உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, July 10, 2016

என் புகுந்த வீடு - 18

முறுக்கிக்கொண்ட படைப்பாளி!


னது முந்தைய பதிவு ஒன்றில், நாஞ்சில் நாடன் எழுதிய ‘முரண்டு’ சிறுகதையோடு, விகடன் பரிசீலனைக்கு நான் அனுப்பியிருந்த ‘அன்பிற்கும் உண்டு ஆராதனை’ சிறுகதை ஒத்துப்போயிருந்ததால் என் மீது எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆசிரியருக்கும் எனக்கும் ஏற்பட்ட கடிதப் போக்குவரத்து பற்றி விவரித்திருந்தேன்.

பின்னாளில் விகடனில் பணியில் சேர்ந்த பின்னர் ஆசிரியரிடம் இது பற்றிப் பேசிக்கொண்டு இருந்தபோது, “அது மட்டுமில்லே... விகடன்ல வெளியான உங்களோட இன்னொரு கதை சம்பந்தமாகவும் நீங்க ரொம்பக் கோபப்பட்டுக் கடிதம் எழுதினீங்கன்னு வேலுச்சாமி சொன்னார்” என்று சொல்லி மர்மமாகப் புன்னகைத்தார் ஆசிரியர். தர்மசங்கடமாகத் தலைகுனிந்துகொண்டே, “ஆமாம் சார்” என்றேன். அது பற்றிப் பிறகு எழுதுகிறேன்” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

அது இங்கே...

1978 முதல் 1984 வரை - நான் சிறுகதைகள் எழுதத் தொடங்கி, அவை பிரபல பத்திரிகைகளில் உடனுக்குடன் ஏற்கப்பட்டு, பிரசுரம் ஆகிக்கொண்டிருந்த காலம். நான் அனுப்பும் சிறுகதை எதுவும் பிரசுரத்துக்குத் தகுதியில்லை எனத் திருப்பப்படாமல் ஏற்கப்பட்டதானது, உள்ளூர என்னுள் ஒரு தலைக்கனத்தை ஏற்படுத்தியிருந்தது. என்னை எழுத்தாளன் என்று பத்திரிகையுலகம் ஏகமனதாக அங்கீகரித்துவிட்டதில், என் தலைக்குப் பின்னே ஏதோ ஒளிவட்டம் சுற்றுவது போலவும், என் தலையில் கொம்பு முளைத்துவிட்டது போலவும் ஒரு பிரமையில், ஒரு மயக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். சிறுகதைகளைப் படைப்பு என்று சொல்லிக்கொள்வதில் ஒரு பெருமிதம்; வெறுமே எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதைவிட என்னை ஒரு படைப்பாளி என்று சொல்லிக்கொள்வதில் ஆனந்தம்.

எனது இந்தத் தலைக்கனத்தை முற்றிலுமாக அகற்றி, என்னை லேசாக்கியவர் என் குருநாதர் சாவி அவர்கள். அதுவும், அவரிடம் வேலை கேட்டுப் போனபோது, அவர் சொன்ன முதல் வாக்கியமே, பாறையாக இறுகியிருந்த என் தலைக்கனத்தை உடைத்துச் சுக்குநூறாக்கிவிட்டது. அது பற்றிப் பின்னர் விவரிக்கிறேன்.

வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி, என் குருநாதர் சாவி சாரின் 100-வது பிறந்த நாள். அன்றைய தினத்திலிருந்து, ‘தாய் வீடு’ என்னும் தலைப்பில் ‘சாவி’ சாருடனான எனது அனுபவங்களை எழுத உத்தேசித்துள்ளேன். அந்தத் தொடரை மேலே சொன்ன விஷயத்திலிருந்து தொடங்குகிறேன். இப்போது, எனது தலைக்கனம் பிரச்னைக்கு வருவோம்.

அங்கீகாரமும் பாராட்டுக்களும் ஒருவனுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த வேண்டும். இன்னும் இன்னும் சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தை ஏற்படுத்த வேண்டும். அதோடு நின்றால் பரவாயில்லை. ஆனால், சில நேரங்களில் சிலருக்கு அது மண்டைக் கர்வத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. தன்னைவிடச் சிறந்தவன் யாருமில்லை என்கிற இறுமாப்பை உருவாக்கிவிடுகிறது. சிலரிடம் அது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. சிலர் அதைச் சாமர்த்தியமாக மறைத்துக்கொள்கிறார்கள்.

