உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, May 19, 2016

என் புகுந்த வீடு - 17




கடல்... சிகரம்... வானம்!
நான் விகடனில் சேர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டு வரையில் (என நினைக்கிறேன்) சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் ஒவ்வொரு திங்களன்றும் நடக்கும் ஆசிரியர் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பேறு பெறவில்லை. 

“வழக்கமான எடிட்டோரியல் மீட்டிங்தானே? அதற்குப் போய் ‘பேறு பெறவில்லை’ என்கிற பெரிய வார்த்தையெல்லாம் எதற்கு?’ என்கிற கேள்வி மற்றவர்களின் மனதில்
வேண்டுமானால் உதிக்கலாம்; அந்தக் கூட்டத்தில் ஒருமுறையேனும் கலந்துகொண்டவர்களின் மனதில் உதிக்காது. காரணம், ஆசிரியரின் தலைமையில் நடைபெறும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதென்பது ஓர் இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்குச் சமம்; ஒரு கவியரங்கத்தில் கலந்துகொள்வதற்குச் சமம்; சினிமா டிஸ்கஷன் ஒன்றில் கலந்துகொள்வதற்குச் சமம்; ஓர் உபன்யாசத்தில் கலந்துகொள்வதற்குச் சமம்; அறிவியல் விளக்கக் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்குச் சமம்; இயற்கை ஆர்வலர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்கு சமம்; சட்ட நுணுக்க விளக்கக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்குச் சமம்; நகைச்சுவை உரையாடலில் கலந்துகொள்வதற்குச் சமம்; புதிர் விளையாட்டில் பங்கு பெறுவதற்குச் சமம்.

என்றைக்கு நமக்கு என்ன வாய்க்கும் என்று தெரியாது. ஆசிரியர் உற்சாகமாகப் பேச ஆரம்பித்துவிட்டால், அனுபவங்கள் மழையாகப் பொழியும். பறவைகள் பற்றிப் பேச ஆரம்பித்தால், நமக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்களை, நுணுக்கமான தகவல்களைக் கொட்டுவார். கேட்டுக்கொண்டிருக்கும் நமக்கு இறக்கைகள் முளைத்து, நாமும் ஒரு பறவையாகி, பறவைகள் உலகில் சங்கமித்துவிட மாட்டோமா என்றிருக்கும். சினிமா பற்றிப் பேச ஆரம்பித்தால், உற்சாகம் கரைபுரண்டு ஓடும்.

ஒருமுறை, அந்தக் காலத்தில் ஒரு திரைப்படம் எப்படி எடுக்கப்பட்டது என்று விளக்கத் தொடங்கினார் ஆசிரியர். நடிகர் பாடிக்கொண்டோ, பேசிக்கொண்டோ இருக்கும்போதே அதை ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு எல்லாம் ஏக காலத்தில் செய்ய வேண்டும் என்று சொல்லத் தொடங்கியவர், “எல்லாரும் கொஞ்சம் எழுந்திருக்கோ, சொல்றேன்!” என்றார். எதற்கு என்று புரியாமல் எழுந்தோம்.

காலியாக இருந்த இடத்துக்கு எங்களை அழைத்து வந்தார். “இப்போ நான்தான் தியாகராஜ பாகவதர்னு வெச்சுக்கோங்க. கண்ணன், நீங்கதான் மியூஸிக் டைரக்டர். நான் பாடிக்கிட்டே வரும்போது நீங்களும் கூடவே உங்க வாத்தியக் கோஷ்டியோட மியூஸிக் போட்டுக்கிட்டே வரணும். ஆனா, காமிராவுல விழுந்துடாம எல்லைக் கோட்டுக்கு அப்பாலதான் வரணும், புரியுதா? அப்புறம்... அசோகன், நீங்க இங்க வாங்கோ. நீங்கதான் ஒலிப்பதிவாளர். உங்க கையில நீளமான ஸ்டிக் இருக்கும். அதன் நுனியில மைக் இருக்கும். அதை, நான் பாடிக்கிட்டு வரேனில்லையா,  என் முன்னாடி பிடிச்சுக்கிட்டே வந்தாதான் என் குரல் பதிவாகும். எங்கே, சரியா பிடியுங்கோ பார்க்கலாம். ஜாக்கிரதை, இந்த மைக்கும் காமிராவுல விழுந்துடக்கூடாது...” என்று எல்லாருக்கும் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துவிட்டு, பாகவதரின் பாட்டு ஒன்றைப் பாடியபடி நடந்து வரத் தொடங்கினார். அனைவரும் அவரவர் ரோல்களைச் செய்தபடி அவரைப் பின்தொடர்ந்தோம். 

