உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, May 18, 2011

முருகன் மீது ஒரு வழக்கு!

டவுள் இல்லைன்னு நான் சொல்லவில்லை; இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்!’ - இது கலைஞானி.

‘கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா இல்லையா என்பது முக்கியமில்லை; கடவுள் என்னை ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பதுதான் முக்கியம்!’ - இது கலைஞர்.

இந்த மாதிரியான ‘பகுத்தறிவு’க் கருத்துக்கள் எல்லாம் அறிவுஜீவிகளின் தலையில்தான் உதிக்கும். நான் சாமானியன்.

கடவுள் என்று யாரோ ஒருவர் அல்லது சிலர் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு அறவே நம்பிக்கை இல்லை. ஆனால், ஆச்சரியமூட்டும் சில காரியங்கள் நடக்கும்போது, நமக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

மகாஸ்ரீ அன்னை என் வாழ்வில் நிகழ்த்துகிற அற்புதங்களைத் தற்செயலானவை என்று நினைக்க முடியவில்லை. என்ன முட்டி மோதியும் நடக்காத காரியம், அன்னையிடம் பிரார்த்தித்துக் கொண்டதும் உடனடியாக நடந்துவிடுவதை எப்படித் தற்செயல் என்று எடுத்துக்கொள்ள முடியும்? ஒரு முறை அப்படி நடக்கலாம்; இரண்டு மூன்று முறை அப்படி நடக்கலாம். ஒவ்வொரு முறையுமா இந்தத் தற்செயல் நடக்கும்? இதை நான் பரீட்சார்த்த முறையில் சோதித்தே பார்த்துவிட்டேன்.

ஆனால், இப்போது எழுதப்போவது மகாஸ்ரீ அன்னையின் மகத்துவங்கள் பற்றி அல்ல! அரசியல் மேடைகளில் நான் ஏறிப் பேசியது போன்று, ஆன்மிக மேடைகளில் பங்கேற்றுப் பேசியதைப் பற்றியே!

அரசியல் மேடைகளில் பேசி, மிரட்டப்பட்டு, இந்தச் சனியனே வேண்டாம் என்று ஒதுங்கிய பின்பு, என் பேச்சுத் தாகம் அதிகரித்துவிட்டது. ஏதாவது மேடை கிடைத்தால் போதும் என்றிருந்தது. அந்த நேரம் மேற்படிப்பும் இல்லாமல், உத்தியோகமும் இல்லாமல் வெட்டியாக வேறு இருந்தேன். எனக்கும் பொழுது போகவேண்டும் அல்லவா?

அப்போது எனக்குக் கிடைத்ததுதான் ஆன்மிக மேடை. என் அப்பாதான் இதற்கு வழி செய்து கொடுத்தார். தன் மகனின் (நான்தான்) திறமைகள் (?!) பற்றிக் கூச்சமே இல்லாமல் தன் சக ஆசிரியர்களிடமும், நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்வார். நான் திறமையாக நடிப்பேன், மேடைகளில் ஏறிக் கலக்குவேன், அற்புதமாகப் பாடுவேன், அருமையாகச் சிறுகதைகள் எழுதுவேன் என்றெல்லாம் என் புகழ் பரப்புவார்.

அப்படி அவர் ஒருமுறை தன் சக ஆசிரிய நண்பர்களிடம் என்னைப் பற்றி வழக்கம்போல் பெருமையடித்துக்கொண்டு இருந்தபோது, திருக்குணம் என்னும் ஊரைச் சேர்ந்த நாகராஜன் என்னும் ஆசிரியர், என் பேச்சுத் திறமையை ஆன்மிக வழியில் பயன்படுத்தலாமே என்று ஒரு யோசனையை முன்வைத்தார்.

அவர் ஆன்மிகச் சொற்பொழிவாளர். ஆன்மிகப் பட்டிமன்றங்களிலும், வழக்காடு மன்றங்களிலும் கலந்துகொண்டு கர்ஜிப்பவர். பாண்டிச்சேரி வானொலி நிலைய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளவர். நிறைய ஊர்களுக்குச் சென்று, அங்கே நடைபெறும் கோயில் திருவிழாக்களில் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்திவிட்டு வருபவர்.

அவர் கலந்துகொள்ளும் ஒரு ஆன்மிக பட்டிமன்றத்தில் என் பெயரையும் ஒரு அணியில் சேர்த்துவிட்டார். ‘சீதையை மீட்க ராமனுக்கு அதிகம் உதவியது லக்ஷ்மணனா, அனுமனா அல்லது விபீஷணனா?’ என்பதே தலைப்பு. மூன்று அணிகளில் நான் அனுமன் அணியில் இடம்பெற்றேன். இந்தப் பட்டிமன்றத்தில் பேசுவதற்குத் தயார் செய்துகொள்வதற்காக கம்பராமாயணப் பாடல்கள் அனைத்தையும் அவசரமாக ஒரு புரட்டு புரட்டினேன். உதவி: கம்பன் கழகம் வெளியிட்ட கையடக்க கம்பராமாயணப் பதிப்பு.

மூன்று அணிகள். அனுமன் அணியில் என் பெயரைக் கொடுத்திருந்தார் நாகராஜன். அவர் எதிர் அணி ஒன்றில் இருந்தார்.

கம்பராமாயணத்தில் ஓரிடத்தில், ராமனே அனுமனை மெச்சி, "உன் உதவி மட்டும் இல்லையென்றால், என்னால் சீதையை அடைந்திருக்க முடியாது" என்று சொல்வதாக வரும் ஒரு பாடல் வசமாக எனக்குச் சிக்கியது. அதை வைத்து ஆணித்தரமாக நான் பேசியதும், நடுவர் அரங்க.தியாகராஜனால் மறுக்க முடியாமல், அதையே தனது தீர்ப்பில் குறிப்பிட்டு, என் அணிக்குச் சாதகமாகத் தீர்ப்பு கூறிவிட்டார்.

இதனால் ஆசிரியர் நாகராஜன் என் மேல் ஏதேனும் கடுப்பு கொள்வாரோ என்று பயந்தேன். ஆனால், அப்படி இல்லை. அவர் என் பேச்சாற்றலை ரசித்ததோடில்லாமல், தொடர்ந்து ஆன்மிக மேடைகளில் பேச வாய்ப்புகள் பெற்றுத் தந்தார்.

அன்னியூர், நங்காத்தூர், சங்கீதமங்கலம், அனந்தபுரம் எனப் பல ஊர் கோயில்களில் நடக்கும் பட்டிமன்றம், வழக்காடு மன்றங்களில் கலந்துகொண்டு பேசினேன். சுத்துப்பட்டு எந்தக் கோயிலில் விசேஷம் என்றாலும், அங்கே ஆன்மிகப் பட்டிமன்றமோ, வழக்காடு மன்றமோ, ஆன்மிகச் சொற்பொழிவோ ஏதோ ஒன்று அல்லது அனைத்துமேவோ கட்டாயம் நடைபெறும். (இப்போது மாதிரி ஆபாச அங்க அசைவுகளுடன் கூடிய டப்பாங்குத்து நையாண்டி மேளமோ, வெட்டவெளி சினிமாவோ இருக்காது.) கோயில் விசேஷத்துக்காக அடிக்கப்படும் நோட்டீஸில் கட்டாயம் என் பெயரும் கொட்டை எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கும். இப்படியாக என் பெயர் அச்சிடப்பட்ட‌ நோட்டீஸ்களை ஒரு புத்தகம் போல் தைத்து வைத்திருந்தார் அப்பா. பொக்கிஷம் போல் அதை ரொம்ப காலம் பாதுகாத்து வந்தார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன், வேண்டாத குப்பைகளை ஒழிக்கும்போது அவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டேன். அதில் மாளாத வருத்தம் என் அப்பாவுக்கு.

இங்கே ஒரு விஷயம். பழைய நினைவுகளின் அடையாளமாக இருக்கும் இது போன்ற அழைப்பிதழ்களை, கடிதங்களை, பொருள்களைப் பாதுகாத்து வைத்திருந்து, பின்னாளில் அவற்றை எடுத்துப் பார்ப்பது ஒரு சுகம்தான். ஆனால், அந்தக் காலத்தில் அவற்றின் மதிப்பு எனக்குத் தெரியவில்லை.

