மரண தண்டனையை ஒழிக்க வேண்டும், மரண தண்டனை
என்பது அநாகரிகம் என்றெல்லாம் அறிவுஜீவிகள் சிலரிடமிருந்து அவ்வப்போது குரல்கள் எழுந்துகொண்டிருக்கின்றன.
மரண தண்டனை தேவை என்பதற்கான என் வாதங்களை நான் பலமுறை முகநூலில் பதிவிட்டும்,
அவற்றுக்கு யாரிடமிருந்தும் இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. தன் முயற்சியில் சற்றும்
தளராத விக்கிரமன் போல், இங்கே மீண்டும் என் கருத்துக்களை முன்வைக்கிறேன். இவற்றுக்குச் சுற்றிவளைக்காமல்
யாரேனும் நியாயமான பதில்களைச் சொன்னால், மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்கிற கோஷ்டியில்
நானும் ஓர் உறுப்பினனாகச் சேர்ந்து, மரண தண்டனையை அகற்றுவதற்குக் குரல் கொடுக்கத் தயாராக
இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1: மரண தண்டனையை ஒழிக்கலாம். எப்போது? நாட்டில் உள்ள ஜனங்களில் முக்கால்வாசிப் பேர் புத்தன், காந்தி, ஏசுக்களாகும்போது! ஆனால், இப்போது இருப்பவர்களில் பெரும்பான்மையோர் என்னை மாதிரி மகா சாதுவான, குற்றம் செய்யப் பயந்த, அதே சமயம் தனக்கோ தன்னைச் சேர்ந்தவர்களுக்கோ தீங்கிழைத்தவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்கிற கோபம் கொண்ட, குற்றவாளிகளுக்கான நியாயமான தண்டனையை நீதிமன்றம் தரும் என்று இன்னமும் நம்புகிற மனிதர்கள்தான்.
கோவையில் அப்பாவிச் சிறுமியைக் கடத்தி, பாலியல்
பலாத்காரம் செய்து கொன்ற அயோக்கியர்களில் சிலரை அங்கேயே ‘என்கவுண்ட்டர்’ என்கிற பெயரில்
சுட்டுத் தள்ளிய காவல்துறையை ஜனங்கள் ஓஹோவென்று கொண்டாடியதன் காரணம் என்ன? நீதிமன்றத்
தீர்ப்புகளின்மீது ஜனங்கள் இப்போதே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்து வருவதும், செய்த
குற்றத்துக்கு அங்கேயே அப்போதே உடனடியாக அவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்கிற
துடிப்பும்தான். இந்த நிலையில், மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட்டுவிட்டால், கடுமையாகப்
பாதிக்கப்பட்ட அப்பாவிக் குடும்பத்தினருக்குக் கிடைக்கப் போகும் நியாயம் என்ன? எத்தனைக்
கொடுமையான வன்முறைச் செயலையும் செய்பவன், கூலிக்குக் கொல்பவன் எல்லாம் சுகமாகக் களி
தின்றுகொண்டு, ஜெயிலில் காலம் கழிப்பான்; அவனைச் சேர்ந்தவர்கள், வேறு யாராவது ஒரு வி.ஐ.பி-யைக்
கடத்தி வைத்துக்கொண்டு, இந்தக் குற்றவாளியை வெளியே விடச் சொன்னால், இந்த அரசாங்கமும்
விட்டுத் தொலைக்கும். அவன் சுகமாக வெளியேறி, அடுத்த வன்முறையை நிகழ்த்த ஒத்திகை பார்க்கப்
போய்விடுவான். அல்லது, காந்தி, நேரு, காமராஜ, அண்ணா என யாரேனும் ஒரு தலைவரின் பிறந்த
நாளைச் சொல்லி, அவன் தண்டனை அனுபவித்தது போதும், சிறையில் ‘வாடியது’ போதும் என ஆட்சியாளர்களே
மன்னித்து, வெளியே விட்டுவிடுவார்கள்.
இப்படியாக… படுபாதகத்தை, படுகொலைகளைச் செய்தவனுக்கு மரண தண்டனை கிடையாது; ஆயுள்தண்டனைதான்; பின்னாளில் அவனை விடுவிக்க இன்னுமொரு வன்முறைக் கூட்டம், பிரபலங்களில் யாரையாவது கடத்தி, தனது ஆசாமியை விடுவிக்கச் சொல்லி, அதையும் அரசாங்கம் நிறைவேற்றும் சாத்தியம் உண்டென்கிற நிலை ஏற்பட்டால், வேறு வழியில்லை; என்னைப் போன்ற வெகு சாதாரணர்களும் சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டிய நிலைதான் ஏற்படும். பின்பு, நாடு நாடாக இருக்காது. சுடுகாடுதான்!
இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? இப்படியொரு
நிலை வராது என்பதற்கு உத்தரவாதம் உண்டா?
2: எந்த ஒரு உச்சபட்ச குற்றத்துக்கும் மரண
தண்டனை விதிக்கலாகாது; ஆயுள்தண்டனையே போதுமானது; ஒரு தண்டனை, குற்றவாளிகளைத் திருத்துவதாக
அமையவேண்டுமே தவிர, அவர்களைப் பழிவாங்குவதாக இருக்கக்கூடாது என்பது மனித நேயர்கள் சிலரின்
மகத்தான எண்ணம்.
திருத்துவதான தண்டனை..?! என்ன செய்யலாம்? அந்த அயோக்கியர்களின் நகங்களைப் பிடுங்கலாமா? கண்களைப் பறிக்கலாமா? கை, கால்களை உடைத்து முடமாக்கலாமா? ஐயையோ... அதெல்லாம் கூடாது! மனித உரிமையாளர்கள் பொங்கிக்கொண்டு வந்துவிடுவார்களே! வேறென்ன செய்யலாம்? அவர்களை உட்கார வைத்து நீதி உபதேசம் செய்யலாம். பஜனைகள், சத்சங்கக் கூட்டங்கள் நடத்தலாம். அப்படியா?
எல்லோரின் கருத்தையும் திறந்த மனத்தோடு வரவேற்று,
அதில் நியாயம் இருக்குமானால் ஏற்கத் தயாராக இருக்கும் என்னையே மரண தண்டனைக்கு எதிராகத்
‘திருத்த’ இவர்களால் முடியவில்லை எனும்போது, வன்முறை செய்வதிலேயே சுகம் கண்டு, குளிர்
காய்ந்து, கொழுத்துப் போயிருக்கும் கடுங்குற்றவாளிகளை இவர்கள் எப்படித் திருத்திவிடலாம்
என்று இன்னமும் மனப்பால் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் எனக்குப் பேராச்சர்யமாக
இருக்கிறது.
குற்றவாளிகளைத் திருத்த வேண்டும் என்கிற
இவர்களின் எண்ணம் நிச்சயம் உயர்ந்ததுதான் அதில் சந்தேகமில்லை. ஆனால், யதார்த்தத்துக்குப்
புறம்பானது. இருப்பினும், குற்றவாளிகளைத் திருத்தும் உத்தேசத்தில் இருக்கிற இவர்களை
மனத்தில் கொண்டுதான் சமீபத்தில் முக நூலில் “புத்தன், ஏசு, காந்திகளெல்லாம் நம்மிடமிருந்து
இன்னும் மறையவில்லை; அவர்களை வெவ்வேறு பெயர்களில் என் முக நூல் நண்பர்களாகக் கிடைக்கும்
பாக்கியம் பெற்றிருக்கிறேன் என்பதை நினைக்கவே புல்லரிக்கிறது!” என்று பதிவிட்டிருந்தேன்.
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்… கடுமையான
குற்றவாளிகளைத் திருத்திவிடலாம் என்பது உங்கள் பகற்கனவல்லவா? அப்படி இதுவரை சிறையில்
இருக்கும் எத்தனைக் குற்றவாளிகள் திருத்தி நல்வழிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று
சொல்ல முடியுமா?
3: மரண தண்டனை வேண்டாம் என்பவர்கள் முன்வைக்கும் முக்கியமான கருத்து, ஒரு நிரபராதிக்கு மரண தண்டனை வழங்கிவிட்டால், பின்னர் திருத்த வாய்ப்பில்லாது போகும் என்பதுதான்.
நிரபராதிக்கு மரண தண்டனை வழங்கிவிடக்கூடாது, அது மகா தவறு என்பதெல்லாம் நியாயம்தான்! ஆனால், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மரண தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. வழக்கு, விசாரணை எனப் பல ஆண்டுகள் நீடித்து, குற்றம் எந்தவித சிறு சந்தேகத்துக்கும் இடமில்லாமல் நிரூபிக்கப்பட்ட பின்பே வழங்கப்படுகின்றன. அப்படியும் லட்சத்தில் ஒரு கேஸ், நிரபராதிக்கு வழங்கப்பட்டுவிடுமானால், அதைத் துர்பாக்கியம் என்று கடந்துபோக வேண்டியதுதான். தீவிரவாதிகள் தாக்கும்போது, கொலைகாரர்கள் வீடு புகுந்து தாக்கும்போதெல்லாம் எத்தனையோ அப்பாவிகள் இறப்பதில்லையா, அப்போது என்ன செய்கிறோம், அவர்களுக்காக வருத்தப்படுவதைத் தவிர? அது போலக் கடந்துசெல்ல வேண்டியதுதான். ஆனால், இத்தனை ஆண்டுகளில் இந்தியாவில், எந்தவொரு நிரபராதியும் நீதிமன்றத் தீர்ப்புகளில் மரணதண்டனை பெற்று இறந்ததாக எனக்குத் தெரியவில்லை.
வேறு ஏதோ நாடுகளில் இவ்வாறு தவறுகள் நிகழ்ந்துள்ளன
என்று சிலர் உதாரணம் காட்டுகிறார்கள். அந்த நாடுகளின் அரசியல் வேறு; சட்டங்கள் வேறு;
நடைமுறை வேறு. அவற்றோடு நமது நடைமுறைகளையும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் ஒப்பிடுவது
சரியே அல்ல!
நமது நாட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட
மரண தண்டனைகளில் எவை எவை பின்னாளில் அநியாயமாகக் கொடுக்கப்பட்ட தண்டனைகள் என்று சொல்ல
முடியுமா? அப்படியே இருப்பினும் அவை மிக மிகக் குறைந்த சதவிகிதமே!
4: ‘வீட்டுக்குள் விஷப் பாம்பு நுழைந்து
கொத்தியதில் ஒருவர் மாண்டு போகிறார். அந்தப் பாம்பை அடித்துக் கொல்வதே சரி என்று சொன்னால்,
பக்கத்து வீட்டில் யாரோ ஒருவர் ஒரு பட்டாம்பூச்சியை நசுக்கிக் கொன்றதைச் சுட்டிக்காட்டி,
‘இதற்குத்தான் கொலை என்பதே கூடாது என்கிறோம்’ என்று விதண்டாவாதம் செய்பவர்களை என்ன
செய்வது?’ என்று என் முகநூலில் ஒரு நிலைத் தகவல் இட்டிருந்தேன்.