நானும் அந்நாளில் உருப்படியான வேலை எதுவும் இல்லாமல் வெட்டியாகச் சுற்றிக்கொண்டிருந்தாலும், கூடவே இந்தத் தலைக்கனத்தையும் சுமந்தபடிதான் திரிந்துகொண்டிருந்தேன். ‘இன்னுமா உனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கலே?’ என்று கேட்போரிடம் என்னைப் படைப்பாளியாகக் காட்டி, முறுக்கிக்கொண்டிருந்தேன்.  எனக்கு அப்போது 25, 26 வயதுதான் இருக்கும் என்பதால், அந்த இளமை முறுக்கு வேறு சேர்ந்துகொண்டது. பெருமதிப்புக்குரிய சாவி சாரிடம் கோபித்துக்கொண்டு மூன்று முறை வெளியேறியதற்குக்கூட எனது பக்குவமின்மைதான் காரணம்.


அந்த மாதிரியான ஒரு தருணத்தில் நான் எழுதிய சிறுகதைதான் ‘மாறுபட்ட கோணங்கள்’. குடும்பம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் காதலைத் துறக்க எண்ணுகிறான் காதலன். ‘என் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தங்கை இவர்களையெல்லாம் விட்டுட்டு வர எனக்கு மனசில்லே. அவர்களையெல்லாம் பகைச்சுக்கிட்டு வாழற வாழ்க்கை இனிக்காது’ என்பது அவன் சொல்லும் காரணம். “ஆனா, காதலுக்காக நான் என் குடும்பத்தை உதறிவிட்டு வரத் தயாரா இருக்கேனே” என்கிறாள் அவள்.


அதன்பின்னர், அவர்களுக்குள் ஏற்படுகிற வாக்குவாதத்தில், ‘முதுகெலும்பில்லாத ஒரு கோழையைக் காதலித்தது என் தப்புதான்’ என அவள் நொந்துகொண்டு, அவனுக்கு ‘குட்பை’ சொல்லிவிட்டுப் பிரிகிற மாதிரி காதல் முறிவுக் கதையாக எழுதியிருந்தேன் நான்.

அப்போது விகடனில் ‘இரட்டைக் கதைகள்’ என்னும் தலைப்பில் ஒரே சப்ஜெக்டில், ஆனால் வெவ்வேறு பார்வையில் அமைந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து ஜோடி ஜோடியாக வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு ‘இரட்டைக் கதை’களில் ஒரு கதையாக எனது ‘மாறுபட்ட கோணங்கள்’ பிரசுரமாகியிருந்தது.

ஆனால், ஆசிரியர் குழுவினர் என் கதையின் பிற்பகுதியை நீக்கிவிட்டு, வேறு மாதிரி முடித்திருந்தனர். அதாவது, “ஒரு பெண்ணாக நீ உன் குடும்பத்தை விட்டு உதறிட்டு வர்றதுக்கும், ஆணான நான் குடும்பத்தை விட்டு வர்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. கணவன் பாதுகாப்பு அளிப்பான் என்கிற நம்பிக்கையில் பெண்கள் தன் குடும்பத்தை உதறிவிட்டு வரலாம். ஆனா, ஓர் ஆணுக்கு அம்மாதிரி என்ன நம்பிக்கை இருக்கிறது?’ என்பதாக அவன் வாதிட, அவள் அயர்ந்துபோய் நிற்பதாகக் கதையை முடித்திருந்தனர்.

விகடன் ஆசிரியர் குழுவினர் என் கதையை உல்டாவாக மாற்றியமைத்ததில், என்னுள் இருந்த ‘படைப்பாளி’ முறுக்கிக் கொண்டான். வழக்கம்போல் பேப்பர், பேனாவை எடுத்து வைத்துக்கொண்டு  விறுவிறுவென்று கடிதம் எழுதத் தொடங்கினான்.

‘மதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
தங்கள் மேலான விகடன் இதழில், இந்த வாரம் என்னுடைய ‘மாறுபட்ட கோணங்கள்’ சிறுகதை வெளியாகியிருப்பதைக் கண்டேன். ஆனால், ஒவ்வொரு முறை எனது கதை பிரசுரமாகும்போதும் உண்டாகும் மகிழ்ச்சி இந்த முறை உண்டாகவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். என் கதையின் பிற்பகுதி அடியோடு மாற்றப்பட்டு, நான் எழுதிய கோணத்திலிருந்து மாறுபட்டு முடிந்திருப்பது எனக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. என் கதை பிரசுரத்துக்குத் தகுதி இல்லை என்னும் பட்சத்தில் தாங்கள் அதைத் திருப்பி அனுப்பியிருக்கலாம். ஒரு படைப்பை ஏற்பதோ நிராகரிப்பதோ, அது அந்தப் பத்திரிகையின் உரிமை என்பதை நான் ஒப்புக்கொள்ளும் அதே வேளையில், அந்தப் படைப்பைத் திருத்தியோ சுருக்கியோ வெளியிடும்போது, கதாசிரியரின் கோணத்துக்கு மாறுபட்டு தொனிக்கும் விதத்தில் அமைந்துவிடக் கூடாது என்பதைத் தாங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன். மற்றபடி, தங்களுக்கும் தங்கள் குழுவினருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க அன்புடன், இரவிப்பிரகாஷ்.

கடிதத்தை எழுதி முடித்து, மடக்கி கவரில் போட்டு, போஸ்ட் செய்துவிட்டு வந்த பிறகு, ஒரு படைப்பாளியின் தார்மிக கோபத்தை வெளிப்படுத்திவிட்டு வந்த மன நிறைவு என்னுள் எழுந்தது.

அடுத்த சில நாட்களில், ஆசிரியரிடமிருந்து பதில் கடிதம் வந்தது. அதில், எனது கோபம் நியாயமானதென்றும், ஆனால், ‘என் குடும்பத்தை உதறிட்டு வர நான் தயாரா இருக்கேனே, அருண்?’ என்று கதாநாயகி கேட்பதாக நான் எழுதியிருந்த வரிதான் தங்களின் சிந்தனையைத் தூண்டி, கதையை இப்படி முடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற முடிவுக்கு வரச் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். கூடவே, “இந்தக் கதையைப் பாராட்டி ஏராளமான வாசகர் கடிதங்கள் வந்திருக்கின்றன. அந்தப் பெருமையும் புகழும் உங்களுக்கே சேரும்’ என்றும் அவர் எழுதியிருந்தார்.

நான் அத்தோடு விட்டிருக்கலாம். என் ‘முறுக்கு’ மனம் என்னைச் சும்மாயிருக்க விடவில்லை. மீண்டும் ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினேன். “நீங்கள் சொல்லியிருப்பது போன்று, திருத்தம் செய்த பின்பு கதை சிறப்பாகவே இருக்கலாம்; அந்தக் கதையைப் பாராட்டி வாசகர் கடிதங்களும் அதிகம் வந்திருக்கலாம்.  ஆனால், வெளியாகியிருக்கிற கதை என் கதை அல்ல; அதற்குக் கிடைத்த பெருமையும் புகழும் எனக்கானதும் அல்ல. எனவே, உங்கள் கடிதம் என்னுள் குற்ற உணர்ச்சியையே எழுப்புகிறது. தயவுசெய்து, இதற்கான சன்மானம் என்று எனக்கு எந்தத் தொகையையும் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று எழுதினேன்.

