உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, January 02, 2012

தாழ்ந்த கண்ணோட்டமா? எனக்கா?!

டந்த 2009-ம் வருடம், ஜூன் மாதம் ‘நானும் என் சாவி சகாக்களும்’ என்னும் தலைப்பில், எனக்கு சீனியர்களாக, மும்மூர்த்திகளாக விளங்கிய சி.ஆர்.கண்ணன், ரமணீயன் மற்றும் சத்தீஷ் கே.வைத்தியநாதன் மூவரைப் பற்றி எழுதிவிட்டு, அடுத்து எனக்கு உதவியாளர்களாக வந்து சேர்ந்த எட்டு பேரைப் பற்றியும் எழுதியிருந்தேன்.

அதில், ‘மூவரும் சென்ற பின்னர், சாவியில் என் ஆட்சிதான்! எனக்கு உறுதுணையாக இருக்க உதவியாளர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி சாவி ஒரு யோசனை சொன்னார். அதன்படி, சாவியில் ஜர்னலிசம் பழக விருப்பம் உள்ளவர்கள் (விகடன் மாணவர் திட்டம் போல்) தங்கள் படைப்பு ஒன்றையும், போட்டோ, பயோடேட்டாவையும் இணைத்து அனுப்பச் சொல்லி சாவியில் அறிவிப்பு வெளியிட்டேன். ஆயிரக்கணக்கில் வந்து குவிந்த விண்ணப்பங்களில் நானே எட்டு பேரைத் தேர்ந்தெடுத்தேன். இருவர் ஆண்கள்; ஆறு பேர் பெண்கள். அவர்கள் வருமாறு...’ என்று குறிப்பிட்டுவிட்டு, அந்த எட்டு பேரைப் பற்றியும் சிறுகுறிப்பு வரைந்திருந்தேன்.

அவர்களில் ஒருவர் ஷ்யாமா. ‘சாவியில் சில நாட்கள்’ என்னும் தலைப்பில், சாவியில் பணியாற்றிய அனுபவங்களைச் சுவைபடத் தொகுத்து, ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார் அவர். அதன் ஒரு பிரதியை எனக்கும் சமீபத்தில் அனுப்பி வைத்திருந்தார்.

208 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தில் என்னைப் பற்றியும் ஓரிரு பாராக்கள் எழுதியுள்ளார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு, அந்த வரிகளை அப்படியே உங்கள் பார்வைக்கு இங்கே பதிவிட்டுள்ளேன்.

“சாவி எடிட்டோரியலின் நடுநாயகமாக எங்கள் பயிற்சிக் காலகட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தவர் திரு.ரவிபிரகாஷ். (இப்போது ஆனந்தவிகடனின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்). இப்போது அவர் எப்படிப்பட்டவர் என்று எனக்குத் தெரியாது. அப்போது அவர் எங்கள் கண்களுக்கும் மனதுக்கும் மிகவும் கண்டிப்பானவராகவும் கறாரானவராகவுமே தென்பட்டார். அதிகம் புன்னகைக்க மாட்டார். அவருடன் பழகலாம் என்று தோன்றுகின்ற அளவிற்கு ஸ்நேகமும் காண்பிக்க மாட்டார். இவர் எங்களை ஊக்குவித்ததாகவும் யாரும் உணரவில்லை. எடிட்டோரியலுக்குள் நுழைந்து, அவரிடமிருந்து நாங்கள் எதையும் கற்றுக்கொண்டுவிட முடியவில்லை. எங்களுக்குள் இது ‘இவர்கள் (எங்களை) முன்னேற்றத்தைத் தடுத்துவிட வேண்டும்’ என்கிற ரீதியில் கங்கணம் கட்டிக்கொண்டு அவர் செயல்படுகிறார் என்றும் சொல்லிவிட முடியாதபடி, அவர்... அவராக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்தது எடிட்டோரியலுக்கும் எங்களது ரிப்போர்ட்டிங் அறைக்கும் இடையே மிக உயர்ந்த குறுக்குச் சுவரை எழுப்பி இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். பின்னாட்களில் அனுராதா சேகரும் லோகநாயகியும் அவருடன் சற்றே பழகுவதற்கான வாய்ப்பினைப் பெற்றிருந்தார்கள் என்று கேள்விப்பட்டேன்.”

