உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, August 18, 2010

சுஜாதா கிளப்பிய பிரச்னை!

வி.ஐ.பி-க்களுடன் சேர்ந்து நின்று புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொள்வதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் இருந்தது இல்லை. அதே போல் ஆட்டோகிராஃப் வாங்குவதும். இது பற்றி ஏற்கெனவே ஒருமுறை பதிவு எழுதியிருக்கிறேன் என்று ஞாபகம்.

எனக்குத் தெரிந்து மிகப் பலருக்கு, வி.ஐ.பி-க்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் பெரு விருப்பம் இருக்கிறது. புத்தகக் கண்காட்சி போன்ற ஏதாவது ஒரு பொது இடமாக இருந்தாலும் சரி, திருமணம் போன்ற ஏதேனும் விசேஷமாக இருந்தாலும் சரி, அங்கே தன் அபிமான வி.ஐ.பி-யைப் பார்த்துவிட்டால் போதும், அங்கேயே அவரோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளத் துடியாய்த் துடிக்கிறார்கள். ஆட்டோகிராஃப் வாங்கிவிடப் பெரு முயற்சி செய்கிறார்கள்.

அதைத் தவறு என்றோ, இங்கிதமற்ற செயல் என்றோ சொல்ல முடியாது. அந்த வி.ஐ.பி-யின் மேல் அவர் வைத்திருக்கும் அபிமானம் அத்தனை வீர்யம் உடையது என்று சொல்லலாம். ஆனால் பலர், அபிமான வி.ஐ.பி-க்களைப் பார்த்தால்தான் என்றில்லை; எந்த வி.ஐ.பி. சிக்கினாலும், அவரோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள முனைகிறார்கள். அது ஒரு மேனியாவாகவே அவர்களிடம் படிந்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இதுவும் கூடத் தவறானதோ, கேலிக்குரியதோ இல்லை. இத்தனைப் பெரிய மனிதர்களோடு தங்களுக்குப் பழக்கம் உண்டு என்று காண்பித்துக் கொள்வதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். அது ஒன்றும் தவறில்லையே!

ஆனால், சில வி.ஐ.பி-க்கள் இம்மாதிரி பொது இடங்களில் புகைப்படத்துக்கு போஸ் தருவதையும், ஆட்டோகிராஃப் போடுவதையும் விரும்புவதில்லை. முகச் சுளிப்போடு ஒப்புக்கொள்கிறார்கள். அல்லது, நிர்த்தாட்சண்யமாக மறுத்து விடுகிறார்கள். அப்போது அந்த நேயரின் மனம் வாணலியில் வறுபட்ட சுண்டைக்காய் போல் சுண்டிவிடுகிறது. வருத்தத்தில் ஆழ்ந்துவிடுகிறது. அது தேவையில்லை.

சாவி பத்திரிகையில் ஏறத்தாழ பத்து ஆண்டுகள் பணியாற்றியும், சாவி சாருடன் சேர்ந்து நின்று நான் புகைப்படம் எடுத்துக்கொண்டது இல்லை. எனக்கு அது தோணவில்லை என்பதே உண்மை. எழுத்தாளர் சுஜாதா, வாலி, வைரமுத்து, கிரேஸி மோகன், எஸ்.வி.சேகர், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், கே.வி.ஆனந்த், அனுராதா ரமணன், புஷ்பா தங்கதுரை... எனப் பலருடன் எனக்கு நட்போ, பழக்கமோ இருந்தும், இவர்கள் யாருடனும் நான் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டது இல்லை.

ஏன் எனக்கு அந்த ஆர்வம் வரவில்லை என்பதற்கான காரணத்தை யோசித்தால், சட்டென ஒரு விஷயம்தான் ஞாபகத்துக்கு வருகிறது. என் பள்ளிப் பருவத்தில், விழுப்புரத்தில் நடைபாதையில் கைரேகை ஜோசியம் பார்ப்பவர் சிவாஜி கணேசனுடன், ஜெய்சங்கருடன், கே.ஆர்.விஜயாவுடனெல்லாம் சேர்ந்து நிற்பது போன்றோ, அவர்களுக்குக் கைரேகை பார்ப்பது போன்றோ போட்டோக்களை ஒரு பெரிய வண்ணக் குடையின் கீழ் காட்சிக்கு வைத்திருப்பார். அதைப் பார்த்ததிலிருந்து, ‘ப்பூ... இவ்வளவுதானா!’ என்று தோன்றிவிட்டது எனக்கு.

அதற்கு முன்பு வரை, வேறு யாரேனும், ஒரு பெரிய வி.ஐ.பி-யோடு தான் நின்றிருக்கும் புகைப்படத்தைக் காண்பித்தால், உடனடியாக நானும் அதே மாதிரி வி.ஐ.பி. யாரோடாவது நின்று போட்டோ எடுத்துக்கொள்ள மாட்டோமா என்று மனசு தவியாய்த் தவிக்கும். விழுப்புரத்தில் எங்கள் வீட்டில் குடியிருந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை, கற்பகம் ஸ்டுடியோவில் வேலை செய்துகொண்டு இருந்தார். அங்கே படமாக்கப்படும் எல்லா திரைப்படங்களிலும் ஏதாவது ஒரு ஸீனில் அவர் தலைகாட்டியிருப்பார். அவரும் வேறு சில நண்பர்களும் ஒரு சினிமா வி.ஐ.பி-யோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஒருமுறை என்னிடம் காண்பித்தார். அதைப் பார்த்ததும், ‘இவருக்கு அந்தக் கொடுப்பினை கிடைத்திருக்கிறதே, எனக்கும் இந்த மாதிரி சினிமா பிரபலங்களோடு நின்று போட்டோ எடுத்துக் கொள்கிற பாக்கியம் கிடைக்காதா’ என்று மனசு ஏக்கத்தில் மூழ்கியது. அந்த நண்பர் சேர்ந்து படம் எடுத்துக்கொண்ட சினிமா வி.ஐ.பி. - தேங்காய் சீனிவாசன்.

சரி, எதையோ எழுத உத்தேசித்து, எங்கேயோ போய்விட்டேன். மிக அபூர்வமாக, எந்த மெனக்கிடலும் இல்லாமல் யதார்த்தமாக எடுத்துக்கொண்ட போட்டோதான், சமீபத்தில் ‘என் டயரி’ வலைப்பூவில் நான் வெளியிட்டிருந்த கலைஞர் மு.கருணாநிதியுடனான போட்டோ. அப்படி ஒரு போட்டோ எடுக்கப்பட்ட சம்பவத்தைச் சுத்தமாக நான் மறந்தே போயிருந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு, வேறு ஏதோ தேடிக்கொண்டு இருந்தபோது, யதேச்சையாகச் சிக்கியது அது. கூடவே கிடைத்த இன்னொரு போட்டோதான், இந்தப் பதிவில் மேலே நான் பதிவிட்டிருப்பது.

இடமிருந்து வலமாக: சாவி சாரின் இளைய மாப்பிள்ளை ஆடிட்டர் ராமமூர்த்தி, ராணிமைந்தன், நான், எழுத்தாளர் சுஜாதா, சாவி, எழுத்தாளர் சிவசங்கரி, டாக்டர் கி.வேங்கடசுப்பிரமணியன்.

இந்தப் போட்டோ எடுக்கப்பட்ட சூழ்நிலையைச் சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுகிறேன்.

சாவி வார இதழில் ‘மண் வளம் கமழும் மாவட்டச் சிறுகதைப் போட்டி’ ஒன்று அறிவித்திருந்தேன். அதற்கு ஆயிரத்துக்கும் மேல் சிறுகதைகள் வந்தன. நான் ஒருவனே அத்தனைக் கதைகளையும் படித்து, சிறப்பான கதைகளைத் தேர்ந்தெடுத்து, வாரம் ஒன்றாக வெளியிட்டு வந்தேன். இப்படி மொத்தம் 65 கதைகளை வெளியிட்டேன்.

இந்த 65 கதைகளிலிருந்து பரிசுக்குரிய ஆறு சிறுகதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். நடுவர் குழுவில் இருந்தவர்கள்: எழுத்தாளர்கள் சுஜாதா, சிவசங்கரி, கவியரசு வைரமுத்து, டாக்டர் கி.வேங்கட சுப்ரமணியன் மற்றும் ஆசிரியர் சாவி.

65 கதைகளையும் படிக்க இவர்களுக்கு அவகாசம் இருக்காது என்பதால், அவற்றிலிருந்து மிகச் சிறப்பான 15 கதைகளைத் தேர்ந்தெடுத்து, தனக்கும் மற்ற நால்வருக்கும் ஜெராக்ஸ் பிரதிகள் கொடுக்கச் சொன்னார் சாவி. அடுத்த வாரத்தில் ஒரு நாள் அவர்கள் அனைவரையும் சாவி இல்லத்துக்கு அழைத்து, கலந்துரையாடி, பரிசுக்குரிய ஆறு கதைகளை ஏக மனதாகத் தேர்ந்தெடுப்பது என்பது திட்டம்.

அதன்படி, நானே பதினைந்து மிகச் சிறப்பான சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்தேன். அனைவருக்கும் அவற்றின் பிரதிகளை அனுப்பி, என்றைக்கு சாவி இல்லத்தில் நடுவர் குழு ஒன்றுகூடிக் கலந்துரையாடுவது என்றும் பேசி, அனைவருக்கும் வசதிப்படும் ஒரு தேதியை நிச்சயித்தேன்.

அந்த நாளும் வந்தது. கவியரசு வைரமுத்து தவிர, அனைவரும் உரிய நேரத்தில் ஆஜராகிவிட்டனர். வைரமுத்து அந்தச் சமயம் அமெரிக்கா சென்றிருந்த காரணத்தால், தனது தீர்ப்பை - எந்தக் கதைக்கு முதல் பரிசு, எது இரண்டாம் பரிசுக்குரியது என்றெல்லாம் ஒவ்வொரு கதைக்கும் தனித்தனியே மதிப்பெண்கள் கொடுத்துத் தெளிவாக எழுதிக் கையெழுத்திட்டு, தனது உதவியாளர் மூலம் கொடுத்தனுப்பியிருந்தார்.

அவரைத் தவிர, மற்றவர்கள் ஒரு அறையில் குழுமினோம். கலந்துரையாடல் தொடங்கியது.

ஒவ்வொரு கதையையும் ஆழமாகப் படித்து வந்திருந்தார் சிவசங்கரி. மிக ஆழமாக அலசி ஆராய்ந்து, தன் கருத்தைத் தெரிவித்தார். டாக்டர் கி.வேங்கட சுப்பிரமணியனுக்கு ரொம்பத் தாராள மனசு. ஒவ்வொரு கதையையுமே சர்க்கரைப் பந்தலில் பெய்த தேன்மாரி, தேனில் தோய்த்த பலாச்சுளை, பாலில் ஊறிய பாதாம் பருப்பு, நெய் வார்த்த சர்க்கரைப் பொங்கல், ஜீராவில் ஊறிய குலோப்ஜாமூன் என்றெல்லாம் ஏகபோகமாக வர்ணித்து, அனைத்துமே முதல் பரிசு பெறத் தகுதியுள்ளவை என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்.

அடுத்து, சுஜாதாவின் முறை. அவரை அபிப்ராயம் சொல்லும்படி கேட்டார் சாவி. அப்போது சுஜாதா ஒரு பிரச்னையைக் கிளப்பினார்.

சாவி அதற்குத் தகுந்த விளக்கம் சொல்லிவிட்டு, பரிசுக்குரிய கதைகள் பற்றிய சுஜாதாவின் தீர்ப்பைச் சொல்லும்படி வற்புறுத்தினார்.

ஆனால், சுஜாதா மீண்டும் மீண்டும் தான் சொன்னதையே சொல்லி, “... அதன் பின்புதான் நான் என் தீர்ப்பைச் சொல்ல முடியும்” என்று சொல்ல, சாவிக்குக் கோபம் வந்துவிட்டது.

அப்படி சுஜாதா என்ன பிரச்னையைக் கிளப்பினார்?

அது அடுத்த பதிவில்!

.

16 comments:

Interesting .... :-)
 
என்னங்க இப்படி பொசுக்குனு தொடரும்.... போங்க சார்..
 
சரியான சஸ்பென்ஸா இருக்குதே.. இப்பவே தெரிஞ்சாகனும் போல இருக்குது .சாவி ஸார்க்கு கோபம் வருமளவுக்கு அப்படி என்ன பிரச்சனையை கிளப்பி இருப்பாரு? சீக்கிரம் அடுத்த பதிவை போட்டுருங்க...
 
சார்.... சுஜாதா பற்றி எவ்வளவு எழுதினாலும் படிக்கலாம்...
 
டென்ஷன்ல விட்டுட்டீங்களே.. தலைவரே..
 
waiting..
 
We are waiting...

Prahagar...
 
Like thodar kathai, you have stopped with a suspense..
 
//அப்படி சுஜாதா என்ன பிரச்னையைக் கிளப்பினார்?//
சுவாரசியமா போகும்போது தொடரும் போட்டுட்டீங்களே,
அடுத்த பதிவுக்கு வெய்டிங்!
சார் நான் தான் உங்களோட நூறாவது "Follower" :)
 
பீடிகை ரொம்ப பலமா இருக்கே. சுஜாதா என்ன தான் பிரச்னை பண்ணினார் ?
 
தங்களது ப்ளாக்கில் நேரத்தை பார்த்தேன். காணவில்லை.ஓ..எனக்கு நேரம் சரியில்லையோ..!
மற்றபடி சாதாரண கட்டுரையாக இருந்தாலும் எழுத்து வடிவம் அநியாயத்துக்கு அருமை ஸார்..!
அ.பரஞ்ஜோதி
 
தங்களது ப்ளாக்கில் நேரத்தை பார்த்தேன். காணவில்லை.ஓ..எனக்கு நேரம் சரியில்லையோ..!
மற்றபடி சாதாரண கட்டுரையாக இருந்தாலும் எழுத்து வடிவம் அநியாயத்துக்கு அருமை ஸார்..!
அ.பரஞ்ஜோதி
 
அடப் போங்க சார்! இதான் உங்க கிட்டே இருக்கிற பிரச்னை. சட்டுப்புட்டுனு என்ன விஷயம்னு எழுதிட்டுப் போவீங்களா... சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தி மண்டையைக் காய வைக்கிறீங்களே?‌
 
லேட்டா பதிவு படிக்கிறதுல ஒரு உபயோகம் சஸ்பென்ஸ் என்னன்னு தெரிஞ்சி போச்சி லேட்டஸ்ட் பதிவு படிச்சிட்டுதான் இங்க வந்தேன்
:)
 
really interesting to know the characters of the gudges
 
வலை சரத்தில் இன்று உங்களின் இந்த பதிவு குறித்து எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்கவும்

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_19.html