உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, June 22, 2010

அழகிய லைலா!

திலகவதி அப்பார்ட்மென்ட்டில் நாங்கள் குடியேறிய வீட்டுக்கு இரண்டு குடித்தனங்கள் தள்ளி ஒரு ஜெர்மன்காரி குடியிருந்தாள். அவளுக்கு வயது 20, 22-தான் இருக்கும். டைட்டாக முக்கால் பேன்ட்டும், இடுப்பு தெரிய பனியன் போன்ற ஒரு டாப்ஸும்தான் அவளது வழக்கமான உடை. தினமும் காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்திருந்து, வாசலில் நீர் தெளித்து, குதிகாலில் அமர்ந்தபடி, அவள் அரிசி மாவால் கோலம் போடும் அழகே அழகு! ‘கௌசல்யா சுப்ரஜா ராமா சந்த்யா ப்ரவர்த்ததே...’ என்று அதிகாலையில் மங்களகரமாக அவள் போர்ஷனிலிருந்து எம்.எஸ்ஸின் குரல் இதமான வால்யூமில் கசிந்து வரும். சில நாள் பஜகோவிந்தம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்றவையும் ஒலிப்பதுண்டு.

காலையில் கோலம் போடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவள் கண்ணிலேயே பட மாட்டாள். காலை ஒன்பது மணி வரையில் வீட்டு வேலை செய்துவிட்டு, பின்பு கதவைப் பூட்டிக்கொண்டு, தன் ஸ்கூட்டியில் வெளியே கிளம்பிச் சென்றுவிடுவாள். இரவு எப்போது வருகிறாள் என்று தெரியாது. அவள் யாரென்று அங்கே குடியிருந்த மற்ற யாருக்குமே தெரியவில்லை. கடந்த ஆறு ஏழு மாதமாகத்தான் அங்கே குடியிருக்கிறாள் என்றார்கள்.

நாங்கள் அங்கே குடி போன புதிதில், அந்த அப்பார்ட்மென்ட்டிலேயே சின்ன வயதுக் குழந்தைகள் எங்களின் குழந்தைகள்தான் என்பதால், துறுதுறுவென்று மற்றவர்களின் ஃப்ளாட்டுகளுக்குள் ஓடிவிடும். அதே போல், அந்த ஜெர்மன்காரியின் ஃப்ளாட்டுக்குள்ளும் சுவாதீனமாகப் போய், அவள் கொடுக்கும் பிஸ்கட்டுகளையும் சாக்லெட்டுகளையும் கை நிறைய வாங்கி வரும். அதைத் தொடர்ந்து என் மனைவி, அந்த ஜெர்மன்காரிக்கு சிநேகிதியாகிவிட்டாள்.

முகத் தோற்றத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், பொன்னிறத் தலைமுடியோடு கூடிய நடிகை லைலா போல இருப்பாள் என்று சொல்லலாம். அதே மாதிரி சிறிய கண்கள், கூரிய மூக்கு, குழி விழும் கன்னங்கள்... ரோஸ் நிறமாக இருந்தாள். அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிந்திருந்தது. தமிழில் நிதானமாகப் பேசினால் ஏறக்குறையப் புரிந்துகொண்டாள். “எதுக்குங்க குழந்தைகளுக்குப் போக வர, நிறைய பிஸ்கட்டும் சாக்லெட்டுமாக தந்துக்கிட்டே இருக்கீங்க?” என்று கேட்டால், பளீரெனப் புன்னகைத்துக்கொண்டே, “பர்வால்ல... கொல்ந்தைங்க... ரொம்ப அய்கு, ரொம்ப க்யூட் பேபீஸ்!” என்பாள்.