மேலே கொடுக்கப்பட்ட வரிகள் பக்கம் 120-ல். இதையடுத்து 170-ம் பக்கத்தில்... சில்க் ஸ்மிதாவை பேட்டி எடுக்கச் சென்று வந்ததை விவரித்துவிட்டுத் தொடர்கிறார் ஷ்யாமா.

“சாவி அவர்கள், சில்க்கின் புகைப்படங்களைச் சில விநாடிகள் பார்த்துக்கொண்டிருந்தார். ‘சரி... இவளை பின் அட்டைல வரிசையா போடச் சொல்லு ரவிபிரகாஷ்கிட்ட...’ எனக்குச் சந்தோஷமாய் இருந்தது. அட்டையில் சில்க் இடம்பெறப் போறாளே என்று. எந்தக் காரணத்தால் இந்த முடிவு மாறிவிடக் கூடாது என்று நினைத்து, “சார், நான் சொன்னா ரவிபிரகாஷ் கேட்கமாட்டார் சார்... ‘பின் அட்டையில் போடு’ன்னு ஒரு ஸ்லிப் எழுதிக் கொடுங்க சார்’ என்றேன்.

‘ஏன், உனக்கும் அவனுக்கும் ஆகாதா?’

‘அதெல்லாம் இல்லை சார்... அவர் நீங்க சொன்னாத்தான் கேப்பார். நாங்கெல்லாம் அப்புறம் வந்தவங்கதானே... நாங்க சொல்லி அவர் செய்யறதுக்கு அவ்ர் பொஸிஷன் இடம் கொடுக்காது’.

‘அதென்ன பொஸிஷன்... இங்கெ அதெல்லாம் யாருக்கும் கிடையாது. புரிஞ்சுதா... போ’ என்றுவிட்டு கடுகடுப்பாய் ஒரு துண்டுக் காகிதத்தில் ‘பின் அட்டைக்கு’ என்று எழுதி, ‘போ... போய் அவன் கிட்ட கொடு’ என்றார்.

நான் கீழே இறங்கியதும், பிழை திருத்தும் சம்பத் அவர்களை அழைத்து, ‘இதை சாவி சார் ரவிபிரகாஷ்கிட்ட கொடுக்கச் சொன்னார்’ என்று கூறி அவர் கையில் கொடுத்தனுப்பி, ‘எடிட்டோரியல் இன்சார்ஜ்’ ஆகவும், உதவி ஆசிரியர் நிலையிலும் இருந்த ரவிபிரகாஷை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்தேன். ஏனோ தெரியவில்லை... எங்களுக்குள் மனம் வருத்தப்படும்படி எதுவும் நடந்ததில்லை. ஆனால், எனக்கு அவருடன் பழகுவது அவ்வளவு சுலபமாக இருந்ததில்லை. பல நேரங்களில் பத்திரிகையாளர் பயிற்சிக்கு வந்திருக்கும் எங்களை அவர் தாழ்ந்த கண்ணோட்டத்துடன் பார்ப்பதாக எனக்கு... (எனக்கு மட்டுமே) பட்டுக்கொண்டிருந்தது. இது தவறான பார்வையாகவும் இருக்கலாம்.

எது எப்படியோ... 11.1.89 தேதியிட்ட தேதியிட்ட சாவியின் பின் அட்டையில் சில்க் ஸ்மிதாவின் மூன்று வண்ணப்படங்கள் மிக அழகாக ரவிபிரகாஷ் மற்றும் அவருடைய குழுவினரால் லே-அவுட் செய்யப்பட்டு வெளிவந்தது. அந்தச் சாவியின் அட்டையில் இன்னுமொரு சற்றே பிரமிப்பான, என்னைச் சந்தோஷக் கடலில் ஆழ்த்திய ஒரு விஷயமும் இருந்தது. அது என்னவென்றால், பின் அட்டையில் என் பெயரையும் இடம்பெறச் செய்திருந்ததுதான். பெயரில் என்ன இருக்கிறது என்பார்கள். பெயரெடுத்தவர்களுக்குதான் பெயரின் அருமை தெரியுமோ என்னவோ? சம்பத் அந்த வார சாவி இதழ் வெளிவந்ததும், அதை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தார். ‘பாத்தியா, பின் அட்டைல உன் பெயரும் வந்திருக்கு’ என்றார். ‘ஆமாம் சம்பத்... ரொம்ப ஆச்சர்யமா இருக்கு’. ‘உனக்கு அதிர்ஷ்டந்தான் போ... கிழம் (சாவியை அவர் அப்படித்தான் சொல்வார்) அட்டைல நேம் கிரெடிட் கொடுக்கவே மாட்டார். என்னமோ... உனக்குக் கொடுத்துட்டார். ரொம்ப கொடுத்து வெச்சிருகே...’ அட்டகாசமாய் சிரித்துக்கொண்டே போனார் சம்பத்.”

அவ்வளவுதான் ஷ்யாமா என்னைப் பற்றி அந்தப் புத்தகத்தில் எழுதியிருந்த குறிப்புகள். எனக்கு ஒரு விஷயம் மட்டும் ஆச்சர்யமாக இருக்கிறது. எதைக் கொண்டு அவர் என்னைப் பற்றி அப்படி ஒரு கணிப்புக்கு வந்தார்?! “எங்கள் முன்னேற்றத்தைத் தடுத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார் என்றும் சொல்லிவிட முடியாதபடி...”, “பயிற்சிக்கு வந்திருக்கும் எங்களை அவர் தாழ்ந்த கண்ணோட்டத்துடன் பார்ப்பதாக எனக்கு (எனக்கு மட்டுமே) பட்டுக்கொண்டிருந்தது” என்றெல்லாம் என்னைப் பற்றித் தானே சில யூகங்களைக் கற்பித்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது? ‘எங்களுக்குள் வருத்தப்படும்படி எதுவும் நடந்ததில்லை’ என்றும் அவரே இதில் சொல்லியிருக்கிறார். அப்படியென்றால், தனது சந்தேகங்களை நேரடியாக அப்போதே என்னிடம் கேட்டிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

சாவி சார் அன்றைக்கு சில்க் ஸ்மிதாவின் படங்களை ‘பின் அட்டைக்கு’ என்று குறிப்பெழுதித் தந்தாரே தவிர, அதற்குப் பின்பு அவர் அதில் தலையிடவே இல்லை. பின அட்டையில் ஷ்யாமாவின் பெயரைப் போட வேண்டும் என்றும் அவர் சொல்லவில்லை. நானேதான் போட்டேன்.

எனக்கு உதவியாளர்களாக நானே எட்டுப் பேரைத் தேர்ந்தெடுத்துவிட்டு, அவர்களை முன்னேற விடாமல் தடுப்பதில் எனக்கென்ன லாபம்? ஆனால், அப்படியொரு எண்ணம் எப்படியோ அவர்கள் மனத்தில் விஷ வித்தாக ஆழப் பதிந்திருப்பதை நான் உணர்ந்துகொண்டேன்.

