உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, February 15, 2012

பொன்னியின் செல்வன் பரிசு யாருக்கு?

மன்னிக்கவேண்டுகிறேன்!

நான் என் வலைப்பூ வாசகர்களைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டதற்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

நான் ஏதோ மிகக் கடினமான போட்டி வைத்திருப்பது போல நானே எண்ணிக்கொண்டு, முடிவு தேதியை இம்மாதம் 26-ம் தேதி வரை கொடுத்திருந்தேன். ஆனால், ‘காதலும் கலியாணமும்’ என்கிற அந்தக் கட்டுரையை எழுதியவர் யாரென்று சீக்கிரமே கண்டுபிடித்துவிட்டார்கள்.

எனக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருக்கிறது. சரியான விடையை முதலில் எழுதியவர் யாரோ வயசானவர் அல்ல! இளைஞர்.

அந்தக் கட்டுரையை எழுதியவர் மூதறிஞர் ராஜாஜி. ஆனந்த விகடன் 4.3.62 இதழில் மறுபிரசுரம் செய்யப்பட்டிருந்த அந்தக் கட்டுரை ‘சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

யதேச்சையாக இன்றுதான் எனது வலைப்பூ பக்கம் வந்தேன். பத்துப் பன்னிரண்டு பின்னூட்டமாவது வந்திருக்குமா என்று சந்தேகத்துடன் பார்த்தவன் திடுக்கிட்டுப் போனேன். மொத்தம் 100 பின்னூட்டங்கள் வந்திருந்தன. சரியான விடையைப் பலர் குறிப்பிட்டிருந்தாலும், முதலில் ‘ராஜாஜி’ என்று பின்னூட்டம் இட்டிருந்தவர் அதிஷா!

பாராட்டுகள் அதிஷா! எப்படி இத்தனைக் கச்சிதமாக யூகித்தீர்கள் என்று சொல்ல முடியுமா? அறிய ஆர்வமாக இருக்கிறேன்.

உங்களுக்கான ’பொன்னியின் செல்வன்’ புத்தகம் தயாராக உள்ளது. முகவரி அனுப்பி வைத்தால் தபாலில் உடனே அனுப்பி வைக்கிறேன். அல்லது, நீங்கள் சென்னைவாசி என்றால், நேரில் வந்தும் பெற்றுப் போகலாம்.

சரியான விடையை வாசகர்கள் யூகித்து எழுத கால அவகாசம் கொடுப்போமே என்றுதான் முடிவு தேதியைத் தள்ளி வைத்திருந்தேன். சரியான விடையை முதலாவதாக ஒருவர் பின்னூட்டம் இட்டுவிட்டார் என்றால், அதன்பின்னும் முடிவைச் சொல்லாமல், யார் யார் இன்னும் என்னென்ன பெயர்களைப் பின்னூட்டம் இடுகிறார்கள் என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது அராஜகம்! எனவேதான் உடனே முடிவை அறிவித்துவிட்டேன்.

வாழ்க அதிஷா வினோ! வாழ்க இந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்கள்!
.

4 comments:

Hmm.. I thought I did first :) I am new to blog and my comments, 3 comments in total as follows. Not sure why it went as Unknown:

Rajagopalachari (RAJAJI)

Unknown February 13, 2012 8:11 PM Rajagopalachari (RAJAJI)

Unknown February 13, 2012 8:12 PM Rajagopalachari (RAJAJI)

Unknown February 13, 2012 8:14 PM
 
அண்ணே இன்ப அதிர்ச்சிதான்!

நரைமுடி வழுக்கை தலை, கர்நாடகம்னு முதல் பாராவிலேயே அது ராஜாஜியாதான் இருக்கணும்னு நினைச்சேன். கும்ஸாதான் போட்டேன்.. பரிசு கிடைச்சிருச்சி.. எதிர்பார்க்கவே இல்ல. நேர்லயே வந்து வாங்கிக்கறேன். உங்களையும் சந்திக்கணும்.

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. எப்படி நன்றி சொல்றதுனே தெரியல. புக்ஃபேர்லயே வாங்கனும்னு நினைச்சி காசில்லாம ஏக்கமா பார்த்துட்டு வாங்காம விட்ட புத்தகம். உங்க கையால பரிசா கிடைக்குதுன்றது ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை தருது.. நன்றிண்ணே
 
எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். கொடுத்தவரும் பெற்றவரும் என் அன்புக்குரியவர்கள்.
 
ஆஹா... மிஸ் பண்ணிட்டனே

சரி, அடுத்து எப்ப கெடா வெட்டுவீங்க? :)