நடுவில் பாடுவதை நிறுத்தி, ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தவரைப் பார்த்து, “என்ன, மைக் காமிராவுல விழுந்துடுச்சா?” என்று கேட்டுவிட்டு, சட்டென்று தானே டைரக்டராக மாறி, “யோவ், சவுண்ட் இன்ஜினீயர்! மைக்கை காமிராவுக்குள்ளே நீட்டாதே, நீட்டாதேன்னா கேக்கறியா? போ, போய் முதல்லேர்ந்து சரியா செய்!” என்று கடிந்துகொண்டுவிட்டு, மீண்டும் பழைய இடத்துக்குப் போய் நின்றுகொண்டு, “காமிரா ஆன்!” என்று சொல்லிவிட்டு, பழையபடி பாகவதராக மாறி பாடத் தொடங்கினார். மியூஸிக் டைரக்டரும் முதலிலிருந்தே பின்னணி இசை கொடுத்துக்கிட்டு வரத் தொடங்கினார். பின்னர், “இப்படித்தான் அந்த நாள்ல ஷூட்டிங் நடக்கும். நடிகரே பாடிக்கிட்டு வருவார். அதை அப்போதே ஒலிப்பதிவு செய்யணும். மியூஸிக்கும் கூடவே ஒலிப்பதிவாகணும். நடிகரை மட்டும்தான் காமிரா பதிவு செய்யணும். அதுல, பக்கத்துல இருக்கிற இசைக் கலைஞர்களோ, குச்சியில நீட்டியிருக்கிற மைக்கோ விழுந்துடக்கூடாது. யாராவது ஒருத்தர் தப்பு பண்ணாலும், மறுபடியும் முதல்லேர்ந்து எல்லாத்தையும் வரிசைக்கிரமாகப் பண்ணியாகணும்.” என்று விளக்கினார்.

எங்களுக்கு இந்த டிராமா தமாஷாக இருந்தாலும், டெக்னாலஜி வளராத அந்த நாளில் ஒரு திரைப்படம் எடுக்க எந்த அளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்பதை அனுபவபூர்வமாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

மிருகங்கள், பறவைகள் பற்றிப் பேசத் தொடங்கினாலும் இப்படித்தான்!  தான் சிறுத்தை வளர்த்த அனுபவம் பற்றிச் சொல்லுவார். அவருடன் சரிக்குச் சரி வாயாடும் அவரின் வளர்ப்புக் கிளி பற்றிப் பேசுவார். கசோவாரி பறவையின் கேரக்டர் பற்றி விளக்குவார். ஒரு வகைப் பறவை மிகவும் டேஸ்ட்டாக இருக்கிறதென்று அவற்றைக் கொன்று தின்று, லட்சக்கணக்கில் பல்கிப் பெருகும் அந்த இனத்தையே பூண்டோடு அழித்துவிட்ட மனிதனின் சுயநலத்தைப் பற்றிச் சொல்லி வருத்தப்படுவார். அவருக்குத் தெரியாத விஷயமே இல்லையோ என்று ஆச்சரியமாக இருக்கும்.

ஆக மொத்தத்தில், திங்கள்தோறும் ஆசிரியரின் தலைமையில் நடைபெறும் எடிட்டோரியல் கூட்டம் ஒரு பல்சுவைக் கூட்டமாகவே திகழும். ஆரம்பத்தில் ஒரு
அரை மணி நேரம் மட்டும், அன்றைக்கு வெளியான ஆனந்த விகடன் பற்றியும், அதில் உள்ள நிறைகுறைகள் பற்றியும் விளக்கிவிட்டு, அதைத் தொடர்ந்து மேலே சொன்னது போல் தனது அனுபவங்களை ஒரு கதை போல ஆசிரியர் விளக்கியதால், ஒவ்வொரு மீட்டிங்கும் அத்தனை சுவாரஸ்யமாக இருக்கும். எதிர்பாராத காரணத்தால் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள், மறுநாள் வந்ததும் முதல் வேலையாக மற்றவரிடம், “நேற்று ஆசிரியர் என்ன சொன்னார்?” என்று கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.

