உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, June 09, 2011

என்னைக் கவர்ந்த அழகிகள்!

ருடந்தோறும் ஏப்ரல், மே மாதங்களில் குடும்பத்தோடு ஒரு வார காலம் எங்காவது சுற்றுலா சென்று வருவதை, என் இரு குழந்தைகளும் பிறந்தது முதல் ஒரு கடமையாகவே அனுஷ்டித்து வருகிறேன். இடையில் பணக் கஷ்டம், மனக் கஷ்டம் காரணமாக ஒரு வருடம் போக முடியவில்லை; இன்னொரு முறை, குடும்பத்தில் மாற்றி மாற்றி யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் போன காரணத்தால் போக முடியவில்லை; கட‌ந்த ஆண்டு மனைவிக்கு அறுவைச் சிகிச்சை; இந்த ஆண்டு வீடு மாற்றல், மகளின் கல்லூரிப் படிப்பு இன்ன பிற காரணங்களால் சுற்றுலா தடைப்பட்டுவிட்டது. மற்றபடி, இந்தப் பதினாறு ஆண்டுகளில் பன்னிரண்டு ஆண்டுகள் குடும்பத்துடன் சுற்றுலா போயிருக்கிறேன்.

சுற்றுலா என்றால், ஆஸ்திரேலியா, ஸ்விஸ், வெனிஸ் என்று கற்பனைகளை ஓட்ட வேண்டாம்; சிம்லா, குலு மனாலி, கோவா என்றும் நீட்ட வேண்டாம். அந்த அளவுக்கு நமக்கு வசதி கிடையாது.

நான் போனதெல்லாம் ஐந்து முறை ஊட்டிக்கு; இரண்டு முறை கொடைக்கானலுக்கு; மூன்று முறை கேரளாவுக்கு; ஒரு முறை ஹைதராபாத்; ஒரு முறை பெங்களூர்.

சின்ன வயதில் சுற்றுலா செல்வதைப் போன்று எனக்கு மகிழ்ச்சி அளித்த விஷயம் வேறில்லை. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளியில் என்னை செஞ்சிக் கோட்டைக்கு அழைத்துச் சென்றார்கள்; எட்டாம் வகுப்புப் படிக்கும்போது, சாத்தனூர் அணைக்கட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். வேலைக்குப் போகத் தொடங்கியது‌ வரை, நான் போன மொத்த உல்லாசப் பயணங்களே இவ்வளவுதான்! சாவி பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்த பிறகு, சாவி சார்தான் என்னை எடிட்டோரியல் டிஸ்கஷன் என்னும் பெயரில் ஊட்டி, குன்னூர், வெலிங்டன், பெங்களூர் என அழைத்துச் சென்றார்.

எனவே, எனக்கு இருந்த சுற்றுலாப் பயண ஏக்கம் என் குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்திலும், வெளியே சென்று நாலு இடங்களைப் பார்த்து அறியும் அனுபவம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்கிற யோசனையிலும், இயற்கையை நேசிக்கும், பாதுகாக்கும் மனோபாவம் அவர்களுக்குள் வளர வேண்டும் என்னும் கருத்திலும், பலவித விமர்சனங்களையும் புறந்தள்ளி, குடும்பச் சுற்றுலாவை தீவிரமாகக் கடைப்பிடித்தேன்.

கேரளா சென்றிருந்த‌போது, ஒருமுறை சங்குமுகம் கடற்கரைக்கும் போயிருந்தோம். அங்கே உள்ள பிரமாண்டமான கன்னி சிலையின் அழகைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

சிலை என்றால் கல்லில் வடிக்கப்பட்ட சிலை இல்லை. கான்க்ரீட் சிலை. 26 அடி உயரம், 116 அடி நீளத்தில் ஒய்யாரமாகப் படுத்திருக்கும் நிர்வாணப் பெண் சிலையின் அழகை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

இதை வடிவமைத்தவர் கானாயி குஞ்ஞுராமன் என்கிற சிற்பி. இவர் இதை வடிவமைப்பதற்கு முன்பு ஒரு யட்சி சிலையை உருவாக்கினார். அது மலம்புழா அணைக்கட்டில் உள்ளது.

கானாயி குஞ்ஞுராமன் அபாரமான கலைஞர். சொந்த வாழ்க்கையில் நிறைய சோகங்களைச் சந்தித்தவர். இவரின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வருமாம். அம்மா ஒரு நாள் கோபித்துக்கொண்டு தன் பிறந்த வீடு சென்றுவிட்டார். அம்மாவின் பிரிவு தாங்காமல், ஒவ்வொருமுறையும் கானாயி தன் பாட்டி வீட்டுக்குப் போய் அம்மாவைப் பார்த்துவிட்டு வரும்போதும் அப்பாவிடம் சரமாரியாகப் பிரம்படி படுவார். அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கி வளர்ந்தவர் குஞ்ஞுராமன். கானாயி என்பது அவரது ஊரின் பெயர். சென்னை, ஆர்ட் அண்ட் கிராஃப்ட் ஸ்கூலில் படித்து, கேரள சுற்றுலாத் துறை அபிவிருத்திக் கழகத்தின் கலை ஆலோசகராகப் பணியாற்றியவர் இவர். திருவனந்தபுரம் நுண்கலைக் கல்லூரியில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு, இந்த யட்சி மற்றும் ஒய்யாரக் கன்னி சிலைகளை ஆபாசம் என்று சொல்லி அகற்றவேண்டும் என்று ஒரு கோஷ்டி கிளம்பியது. ஆனால், விவகாரம் அத்தோடு அமுங்கிப் போயிற்று.

எது ஆபாசம், எது ஆபாசம் இல்லை என்பது பார்ப்பவரின் கண்களைப் பொறுத்தது என்பார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எல்லாருடைய கண்களும் ஒரே மாதிரிதான். ஆனால், இடம், பொருள், சூழ்நிலையைப் பொறுத்தே ஒன்று அழகானதா, ஆபாசமானதா என்பது முடிவாகிறது. முன்பேகூட எழுதியிருக்கிறேன்... நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ளும் ஒரு பெண் தொடைகள் தெரிய ஸ்விம் சூட் அணிந்து வந்தால், நீச்சல் போட்டி நடக்கும் இடத்தில் அது ஆபாசம் இல்லை. அதுவே, அந்தப் பெண் தன் வீட்டுக்கு வந்த விருந்தினர்களுக்கு ஸ்விம் சூட் அணிந்து காபி உபசரித்தால் எப்படி இருக்கும்?

கோயில்களில் எத்தனையோ நிர்வாணச் சிலைகள் உள்ளன. அம்மன் சிலைகள் பருத்த அங்கங்களுடன்தான் காணப்படுகின்றன. அவற்றில் ஆபாசமா இருக்கிறது? நிச்சயமாக இல்லை.

அதேபோல்தான் இந்த ஒய்யாரக் கன்னி சிலையும், யட்சி சிலையும் என்பது என் கருத்து.

யட்சி சிலைக்கும், நான் விகடனில் வேலைக்குச் சேர்ந்ததற்கும், சுவாரஸ்யமான‌ ஒரு சின்ன‌ தொடர்பு இருக்கிறது.

'உனக்காக நான்' என்றொரு திரைப்படம். அதில், 'நோ நோ.. நோ நோ.. நோ நோ... காதல் கதை சொல்வேனோ, கட்டி சுகம் கொள்வேனோ' ‍என்று சிவாஜியும் லட்சுமியும் இந்த யட்சி சிலையைத்தான் சுற்றிச் சுற்றி வந்து டூயட் பாடுவார்கள். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தப் படத்தைப் பார்த்தபோது, பச்சக் என்று மனசில் ஒட்டிக்கொண்டது இந்தச் சிலைதான்.

1995 ஏப்ரலில், விகடனில் வேலைக்குச் சேரும்பொருட்டு, இங்கே வந்து, ஆசிரியரின் நேர்முக அழைப்புக்காகக் காத்திருந்தேன். அதற்கு முன்பாக திரு.வீயெஸ்வி, திரு.ராவ் ஆகியோர் என்னைப் பற்றி விசாரித்து அறிந்தனர். இதற்கிடையில், அங்கே ஒரு பக்கம் அந்த வார இதழுக்கான லே-அவுட் நடந்துகொண்டு இருந்தது. அது ஒரு சினிமா கட்டுரை என்று ஞாபகம். ராவ், வீயெஸ்வி ஆகியோர் அதை மேற்பார்வை இட்டுக்கொண்டு இருக்க, நான் அங்கே இருந்த மேட்டரை சும்மா படித்துப் பார்த்தேன்.

அதில், 'சிவாஜியும் லட்சுமியும் ஒரு யட்சி சிலையைச் சுற்றிச் சுற்றி வந்து டூயட் பாடுவார்களே...' என்று குறிப்பிட்டு, வேறு ஏதோ ஒரு திரைப்படத்தின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார் சினிமா கட்டுரையாளர். நான் உடனே திரு.ராவ், திரு.வீயெஸ்வி இருவரிடமும், "அது அந்தப் படம் இல்லை. 'உனக்காக நான்' படத்தில்தான் அந்தப் பாடல் காட்சி வரும்" என்றேன். "நிச்சயமாகத் தெரியுமா?" என்றார்கள். "ஐயோ! சத்தியமாகத் தெரியும்!" என்றேன். நான் சொல்வது சரியா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள அப்போது இன்டர்நெட் வசதிகள் இல்லை. என்றாலும், நான் உறுதியாகச் சொன்னதை ஏற்றுத் திருத்தம் செய்யப்பட்டது.

சிறிது நேரத்தில், ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் என்னை இன்டர்வியூவுக்கு அழைத்தார். உடன் வந்த திரு.ராவ், திரு.வீயெஸ்வி இருவரும் அப்போது இடையில் மேற்படி சம்பவத்தைக் குறிப்பிட, "அப்படியா! வெரிகுட்!" என்று புன்னகைத்தார் ஆசிரியர். "அது என்ன பாட்டு?" என்றார். "நோ.. நோ..." என்று பாடத் தொடங்கினேன். ஆசிரியர் உடனே குறுக்கிட்டு, "ஏன், சொல்ல மாட்டீங்களா?" என்று புன்னகைத்தார். நான் தடுமாறி, "இல்ல சார், அதுதான் பாட்டு!" என்று மீண்டும் வரிகளைப் பாடினேன். "தெரியும். சும்மா தமாஷ் பண்ணினேன்" என்று சிரித்தார்.

வேலை கன்ஃபார்ம் ஆகியது!

* கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி, நீங்களும் அந்தப் பாடல் காட்சியைக் கண்டு களியுங்களேன்!

http://en.600024.com/video/I5LN_P-tzX8/

(நன்றி! - இன்று எனக்கு 54 வயது பூர்த்தியாகி, 55 தொடங்குகிறது. நேரிலும், வாழ்த்துக் கடிதம், ஈ‍மெயில் மற்றும் தொலைபேசி மூலமும், ஃபேஸ்புக், டிவிட்டர் மூலமும் எனக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னவர்களின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டிவிட்டது. இதுவரை என் எந்தவொரு பிறந்த நாளுக்கும் அதிகபட்சம் பத்துக்கும் அதிகமான வாழ்த்துக்கள் கிடைத்ததில்லை. இதனால், இந்த முறை வாழ்த்து வெள்ளத்தைக் கண்டு திக்குமுக்காடிப் போய்விட்டேன். வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.)
.

19 comments:

தங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த நாள், மற்றும் வரும் நாட்களும் இனியதாய் அமைந்திடட்டும்....
 
சரியான நேரத்தில் என்டர் பண்ணி இன்டர் வியூ ஹாலை என்டர்டெயின்மென்ட் ஹாலாக்கிவிட்டதே யட்சி? சுவாரஸ்யம்!
 
சரியான நேரத்தில் என்டர் பண்ணி இன்டர் வியூ ஹாலை என்டர்டெயின்மென்ட் ஹாலாக்கிவிட்டதே யட்சி? சுவாரஸ்யம்!
 
தொடங்கும் ஐம்பத்தைந்து
அன்பும் அமைதியும் நிறைந்து
ஆனந்த ஓவியம் வரைந்து
அள்ளித் தரட்டும் விரைந்து!
 
முதலில் வலைப்பூவிலும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் ... எல்லா வளமும் நலமும் கூட பிரார்த்தனைகள் ..
குடும்ப சுற்றுலா விஷயம் சரியாக சொன்னீர்கள் ... அதுவும் மக்கள் கைக்கு அடங்கும் வரை நடக்கிறது ..
என்ன சொன்னாலும் மலம்புழா சிலைகள் கலை ரசிப்பு எனும் உணர்வு தான்றி சற்று தடுமாற வைப்பவை தான் ( பருவத்தில் )... பக்குவத்தில் வேண்டுமானால் ரசிப்புணர்வு மாறலாம் .
நோ நோ சொல்லியே எஸ் வாங்கிவிட்டீர்கள் ...
55 பார்த்தவுடன் சுஜாதா அவர்கள் உங்கள் MD யுடன் பேசிய நகைச்சுவை உரையாடல் எ. எ. எ. புத்தகத்தின் பின்னட்டையில் படித்தது ஞாபகம் வந்தது . அந்த கேள்வி உங்களுக்கும் பொருந்தும்
 
இன்று போல் என்றும் வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சார்!
 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
 
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா.
 
//இன்று எனக்கு 54 வயது பூர்த்தியாகி, 55 தொடங்குகிறது. //

நல்வாழ்த்துகள்
 
பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று இன்னொரு நண்பரின் பிறந்த நாள் பார்ட்டி ஹோட்டல் விஜயில் பார் போற்ற நடக்க இருக்கிறது. உங்கள் பிறந்த நாளையும் சேர்த்துக் ’கலக்கி’ விடுகிறோம்
 
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார். இனி வரும் எல்லா நாட்களும் இனிய நாளாய் அமைந்திட ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
 
பிறந்த நாள் வாழ்த்துக்கள்,ஸார்!
எனக்கு 15ம் தேதி வருகிறது அதே 55!
 
அழகிகள் அருமை..அதிலும் அந்த சிற்பத்தின் முகம் சிந்திய கவர்ச்சியே தனி!
 
உங்கள் எழுத்தின் ரசிகன்..

என்னின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
 
சார், முதலில் உங்களுக்கு என் (தாமதமான) பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். (அடுத்த ஆண்டு பிறந்த நாளுக்கு முதல் வாழ்த்து என்னிடமிருந்துதான் இருக்கும்!) இனி, பதிவு பற்றி... சுற்றுலா, இளமை அனுபவம், கலை ரசனை, சிற்பக் கலைஞரைப் பற்றிய குறிப்பு, ஒரு செய்திக் குறிப்பு, சுவாரஸ்ய அனுபவம் என ஒரு பதிவில் எப்படி சார் இத்தனை விஷயங்களைக் கோர்க்கிறீர்கள்! அசத்திட்டீங்க! பாராட்ட வார்த்தைகள் இல்லை.
 
சார், வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன்! என்னதான் நீங்கள் அழகு, ஆபாசம் என்று சப்பைக்கட்டு கட்டினாலும், புகைப்படத்தில் பார்க்கும்போது கொஞ்சம் நெளியும்படியாகத்தான் இருக்கிறது. ஒருவேளை, நேரில் அத்தனைப் பிரமாண்டமாகப் பார்க்கையில் சங்கடம் இருந்திருக்காதோ என்னவோ! எது எப்படியோ, உங்கள் வேலையை உறுதி செய்த அந்தக் கள்ளி, மன்னிக்கவும், கன்னியை நீங்க விட்டுக்கொடுக்கவா போறீங்க? :)
 
வாழ்த்துக்கள் சார்..
பெருமைக்குரிய என் வணக்கத்திற்குரிய திரு. பாலசுப்பிரமணியம் சார் அவர்களின் பெருந்தன்மை ஈகை குணம் யாருக்கு வரும்.. அது போல் பல எழுத்தாளர்கள் அவருடனான அனுபவம்( ராமகிருஷ்ணன் எழுத வந்ததே அவரின் அடவைஸ் மற்றும் அவரது ஆதரவும்தானே..தாமரை, கந்தர்வன் ஆகியோருக்கு எழுதிய கடிதங்கள்.. இவை எனக்கு தெரிந்த சிறிய துளி..)சினிமா விமர்சனம் எழுதாமல் ஒரு வருடம் விட்டது(தங்கர்பச்சான் மேட்டர்),பாலசந்தர் சொல்லிய பொய்யால் அவர் படத்திற்கு விமர்சனம் எழுதவா வேண்டாமா என மக்களிடமே கேட்டது.. உண்மைக்காக அவர் போட்ட வழக்குகள்(பாண்டியம்மாள், மரம் வெட்டுதல் பற்றி).. எம் ஜி ஆரையே எதிர்த்து பத்திரிகை தர்மத்தை வென்றது.. அதன் சாட்சியாய் பெற்ற அடையாள பணத்தை (ஒரு ரூபாய் என நினைக்கிறேன்..)செக்கை நினைவுச்சின்னமாய் வைத்திருப்பது..சேவற்கொடியோன் என கதை எழுதியது.. -- இப்படி அந்த மாமனிதன் பற்றிய செய்திகளை தொகுத்து புத்தகமாக போடலாமே..அவரின் பத்திரிகை வாழ்கையை தொகுக்கும்போது அது பத்திரிகையாளன் கட்டாயமாக படிக்க வேண்டிய கையேடாக அமையும் வாழ்க பாலசுப்பிரமணியம் அய்யா அவர்கள்..
 
//வருடந்தோறும் ஏப்ரல், மே மாதங்களில் குடும்பத்தோடு ஒரு வார காலம் எங்காவது சுற்றுலா சென்று வருவதை, என் இரு குழந்தைகளும் பிறந்தது முதல் ஒரு கடமையாகவே அனுஷ்டித்து வருகிறேன். இடையில் பணக் கஷ்டம், மனக் கஷ்டம் காரணமாக ஒரு வருடம் போக முடியவில்லை; //


தங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

ஆர்.வி.எஸ். அவர்களின் இடுகையில் இருந்து இங்கே வந்தேன்.

அற்புதம். எனக்கு பணக்கஷ்டம் இல்லை ஆனால் மனகஷ்டத்தால் ஏனோ என் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு வேண்டிய சிறிய சிறிய இதைபோல் ட்ரிப் கூட கொடுக்க முடிவதில்லை.

அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்.
 
சார் தமிழ் வானொலி நேயர்களால் பெரிதும் நேசிக்கபடும் சரோஜ் நாராயண்சுவாமி உடன் தங்கள் அனுபவம் பற்றி ஒரு ப்ளாக் எழுதவும்.

கண்ணன் ரங்கநாதன்