உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, December 17, 2010

நடுத் தெருவில் நிர்வாணமாக...

“என்னிடம் பென்ஸ் கார் இருக்கிறது; என் வீட்டில் குக்கூ கடிகாரம் இருக்கிறது; என் வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்டு, பாமரேனியன்னு ரெண்டு மூணு நாய்கள் இருக்கு” என்றெல்லாம் பெருமையாகச் சொல்லிக்கொள்வது போல சிலர், “எனக்கு பி.பி., இருக்கு; கொலஸ்ட்ரால் இருக்கு; ஷுகர் இருக்கு” என்றெல்லாம் நோய்களைக் கூடப் பெருமையாகச் சொல்லிக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். “போன வாரம்தான் பைபாஸ் ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன்” என்பார்கள் சிலர். ஏதோ விலை உயர்ந்த பட்டுப்புடவை வாங்கியது போன்ற பெருமிதம் அவர்கள் குரலில் தொனிக்கும்.

எனக்கு அப்படியெல்லாம் ‘பெருமை’யாகச் சொல்லிக் கொள்ள எந்த நோயும் இல்லை. சின்ன வயதிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் தீராத வயிற்று வலி இருந்தது. பிறரிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளும்படியான வியாதி இல்லை அது.

நான் பள்ளி மாணவனாக இருந்த சமயம்... வாரத்துக்கு இரண்டு நாளாவது வயிற்று வலியால் துடிக்காமல் இருந்ததில்லை. பாடத்தை ஒழுங்காகப் படிக்கவில்லை என்றால், கணக்கைச் சரியாகப் போடவில்லை என்றால், என் வகுப்பு ஆசிரியர் பிரம்பால் என்னை வெளு வெளு என்று வெளுத்துவிடுவார். முழங்காலுக்குக் கீழே ரத்தக் கோடுகள் தென்படும். வாத்தியார் அடித்துவிட்டார் என்று என் அப்பாவிடம் போய்ப் புகார் செய்ய முடியாது. காரணம், வகுப்பு ஆசிரியரே என் அப்பாதான்!

அப்பா அடிக்கப் போகிறார் என்று தெரிந்தால், ஒரு பயம் வந்து அடி வயிற்றைச் சுருட்டி இழுக்கும். உடனே வயிற்று வலி வரும். கட்டுப்பாட்டை மீறி நம்பர் டூ வெளியேறும். பேதியாகும். இதையெல்லாம் கட்டுப்படுத்திக் கொள்ள நான் படாத பாடு படவேண்டியிருக்கும்.

பொதுவாகவே எனக்குச் செரிமானத் திறன் குறைவு. எது சாப்பிட்டாலும் செரிக்காது. ஏப்பம் வரும். வாழைக்காய் பஜ்ஜி தின்றால், அன்று இரவு காஸ் டிரபிள் ஏற்பட்டு, படுக்கையில் படுக்கவே முடியாமல், தூக்கம் கெட்டு, விடிய விடிய திக்கித் திணறுவேன். சீரகத் தண்ணி, இஞ்சி மொரப்பா, பிஸ்லேரி சோடா என்று சகல ஆயுதங்களையும் பிரயோகித்தும், ஒன்றும் நடக்காது. ஈனோ குடித்தாலும், நோ நோ என்று போக மறுத்துவிடும் என் வயிற்று வலி.

கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகத்தான் என் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டு, வயிற்று வலி வராமல் சமாளித்துக்கொண்டு இருக்கிறேன். வெறும் ரசம் சாதம், தயிர் சாதம், இட்டிலி, ஆசையாக இருந்தால் அதிகம் எண்ணெய் விடாமல் ஒன்றிரண்டு தோசை, ரஸ்க்... அவ்வளவே என் உணவு. மற்றபடி வீட்டிலோ, கடையிலோ பஜ்ஜி, போண்டா, சமோசா, பூரி என எதையாவது உள்ளே தள்ளினால், அன்றைக்கு ராத்திரி என் வயிறு தன் வேலையைக் காட்டிவிடும். இதைப் பரீட்சார்த்தமாகவே சோதித்துப் பார்த்துவிட்டேன். அவ்வளவு ஏன்... எண்ணெயில் பொரித்த அப்பளம்கூட எனக்கு ஆகாது!

சின்ன வயதில் நான் வசித்ததெல்லாம் கிராமப்புறங்களில்தான்! நடு இரவில் வயிற்றைச் சுருட்டி வலிக்கும். அட்டேச்டு பாத்ரூம், டாய்லெட், ஃப்ளஷ் அவுட்டெல்லாம் கிடையாது. ஒவ்வொரு வீட்டுக்கென்றும் தனி கக்கூஸ் கூடக் கிடையாது. வீட்டுக்கு வெளியே வந்து தெருக்கோடிக்குப் போய், வீடுகள் இல்லாத பகுதியில் ஒரு ஓரமாக, குப்பை மேட்டில் போய் மல ஜலம் கழித்துவிட்டு வரவேண்டியதுதான். புழு, பூச்சி, மரவட்டை... சமயங்களில் நட்டுவாக்கிலி கூடக் காலில் ஊரும்.

ஏதோ ஒரு தடவை, இரண்டு தடவை என்றால் பரவாயில்லை... வயிற்று வலி வந்தால், அன்றைய இரவு எனக்குச் சிவராத்திரிதான். விடிய விடிய சுமார் இருபது முப்பது தடவைக்கு மேல் எழுந்து எழுந்து ஓடிக்கொண்டு இருப்பேன். சில சமயம் வயிற்றைச் சுருட்டி வலிக்கும். போய் உட்கார்ந்தால், வருகிற மாதிரி இருக்குமே தவிர, வரவே வராது. இந்த அவஸ்தையில் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகக்கூட அந்த இருட்டில் உட்கார்ந்திருந்ததுண்டு.

1967-ம் ஆண்டு - நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம்... பள்ளியில் ஆசிரியர் மும்முரமாகச் சரித்திரப் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். என் வயிற்றில் ஒரு பிரளயம் கொஞ்சம் கொஞ்சமாக உருவாவதை உணர்ந்தேன். சடுதியில், வயிற்றில் ஒரு கலவரம் வெடித்தது. வயிற்றுக்குள் ஏற்பட்ட அந்த யுத்தத்தில், ஆசிரியர் நடத்திய பானிப்பட் யுத்தம் என் மண்டைக்குள் ஏறவே இல்லை. ஒரு கட்டத்தில் தாங்கவே முடியாமல் எழுந்து, வலது கையால் இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டியபடி, இடது கையை வயிற்றோடு மடித்துக் கட்டிக்கொண்டு பவ்வியமாக நின்று, வெளியே செல்ல அனுமதி கோரினேன். குரல் கொடுக்கக் கூடாது. ஆசிரியராக எப்போது திரும்பி நம்மைப் பார்க்கிறாரோ, அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும். அன்றைக்குப் பள்ளிகளில் இதுதான் எழுதப்படாத ஒழுங்குமுறை.

கரும்பலகையில் ஏதோ எழுதிக்கொண்டு இருந்த சரித்திர ஆசிரியர் திரும்பியதும், என்னைப் பார்த்துக் கடுப்பானார். “என்ன, வயித்து வலியா? வெளியே போகணுமா? ஹூம்... உங்களுக்கெல்லாம் இது ஒரு சாக்குடா! சரி, பானிப்பட் யுத்தம் எந்த ஆண்டு நடந்தது?” என்றார். என்னவோ ஒரு வருடத்தைக் குத்துமதிப்பாகச் சொன்னேன். தன் கையில், சீடை போன்று சின்ன உருண்டையாக மாறியிருந்த சாக்பீஸ் துண்டால் என்னைக் குறிபார்த்து அடித்தார். “ஒழி! போய்த் தொலை! ஹூம்... இதெல்லாம் எங்கே உருப்படப் போகுது!” என்று எனக்கு அனுமதி வழங்கியவர், மீண்டும் கரும்பலகைக்குத் திரும்பி எழுதத் தொடங்கிவிட்டார்.

நான் வகுப்பறையை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடத்தின் பிரதான வாயில் கதவைக் கடந்து, சாலையில் ஓடினேன். (பள்ளியிலும் கக்கூஸ் கிடையாது.) சுமார் ஒரு பர்லாங் தூரம் ஓடினால், சாலையோரம் ஒரு குட்டை வரும். அங்கேயே எங்காவது மறைவிடம் பார்த்து மல ஜலம் கழித்துவிட்டு, அந்தக் குட்டைத் தண்ணீரில் கழுவிக்கொண்டு வருவதுதான் பள்ளிச் சிறுவர்களின் வழக்கம். நானும் அந்த உத்தேசத்தில் குட்டையை நோக்கி ஓடும்போதே, என் கட்டுப்பாட்டையும் மீறி, நம்பர் டூ வெளியேறிவிட்டது. தொடைகளில், கால்களில் வழியத் தொடங்கியது.

எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இன்னும் வேகமாக ஓடினேன். ஒருவாறு குட்டையை நெருங்கி, நிஜாரைக் கழற்றி, ஓரமாக அமர்ந்து, வயிற்றுச் சுமையை முழுமையாக இறக்கி முடித்து, குட்டைத் தண்ணீரில் இறங்கி, சுத்தம் செய்துகொண்டேன். கால்களை நன்கு கழுவிக்கொண்டேன். அசிங்கமாகி இருந்த நிஜாரைத் தண்ணீரில் அலசிக் கழுவுவது எனக்கு அருவருப்பாக இருந்தது. என் நிலமையை நினைக்க நினைக்க அழுகையாக வந்தது. எப்படியோ, நிஜாரைத் குட்டைத் தண்ணீரில் முக்கி அப்படியும் இப்படியுமாக ஆட்டி அலசி, அசிங்கத்தைக் கழுவ முயன்றேன். முழுவதுமாக அகல மறுத்தது.

இதற்குள், நான் வயிற்று வலியால் துடித்து வகுப்பிலிருந்து வெளியேறியிருக்கிறேன் என்பதைச் சரித்திர ஆசிரியர் மூலம் தெரிந்துகொண்ட என் அப்பா, உடனே கிளம்பி குட்டைப் பக்கம் வந்துவிட்டார். அது சேறும் சகதியும் நிறைந்த ஆழமான குட்டை. அப்போது எனக்கு நீச்சலும் தெரியாது என்பதால், எனக்கு ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிடப்போகிறதே என்கிற கவலையில் அப்பா என்னைத் தேடிக்கொண்டு வந்தார். அவரே என் நிஜாரை வாங்கித் தண்ணீரில் நன்கு அலசிக் கசக்கிக் கழுவினார். பின்னர், என் கைப்பிடித்து “வா” என்று அழைத்தார்.

நிஜாருக்காகக் கை நீட்டினேன். “ஈரமா இருக்குடா. சின்னப் பையன்தானே... தப்பில்ல. அப்படியே வா!” என்றார். எனக்கு ரொம்பக் கூச்சமாக இருந்தது. “அப்பா...” என்று சிணுங்கினேன். “ம்... ஒழுங்கா என்கூட வா. நிஜாரை ஈரத்தோட போட்டுக்கிட்டா சளி பிடிக்கும். சொன்னாக் கேளு!” என்று அதட்டி, அதே அரை நிர்வாணக் கோலத்தோடு சாலையில் என்னை ஊர்வலமாக அழைத்து - இல்லையில்லை, கிட்டத்தட்ட இழுத்துச் சென்றார். தெருவில் போகிற வருகிறவர்கள் எல்லாரும் என்னையே கேலியாகப் பார்ப்பது போல் உணர்ந்து, மனசுக்குள் கூனிக் குறுகினேன். மற்றவர்கள்கூடப் பரவாயில்லை; என் வகுப்புப் பிள்ளைகள் சிலரின் கண்களிலும் பட்டேன் என்பதுதான் எனக்கு மிகுந்த மானப் பிரச்னையாகிவிட்டது.

குட்டைத் தண்ணீரில் எத்தனை அலசியும் போக மறுத்த, என் நிஜாரில் பட்ட அசிங்கம் போன்று இந்தச் சம்பவம் வெகு காலத்துக்கு என் மனதிலிருந்து அகல மறுத்து, அருவருப்பாக உறுத்திக்கொண்டே இருந்தது.

அதன்பின்னரும், வயிற்று வலியால் நான் பட்ட வேதனைச் சம்பவங்கள் ஏராளம். குறிப்பாக, 1996-ம் ஆண்டு குடும்பத்தோடு பஸ்ஸில் சென்றுகொண்டு இருந்தபோது, எனக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக மிகப் பெரிய சங்கடத்தில் மாட்டிக்கொண்டேன்.

அதையும் எழுதலாம் என்று நினைக்கிறேன். ஆனால், இந்தப் பதிவைப் படித்துவிட்டுச் சிலர், “இதென்ன கண்றாவி! பிளாகில் எதை வேண்டுமானாலும் எழுதச் சுதந்திரம் உண்டு என்பதற்காக, இதையெல்லாமா எழுதுவது!” என்று முகம் சுளிப்பார்களோ என்று யோசிக்கிறேன்.

ஆனால், இந்தப் பதிவைவிட அடுத்து எழுதப்போவது ஒன்றும் அதிக முகச் சுளிப்பை ஏற்படுத்தாது என்பது நிச்சயம்!
.

14 comments:

வேணாம்...வேணாம்...தாங்கமுடியல‌...வேணாம்...அழுதுடுவேன்..ஔங்ங்...!
 
அருமையான ஆட்டோகிராஃப்! பலருக்கும் அவர்களின் சின்ன வயதில் இதுபோன்ற சங்கடமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் என்பது நிச்சயம். ஆனால், அவர்களில் யாரும் இப்படி ஓப்பனாக இதை விவரித்து எழுதியதில்லை. உங்களைப் போன்று பலருக்கும் தெரிந்த‌ ஒரு பிரபலம் இப்படி சங்கோஜமே இல்லாமல் இதை விலாவாரியாக எழுதியிருப்பது ஆச்சர்யப்படுத்துகிற‌து!
 
கமென்ட் எழுதும்போது ஒரு கோரிக்கையும் வைக்க நினைத்தேன். மறந்துவிட்டது. தாங்கள் புத்தகம் பரிசளித்து வெகு நாட்கள் ஆகிறதே! இந்த ஆண்டும் முடியப் போகிறது. 2010ன் ஞாபகமாக ஏதேனும் போட்டி வைத்துப் புத்தகப் பரிசளிக்கலாமே?
 
நீங்கள் சொல்லியிருப்பது மாதிரி அப்படியொன்றும் முகச் சுளிப்பை ஏற்படுத்தவில்லை இந்தப் பதிவு. சொல்லப்போனால், அடித்து வளர்க்கப்படும் சிறுவர்களின் மனதில் வடுவாகப் பதியும் பயம், கிராமங்களின் சுகாதாரமின்மை, சில ஆசிரியர்களின் பக்குவமின்மை, பிள்ளைகளின் மனோ நிலை, பாதுகாப்பற்ற நீர் நிலைகள், அப்பாவின் அக்கறை போன்றவற்றை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருந்தது இந்தப் பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.
 
எஸ்.ராஜேஸ்வரி
அருவருப்பையல்ல தங்கள் மீது மரியாதையை தான் உங்கள் வெளிப்படையான மனம் ஏற்படுத்தியது. தொடருங்கள்.
 
இது அருவருக்கத்தக்கது ஒன்றும் இல்லை.

நிறைய பேர் பள்ளி பருவங்களில் இந்த மாதிரியான அவஸ்தைகளை தாங்கித்தான் வந்துள்ளனர்.

நான் பெரும் பாலும் திங்கள் கிழமை அன்று இந்த மாதிரி பாடுபடுவேன். காரணம், சண்டே பெரும்பாலும் அசைவ உணவை விரும்பி அதிகமாக சாபிடதினால்தான்.

நன்றி.

அதிகம் எழுதுங்கள்.

விமல்
 
** சில்சம்! உங்க பின்னூட்டத்தை ரசித்தேன். நன்றி!

** \\உங்களைப் போன்று பலருக்கும் தெரிந்த‌ ஒரு பிரபலம்// கணேஷ்! என்ன இது..? என்னை வெச்சுக் காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலையே..?

** கண்டிப்பாக கணேஷ்! இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக ஒரு போட்டி வைத்துப் புத்தகப் பரிசளிக்கிறேன். நான் பரிசளிக்கப்போகிற அந்தப் புத்தகம் மிக அற்புதமான புத்தகம். விலை மதிப்பற்றது. விறுவிறுவெனத் தயாராகி வருகிறது. ஜனவரியில் விற்பனைக்கு வரும். மற்ற விவரங்களைப் பின்னர் தெரிவிக்கிறேன். முடிந்தால், நான் பரிசளிக்க எண்ணியுள்ள அந்தப் புத்தகம் என்னவாக இருக்கும் என்று யூகித்து, என் வலைப்பூ நேயர்கள் எனக்குப் பின்னூட்டங்கள் அனுப்பலாம். சரியாக யூகித்து எழுதும் முதல் ஐந்து பேருக்கு வேறு ஒரு குட்டிப் புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.
 
** ராஜேஸ்வரி! உங்கள் பின்னூட்டத்தைப் படித்த பின்புதான், ‘அடேடே! இத்தனை விஷயங்கள் அடங்கியிருக்கிறதா எனது இந்தப் பதிவில்!’ என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நன்றி!

** நன்றி ஈலன்! (தங்கள் பெயரைத் தமிழில் எப்படி உச்சரிப்பது எனத் தெரியவில்லை. தவறாக இருப்பின் மன்னியுங்கள்!)

** நன்றி விமல்!
 
//நான் பரிசளிக்க எண்ணியுள்ள அந்தப் புத்தகம் என்னவாக இருக்கும் என்று யூகித்து//

2 ஊகங்கள் allowed-ஆ சார்? :)

#1 - Connect The Dots புத்தகத்தின் தமிழ் வடிவம்?
#2 - 'விகடன்' authorized சரித்திரம்?

- என். சொக்கன்,
பெங்களூர்.
 
Book name .,Vikatan pokkisam! Romba late answer?
 
I repeat my guess with the exact name.,ananda vikatan 1926 mudal 2000 varai.75 aandu kaala varalaaru.
 
ரவி சார், ரொம்ப நாளைக்கப்புறம் உங்க வலைப்பக்கம் வருகிறேன். வந்ததுமே வயிற்று வலி! தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்னுவாங்க. அது மட்டுமில்லே, வயித்து வலி, பல்வலின்னு எல்லா வலியுமே தனக்கு வந்தாத்தான் தெரியும். எத்தனை அவதிப்பட்டிருப்பீங்கன்னு பதிவு சொல்லுது. எல்லாருமே படிச்சுத் தெரிஞ்சுக்கிற மாதிரி குழப்பமில்லாம எழுதறீங்க. பாராட்டுறதுக்கு நான் யாரு?
 
I have received your prize book [Puthu moligal 500] .
It is like new year gift for me.
Thanks a lot for that.
 
இளம் பிராயத்து நினைவுகளை மிகையின்றி, வார்த்தை அலங்காரமின்றி, அந்தப் பொழுதின் உணர்வுகளை நிலைக்கண்ணாடி பிம்பம் போல் பதிவிட்டிருக்கிறீர்கள். ஒரு பிரபலமாக இருந்து இதை பதிவிட முன்வந்த உங்கள் தைரியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.