எனக்கு முன் இருந்த சீனியர்கள் இன்னும் கொடுத்து வைத்தவர்கள். நான் விகடனில் சேர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகுதான் ஆசிரியரின் கூட்டத்தில் பங்குபெறும் பாக்கியம் பெற்றேன். 

ஆரம்பத்தில், கூட்டத்தில் எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தாலும், போகப் போக அவரிடம் உரிமை எடுத்துக்கொண்டு என்னுடைய கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கிவிட்டேன். நான் சொல்லும் கருத்துக்கள் சில வேளைகளில் சேர்மனின் கருத்துக்கு நேர் எதிராகவும் இருந்துவிடுவதுண்டு. ‘என்ன இவர் இப்படிச் சொல்றார்? வேற  யார் யாரெல்லாம் இவர் கருத்தை ஆமோதிக்கிறேள்?’ என்பதுபோல் உஷ்ணமாகிவிடுவார் சேர்மன். அப்போது அசோகன் என்னை நைஸாகக் கிள்ளி, “பேசாம இருய்யா!” என்று அடக்கப் பார்ப்பார். அதெல்லாம் எனக்கு உறைக்கவே உறைக்காது. நான்பாட்டில் எனக்குத் தோன்றியதைச் சொல்லிக்கொண்டே இருப்பேன்.

அப்படித்தான் ஒரு தடவை, தென்கச்சி கோ.சுவாமிநாதன் பற்றிப் பேச்சு வந்தது.

ஆசிரியர் தினமும் தன் வீட்டிலிருந்து கிளம்பி, அலுவலகத்தின் போர்டிகோவில் அவர் கார் நுழையும்போது சரியாக  காலை 8:30 மணி ஆகியிருக்கும். அன்றைக்கும் அவர் சரியான நேரத்தில் அலுவலகம் வந்துவிட்டார். அவரிடமிருந்து கைப்பையை வாங்கிக் கொள்ள அட்டெண்டர் தயாராக நின்றிருந்தார். ஆனால், கார் போர்டிகோவில் வந்து நின்ற பிறகும், ஆசிரியர் காரிலிருந்து இறங்கவில்லை. உள்ளேயே அமர்ந்திருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகே, பொறுமையாக இறங்கினார். அவரின் இந்த நடவடிக்கை எங்களுக்குப் புதிதாக இருந்தது. காரணம் புரியவில்லை.

அன்றைய கூட்டத்தில் ஆசிரியரே இது குறித்துப் பேசத் தொடங்கினார். “கார் நின்னவுடனே இறங்கிடுவாரே இவர், இன்னிக்கு என்ன ரெண்டு நிமிஷம் கழிச்சுப் பொறுமையா இறங்கறார்னு நீங்கெல்லாம் நினைச்சிருப்பேள். அது வேற ஒண்ணுமில்லே! கார்ல ரேடியோவுல தென்கச்சி கோ. சுவாமிநாதனுடைய ’இன்று ஒரு தகவல்’ கேட்டுண்டு வருவேன். கார் இங்கே நுழையவும், அவர் முடிக்கவும் சரியா இருக்கும். உடனே இறங்கிடுவேன். இன்னிக்கு அவ்வளவா டிராஃபிக் இல்லை. சீக்கிரமா வந்துட்டேன். அதனால தென்கச்சியோட இன்று ஒரு தகவல் முடியலே. அதான், அதைக் கடைசி வரைக்கும் கேட்டுட்டு அப்புறமா இறங்கினேன்” என்றார்.

தொடர்ந்து, “ஆஹா! எவ்ளோ அழகா சொல்றார். ரொம்பப் பிரமாதமா இருக்கு அவர் பேசறது. அவர் பாணி எனக்கு ரொம்பப் பிடிக்கும்...” என்று ஆசிரியர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அடக்கமுடியாமல் குறுக்கிட்டுவிட்டேன் நான்.