இதற்கு, ''சவூதியில் தூக்கிலிடப்பட்ட அப்பாவிப்
பெண்ணான ரிசானாவை முன்வைத்து பலரும் தூக்குதண்டனையை எதிர்க்கிறார்கள். ஆனால், சில பட்டாம்பூச்சிகள்
சாகின்றன என்பதற்காக, கசாப் மாதிரியான விஷப்பாம்புகளை சும்மா விட்டுவிட இயலுமா?'' என்பதே
இதன் பொருள் என நண்பர் அதிஷா வினோ அழகாக, அர்த்தம் கெடாமல் விளக்கியிருக்கிறார். நன்றி!
இதற்கு அவரின் வாதங்களைப் பார்ப்போம்.
//பாம்புகள் நம் சுற்றுச்சூழலில் மிக முக்கியமானவை.
அவற்றைக் கொல்வது சட்டப்படி குற்றமாகும். மீறிச் செய்பவர்களுக்குத் சிறைத் தண்டனைகூட
வழங்கப்படும்.// பாம்புகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் நேரடியாக எடுத்துக்கொண்டதால்
விளைந்திருக்கும் அபத்த வாதம் இது. வன்முறையாளர்கள் (பாம்புகள்) முக்கியமானவர்கள் இல்லை.
அவர்களைச் சட்டப்படி கொல்வதிலும் தவறில்லை.
//விஷப் பாம்புகள் வீட்டுக்குள் வருகிறதென்றால்
உங்கள் வீட்டில் ஏகப்பட்ட எலிகள் இருக்கலாம். அதைச் சரிசெய்யவேண்டும். அதோடு நிறைய
குப்பைகளும் பூச்சிகளும்கூட இருக்கலாம். அதை சாப்பிடுவதற்காகத்தான் இரை தேடி பாம்புகள்
நம் வீட்டுக்கு வருகின்றன. வீட்டுக்கு அருகிலோ வீட்டுக்கு உள்ளேயோ குப்பைகளைச் சேகரித்து
வைப்பது ஆபத்தானது. அது பாம்புகளை ஈர்க்கக் கூடியவை. எனவே, நம் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக
வைத்துக்கொண்டால் விஷப்பாம்புகள் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.// இதை நான் இப்படித்தான்
எடுத்துக்கொள்ள முடியும். வன்முறையாளர்கள், கொள்ளைக்காரர்கள் வீட்டுக்குள் நுழைந்து
வன்முறை நிகழ்த்துகிறார்கள் என்றால், வீட்டில் நிறைய நகை நட்டு வைத்திருப்பதும், விலை
உயர்ந்த பொருள்கள் வைத்திருப்பதும், பணம் வைத்திருப்பதும்தான் காரணம். ஏழை எளியவர்கள்
வீட்டில் கொள்ளைக்காரர்கள் புகுவது இல்லை. எனவே, யாரும் வசதியான வீட்டில் வசிக்காமல்,
குடிசைகளுக்குள் வசித்தால் பெரும்பாலான வன்முறைகளை, கொலைகளைத் தவிர்த்துவிட முடியும்.
அபத்தத்தின் உச்சம்!
//தமிழ்நாட்டில் இருக்கிற பாம்புகளில் ஐந்து
சதவீதத்துக்கும் குறைவான பாம்புகளே விஷத்தன்மையுடையவை என்கிறது ஒரு ஆய்வு. அதனால் எல்லா
பாம்புகளையுமே கொல்லத் தேவையில்லை. அவற்றைப் பிடித்து வனத்துறையினர் வசம் ஒப்படைக்க
ஏற்பாடுகள் செய்யலாம்.// உண்மைதான். அந்த ஐந்து சதவீத விஷப் பாம்புகளிலும் ஐந்து சதவீத
பாம்புகளே மனிதர்களைக் கொத்திக் கொல்கின்றன. அவற்றை உயிரோடு பிடிக்க முடிந்தால் நல்லது.
அவற்றைக் கொல்லத் தேவையில்லை. காரணம், அவை திட்டமிட்டு மனிதர்களைக் கொல்வதில்லை. ஆனால்,
நாம் கொசுக்களை அப்படிப் பாதுகாப்பாகப் பிடித்து எந்தத் துறையிடமும் ஒப்படைப்பதில்லை.
காயில், மேட், பேட் எனச் சகலவிதங்களிலும் அழித்து ஒழிக்கிறோம். ஆகவே, பாம்புகள் என்பதை
ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் நேரடியாக எடுத்துக்கொண்டதன் விளைவுதான் இந்த வாதமும்.
//ஒரே ஒரு பாம்பைக் கொன்றுவிட்டால், இனிமேல்
உங்கள் வீட்டுக்கு விஷப் பாம்புகளே வராது என்கிற உத்திரவாதத்தினை சர்வேசனால் கூட வழங்கமுடியாது.
காரணம், பாம்புகள் எப்போதும் பாம்புகளாகவே இருக்கின்றன.// வேடிக்கையாக இருக்கிறது இந்த
வாதம். வீட்டுக்குள் நுழைந்த ஒரு பாம்பை அடித்துக் கொல்லும்போது, இதைக் கொல்வதால் நாளை
வேறு பாம்பு வருமா, வராதா என்றெல்லாம் யாரும் யோசித்துக் கொல்வதில்லை. அந்தப் பாம்பு
செய்த செயலுக்கு அப்போதே தண்டனை. அவ்வளவுதான்! மற்றபடி, நாளை வேறு பாம்புகள் வராமல்
இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுக்க வேண்டியதுதான்.
//பாம்புகளை நாகராஜன் என்றும், சிவபெருமான்
கழுத்திலும் போட்டு அழகு பார்க்கிற உத்தமமான மக்கள் நாம் என்பதையும் நினைவில் கொள்வது
உத்தமம்.// பகுத்தறிவாளர்கள் இப்படித்தான் தங்களுக்குச் சவுகரியமாக இருக்கிறபோது புராண
உதாரணங்களை மேற்கோள் காட்டுவார்கள். அதற்கு அதிஷாவும் விதிவிலக்கல்ல என்று நிரூபித்திருக்கிறார்.
தவறு செய்கிறவர்களை அடியோடு அழித்தொழிக்கத்தான் இந்துக் கடவுள்கள் கையில் வன்முறை ஆயுதங்கள்
இருக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது உத்தமம் என்று நான் புராண உதாரணம் சொன்னால்
அதிஷா ஏற்பாரா என்பது சந்தேகமே!
இந்த எனது ஸ்டேட்டஸ் தொடர்பாக, ‘அவ்வப்போது
அப்பாவிகளைக் கொன்றாலும் பரவாயில்லை; கிரிமினல்களின் தலைகளை தறித்து விட வேண்டும் என்பதா
உங்கள் வாதம்?’ என்று கேட்டிருக்கிறார் ஒரு நண்பர். அப்படியல்ல; ரயில் விபத்துக்குள்ளாகிவிட்டது
என்பதற்காக பாதுகாப்பு வழிமுறைகளை இன்னும் சீரமைக்கலாமே தவிர, ரயிலையே ரத்து செய்துவிடக்
கூடாது என்பதே என் வாதம்.
”உங்களை மாதிரி ஆளுகளுக்காகதான் அந்தக் காலத்திலேயே சட்டப் படங்கள் எடுத்துப் புகழ்பெற்ற விஜய்யின் தகப்பனாரான எஸ்ஏசி சொல்லியிருக்கிறார்.. ’நூறு குற்றவாளிகள் தப்பலாம்; ஆனால், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக்கூடாது’னு' என்று நக்கலடிக்கிறார் அதிஷா வினோ. எஸ்.ஏ.சி. ஒன்றும்
புதிதாகச் சொல்லிவிடவில்லை. இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் சொல்வதைத்தான் அவரும்
சொல்லியிருக்கிறார். இதை மனத்தில் கொண்டுதான் நீதிமன்றங்களும் வெகு கவனமாக தண்டனைகள்
தருகின்றன.
5: கொலையாளி செய்வது கொலை என்றால், மரண தண்டனையை
நிறைவேற்றுவதும் கொலைதான் என்பது சிலரின் வாதம். யாரும் கொலை செய்தல் ஆகாது என்பது
சட்டம் என்றால், அரசு/நீதி இயந்திரம் மட்டும் எப்படி அக்கொலையை செய்யச் அனுமதிக்க இயலும்
என்பது நண்பர் ஒருவரின் கேள்வி.
நீதிமன்றம் என்பது என்ன? எதனால் நீதிமன்றம்
என்கிற ஓர் அமைப்பு உருவானது? ஆதிகாலத்தில், நாகரிகம் மேம்படாதிருந்த காலத்தில், தன்
மகனைக் கொலை செய்தவனையோ அல்லது அவனது மகனையோ கொன்று பழி தீர்த்துக்கொள்வதுதான் மக்களின்
வழிமுறையாக இருந்தது. பின்னர், நாகரிகம் வளர வளர, பழிவாங்கும் போக்கு அகலவேண்டும்;
எது சரி, எது நியாயம் என்பதை பொதுவான ஒரு நியாயாதிபதி கண்டறிந்து, அவரது தீர்ப்புக்கு
இரு தரப்பினரும் கட்டுப்பட வேண்டும் என்கிற நியமம் உண்டாயிற்று. நீதிமன்றங்கள் உருவாயின.
அவை, மக்களுக்காக இயங்குகிற ஓர் அம்சம். பழி வாங்குதல் கூடாது என்பதற்காகவே
உருவான அமைப்பு. எனவே, அது தருவது தண்டனை; கொலை அல்ல! அப்படியிருக்க, நீதிமன்றம் தரும்
தீர்ப்பைப் பழிவாங்குதல் என்றும், அது தரும் தண்டனையை வன்முறையாளர்கள் செய்யும் அக்கிரமக் கொலைகளோடு
ஒப்பிட்டு இரண்டும் ஒன்று
என்று சொல்வதும் அபத்தத்தின் உச்சம் இல்லையா?
6: ‘நீதிமன்றத் தீர்ப்புகள் எல்லாமே சரியா?
அதில் தவறுகளே இல்லையா? எனவே, திருத்தமுடியாத
மரண தண்டனைத் தண்டனையை அகற்றுவதே சரி!’ என்கிறார்கள் சிலர்.
வாதப் பிரதிவாதங்களைக் கொண்டுதான் நீதிமன்றங்கள்
தீர்ப்பளிக்கின்றன. நமது நாட்டில் எதற்கெடுத்தாலும் மரண தண்டனை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடுவதில்லை.
பல ஆண்டுகள் நடக்கும் வழக்கில், ஊசி முனையளவு சந்தேகம் இருந்தாலும், சந்தேகத்தின் பலனைக்
குற்றவாளிக்கே சாதகமாக்கி, அவனை மரண தண்டனையிலிருந்து விலக்கு அளித்து, ஆயுள் தண்டனை
போன்ற தண்டனைகளைப் பரிந்துரைக்கின்றன. எதில்தான் தவறுகள் இல்லை? டாக்டர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக இனி எந்த டாக்டரும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளக்கூடாது, ஆசிரியர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக இனி பள்ளிக்கூடமே இருக்கக்கூடாது, போலீஸ் தவறு செய்கிறது என்பதற்காக இனி காவல் நிலையங்களே இருக்கக்கூடாது என்பது எத்தனை அபத்தமோ, அத்தனை அபத்தம் நீதிமன்றங்கள் தேவையில்லை என்பதும், மரண தண்டனை தேவையில்லை என்பதும்.
7: “குற்றம்,வக்கிரத் தன்மை என்பதெல்லாம் ஆளுக்கு ஆள் மாறுபடும். மாட்டுக்கறி சாப்பிடுவது சிலருக்குக் கொடூரமான குற்றமாக இருக்கலாம். ஆனால், சிலருக்கு அது சாதாரணமான விஷயம்” என்று மரண தண்டனைக்கு
எதிராகக் குரல் கொடுக்கும் ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
உண்மைதான். குற்றத்தின் வீர்யம் ஆளுக்கு
ஆள் மாறுபடும்தான். அதனால்தான் தனி மனிதர்கள் தீர்ப்பு எழுதக்கூடாதென்று ஒரு நீதிமன்றத்தைப்
பொதுவில் வைத்திருக்கிறோம். அது தரும் தீர்ப்பையும் கூடாது என்றால் எப்படி?
மற்றபடி, ’உயிருள்ள பெண்ணின் பிறப்புறுப்பில் கையைச் செலுத்தி கருப்பையைப் பிடுங்கி வெளியில் எரிவது யாருக்கு மாட்டுக்கறி சாப்பிடுவது மாதிரி, யாருக்கு இட்லி சாப்பிடுவதுபோல் என்று சொல்வீர்கள்? இதை சாதாரணமான விஷயமாக எடுத்துக்கொள்பவர் என்ன மனநிலையில் இருக்கிறார்?’ என்று நண்பர் ஒருவர் கேட்ட
கேள்விகளையே நான் இங்கு பதிவு செய்கிறேன். இப்படிப்பட்டவர்களுக்கும் வெறும் ஆயுள் தண்டனைதான்
அதிகபட்ச தண்டனையா?
8: “குற்றங்கள் குறைய மூலகாரணங்களை அறிந்து வேரறுக்க வேண்டுமே தவிர, குற்றவாளியைத் தூக்கில் இட்டால் குற்றங்கள் குறைந்துவிடும் என்பது கற்பனாவாதமாகவே படுகிறது” என்கிறார் ஓர்
அன்பர்.
குற்றவாளியைத் தூக்கில் இட்டால் குற்றங்கள்
குறைந்துவிடும் என்று எந்த மடையனும் நினைக்க மாட்டான். ஒருவன் செய்த உச்சபட்ச தவற்றுக்கான
உச்சபட்ச தண்டனை அது. அவ்வளவுதான்! மற்றபடி, குற்றங்கள் குறைவதற்கு அரசாங்கம் தகுதியானவர்களின்
வழிகாட்டுதலில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது முக்கியம். அது ஒருபுறம்.
அதற்கும் தண்டனைகளுக்கும் சம்பந்தம் இல்லை.
9: “அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசன் சொல்லும் நிஜ சம்பவம் ஒன்று. ஒரு வழக்கில், ஒரு பெண்ணின் நகையைத் திருடி, அவளைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதிப்பார் நீதிபதி. அதில் ஒருவன் மட்டும் எந்தச் சலனமும் இல்லாமல் இருப்பான். அவன் ஏற்கனவே பல குற்றங்களில் ஈடுபட்டவன். அதில் எல்லாம் அவனை விட்டுவிடுவார்கள். இந்த வழக்கில் அவனைத் தவறாகத் தூக்குமேடை ஏற்றிவிடுவார்கள். அவன் செய்த அந்தத் தவற்றுக்கு இங்கே தண்டனை என நீங்கள் சொன்னால், நான் ஒன்றும் பண்ண முடியாது. கட்சி மாறுவீர்களா என ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று
சொல்லியிருக்கிறார் ஒரு நண்பர்.
நிரபராதிக்குத் தண்டனை விதிப்பது எந்த விதத்திலும்
நியாயம் இல்லை என்பதே என் திடமான கருத்து. ஆனால், இங்கே நீதிமன்றங்கள் எதுவும் ஒருவனை
நிரபராதியோ என இம்மியளவு சந்தேகப்பட்டாலும், மரண தண்டனை வழங்குவதில்லை என்பதை நான்
நம்புகிறேன். மிக மிக அபூர்வமாக சில கேஸ்களில் அப்படித் தவறுதலாகத் தண்டனை வழங்கப்பட்டுவிடலாம்.
முன்பே சொன்னது போல், அதை துரதிர்ஷ்டம் என்றுதான் கடந்து போகவேண்டுமே தவிர, இந்தக்
காரணத்துக்காக இனி மரண தண்டனையே தேவையில்லை என விலக்குவது, பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றெரிச்சலைத்தான்
வளர்க்கும். இதனால், என்னைப் போன்ற சாமானியனும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு,
தீர்ப்பெழுதத் தொடங்கிவிடுவான். பின்பு, எதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தோமோ,
(அதாவது நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது என்று விரும்பினோமோ) அதுதான் இன்னும் அதிகமாக
நிகழும்.
அப்படியான துர்மரணங்கள் நிகழ்ந்தால், மனத்தை
ஆறுதல்படுத்திக் கொள்ளத்தான், இந்து தர்மங்கள் ‘முன்வினைப்பயன்’ என்றும் ‘தலைவிதி’
என்றும், ‘போன ஜென்மத்தில் செய்த பாவம்’ என்றும் சொல்லி வைத்திருக்கின்றன. இது விபத்தால்
ஏற்படும் மரணங்களுக்கும், வன்முறையாளர்களால் ஏற்படும் மரணங்களுக்கும்கூடப் பொருந்தும்.
பாதிக்கப்பட்டவர்கள் அப்படி மனத்தைத் தேற்றிக்கொண்டால் நல்லதுதான். ஆனால், நான் இங்கே
யதார்த்தத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.