இந்தச் சூழ்நிலையில், ஆசிரியர் சாவியிடம் கோபித்துக்கொண்டு வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் நேரிட்டது. பொதுவாக ஏற்கெனவே இரண்டு முறை நான் இப்படிக் கோபித்துக்கொண்டு போயிருந்தாலும், அதிக பட்சமாக இரண்டு மாத காலத்துக்குள் சாவியிடமே வந்திருந்தேன். ஆனால், அந்த முறை அப்படி நான் மீண்டும் சாவி பத்திரிகைக்குத் திரும்பி வர விரும்பவில்லை. (அதற்கு முக்கியமானதொரு காரணம் இருந்தது. அதைக் கடைசியில் சொல்கிறேன்.) எனவே, ‘அமுதசுரபி’ பத்திரிகையில் சேர்ந்துவிட்டேன்.

ஆனால், ஏழெட்டு மாத காலம் அங்கே பணியாற்றிவிட்டு, பின்பு மீண்டும் சாவியிடமே வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை. அதை மிக விரைவில் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

சரி, ஏன் அந்த முறை திரும்பி வரக்கூடாது என்று முடிவெடுத்தேன்?

அத்தனை பேரின் முன்னிலையிலும் சாவி சிரித்துக்கொண்டே இதையேதான் யதார்த்தமாகக் கேட்டார்... “என்ன ரவி, ஒவ்வொரு முறையும் நீ கோவிச்சுக்கிட்டுப் போனா ஒரு மாசம், ரெண்டு மாசத்துக்குள்ள திரும்பி வந்துடுவே! இப்ப கொஞ்சம் கூடுதலா இடைவெளி விழுந்துடுச்சு போலிருக்கே? என்ன விஷயம்?”

“நான் இவங்க முன்னேற்றத்துக்கு இடைஞ்சலா இருக்கிறதா இவங்க நினைக்கிறாங்கன்னு புரிஞ்சுது. வேண்டாம். என்னால் இவங்க யாருடைய முன்னேற்றமும் தடைப்பட வேண்டாம். நான் யாருக்கும் தடைக்கல்லா இருக்க விரும்பலே.அதுதான் காரணம்”என்று நானும் அவர்கள் முன்னிலையிலேயே ஒளிவுமறைவின்றி பதில் சொன்னேன்.

அன்றைய என் சாவி சகாக்களில் திருமதி அனுராதா சேகர் மங்கையர் மலரில் இருக்கிறார்; திரு.சம்பத் நக்கீரனில் பணியாற்றுகிறார்.லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்டுகள் திரு.மோகனும் திரு.ராஜேந்திரனும் தினமணியிலும் தினமலரிலும் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். லோகநாயகி குமுதம் சிநேகிதியில் ஆசிரியராக இருக்கிறார். அப்போது எங்களுடன் பணியாற்றிய கார்ட்டூனிஸ்ட் ஹரன் இப்போதும் ஆனந்த விகடனிலும் சக்தி விகடனிலும் படங்கள் வரைந்துகொண்டு இருக்கிறார். (தினமணியில் கார்ட்டூன்கள் வரையும் ‘மதி’ பிறகு வந்தவர்). மதிப்புக்குரிய திரு.ராணி மைந்தன் பிபிசியில் செய்தித் தொகுப்பு செய்துகொடுத்துக்கொண்டு இருக்கிறார். விகடன் பிரசுரத்துக்கும் மொழி மாற்றங்கள் செய்து தருகிறார். சாவி நினைவு நாளன்று இவர்கள் அனைவரும் அநேகமாக ஒன்றுகூடப் போகிறார்கள். எனக்கே தெரியாமல் எனக்குத் தாழ்ந்த கண்ணோட்டம் இருந்ததா என இவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று காத்திருக்கிறேன்.

“பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம் நமது யூகங்கள்தான்!” என்று ஒரு பொன்மொழி உண்டு. அது ஷ்யாமா விஷயத்தில் சரியாகப் பொருந்தியிருக்கிறது. வேறென்ன சொல்ல?
.

13 comments:

nammaiparri athikam purinthukollaaththaal verriyum undu,equally tholvikkum athuve karanamaakavum avathu undu--anubavam.
 