“என்ன சார், காலங்கார்த்தால தூக்கம் கலையாதவர் மாதிரி, ‘ஊர்ல... ஒருத்தரு...’னு சோம்பல் குரல்ல பேசுவார் சார் தென்கச்சி. அவர் பாணியா உங்களுக்குப் பிடிக்கும்னு சொல்றீங்க? எனக்குப் பிடிக்கவே பிடிக்காது அவர் பேசற பாணி. அவர் பேசறதைக் கேட்டேன்னா, அந்த நாளே டல்லாயிட்ட மாதிரி ஆயிடும் எனக்கு.” என்று சொல்லிவைத்தேன்.

அவ்வளவுதான்... “என்னதிது... இவர் என்ன சொல்றார்? தென்கச்சி பேசறது பிடிக்காதுங்கறாரே! எனக்கு மட்டும்தான் இங்கே அவர் பாணி பிடிக்குமா? அசோகன், நீங்க சொல்லுங்கோ, உங்களுக்குப் பிடிக்குமா, பிடிக்காதா?” என்று படபடக்கத் தொடங்கிவிட்டார் ஆசிரியர்.

“சார், நீங்க வேற. டைட்டானிக் படத்தையே குப்பைன்னு சொன்னவர் ரவி. அவர் ரசனையே தனி. அவர் பேச்சை எடுத்துக்கவே வேண்டாம். தென்கச்சி உண்மையிலேயே மிக நல்ல பேச்சாளர், சார். எங்களுக்கெல்லாம் அவரைப் பிடிக்கும்” என்று அவரைச் சமாதானம் செய்தபடி, ரகசியமாகப் பல்லைக் கடித்து, ‘பேசாம இருய்யா’ என்று என்னை அடக்கினார் அசோகன்.

அப்போதும் சமாதானமாகவில்லை ஆசிரியர். “கண்ணன், நீங்க சொல்லுங்கோ! உங்களுக்காவது தென்கச்சியைப் பிடிக்குமா, பிடிக்காதா?’ என்று கேட்டார். “பிடிக்கும் சார்! இதமா மனசை வருடற மாதிரி அழகா பேசுவார். அவர் பாணி அவ்ளோ ரசனையா இருக்கிறதாலதான் இத்தனை பெரிய ஹிட் ஆகியிருக்கு அந்த புரொகிராம்! ஆனா, ரவியோட டேஸ்ட்டே தனி, சார்! ஐஸ்வர்யா ராய் அழகியே இல்லைன்னுவார். சிம்ரன்கிட்ட கூட ஐஸ் வரமுடியாதுன்னுவார். அது அவர் கருத்து! அவ்வளவுதான்!” என்றார்.

ஆசிரியர் அடுத்து என்னைப் பார்க்க, “எங்க அப்பாவும் தென்கச்சியோட ரசிகர்தான் சார்! அப்படி விரும்பிக் கேட்பார். ஆனா என்னவோ, எனக்கு மட்டும் அவர் பேச்சு பிடிக்கவே இல்லே!” என்றேன் நான் அப்போதும் விடாப்பிடியாக. 

“ரசனையை வளர்த்துக்கோங்க. அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்!” என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு, அந்தப் பேச்சுக்கு அத்துடன் முற்றுப்புள்ளி வைத்தார் சேர்மன்.

அவர் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொன்னாலும், அதற்காக என்னிடம் கருத்தே கேட்காமல் இருந்துவிட மாட்டார் சேர்மன். என் கருத்தை ஒப்புக்கொள்கிறாரோ இல்லையோ, மற்ற சீனியர்களிடம் அபிப்ராயம் கேட்பது போல், என்னையும் ஒரு பொருட்டாக மதித்துக் கருத்து கேட்பார். அவர் கேட்காவிட்டாலும் நான் எனக்குத் தோன்றியதைச் சொல்லிவிடுவேன்.

விகடன் பவள விழா சமயத்தில் மலர் ஒன்றை வெளியிட்டோம். அது பற்றிப் பேச்சு வந்தது. “பவள விழாவா? பவழ விழாவா? எது சரி?” என்று கேட்டார் எம்.டி. மெஜாரிட்டி கருத்து பவள விழா என்பதாகத்தான் இருந்தது. வழக்கம்போல் என்னையும் அபிப்ராயம் கேட்டார்.

