காஞ்சிப் பெரியவருடனான தனது அனுபவங்கள் பற்றி ‘பிராமின் டுடே’ என்னும் பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வருகிறார் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி. அதன் நகல்கள் சிலவற்றை எனக்கு அனுப்பி வைத்திருந்தார் பிரபல எழுத்தாளர் சாருகேசி அவர்கள்.
சுப்பிரமணியம் சுவாமியின் கட்டுரைகளிலிருந்து சில பகுதிகள் இங்கே:
“காஞ்சிப் பெரியவரை 1977 முதல் அவர் முக்தியடைந்த தினம் வரையில், பலப்பல முறை சென்று தரிசித்து, அவரின் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் பெற்றிருக்கிறேன் நான். ஆனால், அதை நான் ஒருபோதும் பிரகடனப்படுத்திக் கொண்டது இல்லை. தரிசன சமயத்தில் என்னைப் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் இல்லை. பெரும்பாலும் முன் அனுமதி பெறாமலேயே, பல முறை காஞ்சி மடத்துக்குச் சென்றிருக்கிறேன். அவர் என்னைப் பார்ப்பார். ஆசி வழங்குவார். அவர் தூங்கிக்கொண்டு இருந்தாலும்கூட, நான் வந்ததும் அவரின் அணுக்கத் தொண்டர்கள் அவரை எழுப்பிவிடுவார்கள். காரணம், அவர்களுக்கு அவர் என்னைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டு, உத்தரவுகள் பிறப்பித்திருந்ததுதான். இருந்தபோதிலும், அவருடனான எனது நெருக்கம் குறித்து, அவர் வாழும் காலத்தில் நான் ஒருக்காலும் தற்பெருமையடித்துக்கொண்டது இல்லை.
அடுத்த ஒரு நூறு ஆண்டுகளுக்கு, காஞ்சி மகான் போன்று ஒரு மனித தெய்வம் தோன்றப்போவது இல்லை. அவரை நான் அறிந்திருந்ததும், அவரது ஆசிகள் எனக்குக் கிடைத்ததும் நான் செய்த பாக்கியம்தான். பூதவுடலாக அவர் இன்று நம்மிடையே இல்லாதிருக்கலாம்; ஆனால், அவர் எனக்கு அறிவுறுத்தியிருந்ததன் காரணமாக, அவர் என் அருகில் இருப்பதாகத்தான் உணர்கிறேன்.
1977-ஆம் ஆண்டு, காஞ்சி மகா பெரியவாளின் அற்புதமான பிரசங்கத்தைக் கேட்ட பின்பு, பரமாச்சார்யரின் தரிசனத்தைப் பெறுவதற்காக நான் பலப்பல முறை சென்றிருக்கிறேன். எப்போதெல்லாம் எனக்குக் குழப்பம் ஏற்பட்டதோ, ஏதாவது கடினமான கேள்விக்கு விடை தெரியாமல் இருந்ததோ, ஏதேனும் பிரச்னைக்குத் தீர்வு தெரியாமல் இருந்ததோ, அப்போதெல்லாம் நான் பெரியவரிடம் ஓடுவேன்; எனக்கு வழிகாட்டும்படி வேண்டுவேன். காஞ்சிபுரம், பெல்காம் அல்லது சதாரா என அவர் எங்கிருந்தாலும், அங்கே அவரைத் தரிசிப்பதற்காக எத்தனைக் கூட்டம் திரண்டிருந்தாலும், பெரியவரின் தரிசனம் எனக்குக் கிடைத்துவிடும். ஆனால், மற்ற சிலர் செய்வது போன்று, இந்தத் தரிசனங்களை நான் செய்தித் தாள்களிலோ பத்திரிகைகளிலோ வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டது இல்லை. எனது இந்தச் செயலை மடத்து நிர்வாகிகளும், குருமார்களும் பெரிதும் பாராட்டினார்கள்.
