உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, May 15, 2011

அசத்தல் ராமன்!

ருவரைப் பார்த்த மாத்திரத்தில், அவரைப் பற்றிய ஒரு மதிப்பீட்டுக்கு வந்துவிட முடியாது; வந்துவிடக் கூடாது! அதிலும், நடிகர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் ஏற்று நடிக்கும் பாத்திரங்களை வைத்து அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இமேஜைக் கொண்டு அவர்களை மதிப்பிடுவது சரியல்ல.

நான் எப்போதும் அந்தத் தவற்றைச் செய்வதில்லை. எனினும், நகைச்சுவை நடிகர் மோகன் ராமன் விஷயத்தில் நான் கொஞ்சம் பிசகிவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும்.

குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருக்கிறார் என்று கேள்வி. ஆனால், அவற்றை நான் பார்த்ததில்லை. அசட்டுப் பிசட்டு காமெடி நாடகங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருக்கிறேன். அந்த நடிப்பும் எனக்கு அத்தனை உவப்பாய் இருந்ததில்லை. அவரது பர்ஃபாமென்ஸ் சரியில்லை என்பதை இதற்குக் காரணமாகச் சொல்ல முடியாது. பொதுவாகவே, தொலைக்காட்சி நகைச்சுவை நாடகங்களில் அசட்டுததனம் மலிந்திருப்பதே காரணம்! நகைச்சுவை என்கிற பெயரில் கதாசிரியரும் இயக்குநரும் சேர்ந்துகொண்டு அறுத்துத் தள்ளும்போது, அந்த எரிச்சல் நடிகர்கள் மீதும் விழும்தானே? ஹோட்டலில் இட்லி வேகவில்லையென்றால், சட்னி புளிக்கிறதென்றால் கொண்டு வருகிற சர்வரைத்தானே கடுப்படிக்கிறோம்?

எனவே, மோகன் ராமன் எங்களுக்கு நிகழ்ச்சி கொடுக்கவிருக்கிறார் என்று தெரிந்தபோது எனக்குப் பெரிய சுவாரஸ்யம் எதுவும் ஏற்பட‌வில்லை. 'சரி, ரொம்ப அறுத்தால் நழுவிவிடலாம்' என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.

மதியம் பஃபே முடிந்ததும், அவரது நிகழ்ச்சி தொடங்கியது. நிர்வாகவியலில் பட்டம் பெற்றவர் மோகன் ராமன். முழு நேர நடிகராக ஆவதற்கு முன்பு அவர் பல்வேறு நிறுவனங்களுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று நிர்வாக மேலாண்மை பற்றியும், மனித உறவுகள் பற்றியும் நிகழ்ச்சிகள் கொடுத்துள்ளாராம்.

மிக யதார்த்தமாக தன் உரையைத் தொடங்கினார் மோகன் ராமன். அவரது குரல், டி.வி நாடகங்களில் ஒலிக்கும் அசட்டுக் காமெடிக் குரலாக‌ இல்லாமல், மிகக் கம்பீரமாக இருந்தது. அது என் முதல் ஆச்சரியம்! அவரது நடை, உடை, பாவனை, பொடி வைத்துப் பேசும் மெலிதான நகைச்சுவை என ஆரம்ப நொடியிலேயே என்னைக் கட்டிப்போட்டுவிட்டார் அவர்.

நிர்வாகம் என்றால் என்ன, செயல் திட்டம் என்றால் என்ன, முதலாளி தொழிலாளி உறவு எப்படி, அதிகாரி பணியாள் உறவு எப்படி, பாடி லாங்வேஜ் என்றால் என்ன என்று தட்டுத் தடங்கல் இல்லாமல், ஏதோ எழுதிவைத்துக்கொண்டு பேசுவது போன்று இல்லாமல், எங்களிடையே உரையாடிக்கொண்டே தனது நிகழ்ச்சியை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்திக்கொண்டு போனார் மோகன் ராமன்.

