உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, June 17, 2010

சந்தனக் குடத்துக்குள்ளே...

கே.கே.நகரில் அய்யங்கார் வீட்டில் குடி போனது பற்றி எழுதிவிட்டு, அங்கு திருடன் வந்த கதையைப் பின்னர் எழுதுவதாகக் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதை இப்போது பார்ப்போம்.

நாங்கள் குடிபோன எட்டாவது வீடு இந்த அய்யங்கார் வீடு. மிகக் குறைவான காலமே குடியிருந்த வீடு. அதாவது, நாற்பதே நாட்கள்!

நாள், கோள், நட்சத்திரம், ராசி, நேமாலஜி, நியூமராலஜி போன்றவற்றில் எனக்கு அறவே நம்பிக்கை இல்லை. ராகு காலம், எம கண்டம், குளிகை, வடக்கே சூலம் போன்றவற்றைப் பார்த்தும் நான் காரியங்கள் செய்வது இல்லை. ஆனாலும், இந்தப் பதிவை இப்போது நான் எழுதிக்கொண்டு இருக்கும்போது, ‘அஷ்டமத்தில் சனி’ என்பார்களே, அதற்குப் பொருத்தமாக நான் குடிபோன எட்டாவது வீடு சனியன் பிடித்த வீடாக அமைந்த பொருத்தத்தை எண்ணி ஆச்சரியப்படுகிறேன்.

முந்தின சி.பி.டபிள்யூ.டி. குவார்ட்டர்ஸ் வீட்டுக்காக நான் அதன் உரிமையாளரிடம் தந்த அட்வான்ஸ் பணம் ரூ.15,000 அம்போ! திருப்பி வாங்க முடியவில்லை. அவரிடமிருந்து அரசாங்கம் வீட்டைப் பறித்துவிட்டது. அவரும் குடும்பத்தோடு வேறு ஊருக்குச் சென்று செட்டிலாகிவிட்டார். புதிய வீட்டுக்காக அட்வான்ஸ் ரூ.20,000 கொடுப்பதற்காக அலுவலகத்தில் கடனாகப் பெற்றது, மாதத் தவணையாக சம்பளத்தில் கழிந்ததில், மாதச் செலவுகளுக்குத் திண்டாட்டமானது. புரோக்கர் கமிஷன் ரூ.2,000 அழுதும், கே.கே.நகர் வீட்டில் தொடர்ந்து குடியிருக்க முடியாமல் காலி செய்யும்படி நேரிட்டது. அது மட்டுமல்ல, “நீங்க இப்படித் திடீர்னு காலி பண்ணுவீங்கன்னு தெரிஞ்சா, உங்களுக்கு நான் வீட்டை வாடகைக்கு விட்டிருக்கவே மாட்டேன்” என்று சத்தம் போட்ட வீட்டு ஓனர், அதிக பட்சமாக நாங்கள் தங்கியிருந்த 10 நாட்களுக்காக ஒரு மாத வாடகை ரூ.2,000-ஐ அட்வான்ஸ் தொகையில் கழித்துக்கொண்டு மீதியைத்தான் கொடுத்தார்.

பணக் கஷ்டம், மனக் கஷ்டம் அதிகம் அனுபவித்த வீடு அது. அங்கேதான் திருடன் புகுந்த சம்பவமும் நடந்தது.

முன்னாலும் பின்னாலும் கிரில் கம்பிக் கதவுகளைப் பூட்டிவிட்டுத்தான் படுத்துக் கொண்டோம். வீட்டின் பின்புறம் கிரில் கதவுக்கு வெளியேதான் டாய்லெட் இருந்தது.

கே.கே.நகர் வீட்டுக்குக் குடிபோன பதினைந்து நாட்களுக்குள்... ராத்திரி 12 மணிக்கு டமாலென்று ஒரு பெரிய சத்தம் கேட்டது. தூக்கிவாரிப் போட்டு, எழுந்தோம். உடனடியாக வீட்டின் எல்லா மின்விளக்குகளையும் போட்டோம். அதற்குள் மாடியிலிருந்து வீட்டு ஓனரும், அவரின் பிள்ளைகளும் இறங்கி வந்தார்கள். “என்ன... என்ன... ஏதோ சத்தம் கேட்டதே?” என்றார்கள். சத்தம் கேட்டுப் பக்கத்து வீடுகளிலிருந்தும்கூட ஆட்கள் திரண்டு வந்தார்கள்.

