உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, January 09, 2012

மீண்டும் சாவியிடமே..!

“ஆசிரியர் சாவியிடம் கோபித்துக்கொண்டு வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் நேரிட்டது. பொதுவாக ஏற்கெனவே இரண்டு முறை நான் இப்படிக் கோபித்துக்கொண்டு போயிருந்தாலும், அதிகபட்சமாக இரண்டு மாத காலத்துக்குள் சாவியிடமே வந்திருந்தேன். ஆனால், அந்த முறை அப்படி நான் மீண்டும் சாவி பத்திரிகைக்குத் திரும்பி வர விரும்பவில்லை. எனவே, ‘அமுதசுரபி’ பத்திரிகையில் சேர்ந்துவிட்டேன்.

ஆனால், ஏழெட்டு மாத காலம் அங்கே பணியாற்றிவிட்டு, பின்பு மீண்டும் சாவியிடமே வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை. அதை மிக விரைவில் அடுத்த பதிவில் எழுதுகிறேன்’’ என சமீபத்திய பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன்.

அதென்ன கதை?

’மண் மணம் கமழும் மாவட்டச் சிறுகதைப் போட்டி’ எனத் தலைப்பிட்டு, வட்டார வழக்கில் சிறுகதை எழுதும் போட்டி ஒன்றை சாவியில் அறிவித்திருந்தேன். அதற்கு வந்த கதைகள் அனைத்தையும் அவ்வப்போது படித்து செலக்ட் செய்து, வாரம் ஒரு சிறுகதையாக வெளியிட்டு வந்தேன். கதைத் தேர்வுகள் முடிந்து, ரிசல்ட்டும் அறிவிக்கப்பட்டு (இந்தப் போட்டியில் எழுத்தாளர் சுஜாதா நடுவராக இருந்த விவரம் குறித்து வேறொரு பதிவில் எழுதியிருக்கிறேன்.) விழா ஒன்றுக்கு ஏற்பாடாகி, விழா மேடையில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்குப் பரிசுகளும் கொடுக்கப்பட்ட பின்பு, சில வாரங்கள் கழித்து, ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் ஒருவரிடமிருந்து, ஒரு கடிதம் வந்தது. சாவியில் வந்த வட்டார வழக்குக் கதையின் கட்டிங் ஒன்றை இணைத்து, அதில் இடம்பெற்றிருந்த ஒரு கெட்ட வார்த்தைக்காகக் கன்னாபின்னாவென்று திட்டி எழுதி, “தரமான சாவி பத்திரிகையில் இப்படியான வார்த்தை இடம்பெறலாமா?” என்று காட்டமாகக் கேட்டிருந்தார்.

அந்தக் கடிதத்திலேயே, “இப்படி நம் பத்திரிகையில் வரலாமா? சீ... கேவலம்!” என்று குறிப்பு எழுதி, என் பார்வைக்கு அனுப்பியிருந்தார் சாவி. நானும் பதிலுக்கு அவர் குறிப்பின் கீழேயே, “தவறுதான்! மன்னிக்கவும். இதற்குத் தண்டனையாக நான் இந்த க்ஷணமே ராஜினாமா செய்கிறேன். சாவி பத்திரிகையின் கௌரவம் என்னால் கெட வேண்டாம்.” என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுவிட்டு, சாப்பிடக் கொண்டு வந்திருந்த டிபன் பாக்ஸையும் எடுத்துக்கொண்டு, சாப்பிடாமலே, சாவி சாரிடம் சொல்லிக்கொள்ளாமலே. விருட்டென்று கிளம்பி, யார் தடுத்தும் நிற்காமல் வீட்டுக்குப் போய் விட்டேன்.

அப்போது என் கோபத்தில் சற்றும் நியாயமே இல்லை. அது நிச்சயமாகக் கெட்ட வார்த்தைதான். இருந்தாலும், நான் கோபித்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். காரணம் அப்போதைய என் இளமை முறுக்கு, அதே போன்றதொரு கெட்ட வார்த்தையை எழுத்தாளர் சுஜாதா, பண்பட்ட ஒரு பத்திரிகையில் பயன்படுத்தியிருந்ததால் நான் செய்தது தவறில்லை என்ற ஒரு வாதம், அது மண் மணம் கமழும் மாவட்டக் கதைப் போட்டியாதலால் இயல்பாக இருக்கட்டுமே என்பதால்தான் நான் அதை எடிட் செய்யாமல் விட்டிருந்தேன் என்கிற சமாதானம்... தவிர, அப்போது என்னிடம் பணியாற்றிய திருமதி ஷ்யாமா உள்ளிட்ட பத்திரிகைப் பயிற்சிக் குழுவினர் தங்களின் முன்னேற்றத்துக்கு நான் முட்டுக்கட்டையாக இருப்பதாக நினைத்தது என எல்லாமாகச் சேர்ந்து எனக்குள் ஒரு வேகத்தை ஏற்படுத்தி, வெளியேறச் செய்துவிட்டது.

