உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, April 01, 2011

அரசியல் மேடைகளில் நான்!

தேர்தல் பிரசாரம் அனல் பறந்துகொண்டிருக்கும் நேரம் இது.

அறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சராகச் சுமார் ஒன்றரை ஆண்டுகள் இருந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர் கான்ஸரால் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்றபோது, என்னுடன் படித்த சக மாணவர்கள் (ஐந்தாம் வகுப்பு) அவர் குணமடைந்து நல்லபடியாகத் திரும்பி வரவேண்டுமே என்று தினந்தோறும் பிரார்த்தித்துக்கொண்டதும் நினைவிருக்கிறது. எம்.ஜி.ஆராவது நடிகர். அவரைத் திரையில் பார்த்துப் பார்த்து, ரசிகர்கள் அவர் மீது தீவிர அபிமானம் கொண்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், பிரபல நடிகரிடம் வைத்த‌ அதே அளவு அபிமானத்தை, தீவிர அன்பை ஓர் அரசியல்வாதியிடம் மக்கள் செலுத்தியது அறிஞர் அண்ணாவிடம் மட்டும்தான்! எங்கெங்கும் ஜனங்கள் அண்ணா... அண்ணா... அண்ணா... என்று அவரைக் கொண்டாடினார்கள்.‌‌

கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் பதவியில் முதன்முதலாக அமர்ந்ததும் எனக்குத் தெரியும். நெடுஞ்செழியனைத் தள்ளிவிட்டு முதல்வர் நாற்காலியை அவர் கைப்பற்றிய விதம் பற்றி அரசல் புரசலாக அந்த மாணவப் பருவத்திலேயே எங்களுக்குத் தெரிந்திருந்தது. நோயாளியாகிப் படுத்த படுக்கையாக இருந்த அண்ணாவைப் பார்க்கச் சென்ற கருணாநிதி 'அண்ணா..!' என்று கதறிக்கொண்டே அண்ணாவின் மார்பின் மீது விழுந்ததாகவும், அந்த அதிர்ச்சியிலேயே அண்ணா போய்விட்டார் என்பதாகவும் மாணவர்களுக்குள் (கவனம்: ஐந்தாம் வகுப்பு)பேசிக் கொள்வர்.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்குச் செல்வது அந்த நாளில் எனக்குத் தெருக்கூத்து பார்க்கச் செல்வது போல் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தது. இன்றைக்குப் போல் அந்த நாளில் ஆபாசப் பேச்சுக்க‌ள் காதுக்குள் ஆசிட் வார்க்கவில்லை. அவை நல்லதொரு பட்டிமன்றம் போன்று இருக்கும். தங்கள் கட்சியினரின் சாதனைகளை எடுத்து வைப்பார்கள்; மாற்றுக் கட்சியினர் செய்த தவறுகளைப் பிட்டு வைப்பார்கள். அடுத்து, அந்தக் கட்சியினரின் கூட்டத்துக்குச் சென்றால், இவர்கள் கட்சியின் வண்டவாளங்களைச் சொல்வார்கள். தங்கள் கட்சியைத் தேர்ந்தெடுத்தால் என்ன நன்மை என்று விளக்குவார்கள். பெரியவர், சிறியவர், அனுபவம் வாய்ந்தவர் என்றெல்லாம் பார்க்காமல் எதிர்க் கட்சியினரைச் சகட்டுமேனிக்குக் கடித்துக் குதற மாட்டார்கள்.

குறிப்பாக, டேப் பொன்னையா என்று ஒருவர். குழுவினரோடு வந்து ஜாலியாகப் பாடுவார். வில்லுப்பாட்டு போன்று இடை இடையே, ட்ரூப்பில் உள்ள மற்றவர்கள் எதிர்க் கட்சியினர் பற்றிக் கேள்வி கேட்க, அதற்குக் கிண்டலும் கேலியுமாகப் பதில் சொல்வார் பொன்னையா. பிறகு, அதையே பாட்டாக்கிப் பாடுவார். கேட்கக் கேட்க நேரம் போவதே தெரியாமல், மாலை 7 மணியிலிருந்து இரவு 10 மணி வரைகூட அமர்ந்து கேட்டிருக்கிறேன். 'ஒரு ரூபா தாரேன், உனக்கு ஒத்தைக் கல் மூக்குத்தி தாரேன்... உதயசூரியன் சின்னத்துக்கு ஓங்கிப் போடும்மா ஓட்டு!' என்று பொன்னையா பாட, 'உன் ஒரு ரூபா வேணாம், ஒத்தைக் கல் மூக்குத்தி வேணாம்! பசுவும் கன்றும் சின்னத்துக்குப் பார்த்துப் போடுவேன் ஓட்டு!' என்று பெண் பாடகி பாடுவார். அருமையான மெல்லிசை நிகழ்ச்சி கேட்பதுபோல் லயித்துப் போய் உட்கார்ந்திருப்பேன்.

நான் பதினொன்றாம் வகுப்பு (அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி) முடித்த பின்பு மேலே படிக்க வசதி இல்லாமல் தண்டச் சோறாகச் சுற்றிக்கொண்டு இருந்த காலத்தில், இப்படியான அரசியல் மேடைகளில் ஏறிப் பேசத் தொடங்கினேன். முக்கிய வேட்பாளர் அல்லது அரசியல் பிரசாரகர் வரும் வரைக்கும் உதிரிகள் ஒவ்வொருவராக மேடையேறி, மைக் பிடித்துப் பேசுகிற ஆசையில் என்னத்தையாவது உளறிக்கொட்டுவார்களே, அந்த லிஸ்ட்டில் நானும் ஒருவன். என்ன‌ வித்தியாசம் என்றால், அந்தப் பேச்சாளர் கூட்டத்திலேயே நான்தான் வயதில் மிகச் சிறியவன் என்பதோடு, பள்ளிப் பருவத்திலேயே இலக்கிய மேடைகளில், பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பேசிப் பரிசுகள் பெற்றிருந்ததால், உளறாமல் தெளிவாகவும் திருத்தமாகவும் பேசுவேன்.

தவிர இன்ன கட்சிக்காக என்றில்லாமல், என்னை ஆர்வத்தோடு கூப்பிடும் எந்தக் கட்சிக்குச் சார்பாகவும் என் பேச்சை அமைத்துக் கொள்வேன். முதல் நாள் மாலை ஒரு கிராமத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பேசியிருப்பேன்; மறுநாள் அதே கிராமத்தில், அதே திடலில் தி.மு.க‍வுக்கு ஆதரவாகப் பேசுவேன். அதற்கு அடுத்த நாள் தி.மு.க‍வை எதிர்த்து அ.தி.மு.கவுக்கு ஆதரவாகப் பேசுவேன். எனக்கு வேண்டியது ஒரு மேடை, அதில் ஏறி மைக் பிடித்துப் பேசுகிற கௌரவம், என்னைப் பெயர் சொல்லி அழைத்து 'இன்னார் உரையாற்றுவார்' என்று மைக்கில் அறிவிக்கிற கூட்ட ஏற்பாட்டாளரின் வரவேற்பு தரும் உற்சாகம், என் பேச்சை ரசித்துக் கை தட்டுகிற ஒரு கூட்டம், மாலை மரியாதை... அவ்வளவுதான்! மற்றபடி, அரசியல் கூட்டங்களில் பேசி ஒரு பைசா கூட சம்பாதித்தது இல்லை நான்.

சங்கீதமங்கலம், அன்னியூர், நங்காத்தூர், அனந்தபுரம், கல்யாணம்பூண்டி, அதனூர் எனச் சுத்துப்பட்டு கிராமங்களுக்கெல்லாம் போய் அரசியல் கூட்டங்களில் கலந்துகொண்டு கனல் கக்கியிருக்கிறேன். 'அய்யா... அது உதயசூரியன் இல்லய்யா! ஏமாந்துடாதீங்க. பெருசா இருந்தா உதயசூரியனாதான் இருக்கணும்னு அவசியமில்லே. அஸ்தமன சூரியனும் பெருசாத்தான் இருக்கும்! அணைகிற விளக்கு சுடர்விட்டுப் பிரகாசமாக‌ எரியுமே, அதுமாதிரிதான் இப்ப உதயசூரியன் இருக்கு. அதன் காலம் முடிஞ்சு போச்சு! உங்களுக்கு 'இலை' போட்டு விருந்து பரிமாற, மகராசன் எம்.ஜி.ஆர். காத்திருக்காரு. ஏழைகளின் வயிறு வாடுவதைப் பொறுக்காத கலியுகக் கர்ணனுக்கே உங்கள் ஓட்டு!' என்று பேசுவேன்.