பரமாச்சார்யரைப் போன்ற மனித தெய்வம் வேறு இல்லை. பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்திருந்த நேரத்தில் அவரை ஆசீர்வதிக்க மறுத்த ஒரே சந்நியாசி காஞ்சி மகான்தான். இத்தனைக்கும் இந்திரா அப்போது அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தார்; தேசமே அவரைப் போற்றிக் கொண்டாடிக்கொண்டு இருந்தது. அவர் காஞ்சி மகான் முன் விழுந்து வணங்கினார். இருப்பினும், அவருக்கு ஆசிகள் வழங்க மறுத்துவிட்டார் காஞ்சி மகான். அதே சமயம், ஆட்சிக் கட்டிலில் ஜனதா கட்சி அமர்ந்து, இந்திரா பதவி இழந்திருந்த நிலையிலும், எமெர்ஜென்ஸி கொண்டு வந்ததற்காக அவர் மனதார வருத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குத் தமது பரிபூர்ண ஆசிகளை வழங்கினார் பெரியவா.
இதனாலேயே, நான் உண்மையாகவும் நேர்மையாகவும் மக்களின் நலனை முன்னிட்டு எது செய்யும்போதும், ஒவ்வொரு முறையும் பரமாச்சார்யரின் ஆசிகள் எனக்கு இருக்கும் என்றே எண்ணுகிறேன். எனக்கு இருக்கும் தைரியத்தை எனது எதிரிகளால்கூட மறுக்க இயலாது. அத்தகைய தைரியத்தை எனக்கு அளித்தது பெரியவரின் ஆசிகள்தான். எனது முயற்சிகள் தோற்றுவிட்டதாகப் பலரும் ஆரம்பத்தில் நினைப்பார்கள்; ஆனால், இறுதியில் நான் வெற்றி பெறுவேன். அதற்குக் காரணம் பெரியவருடைய ஆசிகள்தான்.
இந்தியா- ஸ்ரீலங்கா ஒப்பந்தத்தில் இருந்த கச்சத் தீவில், தமிழக மீனவர்களுடைய உரிமையை நிலைநாட்டும்பொருட்டு, சில மீனவர்களோடு நான் அந்தத் தீவுக்குச் செல்ல முயன்றேன். எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்த நேரம் அது. மதுரையில் என்னைக் கைது செய்து, மதுரை ஜெயிலில் வைக்காமல், அதற்குப் பதிலாக தமிழ்நாடு ஹோட்டலில் சிறை வைத்தார்கள். கச்சத் தீவுக்குப் போவதைக் கைவிட்டுவிட்டுப் பேசாமல் சென்னை திரும்புவதாக ஒப்புக்கொண்டாலொழிய என்னை விடுவிக்கப் போவது இல்லை என்று தெளிவுபடச் சொன்னார் அப்போதைய டி.ஜி.பி. அந்நாளில் எனக்கு ஓரளவே குற்றவியல் சட்டம் தெரியும். எனவே, என் உரிமைகள் பற்றித் தெரியாததால், சென்னை திரும்புவதாக ஒப்புக்கொண்டேன்.
சென்னை வந்த பின்பு, நேரே காஞ்சிபுரத்துக்கு ஓடி, பரமாச்சார்யரைத் தரிசித்தேன். எனக்கு நேர்ந்த அவமதிப்பு பற்றி கூறி, கச்சத் தீவுக்குச் செல்ல முடியாமல் போனது பற்றிச் சொன்னேன். என்னை ஒரு குழந்தை போல் பார்த்துப் புன்னகைத்தார் பெரியவா. ‘’நேரே டெல்லி போ! உன்னைக் கைது செய்தது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு புகாரைப் பதிவு செய். கச்சத் தீவு போவதற்கான ஏற்பாடுகளை உனக்குச் செய்து கொடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்துமாறு கோர்ட்டைக் கேட்டுக் கொள்’’ என்றார்.