உங்களிடம் '87 சமயத்தில் நிகழ்ந்த கடிதப் போக்குவரத்துகளில் அழகான கையெழுத்தில் அதிகமாக ஊக்குவித்திருக்கிறீர்கள். அவை பெரும்பாலும் தனிப்பட்ட கடிதங்கள் அல்ல. சன்மானமாக இணைக்கப்பட்ட காசோலையுடன் சேர்ந்து வந்த சிறு குறிப்புகள். அதில் அடுத்து பிரசுரமாக இருக்கும் கதை பற்றிய குறிப்பு இருக்கும். பிரசுரமான கதையை படித்துக் காட்டிய போது சாவி சார் மிகவும் ரசித்தார் என்றொரு பாராட்டு இருக்கும். இவ்வளவும் செய்து விட்டு, பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கப் போகும் விருட்சத்துக்கு நானும் ஒரு சொட்டு தண்ணீர் விட்டிருக்கிறேன் என்ற சுயநலமே இக் கடிதத்துக்குக் காரணம் என்று எழுதி உங்களைத் தாழ்த்திக் கொண்டு ஒரு சிறிய எழுத்தாளனை உயர்த்தியே இருக்கிறீர்கள்.

ஆனால் நேரில் உங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. ஒரு முறை அதற்கெனவே சாவி அலுவலகம் வந்திருந்தேன். ஒரு மதிய நேரம். நீங்கள் உங்கள் சகாக்களோடு மும்முரமாக பத்திரிகை வேலை பார்த்துக் கொண்டிருந்த அறைக்கு வெளியே பென்ச்சில் அமர்த்தப்பட்டேன். ரொம்ப நேரம் காத்திருந்தேன். 5, 10, 15 என நிமிஷங்கள் கடந்து கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாயிற்று. நான் பொறுமை இழந்தேன். இனம் புரியாத கோபமும் ஏற்பட்டது. யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போய் விட்டேன். அப்போது உங்களுக்கு என்ன வேலைப் பளுவோ, என்ன மனநிலையோ தெரியாது. ஆனால் காத்திருந்து பார்த்து விட்டு வந்திருக்க வேண்டுமோ என லேசான குற்ற உணர்வு உங்கள் வலைப்பதிவை வாசிக்கையில் ஏற்படும்.
 
ravi sir...antha pen..appadi ninaithatharkku innoru kaaranamum undu...unaga officceil velai seytha
oru moondravathu aal..antha pennidam..ungalai pathi vathi veachiruppar. ithai anthaponnu nampiirukkum. ithu thaan unmai. athuvum penkal eannumpothu kooduthalakavey 'vathi vealaikal nadakkum. sarithaney.
 
Dear Ravi sir, very interesting to read your article. Thanks for sharing sir...( shama matter enna aachunu appuram plz share pannunga.. ungalai patthi appadi ezhudhiyadhu, konjam nerudalaa dhaan irukku.)
 
One of the occupational hazards. Not only in the field of journalism, but present in almost every profession - even in homes. Sad :)
//எனக்கு உதவியாளர்களாக நானே எட்டுப் பேரைத் தேர்ந்தெடுத்துவிட்டு, அவர்களை முன்னேற விடாமல் தடுப்பதில் எனக்கென்ன லாபம்? ஆனால், அப்படியொரு எண்ணம் எப்படியோ அவர்கள் மனத்தில் விஷ வித்தாக ஆழப் பதிந்திருப்பதை நான் உணர்ந்துகொண்டேன்.//
 
சிலசமயம் மேலோட்டமாக ஒருவரைப் பற்றி தவறான அபிப்ராயத்துக்கு வந்துவிடும் தவறை நிறையப் பேர் செய்கிறார்கள். என் செய்வது? புத்தகம் எழுதும் போது பாஸிடிவ்வான பக்கத்தை மட்டும்தான் எழுத வேண்டும் இல்லை?
 