பொதுவாக, இதற்கு முன்பு இரண்டு முறை சாவி சாரிடம் கோபித்துக்கொண்டு போயிருந்தாலும், ஓரிரு மாதங்கள் பிகு செய்துவிட்டுப் பிறகு சாவி சாரிடமே வந்துவிடுவேன். வேறு பத்திரிகையில் சேர மாட்டேன். ஆனால், இந்த முறை மீண்டும் சாவி பத்திரிகைக்குத் திரும்பி வரவே கூடாது என்ற எண்ணத்தில் நேரே போய் அமுதசுரபி ஆசிரியர் திரு.விக்கிரமன் அவர்களைப் பார்த்து, அந்தப் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன்.

சாவியில் அப்போது என் மாதச் சம்பளம் 1000 ரூபாய். ஆனால், அமுதசுரபியில் என் சம்பளம் ரூ.750. ஆனால், அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. கிட்டத்தட்ட ஏழு எட்டு மாதங்கள் அங்கே பணியாற்றியிருப்பேன். சாவி - வார இதழ்; அமுதசுரபி - மாத இதழ். எனவே, வேலை மந்தமாக இருந்தது. நாளெல்லாம் பரபரவென்று ராத்திரியும் பகலுமாக வேலை செய்துவிட்டு, இப்போது நாள் பூரா நாற்காலியைத் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. சோம்பேறி ஆகிவிடுவேனோ என்று பயமாக இருந்தது. அதே சமயம், திரும்ப சாவியிடம் போகவும் மனமில்லை.

இந்த நிலையில், என்னை வந்து சந்தித்தார், ‘மின்மினி’ பத்திரிகையில் விற்பனைப் பிரிவில் பணியாற்றும் ஒரு நண்பர். அவர் பெயர் மறந்துவிட்டது. ஏற்கெனவே சாவி பத்திரிகையில் விற்பனைப் பிரிவில் பணியாற்றிக்கொண்டு இருந்தவர் அவர். அப்போது லேசாகப் பழக்கம் உண்டு.

பத்திரிகை உலகில் ஆழ்வார் என்கிற பெயர் அப்போது பிரசித்தம். பெரிய பத்திரிகைகளுக்குதான் கோட்டா மூலம் நியூஸ்பிரிண்ட் பேப்பர் கிடைக்கும். சின்ன பத்திரிகைகளுக்கு நியூஸ்பிரிண்ட் காகிதம் சப்ளை செய்துகொண்டிருந்தவர் ஆழ்வார்தான். அவருடைய மகன் - மன்னிக்கவும், சம்பவம் நடந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், பல பேரின் பெயர்கள் மறந்துவிட்டன. - மின்மினி, போலீஸ் செய்தி என இரண்டு மூன்று பத்திரிகைகளை நடத்திக்கொண்டு இருந்தார். மின்மினி வார இதழைப் பார்த்துக்கொள்ள ஒருவர் தேவை என்றும், என்னைப் பற்றி அவரிடம் சொன்னதாகவும், தன்னோடு வந்தால் உடனே வேலையில் சேர்ந்துகொள்ளலாம் என்றும், பொறுப்பாசிரியர் பதவியே வாங்கித் தருகிறேன் என்றும் அந்த விற்பனைப் பிரிவு நண்பர் சொன்னார். எனக்கும் சபலம் உண்டாகியது. சாவி இதழ் போலவே சுதந்திரமாக ஒரு பத்திரிகையை நடத்தலாம் என்ற எண்ணமே உற்சாகமாக இருந்தது.

’மின்மினி’ பத்திரிகை அப்போது சௌகார்பேட்டை ஏரியாவில், பத்மனாபா தியேட்டரின் பின்புறம் இருந்தது. அங்கே சென்றேன். விற்பனைப் பிரிவு நண்பர் இருந்தார். ஆழ்வாரின் மகன் ஏதோ பூஜையில் ஈடுபட்டிருப்பதாகவும், சற்றுக் காத்திருக்கும்படியும் சொன்னார். காலையில் 10 மணிக்குச் சென்றவன், கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்தேன். ‘ஆரம்பமே சரியில்லையே’ என்று தோன்றியது.

