உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, April 17, 2016

என் புகுந்த வீடு - 14


சேர்மன் பார்த்துக்கொண்டிருக்கிறார்!

விகடன் சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களைப் பற்றி எழுதத் தொடங்கும்போதெல்லாம் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரின் தாய்மை நிறைந்த அன்பும் மனிதாபிமானமும்தான்! அதற்காக அவர் கோபப்படவே மாட்டார் என்பது அர்த்தமல்ல. கோபம் வரும்; அந்த கோபத்தில் நம் மீதான அக்கறைதான் மிகுந்திருக்கும்.

“சார் யார் மீதாவது கோபப்படுகிறார் என்றால், அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். சார் அவர்களைப் பற்றி ரொம்பவும் அக்கறைப்படுகிறார் என்று அர்த்தம்” என்று சீனியர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால், எம்.டி. அவர்கள் என் மீது ஒருநாளும் கோபப்பட்டதே இல்லை. ‘அவருக்கு என் மீது அக்கறை இல்லையோ! அதனால்தான் கோபப்படவில்லையோ? கோபமூட்டும்படியாக ஏதாவது செய்து வைக்கலாமா!’ என்றெல்லாம்கூடக் குழந்தைத்தனமாக நான் ஆரம்பக் காலங்களில் யோசித்திருக்கிறேன் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.

என் குருநாதர் சாவி அவர்களின் கோபம் பத்திரிகையுலகில் பிரசித்தமானது. ஆனால், அதில் பொதிந்திருந்த அன்பையும் அக்கறையையும் மனதார உணர்ந்தவன் நான். அதற்குச் சற்றும் சளைத்ததல்ல விகடன் சேர்மனின் கோபமும், அதில் நிறைந்திருக்கும் அன்பும் அக்கறையும்! ஆனால், சாவி கோபக்காரர் என்று பிரசித்தமான அளவுக்கு விகடன் சேர்மன் கோபக்காரராகப் பரவலாக அறியப்படவில்லை. காரணம், கோபத்தைவிட அவரின் அன்பும் அடுத்தவரை மதிக்கும் பண்பும் பன்மடங்கு அதிகமாக இருந்ததுதான்!

பரபரப்பான அலுவலக வேலை நேரத்தில் தேவையற்ற போன்கால்கள் வந்தால் எரிச்சலாக இருக்கும். இருப்பினும், பொறுமையாக பதில் சொல்லி, முடிந்த அளவு அவர்களுக்கு உதவவேண்டியது அவசியம் என்று எங்களுக்கு அறிவுறுத்தியவர் சேர்மன். சில நேரங்களில் வேறு டிபார்ட்மெண்ட்டுக்குப் போக வேண்டிய போன் கால்கள் எடிட்டோரியலுக்கு வந்துவிடுவதுண்டு. அது போர்டில் இருக்கும் ஆபரேட்டரின் கவனக்குறைவால் இருக்கலாம்; அல்லது, யாரேனும் வாசகரோ வேறு எவரோ தங்கள் பிரச்னை குறித்து யாரைக் கேட்பது என்று தெரியாமல் எடிட்டோரியலின் நேரடி தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டுவிட்டிருக்கலாம். அவர்களுக்குப் பொறுமையாக பதில் சொல்லி, வேண்டிய உதவியை சம்பந்தப்பட்ட டிபார்ட்மெண்ட்டில் இருப்பவர்கள்தான் செய்யவேண்டும் என்று பொறுப்பைத் தள்ளிவிடப் பார்க்காமல், தானே முடிந்த அளவு அவர்களுக்கு உதவ வேண்டும் என்பார் எங்கள் எம்.டி. “வெளியிலிருந்து போன் செய்கிறவர்களுக்கு என்ன டிபார்ட்மெண்ட், யார் இதற்குப் பொறுப்பு என்றெல்லாம் தெரியாது; அவர்களைப் பொறுத்தவரை விகடனுக்குப் போன் செய்திருக்கிறார்கள். தங்களின் போன் அழைப்பை எடுத்துப் பேசுகிறவர்கள்தான் அவர்களைப் பொறுத்தவரை விகடனின் முகம். எனவே, உங்களின் பொறுப்பு முக்கியமானது” என்று அனைவருக்கும் படித்துப் படித்துச் சொல்வார் எம்.டி. வெறுமே வாய் வார்த்தையாக போதிப்பது மட்டுமல்ல; தானே பலமுறை அதை நடைமுறையில் செயல்படுத்தியும் காட்டியுள்ளார்.

வெளியிலிருந்து யாரோ வாசகர் போன் செய்து, சந்தா கட்டிப் படிக்கும் தனக்கு இரண்டு வாரங்களாகப் புத்தகமே வரவில்லை என்று சத்தம் போடுவார். அந்த அழைப்பு நேரடியாக ஆசிரியரின் மேசைக்கு வந்திருக்கும். ஆனால், தான் விகடன் ஆசிரியரோடுதான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை அந்த வாசகர் அறிய மாட்டார். விகடனில் சர்க்குலேஷன் டிபார்ட்மெண்ட்டில் பணியாற்றும் யாரோ ஓர் ஊழியரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் நினைப்பார். எனவே, அவரின் வார்த்தைகள் சற்றுத் தடிப்பாகக் கூட வரலாம். ஆனாலும், சேர்மன் அந்த வாசகரிடம் மிகப் பொறுமையாகவும் தன்மையாகவும் பேசி, அவருடைய பெயர், சந்தா எண் ஆகியவற்றைக் கேட்டுக் குறித்துக்கொள்வார். பின்பு சப்ஸ்கிரிப்ஷன் டிபார்ட்மெண்ட்டைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லி, அந்த வாசகருக்கு இரண்டு வார புத்தகங்களை அங்குள்ள எஸ்.ஓ. மூலமாக உடனடியாகக் கொடுக்கச் செய்வார். ஏன் புத்தகம் போகவில்லை என விசாரிப்பார். தபாலில் தவறியிருந்தால், புகார் எழுதித் தரச் சொல்வார்.

இன்னும் சில நேரங்களில், வேறு பத்திரிகைக்குப் போக வேண்டிய போன்கால்கள் கூட வந்துவிடுவதுண்டு. அவர்களுக்குப் பொறுமையாக அதை எடுத்துச் சொல்வதோடு, சம்பந்தப்பட்ட பத்திரிகை தொடர்பு எண்களைப் பார்த்துச் சொல்லி, அங்கே தொடர்பு கொள்ளச் சொல்வார். அவருடைய இந்தச் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட நானும் 99 சதவிகிதம் அவரின் வழிமுறையைத்தான் கடைப்பிடித்து வருகிறேன்.

2000-வது ஆண்டில்தான் முதன்முதலாக லேண்ட்லைன் டெலிபோன் கனெக்‌ஷன் வாங்கினேன். அப்போது பி.எஸ்.என்.எல். என்கிற பெயர் கிடையாது. சென்னை டெலிபோன்ஸ்தான். டெலிபோன் டைரக்டரி என தடித்தடியாக மூன்று புத்தகங்கள் தருவார்கள். அதில் பொடிப்பொடியான எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான பெயர்களில் தேடி, நாம் விரும்பும் நபரின், தியேட்டரின், முக்கியப் பிரபலத்தின் தொலைபேசி எண்களைக் கண்டுபிடிப்பது ஒரு ஜாலி விளையாட்டு! டெலிபோன் டைரக்டரி வந்ததும் நான் செய்த முதல் காரியம், என் பெயரைத் தேடி எனக்கான டெலிபோன் எண் சரியாக இருக்கிறதா என்று பார்த்ததுதான்! அப்போது ரவிபிரகாஷ் என்கிற பெயரில் என்னைத் தவிர ஐந்து பேர் இருந்தார்கள்.

சரி, டாப்பிக்கை விட்டு எங்கோ போகிறேன். 

வீட்டுக்கு டெலிபோன் வந்த புதிதில், தேவை இருக்கிறதோ இல்லையோ, தெரிந்தவர்களுக்கெல்லாம் போன் செய்து பேசுவது ஒரு பொழுதுபோக்காக இருந்தது. அலுவலகத்தில் இருந்து காலையில் ஒருமுறை, மாலையில் ஒருமுறை சும்மாவாச்சும் வீட்டுக்குப் போன் செய்து, மனைவியிடமும்  என் குழந்தைகளிடமும் ‘சாப்பிட்டியா? ம்ம்... அப்புறம்...’ என்று விஷயமே இல்லாமல் பேசுவது உண்டு.

அப்போது என் மகனுக்கு ஐந்து வயது. டெலிபோன் செய்யக் கற்றுக்கொண்டுவிட்டான். மிகக் கச்சிதமாக என் அலுவலக நம்பரை டயல் செய்து (பட்டன் டயல்தான்) என்னுடைய இண்டர்காம் இணைப்பு எண்ணை டெலிபோன் ஆபரேட்டரிடம் சொல்லி, என்னைத் தொடர்பு கொண்டு மழலை மொழியில் பேசுவான். ‘அம்மா அடிச்சா; வந்ததும் திட்டு’ என்பான். ‘அக்கா கிள்ளினா’ என்று ஏழு வயது அக்கா மீது புகார் செய்வான்.

அப்படி ஒருநாள் அவன் வழக்கம்போல் ஆனந்த விகடன் அலுவலகத்துக்கு போன் செய்தான். என் இண்டர்காம் எண்ணை மறந்துவிட்டானா அல்லது அவன் மழலையில் சொன்னது டெலிபோன் ஆபரேட்டருக்குத்தான் புரியவில்லையா என்று தெரியவில்லை; எம்.டி-க்கு கனெக்‌ஷன் கொடுத்துவிட்டார் ஆபரேட்டர்.

எம்.டி. எடுத்ததும், வழக்கம்போல் இவன் தன் அம்மா மீது புகார்ப் பட்டியல் வாசித்திருக்கிறான். “எப்போ வருவே வீட்டுக்கு? வரும்போது பாப்பின்ஸ் வாங்கிண்டு வரியா?” என்று கேட்டிருக்கிறான். எம்.டி. பொறுமையாக அவனிடம், “யார் வேண்டும்ப்பா உனக்கு?” என்று கேட்டிருக்கிறார். என் மகன் மழலையில் “டவிபிகாஸ்” என்று சொல்ல, “கொஞ்சம் இருக்கியா? அப்பாவைப் பேசச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு, என் இண்டர்காமுக்கு இணைப்பு கொடுத்தார். 

எடுத்து ‘ஹலோ’ என்றதும், “ரவிபிரகாஷ்! உங்க பையன் பேசறான். லைன்ல இருக்கான். பேசுங்கோ!” என்றார் எம்.டி. தொடர்ந்து ரிசீவரில், “அப்பா... அப்பா...” என்று மகனின் மழலைக் குரல் கேட்டது.

அவனிடம் சிறிது பேசிவிட்டு, “சரி, வைடா போனை! அப்புறமா பேசறேன்” என்று கட் செய்துவிட்டு, டெலிபோன் ஆபரேட்டரைத் தொடர்பு கொண்டு, “இந்த அழைப்பை எம்.டி-க்கு ஏன் கொடுத்தீர்கள்?” என்று கேட்டேன். “உங்க பையனா சார், எடிட்டர்னு கேட்டான். சரி, யாரோ எம்.டி-யோட பேரக் குழந்தை போலிருக்குன்னு நினைச்சுக் கொடுத்துட்டேன்” என்றார். ”கெடுத்தீங்களே காரியத்தை” என்றபடி எம்.டி-யின் அறைக்கு ஓடினேன்.

“வாங்கோ!” என்று பளீரென்று புன்னகைத்தார். “என்ன, பேசினேளா? என்ன சொல்றான் பையன்?” என்றார். 

“சார், அவன்... வந்து... தெரியாம... ஸாரி சார்...” என்று தயங்கினேன் குரல் நடுங்க. “வீட்டுக்குப் போனதும் இப்படியெல்லாம் போன் பண்ணக்கூடாதுன்னு அவனைக் கண்டிச்சு வைக்கிறேன், சார் ” என்றேன்.

“அவன் என்ன தப்பு பண்ணான் கண்டிக்கிறதுக்கு? இந்தச் சின்ன வயசுல நம்பரை கரெக்டா டயல் பண்ணிப் பேசத் தெரிஞ்சிருக்கே, அதைப் பாராட்டுங்கோ!” என்றார்.

“அதில்லே சார், அவன்பாட்டுல எடிட்டர்னு சொல்லி, அவங்க இங்கே லின்க் கொடுத்து, உங்களை அநாவசியமா இடைஞ்சல் பண்ணி...” என்று நான் இழுக்க, “ஒரு இடைஞ்சலும் இல்லே! இங்கே விகடனுக்கு போன் பண்ணிப் பேசறவங்க யாரா இருந்தாலும் அவங்க ஏதோ ஒரு விதத்துல நமக்குத் தொடர்பு உள்ளவங்கதான்; நமக்கு வேண்டியவங்கதான். அவங்க தேவை என்னன்னு கேட்டறிஞ்சு அதைச் செய்து கொடுக்கவேண்டியது நம்ம கடமை. மனசுல எதையும் போட்டுக் குழப்பிக்காம நிம்மதியா போய் உங்க வேலையைப் பாருங்கோ!” என்றார் சேர்மன்.

“சரி சார்” என்று விடைபெற்றுத் திரும்ப யத்தனித்தேன். “போறப்போ உங்க பையனுக்கு மறக்காம பாப்பின்ஸ் வாங்கிண்டு போங்கோ!” என்று சிரித்தார்.

சத்தியமாகச் சொல்கிறேன், அந்தப் பேரன்பின் சுமை தாங்காமல் இப்போதும் என் கண்கள் கலங்குகின்றன.

இன்றைக்கும் ஒவ்வொரு முறை என் மேசை போன் ஒலிக்கும்போதும், என் மொபைல் கூப்பிடும்போதும், “எடுத்து என்னான்னு கேளுங்கோ! அவருக்கு என்ன வேணும்னு கேட்டு, முடிஞ்ச உதவியைச் செய்யுங்கோ”  என்று அருகிலிருந்து எங்கள் மரியாதைக்குரிய சேர்மன் அறிவுறுத்துவது போலவே இருக்கிறது.

அவர் வார்த்தையை வேதவாக்காக இன்றளவிலும் கடைப்பிடித்து, அப்படியேதான் நடந்து வருகிறேன். ஒருவேளை, அழைப்பை ஏற்க முடியாத நிலையில் இருந்தாலும், பின்னர் மிஸ்டு கால்களைப் பார்த்து அவர்களைத் தொடர்பு கொண்டு பேசிவிடுகிறேன்.

காரணம், இப்போதும் சேர்மன் என்னை சதா காலமும் கவனித்துக்கொண்டே இருப்பதாகத்தான் உணர்கிறேன்.

(இன்னும் சொல்வேன்)










7 comments:

சுவாரஸ்யமான அனுபவங்கள்.
 
அருமை சார்.
 
செம சுவாரஸ்யம்.
 
"பாப்பின்ஸ்" வாங்கிட்டு போனீங்களா, இல்லையா?
 
எப்பேர்ப்பட்ட மாமனிதருடன் பணியாற்றியிருக்கிறீர்கள்! வியக்கிறேன்.
 
Great Chairman and great post. Thank you sir.
 
கண்கள் பனிந்தன. அவருடன் வேலை செய்ய கொடுத்து வைத்தவர் சார் நீங்க.