உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, December 25, 2011

இரண்டு ‘பொ’ புத்தகங்கள்!

கவனிக்க: இந்தப் பதிவின் இறுதியில் ஒரு சுவாரஸ்யம் காத்திருக்கிறது.

நீண்ட நாட்களாக வலைப்பூ பக்கம் வரவில்லை; பதிவு எதுவும் எழுதவில்லை. வருத்தமாகத்தான் இருக்கிறது. “ஏன் சார் இப்பெல்லாம் எழுதறதே இல்லே?” என்று ஆர்வத்தோடும், அக்கறையோடும், ஆதங்கத்தோடும் கேட்போரிடமெல்லாம், “அலுவலகத்தில் வேலை பளு அதிகம்” என்று நேற்று வரை சொல்லிக்கொண்டு இருந்தேன். ‘அப்படியானால், நான் மட்டும்தான் உழைப்பாளி, ஓய்வின்றிப் பணியாற்றுபவன்; தொடர்ந்து பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் பதிவு எழுதிக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்களா?’ என்று இந்த நிமிடம் மனசுக்குள் ஒரு கேள்வி எழ, என் பதில் எனக்கே அதிகப்பிரசங்கித்தனமாகவும் அசட்டுத்தனமாகவும் தோன்றுகிறது. இப்படியொரு பதிலைச் சொன்னோமே என்று கூச்சமாக இருக்கிறது. நேர்மையாகச் சொல்வதானால், நான் பதிவு எழுதாததற்குக் காரணம் அசிரத்தையும் ஆர்வமின்மையும்தான். இன்னும் உடைத்துச் சொன்னால், சோம்பேறித்தனம்.

சமீபத்தில், மதிப்புக்குரிய நகைச்சுவை எழுத்தாளர் கடுகு அவர்களை, எழுத்தாள நண்பர் பாலகிருஷ்ணன் (சுபா) அவர்களின் மகள் திருமண விழாவில் சந்தித்துப் பேசினேன். “ஏன் பிளாக் எழுதுவதில்லை?” என்று கேட்டார். அவரிடம் “வேலை பளு” என்று சொல்லத் தயக்கமாக இருந்தது; “சோம்பேறித்தனம்” என்று சொல்லவும் கூச்சமாக இருந்தது. “எழுதணும் சார். எழுதறேன்” என்று மையமாக பதில் சொன்னேன். “எழுதணும். கட்டாயம் எழுதுங்க. நம்ம சந்தோஷத்துக்காகவாவது எழுதணும்” என்றார். “ஆகட்டும் சார்!” என்று வாக்குக் கொடுத்தேன்.

கண்டிப்பாக வாரம் ஒரு பதிவாவது எழுதவேண்டும் என்பதை 2012 புத்தாண்டுத் தீர்மானமாக எடுத்துக் கொள்கிறேன்.

கூடவே, இந்த இரண்டு மூன்று மாதங்களாக பதிவு எழுதக் கூட நேரமில்லாமல்... தப்பு, தப்பு... ஆர்வமில்லாமல் அப்படி வேறு என்ன வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தேன் என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

முக்கியமாக இரண்டு விஷயங்கள். ஒன்று - ஆனந்த விகடன் பொக்கிஷம். இந்த ஆண்டு ஜனவரி புத்தகச் சந்தைக்கு ‘காலப் பெட்டகம்’ புத்தகம் வெளியானது. அதற்கு வாசகர்கள் தந்த ஏகோபித்த வரவேற்புதான், 2012 ஜனவரி புத்தகச் சந்தைக்கு ‘பொக்கிஷம்’ புத்தகத்தைக் கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது.

காலப் பெட்டகம் புத்தகத்தில், விகடன் பிறந்த 1926ஆம் ஆண்டு முதல். 2000-வது ஆண்டு வரை, தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உலக அளவிலும் நடந்த முக்கியமான நிகழ்வுகளை விகடன் பதிவு செய்திருப்பதை வருட வாரியாகத் தொகுத்திருந்தேன். அது நல்லதொரு ஆவணப் புத்தகமாக உருவாகி, வாசகர்களிடையே நன்மதிப்பைப் பெற்றது. ஆனால், ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாகத்தான் அதில் விஷயங்கள் கொடுக்கப்பட்டிருந்தனவே தவிர, முழுமையான கட்டுரையாக எதுவும் இல்லை’ என்பது பலரின் ஆதங்கம். வாசகர்களின் அந்த மனக் குறையை ஆனந்த விகடன் பொக்கிஷம் நிச்சயம் போக்கும்.

இதில் வருட வாரியாக இல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக, ஆரம்ப காலத்தில் இருந்து சமீப காலம் வரையில் விகடனில் வெளியான படைப்புகளைத் தொகுத்துள்ளேன். காந்தி முதல் கருணாநிதி வரை, நௌஷாத் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை, டி.பி.ராஜலட்சுமி முதல் ஐஸ்வர்யா ராய் வரை, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முதல் வடிவேலு வரை, செம்மங்குடி முதல் கே.ஜே.யேசுதாஸ் வரை... எனப் பார்த்துப் பார்த்துத் தொகுத்துள்ளேன். தவிர, ஜெயகாந்தன், சுஜாதா போன்ற ஸ்டார் எழுத்தாளர்களின் சிறுகதைகளும் உண்டு. இது நிச்சயம் ஒரு சோறு பதமாக இல்லாமல், முழுமையான தலைவாழை விருந்தை உண்டு மகிழும் திருப்தியை வாசகர்களுக்கு அளிக்கும் என நம்புகிறேன்.

நான் மும்முரமாக ஈடுபட்டிருந்த இரண்டாவது விஷயம் - பொன்னியின் செல்வன். நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த சமயத்தில், ஒரு கோடை விடுமுறையில், அமரர் கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ புத்தகத்தை ஒரே மூச்சில், இரண்டு முழு நாளில் படித்து முடித்துள்ளேன். ஆனால், பொன்னியின் செல்வனை அப்படிப் படிக்கும் பேறு எனக்கு இதுவரை கிடைக்காமல் இருந்தது. அந்தக் காலத்தில் ஓவியர் மணியம் வரைந்த அதே படங்களோடு, அமரர் கல்கியின் மாஸ்டர் பீஸான பொன்னியின் செல்வனை ஒரு எழுத்து கூட எடிட் செய்யாமல், அப்படியே முழுமையாக, வரும் புத்தகச் சந்தைக்குக் கொண்டு வருகிறது விகடன் பிரசுரம். அத்தியாயங்களுக்கான கறுப்பு - வெள்ளைப் படங்களோடு, இந்தத் தொடருக்காக மணியம் வரைந்த அழகிய வண்ணப்படங்களும் இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. இதை வரிக்கு வரி படித்து, பிழை திருத்தம் செய்து, அத்தியாயங்களுக்கேற்ற படம்தான் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது. ஆக, ஐந்து பாகங்களாக வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வனை தினந்தோறும் படித்து மகிழும் பாக்கியம் பெற்றேன். தொகுப்பில் உதவியோர் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றுள்ளது எனக்குப் பெருமையைத் தருவதாகவும், அமரர் கல்கியின் சுண்டு விரலைப் பற்றி நடப்பது போன்ற மகிழ்ச்சியைத் தருவதாகவும் இருக்கிறது. பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாங்க விரும்பி அட்வான்ஸ் தொகை அனுப்பியுள்ளவர்களின் எண்ணிக்கை இப்போதே ஆயிரத்தைத் தாண்டிவிட்டது என்று கேள்வி. மகிழ்ச்சியாக இருக்கிறது.

விகடன் பிரசுரம், வரும் புத்தகச் சந்தைக்கு இருபதுக்கும் மேற்பட்ட புதிய, முக்கியமான, அருமையான புத்தகங்களை வெளியிடவிருக்கிறது. அவற்றில் பொக்கிஷம், பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு புத்தகங்கள் தலைசிறந்த புத்தகங்களாக, ஸ்டார் புத்தகங்களாகத் திகழும் என்பது நிச்சயம்.

‘பொக்கிஷம்’ புத்தகத்தில் இடம்பெறும் என் முன்னுரையையும், பொன்னியின் செல்வன் புத்தகம் பற்றிய என் வாசிப்பு அனுபவத்தையும் ‘என் டயரி’யில் தனிப் பதிவாகப் பதிவு செய்வேன்.