இந்தப் பகுதியில் திருட்டுப் பயம் அதிகம் என்றும், திருடர்கள் மாடிக்கு மாடி தாவி ஓடுவார்கள் என்றும் அவர்கள் சொன்னார்கள். வீட்டைச் சுற்றி வந்தபோது, டிரெயினேஜின் சதுரமான இரும்புப் பலகை கண்ணில் பட்டது. எந்தத் திருடனோ சுவரேறிக் குதிக்கும்போது, அதன் மீது குதித்திருக்க வேண்டும். அதனால்தான் சத்தம் அத்தனை பெரிதாகக் கேட்டிருக்கிறது. டார்ச் லைட்டுகளுடன் வீட்டைச் சுற்றித் தேடினோம். திருடன் அத்தனைச் சீக்கிரம் எங்கேயும் தப்பிச் சென்றிருக்க முடியாது என்று தோன்றியது. இங்கேதான் எங்கேயோ இருளில் பதுங்கியிருக்கிறான். எங்கே?

விசில் ஊதிக்கொண்டே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரை அழைத்து, விவரம் சொன்னோம். அவரும் இன்னொரு கான்ஸ்டபிளுமாக வந்து, பத்து நிமிடத்துக்கு மேல் வீட்டை அலசினார்கள். யாரையுமே காணோம். “ஓடிட்டிருப்பான் சார்! கில்லாடிங்க. அவ்வளவு சுலபத்துல மாட்டுவானுங்களா அவங்க!” என்று சர்டிஃபிகேட் கொடுத்துவிட்டு, “மறுபடி சத்தம் கேட்டுச்சுன்னா கூப்பிடுங்க” என்று அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்றார்கள். கூட்டமும் கலைந்தது. வீட்டு ஓனரும், பிள்ளைகளும் மாடியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். மின்விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு நாங்களும் படுத்துக்கொண்டோம்.

தூக்கம் வரவில்லை. எழுந்து உட்கார்ந்தோம். ‘சத்தம் கேட்ட அடுத்த கணம் எழுந்து எல்லா மின்விளக்குகளையும் போட்டுவிட்டோம்; திருடன் வந்திருந்தால் தப்பிச் சென்றிருக்க வாய்ப்பே இல்லை. பின், எங்கே போனான்?’ குழப்பமாக இருந்தது.

தூக்கம் பிடிக்காமல், சற்று நேரம் டி.வி. பார்க்கலாமே என்று டி.வி-யைப் போட்டோம். ஏதோ பழைய படப் பாடல்கள்.

திருடன் பற்றிய யோசனையாகவே பாடல் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு இருந்தபோதுதான், அந்தப் பாடல் காட்சி வந்தது. ‘தங்கச் சுரங்கம்’ படத்தில், சிவாஜியும் பாரதியும் பாடும் பாடல்.

‘சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் இரண்டு துள்ளி விளையாடுது...’

நானும் என் மனைவியும் சட்டென ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். எங்கள் மனசுக்குள் பளீர் என்று ஒரு மின்னல்!

ஒரு ஆழமான கிணற்றுக்குள், கயிற்றில் தொங்கியபடி சிவாஜியும் பாரதியும் ஆடுவது போன்ற காட்சி அது! ‘திருடனை எல்லா இடங்களிலும் தேடினோமே... கிணற்றுக்குள் தேடவே இல்லையே?’ என்று தோன்றியது. மீண்டும் மாடி ஏறிப் போய், வீட்டு ஓனரிடம் என் சந்தேகத்தைச் சொன்னேன்.

அவரும் அவரின் இரண்டு பிள்ளைகளும் இறங்கி வந்தார்கள். வீட்டின் பின்புறம் சென்று, கிணற்றுக்குள் டார்ச் அடித்துப் பார்க்க... கொஞ்சம் ஆழத்தில், மோட்டாருக்காகப் போட்டிருந்த இரும்பு பைப்பைப் பிடித்துக்கொண்டு, கிணற்றின் சுவர் ஓரமாக ஒண்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான் திருடன். அவன் உடம்பு கிடுகிடுவென நடுங்கிக்கொண்டு இருந்தது.

உடனே, வாசலுக்கு ஓடிப் போய், அடுத்த தெருவில் ‘பாரா’ போய்க்கொண்டிருந்த கான்ஸ்டபிளைக் கையோடு அழைத்துக்கொண்டு வந்தேன். கூடவே, இன்னொரு கான்ஸ்டபிளும் வந்தார்.

இருவரும் கிணற்றடிக்கு வந்து, உள்ளே பார்த்தனர். மேலே இருந்தபடியே நீண்ட கழியால் அந்தத் திருடனின் மண்டையில் குத்தி, “வெளியே வாடா!” என்று கத்தினர். அவன் மெதுவாக பைப்பைப் பிடித்துக்கொண்டு ஏறி வந்தான். கைக்கெட்டும் தூரம் வரைக்கும் வந்ததும், இரண்டு கான்ஸ்டபிளுமாக அவனை வெளியே இழுத்துப்போட்டு, அங்கேயே லத்தியால் அடி பின்னி எடுத்தனர்.

வேறு ஒரு வீட்டில் நகைகளைத் திருடிக்கொண்டு, மாடியிலிருந்து மாடிக்குத் தாவி ஓடும்போது, கால் இடறி அத்தனை உயரத்தில் இருந்து கீழே விழுந்திருக்கிறான். அதில் அவன் கால் உடைந்து, எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க வேண்டும். அவனால் நிற்க முடியவில்லை. வலியால் கதறினான். கான்ஸ்டபிள்கள் அவனைத் தரதரவென்று இழுத்துச் சென்றனர். “ஸ்டேஷன்ல வந்து ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிக் கொடுத்து, கையெழுத்துப் போட்டுட்டுப் போங்க!” என்று அழைத்தார்கள். வீட்டு ஓனர் அவர்களுடன் கிளம்பிப் போனார்.

அதன்பின், எங்களுக்குத் தூக்கம் சுத்தமாகப் போய்விட்டது.

நாங்கள் அந்த வீட்டில் குடியிருந்த நாற்பது நாட்களுக்குள், டூ-வீலர் திருட்டுப் போனது, ஈ.பி. மீட்டர் ரீடிங் பார்க்க வருவது மாதிரி வந்து, பெண்மணியின் கழுத்து நகையை அறுத்துக்கொண்டு ஓடியது, பீரோ புல்லிங் திருட்டு என அந்த ஏரியாவில் விதம் விதமாக பத்துப் பதினைந்து திருட்டுச் சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுவிட்டோம்.

நாலு வயது, இரண்டு வயதில் சின்ன குழந்தைகளை வைத்துக்கொண்டு, தொடர்ந்து அங்கே குடியிருக்க விரும்பாமல், சீக்கிரமே வேறு ஒரு வீடு பார்த்துக் குடிபோய்விட்டேன்.

நெசப்பாக்கம், திலகவதி அப்பார்ட்மென்ட்டில் குடியேறிய அந்த வீடு, நாங்கள் குடிபோன 9-வது வீடு.

எட்டுக் குடித்தனங்கள் கொண்ட அந்த அப்பார்ட்மென்ட்டில், ஒரு பிளாட்டில் வெள்ளைக்காரி (ஜெர்மன்) ஒருத்தி குடியிருந்தாள். அது ஒரு சுவாரஸ்யமான காதல் கதை!

தொடருவேன்...

.

6 comments:

திருடனைக் கண்டுபிடிக்க சினிமா பாட்டு உதவுச்சா... பேஷ் பேஷ்.
 
நாங்கள் அந்த வீட்டில் குடியிருந்த நாற்பது நாட்களுக்குள், டூ-வீலர் திருட்டுப் போனது, ஈ.பி. மீட்டர் ரீடிங் பார்க்க வருவது மாதிரி வந்து, பெண்மணியின் கழுத்து நகையை அறுத்துக்கொண்டு ஓடியது, பீரோ புல்லிங் திருட்டு என அந்த ஏரியாவில் விதம் விதமாக பத்துப் பதினைந்து திருட்டுச் சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுவிட்டோம்.

நாலு வயது, இரண்டு வயதில் சின்ன குழந்தைகளை வைத்துக்கொண்டு, தொடர்ந்து அங்கே குடியிருக்க விரும்பாமல், சீக்கிரமே வேறு ஒரு வீடு பார்த்துக் குடிபோய்விட்டேன்.


.... public safety is a question. mmmmm....
 
பதிவை படிக்கும் போது அந்த கால் உடைந்த திருடன் மேல் ஏனோ பரிதாபம் வந்தது; உங்கள் எழுத்து அப்படி உள்ளதோ?
 
தொடர் தொல்லைகளிலும், உங்களுக்குள் இருக்கும் ரசனையுணர்வு நிகழ்வுகளை பதிவு செய்து கொண்டே வந்திருக்கிறது ..அது தான் ஒன்று விடாமல் அத்தனையும் சுவாரஸ்யமாக வெளிவருகிறது.திருடனை தேடும் பொழுது திக்..திக் படிப்பவர்களுக்கும் தொற்றி க்கொள்கிறது...அடுத்து ஜெர்மன் காதலை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
 
கதையா படிக்கிறதுக்கு என்னமோ நல்லாத்தான் இருக்கு ஆனா அந்த சமயத்தில உங்களுக்கு எப்பிடி இருந்திருக்கும்னு நினைக்கிறப்ப அப்பிடியே 'பக்க்'னு ஆகுது சார்.
 
அதென்ன, நீங்கள் குடியேறிய ஒவ்வொரு வாடகை வீட்டுக்கும் ஒரு சுவாரஸ்யமான கதை வைத்திருக்கிறீர்கள்! எழுத்தாளர் அல்லவா! உங்கள் ஆழ்ந்த கவனிப்பும், சரளமாக எழுதும் திறனும்தான் சாதாரண சம்பவங்களைக்கூட சுவாரஸ்யமான விஷயங்கள் போல ஆக்கிவிடுகிறது என்று தோன்றுகிறது.