உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, July 26, 2011

சக்தி கொடுக்கும் சக்தி விகடன்!

சென்னை, தி.ந‌கரில் உள்ள மீனாட்சி கல்யாண மண்டபத்தில், நேற்றைய சனி, ஞாயிறு இரண்டு நாளும், விகடன் மாணவர் பயிற்சித் திட்ட முகாம் நடந்தது. அதில் கலந்துகொண்டு, 'சக்தி விகடனுக்கு நீங்க எப்படிப் பயன்பட முடியும்?' என்கிற தலைப்பில், பத்திரிகையாளர் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மாணவர்களிடையே நான் ஆற்றிய உரையை இங்கே தந்திருக்கிறேன். இது உங்களுக்கு எள்ளளவாவது பயன்படுமா, சுவாரஸ்யமாக இருக்குமா என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. அதாவது, பயன்படாது, சுவாரஸ்யப்படாது என்று நிச்சயம் தெரியும். இருந்தும், துணிச்சலாகத் தந்திருக்கிறேன் என்றால், அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று... தொடர்ந்து நான் பிளாக் எழுதுவதில்லை என்கிற வசையை ஒழிப்பது! மற்றொன்று... இந்த அற்புதமான உரையை விகடன் பத்திரிகைகள் கண்டிப்பாகப் பிரசுரிக்கப் போவது இல்லை என்கிற தைரியம்!
*****

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து, களம் இறங்கியிருக்கும் துடிப்பு மிக்க இளம் வீரர்களாகிய உங்கள் அனைவரையும் வருக, வருக என மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

சரி, அது என்ன பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்?

இப்ப உங்க காலேஜ்ல இன்டெர்ன்ஷிப் பண்ணணும்னு உங்களை அனுப்பறாங்க இல்லியா? அதாவது, படிக்கிறப்பவே வேலையும் பழகணும்கிறதுக்கான பயிற்சிக் களம் அது. இந்த இன்டெர்ன்ஷிப் லொட்டு லொசுக்கெல்லாம் இப்ப சமீப ஆண்டுகள்ல வந்ததுதான். ஆனா, 55 ஆண்டுகளுக்கு முன்பே, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் ஓய்வு நேரத்தை நல்லபடியாகப் பயன்படுத்தி, எழுத்துத் துறையிலும் பத்திரிகைத் துறையிலும் பயிற்சி பெறணும்னு ஆசைப்பட்டவர் அமரர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள். அவர் 1956-ல் தொடங்கி வெச்சதுதான் இந்த மாணவர் திட்டம். மாணவர்களுடைய எழுத்தாற்றல் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பயன்படணும்னு கனவு கண்டார் திரு. வாசன்.

அவருக்குப் பிறகு, அவருடைய மகன் மரியாதைக்குரிய திரு.எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் இந்தத் திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தி, பிரமாண்டமா செய்தார்.

'ஜர்னலிசத்தில் இன்டெர்ன்ஷிப்னு இந்த மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தைச் சொல்லலாம். இதைப் பல ஆண்டுக் காலமாக வெற்றிகரமாக நடத்தி வருகிற ஒரே பத்திரிகை ஆனந்த விகடன்தான். இந்தத் திட்டத்தில் சேர்ந்து, அப்புறம் விகடனிலேயே பணி புரிந்தவர்கள், இன்னிக்கும் பணியில் இருப்பவர்கள் நிறையப் பேர். குறிப்பா, இன்றைக்கு விகடன் குழுமப் பத்திரிகைகளில் முக்கியப் பொறுப்புகளை வகிப்பவர்கள், விகடனின் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் உங்களைப் போலச் சேர்ந்து, பயின்று வந்தவங்கதான்!

இதையெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, உங்களுக்குக் கிடைச்சிருக்கும் இந்த வாய்ப்பு எத்தனை அருமையானது, எத்தனை மதிப்பானதுன்னு உங்களுக்குப் புரியணும்கிறதுக்காகத்தான்.

