ட அந்த அனுபவம்தான் என்ன?
(இன்னும் சொல்வேன்)

1 comments:
Post a Comment