அதற்கும் பொறுமையாகப் பதில் எழுதியிருந்தார் ஆசிரியர். இதில் நான் குற்ற உணர்ச்சி எதுவும் கொள்ளத் தேவையில்லை என்றும், ஒரு  படைப்பு முழுமையாகவோ அல்லது அதில் ஒரு பகுதியோ வாசகர்களின் சிந்தனையைத் தூண்டுவதாக அமையுமானால், அதுவே படைப்பாளியின் வெற்றி என்றும், அதற்கான முழுப் பெருமையும் சம்பந்தப்பட்ட கதாசிரியரையே சாரும் என்றும், இந்தக் கதையில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் இடையில் நடக்கும் வாதப் பிரதிவாதங்கள் இயல்பாகவும், தர்க்கரீதியாகவும் அமைந்திருந்ததை தான் ரசித்ததாகவும், முடிவை மட்டும் வேறு மாதிரி மாற்றினால், இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு மேலும் வலு சேரும் என்று கருதியே முடிவை மாற்றியமைத்ததாகவும், என்னிடமிருந்து இதுபோல் இன்னும் பல சிறந்த படைப்புகளை தான் எதிர்பார்ப்பதாகவும், தொடர்ந்து எழுதும்படியும் தமது கடிதத்தில் எழுதியிருந்தார் ஆசிரியர். வழக்கமாக வரும் சன்மானத்தைவிட சற்று அதிகமான சன்மானம் அந்தக் கதைக்குக் கிடைத்தது.

அத்துடன் விவாதத்தை நான் நிறுத்தினேன். ஆனாலும், ‘எப்படி என் சம்மதமில்லாமல் என் படைப்பை மாற்றியமைக்கலாம் அவர்கள்’ என்று ஒரு குறுகுறுத்த எண்ணம் மனசுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. 

அதுதான் விகடனில் அந்தக் கால கட்டத்தில் நான் எழுதிய கடைசி கதை என்று நினைக்கிறேன். அதன்பின் நான் வீட்டை விட்டு ஓடி, பாண்டிச்சேரியில் தஞ்சம் புகுந்து, பழைய பேப்பர் கடையில் வேலை செய்து, கிட்டத்தட்ட இரண்டு வருட காலம் படைப்பு, பத்திரிகை என எல்லாவற்றையும் மறந்து, துறந்து, ஏதோ ஓர் ஏலியன் உலகத்தில் இலக்கற்றுத் திரிந்துகொண்டிருந்தேன். 

சில காலம் கழித்து, பிழைப்புத் தேடி சென்னை வந்து, ஆம்ப்ரோ பிஸ்கட் கம்பெனியில் டெப்போ இன்சார்ஜாகப் பணியில் சேர்ந்த பின்பு, மீண்டும் கதை எழுதும் ஆசை துளிர்விட, நான் எழுதிய சிறுகதை ‘அடிமைகள்’. குரங்காட்டியின் கையிலிருக்கும் குரங்கையும் சித்தி கொடுமையில் சிக்கித் தவிக்கும் ஒரு சிறுவனையும் ஒப்பிட்டு எழுதிய கதை.

வழக்கம்போல் அதை ஆனந்த விகடனின் பரிசீலனைக்குதான் அனுப்பினேன். அதுபற்றிய தகவல் கிடைப்பதற்குள் எனக்கு ‘சாவி’ பத்திரிகையில் வேலை கிடைத்துவிட, மேற்படி கதையைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று விகடனுக்குக் கடிதம் எழுதிப் போட்டேன். பின்னர் அந்தக் கதை சாவி பத்திரிகையில் பிரசுரமாகியது. சாவியில் வேலையில் சேர்ந்ததற்கு என்னை வாழ்த்தி, ‘அடிமைகள்’ கதையை எனக்குத் திருப்பி அனுப்பியது விகடன்.

முன்பே சொன்னதுபோல், சாவி சாரிடம் வேலை கேட்டுச் சென்ற அந்த முதல் சந்திப்பிலேயே அவர் சொன்ன ஒரு வாசகம், அதுவரை என்னுள் உறைந்து கிடந்த அகம்பாவத்தையும் தலைக் கனத்தையும் அடியோடு அகற்றியதோடு, நான் எழுதுவதெல்லாம் ஒன்றும் அமர இலக்கியம் இல்லை என்பதை என் மண்டையில் அடித்தாற்போல் புரிய வைத்தது. மேலும், சாவி சாரிடம் பணியாற்றிய அந்த ஒன்பது ஆண்டுகள் என்னை ரொம்பவே பக்குவப்படுத்தின. 

