உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, March 20, 2009

கரிநாக்கு

"சங்கர்... ரோட்டுல நீ ரொம்ப வேகமாப் போறே! இவ்வளவு வேகம் கூடாது. என்னிக்கோ தெரியலே, நீ லாரியிலோ பஸ்ஸிலோ மாட்டிண்டு சாகப்போறே!"
அப்பா அந்தக் காலத்து மனுஷர் இல்லியா! பாவம்... வீணாகப் பயந்து நடுங்கறார். இன்றைய இளம் தலைமுறையினரின் தனி 'கெபாசிட்டி' பற்றி அப்பாவுக்கு என்ன தெரியும்?'
சங்கரின் கால்கள் சைக்கிள் பெடலை மிதித்துக்கொண்டு இருக்க... சக்கரங்கள் 'சரசர'வெனச் சுழன்றுகொண்டு இருக்க... அப்பாவின் அர்த்தமற்ற உபதேசங்கள் காதுகளில் ரீங்காரமிட...

எதிரே ஒரு கார்!


இறங்குவானா சங்கர்! அருகில் சென்று சரேலென்று ஹேண்டில்பாரை ஒடித்து வளைக்க... காரின் பிரேக் கட்டை, படுவேகமாகச் சுழன்றுகொண்டு இருக்கும் சக்கரங்களை இழுத்துப் பிடிக்க... 'க்ரீச்...' என்ற சப்தத்துடன் காரின் டயர்கள் இரண்டடி தூரம் தேய... டிரைவர் தலையை நீட்டி வசைபுராணம் பாட...


கனகுஷியாக, விறுவிறுவென்று வாயுவேக மனோவேகத்தோடு சைக்கிளில் செல்வதுதான் எவ்வளவு த்ரில்லிங்காக இருக்கிறது!


எத்தனை நாள் எத்தனை சைக்கிளை முந்தியிருப்பேன்! எத்தனை டவுன் பஸ்ஸை 'ஓவர்டேக்' பண்ணியிருப்பேன்! எத்தனை லாரிகளுக்கு 'சைடு' கேட்டிருப்பேன்..!


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!
புத்தகத்துல இந்தப் பாட்டு வந்திருக்குது. படிச்சா மட்டும் போதுமா? அதன்படி நடக்க வேணாமாக்கும்?

அன்னிக்குக்கூட, ரமேஷ்னு என்கூடப் படிக்கிறவன்... ரெண்டு கையையும் விட்டுட்டுச் சைக்கிளை ஓட்டிக் காண்பிச்சான்!ஹ... இதென்னடா பிரமாதம் மைதானத்துல..! நீ மெயின் ரோடுக்கு வா, அங்கே விட்டுக் காமிக்கிறேன்; பார்த்துட்டுச் சொல்லுன்னேன்! என்னா கூட்டம், மெயின் ரோடுல... ரெண்டு கையையும் விட்டுட்டுச் சும்மா ஜில்லுனு விட்டுக் காண்பிச்சேன்! பய அசந்துட்டான்! சும்மா சரசரன்னு அநாயாசமா வளைச்சு... கால் பேசும் மேன் கால்!

சே! ஆனாலும் அப்பாவுக்கு ரொம்பத்தான் பயம்! இப்போ கிளம்பும்போதுகூடத் திருப்பித் திருப்பிப் பாடம் படிச்சாரே!

"தரித்திரம்... பீடை..! சொன்னால் கேட்கிறதில்லை, ராஸ்கல்! நீ லாரியிலே மாட்டிண்டு சாகப்போறே!"


அதோ பாரேன், எதிரே போற லாரியை..! லாரியா அது? சரியான எருமைக்கடா..! மாடு மாதிரி நகருதே! இப்பப் பாரேன், அதை 'பீட்' அடிக்கிறேனா இல்லியானு!


சரசரவெனச் சக்கரங்கள் சுழல, கைகள் ஹேண்டில்பாரை ஒடித்து வளைத்து, மூச்சைப் பிடித்துக்கொண்டு மிதிமிதின்னு மிதித்து...