தன் மேரேஜ் டே என்று சொல்லி, ஒரு நாள் எங்களைத் தன் போர்ஷனுக்குக் கூப்பிட்டாள். என் மனைவிக்கு ஒரு ரவிக்கைத் துணியும், எனக்கு ஒரு சின்ன டவலும் ஒரு தட்டில் வைத்து, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு, குங்குமச் சிமிழோடு நீட்டினாள். பெற்றுக்கொண்டதும், நாங்கள் சற்றும் எதிர்பார்க்காதவிதமாக எங்கள் கால்களில், நம்ம ஊர்ப் பெண்கள் முழங்காலில் அமர்ந்து நமஸ்கரிப்பது மாதிரி நமஸ்கரித்தாள். அவள் யாராக இருந்தாலும், சந்தோஷமாக இருக்கட்டும் என்று மனதார வாழ்த்தினோம். அவளது கேமராவில் டைமர் செட் பண்ணிவிட்டு எங்களோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டாள். என் இரண்டரை வயது மகனைத் தூக்கிக்கொண்டு, யூ.கே.ஜி. படித்துக்கொண்டு இருந்த என் மகளைத் தன் அருகில் நிறுத்திக்கொண்டு, இடது கையை என் மனைவியின் தோள் மீது அணைத்தவாறு போட்டுக்கொண்டு புன்னகையோடு அவள் போஸ் தந்ததிலேயே அன்புக்காக ஏங்கும் அவளது உள்ளம் புரிந்தது. அவள் தந்த பிஸ்கட்டுகளைத் தின்றுவிட்டு, பூஸ்ட் குடித்துவிட்டு, இனம்புரியாத மகிழ்ச்சியோடு வெளியேறினோம்.

அன்றைக்கு அவள் போர்ஷனில் நாங்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருந்திருப்போம். அவளிடம் பேசியதில் நாங்கள் புரிந்துகொண்டது...

அவளின் கணவன் சுந்தர்ராஜன், அய்யங்கார் சமூகத்தைச் சேர்ந்தவன். காதல் கல்யாணம். சினிமாத் துறையில் ஒரு பெரிய ஒளிப்பதிவாளரிடம் அசிஸ்டென்ட்டாகப் பணியாற்றிக்கொண்டு இருக்கிறான். தனியாகப் படம் ஒளிப்பதிவு செய்வதற்காகப் போராடிக்கொண்டு இருக்கிறான். ஒரு படப்பிடிப்புக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன் (அதாவது, 1995 அல்லது 1996-ல்) அவன் ஜெர்மனிக்குச் சென்றிருந்தபோது, அங்கேதான் அவளைச் சந்தித்தான். அவள் பெயர் அலைடா. அவளின் அப்பா அங்கே ஒரு கல்லூரியில் புரொஃபசராக இருக்கிறாராம். ‘அனைடா’ என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பெயரில் ஒரு பிரபல பாப் பாடகி இருக்கிறாள். இதென்ன பெயர் ‘அலைடா’; புதிதாக இருக்கிறதே என்று விசாரித்தேன். ஏன்ஷியன்ட் - புராதனமானவள் என்று அர்த்தம் சொன்னாள்.

இரண்டொரு ஜெர்மன் படங்களில் குரூப் டான்ஸ்களில் இடம்பெற்றிருக்கிறாளாம். தமிழ்ப் படத்தில் குரூப்பில் ஆடுவதற்காக வந்தபோதுதான் சுந்தர்ராஜனைச் சந்தித்ததாகச் சொன்னாள். ஒரு வாரப் பழக்கத்தில் இருவரும் காதல் கொண்டுவிட்டார்கள். படப்பிடிப்பு முடிந்து, குழுவினரோடு சுந்தர்ராஜன் கிளம்பியபோது அழுதேவிட்டாளாம். அதன்பின் ஒரு மாதம் கழித்து, அங்கிருந்து அலைடா மட்டும் தனியாகக் கிளம்பி, ஃப்ளைட் பிடித்து இங்கே வந்துவிட்டாளாம். இருவர் குடும்பமும் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கவில்லை என்பதால், தனியாக ஃப்ளாட் எடுத்துத் தங்கியிருப்பதாகச் சொன்னாள்.

சென்னைக்கு வந்து செட்டிலான பிறகு, ஏழெட்டு தமிழ்ப்படங்களில் தலைகாட்டியிருப்பதாகச் சொன்னாள். “என்னென்ன படங்கள் சொல்லு, போய்ப் பார்க்கிறோம்” என்றேன். “பாத்தா தெர்யாத். கண்பிட்க்க முட்யாத். ஃபோர்த் ரோல, அல்லாட்டி செவன்த் ரோல இர்க்கும். நா இன்னா ஹீரோயினியா..? ஹஸ்பெண்டுக்குக் கொஞ்சம் ஹெல்ப். அவ்ளோதான்!” என்பாள்.

அந்தச் சுந்தர்ராஜனைக் கடைசி வரை நாங்கள் உள்பட, அந்த ஃப்ளாட்டில் இருந்த யாரும் பார்த்ததே இல்லை. அவள் வீட்டிலும் அவனும் அவளும் இருக்கும்படியான போட்டோ எதையும் நாங்கள் பார்க்கவில்லை. அவள் சொன்னதெல்லாம் உண்மைதானா, அல்லது முழுக் கட்டுக்கதையா என்றும் எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.

அவனைப் பற்றிக் கேட்டதற்கு, அவனுக்குச் சொந்த ஊர் கும்பகோணம் என்றும், அங்கேதான் அவனுடைய பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் அனைவரும் இருப்பதாகவும், தான் ஒரே ஒருமுறைதான் அவர்கள் வீட்டுக்குப் போயிருப்பதாகவும் சொன்னாள். “ரொம்ப நல்ல புள்ள. இன்னொசன்ட் பாய்! எப்பியும் வேல வேலன்னே அலஞ்சுட்டிருக்கும். பெருமாள் இவனுக்கு நல்ல ஃப்யூச்சர் கொடுக்கும். எனக்கு ஹோப் இருக்குது!” என்றாள்.

அவள் வீட்டில் பெரிய கிரீடமும், வஸ்திரம், மாலை எனப் பிரமாதமான அலங்காரங்களும் கொண்ட உற்சவ மூர்த்தியான ஸ்ரீனிவாசப் பெருமாளின் புகைப்படம் ஒன்று பிரமாண்டமாக, கனமான ஃப்ரேமிட்டு மாட்டப்பட்டிருந்தது. அவள் வீட்டில் இருந்தால், வைகுண்டவாஸனைப் பற்றிய பாடல் ஏதாவது மெலிதாக ஒலித்துக்கொண்டு இருக்கும்.

நாங்கள் அந்தத் திலகவதி ஃப்ளாட்டில் சுமார் இரண்டு வருட காலம் இருந்தோம். நாங்கள் காலி செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே அலைடாவைக் காணவில்லை. அவள் போர்ஷன் எப்போதும் பூட்டியே இருந்தது. யாரைக் கேட்டாலும் விவரம் தெரியவில்லை. எங்கள் குழந்தைகள் பழக்க தோஷத்தில் அவள் போர்ஷன் முன்னாடி போய்ப் பார்த்து, ஏமாந்து திரும்பி வரும்.

நாங்கள் அந்த வீட்டை காலி செய்து கிளம்புகிற அன்றைக்கும் அவள் வரமாட்டாளா, அவளிடம் விடைபெற்றுக் கிளம்ப மாட்டோமா என்று ஒரு ஏக்கம் என்னுள் எழுந்தது உண்மை. ஆனால், அவளை அதன்பின் நான் பார்க்கவே இல்லை.

என் மனதில் ஆழமாகப் பதிந்த, கண்கள் இடுங்கிய அவளது கள்ளமற்ற சிரிப்பு மட்டும் இன்னும் கலையாமல் இருக்கிறது.

(இந்தப் பதிவில் உள்ள புகைப்படத்தில் இருப்பது அலைடா அல்ல; யாரோ ஒரு மாடல்!)

.

16 comments:

இப்போ எனக்கும் கவலையா இருக்கு! பச்சக்ன்னு நம்ம கலாச்சாரத்தை ஆட்கொண்டுட்டாளே அந்தப்பொண்ணு? பாவம்.. பத்திரமா நல்லா இருக்கணும். ஃபேஸ்புக்ல ஸெர்ச் பண்ணி பார்த்தீங்களா?
 
அப்பவே தெரிஞ்சிருந்தா அவகிட்ட ஜெர்மன் பட சிடி இருந்தா வாங்கியிருக்கலாம்.. சில படங்களை ரொம்ப நாளா தேடிகிட்டிருக்கேன்..

சூப்பர்..

தொடருங்கள்..
 
hi uncle im Mathavan from France
I have a Website like tamilish
www.newsmahal.com

if u like u can help me
u can put ur links on my site also please??
 
கதையில்ல நெசமுங்களா??
 
நீங்கள் எழுதியதைப் படிக்கும்போது, அவளுக்கு ஏதேனும் ஒன்றுகிடக்க ஒன்று ஆகியிருக்குமோ என்று உள்ளூர ஒரு பயம் வருகிறது. அந்தப் பெண் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.
 
அன்புள்ள ரவி அவர்களுக்கு,
உங்கள் பின்னூட்டத்தைப் போடப் போவதில்லை. என்னைப் பற்றிய ஜம்பங்கள் ஓரளவுக்குமேல் வேண்டாம் என்ற காரணத்தால்.

இந்த பாடலைப் போட்டபோது எனக்கு என்னை பற்றியே ஞாபகமே வரவில்லை. பலர் எழுதிவிட்டார்கள்.

எனக்கு 78 நடக்கிறது. 78 running!
வேடிக்கை, தமிழில் ‘நடக்கிறது’ ஆங்கிலத்தில் ‘ஓடுகிறது’

’லைலா’ வீட்டைக்காலி பண்ணியதற்கு வருத்தப்பட்டிருப்பீர்கள்! :)
போகட்டும். ஒரு சிம்ரன் வருவார்! நம்பிக்கைதான் வாழ்க்கை!!!!
 
பி.எஸ்.ஆர்.
அந்த பெண் பாவம் நன்றாக இருக்க வேண்டும்!
 
உங்களைப்பற்றிய ஒரு குறிப்பு எனது மாநாட்டு உரையில் இருக்கிறது. நேரம் கிடைக்குபோது படித்துப் பாருங்கள்.
 
அநன்யா மஹாதேவன்! இயல்பான வழக்கு மொழியில் உங்கள் பின்னூட்டம் படிக்கவே அத்தனை ரசனை! அடிக்கடி வாங்களேன்!
 
பட்டர்ஃப்ளை சூர்யா! உங்களுக்கு ரொம்பத்தான் ஆச, தோச! எனக்கென்னவோ அந்தப் பொண்ணு கிட்ட நீங்க எதிர்பார்க்கிற ஜெர்மன் பட சிடி-க்கள் இருந்திருக்குமாங்கிறது சந்தேகம்தான். தான் ஜெய்சங்கர் ரசிகைன்னு ஒரு முறை அந்தப் பொண்ணு சொல்லிச்சு. துணிவே துணை, எங்க பாட்டன் சொத்து மாதிரியான படங்கள் வெச்சிருந்திருக்கலாம்! :)
 
Hai Balakrishanan! Thanks for your interest on my blog. But, I am zero in the technical aspects. Sorry!
 
மங்களூர் சிவா! என்னாதிது இப்புடிக் கேட்டுப்புட்டீங்க! அட, மெய்யாலுமுங்கோ!
 
நன்றி கணேஷ் ராஜா! உங்களின் பயம் எனக்கும் ஏற்பட்டது உண்மை. பழகின வரையில் தங்கமான குணமுள்ள பெண்ணாகத் தெரிந்தாள் அவள். யாரையேனும் நம்பி ஏமாறாமல் நன்றாக இருக்கவேண்டும்!
 
கடுகு சார்! \\’லைலா’ வீட்டைக் காலி பண்ணியதற்கு வருத்தப்பட்டிருப்பீர்கள்! :)// குறும்பு போகவில்லை உங்களுக்கு! ஆனாலும், இப்படியா போட்டு உடைப்பீர்கள் உண்மையை?! :)
 
ஆர்.ராமமூர்த்தி, தங்கள் பிரார்த்தனையே என் பிரார்த்தனையும்!
 
லதானந்த்! பார்த்தேன்; படித்தேன்; அது பற்றிய என் பின்னூட்டத்தையும் அதில் இட்டுவிட்டேன். நன்றி! :)