நம்மவர்களிடையே உணர்ச்சியைத் தட்டி எழுப்புவது, எதிராளியைச் சாதுர்யத்தால் முறியடிப்பது, ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் அவர் விவரித்துச் சொல்லச் சொல்ல, உடம்புக்குள் உற்சாக குளூகோஸ் ஏறுவது போலப் புத்துணர்வாக இருந்தது. புது ரத்தம் பாய்ந்தாற்போல் இருந்தது. இது ஏதோ உபமானம் தரவேண்டுமே என்பதற்காக எழுதப்பட்ட வாசகங்கள் இல்லை. நிஜமாகவே அப்படியொரு பரவச உணர்வு கிடைத்தது.‌

தனது உரைக்குப் பக்கபலமாக, தனது விரிவுரைகளுக்கான‌ விளக்க உரையாக, இடையிடையே சில திரைப்படங்களிலிருந்து துண்டுக் காட்சிகளை (கிளிப்பிங்ஸ்) திரையிட்டுக் காண்பித்தார் மோகன் ராமன். அது இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சுவாரஸ்யம் சேர்த்தது. தவிர, 'இந்தக் காட்சியை ஏற்கெனவே பார்த்திருந்தும், இந்தக் கோணத்தில் பார்க்கவில்லையே' என்று, அவர் ஒவ்வொரு காட்சியைத் திரையிட்டபோதும் தோன்றியதில், அந்தக் காட்சிகள் புத்தம்புதுசாக, அர்த்தமுள்ளதாக, நமது முன்னோர்கள் எத்தனைப் புத்திக்கூர்மையோடு செயல்பட்டிருக்கிறார்கள் என்று நம்மை உணரச் செய்வதாக இருந்தன.

ஒரு செயலில் வெற்றி அடைவதற்கு எதிராளியின் பலத்தை எடைபோடுவது எத்தனை முக்கிய‌ம், அதன் வீர்யத்தைக் குறைப்பது எத்தனை முக்கியம் என்பதை விளக்க, மோகன்ராமன் திரையிட்டது கர்ணன் திரைப்படக் காட்சி ஒன்றை. துரியோதனனை உசுப்பேற்றி, விதுரரைப் பற்றிக் கேலியாகப் பேசச் செய்து, விதுரர் தனது வில்லை உடைத்துப் போடச் செய்த பகவான் கிருஷ்ணரின் சாதுர்யம், அமாவாசை நாளில் யுத்தம் தொடங்கினால் துரியோதனனுக்கே வெற்றி கிட்டும் என்பதால், அதை முறியடிக்கும் யுக்தியாக தர்ப்பணம் செய்யத் தொடங்கும் கிருஷ்ணர், குழம்பிப் போய் அவரைப் பார்க்க வந்த சூரியனிடமும் சந்திரனிடமும், "அமாவாசை என்றால் என்ன? நீங்கள் இருவரும் ஒன்றாகச் சேருவதுதானே? இதோ, இப்போது நீங்கள் இருவரும் ஒன்றகத்தானே வந்திருக்கிறீர்கள்! அப்படியானால் இன்று அமாவாசைதானே?" என்று கேட்டு மடக்கிய குறும்பு... அற்புதமான காட்சி! கிருஷ்ணராக‌ நடித்த என்.டி.ராமாராவின் வேஷப் பொருத்தத்தையும், நடிப்புத் திறனையும் சொல்லவா வேண்டும்!