10: “மரண தண்டனை வேண்டுமா, வேண்டாமா..? சிம்பிளான பதில்: நம்மையோ, நம்மைச் சேர்ந்தவர்களையோ மரண தண்டனை அண்டாவதவரை ஆதரிப்போம். தட்சஸால்!” என்று சொல்லியிருந்தார் ஓர் அன்பர். அவருக்கு என்
பதில்: ”மரண தண்டனை வேண்டாம் என எதிர்ப்போம் - நம்மையோ நம்மைச் சேர்ந்தவர்களையோ வன்முறையாளர்கள் கடும் வன்முறைக்கு ஆளாக்காதவரை! தட்ஸ் ஆல்!”
11: ”மரண தண்டனை தவறல்ல. ஆனால் லஞ்சம், அரசியல் செல்வாக்கு, சாதி போன்றவை நீதியை வெல்லக்கூடிய இந்தியா போன்ற நாடுகள் மரண தண்டனை விதிக்கத் தகுதியற்றவை. ஏனெனில், அவையும் இங்கே தவறாகப் பயன்படுத்தப்படக் கூடும்.” என்பது ஒருவரின் வாதம்.
இது நியாயமான வாதம்தான். நீதியை வெல்லக்கூடிய
பல விஷயங்கள் இங்கே உள்ளனதான். மரண தண்டனையை ஒழித்துவிடுவதால் மட்டும் அந்த விஷயங்கள்
இல்லாமல் போய்விடாது. மரண தண்டனை இல்லாமல் மர்மச் சாவுகளுக்கு அவை வழி வகுக்கும். அவ்வளவுதான்!
நீதியின் பேரில் நம்பிக்கை இல்லாமல்தான் (இரண்டு விதமாகவும். அதாவது, நமக்கு எங்கே
நீதி கிடைக்கப் போகிறது என்கிற அவநம்பிக்கை; நீதியை வளைத்துவிடலாம் என்கிற நம்பிக்கை.)
இப்போதே அப்படியான பல மர்மச் சாவுகள் நடைபெற்று வருகின்றன. மரண தண்டனையை ஒழிப்பதால்,
அவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.
12: “இந்தியாவில் இதுவரை நடத்தப்பட்டிருக்கும் மரண தண்டனைகள் அனைத்தும் எந்தச் சந்தேகத்தையும் எழுப்ப முடியாத அளவிற்கு அப்பழுக்கின்றிதான் காவல் துறையில் இருந்து, நீதித்துறை வரை நடந்திருக்கும் என்று உறுதியாக நம்புகிறீர்களா? நமது அமைப்புகள் மீது அத்தனை நம்பிக்கை இருக்கிறதா உங்களுக்கு?” என்று கேட்டுள்ளார் ஒருவர்.
தீர்ப்புகள் 100 சதவிகிதம் சுத்தமானவை என்கிற நம்பிக்கை எனக்கும் இல்லைதான். ஆனால்,
எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு சதவிகிதம் தீர்ப்பு தவறாகப் போவதையே திரும்பத் திரும்பக்
காரணம் காட்டி, மரண தண்டனையையே ரத்து செய்ய வேண்டும் என்று சொல்வது சரியல்ல என்கிறேன்.
13: “இந்தியா மட்டுமல்ல, ஆம்னஸ்டி அமைப்பின் அறிக்கையின்படி உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களே அரசு அமைப்புகள் கொடுக்கும் மரண தண்டனைகளைப் பெறுபவர்களாக இருக்கிறார்கள். எங்காவது பிரபலமான, பணக்கார நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அனைவருக்கும் சமமான தண்டனை கொடுக்கப்பட முடியாத நிலை இருக்கும்போது, திருத்திக்கொள்ள முடியாத ஒரு தண்டனையை வைத்திருப்பது மிகப் பெரிய மனித உரிமை மீறல்” என்பது ஒருவரின் வாதம்.
இது நியாயமான வாதம்தான். பணக்காரர்கள், அரசியல்
பலம் மிக்கவர்கள் நீதிமன்றத் தண்டனைகள் பெறுவதில்லை. தமது செல்வாக்கால் தப்பித்துவிடுகிறார்கள்.
ஆனால், அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்; அல்லது, தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத்
தள்ளப்படுகிறார்கள். மரண தண்டனையை ஒழிப்பதால், இம்மாதிரி கொலைகளும், தற்கொலைகளும் அதிகரித்துவிடும். அதுதான் எனது பயம்.
14: “காவல் துறை நடத்தும் என்கவுண்டர் போன்றவற்றிற்கு ஆதரவாக ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் கருத்துக்கள் பதற வைக்கின்றன. இதைப் பதிவு செய்து வைப்பதன் மூலம் மரணதண்டனை என்ற அநீதியைப் பற்றிய சிந்தனை ஒரு சிலருக்காவது எழாதா என்ற நப்பாசையே காரணம்” என்று ஒருவர் சொல்லியிருந்தார்.
முதல் கருத்து சரியே! என்கவுண்டருக்கு ஏன்
ஆதரவுக் குரல்கள் எழுகின்றன? நீதிமன்றம் அந்தக் குற்றவாளிகளுக்கு தாங்கள் எதிர்பார்க்கும்
நியாயமான தண்டனையைத் தராது என்று மக்கள் நினைப்பதுதானே காரணம்? என்னையும் என்கவுண்ட்டர்களுக்கு
ஆதரவான கருத்துக்கள் பதற வைக்கின்றன. மரண தண்டனையை ஒழித்தால், தனி மனித என்கவுண்ட்டர்கள்
அதிகம் நிகழும் ஆபத்து இருக்கிறது என பயப்படுகிறேன்.
15: “உச்சபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனையே
போதும்; ஒருவன் தன் தவற்றை உணர ஆயுள் தண்டனையே போதுமானது. குற்றங்களைத் தடுக்க மரண
தண்டனைப் பற்றிய பயம் உதவும் என ஒரு கருத்து நிலவுகிறது. தவறு செய்பவர் எவரும் தண்டனை
குறித்து சிந்திப்பதில்லை; மாறாக, தான் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற நம்பிக்கையிலேயே
குற்றம் இழைக்கின்றனர். பிறகு, பயம் எப்படிக் குற்றத்தை தடுக்க உதவும்? மேலும், மரண
தண்டனையை ஒழித்தால், குற்றங்கள் அதிகரிக்கும் என்ற வாதத்திற்கு எந்த விஞ்ஞானப் பூர்வ
ஆதாரமும் இல்லை. மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாட்டில், அதன் பின், குற்ற சதவிகிதம் அதிகரிக்கவில்லை
என்று சொல்கிறது!” – மரண தண்டனை
மக்கள் எதிர்ப்பு இயக்கம்' நடத்திய "98ஆம் ஆண்டு வி.ஆர்.கிருஷ்ணய்யர் பிறந்த நாள்"
நிகழ்வில், மரண தண்டனை எதிர்ப்பிற்கான கிருஷ்ணய்யர் விருது பெற்ற வழக்கறிஞர் யுக் மோகித்
சவுத்ரி சொன்ன கருத்து இது என ஒரு வலைப்பூவில் படித்தேன்.
அவர் தனது உரையை முடித்ததும் அவரிடம், “மூன்று வயதுக் குழந்தையை ஒருவன் கற்பழித்து கொடூரமாக கொன்றுவிடுகிறான். அவனுக்கும் மரண தண்டனை வேண்டாம் என்பது பொருந்துமா?” என்று கேட்கப்பட்டதாம்.
அதற்கு, அவர் “மூன்று
வயதுக் குழந்தை கற்பழிக்கப்பட்டுவிட்டது. பதிலுக்கு அவன் வீட்டுக் குழந்தையைக் கற்பழித்து விடலாமா? நம் வீட்டை கொள்ளை அடித்தவன் வீட்டிற்குள் புகுந்து நாமும் கொள்ளையடித்து விடலாமா? இது ரொம்ப அபத்தமாக பழிவாங்கும் செயல் போல இருக்குதில்லையா?” என்றாராம்.
அவரது பதில்தான் அபத்தத்தின் உச்சம். மூன்று
வயதுக் குழந்தையைக் கற்பழித்துக் கொடூரமாகக் கொன்றவனைக் கொல்லக்கூடாதா என்று கேட்டால்,
விதண்டாவாதமாகக் கேட்டால் என்ன செய்வது? நீதிபதிகள் யாரும் தங்களுக்கு இழைக்கப்பட்ட
கொடுமைக்காகத் தண்டனை வழங்குவதில்லை. எது நியாயம், எது அநியாயம் என்று பொதுவிலிருந்து
பார்த்துத் தீர்ப்பளிக்கிறார்கள். ஆகவே, நீதிமன்றத் தீர்ப்புகள் பழிக்குப் பழி அல்ல!
அப்படி அவற்றை வர்ணிப்பது நீதிமன்றங்களை அவமதிக்கும் செயல்.
“தவறு செய்பவர் எவரும் தண்டனை குறித்து சிந்திப்பதில்லை;
மாறாக, தான் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற நம்பிக்கையிலேயே குற்றம் இழைக்கின்றனர்.”
ஆமாம். மரண தண்டனையையும் ஒழித்துவிட்டால், அந்த நம்பிக்கை இன்னும் வலுப்படும்; புதிய
குற்றவாளிகள் உருவாகக் காரணமாகும் என்பதே என் பயம்.
16. இறுதியாக…. “எனக்கோ என் குடும்பத்துக்கோ
கொடிய பாதகத்தைச் செய்தவனுக்குக்கூட தூக்குத் தண்டனை அளிக்க நான் சம்மதிக்க மாட்டேன்”
என்று உணர்ச்சிவசப்பட்டு ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். இது பழைய கால தமிழ் சினிமா
ஹீரோ அல்லது தற்கால மெகா சீரியலின் அப்பழுக்கற்ற கதாநாயகி பேசுகிற வசனம் போன்று இருக்கிறதே
தவிர, யதார்த்தமான பேச்சாக இல்லை. “என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் முச்சந்தியில்
தூக்கில் தொங்கத் தயார்” என்று சவால் விடும் அரசியல்வாதிகளின் பேச்சுக்கும் மேலேயுள்ள
இந்தப் பேச்சுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நானும்கூட உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லலாம்....
“எந்தக் குற்றமும் செய்யாமல் விதிவசத்தால் என் மீது குற்றம் சுமத்தப்பட்டு எனக்கு மரண
தண்டனை விதிக்கப்படுமானால், அப்போதும்கூட மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதை
நான் ஏற்க மாட்டேன்.”
மரண தண்டனை
கூடாது என்பதற்குப் பெரும்பான்மையோர் வைத்த வாதம், நிரபராதிகளுக்கு மரண
தண்டனை வழங்கப்பட்டுவிட்டால், பின்பு அவற்றைத் திருத்தி எழுத முடியாமல்
போய்விடும் என்பதுதான். அது சரியே! (இது குறித்த எனது கருத்துக்களை இதே
கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்.) ஆக, நிரபராதிகள் தண்டனைக்கு ஆளாகிவிடாத
மாதிரி நமது குற்றவியல் சட்டத்தைதான் இன்னும் செம்மைப்படுத்த வேண்டும்,
அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டுமே தவிர, மரண தண்டனையை அறவே
எடுத்துவிடுவது என்கிற யோசனை சரியானது மட்டுமல்ல; ஆபத்தானதும்கூட!
‘நான் ஏன் மரண தண்டனை ஆதரிக்கிறேன்?’ என்பதற்கான
என் கருத்துக்களை இங்கே முன்வைத்துவிட்டேன். இவை, மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதை
நான் கடைசி வரை ஏற்க மாட்டேன் என்று முரண்டு பிடிப்பதற்கான அடையாளமோ, விளக்கவுரையோ
அல்ல. ‘இதனால் இதனால் மரண தண்டனை ஒழிப்பை என்னால் ஏற்க முடியவில்லை; எனக்குத் தகுந்த
விளக்கங்கள் கொடுத்து, என் மனத்தை கன்வின்ஸ் செய்தால், நானும் மரண தண்டனைக்கு எதிராகக்
குரல் கொடுக்கத் தயாராகவே இருக்கிறேன்’ என்பதற்கான வரவேற்புக் கட்டுரையே இது.
12 comments:
1. மரண தண்டனை அரை நொடி வலியோடு போய் விடும் என்கிறேன். ஒரு படத்தின் த்ரில்லே ஒரு சம்பவம் அல்ல, அந்த சம்பவம் நிகழும் முன் கிடைக்கும் எதிர்பார்ப்பு தான் என்கிறார் ஹிட்ச்காக்.
(There is no terror in the bang, only in the anticipation of it. by Alfred Hitchcock)
இது மரணத்திற்கு எவ்வளவு அற்புதமாய் பொருந்தும் பாருங்கள். மரணம் அரை நொடி வலி, முற்றான விடுதலை. அவ்வளவு கொடியவனை, பலரை துடிக்க வைத்து ரசித்தவனை, ஏன் மஹிந்த ராஜபக்சே ஆனாலும் கூட சட்டென கொன்று விடுவித்தல், நியாயமா?
2. அரசியல். யோசித்து பாருங்கள். நாம் எதை நோக்கி செல்ல வேண்டும். அருகே இருக்கும் சீனாவில் ஒரு வழக்கு தோராயமாக தீர்பாகும் காலம் மூன்று மாதம். நமக்கோ வருடக்கணக்கில். நமது Judiciary system முழுவதும் Restructure செய்யப்பட வேண்டும். மிகக்கேவலமாக இயக்கிக்கொண்டிருக்கிறது இத்துறை. டெட் ஸ்லோ. குற்றம் சாட்டப்பட்டவனும், குற்றம் சாட்டியவனும் இறந்த பின் கூட 20 பர்சென்ட் தான் முடிந்த அளவு டெட் ஸ்லோ. இதை அல்லவா சரி செய்ய வேண்டும். நீதி தாமதிக்கப்படுவதை அல்லவா சரி செய்ய வேண்டும்??
சரி, இதற்கும் மரண தண்டனைக்கும் என்னப்பா சம்மந்தம் என்கிறீர்களா?
அதானே அய்யா நுண்ணரசியலே, இப்போது கசாபை தூக்கிலிட்டது போல, டெல்லி குற்றவாளிகளை, சரியாக நாடாளுமன்ற தேர்தல் சமயம் தூக்கிலிடுவார்கள் அல்லது வேறெதாவது ஒரு விஷயத்திற்காக மக்கள் ஒன்று கூடி போராடும் வேளையில் (Say, ஒரு குழந்தை கடத்தல் அல்லது ரேப்) அப்போது தூக்கிலிடுவார்கள். மக்கள் எழுச்சியை நீர்த்து போக வைக்கும் ஒரு யுக்தி. புதுச்செய்தி காட்டி திசைதிருப்புதல்.
இக்காரணிகளுக்கு பதில் உரைக்கவும்!
உங்கள் வாதங்களை முழுமையாக
ஆதரிக்கிறேன்.எதிர்ப்பவர்கள் வெறும்
வாய்ச்சொல்வீர்ரஃகள்தான். தனக்கு
பாதிப்பு வராதவரை என்ன வேண்டுமானாலும் பேசலாம்.பாதிக்கப் பட்டவர்களின் கொதிப்பு இவர்களுக்குத் தெரிவதில்லை.அவர்கள் எல்லோருமே
குற்றவாளிகளுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்க்கஃ கோருகிறர்களேயொழிய, இந்த
வாய்ச்சொல்வீர்ரஃகள்போல் க் கூறுவதில்லை வேண்டுமானால் ஒன்று
செய்யலாம்
தூக்குதண்டனையைக் குறைக்கலாம்.
ஆனால் இவர்கள் தண்டனைகாலத்திற்குப்பின்பாதிக்கப்பட்டவர்களுக்குதன்வாழ்நாள்
முழுமையும் தொண்டூழியம் செய்து
பரிகாரம் தேடவேண்டும். அல்லது' நீதி'
என்ற சிவாஜ படத்தில் வருவது போல்
அரசுக் கண்காணிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக
இழப்பீடு கொடுத்து தொண்டூழியம்
செய்ய வேண்டும்.
குற்றத்தையும் வேண்டுமென்றே செய்துவிட்டு குறைந்த தண்டனையுடன் தலைவர்கள் பிறந்த,
இறந்த நாட்களில் விடுதலையாவது
என்ன நியாயம்? விளையாடுகிறார்களா இந்த நியாயவான்கள்?
நீண்ட நாட்களாகப் பதிவுகளைக் காணோமே? என்ன காரணம்?
அஜ்மல் கசாபை தூக்கிலிட்டது சரி என்றால்......புல்லட் ப்ரூப் உடையில் ஊழல் நடந்ததற்கான தண்டனை எங்கே!!!!!!!!!!!!
http://writersamas.blogspot.in/2012/10/blog-post_7892.html
Post a Comment