சங்கரின் சைக்கிள் அதோ அந்த லாரியை 'ஓவர்டேக்' செய்துகொண்டு இருக்கிறது. அடடே..! சங்கர் அதை முந்தவும் செய்துவிட்டானே!


இதிலென்ன ஆச்சரியம்? இது ஓட்டை! புத்தம்புது செவர்லே கூட சவாலுக்குப் போவானே சங்கர்!


சங்கரா, கொக்கான்னேன்!


சங்கர் பெடலை விறுவிறுவென்று மிதிக்க... பின்னால் அந்த லாரி தடதடவென்று வர...


அடச்சே! நந்தி மாதிரி இந்த மனுஷன் குறுக்கே வந்து...
ஏய்யா அறிவுகெட்ட முண்டம்!

சங்கர் சரேலென்று ஹேண்டில்பாரை ஒடிக்க... 'மளுக்'கென்று அது மக்களித்துக்கொண்டு குப்புற விழ... மடேல் என்று சங்கர் கீழே உருள...


பின்னால் வந்த லாரி டிரைவர் மிக சாமர்த்தியமாக... மிக மிக சாமர்த்தியமாக பிரேக் போட்டும்...


லாரியின் முன் சக்கரங்களில் ஒன்று சங்கரின் கழுத்தில் ஏறி... இன்னொரு சக்கரம் ஹேண்டில்பாரில் ஏறி...


ஹா..! ஐயோ! கோரம்... கோரம்... படுகோரம்!


தாயார் சாவித்திரி அம்மாள் அலறினாள். அக்காக்காரி கமலம் அழுதாள். தந்தை சிவராமன் இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டார்.


"ஐயோ, மவனே! பூட்டியாடா... கிளம்பறச்சயே அபசகுனம் மாதிரி, நீ லாரியிலே மாட்டிண்டு சாகப்போறேன்னாரே! பாழப்போன அந்தக் கரிநாக்கு பலிச்சுடுச்சே! அந்த மாதிரியே லாரியிலே மாட்டிக்கினியே என் மகராசா..!"


சாவித்திரி அம்மாள் உரத்த குரலில் பிலாக்கணம் வைத்து அலற ஆரம்பித்துவிட்டாள். இடையிடையே அவளது கணவர் சிவராமனுக்குத் தரித்திரம் என்றும், அபசகுனம், கரிநாக்கு என்றும், பாழாய்ப்போன மனுஷன் என்று வசவுபுராணம் வேறு!


இது நடந்த பிறகு, இரண்டு மூன்று மாதங்கள் வாய் ஓயாமல், அவர்கள் குடியிருக்கும் வீட்டுக்காரரிடமும் மற்றும் போவோர் வருவோர் எல்லாரிடமும், 'போகும்போதே வாயை வெச்சார்... பூட்டான் என் மவராசன்... பாழாய்ப்போன கரிநாக்கு...' இப்படியே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருந்தாள் சாவித்திரி அம்மாள்.


கேட்டவர்கள் எல்லாம் ஆமாம் சாமி போட்டார்கள்.


"ஏய் கமலா..! படிச்சுத் தொலையேண்டி சனியனே! தரித்திரம்... தரித்திரம்... நம்ம எழவு எடுக்கறதுக்குன்னு வந்திருக்குதே பீடை!"


"ஏங்க வீணா சனியன், தரித்திரம்னு குழந்தையைத் திட்டறீங்க! பாவம், அதுக்குப் படிப்பு வரலேன்னா, அது என்னங்க செய்யும்? பொம்பிளை படிச்சுதான் சம்பாரிக்கப்போகுதாக்கும்! கல்யாணம் முடிஞ்சு புருஷனோடு போகப்போறவதானே?"


"ஏண்டி இவளே! உனக்கு அறிவு கிறிவு ஏதாவது இருக்கா? இல்லே, இருக்கான்னு கேக்கறேன்? புருஷன்காரன் எல்லாக் காலத்துக்குமா சம்பாரிச்சுப் போட்டுண்டு இருக்க முடியும்? திடீர்னு அவனுக்குக் கால், கை பூட்டுதுன்னு வெச்சுக்க... அவன் சம்பாரிச்சுப் போட முடியுமா? அப்போ இவதானே அவனுக்கும் சோறு போட்டுக் காப்பாத்த வேண்டியதாயிருக்கும்..?"


"ஆண்டவனே, மாரியாத்தா..!" என்று அலறிய சாவித்திரி, தன் காதுகளைப் பொத்திக்கொண்டாள்.


"ஐயோ..! ஏங்க இப்படிக் கன்னாபின்னானு ஏதாவது சொல்லி வைக்கறீங்க? நீங்களும் பாழாய்ப்போன உங்க கரிநாக்கும்! யாருங்க அது... அண்டையா, அசலா? நம்ம பொண்ணுங்க. நாளைக்கே நல்லபடியா வாழப்போற பொண்ணுங்க. சீரும் செனத்தியுமா புருஷனோட வாழுடீயம்மானு வாழ்த்தாம, எடுத்த எடுப்பிலேயே மொட்ட மரமா நில்லுடி மகராசிங்கறீங்களே! ஐயோ... எம் மவளே!" - சாவித்திரி கேவ ஆரம்பித்துவிட்டாள்.


இது நடந்து ஆறு மாதம் இருக்கும். கமலாவின் திருமணம் வெகு சிறப்பாக நடந்தேறி, அடுத்த ஓரிரு மாதங்களுக்குள்ளாக அவள் கணவன் தான் வேலை செய்யும் தொழிற்சாலை பாய்லரின் விழுந்து உயிரை விட்டான்.


படிப்பில்லாத காரணத்தால், இதோ இன்று பல வீடுகளில் பத்துப் பாத்திரங்களைக் கழுவி வரும் பணத்தில் தன் வயிற்றைக் கழுவிக்கொண்டு இருக்கிறாள் கமலா.


"சார், உங்க பொண்ணு மேஜராயிட்டாளா?" - சிவராமன் கேட்டார்.

அவரது மனைவி பாஷையில்... அவரது மகள் கமலாவின் பாஷையின் பாஷையில்... இன்னும் அவர் குடியிருக்கும் வீட்டுக்காரரின் பாஷையில் சொல்ல வேண்டுமானால்...

தரித்திரம் பிடித்த கரிநாக்குப் பீடை கேட்டது!


வீட்டுக்காரர் தயக்கத்துடன் 'உம்' என்றார்.
கமலாவின் கணவன் இறந்ததிலிருந்து வீட்டுக்காரருக்கு மிகவும் நடுக்கம், சிவராமனைக் கண்டாலே! எந்த நேரத்துல வாயைத் தொறப்பாரோ, என்ன நடக்குமோ... யாரு கண்டது! அந்த வீட்டுக்காரர் தம் பெரிய வீட்டில் பாதி போர்ஷனைச் சிவராமனுக்கு வாடகைக்கு விட்டு, மீதிப் பகுதியில் தன் குடும்பத்தோடு இருந்தார். இருவரும் பேசிக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம்!

ஆனாலும், மாதம் பிறந்தால் கணக்காக வாடகைப் பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு மறுபேச்சில்லாமல் வந்துவிடுவார். தம் வீட்டிலும் உத்தரவு போட்டுவிட்டார், சிவராமனைக் கண்டாலே காணாததுபோல் போய்விட வேண்டுமென்று!


கஷ்டகாலம்... இன்னிக்குக் காலையில யார் முகத்துல முழிச்சோமோ, இதுங்கிட்ட மாட்டிக்கிட்டோ ம்! தரித்திரம் புடிச்சது என்ன வாய் வைக்கப்போறதோ?


