உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, March 20, 2009

இன்னிசை சகாப்தம் டி.எம்.எஸ்.!


ரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் என்றால், எனக்கு அலர்ஜி! பத்திரிகைத் துறைக்கு நான் வந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், பத்திரிகை தொடர்பாகக் கூட அவர்களைச் சந்திப்பதை நான் தவிர்த்தே வந்திருக்கிறேன்.

விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் நான் பி.யு.சி. படித்துக்கொண்டு இருந்தபோது, ஆண்டு விழாவில் நடிகர்திலகம் சிவாஜிகணேசனைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். நான் மிகத் தீவிர சிவாஜி ரசிகன் என்பது என் தோழர்கள் அனைவருக்குமே தெரியும். (இன்றைக்கும் கூட நான் சிவாஜியின் ரசிகன்தான்.) விழா முடிவில், மாணவர்கள் கும்பல் கும்பலாகச் சென்று சிவாஜியிடம் ஆட்டோ கிராஃப் வாங்கினார்கள். நான் வாங்கவில்லை. என் நண்பர்கள் எல்லோருக்கும் ஆச்சர்யம்!

ஆனால், இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. நான் சிவாஜியின் நடிப்புக்கு ரசிகன். அவரின் 'கௌரவம்' படத்தை 30 முறைகளுக்கு மேலும், 'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தை 25 முறைகளுக்கு மேலும் அலுக்காமல் சலிக்காமல் பார்த்து ரசித்திருக்கிறேன். மற்றபடி அவரை நேரில் சந்தித்துக் கைகுலுக்குவதிலோ, கையெழுத்து வாங்குவதிலோ எனக்குப் பெரிய ஆர்வமோ, அப்படி ஒரு எண்ணமோ ஏற்பட்டது இல்லை. தவிர, ஆரம்பத்தில் சொன்னது போல், பொதுவாகவே எனக்கு சினிமா பிரபலம் என்றால் அலர்ஜி! திரையில் பார்த்து ரசிப்பதோடு சரி; நெருங்கிப் பேச, பழக விரும்புவதில்லை.

ஆனால்... பார்க்கவேண்டும், பேசவேண்டும் என்று நான் தணியாத தாகம் கொண்டு இருந்த திரைப் பிரபலங்கள் இருவர். ஒருவர், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். மற்றவர், பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்.

நினைவு தெரிந்த நாள் முதலாக, அதாவது சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக டி.எம்.எஸ்ஸின் பாடல்களைக் காது குளிரக் கேட்டு, சுவாசித்து வளர்ந்தவன் நான். அவரின் அபிமானி, ரசிகன், தீவிர ரசிகன் என்பதையெல்லாம் தாண்டி, வெறிபிடித்த ரசிகன் என்றே சொல்லலாம்.

இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது... 'சரஸ்வதி சபதம்' படம் வெளியானபோது, நான் ஏழு வயதுச் சிறுவன். அன்று, 'அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி' என்று என் காதுகளில் விழுந்த அவரது கம்பீரக் குரல், என்னை அந்த இளம் வயதிலேயே சிலிர்க்க வைத்தது. 'தெய்வம் இருப்பது எங்கே... அது இங்கே...' என்று அவர் பாடியதைக் கேட்டபோது, தெய்வத்தையே எதிரில் கண்ட பரவசத்தை அடைந்தேன். 'ராணி மகாராணி, ராஜ்ஜியத்தின் ராணி' என்ற பாடலில் டி.எம்.எஸ்ஸின் குரலில் தெறித்த குழைவும் நெளிவும் நையாண்டியும் என்னை மிகவும் சொக்கவைத்தன. 'கல்வியா, செல்வமா, வீரமா... அன்னையா, தந்தையா, தெய்வமா...' என்ற பாடலில் மயங்கி, அதை நான் திரும்பத் திரும்ப எத்தனை ஆண்டுகளாகப் பாடிக்கொண்டு இருந்தேன் என்பதற்குக் கணக்கே இல்லை. (எட்டாம் வகுப்பு படிக்கும்போது, மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான போட்டிகளில், வழக்கமான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் தவிர, பாட்டுப் போட்டியிலும் தைரியமாகக் கலந்துகொண்டு, நான் அந்தப் பாடலைத்தான் பாடி முதல் பரிசு பெற்றேன்!)

அத்தனை சின்ன வயதிலேயே பள்ளிப் பிள்ளைகளான நாங்கள் சிவாஜி ரசிகர்களாகவும், எம்.ஜி.ஆர். ரசிகர்களாகவும் பிரிந்திருந்தோம். நான் சிவாஜி ரசிகன். எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கொஞ்சம் முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்பது அப்போதைய என் எண்ணம். அதனால் அவர்களிடமிருந்து கொஞ்சம் விலகியே இருப்பேன். ஆனாலும், எம்.ஜி.ஆர். படப் பாடல்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். 'கடவுள் எனும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி...' என கிராம பஞ்சாயத்து போர்டு உச்சியில் கட்டியிருக்கும் புனல் வடிவ ஸ்பீக்கர் அலறுகிறபோது, என் நாடி நரம்புகளெல்லாம் சிலிர்க்கும். 'நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்... நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை விதைக்கணும்...' என்ற டி.எம்.எஸ்ஸின் ஓங்கி உயர்ந்த மிடுக்கான குரல், அந்தப் பாடல்களை சிடி-யில் பதிவு செய்வது போல் என் இதயத்தில் எழுதி வைத்துவிட்டது.

படத்தில் யார் நடிக்கிறார்களோ அவரேதான் பாடுகிறார் என்றுதான் நான் அந்தச் சிறு வயதில் நம்பிக்கொண்டு இருந்தேன். சிவாஜி பாடல்களை ஒரு சிவாஜி ரசிகனாக நான் லயித்துக் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே, அடுத்து வெளியாகும் எம்.ஜி.ஆர். படப் பாடல்கள் கலக்கலாக ஒலிபரப்பாகும். 'அட, நம்ம ஆளுக்கு இணையாக இவரும் பாடிக் கலக்கறாரே!' என்று எம்.ஜி.ஆர். மீது உள்ளூரக் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கும். போகப் போகத்தான், இருவருக்குமே டி.எம்.எஸ். என்கிற ஒருவர்தான் பின்னணி பாடுகிறார் என்கிற விவரம் தெரிந்தது.

அந்தக் காலத்தில், ஒரு சாக்லெட் டப்பாவின் மூடியில் டி.எம்.எஸ்ஸின் கம்பீரமான உருவம், பட்டையாக விபூதி பூசிய நெற்றியோடு தெய்வீக உணர்வைத் தரும் விதமாக அச்சிடப்பட்டிருக்கும். அப்படி ஒரு பெட்டியை எங்கள் கிராமத்துப் பெரியவர் ஒருவரிடம் நான் பார்த்தேன். டி.எம்.எஸ். படம் பதிந்திருந்த பெட்டி என்பதற்காகவே, அதை எனக்குத் தரச் சொல்லி அந்தப் பெரியவரிடம் தினம் தினம் கெஞ்சிக் கூத்தாடி, நச்சரித்து ஒரு நாள் வாங்கிக்கொண்டுவிட்டேன். அதில்தான் என் பேனா, பென்சில்களைப் போட்டுக்கொண்டு, பெருமையோடு ஸ்கூலுக்குப் போய் வருவேன்.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான், கிராமத்தை விட்டு விழுப்புரம் வந்தேன். விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் பிள்ளையார் கோயில் விழாவில் கச்சேரி செய்ய, ஆண்டுக்கு ஒருமுறை டி.எம்.எஸ். வருவார். கூட்டமென்றால் பயந்து நடுங்கும் நான் (இன்றைக்கும் கூட கும்பல் என்றால், எனக்குக் கொஞ்சம் உதறல்தான்!Enochlophobia!) டி.எம்.எஸ்ஸைக் காண வேண்டும் என்பதற்காக, அத்தனைக் கூட்டத்துக்கு மத்தியிலும் அடித்துப் பிடித்துக்கொண்டு உள்ளே நுழைந்து போய் முன் வரிசையில் காத்திருந்து, அவர் பாடுவதைப் பரவசத்தோடு மெய் சிலிர்க்கப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறேன்.

என் தாத்தா டி.எம்.எஸ்ஸின் ரசிகராக இருந்தவர். 'தூக்குத் தூக்கி' படப் பாடல்களையெல்லாம் அவர் சிலாகித்துச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவருக்குப் பின், என் அப்பா டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். ஆனால், அவரின் அபிமான பாடகர் டி.ஆர்.மகாலிங்கம்தான். இருப்பினும், 'கௌரவம்' படத்தில், 'கண்ணா... நீயும் நானுமா...', 'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தில், 'இன்குலாப் ஜிந்தாபாத்... இந்துஸ்தான் ஜிந்தாபாத்' போன்ற பாடல்களை டி.ஆர்.மகாலிங்கம் என்ன, வேறு யாராலுமே பாடமுடியாது என்று அடித்துச் சொல்லுவார். சத்தியமான வார்த்தை! டி.எம்.எஸ்ஸின் பக்தி ரசம் இழைந்தோடும் 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன், நற்கதி அருள்வாய் அம்மா...' என்ற பாடலை உருகி உருகிப் பாடுவார் அப்பா. இன்றைக்கு அப்பாவின் வயது 77.

'அழகென்ற சொல்லுக்கு முருகா', 'சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா...', 'உள்ளம் உருகுதையா முருகா உன்னடி காண்கையிலே...' 'மெல்லச் சிரிக்கும் கந்தன் புன்னகையில்...' என டி.எம்.எஸ்ஸின் எந்தவொரு பக்திப் பாடலைக் கேட்டாலும், அந்த முருகப் பெருமானே எங்கிருந்தாலும் இறங்கி ஓடிவந்துவிடுவான் என்று தோன்றும். 'மனம் கனிந்தே நீ அருள் புரிவாய்...' என்று நெகிழ வைக்கும் அவரது குரலைக் கேட்டால், அந்த முருகன் அருள் புரியாமலும் போய்விடுவானா என்ன?

நாற்பது ஆண்டுகளுக்கு முன் பொதுக்கூட்டங்களிலும், டீக்கடைகளிலும் கேட்டு மயங்கிய டி.எம்.எஸ்ஸின் குரலை, விஞ்ஞான வளர்ச்சியின் உதவியால், வசதியாக கம்ப்யூட்டரில் பதிவு செய்துகொண்டு இன்றைக்கும் தினம் தினம் கேட்டு ரசித்துக்கொண்டு இருக்கிறேன்.

'பொன்மகள் வந்தாள், பொருள்கோடி தந்தாள்...',

'நினைத்தேன் வந்தாய் நூறு வயது...',

'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவள் மாம்பழம் வேண்டும் என்றாள்...',

'இனியவளே, என்று பாடி வந்தேன்...',

'ஒருவர் மீது ஒருவர் சாய்-ந்து...',

'பச்சைக் கிளி முத்துச் சரம்...',

'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...',

'ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா...',

'வேலாலே விழிகள்...',

'நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்...',

'மல்லிகை முல்லை, பொன்மொழிக் கிள்ளை...',

'உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று...',

'நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ...',

'பொன்னை விரும்பும் பூமியிலே...',

'ஆறு மனமே ஆறு...',

'பூமாலையில் ஓர் மல்லிகை...',

'பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த, ஊர்வலம் நடக்கின்றது...',

'முத்துக்களோ கண்கள்... தித்திப்பதே கன்னம்...',

'பொன்னுக்கென்ன அழகு, பூவுக்கென்ன பெருமை...',

'அமைதியான நதியினிலே ஓடம்...',

'உன்னைச் சொல்லிக் குற்றமில்லை...',

'இன்பமே... உந்தன் பேர் பெண்மையோ...',

'மயக்கம் எனது தாயகம்...',

'காகிதத்தில் கப்பல் செய்து...',

'ஒரு காலத்திலே என்னைக் கட்டிப்போட ஒரு ராஜ்ஜியம் இருந்தது...',

'எந்தன் பொன்வண்ணமே...',

'மயக்கமென்ன இந்த மௌனமென்ன...',

'ஆடலுடன் பாடலைக் கேட்டேன்...',

'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...',

'முத்தைத்தரு பத்தித் திருநகை...',

'எங்கே நிம்மதி...',

'ஓ... ராஜா! நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்...',

'அன்பு நடமாடும் கலைக்கூடமே...',

'பாட்டும் நானே, பாவமும் நானே...',

'தம்பீ... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று...',

'உன் கண்ணில் நீர் வழிந்தால்...',

'முத்து நகையே உன்னை நானறிவேன்...',

'அம்மம்மா... தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்...',

'நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்...'

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நான் திரும்பத் திரும்பக் கேட்டு ரசித்த, இன்றைக்கும் கேட்டுக் கேட்டு ரசித்துக்கொண்டு இருக்கும் டி.எம்.எஸ்ஸின் வசீகரக் குரலில் ஒலித்த பாடல்களையெல்லாம் பட்டியல் போடுவதென்றால் இன்றைக்குள் முடியாது. 'ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...' பாடலில், 'சொட்டுத் தேனைப் போல்...' என்று அவர் பாடினால், ஜிலீரென்று ஒரு சொட்டுத் தேன் நாவில் விழுந்தது போன்ற உற்சாகம். 'இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்று வெறும் உவமை நயமாக இருந்த பாரதியாரின் வரியை உண்மையாக்கியவர் டி.எம்.எஸ். பாட்டுக்கொரு தலைவன் என்றால், சத்தியமாக அது அவர்தான்!

'காது கொடுத்துக் கேட்டேன், ஆஹா குவா குவா சத்தம்...' என்று பிறக்கப்போகிற குழந்தைக்கும் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்., 'போனால் போகட்டும் போடா!' என்று போன உயிருக்காகவும் பாடியிருக்கிறார். ஜனனத்துக்கும் பாடியிருக்கிறார், மரணத்துக்கும் பாடியிருக்கிறார்; கல்யாணத்துக்கும் பாடியிருக்கிறார், காரியத்துக்கும் பாடியிருக்கிறார்; காதலுக்கும் பாடியிருக்கிறார், காதல் தோல்விக்கும் பாடியிருக்கிறார், காதல் துரோகத்துக்கும் பாடியிருக்கிறார்; நட்புக்கும் பாடியிருக்கிறார், பிரிவுக்கும் பாடியிருக்கிறார்; சந்தோஷத்துக்கும் பாடியிருக்கிறார், துக்கத்துக்கும் பாடியிருக்கிறார்; அம்மாவுக்கும் பாடியிருக்கிறார், மகளுக்கும் பாடியிருக்கிறார்; தந்தைக்கும் பாடியிருக்கிறார், தனயனுக்கும் பாடியிருக்கிறார்; வீரத்துக்கும் பாடியிருக்கிறார், விவேகத்துக்கும் பாடியிருக்கிறார்; ஆத்திகத்துக்கும் பாடியிருக்கிறார், நாத்திகத்துக்கும் பாடியிருக்கிறார்; பெரியவரைப் பற்றியும் பாடியிருக்கிறார், பெரியாரைப் பற்றியும் பாடியிருக்கிறார்; 'உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்' என்ற அவரின் கம்பீரக் குரல், சோர்ந்து கிடந்த எத்தனை எத்தனை உள்ளங்களை உசுப்பி எழுப்பிச் சுறுசுறுப்பாக இயங்க வைத்திருக்கிறது!

எம்.ஜி.ஆருக்குப் பாடுகிறாரா, சிவாஜிக்குப் பாடுகிறாரா என்று மட்டும் அல்ல, அது எந்த வயது சிவாஜி, 60-களில் இருந்த சிவாஜியா, 70-களில் இருந்த சிவாஜியா, 80-களில் இருந்த சிவாஜியா என வித்தியாசப்படுத்திக் காட்டி, டி.எம்.எஸ்ஸின் குரல் அந்தந்தக் கால கட்ட சிவாஜியைக் கண் முன் நிறுத்தியதே... இப்படி ஓர் அபூர்வ பாடகரை நான் பார்த்தது இல்லை. நேற்றைக்கும் இன்றைக்கும் நாளைக்கும் கூட இவரைப் போன்ற பிறவிப் பாடகரை இந்த உலகம் காணப் போவது இல்லை.