அதன்படி, அன்று மாலையே நான் விமானத்தில் டெல்லி சென்றேன். சுப்ரீம் கோர்ட்டில் என் மனைவியும் ஒரு வழக்கறிஞர். எனவே, எனது ரிட் மனுவை எழுதித் தரும்படி அவளையே கேட்டேன். அவள் அதைக் கேட்டு அதிர்ந்து போனாள். ‘’ஒரு கைதுக்காக நீங்கள் இப்படி நேரே சுப்ரீம் கோர்ட்டை அணுகினால், கோர்ட்டே உங்களைப் பார்த்துச் சிரிக்கும். முதலில் நீங்கள் மதுரை நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும். பிறகு செஷன்ஸ் கோர்ட்; அப்புறம் ஹைகோர்ட். கடைசியில்தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு வர வேண்டும்” என்றாள். எனினும், ரிட் மனுவை எழுதும்படி அவளை நான் வற்புறுத்தினேன். ‘’ஒரு வக்கீலாக, கோர்ட்டில் முட்டாள் போன்று நிற்க நான் விரும்பவில்லை. எனவே, நீங்கள் கேட்டது போல் ரிட் மனு எழுதித் தருகிறேன்; ஆனால், மற்றதெல்லாம் உங்கள் பாடு. இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு வேறெந்த விதத்திலும் உதவ மாட்டேன்’’ என்றாள். ஆனால், பரமாச்சார்யரின் மீதிருந்த ஆழ்ந்த நம்பிக்கை காரணமாக, அப்படியே ஆகட்டும் என்றேன்.
ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி வெங்கட ராமையா முன்பு நான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டேன். தலைமை நீதிபதி வந்து தமது ஆசனத்தில் அமர்வதற்குச் சில நிமிடங்கள் முன்பு நான் கோர்ட்டுக்கு வந்துவிட்டேன். என்னை அறிந்திருந்த பல வழக்கறிஞர்கள் என் அருகில் வந்து, நான் எதற்காக வந்திருக்கிறேன் என்று விசாரித்தார்கள். விஷயத்தைச் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ‘’உங்கள் மனு தள்ளுபடி ஆவது மட்டுமில்லை; உங்கள் முட்டாள்தனத்தைப் பற்றியும், சுப்ரீம் கோர்ட்டின் நேரத்தை வீணடித்தது பற்றியும் தலைமை நீதிபதி குற்றம் சாட்டுவார்” என்றார்கள்.
எனது மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. தலைமை நீதிபதி வெங்கட ராமையா, தமிழ்நாடு கவுன்ஸிலை அழைத்து, (அப்போது இருந்தவர் குல்தீப் சிங். பின்னாளில் இவர் பிரபல நீதிபதி ஆனார்.) தமிழக அரசு என்னை ஏன் கைது செய்தது என்று கேட்டார். எனது மனுவைத் தள்ளுபடி செய்யாமல் அவர் இப்படிக் கேட்டதும், குல்தீப் சிங் ரொம்பவே தடுமாறிப் போனார். பேசவே வார்த்தை வரவில்லை அவருக்கு.
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான கும்பல் ஒன்று, நான் கச்சத் தீவுக்குப் போவதற்கு எதிர்ப்பாக இருப்பதாகவும், மேலும் என்னைத் தீர்த்துக் கட்ட விடுதலைப் புலிகள் மிரட்டல் விடுத்திருப்பதாகவும் விளக்கினார் குல்தீப் சிங். அவ்வளவுதான், கடுங் கோபம் அடைந்து குல்தீப் சிங் மீது எகிறிவிட்டார் வெங்கட ராமையா. ‘’ஜனநாயகக் குடியரசுக்கு லாயக்கானவர்தான் என்று உங்களை நினைக்கிறீர்களா? ஒரு வன்முறைக் கும்பல் டாக்டர் சுவாமியைத் தடுக்க விரும்பினால், நீங்கள் அந்தக் கும்பலைத்தான் கைது செய்ய வேண்டுமே தவிர, சுவாமியையல்ல!” என்று சீறினார்.
பின்பு, நான் கச்சத் தீவு செல்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார் தலைமை நீதிபதி. கோர்ட்டில் இருந்த யாருமே இதை நம்பவில்லை. “நீங்கள் வெங்கட ராமையாவுக்கு ஏதேனும் உறவா?” என்றுகூடச் சிலர் என்னிடம் கேட்டார்கள். அவருக்கும் எனக்கும் உறவு கிடையாது என்பது மட்டுமில்லை; அந்நாளில் அவரைப் பற்றி நான் அறிந்ததுகூடக் கிடையாது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்குப் பிறகு, பாராளுமன்ற இல்லத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்தேன். அவரிடம் ஏற்கெனவே இந்தத் தீர்ப்பு பற்றிச் சொல்லியிருந்தார் குல்தீப் சிங். எனவே, ராஜீவ் என்னிடம், “நீங்கள் ஏன் முதலில் என்னிடம் இது பற்றிப் பேசவில்லை? நான் எம்.ஜி.ஆரிடம் பேசி உங்களைக் கச்சத் தீவுக்குச் செல்ல அனுமதித்திருக்கும்படி சொல்லியிருப்பேன். போனது போகட்டும். இனிமேல் நீங்கள் எப்போது கச்சத் தீவு செல்லத் திட்டமிட்டாலும், கடற்படையும் விமானப் படையும் உங்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கும்” என்றார்.
அதுதான் காஞ்சி மகா பெரியவரின் தெய்வீக சக்தி!
.
Monday, August 01, 2011
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
அப்படி வழிவழியாக வந்த ஞானமும் அறிவும் வழிமாறமால் இருக்க சூக்குமாக அவர்தான் வழிகாட்டி அருள்புரிய வேண்டும்…..
அரசின் போக்கில் மனமாற்றத்தை உருவாக்கி, இந்தப் பேரழிவைத் தவிர்க்கவில்லை என்பதே!
சங்கரமடம் ஒரு அரை அரசியல் களம் உலகறிந்த உண்மை.அதனால் சு. சாமிக்கு எப்போதும் திறந்திருந்தது, எமக்கு
ஆச்சரியமளிக்கவில்லை.
டெல்லியில் இருந்த நீதிபதியில் சிந்தையில் புகுந்தவர், பக்கத்தில் இருந்த ஜெயேந்திரரின் உட்கிடக்கை அறியாது, காஞ்சி மடத்தை நாறவிட்டுவிட்டாரே!
இதுதான் இந்தச் சாமானியனுக்கு இன்னும் பிடிபடவில்லை.
\\என் ஆதங்கம் என்னவெனில்; இத்தனை சக்தியுள்ள பெரியவர்களெல்லாம் , ஏன்? விடுதலைப்புலிகள், இலங்கை
அரசின் போக்கில் மனமாற்றத்தை உருவாக்கி, இந்தப் பேரழிவைத் தவிர்க்கவில்லை என்பதே!\\ கடவுளாலேயே முடியலையே, காஞ்சி மகானால் மட்டும் முடியுமா? இங்கே ஒரு விஷயம் யோகன் பாரிஸ்... காஞ்சிப் பெரியவர் எங்கேயும் எப்போதும் நான்தான் கடவுள் என்றோ, கடவுள் தூதன் என்றோ, எல்லாவற்றையும் என்னால் சரி செய்ய முடியும் என்றோ பொய்யான நம்பிக்கைககளை யாரிடமும் திணிச்சது இல்லை!
நன்றி.
ஜயேந்திரரின் உள்ளக்கிடக்கை என்ன்வென்று நீங்கள் மிகவும் அறிந்திருப்பது போல மகாபெரியவர் அறியாது விட்டார் என்கிறீர்கள்! நானறிந்தவரை மஹா பெரியவர் ஞான யோகி எனுங்கால் ஜயேந்திரர் கர்மயோகி. இதற்கு மீனாக்ஷிபுரம் தொடங்கி மருத்துவமனைகள் வரை சாட்சி. காஞ்சி மடத்தைப் நாறவிட்டார் எனும் கருத்து ஏற்கத்தக்கதல்ல.
கர்மமார்க்கத்தில் சிக்கல்கள் நிறையவரும். அஃது சந்நியாசிகளுக்குத் தேவையற்றது ஞானமார்க்கமே சிறப்பு என்பது மஹாபெரியவரின் சித்தம். சிக்கல்களை எதிர்கொண்டு கர்ம மார்க்கத்தில் பயணித்துக் காட்ட வேண்டுமென்பது ஜயேந்திரரின் எண்ணம் என்பதே அருகில் இருந்து அறிந்தோரின் தெளிவு.
உங்கள் கருத்து தேரான் தெளிவு என்பது என் எண்ணம்.
இக்கருத்து வெளிவரத்தாமதமாகும் என்பதாலும்..... மஹாபெரியவரின் பக்தர்கள் மனம் விரைந்து குளிரவும் என் பங்காக இக்கருத்தை facebook மஹா பெரியவா குழுவிலும் வெளியிடுகிறேன். தவறெனப் பட்டால் "உங்கள் ரசிகன்" பொறுத்துக் கொள்ள வேண்டும்.
Post a Comment