சாவி பத்திரிகையில் நான் பணியாற்றிய காலத்தில், கிட்டத்தட்ட மாதம் ஒருமுறை வீதம் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். மிக மிகச் சிறந்த கதை என்று நானே நம்பினால் மட்டுமே அதை என் சொந்தப் பெயரில் வெளியிடுவேன். மற்றபடி, பொழுதுபோக்குக் கதைகளை ஏதேனும் ஒரு டம்மி பெயரில்தான் வெளியிடுவேன். அது என் உறவினர் யாருடைய பெயராகவாவது இருக்கலாம். அல்லது ராஜாமகள், நரசு என்று ஏதேனும் ஒரு புனைபெயராக இருக்கலாம்.

‘ஷைலு’ என்கிற புனைபெயரில் சாவியில் நான் எழுதிய ‘தேடல்’ என்னும் ஒரு சிறுகதையை சாவி சார் படித்துவிட்டு, “அபாரமாயிருக்கிறது கதை. சரளமான நடை. யார் அந்த எழுத்தாளர் என்று விசாரித்து, பத்திரிகையில் பணியாற்ற விருப்பமா என்று கேள்” என்றார். “அதை நான்தான் சார் எழுதினேன்” என்றேன். “என்னது... நீயா? உன் பெயர்ல எழுதாம, ஏன் ஏதோ ஒரு பெயர்ல எழுதியிருக்கே?” என்றார். “இல்ல சார், என்னதான் வெளியிலேர்ந்து வர்ற கதைகளைப் பரிசீலிச்சு எடுத்தாலும், எப்படியும் சில வேளைகள்ல கதைத் தட்டுப்பாடு வந்துடுது. அப்போ நானே எழுத வேண்டியதாயிடுது. பத்திரிகையை முழுக்க என் பொறுப்புல விட்டிருக்கீங்க. மாதம் ஒரு கதையை நானே என் பேர்ல எழுதிக்கிட்டிருந்தேன்னா, நீங்க எனக்குக் கொடுத்திருக்கிற பொறுப்பை மிஸ்யூஸ் பண்ற மாதிரி ஆகும். தவிர, வாசகர்களுக்கும், நமக்குத் தொடர்ந்து கதைகளை அனுப்பிக்கிட்டிருக்கிற எழுத்தாளர்களுக்கும் நாம யாரோ  ரவிபிரகாஷ் என்கிற ஒரு குறிப்பிட்ட எழுத்தாளருக்கே முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி தோணும். அதைத் தவிர்க்கத்தான் நான் வேறு வேறு பேர்கள்ல எழுதறேன்” என்றேன்.

நான் சொன்னதை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த சாவி சார், “ம்... சரிதான்! குமுதம் ரா.கி.ரங்கராஜன் கிட்டே ஒருத்தர் கேட்டாராம்... ‘நீங்களே குமுதத்துல பன்னிரண்டு புனைபெயர்கள்ல கதை எழுதறீங்களாமே?’ன்னு. அதுக்கு ரா.கி.ரா., ‘கிடையவே கிடையாது. யார் சொன்னது? நான் பன்னிரண்டு புனைபெயர்கள்ல கதை எழுதலே....’ன்னு சொல்லி, கொஞ்சம் இடைவெளி விட்டுட்டு, அப்புறம் சொன்னாராம்... ‘நான் மொத்தம் பதினாறு புனைபெயர்கள்ல கதை எழுதறேன்’னு. நீ அவரை மிஞ்சிடுவே போலிருக்கே!” என்று சொல்லிச் சிரித்தார்.

நிற்க. கட்டுரையின் போக்கு திசை மாறிச் சென்றுவிட்டது. ‘தாய் வீடு’ தொடருக்கான கட்டுரையில் எழுத வேண்டியதையெல்லாம் ஆர்வக் கோளாறில் இங்கேயே எழுதத் தொடங்கிவிட்டேன். விகடனுக்கு வருவோம்.