சிவாஜியின் குறிப்பிட்ட படத்தை நான் பார்த்திருக்க மாட்டேன் என்றாலும், டி.எம்.எஸ். பாடுகிற விதத்தை வைத்தே, அதற்கு சிவாஜி எப்படி நடித்திருப்பார் என்று என் மனசுக்குள் ஒரு திரைப்படம் ஓடும். பின்னர் என்றைக்காவது நான் அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தால், நான் ஏற்கெனவே கற்பனை செய்து வைத்திருந்தது போலவேதான், சிவாஜியின் நடிப்பு இருக்கும். இப்படி ஒரு பாடலின் மூலமாகவே ஒருவரின் நடிப்பை அந்த ரசிகரின் மனக் கண் முன் கொண்டு வந்தது டி.எம்.எஸ். மட்டும்தான்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கு மட்டும் அவர் தனித்தனிக் குரலில் பாடவில்லை; ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், எஸ்.எஸ்.ஆர் இவர்களுக்கும்கூடத் தோதாக அவர் தனது குரலை மாற்றிப் பாடி, மாய வித்தை புரிந்திருக்கிறார்.

'செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்' பாடலில், 'நாடகம் என்றே நான் நினைக்க, நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க...', என்று டி.எம்.எஸ். பாடும்போது, ஜெய்சங்கர்தான் தெரிகிறார். 'என் கேள்விக்கென்ன பதில்...' பாடலில், சிவகுமாருக்காக டி.எம்.எஸ். தன் குரலை எத்தனை மென்மையாகக் குழைத்துக் கொடுத்தார்! அதுவே பின்னாளில், 'பருத்தி எடுக்கையிலே...' பாடலில், 'ஓடித்தான் வந்திருப்பேன்...' என்று பாடும்போது, அது சிவகுமாருக்கு எவ்வளவு கச்சிதமாகப் பொருந்தியது!

'வாராதிருப்பாரோ வண்ண மலர்க் கன்னியவள்...' என்ற பாடலின் ஒவ்வொரு வரியுமே எஸ்.எஸ்.ஆரே பாடுகிற மாதிரியல்லவா இருந்தது! குறிப்பாக, 'கண்ணழகு பார்த்திருந்து... காலமெல்லாம் காத்திருந்து...' என்று அந்த வரிகளை டி.எம்.எஸ். நீட்டிய அழகு எஸ்.எஸ்.ஆருக்கு அத்தனைக் கச்சிதம்!

மற்ற பாடகர்கள், பாடகிகள் பாடிய தனிப் பாடல்களை, அவை எத்தனை அற்புதமான பாடலாக இருந்தாலும், தொடர்ச்சியாக ஐந்து அல்லது ஆறு பாடல்களுக்கு மேல் என்னால் கேட்கமுடியவில்லை. இடையில் மாறுதலுக்கு வேறு ஒரு குரல் கேட்கவேண்டும் என்று தோன்றிவிடும். ஆனால், டி.எம்.எஸ்ஸின் பாடல்களை எம்.பி-3 வடிவில் போட்டுத் தொடர்ந்து 180 பாடல்கள், 200 பாடல்கள் எனக் கேட்டாலும் எனக்கு அலுக்கவில்லை; சலிக்கவில்லை!

முக்கியக் காரணம், மற்றவர்கள் வெறுமனே அந்தப் பாடல் வரிகளைப் பாட்டாகப் பாடிவிட்டுப் போய்விடுகிறார்கள். ராகம், தாளத்துக்குச் சரியாகப் பாடுகிறோமா என்பதில் மட்டுமே அவர்களின் கவனம் இருக்கிறது. மாறாக டி.எம்.எஸ்ஸோ, அந்தப் பாடல் வரிகளை உள்வாங்கிக்கொண்டு, அதற்கு வாயசைத்து நடிக்க இருப்பவர் யார் என்பதையும் தெரிந்துகொண்டு, அந்தக் கதாபாத்திரமாகவே மாறி, ராகத்தோடு உணர்ச்சியையும் இழைத்து, அந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்துவிடுகிறார். 'ஆகட்டும்டா தம்பி ராஜா...' பாடலில், 'பள்ளம் மேடு பார்த்துப் போகணும்...' என்று பாடும்போது பள்ளத்தையும் மேட்டையும் தன் குரலில் இறக்கி, ஏற்றிக் காட்டுவார் டி.எம்.எஸ். அதே போல, 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா...' பாடலில், 'அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி...' என்று அவர் பாடும்போது 'அண்ணா....ந்து' என்கிற உச்சரிப்பிலேயே அண்ணாந்து பார்க்கின்ற உணர்வைக் கொடுப்பார். 'வாழ நினைத்தால் வாழலாம்' பாடலில், 'கன்னி இளமை என்னை அணைத்தால்...' என்று பாடும்போது உண்மையாகவே ஒரு பெண் தன் மென்மையான கரங்களால் அணைப்பது போலிருக்கும். குரலில் இத்தனை மாய ஜாலங்களை வேறு எந்தப் பாடகரும் செய்து நான் கேட்டதில்லை.

ஓர் அழகான பெண் பொம்மைக்குப் பளபளவென்று புடவை உடுத்தி, நகை அலங்காரம் செய்து வைத்தால் கூட, அது உயிரற்ற பொம்மைதான்! அப்படித்தான் மற்றவர்களின் குரல் எனக்குத் தோன்றுகிறது. ஓகே., அழகான பொம்மை. அவ்வளவுதான்! அதற்கு மேல் ஒன்றும் இல்லை. ஆனால், டி.எம்.எஸ்ஸின் குரலோ கன்னம் குழிய, பொக்கை வாய் திறந்து சிரித்தபடி கண்ணெதிரே உயிரோட்டமாகத் தவழ்ந்து வரும் அழகுக் குழந்தை போன்றது. எடுத்துக் கொஞ்சத் தொடங்கினால், கீழே இறக்கிவிட மனசே வருவதில்லை.

ஐயா... உங்கள் பாடல்களால் என்னைப் போன்ற லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரசிகர்கள் புத்துணர்ச்சி பெற்றோம்; கவலைகள் மறந்தோம்; சோகங்களை உதறினோம்; இன்றைக்கும் உங்களின் குரல் எங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்து வருகிறது. ஆனால், இதற்கெல்லாம் கைம்மாறாக நாங்கள் உங்களுக்கு என்ன செய்திருக்கிறோம்! ஒன்றுமில்லை. ஆனால், எங்கள் இதயத்தில் ஒரு சிம்மாசனம் போட்டு, உங்களை அதில் கம்பீரமாக உட்கார வைத்து, மானசீகமாக அழகு பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதைத் தவிர, எங்களால் செய்யக்கூடியது என்ன இருக்கிறது!

தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் மனமகிழ்வோடும், உடல் நலத்தோடும் வாழ அருள்பாலிக்குமாறு அந்த முருகப் பெருமானையும், நான் வணங்கும் மகாஸ்ரீ அரவிந்த அன்னையையும் வணங்கி, வேண்டுகிறேன்.

- ரவிபிரகாஷ்

பின்குறிப்பு:

மார்ச் 24 அன்று டி.எம்.எஸ்ஸின் பிறந்த நாள். அன்றைக்கு என் பிளாகில் ஏற்றுவதற்காக மளமளவென்று கம்போஸ் செய்த கட்டுரை இது.

எதிர்பாராதவிதமாக, விரைவிலேயே என் அபிமான பாடகர் டி.எம்.எஸ். ஐயா அவர்களை நேரிலேயே சந்தித்து, உரையாடி மகிழ்வேன் என்று நான் நினைக்கவே இல்லை.

அவரைச் சந்தித்து அளவளாவி மகிழ்ந்த அந்த அனுபவத்தைத் தனிக் கட்டுரையாகக் கொடுத்துள்ளேன்.

0 comments: