உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, January 13, 2021

இந்தியாவின் ‘செஸில் பி டெமில்’!

 


வே
லை தேடி திருத்துறைப்பூண்டியிலிருந்து ஒரு பழைய சைக்கிளில் சென்னை நோக்கிப் புறப்பட்டான் அந்த இளைஞன். கையில் போதிய பணம் இல்லை; வேலை கிடைக்குமா கிடைக்காதா என்பது தெரியவில்லை; எங்கே தங்குவது என்று புரியவில்லை. ஆனாலும், ‘இந்தியாவையே என்னைத் திரும்பிப் பார்க்க வைப்பேன்’ என்று தன் மனத்துக்குள் சூளுரைத்துக்கொண்டான் அவன். இதை அவன் வெளியில் சொல்லியிருந்தால், கேலி செய்து சிரித்திருக்கும் இந்தச் சமூகம். ஆனால், 95 ஆண்டுகளுக்கு முன்னால், எதிர்காலம் பற்றிய எந்தவிதத் திட்டமிடலும் இன்றி, பிழைப்புக்காகச் சென்னை வந்த அந்த இளைஞன், இந்தியாவை மட்டுமல்ல, உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டான். ஆம்… ‘சூயஸ் கால்வாய்க்குக் கிழக்கே உள்ள பெரிய சினிமா கம்பெனி – ஜெமினி’ என்று அவனது நிறுவனத்தைப் பற்றி அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகள் எல்லாம் பெருமையுடன் எழுதின. அந்த இளைஞனின் பெயர் சுப்ரமணியன் சீனிவாசன். எஸ்.எஸ்.வாசன் என்று சொன்னால், திரைப்பட உலகமே எழுந்து நின்று கை தட்டி ஆர்ப்பரிக்கும்.

ஆனந்த விகடன் பத்திரிகை, ஜெமினி ஸ்டூடியோஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் என இரட்டைக் குதிரைச் சவாரியை அநாயாசமாகச் செய்து சாதனை படைத்தவர் எஸ்.எஸ்.வாசன்.

தீக்கிரையான ‘மோஷன் ஸ்டூடியோ’ ஏலத்துக்கு வந்தது. அதை வாங்குவது அபசகுனம் என்று பலர் தடுத்தபோதும், மூடப் பழக்கங்களில் நம்பிக்கை இல்லாத எஸ்.எஸ்.வாசன் அதை வாங்கவே செய்தார். ஏலத்தொகையைக் குறிப்பிட்ட விதத்திலிருந்தே அவரின் புதுமையான அணுகுமுறைகள் தொடங்கிவிட்டன. சீலிட்ட கவர்களை வரிசையாகப் பிரித்து எழுபதாயிரம், எண்பதாயிரம் என்று படித்துக்கொண்டே வந்த ஹைகோர்ட் அதிகாரிக்கு வாசன் குறிப்பிட்டிருந்த தொகையைப் பார்த்ததும் பக்கென்று சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. ஆம்… ‘எண்பத்தாறாயிரத்து நானூற்று இருபத்தேழு ரூபாய், பதினோரணா, ஒன்பது பைசா’ என்று தம் ஏலத் தொகையைக் குறிப்பிட்டிருந்தார் வாசன். அதிக தொகையைக் குறிப்பிட்டவர் என்கிற வகையில், அந்த ஸ்டூடியோ வாசன் வசமானது. அதற்கு ‘ஜெமினி ஸ்டூடியோஸ்’ என்று நாமகரணம் சூட்டி, திரைப்படங்கள் எடுக்கத் தொடங்கினார்.

எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய பிரமாண்ட படம் ‘சந்திரலேகா’. இதில் இடம்பெற்ற டிரம் டான்ஸ் உலகப் புகழ் பெற்றது. இது இந்தியிலும் தயாராகி, வசூலை வாரிக் குவித்தது. முதன்முதலாக 600-க்கும் மேற்பட்ட பிரிண்ட்டுகள் போடப்பட்டு, உலகம் முழுக்கப் பல நாடுகளில் வெளியிடப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் ‘சந்திரலேகா’தான். வாசன் தயாரித்த ‘ஔவையார்’ படமும் இன்னொரு பிரமாண்டம்தான்.

1969-ம் ஆண்டு, எஸ்.எஸ்.வாசனுக்கு பத்மபூஷண் விருது அளித்து கௌரவித்த மத்திய அரசு, அவரின் நூற்றாண்டை முன்னிட்டு 2004-ம் ஆண்டு சிறப்புத் தபால் தலையும், தபால் உறையும் வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது.

‘இந்தியாவின் செஸில் பி டெமில்’ என்று போற்றப்பட்ட எஸ்.எஸ்.வாசன் பிறந்த தினம் இன்று.

 – 4.01.2021

0 comments: