உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, August 19, 2010

சுஜாதா கேள்வி; சாவி கோபம்!

பொதுவாக சாவி சாரை மிகுந்த கோபக்காரர் என்று பலர் வர்ணித்துக் கேட்டிருக்கிறேன். நானே நேரடியாகவும் அவர் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன், நான் ஆனந்த விகடனில் சேர்ந்த புதிதில், ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மன வருத்தமும் கோபமும் கொண்டு, அன்றைய ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியன் அவர்களின் அறைக்குச் சென்று, ஆனந்த விகடன் இம்ப்ரின்ட்டிலிருந்து என் பெயரை நீக்கிவிடும்படி முறையிட்டேன். அவருக்கு அது பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது. இரண்டு மணி நேரத்துக்கும் மேல் என்னோடு பொறுமையாகப் பேசி, என் வருத்தத்தையும் கோபத்தையும் போக்கி, சமாதானப்படுத்தி அனுப்பினார் ஆசிரியர். அப்போது, “ரவி! சாவி சார் கிட்டே நீங்க பல வருஷம் வொர்க் பண்ணியிருக்கிறதாலே, அவரிடம் உள்ள பல நல்ல குணங்கள், திறமைகள் உங்க கிட்டேயும் இருக்கிறதைப் பார்க்கிறேன். சந்தோஷம். ஆனா, சாவி சார் கிட்டே இருக்கிற கோபமும் உங்க கிட்டே தொத்திக்கிட்டு இருக்கு. அது மட்டும் வேண்டாம். முன்னேற்றத்துக்கு கோபம் ஒரு முட்டுக்கட்டை!” என்றார்.

எனக்கென்னவோ, சாவி சாரின் கோபமும் பிடித்திருந்தது. சிங்கத்துக்கு அதன் கர்ஜனைதானே அழகு! இரண்டு மூன்று முறை சாவி சாரிடம் நானும் பதிலுக்குக் கோபித்துக்கொண்டு விலகிப் போனாலும், மீண்டும் மீண்டும் அவரிடமே போய்ச் சேர்ந்ததற்கு, அவரது கோபத்தை நான் ரசித்ததும் ஒரு காரணம். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும் என்பார்கள். அதற்கு சாவி சார் நல்ல உதாரணம்.

சரி, முந்தின பதிவின் தொடர்ச்சிக்கு வருகிறேன்.

பரிசுக்குரிய சிறுகதைகளை முடிவு செய்து, பத்திரிகையில் வெளியிட அன்றைக்குத்தான் கடைசி நாள். மதியம் 2 மணிக்குத் தொடங்கிய நடுவர் குழு கலந்துரையாடல் மாலை 5 மணி வரை தொடர்ந்தது. சட்டுப் புட்டென்று ஒரு தீர்மானத்துக்கு வந்து, பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுக்க விரும்பினார் ஆசிரியர் சாவி.

அப்போது சுஜாதா கேட்டார்... “சார்! இந்தப் பதினைஞ்சு கதைகளையும் நான் படிச்சுட்டேன். இதிலிருந்துதான் நான் பரிசுக் கதைகளைத் தேர்வு செய்யணுமா?”

“ஆமாம்! ஏன்?” - சாவி சார் புரியாமல் கேட்டார்.

“இல்லை. நான் அந்த 65 கதைகளையும் படிக்க விரும்பறேன்!” என்றார் சுஜாதா.

“ரொம்பச் சந்தோஷம். தாராளமா படிங்க! பிரசுரமான அத்தனைக் கதைகளின் கட்டிங்குகளும் இருக்கு. கொடுக்கச் சொல்றேன். நாளைக்கு அல்லது மறுநாளைக்குள்ள உங்க வீட்டுக்குக் கொடுத்தனுப்பறேன்...”

“நல்லது! எனக்கு ஒரு வாரம் டயம் கொடுங்க. அத்தனைக் கதைகளையும் படிச்சுட்டு, அப்புறம் என் தீர்ப்பைச் சொல்றேன்” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் சுஜாதா.

“சுஜாதா! என்ன சொல்றீங்க..! இன்னிக்கு இஷ்யூ முடிக்கணும். இதுல நாங்க ரிசல்ட்டை வெளியிடணும். அடுத்த வாரத்துக்கெல்லாம் ஒத்திப் போட முடியாது!”

“ஏன்... போடலாமே? பரிசீலனை நடந்துகொண்டிருக்கிறது. முடிவு அடுத்த இதழில்னு போட்டுடுங்களேன்!” என்றார் சுஜாதா.

“இப்ப நீங்க சொல்ற இதே வாக்கியத்தை நாங்க போன இதழ்லேயே போட்டாச்சு. அதனால, தள்ளிப் போட முடியாது. அதிருக்கட்டும்... இப்பவே உங்க தீர்ப்பைச் சொல்றதுல உங்களுக்கென்ன கஷ்டம்?” - சாவியின் குரலில் லேசாக சலிப்பும் எரிச்சலும் கலந்திருந்ததை நான் கவனித்தேன்.

“அத்தனைக் கதைகளையும் படிச்சாதான் எது பெஸ்ட்டுனு என்னால தீர்மானிக்க முடியும்!” என்றார் சுஜாதா.

“அதுக்கு இப்போ நேரமும் இல்லை; அவசியமும் இல்லையே?!”

“நேரம் இல்லைன்னா அது உங்க பிராப்ளம், சார். ஆனா, அவசியம் இருக்கு!”

“என்ன அவசியம்?”

“நீங்க என்ன அறிவிச்சிருக்கீங்க உங்க பத்திரிகையிலே? ‘போட்டிக்கு வந்த கதைகள்ல சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து, வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு கதைகள் வீதம் தொடர்ந்து பிரசுரம் பண்ணி, மொத்தம் 65 கதைகள் வெளியிட்டிருக்கோம். இந்த 65 கதைகளையும் நடுவர் குழு படிச்சுப் பார்த்துப் பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுக்கும்’னுதானே போட்டிருக்கீங்க? அப்போ, நியாயமா பார்த்தா அந்த 65 கதைகளையும் நாங்க படிக்கணுமா, வேணாமா?” என்று லாஜிக்கான ஒரு கேள்வியைக் கேட்டார் சுஜாதா.

“ரொம்ப நியாயம் சுஜாதா! நான் ஒப்புக்கறேன். உங்களுக்கு அந்த 65 கதைகளையும் தரேன். தாராளமா படிங்க. ஆனா, இப்போ இந்த 15 கதைகள்லேருந்து உங்க தீர்ப்பைச் சொல்லுங்க” என்றார் சாவி.

“இல்லே சார், அது சரியா வராது...” என்று தயங்கினார் சுஜாதா.

“நீங்க ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறீங்கன்னு எனக்குப் புரியலை சுஜாதா?” என்று சலித்துக்கொண்டார் சாவி. “இந்தக் கதைகள்ல எதுவுமே நல்லா இல்லைன்னு சொல்றீங்களா? அதான் உங்க அபிப்ராயம்னா, அதையாவது சொல்லுங்க. அப்படியே போட்டுடறேன்” என்றார் எரிச்சல் கலந்த குரலில்.

“அதில்லே சார்! வாசகர்கள் அந்த 65 கதைகளையும் படிச்சிருப்பாங்க. ஒருவேளை, இந்தப் பதினைந்து கதைகளைவிடவும் அருமையான கதை அதுல இருந்தா, ‘என்ன... சுஜாதா நடுவரா இருந்துக்கிட்டு, இந்த அருமையான கதையை செலக்ட் பண்ணாம, வேற எதையோ செலக்ட் பண்ணியிருக்காரே’ன்னு என்னையில்ல தப்பா நினைப்பாங்க?” என்றார் சுஜாதா.

“ப்பூ... இவ்வளவுதானா! இப்ப ஒரு ரகசியத்தை உங்களுக்குச் சொல்றேன். இந்த 65 கதைகளையும் நான்கூடப் படிச்சதில்லை. நானும் உங்களைப்போல 15 கதைகளை மட்டும்தான் படிச்சேன். இதுலேர்ந்துதான் நானும் என் முடிவைச் சொல்லப் போறேன்.அதனால கவலையே படாம, தைரியமா உங்க தீர்ப்பைச் சொல்லுங்க” என்றார் சாவி சார்.

சுஜாதாவுக்கு அப்போதும் தயக்கம். “இல்லே சார்... அது சரியா வராது...” என்று இழுத்தார்.

“இதோ பாருங்க சுஜாதா! இந்தப் பதினைந்து கதைகளைவிட அருமையான கதை, மீதி உள்ள கதைகள்ல இருந்துடப் போறதேங்கிறது உங்க கவலை. எனக்குப் புரியுது. ஆனா, போட்டிக்கு வந்த அத்தனைக் கதைகளையும் படிச்சு, செலக்ட் பண்ணிப் பிரசுரிச்சவன் ரவிபிரகாஷ்தான். வேறு யாரும் படிக்கவும் இல்லை; பரிசீலிக்கவும் இல்லை. அவனேதான் இந்த 65 கதைகள்லேருந்து மிகச் சிறந்ததா 15 கதைகளை செலக்ட் பண்ணிக் கொடுத்திருக்கான். அதனால, இதைத் தாண்டி வேறு சிறப்பான கதை மத்த செட்ல இருக்காதுங்கிறதுக்கு நான் கேரண்ட்டி! நீங்க தாராளமா இதுல எது பெஸ்ட்டுன்னு தேர்ந்தெடுக்கலாம்” என்றார் சாவி.

சுஜாதா அப்போதும் சமாதானமாகவில்லை. “சரி சார்! எனக்கு ஒரே ஒரு நாள் மட்டும் டயம் கொடுங்க. இந்த 65 கதைகளோட சினாப்ஸிஸை டைப் பண்ணிக் கொடுக்கச் சொல்லுங்க. அதை நான் விறுவிறுன்னு படிச்சுட்டு, நாளைக்கு மத்தியானத்துக்குள்ள என் முடிவை உங்களுக்குச் சொல்லிடறேன்” என்றார்.

அவ்வளவுதான்... சாவி சார் கோபத்தின் உச்சிக்குப் போய்விட்டார். விருட்டென்று நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு எழுந்தார்.

“இல்லே சுஜாதா! இது சரியா வராது. விட்டுடுங்க. ரவி! இந்தா மத்த நாலு பேரோட தீர்ப்பு. இதும்படி ரிசல்ட்டைப் போட்டுடு. கூடவே, ‘சுஜாதா இந்தச் சிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருக்க விரும்பாததால் விலகிக்கொண்டுவிட்டார்’னு ஒரு குறிப்பையும் போட்டுடு. இல்லேன்னா, இந்தத் தீர்ப்புக்கு அவரும் உடந்தைன்னு பாவம், அவருக்கு வாசகர்கள்கிட்டே கெட்ட பேர் வந்துடும்!” என்று உரத்த குரலில் சொல்லிவிட்டு, விறுவிறென்று அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்று, ஹால் சோபாவில் உட்கார்ந்துகொண்டுவிட்டார் சாவி சார்.

நாங்கள் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் ஒரு சில விநாடிகள் திக்பிரமையில் ஆழ்ந்திருந்தோம். எங்களிடையே ஒரு சங்கடமான மௌனம் நிலவியது.

சுஜாதா மெள்ள எழுந்து சென்று, சாவி சார் பக்கத்தில் போய் அமர்ந்தார். தணிந்த குரலில் ஏதோ பேசினார். நாங்கள் அதுவரை அறையிலேயே அமர்ந்திருந்தோம்.
“சுஜாதா கேக்குறதும் நியாயம்; சாவி சாரோட ஆதங்கமும் கரெக்ட்தான். இதுல நாம யார் பக்கம் சரின்னு எப்படிச் சொல்றது?” என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது.

சற்று நேரத்தில், சாவி சார் என்னை அழைக்கும் குரல் கேட்டது. போனேன். “இந்தா ரவி, சுஜாதாவோட ஜட்ஜ்மென்ட்! அஞ்சு பேரோட ரிசல்ட்டையும் கூட்டிக் கழிச்சுப் பார். எந்த அஞ்சு கதைகள் பரிசுக்குத் தகுதி பெறுதுன்னு உடனே எனக்கு ரிசல்ட்டைச் சொல்லு பார்க்கலாம்!” என்றார் சாவி.

ஏற்கெனவே மற்ற நால்வரும் ஏக மனதாக முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுத்துவிட்டிருந்ததால், எந்தப் பிரச்னையும் இல்லை. சுஜாதாவின் தீர்ப்பைப் பார்த்தேன். மற்றவர்கள் முதல் பரிசுக்குரியதாக ஏக மனதாகத் தேர்ந்தெடுத்த கதையையே சுஜாதாவும் தேர்ந்தெடுத்திருந்தார். இரண்டாம், மூன்றாம் பரிசுக்கதைகள் மட்டும் சற்றே முன்பின்னாக இருந்தன. இருப்பினும், மெஜாரிட்டிபடி பரிசுகளை அறிவிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை.

சுமுகமாக எல்லாம் முடிந்தது. அதன்பின்னர் டின்னர். சாவியின் மூத்த புதல்வர் பாச்சா (பாலச்சந்திரன்) அவர்கள், எங்களை நிற்க வைத்துப் புகைப்படம் எடுக்க விரும்பினார் (கலைஞர், சாவி இவர்களோடு நாங்கள் இருக்கும் புகைப்படத்தை எடுத்ததும் பாச்சாதான்). வரிசையில் ஓரமாக நின்றிருந்த என்னை அருகே அழைத்த சாவி, “ரவி! உன் அபிமான எழுத்தாளர் சுஜாதா பக்கத்தில் நின்னு படம் எடுத்துக்கோ! பின்னாடி ஒரு நாள் எடுத்துப் பார்க்கிறப்போ சந்தோஷமா இருக்கும்” என்றார். பின்பு, “சுஜாதா! இவன் உங்க பரம ரசிகன். உங்க எழுத்துன்னா இவனுக்கு அத்தனை உயிர்!” என்று அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். சட்டென்று என் மனம் நெகிழ்ந்து, இதயம் இளகின மாதிரி ஓர் உணர்வு. சரியாக அதை வர்ணிக்கத் தெரியவில்லை.

சுஜாதாவின் தீவிர வாசகன் நான் என்பது உண்மைதான். ஆனால், அவரைவிடவும் என் அபிமானத்துக்குரியவர் சந்தேகமில்லாமல் சாவி சார்தான்! எனவே, அன்றைக்கு அவரே என்னை அழைத்து, சுஜாதா பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக் கொள்ளச் சொன்னபோது, என் மனத்தில் உண்டான அதே உணர்வுகளை, இப்போதும் என்னால் உணர முடிகிறது. ஆனால், அதை உங்களுக்கு எப்படி விவரித்துச் சொல்வதென்றுதான் தெரியவில்லை.

சுஜாதாவை நான் முதன்முதல் நேரில் சந்தித்தது அந்த நிகழ்ச்சியின்போதுதான்!

.

18 comments:

ஹப்பா. இப்போ தான் எனக்கு நிம்மதி. ஏன்னா, சுஜாதா அத்தனை கதைகளையும் படித்துத் தான் தீர்ப்பு சொல்லுவது சரின்னு முடிவு பண்ணி இருப்பார்னு எனக்கு தோன்றியது. கடைசியிலே convince ஆயிட்டார். தப்பில்ல அதான் முதல் சுற்று ஸ்க்ரீனிங் நீங்க செய்து இருக்கிங்களே.
ஆமாம், வாசகர் கிட்டே இந்த முதல் சுற்று இரெண்டாம் சுற்று ஸ்க்ரீனிங் பற்றி சொல்லப் பட்டதா?
 
உங்களை போன்ற பத்திரிக்கையாளர் பதிவராக இருப்பது எங்கள் அதிர்ஷ்டம்.
சுவராஸ்யமான சம்பவங்கள்,அதை கோர்த்து எழுதும் அழகு,குறையே சொன்னாலும் சம்பத்தபட்டவருக்கு துளிகூட மனவருத்தம் வராத அளவுக்கு வார்த்தை பிரயோகம், அதுவும் இந்த பதிவில் எவ்வளவு ஆரோக்கியமான விவாதங்கள்,
//சுஜாதா! இவன் உங்க பரம ரசிகன். உங்க எழுத்துன்னா இவனுக்கு அத்தனை உயிர்!” என்று அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். சட்டென்று என் மனம் நெகிழ்ந்து, இதயம் இளகின மாதிரி ஓர் உணர்வு.// படிக்கும் சுஜாதாவின் வாசகர்களுக்கும் அந்த இளகின உணர்வை பரப்பி விட்டீர்கள். நன்றி
 
//ஒருவேளை, இந்தப் பதினைந்து கதைகளைவிடவும் அருமையான கதை அதுல இருந்தா, //
சுஜாதா அவர்களின் மேல் மதிப்பு இன்னும் கூடுகிறது சார்!
 
செம சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க அருமை நன்றி
 
சாவி சாரின் விசிறி வாழை வாஷிங்டனில் திருமணத்தின் போதே அவரைப் பற்றிக் குறிப்புகள் வந்தால் விருப்பமாக படிக்க பிடிக்கும். இந்த பகிர்விலும் அவரைப் பற்றித் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி .
 
மிக அருமையான .. ஞாபகங்களை கிளறகூடிய பதிவு... நானும் ஒரு தீவிர ரசிகன் தான்.. உங்க அளவுக்கு எழுதுற ரசிகன் இல்லை அனால்.. நல்ல எழுத்தை ரசிக்கிற ஒரு சாமானியன் தான்நான். ... அந்த photovaum இந்த பதிவில் பகிர்ந்து இருந்தால் மிக அருமயாக இருக்கும்.
 
தலைவரே.. உங்களோட முந்தைய பதிவை படிக்காமல் அவசர குடுக்கையா.. ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன்.. மனிச்சுகொங்க.. அது தான் அந்த போட்டோ வும் பதிவுல போட்டுர்க்கலமேன்னு கேட்டது தப்புதான்... :).....
 
ஒரு நல்ல சிறுகதையைத் தேடும் சுஜாதாவின் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது.
 
nice.
 
இது போன்ற சுவையான அனுபவங்களை அடிக்கடி பதிவிடுங்கள். பல விஷயங்களையும், பலதரப்பட்ட பிரபலங்களின் கேரக்டர் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. நிற்க. பிரபலங்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்வதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், உங்கள் அபிமான பாடகர் டி.எம்.எஸ்ஸுடன் நீங்களே விரும்பி நின்று போட்டோ எடுத்துக்கொண்டதோடு, அவற்றை உங்கள் வலைப்பூவிலும் பதிவிட்டு மகிழ்ந்தீர்களே, மறந்துவிட்டதா?
 
புதிய தகவல்களுக்கு நன்றி.
 
உங்கள் பதிவிற்கு வந்தால்...
புதிதாய் எதோ ஒரு விஷயம் தெரிந்து கொண்ட உணர்வில்.....



அன்புடன் ...

ஆர்.ஆர்.ஆர்.
 
நன்றி விருட்சம்!

நன்றி பத்மநாபன்!

நன்றி பாலாஜி சரவணா! தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

நன்றி மோகன்குமார்!

நன்றி மாஹி கிரானி!

நன்றி கங்காராம்! \\உங்க அளவுக்கு எழுதுற ரசிகன் இல்லை// இந்தக் குசும்புதானே வேணாங்குறது! நான் என்ன, அழகான வர்ணனைகளோடு சிறுகதையா எழுதியிருக்கிறேன். அனுபவத்தை வெகு சாதாரண தமிழில் எழுதியிருக்கிறேன். அவ்வளவுதானே!

நன்றி சத்யராஜ்குமார்!

நன்றி மங்களூர் சிவா! ரொம்ப நாளைக்குப் பிறகு என் வலைப்பூ பக்கம் தலைகாட்டியிருக்கிறீர்கள்!

நன்றி கணேஷ்ராஜா! டி.எம்.எஸ். ஒரு விதிவிலக்கு என்று அவரைப் பற்றிய ஒரு பதிவில் நானே குறிப்பிட்டிருக்கிறேனே! :)

நன்றி கே.ஜி.கௌதம்!

நன்றி ஆர்.ஆர்.ஆர்.!
 
ஆஹா ஒரு நல்ல சிறு கதையைத் தேர்ந்தெடுக்க என்னமாய் போராடியிருக்கிறார் சுஜாதா? சார், இது போல அடிக்கடி எழுதுங்கள். படிக்க சுவையாக இருந்தது. பயனுள்ளதாகவும்!
 
சுவையான பதிவு
 
//Suajtha ,Saavi ponravargalin suvarasyamaana valkai pathivugalai yengalukkum pagirvatharkaaga nanri!
பழைய புத்தக கடை ஒன்றில் சாவி அவர்களின் வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு தொடர் கதை (சாவி இதழ் பக்கங்கள் bind செய்யப்பட்டது )
கிடைத்தது ..கற்பனையோடு ,மனோரமா ,பேராசிரியர் நன்னன் போன்ற நிஜ பிரபலங்களும் தோன்ற ,
இறுதி பகுதியில் கலைஞர் கையெழுத்தில் அவரது உரை என ரொம்பவே வித்தியாசமான
வாசிப்பனுபவத்தை கொடுத்தது ! அந்த பிரதி தொலைந்தது பற்றி முன்னர் பதிவில் குறிப்பிட்டு இருந்தீர்கள் ,அதன் பிறகு நடந்ததை சொன்ன மாதிரி தெரியவில்லையே..
 
நல்ல பகிர்வு..
 
நன்றி கே.பி.ஜனார்த்தனன்!

நன்றி லதானந்த்!

நன்றி கிருஷ்குமார்! \\அந்த பிரதி தொலைந்தது பற்றி முன்னர் பதிவில் குறிப்பிட்டு இருந்தீர்கள் ,அதன் பிறகு நடந்ததை சொன்ன மாதிரி தெரியவில்லையே..// சொல்லியிருக்கிறேன் கிருஷ்!

நன்றி அஹமது இர்ஷாத்!