“நீங்க ஒன் மேன் ஆர்மியா சாவி பத்திரிகையை நடத்தி வந்திருக்கீங்க. நீங்க அங்கே ரிப்போர்ட் பண்ண வேண்டியது சாவி சாருக்கு மட்டும்தான். ஆனா, இங்கே அப்படி இல்லே. இங்கே சீனியர்ஸ் நிறையப் பேர் இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் நீங்க பதில் சொல்ல வேண்டியிருக்கும். அவங்களை கன்வின்ஸ் பண்ண வேண்டியிருக்கும். அதுக்கு உங்க ஈகோ தடுக்கலாம். அதனால, ஒரு ஆறு மாசம் காண்ட்ராக்ட்ல வொர்க் பண்ணுங்க. அதுக்கு நடுவுல உங்களுக்கு எங்களைப் பிடிக்கணும்; எங்களுக்கு உங்களைப் பிடிக்கணும். பிடிச்சுதுன்னா, அப்புறம் ஒரு ஆறு மாசம் புரொபேஷன் பீரியட். அப்புறம்தான் கன்ஃபர்ம் பண்ணுவோம். இங்கே அதுதான் முறை” என்று விகடன் இன்டர்வியூவின்போது, ஆசிரியர் பாலசுப்ரமணியன் சொன்னதும், விகடனில் நிச்சயம் வெகு காலம் நீடிப்பேன்; அதற்கு என் ஈகோ எதுவும் குறுக்கே வராது என்று நான் நம்பியதற்குக் காரணம், சாவி என்னை அந்த அளவுக்குப் பக்குவப்படுத்தியிருந்ததுதான்.

இன்றைக்கும் எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை, கடமையை எனக்குத் தெரிந்த அளவில் உண்மையாகவும் சிரத்தையாகவும் செய்கிறேன் என்பதைத் தவிர, பெரிய திறமை எதுவும்  எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இளைஞர்கள் பலர் என்னைவிடத் திறமைசாலிகளாக, எதையும் சட்டென்று கிரகித்துக் கொள்ளும் கற்பூர புத்தி உள்ளவர்களாக இருப்பதைப் பார்க்கிறேன். கணினி தொழில்நுட்பத்தை அவர்கள் சட்டென்று பற்றிக் கொள்கிற அளவுக்கு என்னால் பிடித்துக் கொள்ள இயலவில்லை. எனக்குத் தெரியாததை அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள என் ஈகோ எதுவும் தடுக்கவில்லை.

‘விகடன்ல வெளியான உங்களோட இன்னொரு கதை சம்பந்தமாகவும் நீங்க ரொம்பக் கோபப்பட்டுக் கடிதம் எழுதினீங்கன்னு வேலுச்சாமி சொன்னார்’ என்று விகடன் ஆசிரியர் சொன்னபோது, “ஆமாம் சார்! ‘மாறுபட்ட கோணங்கள்’ என்கிற கதை சம்பந்தமான விவகாரம் அது. என் கதை முடிவை எப்படி மாற்றலாம், அப்படி இப்படின்னு கோபப்பட்டுக் கடிதம் எழுதினேன். காரணம், அப்போ நான் பக்குவப்படாதவனா இருந்தேன். நான் எழுதறதுதான் எழுத்துங்கிற ஒருவிதமான அகந்தை... திமிர்னும் சொல்லலாம்; எனக்குள்ளே இருந்தது. பத்திரிகைன்னா என்ன, அங்கே ஆசிரியர் குழுவில் வேலை செய்கிறவர்களுடைய பொறுப்பு எத்தகையதுன்னு எதுவும் தெரியாம இருந்தேன். எழுத்துலகில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருக்காங்க. அவங்களுக்கு முன்னே நான் ஒரு தூசு; நான் எழுதறது எதுவும் அமர இலக்கியம் இல்லைன்னு எனக்குப் புரிய வெச்சார் சாவி சார்” என்றேன். இதே வாக்கியங்களை நிச்சயம் பயன்படுத்தவில்லை என்றாலும், அவரிடம் சொன்ன விஷயம் இதுதான்.