//எனக்கே தெரியாமல் எனக்குத் தாழ்ந்த கண்ணோட்டம் இருந்ததா என இவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று காத்திருக்கிறேன்.// நக்கல்தானே! அருமையான பதிவு. இது தொடர்பான உங்களின் அடுத்த பதிவை விரைந்து எதிர்பார்க்கிறேன்.
 
மனசறிந்து ஷ்யாமா அவர்களை வருத்தப்பட வைக்கவில்லை நீங்கள். ஆனாலும் அவருக்கு ஏன் அந்த மாதிரி தோன்றியது? அவர் எதிர்பார்த்த சமயங்களில் உங்கள் ஷொட்டு கிடைக்காதிருந்திருக்கலாம். நீங்களே தேர்ந்தெடுத்தவராயிருந்தாலும், அவ்வப்போது க்ரூப் டிஸ்கஷன் மாதிரி வைத்து, அந்த உதவியாளர்களின் வேலைகளுக்கு ஒரு புன்முறுவலுடன் பாராட்டு, மேலும் சிறப்பாகச் செய்ய திருத்தம் என்று செய்திருக்கலாம். அதுமட்டுமல்ல், தினமும் ஆஃபீஸ் வரும்போது ஹலோ / குட்மார்னிங் என்று புன்முறுவலுடன் சொல்வதும் முக்கியம். சின்ன அவுட்டிங் எல்லோரும் சேர்ந்து போயிருக்கலாம். பத்திரிகை மேலும் சிறக்க என்ன செய்யலாம் என்று அவர்களின் இன்புட் கேட்டு விவாதித்து இம்ப்ளிமென்ட் செய்திருக்கலாம். அவ்வப்போது ஒரு கம்மெண்டேஷன் லெட்டெர் கொடுத்திருக்கலாம்.
அதிகப்ரசங்கித்தனமாகத் தெரிந்தால் இந்த பின்னூட்டத்தை எடுத்துவிடவும்.

-ஜெகன்னாதன்
 
ஜெகன்னாதன்
சார் படிக்க ரொம்ப சுவரசியமாக இருக்கிறது சார்.
 
நான் கொல்லி மலையில் காட்டிலாகா அதிகாரியாக வேலை பார்த்த போது மூன்று விதமான பலாப் பழங்களைச் சாப்பிட்டிருக்கிறேன். ஒன்று தோல் லேசாக இருக்கும். சுவை சுமாராக இருக்கும். இன்னொன்று தோல் கெட்டியாக இருக்கும். சுவை ஓரளவு நன்றாயிருக்கும். மூன்றாவது வகை தோல் மிக மிகக் கெட்டி. சுளைகளை எடுப்பதற்கு நேரம் பிடிக்கும். ஆனால் சுவை மிக மிக அபாரமாயிருக்கும். நீங்கள் மூன்றாவது வகை.
 
தெருச்சண்டை எப்போதுமே ரசிக்ககூடியதாக இருந்திருக்கிறது..உங்கள் எழுத்து அதுபோன்ற ஆவலை தூண்டியிருக்கிறது. அப்ரம்...
பாண்டியன்ஜி - வேர்கள்
 
*****

இந்தப் பதிவு தொடர்பாக facebook-ல் பதியப்பட்ட சிலரின் கருத்துக்களையும் கீழே கொடுத்துள்ளேன்.

Bhaskar Sakthi: அவர் உங்களைப் பற்றி தானாகவே ஒரு தவறான ஊகத்துக்கு வந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. நான் விகடனில் சேர்ந்தபோது நீங்கள் மிகவும் சீனியராக இருந்தாலும் அன்புடன் கலகலப்பாக இருப்பீர்கள்.எனது முதல் கவிதை வெளிவந்தபோது லேஅவுட்டில் அதனைப் படித்துவிட்டு நெகிழ்ந்து போய் பாராட்டி ஒரு சீட்டில் குறிப்பெழுதி என் டேபிளில் வைத்திருந்த ரவிபிரகாஷை எப்போது நினைத்தாலும் மனதில் பிரியம் தோன்றும். :-)

Ravi Prakash: நன்றி பாஸ்கர்! ஆனால், அந்தக் கவிதை என்னவென்பது என் நினைவுக்கு வரவில்லை. பாஸ்கர் சக்தி என்றால் எனக்கு வரும் ஒரே கவிதை, ராணுவ வீரன் தன் செல்ல மகளிடம் விடைபெற்றுக் கிளம்பும் கவிதைதான். அதை காலப் பெட்டகம் புத்தகத்திலும் சேர்த்திருக்கிறேன். :)

Bhaskar Sakthi: அதே கவிதைதான் சார். நான் எழுதியது மொத்தம் இரண்டே கவிதைகள்தான். முதல் கவிதை அந்த ராணுவ வீரன். மற்றொன்று ஒரு கிராமியக் கவிதை. இது தவிர ரூட்பஸ்ஸில் வந்த குட்டிப் பாட்டுகள். எனது ஒட்டுமொத்த கவிதை முயற்சிகள் இவைதான். :-)

Ssr Sukumar: “பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம் நமது யூகங்கள்தான்!” என்று ஒரு பொன்மொழி உண்டு. அது ஷ்யாமா விஷயத்தில் சரியாகப் பொருந்தியிருக்கிறது. வேறென்ன சொல்ல? very true!!!

Govind Swami: pazhuppu nirathil oru pukaipadam..kazhathaal azhiyatha kavithai thokuppu ...ravisir..

Govind Swami: ungalai..naan muthalil paarthathu..truchi ''suttivikatan'' payirsiyil..enmakalai azhaithuvanthirunthean. kuzhainthakalukku neengal kathai sonna vitham..eannai eerththathu. atharku pin moonaril paarthean. angu kurankukalukku neengal kathai sonna vitham rompa eerthathu. hi..hi..hi..

பிரபாஷ்கரன், மதுரை: aarumai

Rc Mathiraj: மிக மிக நல்ல நேர்மையான பதிவு... பொக்கிஷம்!!!

PV Ramaswamy: One of the occupational hazards. Not only in the field of journalism, but present in almost every profession - even in homes. Sad :)
//எனக்கு உதவியாளர்களாக நானே எட்டுப் பேரைத் தேர்ந்தெடுத்துவிட்டு, அவர்களை முன்னேற விடாமல் தடுப்பதில் எனக்கென்ன லாபம்? ஆனால், அப்படியொரு எண்ணம் எப்படியோ அவர்கள் மனத்தில் விஷ வித்தாக ஆழப் பதிந்திருப்பதை நான் உணர்ந்துகொண்டேன்.//

Alphonse Selvaraj: நேர்மையான பதிவு.

Natchial Suganthi: “பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம் நமது யூகங்கள்தான்!” என்று ஒரு பொன்மொழி உண்டு.- its true in every n ones life

Ramkumar Ramachandran: Very Very honest post Shri Ravi...! Somewhere it sounds odd to bring out lighter / darker aspects of people (eg. Sampath calling Shri 'Savi' in bad taste). You sound too genuine, which is your hallmark virtue...!

Rishaban Srinivasan: என் அனுபவங்களைச் சொன்னால் உங்களுக்கு ஜால்ரா அடிப்பதாய் சொல்லலாம்.. உங்களை நான் மூன்று முறைதான் சந்தித்த நினைப்பு. அதுவும் ஒரு முறை விகடன் ஆபிசில். இரு முறைதான் சாவி ஆபிசில். அந்த வாரம் என் கதை அச்சில் இருப்பதை (சாவி) எடுத்துக்காட்டி என்னை மகிழ்வித்ததை என்னால் மறக்க இயலாது. பெண்கள்!
 
பொறுப்பான பதவியிலிருப்பவர்கள் மீது இப்படியொரு குற்றச்சாட்டு அவர்களையறியாமலே ஏற்பட்டு விடுகிறது......எனக்குப் புரிகிறது!