"மேஜராயிட்டாளா? மூணு வருஷம் இருக்குமா! சந்தோஷம். எதுக்குக் கேட்டேன்னா, உம்ம பொண்ணு ராத்திரியிலே தனியா சினிமாவுக்குப் போறதும் வர்றதும்... மத்த பொண்ணுங்களோடதான் போறா, இல்லேன்னு சொல்லலே! இருந்தாலும், இந்த வயசுல ஆம்பிளைத் துணை இல்லாம அவளைத் தனியா அனுப்பறது தப்புன்னு என் மனசுக்குத் தோணுது. காலம் கெட்டுக் கிடக்கு பாருங்க. தனியா போகறச்சே நாலஞ்சு ரௌடிகளா வழிமறிச்சான்னா, உம்ம பொண்ணால பாவம், என்ன செய்ய முடியும்? இல்லே, மத்த பொண்ணுங்கதான் என்ன செய்வாங்க? இழக்கக்கூடாததை இழந்துட்டு வந்துட்டாள்னா அப்புறம் என்ன செய்யமுடியும்? வாழ்நாள் முழுதும் ஊரார் பழி சுமந்துக்கிட்டில்ல நிக்கணும்..!"


"யோவ், நிறுத்துய்யா!" - சீறினார் வீட்டுக்காரர். "ஊரார் பேச்சாம் ஊரார் பேச்சு! ஊரார் பழி என்னய்யா சுமக்கறது... உம்ம பழியில்ல சுமக்கணும்! தரித்திர நாக்கை வெச்சுக்கிட்டு எங்காவது அடைஞ்சு கிடக்காமல், வீடு ஏறி வந்து சாபம்! சே..! இந்த வீட்டுல இனி உம்மை இருக்க விடமுடியாது போலிருக்கே! நாளை விடிஞ்சதும் வீட்டைக் காலி பண்ணிட்டு மறு வேலை பாருய்யா!"


சுள்ளென்று விழுந்தார் அந்த வீட்டுக்கார மகராசன்.


பிறகு உள்ளே திரும்பிக் குரல் கொடுத்தார்... "டீ மாலு! இனிமே தனியா வெளியே போகாதம்மா! இன்னிக்கு ராத்திரி கூட ஃப்ரெண்ட்ஸ்களோடு சினிமாவுக்குப் போகணும்னியே... போகவேண்டாம்! சனியன்... நாக்கைப் போட்டுண்டு வந்துடுத்து நம்ம எழவு எடுக்க! மவனையும் மருமவனையும் சேர்த்து முழுங்கிட்டு நிக்கறதே, அப்பவாவது புத்தி வரவேண்டாம்?" என்று வார்த்தைகளால் எரித்தவர் சிவராமன் பக்கம் திரும்பினார்.


"இன்னும் ஏனய்யா இங்க இருந்துக்கிட்டு எங்க பிராணனை வாங்கறே? போய்யா!"


கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறை! சிவராமன் எரியிலிட்ட புழுவாகத் துடித்தார். அவரது இதயம் நார் நாராகக் கிழிக்கப்பட்டது.


ஓ மை காட்! இரக்கமே இல்லாத பாவிகளா? உபதேசம் செய்தவனுக்கு... தீர்க்கதரிசிக்கு நீங்கள் காட்டும் மரியாதை இதுதானா?
இதுவா சமுதாயம் கற்பிக்கும் பாடம்!

அழுதார்... இதயம் நொறுங்கிச் சுக்கல் சுக்கலாக ஆகும் அளவு அழுதார்.

மௌனமாகத் தம் இருப்பிடம் சென்று மூலையில் துக்கத்தோடு விழுந்தார் சிவராமன்.

சீனுவாசா தியேட்டருக்கும் தெற்கால சந்துல... எண்ணி நாலு பேர்... ரௌடிகள்! பல நாளாக மாலாவின் போக்குவரத்தைக் கவனித்துக்கொண்டு இருந்து... எப்படியும் இன்று அவள் சினிமா முடிந்து திரும்பி வருகையில் அவளைச் சுவைத்துவிடவேண்டும் என்று அந்த நரிக்கூட்டம் தயாராக நின்றுகொண்டு இருந்ததோ... அவர் மட்டும் அன்று காலை புத்திமதி சொல்லாமல் இருந்திருந்தால்... ஓ காட்..! அவள்... அந்த வீட்டுக்காரரின் மகள் மாலா அந்தக் காமவெறி பிடித்த நரிக்கூட்டங்களின் பருவ வெறிக்கு இரையாகியிருப்பாள் என்பதோ...


யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை!


அப்படியே அந்த வீட்டுக்காரர், சிவராமனின் நல்லதொரு புத்திமதியினை ஏற்காமல் தமது மகளை அனுப்பி, அந்தத் துக்ககரமான அனுபவத்தை அவள் அடைந்திருந்தாலும் என்ன நினைப்பார்..?


"ஐயோ! மனுஷன் சொன்னாரே! கேக்காம அறிவுகெட்டத்தனமா அனுப்பி, இப்போ இல்லாத வேதனையெல்லாம் அனுபவிக்கிறோமே?" என்றா நினைப்பார். ஊம்ஹூம்..!


"பாழாய்ப்போன கரிநாக்கு..."
- வழக்கமான பல்லவிதான்!

(கல்கி - 17.9.1978)


சுய விமர்சனம்:

ந்தக் கதையை இப்போது படிக்கும்போது, கதைக்கான கரு ஓ.கே-வாகத் தோன்றினாலும், எழுத்து நடை மிகவும் குழந்தைத்தனமாக இருப்பதாகத் தோன்றுகிறது.

நான் கண்ணெதிரே பார்த்த ஒரு சம்பவத்தின் விளைவே இந்தக் கதை.

பெரும்பாக்கம் கிராமத்தில் நாங்கள் வசித்தபோது, ஒரு தீபாவளி நேரம். எங்கள் வீட்டு வாசலில் வெயிலில் மத்தாப்பூக்கள் காய வைத்திருந்தோம். நாங்கள் குழந்தைகள் ஆதலால், ஊசி வெடி, லட்சுமி வெடி போன்ற வெடிகள் எதுவும் வாங்கமாட்டார் அப்பா. வெடிக்கக்கூடிய அதிகபட்ச வெடிபொருள் கேப்தான். அதையும் பாதுகாப்பாக நட்&போல்ட்டுக்குள் வைத்து, தரையில் எறிந்து வெடிப்போம்.


அச்சமயம், எங்கள் பக்கத்து வீட்டுப் பையன் ஒரு பாட்டிலைத் தெருவில் வைத்து, அதனுள் ராக்கெட்டை நிறுத்தி, திரியைப் பற்ற வைத்தான். ராக்கெட் சீறிக்கொண்டு புறப்பட்டது.


அதைப் பார்த்துக்கொண்டே இருந்த என் அப்பா, "இது யார் வீட்டைப் பத்த வைக்கப்போகுதோ!" என்று கவலைப்பட்டுச் சொன்னார்.


அவர் சொன்ன மாதிரியே, வளைந்து நெளிந்து உயரே சீறிச் சென்ற அந்த ராக்கெட், சர்ரென்று கீழே திரும்பி வேகமாக வந்து ஒரு கூரை வீட்டின் உச்சியில் சொருகிக்கொண்டது.


சிறிது நேரத்தில் கூரையிலிருந்து புகை வர, வீடு பற்றிக்கொண்டது. வீட்டுக்குள்ளிருந்து ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக கிராமத்துக் குடும்பம் ஒன்று பதறியபடியே வெளியேறியது. தெருவில் கும்பல் சேர்ந்து,
தீயணைப்பு வேலைகள் மளமளவென்று நடந்தன.


"ரவி, பட்டாசு காய வெச்சது போதும். உள்ளே கொண்டு வை!" என்றார் அப்பா. ஒரு காரணமாகத்தான் அப்படிச் சொன்னார். ஆனால், அதற்குள் விஷயம் முத்திவிட்டது.


அந்தக் கிராமத்துக் குடும்பம் எங்கள் வீட்டின் முன் வந்து நின்று, குய்யோ முறையோ என்று கூக்குரலிட ஆரம்பித்துவிட்டது. நாங்கள் பட்டாசு காய வைத்திருப்பதால், ராக்கெட் விட்டுத் தங்கள் வீட்டைக் கொளுத்தியது நாங்கள்தான் என்று தவறாகப் புரிந்துகொண்டு சண்டைக்கு வந்துவிட்டார்கள்.