2 மணி அளவில் அழைப்பு வந்தது. மேல் மாடியில், ஆழ்வாரின் மகனைச் சந்தித்தேன். அறை முழுக்கச் செம்மண் நிறம் பூசப்பட்டிருந்தது. ஏதோ ஒரு அம்மன் படம் மிக பிரமாண்டமாக சுவரில் மாட்டப்பட்டிருந்தது. சுவர்கள் முழுக்க இன்னும் என்னென்னவோ சாமி படங்கள். சாமந்தி, கதம்பம் என ஏராள மாலைகள் ஒவ்வொரு படத்துக்கும் சூட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு படத்துக்கும் முன்னால் உள்ள ஸ்டேண்டில் தட்டுத்தட்டாக ஆப்பிள், சாத்துக்குடி, வாழைப்பழம், எலுமிச்சை எனப் பழங்கள்... உதிரிப் பூக்கள். விபூதி, குங்குமம் பரப்பிய தட்டுகள். எலுமிச்சைப் பழங்கள் பாதி பாதியாக நறுக்கப்பட்டு, வட்டப்பகுதியில் குங்குமம் தோய்க்கப்பட்டிருந்தது. சாம்பிராணி மணம் கமழ்ந்துகொண்டு இருந்தது. கிட்டத்தட்ட சீரியல்களிலும் சினிமாக்களிலும் காட்டப்படும் ஒரு மந்திரவாதியின் அறை போலவே இருக்கவும், எனக்கு உள்ளூர கொஞ்சம் திகிலாக இருந்தது.

ஆழ்வார் மகன் தனது கடைசி கட்ட தீபாராதனையை முடித்துவிட்டு, தனது நாற்காலியில் வந்து அமர்ந்தார். அதுவரை நின்றிருந்த நான் அவர் எதிரே போய் நின்றேன். ‘உட்காருங்க’ என்றார். எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன்.

ஆழ்வார் மகன் பார்ப்பதற்கு அச்சு அசல் நடிகர் முரளி மாதிரி இருந்தார். அதே கறுப்பு நிறம். அதே வட்ட முகம். நெற்றியில் கட்டை விரலால் கீழிருந்து மேலாக நீளமாக இழுத்தது போல் குங்குமத் தீற்றல்.

“அ... சொல்லுங்க மிஸ்டர்...” என்றார். “ரவி” என்றேன் சலிப்பாக.

“அ, மிஸ்டர் ரவி! சொன்னாரு, நீங்க டேலண்ட்டான ஆளுன்னு. எனக்கும் அப்படி ஒருத்தர்தான் தேவை. நீங்க உடனே ஜாயின் பண்ணிக்கலாம். குழந்தைகள் பத்திரிகையும் ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அதுக்கு வாண்டுமாமாவைத்தான் எடிட்டரா போடலாம்னு பேசியிருக்கேன். நீங்க மின்மினியைப் பார்த்துக்கோங்க. மாசம் என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீங்க?” என்றார் முரளி. (அவர் பெயரை முரளி என்றே வைத்துக் கொள்வோமே?)

“1,500 தருவீங்கன்னு சொல்லித்தான் கூட்டிட்டு வந்தார்” என்றேன், நண்பரைக் கை காட்டி. அப்போது அது மிக அதிகமான சம்பளமாக எனக்குத் தோன்றியது.

“ஆமாம், ஆமாம்! தந்துடலாம். அதுல ஒண்ணும் பிரச்னை இல்லை. நீங்க நாளையிலேர்ந்தே வந்துடுங்க!” என்றார்.

மற்றபடி, பொதுவாகப் பத்திரிகை உலகம் பற்றிப் பேசினார். மின்மினியின் சர்க்குலேஷனை குமுதத்தை மிஞ்சிக் காட்டவேண்டும் என்பதுதான் தனது லட்சியம் என்றார். உண்மையில் அப்போது ‘மின்மினி’ பத்திரிகை படிப்பதற்கு சுவாரசியமான பத்திரிகையாகத்தான் இருந்தது. எனது ஒரு பக்கக் கதை ஒன்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் சாவியில் வேலைக்குச் சேர்வதற்கு முன்பு, அதில் பிரசுரமாகியிருந்தது. எனவே, எனக்கு அங்கே வேலையில் சேருவது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தது.

சுமார் அரை மணி நேரம் பேசிக்கொண்டு இருந்த பின்னர், முரளியிடம் விடைபெற்றுக் கிளம்பினேன்.

மறுநாள் காலையில், அமுதசுரபி ஆசிரியர் திரு.விக்கிரமனை மாம்பலம் ஜெய்சங்கர் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, எனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தேன். விஷயத்தைச் சொன்னேன். “சம்பளத்துக்காகன்னு இல்லை சார், தினம் தினம் பரபரப்பா வேலை செய்துட்டு, இங்கே நாளெல்லாம் சும்மா உட்கார்ந்திருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங். மாதப் பத்திரிகையில அத்தனை வேலை இருக்காது. மின்மினி வார இதழ்; தவிர, பொறுப்பாசிரியராக இருந்து, என் ரசனைக்கேற்ப நடத்த ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதான், அங்கே சேரலாம்கிற முடிவுக்கு வந்திருக்கேன்” என்றேன்.

“வாழ்த்துக்கள் ரவி! வெற்றிகரமா நடத்துங்க. சாவி கிட்டே கத்துக்கிட்ட அனுபவம், நீங்க அந்தப் பத்திரிகையை நல்லா கொண்டு வருவீங்க” என்று மனமுவந்து ஆசீர்வதித்தார் விக்கிரமன்.

நான் கிளம்பும்போது, “ரவி! அங்கே ஏதாவது பிரச்னைன்னா, தயங்கவே வேண்டாம். நேரா இங்கே வரலாம். அமுதசுரபியின் கதவுகள் உங்களுக்காக என்னிக்கும் திறந்தே இருக்கும்” என்றார்.

நன்றி சொல்லி விடைபெற்றேன். வீட்டுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு, மதியத்துக்கு ஒரு எவர்சில்வர் டப்பாவில் தயிர்சாதம், ஊறுகாய் எடுத்துக்கொண்டு, நேரே சௌகார்ப்பேட்டைக்குப் போனேன்.

சம்பிரதாயமாக மீண்டும் முரளியை அவரது அறையில் சென்று சந்தித்தேன்.

அப்போது ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் அவர்.

*****

இந்தப் பதிவை எழுதிக்கொண்டு இருக்கும்போதே, இந்த விஷயங்களை ஏற்கெனவே எழுதிவிட்டேனோ என்று சந்தேகமாக இருந்தது. எனவே, என் பழைய பதிவுகளைத் தேடிப் பார்த்தேன். ஆமாம், அனைத்தையும் ஒன்று விடாமல் விலாவாரியாக எழுதியிருக்கிறேன். என்ன... சின்னச் சின்ன முரண்பாடுகள் பழைய பதிவில் உள்ளன. யானைகவுனியில் உள்ள பழனியப்பா தியேட்டர் என்று லொகேஷனை எழுதியிருக்கிறேன். அது தப்பு. அது பத்மநாபா தியேட்டர்தான். அதே போல், ராஜினாமா கடிதத்தை அமுதசுரபி அலுவலகத்தில் வைத்து திரு.விக்கிரமனிடம் கொடுத்ததாக எழுதியுள்ளேன். இல்லை. நன்றாக நினைவு இருக்கிறது. வீட்டில்தான் கொடுத்தேன். இப்படிச் சின்னச் சின்ன தவறுகள். மற்றபடி, ஏற்கெனவே எழுதிய விஷயங்களையே மீண்டும் எழுதுவது அர்த்தமற்றது. சொன்னதையே மீண்டும் மீண்டும் தொணதொணவென்று சொல்லிக் கொண்டு இருப்பது ஞாபகமறதி போன்ற ஒரு கோளாறு. அந்தக் கோளாறு வருவதற்கு எனக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் வயதாகவேண்டும். எனவே, பதிவைத் தொடராமல் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

மற்றபடி, இந்தப் பதிவின் மர்மத்தையும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளையும் படிக்க விரும்புகிறவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பழைய பதிவுகளின் லிங்க்குளைக் கிளிக்கிப் படித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

அன்னைக்கு ஒரு சவால்!

அரவணைத்தார் அன்னை!

.

4 comments:

மிக உத்திரவாதமான சமபளம், அரசுப் பதவி இருந்தும் கூட தார்மீகக் கோபத்தைக் காட்ட முடியாதபடி எனக்கு அமைந்த சந்தர்ப்பங்களை இபோது நினைத்துப்பார்த்தால் லேசாக அவமானம் ஏற்படுகிறது.

உங்கள் மாரல் கரேஜுக்கு ஒரு சல்யூட்!
 
The Minminis Publisher and editors name is HARI, I can rememmber; What evr may be the reason, the decision of not joining there, taken by you is realy very wise one. due to Annais blessings only you have taken a correct dcision; otherwise your nature itself shown your exit from there immediately since I know very well about them

RSM
 
Thanks for the sharing sir..
 
நண்பரே
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழர் வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையோடு..