உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, May 30, 2011

திக்... திக்... திகார்!

தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய சிறை, திகார் சிறை. புது டெல்லியின் மேற்குப் பகுதியில், சாணக்கியபுரியிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள திகார் என்னும் கிராமத்தில் உள்ளது இந்தச் சிறை. இதன் சுற்றுப்பட்டுப் பகுதி ஹரி நகர் என்று அழைக்கப்படுகிறது.

தண்டனை தரும் இடமாக இல்லாமல், குற்றவாளிகளைத் திருத்தும் இடமாகவே இந்தச் சிறை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சிறைக்குள் வருகிறவர்களுக்குக் கல்வி, கைத்திறன் மற்றும் ஒழுங்குமுறைகளையும் நடத்தை விதிகளையும் கற்றுத் தந்து, அவர்களையும் சமூகத்தில் சாதாரண பிரஜைகளாக மாற்றி அனுப்புவதே இந்தச் சிறையின் குறிக்கோள். முக்கியமாக அவர்களின் சுய கண்ணியத்தை வளர்ப்பதும், முன்னேற வேண்டும் என்கிற அவர்களின் விருப்பத்தை பலப்படுத்துவதும்தான் இந்தச் சிறையின் நோக்கம். இந்தச் சிறைக் கைதிகள் தயாரித்த சட்டைகள், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள், மரச் சாமான்கள், மூலிகைப் பொருள்கள் ஆகியவை, ‘திகார்’ என்னும் வணிகப் பெயரில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. திகார் பொருள்களின் விற்பனை மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் சுமார் 1 கோடியே 10 லட்சம் ரூபாய். அடுத்த ஆண்டு இது ஒன்றரைக் கோடி ரூபாய் அளவுக்கு உயரும் என்று எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார் திகார் ஜெயில் வளாகத்தின் டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராம் நிவாஸ் சர்மா.

இங்கே ஆயுள்தண்டனை அனுபவித்துக்கொண்டு இருக்கும் முகம்மத் சஜ்ஜித் என்பவர், இங்கே தனக்குக் கிடைத்த கைத் தொழில் கல்வி, தான் விடுதலையாகி வெளியே போன பின்பு, சமுதாயத்தில் நல்ல முறையில் வாழ்க்கை நடத்த உதவும் என்கிறார்.

சுமார் 5,000 கைதிகள் மட்டுமே இருக்கக்கூடிய இந்தச் சிறையில், 2006-ம் ஆண்டு இருந்தவர்கள் சுமார் 12,000 பேர்.

சிறைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக கிரண்பேடி இருந்தபோது, அவருடைய ஆளுமையின் கீழ் திகார் ஜெயில்கள் வந்தன. அப்போது
, சிறை தொடர்பான பல மறுமலர்ச்சிகளை அவர் ஏற்படுத்தினார். பல ஒழுங்குமுறைகளைக் கொண்டு வந்தார். திகார் ஜெயில் என்கிற பெயரைக்கூட திகார் ஆஸ்ரமம் என்று மாற்றினார். அங்கே பணிபுரியும் காவல் அதிகாரிகளுக்கும் சிறைக் கைதிகளுக்கும் விபாசனா என்கிற தியான வகுப்புகளை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் விபாசனா வகுப்புகளை நடத்தியவர் சத்ய நாராயணா கோயங்கா. இந்தச் சிறையில் இருந்த கைதி ஒருவர் நன்கு படித்து ஐ.ஏ.எஸ். பாஸ் செய்திருக்கிறார்.

உலக அளவில் பிரசித்தி பெற்ற தொடர் கொலைகாரன் சார்லஸ் சோப்ராஜ் இங்கேதான் அடைபட்டுக் கிடந்தான். 1986-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி அவன் தப்பி ஓடினான். ஆனால், விரைவிலேயே பிடிபட்டான். தப்பி ஓட முயன்ற குற்றத்துக்காக மேலும் 10 ஆண்டுகள் தண்டனை பெற்றான். தண்டனைக் காலம் முடிந்து, 1997 பிப்ரவரி 17-ம் தேதி அவன் விடுதலை ஆனான்.

இப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதான அனைவருமே இங்கேதான் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
.

3 comments:

அட, மறுபடியும் எழுதத் தொடங்கிட்டீங்களா! வாழ்த்துக்கள். 'திக்.. திக்.. திகார்'ங்கிற தலைப்பைப் படிச்சுட்டு ஆர்வமா உள்ளே போய்ப் படிச்சேன். ஏமாத்திட்டீங்களே சார்! :) சரி, பயனுள்ள தகவல்கள்!
 
நன்றி கணேஷ் ராஜா!
 
ஜெயிலில் IAS ஆ...அடேங்கப்பா!!