புன்சிரித்தார் பாலு சார். “சாவி உங்களை ரொம்பக் கெடுத்து வெச்சிருக்கார்” என்றார் புன்னகையோடு. “எழுத்தாளனுக்குத் தன்னோட எழுத்து மேல ஈடுபாடு இருக்கணும். ஒரு கர்வம் இருக்கணும். அதுல ஒண்ணும் தப்பு இல்லே. உங்க கதை முடிவை மாத்தினதுக்கு நீங்க கோபப்பட்டு எழுதினதுல தப்பே இல்லே. சொல்லப்போனா உங்க கிட்டே எனக்குப் பிடிச்ச விஷயமே அதுதான். இங்கே பத்திரிகைக்கு வந்த பிறகு, எழுத்தாளனோட ஆங்கிள்லேர்ந்து யோசிங்க. அவங்களோட கருத்துக்கும் உணர்வுக்கும் மதிப்பு கொடுத்து, விளக்கம் சொல்றது நம்ப கடமைங்கிறதை எப்பவும் கவனத்துல வெச்சுக்குங்க” என்றார். 

என்னிடமிருந்த கர்வத்தைப் போக்கி, என்னை ஆற்றுப்படுத்தியவர் சாவி சார்; எழுத்தாளர்களின் கர்வத்தை மதிக்கக் கற்றுக் கொடுத்தவர் பாலு சார். இருவரும் என் குருமார்களாக அமைந்தது என் பூர்வ ஜென்ம புண்ணியம்!

(இன்னும் சொல்வேன்)

5 comments:

சுவையான சம்பவங்கள்...
 
தங்கள் அனுபவங்கள் சுவையாக உள்ளன. விகடன் போன்ற பத்திரிகையின் ஆசிரியருடனேயே (அப்போது) வாதாடும் துணிவு உங்கள் moral strength ஆ, இல்லை அசட்டு துணிச்சலா என்று தெரியவில்லை. ஆயினும் இதுபோன்ற அனுபவங்களே ஒரு எழுத்தாளனை புடம் போட்ட தங்கமாக மாற்றுகிறது என்று மட்டும் சொல்ல முடியும்.- இராய செல்லப்பா
 
True, you are blessed to have worked for two of the greatest editors of Tamil magazines which has made you a good human being and good writer.
 
Thank you sir...wish to read your writings more.
 
இதே மாதிரி எனக்கும் ஒரு அனுபவம் சார். கல்கியில் ஒரு சிறுகதை எழுதி இருந்தேன். ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஒரே மாதிரி சம்பவங்கள் இரண்டு முறை நடக்கிறது. இரண்டு முறையும், அந்த சம்பவத்திற்காக வேறு வேறு முடிவு எடுக்கிறான். 13 வயதில் அவன் பணம் நிரம்பிய பர்ஸ் ஒன்றை கண்டெடுக்கிறான். அந்த வயதில் எந்த சலனமுமின்றி, அதை உரியவர் இடத்தில் ஒப்படைக்க முயற்சிக்கிறான். அவன் வாழ்வில் அதே மாதிரியான சம்பவம், 35 வயதில் மீண்டும். இப்போது, அவனுக்கு இருக்கிற பிரச்சனைகளுக்கு, பண தேவைகளுக்கு - அந்த பணத்தை அதை உரியவர்களிடம சேர்க்க முயற்சிக்காமல் அவனே எடுத்து கொள்வதாக முடித்திருந்தேன். கதை பிரசுரமானது... ஆனால், அந்த பணத்தை அவன் எடுத்து கொள்ளாமல் உரியவர்களிடம் சேர்ப்பதாக மாற்றி. உங்களை போலவே எனக்கும் கோபம் வந்தது. உங்களை போலவே கடிதமும் எழுதினேன். அப்போது ஆசிரியராக இருந்தவர் சீதா ரவி அவர்கள். பதில் அனுப்பி இருந்தார். "கதையில் கூட யாரும் தவறான பாதையில் சென்றுவிடக் கூடாது" என்று. அப்போது நான் அந்த பதிலில் சமாதானம் அடையவில்லை என்றாலும், (2003ல் நடந்த சம்பவம் இது) இப்போது அந்த கதை பற்றி எப்போதாவது நினைக்கையில் கல்கியின் முடிவு சரி தான் என்று தோன்றும். உத்தம மனிதர்களை தொடர்ந்து காண்வதால். இது போல பல கதைகள் மாற்றங்களுடன் வந்துள்ளது.
-யோகி-