அடுத்த நாள் தி.மு.க. மேடையில் தோன்றி, "இரட்டை இலை எதுக்குப் போடுவாங்க தெரியுமா, தெவசச் சோறு திங்கிறதுக்குப் போடுவாங்க! நீங்க தெவசச் சோறு திங்கப் போறீங்களா? வேணாங்கய்யா! உழைப்பாளிகள், விவசாயிகள் கும்புடற தெய்வம் உதயசூரியன்; உலகுக்கு ஒளி கொடுக்குறது உதயசூரியன்தான். உதயசூரியன் மட்டும் இல்லேன்ன இன்னிக்கு இந்த உலகம் இல்லே. நீயும் இல்லே, நானும் இல்லே, எம்.ஜி.ஆரும் இல்லே!" என்று பேசுவேன்.

நான் நன்றாகப் பேசியதால், எனக்குப் பல கட்சிக் கூட்டங்களில் பேச நிறைய அழைப்புகள் வந்தன. ஆனால், பேசுவதற்குப் பணம் கேட்கலாம் என்ற யோசனையே எனக்கு வரவில்லை. அவர்களே கார் வைத்து அழைத்துக்கொண்டு போய், கூட்டம் முடிந்ததும் கொண்டு வந்து என் வீட்டில் விடுவார்கள். சாப்பாடு, டீ, காபி, பன், சோடா, கலர் எல்லாம் கிடைக்கும். இதுவே எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. அதனால், கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் போய்ப் பேசிவிட்டு வந்தேன்.

இப்படிச் சுமார் இருபது, இருபத்தைந்து கூட்டங்கள் பேசியிருப்பேன்.

ஒருநாள், எங்கள் வீட்டு வாசலில் ஏழெட்டுப் பேர் கொண்ட ஒரு கூட்டம். "ஐயிரே! வெளியே வா!" என்று முரட்டுத்தனமாகக் குரல் கொடுத்தார்கள். என் அப்பா வெளியே போனார்.

"ஏய்யா! வாத்தியாரா இருந்துக்கிட்டு, உம் பையனுக்குப் புத்தி சொல்ல மாட்டியா? படிக்கிற புள்ளைக்கு ஏய்யா இந்த வீண் வேலை? இனியொருக்கா கட்சி, கூட்டம்னு மேடையேறிப் பேசிச்சுன்னு வையி... வேணாம்! வாத்தியாருங்கிற மரியாதைக்காக இப்ப எச்சரிக்கையோட நிறுத்திக்கிறோம். உம் புள்ளையே இப்படியிருந்தான்னா, உங்கிட்டே படிக்கிற புள்ளைங்க எப்படிய்யா உருப்புடும்? பார்த்து நடந்துக்க. அவ்வளவுதான்; சொல்லிட்டோம்!" என்று அந்தக் குழுவுக்குத் தலைவன் போல் இருந்தவன் மிரட்டலாகச் சொல்லிவிட்டு, "வாங்கடா போகலாம்!" என்று தன் குழுவை அழைத்துக்கொண்டு போனான்.

அன்றோடு என் அரசியல் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்தது.

அடுத்து, என் மேடை தாகத்தைத் தணிக்கக் கை கொடுத்தது ஆன்மிகம். அந்தக் கதை பிறகு!
.

7 comments:

மகளிர் அணி நமீதாவை அனுப்பி புரட்டி,புரட்டி ....
 
தொலைக் காட்சி இல்லாத காலத்தில் , மாணவ பருவத்தில் அரசியல் ஓரு சிறந்த பொழுது போக்காக இருந்தது ...
நீங்கள் மாட்டிக் கொள்ளாமல் மாறி மாறி அரசியல் கூட்டங்களில் பேசியது ஆச்சர்யம் ... சுவாரஸ்யமாக இருக்கிறதே ,எதாவது ஒரு கூட்டத்தில் பேசினால் சரி என்ற வகையில் ஊக்கப் படுத்தி இருப்பார்களோ ..
 
சிம்பிளான உங்கள் எழுத்து நடை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. எந்த அலங்காரமும் இல்லாமல், உங்கள் அனுபவங்களை உள்ளதை உள்ளபடி, தெளிவாகவும் திருத்தமாகவும் எழுதுவதால்தான், "இவர் ஒண்ணு எழுதினா அது சரியாத்தான் இருக்கும்னு மத்தவங்க நம்பிக்கை வைக்கிற அளவுக்கு ஓர் அழுத்தம் இருக்கு" என்று டி.எம்.எஸ். வாயால் பாராட்டுப் பெற்றிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
 
அதை சொல்லாம விட்டுட்டீங்களே..அப்பாட்ட என்ன பண்ணினார்? புரட்டி..புரட்டி எடுத்தாரா?
 
Nicely written.
 
Nicely written.
 
Why such a long sleep; write frequently as usual