உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, March 20, 2009

எழுத்துலகின் சூப்பர் ஸ்டார்!

''விகடன் பிரசுரத்திலிருந்து வெளியாகும் 'விகடன் புக்ஸ்' புத்தகத்துக்காக சுஜாதா பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொடுங்கள்'' என்று 27.2.2008 புதன்கிழமை இரவு போன் பண்ணிக் கேட்டார் பொன்ஸீ. சுஜாதா மறைந்த தினம் அது. மறுநாள் வியாழனன்று காலையில் கம்போஸ் செய்யத் தொடங்கி, அடுத்தடுத்து வந்த விசாரிப்பு போன்கால்களால் எட்டரை மணிக்கு எழுதி முடித்த கட்டுரை கீழே!

சுஜாதா பேரைக் கேட்டாலே அதிருதுல்லே!

'சிவாஜி... பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்லே..!' - சிவாஜி படத்தில் சுஜாதா எழுதிய இந்த வசனம் பட்டிதொட்டி பூராவும் பற்றிக்கொண்டு, இன்னமும் அதிர்ந்துகொண்டு இருக்கிறது.

சொல்லப்போனால், இந்த வசனம் எழுத்துலகைப் பொறுத்தவரை சுஜாதாவுக்கே பொருந்தும். 1960-கள் வரை கட்டுப்பெட்டியாக இருந்த தமிழ் நடை, சுஜாதாவின் வருகைக்குப் பின் சிலிர்த்துக்கொண்டு படு நவீனமாகியது. மாட்டுவண்டியிலும் குதிரையிலும் பயணித்துக்கொண்டு இருந்த தமிழ் உரைநடைக்கு மின்சாரம் பாய்ச்சி, அதை ராக்கெட்டில் சீறிப் பாயச் செய்தவர் சுஜாதா. வாயிலேயே நுழையாத ஆங்கில எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி, அவர்களின் கதைகளைத்தான் தாங்கள் படிப்பதாக ஜம்பமடித்துக்கொண்டு இருந்த அன்றைய இளைஞர்களைத் தமது காந்த எழுத்தால் கட்டிப்போட்டு, 'நான் சுஜாதாவின் வாசகன்' என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளச் செய்தவர் சுஜாதா.

அன்றிலிருந்து இன்று வரை எழுத்துலகின் சூப்பர் ஸ்டார் 'சுஜாதா'தான்!
அவர் இன்று நம்மிடையே இல்லை!

தமிழகத்தின் தென்கோடி கிராமங்களில் வசிக்கும் சாமான்ய மனிதர்கள் பலரால் எப்படி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்ததை இன்னமும் ஏற்க முடியவில்லையோ, அப்படித்தான் இந்தப் புரட்சி எழுத்தாளர் சுஜாதா மறைந்ததையும் வாசகர்களால் ஜீரணிக்க முடியும் என்று தோன்றவில்லை.

சுஜாதாவின் பேனா தொடாத விஷயங்கள் உண்டா? சிறுகதை, நெடுங்கதை, சரித்திரக் கதை, ஆன்மிகம், நாவல், நாடகம், கட்டுரை, புதுக்கவிதை, ஹைக்கூ, வெண்பா, திரைக்கதை வசனம்... எத்தனை எத்தனை! நகரத்து இளைஞனுக்கும் கிராமியப் பாடல்களை அறிமுகப்படுத்தி, மண் வாசனையில் மயங்க வைத்த 'கரையெல்லாம் செண்பகப் பூ', கடினமான அறிவியல் விஷயங்களையும் எளிய தமிழில் சொன்ன அடுத்த நூற்றாண்டு, கி.பி.இரண்டாயிரத்துக்கு அப்பால், சிலிக்கன் சில்லுப் புரட்சி, செய்தி சொல்லும் செயற்கைக் கோள்கள், கணிப்பொறியின் கதை, தலைமைச் செயலகம்... தூண்டில் கதைகள், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என, ஜீனோமிலிருந்து ஜீனோ நாய்க்குட்டி வரை எல்லா தளங்களிலும் அவரது பேனா நாட்டியமாடியிருக்கிறது. தான் பெற்ற கண் சிகிச்சை, பல் சிகிச்சை, ஹார்ட் ஆபரேஷன், டயலிஸிஸ் பற்றியெல்லாம் கூட விளக்கமாகவும், வாசகர்களை பயமுறுத்தாத விதத்தில் நகைச்சுவையோடும் எழுதி, விழிப்பு உணர்வு ஏற்படுத்தியவர் சுஜாதா.

ஆழ்வார்களைப் பற்றியும் எழுதுவார்... அணு ஆராய்ச்சி பற்றியும் எழுதுவார்; கும்பகோணம் கோயில்கள் பற்றியும் எழுதுவார்... குவாண்டம் தியரி பற்றியும் எழுதுவார்! ஜூனியர் விகடனில் அவர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிய 'ஏன்? எதற்கு? எப்படி?' கேள்வி-பதில் பகுதி வாசகர்களின் அறிவியல் தாகத்துக்குத் தண்ணீர் வார்த்தது. ஆனந்த விகடனில் அவர் தொடர்ந்து எழுதி வந்த 'கற்றதும்... பெற்றதும்...' கட்டுரைகளில் அவர் வாசகருக்குச் சொல்லாத விஷயங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

'க-பெ' கட்டுரை ஒன்றில்... "எழுபது ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்த பல்லை ஏழே நிமிஷங்களில் நீக்கி, ட்ரேயில் 'ப்ளங்க்' என்று போட்டபோது, அதை வாஞ்சையுடன் பார்த்து, 'போய் வா, நண்பா!' என்று விடைகொடுத்தேன்" என்று பல்லுக்கும் பிரியாவிடை கொடுத்து எழுதியிருக்கிறார் சுஜாதா. இன்று அவருக்கே நாம் விடைகொடுத்து அனுப்பவேண்டும் என்றால், முடியுமா நம்மால்?

தமிழகம், இந்தியாவைத் தாண்டி உலக நாடுகளிலும் அவரது வாசகர் வட்டம் பரந்து விரிந்திருக்கிறது. சுஜாதா இப்போது நம்மிடையே இல்லை என்கிற அதிர்ச்சியூட்டும் உண்மையை அவர்கள் எப்படித் தாங்கிக்கொள்ளப்போகிறார்கள்?

தன்னைப் படைத்த பிரம்மனின் பிரிவால் கலங்கி நிற்கும் கணேஷ் - வசந்த்துக்கு யார் ஆறுதல் சொல்லப்போகிறார்கள்?

1 comments:

:-(

சுஜாதாவின் பிரிவில் வருந்தும் இன்னொரு ரசிகனின் பார்வையில் கிடைக்கப்பெற்ற இன்னுமொரு அஞ்சலி கடிதம்.

நன்றி தலைவா...!