என்னுடைய சிறுகதைகள் கல்கி, ஆனந்தவிகடன், குங்குமம், தினமணிகதிர் போன்ற பத்திரிகைகளில் மாறி மாறி, சராசரியாக‌ இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எனப் பிரசுரமாகி வந்த காலத்தில், அதாவது 1979, 80-களில், சுமார் பத்து கதைகள் வெளியாகியிருந்த நிலையில், நண்பர் மார்க்கபந்து கேட்டார் என்று, (அப்போது நான் கிராமத்தில் இருந்தேன். கடிதம் மூலம் மார்க்கபந்து அறிமுகமாகியிருந்த சமயம் அது) என்னிடமிருந்த அந்த பத்து இதழ்களையும் தபாலில் மார்க்கபந்துவின் முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டேன். அதில் அப்பாவுக்கு என் மீது ஏகப்பட்ட வருத்தம்; கோபம். அவரே ஒவ்வொரு பத்திரிகைக்கும் கைப்படக் கடிதங்கள் எழுதி, அந்தப் பிரதிகள் அனைத்தையும் வரவழைத்துப் பத்திரப்படுத்திக்கொண்டார்.‌

நோட்டீஸ்களைப் பொறுத்தவரையில் அப்படித் திரும்பப் பெற வழியில்லை. ஆனால், அதற்காக எள்ளளவும் எனக்கு வருத்தம் இல்லை. அன்றைய சந்தோஷத் தருணங்கள் யாவும் இனிய தடங்களாக என் மனதில் பதிந்துள்ளன. அதை மீண்டும் மனசுக்குள் ஓட்டிப் பார்ப்பதே ஒரு சுகம்தான்.

ஒரு சிறு கிராமம். பெயர் மறந்துவிட்டது. அங்கே ஒரு முருகன் கோயில். சூரசம்ஹார தினத்தன்று, அந்தக் கோயில் மண்டபத்தில் ஒரு வழக்காடு மன்றத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. அதில் நானும் கலந்துகொண்டேன். வழக்குத் தொடுப்பவர் நான். மறுப்பவர் ஆசிரியர் நாகராஜன். 'முருகன் செய்தது குற்றம் குற்றமே!' என்பது வழக்கின் தலைப்பு. முருகப் பெருமான் செய்த‌ குற்றங்களை நான் வரிசைப்படுத்தி, அவர் மீது வழக்குத் தொடுக்க வேண்டும். அதை மறுத்து, முருகனுக்கு ஆதரவாக வாதிடுவார் நாகராஜன்.

வயதில் மூத்தவர் என்றும் மதிக்காமல் பிரம்மனை முருகன் குட்டியது குற்றம், தனக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரிந்துவிட்டது என்கிற கர்வ‌த்தில், தந்தைக்கே உபதேசம் செய்யும் அளவுக்குத் தலைப்பட்டது குற்றம் என வரிசையாக முருகப் பெருமானின் குற்றங்களை முன்வைத்து வாதிட்டேன். என் வாதங்களுக்குப் பொருத்தமாகவும், ஆதரவாகவும் இருந்த கந்தரலங்காரம், கந்தரனுபூதி போன்ற பழந்தமிழ் இலக்கியப் பாடல்களையெல்லாம் தொகுத்து, ஆணித்தரமாக வாதிட்டேன். ஒரு கட்டத்தில், நாகராஜன் எதிர் வாதம் செய்வதற்கே முடியாமல் திணறித் திக்குமுக்காடிப் போனார்.

அந்த நிலையில், பார்வையாளர்கள் கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. முருகன் கோயிலுக்கே வந்து, முருகப் பெருமானை அவதூறாகப் பேசுவதா என என் மீது அவர்களுக்குக் கட்டுக்கடங்காத‌ கோபம் உண்டாயிற்று. என்னை ஏதோ நாத்திகன் போன்று எண்ணி, "எவண்டா இந்தக் கம்மனாட்டிகளையெல்லாம் கோயிலுக்குள்ள கூட்டிக்கிட்டு வந்தது? எங்கே வந்து என்ன பேசுறே? பார்த்து தம்பி, உருப்படியா ஊர் போய்ச் சேரு!" என ஆங்காங்கே மிரட்டல் கூச்சல்கள் எழுந்தன. மேடை மீது கற்களும், மண்ணும் வந்து விழுந்தன. நிலைமை விபரீமாவதைக் கண்ட நாகராஜன், மைக்கில் சத்தமாக, "பக்த கோடிகளே! ஆன்மிக அன்பர்களே! இது ஓர் இலக்கிய நிகழ்ச்சி. இந்தத் தம்பியும் முருகன் மீது பக்தி உள்ளவர்தான். ஒரு சுவைக்காக அவர் தன் வாதங்களை இங்கே எடுத்து வைத்தார். இது இறைவனை அவதூறு செய்யும் நிகழ்வல்ல. எங்களுக்கு அது நோக்கமும் அல்ல!" என்று அறிவித்தார்.

ஆனால், நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கவில்லை. ஒரு மணி நேரத்துக்குத் திட்டமிட்டிருந்த அந்த வழக்காடு மன்றம் இருபது நிமிடத்துக்குள் முடிந்துபோனது.

பக்தியிலும் முரட்டு பக்தி உண்டென்று நான் அறிந்துகொண்ட சம்பவம் அது. அதுதான் என் கடைசி ஆன்மிக மேடையும்கூட!
.

8 comments:

அரசியல், ஆன்மிகம் இரண்டிலும் ஈடுபாடு இருக்கலாம்; தீவிரம் இருக்கக்கூடாது. தங்கள் கட்டுரை என்னை ரொம்ப யோசிக்க வைத்தது!
 
1)உங்கள் மென்மையான தோற்றத்துக்கு மாறான கனமான குரலைக் கேட்கும்போதே அடிக்கடி நினைப்பேன். மேடைக்கு ஏற்ற குரலாயிருக்கிறதே என்று! அது சரியாகத்தான் இருக்கிறது.
2) மஹா அன்னையின் திருநாமம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
 
1) உங்களது மென்மையான தோற்றத்துக்கு மாறான கனமான குரலைக் கேட்கும்போது அடிக்கடி நினைத்துக் கொள்ளுவேன் மேடைக்கு ஏற்ற குரலாய் இருக்கிறதே என்று!அது சரியாகத்தான் இருந்திருக்கிறது.
2) மஹா அன்னையின் திரு நாமம் என்ன வென்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
 
+ நன்றி கணேஷ் ராஜா!

+ 1)நன்றி லதானந்த்! 2) மிரா
 
//ஒரு முறை அப்படி நடக்கலாம்; இரண்டு மூன்று முறை அப்படி நடக்கலாம். ஒவ்வொரு முறையுமா இந்தத் தற்செயல் நடக்கும்? இதை நான் பரீட்சார்த்த முறையில் சோதித்தே பார்த்துவிட்டேன்.// சமீபத்தில் அன்னையின் அருளால் ஏதாச்சும் நடந்ததா சார்?
 
+ நன்றி கிருபாநந்தினி! அடிக்கடி அன்னையின் அருளை அனுபவபூர்வமாக உணர்ந்து வருகிறேன். எனினும், மேலோட்டமாகப் பார்த்தால், யதேச்சையான நிகழ்வு போலத்தான் தெரியும். அப்படிச் சில விஷயங்கள் சமீபத்திலும் நடந்தன.
 
சுவையாக எழுதி இருகிறீர்கள் தங்கள் வாழ்கையில் நடந்த சம்பவங்களை சாவியில் உங்கள் எழுத்துக்கள் நிறைய படித்து உள்ளேன் .வாழ்த்துக்கள்
 
சுவையாக எழுதி இருகிறீர்கள் தங்கள் வாழ்கையில் நடந்த சம்பவங்களை சாவியில் உங்கள் எழுத்துக்கள் நிறைய படித்து உள்ளேன் .வாழ்த்துக்கள்