ஆரம்பக் காலத்தில் மாணவர் திட்டத்தில் சேர்ந்து பயனடைஞ்சவங்களைவிட இப்ப சேர்ந்திருக்கிற உங்களுக்கு இன்னும் அதிகமான வாய்ப்பு இருக்கு. அப்பெல்லாம் ஆனந்த விகடன்னு ஒரே ஒரு பத்திரிகை மட்டும்தான். இப்ப ரசனைக்கு ஏத்தபடி விதம்விதமான பத்திரிகைகளை வெளியிட்டு வருது விகடன் குழுமம்.

குழந்தைகளுக்குத் தக்கவாறு எழுதுற திறமை சில பேர் கிட்ட இருக்கும்; அவர்களுக்கு சுட்டி விகடன்; ஷேர் மார்க்கெட் போன்ற விஷயங்களில் சிலர் கில்லாடியா இருப்பாங்க; அவங்க பங்கு பெற நாணயம் விகடன்; கார், பைக் போன்ற விஷயங்கள்ல சிலர் ஆர்வமா இருக்கலாம். அவங்க மோட்டார் விகடன்ல எழுதலாம். இப்படி உங்க திறமைக்கும் ரசனைக்கும் ஏற்றவாறு பங்கு பெற எட்டு விதமான பத்திரிகைகள் நம்ம கிட்டே இருக்கு. அது மட்டுமல்ல, இதோ, சீக்கிரமே வரப்போகுது ‘டாக்டர் விகடன்'.

சரி, இந்தப் பத்திரிகைகள்ல எழுதணும்னா, உங்களுக்கு என்ன தேவை? சக்தி. எழுதுற சக்தி. நாம் எண்ணுவதைக் கட்டுரையாக்குகிற சக்தி.

அந்தச் சக்தியை ‘சக்தி விகடன்' உங்களுக்குத் தரும்.

சக்தி விகடனின் பொறுப்பாசிரியர் என்கிற முறையிலே, இங்கே ஒரு பெருமையான, மகிழ்ச்சியான விஷயத்தை உங்களுக்குச் சொல்லிக்க ஆசைப்படறேன்.

கடந்த ஆகஸ்ட் மாசத்திலிருந்து இந்த ஏப்ரல் மாசம் வரைக்கும், அதாவது இந்த ஒன்பது மாச காலத்துல, விகடன் குழுமத்தின் பத்திரிகைகள்ல, மாணவப் பத்திரிகையாளர்கள் எழுதின கட்டுரைகள் எந்தெந்தப் பத்திரிகைல எத்தனைப் பக்கம் வந்திருக்குன்னு ஒரு கணக்கு அனுப்பியிருந்தார், இந்த ஸ்டூடண்ட்ஸ் ஸ்கீமின் பொறுப்பாளராக இருக்கும் நமது ரகோத்தமன்.

சக்தி விகடன்ல மொத்தம் 345 பக்கங்களுக்கு, மாணவப் பத்திரிகையாளர் எழுதின கட்டுரைகள் வந்திருக்கு. எட்டுப் பத்திரிகைகள்ல, மாணவப் பத்திரிகையாளர்களின் கட்டுரைகளை அதிகபட்சம் வெளியிட்ட பத்திரிகை சக்தி விகடன்தான். இதற்கு அடுத்தபடியா, இரண்டாவது இடத்துல இருக்கிறது... பத்திரிகை பேரைச் சொல்ல விரும்பலே. சக்தி விகடனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் பத்திரிகை வெளியிட்ட மாணவர் படைப்புகளின் பக்க எண்ணிக்கை 139. அதாவது, சக்தி விகடன் வெளியிட்டதுல பாதிக்கும் குறைவு.

இது, இந்த ஒன்பது மாசங்களுக்கு மட்டும்தான்னு இல்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக, மாணவர் படைப்புகளை வெளியிடுவதில் முன்னணியில் நிற்பது சக்தி விகடன்தான்.

இதை ஏதோ மத்த குழுமப் பத்திரிகைகளைக் குறை சொல்றதா நினைக்கக்கூடாது. ஏன்னா, ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு ரகம். அவங்க வெளியிடுகிற விஷயங்கள், அவங்களுக்கு விஷயங்கள் கிடைக்கக்கூடிய சோர்ஸுகள்னு எல்லாமே வித்தியாசமா இருக்கு. அதனால, ஒரு பத்திரிகை போல அதே அளவுல மத்த பத்திரிகையும் மாணவர் கட்டுரைகளை வெளியிடும்னு சொல்லமுடியாது. அது முடியவும் முடியாது. அதனதன் தன்மைக்கேற்பத்தான் உபயோகப்படுத்திக்க முடியும்.

ஆனா, நான் இங்கே என்ன சொல்ல வரேன்னா, மத்த பத்திரிகைகளைவிட சக்தி விகடன்ல உங்களுக்கான கதவுகள் அகலமா திறந்துவைக்கப்பட்டிருக்கு; இப்பத்தான் பத்திரிகைக்குப் புதுசா எழுத வந்திருக்கீங்க. உங்களுக்கான அடிப்படைப் பயிற்சியை சக்திவிகடன் உங்களுக்குக் கொடுக்கும்.

விகடன் குழுமம்கிறது ஒரு நர்சரி மாதிரி. இங்கே நாற்றுகளாக வளர்ந்த பத்திரிகையாளர்கள் வெவ்வேறு துறைகள்ல ஜொலிச்சிட்டிருக்காங்க; வெவ்வேறு பத்திரிகைகள்ல பணியாற்றிக்கிட்டு இருக்காங்க. அதனால விகடனை பத்திரிகையாளர்களின் நர்சரின்னு சொல்வாங்க.

ஆனா, விகடனுக்குள்ளேயே எட்டு பத்திரிகைகள் இருக்கே! இந்த எட்டுப் பத்திரிகைகள்லயும் வெற்றிகரமா எழுதணும்னா, அதுக்கான நர்சரியா செயல்படுது சக்தி விகடன். அதாவது, நர்சரியின் நர்சரி!

மத்த பத்திரிகைகள்ல எழுதுறதைவிட சக்தி விகடன்ல எழுதுறது உங்களுக்குச் சுலபம். கொஞ்சம்போல ஆன்மிக விஷயங்கள் தெரிஞ்சிருந்தாலும் போதும், அதை வெச்சு அழகான அட்டகாசமான ஆன்மிகக் கட்டுரைகளை நீங்க சக்தி விகடன்ல எழுதிடலாம்.

எல்லா ஊர்லயும் ஒரு கோயில் இருக்கும்; கோயில்னு இருந்தா, அதுக்கொரு தல புராணம், வழிபாட்டு முறை இருக்கும். அந்த அர்ச்சகரை, குருக்களை, பூசாரியைக் கேட்டால் சொல்வார். இன்னும் கொஞ்சம் பழைமையான, 500, 1000 ஆண்டுகளுக்கு முன்னால கட்டப்பட்ட கோயில்னா, பாடல் பெற்ற ஸ்தலம்னா அதன் சாந்நித்தியம் அதிகமா இருக்கும். அதைப் பற்றிய தகவல்கள் அதிகம் கிடைக்கும். அங்கே விழாக்கள், விசேஷங்கள் எல்லாம் அமர்க்களப்படும்.

இதைப் பத்தியெல்லாம் சம்பந்தப்பட்டவங்களைப் போய் விசாரிச்சு எழுதலாம். உங்க ஊர் பெரியவங்களைக் கேட்டால், பழைய ஆன்மிக, புராண விஷயங்கள் பத்திக் கதை கதையா சொல்வாங்க. ஆன்மிகம் என்பது ஒரு கடல். இதுல, தோண்டத் தோண்ட பொக்கிஷங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கும். நான் இங்கே பொக்கிஷம்னு சொல்றது ஆன்மிகத் தகவல்களைங்க. நீங்க பாட்டுக்கு வேற ஏதாவது பொக்கிஷத்தை நினைச்சுக்காதீங்க. அந்த பொக்கிஷங்களைப் பத்தியும் நீங்க தாராளமா எழுதலாம். அதுக்கு ஜூனியர் விகடன் இருக்கவே இருக்கு.

நிறைய எழுதுங்க. எல்லா பத்திரிகைகள்லயும் எழுதுங்க. உங்க டேஸ்ட் என்னவோ, அதுக்கு ஏத்த மாதிரி உள்ள பத்திரிகையை செலக்ட் பண்ணிக்கிட்டு, அதுல எழுதுங்க. இதுக்கெல்லாம் ஒரு பயிற்சிக் களமா சக்தி விகடன்ல நிறைய எழுதுங்க. எழுத எழுதத்தான் உங்களுக்கான ஸ்டைல் பிடிபடும்.

ஆன்மிகப் பத்திரிகைல இருக்கேங்கிறதால, ஆன்மிகம் சம்பந்தமாவே ஒரு உதாரணம் சொல்றேன். பெரிய பெரிய கோயில்கள்ல பார்த்தீங்கன்னா, பிரமாண்டமான கதவுகள் இருக்கும். ஒரு பெரிய விசேஷம்னா, விழாக்கள், உற்சவங்கள்னா அந்தப் பெரிய கதவுகள் திறந்திருக்கும். நிறைய ஜனங்கள் கும்பல் கும்பலா அதன் வழியா போறதும் வர்றதுமா இருப்பாங்க. கொஞ்சம் மிரட்சியா இருக்கும். ஆனா, அந்தப் பெரிய கதவிலேயே சின்னதா திறந்து மூடுற மாதிரி ஒரு குட்டிக் கதவு இருக்கும். பார்த்திருக்கீங்களா? அதைத் திட்டிவாசல்னு சொல்லு வாங்க. அது எப்பவுமே திறந்திருக்கும். அதன் உள்ளே நுழையறது சுலபம். மிரட்சியாவோ, பயமாவோ இருக்காது. யாரும் உள்ளே நுழைஞ்சு, சர்வசாதாரணமா கோயில் உள்ளே போய்ப் பார்க்கலாம்.

அந்த மாதிரி, விகடன் குழுமம்கிறது பிரமாண்டக் கதவுகள்னா, சக்தி விகடன்கிறது திட்டிவாசல் மாதிரி. ஈஸியா உள்ளே வாங்க. மிரட்சி இல்லாம எழுதுங்க. உங்க எழுத்துத் திறமையை வளர்த்துக்கோங்க.

எடுத்த எடுப்பில் பைக் ஓட்டக் கத்துக்கிட்டு ஓட்டலாம்னாலும், அது கொஞ்சம் கஷ்டம். முதல்ல சைக்கிள் ஓட்டப் பழகிட்டு, அப்புறம் பைக் ஓட்டினா சுலபமா இருக்கும், இல்லியா? அடிப்படை பேலன்ஸ் பழகிட்டா, அப்புறம் எத்தனை பெரிய ஹார்ஸ் பவருள்ள பைக்கையும் சுலபமா ஓட்டக் கத்துக்கலாம். அது போல, சக்தி விகடன்ல எழுதுறது சைக்கிள் ஓட்டக் கத்துக்கற மாதிரி. ஏன்... நடைவண்டி பழகுற மாதிரின்னு கூடச் சொல்லலாம்.

உலகத்தையே ஜெயிக்கப் புறப்படறதா இருந்தாலும், முதல் அடி எடுத்து வெச்சாதானே முடியும்? அந்த முதல் அடியை சக்தி விகடனுக்குள்ளே எடுத்து வைங்க.

கடவுள் உங்கள் கையைப் பிடிச்சு அழைச்சுக்கிட்டுப் போவார். கவலையே படாதீங்க.

அத்தனை பேரும் எழுத்துத் துறையில் ஜொலிக்க வாழ்த்துக்கள்!

*****

மேலே தந்திருப்பது, சனிக்கிழமை நான் ஆற்றிய உரை. மறுநாள், ஞாயிற்றுக் கிழமையன்று, எழுத்தில் எப்படி எப்படியெல்லாம் குழப்பங்கள் நேரிடக்கூடும், அவற்றை எப்படிப் பிழையில்லாமல் எழுதுவது என்பது பற்றி மாணவர்களுக்கு விளக்கினேன். அதை விரைவில் பதியவிருக்கிறேன். காரணம், அது ஓரளவுக்கு உங்களுக்குப் பயன்படும், சுவாரஸ்யமாக இருக்கும் என்கிற‌ நம்பிக்கைதான்!

8 comments:

வாழ்த்துக்கள்..
 
சூப்பர் ஸார்!
 
பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்னா என்ன, வாசன் சார் அதை எப்படி, எப்போ, எதுக்காக ஆரம்பிச்சார், மாணவர்களுக்கு இதனால என்ன பயன் அப்படின்னெல்லாம் புரிய வெச்சுது இந்தக் கட்டுரை. இந்தப் பயிற்சித் திட்டத்துல சேர்ந்து பயின்று வந்தவங்கதான் இன்னிக்கு விகடன் உயர் பொறுப்புல இருக்காங்கன்றதும் வாசகர்களாகிய எங்களுக்குப் புது நியூஸாச்சே! எதையாச்சும் தொடர்ந்து எழுதிக்கிட்டே இருங்ணா!
 
ஆனந்த விகடனைத் தலைமுறை தலைமுறையாகப் படிச்சிட்டு வர குடும்பம் என்னுது. அந்தக் காலத்தில் என் அப்பாவும் வாசன் சார் ஏற்படுத்திய மாணவர் திட்டத்துக்கு அப்ளிகேஷன் போட்டதா சொல்லியிருக்கிறார். ஒரு பதிவு உபயோகமானதா இல்லையான்னு பார்க்காதீங்க. ஒருத்தருக்குப் பயனில்லாதது வேறு ஒருத்தருக்குப் பயனுள்ளதா இருக்கும். தொடர்ந்து எழுதுங்க. வாரம் ஒரு பதிவாவது எழுதுங்க.
 
மாணவனாக நான் இப்போது இல்லையே என்ற ஆதங்கம் ஏற்படுகிறது.
 
மாணவர் பத்திரிக்கையாளர் திட்டம் அருமையானது ...முதலெல்லாம் மாணவ நிருபரது படைப்புகள் பேனாவும் பட்டம் பெறும் உடை அடையாளத்தோடு வரும்... இப்பொழுது அப்படி எதுவும் கண்ணில் படுவதில்லை. எழுத்து துறையில் ஆர்வம் உள்ளோர்க்கு சுதந்திரமான தளம்.வாழ்த்துகள்

நீங்கள் நிகழ்த்தியது உற்சாகமான சக்தி கொடுக்கும் உரை..
 
* கவிதை வீதி சௌந்தருக்கும், ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்திக்கும் நன்றி!

* நன்றி கிருபாநந்தினி! நலம்தானே? ஏன் இப்போதெல்லாம் நீங்கள் பதிவு எழுதுவதில்லை?

* வாரா வாரம் பதிவு எழுதச் சொல்கிறீர்கள். என் பதிவு வாரா வாரம் என்று எந்த வாரமும் இருக்கக் கூடாது என்கிறீர்கள். அப்படித்தானே திரு.கணேஷ்ராஜா? :)

* பின்னூட்டத்துக்கு நன்றி திரு.லதானந்த்! நீங்களும் இப்போதெல்லாம் பதிவு எழுதுவதில்லை. உங்களைப் போன்ற நல்ல பதிவர்களெல்லாம் எழுதுவதை விட்டால் எப்படி சார்?

* நன்றி திரு.பத்மநாபன்!
 
நமது சக்தியே விகடன் தானே?! எனது தாய்வீடு விகடன் என்பதில் என்றும் பெருமைதான். பேச்சினை நேரில் கேட்கமுடியாத வருத்தம் பதிவைப்படித்ததில் தீர்ந்தது. வாழ்த்துகள் ரவிப்ரகாஷ்!