இனி, ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த சுவாரஸ்யத்துக்கு வருவோம்.

வரும் புத்தாண்டை, என் வலைப் பதிவு நேயர்களுக்கு - குறிப்பாக, தொடர்ந்து என் வலைப்பதிவுகள் அனைத்தையும் வாசித்திருப்பவர்களுக்கு ஒரு பரிசுப் போட்டி வைத்துப் பரிசு அளிப்பதன் மூலம் தொடங்கலாம் என்பது என் விருப்பம்.

உங்கள் ரசிகன், என் டயரி ஆகிய என் இரண்டு வலைப்பூக்களில் இதுவரை நான் எழுதியுள்ள பதிவுகளிலிருந்து ஒரு கேள்வி கேட்பேன். அதற்கான சரியான விடையை உடனடியாக எனக்குப் பின்னூட்டம் இடவேண்டும். முதலில் வரும் சரியான விடைக்குப் பரிசு. தவிர, பொதுவாக என் பதிவுகள் பற்றிய நிறை, குறை, மற்றும் ஆலோசனைகளோடு கூடிய உங்கள் விமர்சனத்தை விரிவாக எழுதி அனுப்ப வேண்டும். சிறப்பான விமர்சனக் கட்டுரையை என் வலைப்பூவில் பதிவதோடு, அதை எழுதியவருக்கும் ஒரு பரிசு.

சரி, என்ன பரிசு?

வேறென்ன? புத்தகம்தான். ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தைப் பரிசாக வழங்கலாம் என்று மனசில் ஆசை இருந்தாலும், அது என் பொருளாதாரத் தகுதிக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. எனவே, சுமார் 180 ரூபாய் மதிப்புள்ள (சரியான விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை) ‘ஆனந்த விகடன் பொக்கிஷம்’ புத்தகத்தை இரண்டு பேருக்கு அளிப்பதென்று முடிவு செய்துள்ளேன்.

போட்டி தொடர்பான முழுமையான விவரங்கள் அடுத்த பதிவில்.

அன்பு வாசகர்கள் அனைவருக்கும் என் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


.

6 comments:

// கண்டிப்பாக வாரம் ஒரு பதிவாவது எழுதவேண்டும் என்பதை 2012 புத்தாண்டுத் தீர்மானமாக எடுத்துக் கொள்கிறேன்.//

உங்களின் தீர்மானத்தை எழுந்து நின்று வரவேற்கிறேன்.
 
உங்கள் பக்கத்தில் இன்று பதிவு படித்து ஆனந்தம்....

பொக்கிஷம்... வரக் காத்திருக்கிறேன்...

போட்டி - நீண்ட நாட்கள் கழித்து உங்கள் பக்கத்தில் போட்டி... களத்தில் குதிக்க நாங்க ரெடி....
 
நல்ல பதிவு.
உங்கள் அருமையான பணி மகிழ்ச்சியளிக்கிறது.
வாழ்த்துகள்.
 
‘பொன்னியின் செல்வன்’ - முன்பதிவு செய்து விட்டேன். பொக்கிஷம் - புத்தகத் திருவிழாவில்தான் வாங்க வேண்டும். பாலா சொன்னதுபோல நீங்கள் தொடர்ந்து விடாமல் எழுதினால் எங்களுக்கு மிக மகிழ்ச்சிதான். போட்டி! ஜெயிக்கிறேனோ இல்லையோ போட்டிகளில் பங்கேற்க எனக்கு மிகவும் பிடிக்கும். காத்திருக்கிறேன்!
 
If you have an English blog, submit your post at Stumblednews.0fees.net to get more visitors to your blog.
 
நீண்ட நாட்களாகப் பதிவு எழுதாத குறையை, பரிசு அறிவிப்போடு, அசத்தலாக ஒரு பதிவு எழுதிப் போக்கிவிட்டீர்கள். நன்றி சார்! போட்டியில் கலந்துகொள்வேன் கண்டிப்பாக. புத்தகப் பரிசு கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும், கண்டிப்பாக இரண்டு புத்தகங்களையும் வாங்கிவிடுவேன்.