“பவழம், பவழமல்லி என்றெல்லாம் வழக்கத்தில் உள்ளது. பவழக்காரத் தெரு என்றுதான் உள்ளது. பவளக்காரத் தெரு என்றில்லை. ஆக, பவழம் என்பதே என்னைப் பொறுத்தவரையில் சரி. ழகரம் வாயில் நுழையாதவர்கள் பவளம் என்று பயன்படுத்தத் தொடங்கி, காலப்போக்கில் அதுதான் சரி என்று ஆகிவிட்டிருக்க வேண்டும். இன்றைக்கு இரண்டுவிதமாகவும் பயன்படுத்துகிறார்கள்” என்று என் கருத்தைச் சொன்னேன்.

ஆசிரியர் என் கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்த மலருக்குப் ’பவழ விழா மலர்’ என்றே பெயர் வைத்தார்.

 மாற்றுக் கருத்தை யாரேனும் சொன்னால், அந்தக் கருத்தையொட்டித்தான் ஆசிரியரின் கோபம் இருக்குமே தவிர, தன் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லிவிட்டாரே என்கிற கோபம் துளியும் இருக்காது. அதேபோல், புத்திசாலித்தனமாக யாரேனும் ஏதேனும் ஐடியா சொன்னால், அதை மனமுவந்து பாராட்டுவதிலும் சளைக்க மாட்டார் ஆசிரியர். விகடன் ஆசிரியர் குழுவில் இருக்கும் பலருக்கும், அவரிடம் பணியாற்றியபோது அவரின் பாராட்டு கிடைத்திருக்கும். 

நான் விகடனில் சேர்ந்து ஒரு வருடமே ஆகியிருந்த சமயம்... தலைமைத் தேர்தல்ஆணையர் டி.என்.சேஷன், ஆனந்த விகடனில் ஒரு தொடர் கட்டுரை எழுதுவதாக முடிவானது. ஆனால், என்ன எழுதப் போகிறார் என்றெல்லாம் விரிவாக வாசகர்களுக்குச் சொல்லாமல், மதன் சார் தன் பாணியில் சஸ்பென்ஸாக ஓர் அறிவிப்பை வெளியிடச் செய்தார். 


ஒரு முழுப்பக்கம் சேஷனுடைய படத்தை வெளியிட்டு, “ஓகே, நான் ரெடி!” என்று அவர் சொல்வது போல் எழுத்துக்களை வெளியிடச் சொன்னார் மதன். கீழே, “என்னவாம்?” என்று ஒரு கேள்வி. இவ்வளவுதான் அறிவிப்பு!

லே-அவுட்டெல்லாம் பிரமாதமாக ரெடியாகி, மதன் சார் பார்த்து, லீடர் ஃபாரத்தில்,
(ஆரம்ப 16 பக்கங்களும் கடைசி 16 பக்கங்களும் கொண்ட இறுதியாக முடித்தனுப்பும் ஃபாரத்தை லீடர் ஃபாரம் என்போம்) கடைசி பக்கத்தில் அதை இடம்பெறச் செய்து, அச்சுக்குப் போய்விட்டது. முதல் பக்கம் எத்தனை முக்கியமானதோ, கடைசி பக்கமும் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், முக்கியமான புதிய தொடர் அறிவிப்புகளை கடைசி பக்கத்தில் வெளியிடுவது பத்திரிகை வழக்கம்.

பணிகள் முடிந்து, அலுவலகத்தை விட்டுக் கிளம்புகையில், என் மனசுக்குள் ஏதோ நெருடிக்கொண்டே இருந்தது. எங்கோ, ஏதோ பிரச்னை என்றால், இப்படி இனம்புரியாத நெருடல் எனக்கு ஏற்படுவது வழக்கமான ஒன்று. யோசித்தேன். சட்டென்று ஒரு ஃப்ளாஷ் அடித்த மாதிரி மனசுக்குள் அந்தக் குதர்க்கமான கேள்வி எழுந்தது.

அப்போதெல்லாம் ’கோஹினூர் காண்டம்’ விளம்பரங்கள் விகடனில் வெளியாகிக்கொண்டு இருந்தன. வேறு சில பத்திரிகைகளிலும் அந்த விளம்பரங்கள் வந்துகொண்டிருந்தன. இலக்கியப் பத்திரிகை ஒன்றில் முன் அட்டையில் காஞ்சி மகா பெரியவர் படமும், பின் அட்டையில் சில்க் ஸ்மிதா படத்துடன்கூடிய காண்டம் விளம்பரப் படமும் வெளியாகியிருந்தது. அது மடங்கி, பின் அடிக்கப்பட்டுப் புத்தகமாகும்போது தவறாகத் தெரியாது. ஆனால், பிரஸ்ஸில் அட்டை மட்டும் அச்சாகும்போது இரு படங்களும் நேருக்கு நேர் இருக்க, பார்ப்பதற்குக் கொஞ்சம் தர்மசங்கடமாக இருக்கும்.

இந்தச் சம்பவம் என் மனத்தில் அப்போது எழ, டி.என்.சேஷன் விளம்பரத்தில், “ஓகே, நான் ரெடி!” என்று மட்டும் வார்த்தைகளை வைத்திருக்கிறோமே, எதிர் பக்கத்தில் ஏடாகூடமான வாசகங்களோடு காண்டம் விளம்பரம் வந்து தொலைத்தால், வாசகர்கள் இரண்டையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்துப் பார்க்கும்போது தப்பாகத் தெரியாதா என்று எண்ணினேன். நினைக்கவே கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது.

என் எண்ணத்தை திரு.வீயெஸ்வி சாரிடம் பகிர்ந்துகொண்டேன். “என்னய்யா, குண்டைத் தூக்கிப் போடறே? இரு, எதுக்கும் மூன்றாவது அட்டையில் (இதுதான் கடைசி பக்கத்துக்கு எதிரே வரும்) என்ன விளம்பரம் வருதுன்னு கேட்டுடுவோம்” என்று பிரஸ்ஸில் யாரிடமே விசாரித்தார். அந்த விளம்பரத்தின் புரூஃபை உடனே கொண்டு வரும்படி சொன்னார்.

நான் என்ன பயந்தேனோ, அதுவேதான் நடந்தது. பதறிப்போன வீயெஸ்வி அவர்கள், அதை உடனே ஆசிரியரிடம் கொண்டு சென்றார். அடுத்த சில நிமிடங்களில் பரபரப்புடன் வெளியே வந்து, லீடர் ஃபாரம் அச்சாக வேண்டாம், சில திருத்தம் இருக்கிறது என்று பிரஸ்ஸுக்குச் சொல்லிவிட்டு, “ஆசிரியர் நீங்கள் சொன்னதைப் பாராட்டினார். இந்த விளம்பரத்தின் எதிரே சேஷன் அறிவிப்பு கட்டாயம் வரக்கூடாது என்று சொல்லிவிட்டார். அதனால், முதல் பக்கம் ‘உள்ளே’ எனப் பொருளடக்கம் போட்டிருக்கிறோம்; அதை எடுத்துவிட்டு, இந்த சேஷன் அறிவிப்பை முதல் பக்கத்தில் வைத்துவிடலாம். கடைசி பக்கத்துக்கு வேறு ஏதாவது இருக்கும்படி ஃபார்ம் லிஸ்ட்டில் மாற்றம் செய்துவிடலாம்” என்றார். அடுத்த சில நிமிடங்களில் கச்சிதமாக ஃபார்ம் லிஸ்ட்டை மாற்றியமைத்து அச்சுக்கு அனுப்பினார் வீயெஸ்வி.

அந்தக் குறிப்பிட்ட இதழ் வெளியான அன்று காலை, ஆசிரியர் என்னை அழைத்ததாகச் சொல்லி வீயெஸ்வி அழைத்துப் போனார்.

ஆசிரியரின் அறைக்குள் நுழைந்ததும், “வாங்கோ! உங்களால ஆனந்த விகடனுக்கு நேரவிருந்த ஒரு தர்மசங்கடம் தவிர்க்கப்பட்டது. அதற்கு என்னுடைய நன்றியைத் தெரிவிச்சுக்கறேன். இந்தாங்கோ!” என்று ஒரு என்வலப்பை நீட்டினார்.

வாங்கிப் பிரித்துப் பார்த்தேன். அவர் வாய் வார்த்தையாகச் சொன்ன அந்தப் பாராட்டும் நன்றியும் கடித வடிவில் இருக்க, கூடவே ‘இந்த நன்றிக்கான சிறு அடையாளமாக ரூ.1000 தங்களுக்கு என்னுடைய அன்பளிப்பாக வழங்கியுள்ளேன். பெற்றுக்கொள்ளவும்.” என்றும் குறிப்பிட்டு,  கீழே ஆசிரியர் கையெழுத்திட்டிருந்தார். கூடவே ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் இணைக்கப்பட்டிருந்தது.

“எதுக்கு சார் இதெல்லாம்? இது என்னுடைய கடமைதானே? இதற்கு எதற்கு தனி அன்பளிப்பெல்லாம்?” என்று விடாப்பிடியாக மறுத்தேன். உடன் இருந்த மதன் சார், “வாங்கிக்குங்க ரவிபிரகாஷ், உங்களோட வேலையைத் தாண்டி ஸ்மார்ட்டா யோசிச்சு செயல்படுத்தினதுக்குதான் இந்த அன்பளிப்பு. இங்கே இதெல்லாம் சகஜம். விகடனுக்கு நீங்க புதுசுங்கிறதால உங்களுக்கு இது ஆச்சரியமா இருக்கலாம். இந்த மாதிரி இன்ப அதிர்ச்சிகள் எல்லாம் போகப் போக இன்னும் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்” என்று அந்த செக்கை மீண்டும் என் கையிலேயே திணித்துப் புன்னகைத்தார்.

அன்றைக்கு என் மாதச்சம்பளமே ரூ.1,200/-தான். இந்நிலையில் உபரியாக ஒரு ஆயிரம் ரூபாய் என்பது எத்தனை பெரிய அன்பளிப்பு எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் ஞானம் கடலைப் போல் ஆழமானது; அவரது பண்பு எவரெஸ்ட்டைப் போல் உயரமானது; அவரது பெருந்தன்மை வானத்தைப் போல் விசாலமானது!

குற்றாலக் குளியல் போல அவரின் பேரன்பில் திளைத்தவர்கள் பலருண்டு; நான் அவ்வளவுக்கு இல்லையென்றாலும், கும்பாபிஷேகத்தின்போது கோபுரத்தின் உச்சியிலிருந்து தெளிக்கப்படும் கலச நீரின் சில துளிகளையேனும் தலையில் தாங்கியவன் போல் அவரின் அன்பில் நனைந்தவன் என்கிற பெருமிதம் எனக்குண்டு.

(இன்னும் சொல்வேன்)


6 comments:

அருமையான பதிவு. இது போல மனிதருண்டோ என்று வியக்கிறேன்.

மிக மிக நன்றி.ஜி.
 
பலே மோதிரக்கையால் காசே வாங்கியிருக்கிறீர்கள்.
 

அற்புதம் சார்
 
Thank you sir.
 
//குற்றாலக் குளியல் போல அவரின் பேரன்பில் திளைத்தவர்கள் பலருண்டு; நான் அவ்வளவுக்கு இல்லையென்றாலும், கும்பாபிஷேகத்தின்போது கோபுரத்தின் உச்சியிலிருந்து தெளிக்கப்படும் கலச நீரின் சில துளிகளையேனும் தலையில் தாங்கியவன் போல் அவரின் அன்பில் நனைந்தவன் என்கிற பெருமிதம் எனக்குண்டு.//

மிக மிக அருமையான, அழகான வரிகள்! மிகுந்த சுவாரசியமான பதிவு!
 
I happen to read this posting today. I am glad I read this. For the first time someone shares the same views of mine about late Thenkachhi Sri Swaminathan. He was such an inspiring personality, who used to kill the anecdots because of the way he narrates. How many times, he would say 'vandhu, vandhu.. While narrating. Some of my friends call me Thenkachhi Swaminthan (because of the stories I tell to illustrate a point or because of its relevance) I used to get offended at this.

Viswanathan