'காதலிக்க நேரமில்லை' படத்தில் பிரசித்தி பெற்ற காட்சி, பாலையாவிடம் நாகேஷ் கதை சொல்லிப் பயமுறுத்தும் காட்சி. அதைத் திரையிட்ட மோகன் ராமன், "இந்தக் காட்சியை எல்லாரும் பார்த்திருப்பீங்க. ஆனா, நாகேஷின் நடிப்பையே உத்துப் பார்த்துட்டிருந்திருப்பீங்க. இப்போ நாகேஷை மறந்துட்டு, அது சிரமம்தான். அப்படியொரு அசாத்திய நடிகர் அவர். இருந்தாலும், எனக்காக இந்த ஒரு தடவை அவரை மறந்துட்டு, பாலையாவின் எக்ஸ்பிரஷன்களை மட்டும் கவனியுங்க. என்ன மாதிரி ஆக்டிங்! இப்படியொரு அற்புதமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருக்கலேன்னா, அந்தக் காட்சியே சொதப்பியிருக்கும்" என்று சொல்லிவிட்டு, அதைத் திரையிட்டார். ஆமாம். பாலையா பின்னிப் பெடலெடுத்திருந்தார்.

தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி இரண்டொரு ஹிந்திப் படங்களிலிருந்தும், இரண்டொரு ஆங்கிலப் படங்களிலிருந்தும்கூட காட்சிகளைத் திரையிட்டார் மோகன்ராமன். அனைத்தும் அவர் சொல்ல வந்த விஷயத்தை இன்னும் சுலபமாக, இன்னும் தெளிவாக விளக்கின.

'சிவாஜி' பட விழாவில் ரஜினியின் பேச்சிலிருந்தும் ஒரு துண்டுக் காட்சி ஒளிபரப்பப்பட்டது. நமது வேலை என்ன, நமது இலக்கு என்ன, அதை எப்படிச் சாதிப்பது, அதற்குத் தகுதியானவர்களின் உதவியை எப்படி ஒருங்கிணைப்பது என்று அத்தனை அழகாக, அத்தனைத் தெளிவாக, தனக்கே உரிய ஸ்டைலில் விளக்குகிறார் ரஜினி. அசத்தல்! இது அச்சமயம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது, ரஜினியின் பேச்சு என்கிற ஒரு ஆர்வம்தான் இருந்ததே தவிர, மற்றபடி அதில் எத்தனை நுட்பங்கள் பொதிந்துள்ளன என்பது புலப்படவே இல்லை. அதை மோகன் ராமன் விளக்கிச் சொன்னபோது, 'ஹா!'வென்று வாய் பிளந்து கேட்கத் தோன்றியது.

டீ பிரேக்கில் நான் அவரிடம் சென்று, அவரின் கைகளைப் பற்றிக் குலுக்கி, "எத்தனையோ பேரின் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். வொர்க்-ஷாப்களில் கலந்துகொண்டு இருக்கிறேன். ஆனால், இதுவரைக்கும் இப்படி ஒரு பேச்சை, இப்படி ஒரு அசத்தலான‌ நிகழ்ச்சியை நான் கேட்டதில்லை. அற்புதம் சார்!" என்று இதயத்தின் உள்ளிருந்து பாராட்டினேன். அவரது காமெடி நடிப்பை மட்டுமே பார்த்திருந்தபோதிலும், அது அவரது சுயம் அல்ல என்பது புரிந்திருந்தபோதிலும்... இப்படி ஒரு அசாத்தியத் திறமை அவருள் ஒளிந்திருக்கும் என்று நான் கொஞ்சம்கூட யூகிக்கவில்லையே, அதைத்தான் ஆரம்பத்தில் 'நடிகர் மோகன் ராமன் விஷயத்தில் நான் கொஞ்சம் பிசகிவிட்டேன்' என்று குறிப்பிட்டேன். அதற்கு மானசிகமாக மன்னிப்புக் கோரும் விதமாக அவரது கைகளைப் பற்றியபடியே சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தேன்.‌

அசட்டுக் காமெடிக்காக மோகன் ராமைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் தொலைக்காட்சிகள், அவருடைய அசத்தலான, ரசனையான‌ இன்னொரு முகத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். அதை ஏன் இன்னும் செய்ய‌வில்லை என்பதில் எனக்கு மிகவும் வருத்தம்தான்! (அல்லது செய்திருந்து எனக்குத்தான் தெரியவில்லையா?)