அவர்களிடம் அப்பா நிதானமாகப் பேசி, "பாருங்க, ஒரு சின்ன வெடியாவது இருக்கான்னு! நாங்க விட்ட ராக்கெட் இல்லை அது!" என்று புரியவைக்க முயன்றார்.

அதற்குள் ராக்கெட்டை விட்ட பையனின் அப்பாவே எங்களுக்காகப் பரிந்து பேசி, அதே சமயம் தன் மகனையும் காட்டிக்கொடுக்காமல், "நான் பார்த்துட்டிருக்கும்போதே பக்கத்துத் தெருவிலேர்ந்து வந்ததுங்க அந்த ராக்கெட். இவங்க விடலை!" என்று சமாதானம் செய்து அனுப்பினார்.


அப்பா இப்படி ஒரு தடவை, ரெண்டு தடவை இல்லை... பல முறை சொல்லி அப்படி அப்படியே நடந்திருக்கிறது.


இந்தச் சம்பவம் என் மனதில் ரொம்ப நாள் பதிந்திருந்தது. அப்புறம் பல வருடங்கள் கழித்து, படிப்பெல்லாம் முடிந்து வெட்டியாகத் திரிந்துகொண்டு இருந்த காலத்தில், என் 19 வயதில், இதையே கரிநாக்கு' என்கிற தலைப்பில் கதையாக எழுதினேன்.

என் முதல் முயற்சி இது. இப்போது படிக்கும்போது ரொம்பவும் அமெச்சூர்தனமாக இருக்கிறது. கதையில் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன். தப்புகளும் இருக்கிறது. காரின் பிரேக் கட்டை கார் சக்கரங்களை இழுத்துப் பிடித்து நிறுத்துவதாக எழுதியிருக்கிறேன். அபத்தம்!

அதுவரை நான் விழுப்புரத்தைத் தாண்டிப் போனதில்லை. உலக அனுபவமே சுத்தமாக இல்லை. பள்ளி வயதில் காமிக்ஸ் புக்ஸ் படிப்பேன். ஆனந்த விகடன், குமுதம் இதழ்களில் ஜோக்ஸ் படிப்பேன். பலது புரியாது. பெரிய கதை என்றால், கல்கண்டு வார இதழில் தமிழ்வாணன் எழுதிய துப்பறியும் சங்கர்லால் கதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன். மற்றபடி சிறுகதைகள் என எதுவும் படித்தது இல்லை. எப்படி எழுதவேண்டும் என்றும் தெரியாது.


கதைப்படி சிவராமன் குடும்பம், பிராமணரல்லாத குடும்பம்தான். ஆனால், பிராமண சமூகத்தில் பிறந்தவன் என்பதால், அந்தப் பேச்சுப் பழக்கத்திலேயே இந்தக் கதையை எழுதியிருக்கிறேன். மொழி ஆளுமை இல்லாமல் போனதுதான் காரணம்.


"ஐயோ, மவனே! பூட்டியாடா..." என்று பிராமணரல்லாதார் பாணியில் அலறத் தொடங்கும் சாவித்திரி அம்மாள், "கிளம்பறச்சயே அபசகுனம் மாதிரி, நீ லாரியிலே மாட்டிண்டு சாகப்போறேன்னாரே!" என்று பிராமண பாஷையில் அழுவதாக எழுதியிருக்கிறேன். இந்தத் தப்பு கதை நெடுக இருக்கிறது.


இருந்தாலும், இது என் கன்னி முயற்சி. எந்தத் திருத்தமும் செய்யாமல், அந்தக் கதையை அப்படியே இங்கு கொடுத்துள்ளேன்.


ஆயிரம் தப்புகள், அபத்தங்கள் கதையில் இருந்தாலும்... குழந்தையாக இருந்தபோது நான் எழுதிய என் கிறுக்கல் கையெழுத்தை இப்போது எடுத்துப் பார்த்தால், மனசுக்குள் ஒரு சந்தோஷம் வருமே... அப்படி ஒரு சந்தோஷம் இந்தக் கதை படிக்கும்போது எனக்கு ஏற்படுகிறது.

0 comments: