உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Saturday, December 19, 2015

என் புகுந்த வீடு!

விகடன் தாத்தாவா? காந்தி தாத்தாவா?


விகடன் குழும சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் (28.12.1935 – 19.12.2014) அவர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்றவர்கள் பாக்கியவான்கள். அப்படியொரு மகோன்னத மனிதர் அவர். எங்கோ குக்கிராமத்தில், நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, கடையில் தொங்கும் ஆனந்த விகடன் பிரதிகளை அண்ணாந்து பார்த்து வியந்த சிறு துரும்பு நான். பின்னாளில் ஆனந்த விகடனில் பணியில் சேருவேன், அவரைச் சந்திப்பேன், பழகுவேன், அவரின் அபிமானத்தைப் பெறுவேன் என்றெல்லாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத நிலையில் இருந்தவன். அவரோடு பழகக் கிடைத்த வாய்ப்பால் ஆசீர்வதிக்கப்பட்டவனானேன். 

இன்று அவரின் முதலாண்டு நினைவு நாள். அவரைப் பற்றி எழுத விரும்புகிறேன். எழுத வேண்டும். எழுத எத்தனையோ உண்டு. ஒரு கட்டுரைக்குள் அடக்கிவிட முடியாது. தொடர் பதிவுகளாக எழுத வேண்டும். எங்கிருந்து தொடங்கலாம்? 

என் சிறு வயதிலிருந்தே தொடங்குகிறேன்.

விழுப்புரத்துக்கு அருகில் 10 கி.மீ தொலைவில் உள்ள காணை என்னும் கிராமத்திலிருந்துதான் என் நினைவுகள் தொடங்குகின்றன. நான்காம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு வரை அங்குதான் படித்தேன். பின்பு எட்டாம் வகுப்பிலிருந்து விழுப்புரம் மகாத்மா காந்தி உயர்நிலைப்பள்ளியில்!

காணை கிராமத்தில் வசித்தபோது, எங்கள் அப்பா தவறாமல் ஆனந்த விகடன் பத்திரிகை வாங்குவார். சௌந்தரம்மாள் என்னும் சக டீச்சர் வீட்டில் குமுதம் வாங்குவார்கள். எங்கள் வீட்டார் ஆனந்த விகடன் படித்து முடித்ததும் அதைக் கொண்டு போய் அவர்கள் வீட்டில் கொடுத்துவிட்டு, அவர்களிடமிருந்து குமுதம் பத்திரிகையை வாங்கி வந்து எங்கள் வீட்டில் தருவேன். இது வாரா வாரம் நடக்கும்.

அப்போதெல்லாம் நான் விகடனில் கதை, கட்டுரை எதுவும் படித்தது கிடையாது. ஜோக்ஸ் மட்டுமே படிப்பேன். சுருக்கமாக நாலைந்து வரிகளில் இருப்பதால்! வேடிக்கை என்னவென்றால், அது ஜோக், அதைப் படித்துச் சிரிக்க வேண்டும் என்கிற விஷயம் கூட எனக்குத் தெரியாது. அதில் உள்ள நுணுக்கம் எனக்குப் புரியாது. ஒரு தகவலாகவே அதைப் படிப்பேன். நான்காம் வகுப்பில் அவ்வளவுதான் என் ஞானம்.

உதாரணமாக, அந்தக் காலத்தில் விகடனில் நான் படித்த ஒரு ஜோக் சொல்கிறேன். மிருகக்காட்சிசாலையைப் பார்வையிட்டுக்கொண்டு இருப்பார்கள் ஒரு குடும்பத்தார். ஒரு கூண்டில் உள்ள நரியைப் பார்த்து, “இது என்ன நரி அப்பா?” என்று கேட்பான் பையன். “குள்ளநரி” என்பார் அப்பா. அடுத்த கூண்டில் உள்ள நரியைக் காட்டி, “இது என்ன நரிப்பா?” என்பான் பையன். “இது ஆர்டினரி” என்பார் அப்பா.

இதில் உள்ள நகைச்சுவை நுட்பம் புரியாமல் ஒரு தகவலாகப் படித்தது இன்னமும் எனக்கு நினைவு இருக்கிறது.

அடுத்தடுத்த வருடங்களில் என் அறிவு கொஞ்சம் மேம்பட்டது. நகைச்சுவைத் துணுக்கைப் படித்தால் சிரிக்கவேண்டும் என்று தோன்றியது. அதில் உள்ள நகைச்சுவை அம்சம் என்னவென்று புரிபட ஆரம்பித்தது.

 அந்நாளில் விகடனில் படித்த இன்னொரு ஜோக்... கணவன் கையில் ஒரு காகிதம். அதில் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு மனைவியிடம் சொல்கிறான்... “இது நீ எழுதிய ஜோக்கா? யார் கிட்டேயும் காட்டாதே! சிரிக்கப் போறாங்க!”

அந்த வயசில், இந்த ஜோக்கில் உள்ள நகைச்சுவை எனக்குப் புரிந்தது ஆச்சரியம்தான்! ஆனால், அதற்குக் காரணம் என் அப்பா. அவர் ஜோக்கை விவரித்துச் சொல்வார். முதலில் என்னைப் படிக்கச் சொல்வார். அதில் என்ன புரிந்தது என்று கேட்பார். பின்பு அதில் உள்ள நகைச்சுவை அம்சத்தை விளக்குவார். இப்படியாக பத்திரிகை படிக்கும் ஆர்வத்தை எனக்குள் தூண்டியவர் என் அப்பா. பத்திரிகை என்றால், அந்நாளில் எனக்கு ஆனந்த விகடன் மட்டுமே! இரவலாக குமுதம் வாங்கி வருவேனே தவிர, அதைப் படித்ததாக நினைவு இல்லை. குமுதத்தில் சில அட்டைப்படங்கள் மட்டும் நினைவு இருக்க்கிறது. குமுதத்தின் அட்டைப் படங்கள் புதுமையாக இருக்கும். சர்க்கஸில் கூண்டுக்குள் வீரர்கள் மோட்டார்பைக் ஓட்டி சாகசம் செய்யும் படம், பிரமாண்ட யானையின் முகம் குளோசப்பில்... இப்படியான படங்கள் ரசனையாக இருக்கும். ஒரு முதலை ’ஆ’வென்று வாயைப் பிளந்திருக்கும் படம் ஒருமுறை டைட் குளோசப்பில் குமுதத்தில் வெளியானது இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது. குமுதத்தில் வெளியாகும் பாக்கியம் ராமசாமியின் ‘அப்புசாமி-சீதாப்பாட்டி’ தொடர்கதையை அப்பாவும் அம்மாவும் ஆர்வத்தோடு வாசிப்பார்கள்.

எனக்கு ஆனந்த விகடன் ஜோக்ஸ் மட்டும்தான்! பின்பு, படிப்படியாக தொடர்கதைகளும் படிக்க ஆரம்பித்தேன். 

அந்நாளில் பூவண்ணன் எழுதிய ‘ஆலம்விழுது’ என்னும் தொடர்கதை விகடனில் வெளியானது. ஒரு சிறுவன் தன் அப்பா தனக்கு அது வாங்கித் தரவில்லை, இது வாங்கித் தரவில்லை என்று குறைப்படுகிறான். அப்பா அவனிடமே தன் சம்பளம் மொத்தத்தையும் கொடுத்து, குடும்பத்தை அவனையே நிர்வகிக்கச் சொல்லுகிறார். அந்த அனுபவம் அந்தச் சிறுவனைப் பக்குவப்படுத்துகிறது என்பது தொடர்கதையின் அடிப்படைக் கரு.

அப்பா என்னை இந்தத் தொடர்கதையைப் படிக்கச் சொன்னார். வாரா வாரம் தவறாமல் படிப்பேன். பின்பு, நான் படித்ததை கதையாகச் சொல்லச் சொல்லுவார் அப்பா. மனப்பாடம் செய்யவில்லை என்றாலும், கதை ஒரு புள்ளி பிசகாமல் என் நினைவில் இருக்கும். தடம் மாறாமல் சொல்லுவேன். அப்பா கொடுத்த இந்த அடிப்படைப் பயிற்சிதான் பின்னாளில் என்னை எழுத்தாளனாக, பத்திரிகையாளனாக மாற்றியது என்றால் மிகையில்லை.

அந்தத் தொடர்கதையைப் படித்தபின்பு, என் அப்பாவிடம் நான் அந்தச் சிறுவன் போல் குடும்பத்தை நிர்வகிக்கிறேன் என்று சொன்னேன். அதற்கு அப்பா என்னிடம் ஒரு தொகை கொடுத்து, ஒரு பெட்டிக் கடை வைத்து நடத்தச் சொன்னார். நிஜமாகவே ஒரு டிரங்க் பெட்டிக்குள் கடை.

முதலில் அப்பாவும் நானும் போய் விழுப்புரத்திலிருந்து பேனா, பென்சில், குயர் கணக்கில் வெள்ளைப் பேப்பர், ரூல்டு பேப்பர், அரையடி, ஓரடி ஸ்கேல்கள், நாற்பது பக்க நோட், எண்பது பக்க நோட் என ஸ்டேஷனரி அயிட்டங்களாக வாங்கி வந்து டிரங்க் பெட்டியில் அடுக்கினோம். ஒவ்வொன்றின் விலையிலும் சில பைசாக்கள் அதிகம் வைத்து அதை என் பள்ளி மாணவர்களிடம் விற்பேன். போகப் போக, எது அதிகம் விற்பனையாகிறது என்று பார்த்து, அதை நிறைய அளவில் வாங்கி வந்து டிரங்க் பெட்டிக்குள் அடுக்குவேன். தவிர, என் பிசினஸ் அறிவு கொஞ்சம் மேம்பட, விழுப்புரத்தில் சுவாரஸ்யமாகக் கண்களில் படும் பொருள்களை வாங்கி வந்து, சக மாணவர்களிடம் ஆசை காட்டி விற்க ஆரம்பித்தேன். கோகோகோலா பாட்டில் போன்ற வடிவத்தில் ஓரங்குல உயர குட்டிப் பேனா, இப்படித் திருப்பினால் முருகர், அப்படித் திருப்பினால் பிள்ளையார் வடிவங்கள் தோன்றும் டாலர், ஸ்பிரிங் வளையல் என அப்போதைக்கு எது டிரெண்டாகத் தெரிகிறதோ அதை வாங்கி வந்து, என் பள்ளி மாணவர்களிடம் கூடுதல் விலை வைத்து விற்று, லாபக் கணக்கு வழக்கு பார்ப்பேன்.

ஆக, ஒரு தொடர்கதை என்னை அந்தச் சிறு வயதில் பிசினஸ்மேனாக்கிவிட்டது!

ஆலம்விழுது தவிர, நான் விகடனில் ரசித்துப் படித்த மற்றொரு தொடர்கதை தேக்கடி ராஜா. தேக்கடிக்கு சுற்றுலா சென்ற ஒரு சிறுவனும் சிறுமியும் அங்கே காட்டில் சிக்கிக்கொண்டு படும் அவதிகளும் அனுபவங்களும்தான் கதை என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. ஆனால்,  ஒரு யானை பிரமாண்டமாக நிற்க, அதன் காலடியில் சிறுவனும் சிறுமியும் பீதியுடன் ஓடுகிற மாதிரியான படம் மட்டும் ஞாபகத்தில் உள்ளது. துரத்தும் யானையிடமிருந்து தப்பிக்க அதன் சாணத்தை எடுத்துத் தலையில், உடம்பில் பூசிக்கொண்டு படுத்துவிடுவான் சிறுவன் என்கிற ஒரு தகவல் மட்டும் அந்தக் கதையில் படித்தது நினைவில் உள்ளது.

கடையிலிருந்து ஆனந்த விகடன் வாங்கி வரச் செல்லுவேன். அப்போது, கடையின் முகப்பில் உள்ள கருநீல நிற விளம்பரப் பலகையில் ‘இந்த வாரம் ஆனந்த விகடன் வாசித்தீர்களா?’ என்கிற எழுத்துக்களோடு விகடன் தாத்தா சிரிக்கும் படம் இருக்கும். நான் வெகு காலம் விகடன் தாத்தாவை காந்தி தாத்தா என்றே நினைத்துக்கொண்டிருந்தேன்.

விகடனில் நான் பணியில் சேர்ந்து பத்தாண்டுகளுக்குப் பின்னர், சேர்மன் பாலசுப்ரமணியன் கொஞ்சம் கொஞ்சமாக விகடனிலிருந்து விலகத் தொடங்கியிருந்தார். விகடனில் பத்தாண்டுகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கு விருதும் சான்றிதழும் அளித்துக் கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் சேர்மன் பாலசுப்ரமணியன் அவர்களிடமிருந்து பத்தாண்டு விருதை அவர் கையால் வாங்கப் பெற்ற கடைசி செட் அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன்.

அந்தக் காலகட்டத்தில், விரைவில் சேர்மன் விகடன் குழுமத்தை விட்டு முற்றிலுமாக ஒதுங்கிவிட உத்தேசித்துள்ளார் என்பதை அறிந்த நிலையில், நான் அவருக்கு ஒரு நீண்ட கடிதம் கம்போஸ் செய்து, அவர் மேஜையில் வைத்துவிட்டு வந்தேன். அதன் சாராம்சம் வேறொன்றுமில்லை. மேலே இந்தப் பதிவில் சொன்ன அத்தனையும்தான்! சின்ன வயதிலிருந்தே எப்படி விகடனை நான் படித்து வருகிறேன், ரசித்து வருகிறேன் என்பதை விவரித்து, மேலே சொன்ன இத்தனைத் தகவல்களோடும், இன்னும் கூடுதலாக சில விஷயங்கள் சேர்த்தும் என் கடிதத்தில் எழுதியிருந்தேன். சென்னை வந்து செட்டிலான ஆண்டில், அதாவது 1984-ல் ஆனந்த விகடனில் பணியில் சேர விரும்பி விண்ணப்பம் அனுப்பியதும், அப்போது நான் தேர்வு செய்யப்படாமல் ஆம்ப்ரோ பிஸ்கட் கம்பெனி வேலையில் சேர்ந்ததும், அங்கே இரண்டு ஆண்டுகள் குப்பை கொட்டிவிட்டு, சாவி பத்திரிகையில் வாய்ப்பு கிடைக்க, அங்கே போய் சேர்ந்து 1995 வரை பணியாற்றியதும், சாவி பத்திரிகையை சார் ஒரு கோபத்தில் மூடியதும், மீண்டும் விகடனில் பணியில் சேர முயன்று விண்ணப்பம் அனுப்பியதும், இந்த முறை என் விண்ணப்பம் ஏற்கப்பட்டு பணியில் சேர்ந்ததும் என ‘விகடனும் நானும்’ என்கிற ஒரு முழுச் சரித்திரத்தையே அதில் சொல்லியிருந்தேன். மொத்தம் 10 தாள்களுக்கு மேல் பிரிண்ட் எடுத்ததாக ஞாபகம்.

அந்தக் கடிதத்தை ஒரு கவரில் போட்டு, மேலே ஒரு துண்டுச் சீட்டில் சிறு குறிப்பாக, “சார், வணக்கம். இது சற்று நீளமான கடிதம். தாங்கள் இதை உடனே படிக்க வேண்டும் என்பதில்லை. தவிர, உங்களின் பொன்னான நேரத்தை இந்தக் கடிதத்தின் மூலம் வீணடிக்கவும் எனக்கு விருப்பமில்லை. எனவே, இதை நீங்கள் படிக்கவே இல்லை என்றாலும், நான் வருத்தப்பட மாட்டேன். கடவுளுக்குப் படைக்கும் நைவேத்தியப் பொருளை அவர் எடுத்து உண்கிறாரா, இல்லையா என்பது பற்றி பக்தன் கவலைப்பட மாட்டான். கடவுளுக்குப் படைத்தாகிவிட்டது என்கிற மனத் திருப்தி மட்டுமே அவனுக்குப் போதுமானது. அந்த நிலையில்தான் நானும் இருக்கிறேன். ஏதோ, தங்களிடம் மனம் விட்டுச் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. எழுதிவிட்டேன். மற்றபடி வேறு ஒன்றுமில்லை” என்று எழுதி, கையெழுத்துப் போட்டு வைத்துவிட்டு வந்துவிட்டேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அட்டெண்டர் பெருமாள் என்னிடம் வந்து, “சார் உங்களை அழைத்து வரச் சொன்னார்” என்றார். ஓடினேன்.

உள்ளே அவர் அறைக்குள் நுழைந்தேன். நாற்காலியில் அமர்ந்திருந்த அவரின் கைகளில் என் கடிதம் படபடத்துக்கொண்டிருந்தது. நான் உள்ளே நுழைந்ததும், “ரவிபிரகாஷ்...!” என்று பாசமும் நேசமும் நெகிழ்ச்சியும் ஆனந்தமும் அழுகையுமாகக் கதறியபடி எழுந்து வந்து என்னை இறுக அணைத்துக்கொண்டார். “உங்களை மாதிரியானவங்களோட இந்த அன்பும் இந்த வாஞ்சையும்தான் ரவி எனக்குப் பெரிய சொத்து!” என்று அழுகையில் தழுதழுத்தார். 

சேர்மனின் இந்த முகம் எனக்குப் புதியது. அதுவரை அவரை ஒரு கண்டிப்பான ஆசிரியராக, கறாரான பத்திரிகையாளராக, கனிவான முதலாளியாக மட்டுமே பார்த்திருந்த நான், அவரை என் கடிதம் இத்தனை தூரம் நெகிழ்த்தி கண்கலங்கச் செய்துவிடும் என்று தெரியாததால், அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் சற்று நேரம் பேச்சு வராமல் விக்கித்து நின்றேன். பின்னர் தடாலென்று அவரின் கால்களில் விழுந்து “என்னை ஆசீர்வதியுங்கள் சார்!” என்றேன். நானுமே உணர்ச்சியின் பிடியில் இருந்தேன்.

அதுவே அவருடனான எனது நெருக்கமான கடைசி சந்திப்பு. அதன்பின் சில முறை அவரை திருமண விழா, பாராட்டு விழா போன்றவற்றில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று சந்தித்துப் பேசிவிட்டு வந்துள்ளேன்.

சில ஆண்டுகளுக்கு முன், அவர் கோயமுத்தூரில் உடல் நலமின்றி இருக்கிறார் என்று கேள்விப்பட்டு, அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “உடனே வந்து பார்க்க விரும்புகிறேன்” என்றேன். “வேண்டாம். நானே இன்னும் சில நாளில் சென்னை வந்துவிடுவேன். அப்போது வந்து சந்தியுங்கள்” என்றார்.

அவரின் மகள் திருமண வரவேற்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். கல்யாணக் கூட்டத்தில் கூட்டத்தோடு கூட்டமாகப் பார்த்துவிட்டு வந்தேன். பின்னர் தனியாக ஒருமுறை அவரின் வீட்டுக்குச் சென்று பார்த்து, ஒரு மணி நேரமாகிலும் பேசிவிட்டு வரவேண்டும் என்று எண்ணியிருந்தேன்.

அவர் எங்கே போய்விடப் போகிறார், நான் எங்கே போய்விடப் போகிறேன்... நாளை பார்த்துக்கொள்ளலாம், அடுத்த வாரம் போய்ப் பார்க்கலாம் என்று நாளைக் கடத்திக்கொண்டே இருந்துவிட்டேன்.

அதற்குள் அவரைக் காலம் கடத்திக்கொண்டு போய்விட்டது!

(இன்னும் சொல்வேன்) 

1 comments:

Thank you sir....very happy to read your articles...