மோகன் ராமன் தனது அனுபவங்களை http://mohanramanmuses.blogspot.com என்கிற வலைப்பூவில் அவ்வப்போது ஆங்கிலத்தில் எழுதி வருகிறார். பகிர்ந்துகொள்வதற்கு அவரிடம் ஏராளமான, சுவாரஸ்யமான விஷயங்கள் இருப்பதை அவரிடம் பேசிய ஒரு சில நிமிடங்களிலேயே உணர்ந்துகொண்டேன். அவர் தமது அனுபவங்களை இன்னும் அதிகமாகத் தனது வலைப்பூ மூலம் தமிழில் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்; தனது அனுபவங்களைத் தொகுத்துப் புத்தகம் ஒன்று வெளியிட வேண்டும் என்பது என் வேண்டுகோள்!
.

7 comments:

நீங்கள் மட்டுமல்ல ..அவரை சின்னத் திரையில் பார்த்த அனைவரும் அப்படித் தான் மதிப்பிட்டிருப்பார்கள்..கொடுத்த வாய்ப்புகள் அப்படி... மேலாண்மை வகுப்புகள் எடுத்த விதத்தை படித்த பிறகு, மோகனராமன் ராஜாராமன் ஆகிவிட்டார்... பகிர்வுக்கு நன்றி....
 
informative and interesting!
 
'அசத்தல் ராமன்' பதிவு படித்தேன். அற்புதம்.
சம்பூர்ண ராமாயணம் என்று ஆரம்பித்து விட்டு துரியோதனன், விதுரர்...என்று வருகிறதே, படம் வேறு என்று நினைக்கிறேன்.
அன்புடன், கே.பி.ஜனார்த்தனன்
 
நன்றி திரு.பத்மநாபன்!

Really Mr.Jana? Thanks!

சரியாகச் சொன்னீர்கள் திரு. கே.பி.ஜனார்த்தனன்! அது கர்ணன் படம்தான். சம்பூர்ண ராமாயணம் அல்ல! பதிவு (மோகன்)ராமனைப் பற்றியது என்பதால், ராமாயணம் என்று என்னையுமறியாமல் எழுதிவிட்டிருப்பேன். தவற்றைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
 
மோகன்ராமனைப் பற்றிய கட்டுரை அருமை. அவர் எங்கள் குடும்ப நண்பர் என்பதால் எனக்கு அவரைப் பற்றித் தெரியும். இருந்தாலும், தெரியாதவர்கள் பலருக்கு அவரைப் பற்றி விரிவாகச் சொன்ன உங்கள் கட்டுரை பாராட்டுக்குரியது!
 
நன்றி கணேஷ்ராஜா!
 
பாலையாவின் மேதமைக்கு ஒரு பீஸ் ..
ஊட்டி வரை உறவு படத்தில் நாகேஷ் ஒரு காமெடி செய்திருப்பார்.’இது உங்க பிள்ளையா?’ என்று வேலைக்காரியாய் வரும் கேஆர்விஜயாவை நாகேஷ் கேட்க, அந்த டைமிங்கில் நாகேஷ் கேட்ட அந்த கேள்வி செம காமெடி! நாகேஷுக்கு ஒரு பழக்கம்..மக்களுடன்,மக்களாய் அவர் அமர்ந்து அவர் காமெடி பீஸைப் பற்றி தெரிந்து கொள்வார்.இந்த சீன் வரும் போது ஏக கிளாப்ஸ்.. நாகேஷ் நடிப்பு எப்படி என்று ஆடியன்சை அவர் கேட்க, அவர்கள் சொன்னார்களாம்..
“ நாகேஷ் இருக்கட்டும்..அவர் கேட்டதுக்கு பாலையா ஒரு முழி முழிக்கிறார் அதைப் பாருங்க”
அப்போது தான் தெரிந்ததாம் நாகேஷுக்கு காமெடியில் தாம் எவ்வளவு சிறு பிள்ளை என்று!
சக கலைஞனைப் பற்றி பெருமிதமாய் இந்த தகவலைச் சொன்னவரும் நாகேஷ் தான்!