உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, January 06, 2010

புத்தகக் காட்சியில் நானும்...

“புக் ஃபேர் போய் வந்தேன்” என்று சொல்லிக்கொள்வது சமீப காலங்களில் ஒரு ஃபேஷனாகிவிட்டது. பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பும் ஜனங்கள் புத்தகக் காட்சிக்குப் போய் வந்துகொண்டுதான் இருந்தார்கள். ஆனால், அது பற்றி ஓயாமல் பேசிக்கொண்டு இருப்பதில்லை. ‘போனோமா, பிடித்த புத்தங்களை வாங்கினோமா’ என்று இருந்துவிடுவார்கள். மற்றபடி அது குறித்து அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. எனக்குத் தெரிந்து கடந்த ஏழெட்டு வருடங்களாகத்தான் ‘புக் ஃபேர் மேனியா’ நம்ம ஜனங்களைப் பிடித்து ஆட்டிக்கொண்டு இருக்கிறது. இப்படி வலைப்பூவிலெல்லாம், தாங்கள் புத்தகக் காட்சிக்குப் போய் வந்த அனுபவத்தைப் பரவசமாக எழுதி எழுதி மகிழ்ந்து கொள்கிறார்கள் (என்னையும் சேர்த்துத்தான்!).

“நேத்து செம பார்ட்டிடா மச்சி! ஃபுல்லா சரக்கடிச்சுட்டு...” என்று பரவசப்படுவதற்கு, இந்தப் புத்தகக் காட்சிப் பரவசம் ஆயிரம் மடங்கு மேல்! சில நல்ல விஷயங்களில் கொஞ்சம் ஓவர் ரியாக்‌ஷன் செய்தாலும் தப்பில்லைதான்!

நானும் பத்துப் பன்னிரண்டு வருடங்களாக புத்தகக் காட்சிக்குப் (புத்தகக் கண்காட்சி என்று எழுதுவது தவறு. புத்தகக் காட்சிதான்! இரண்டு மூன்று ஆண்டுகளாக அரசு அறிவிப்புகளில், பேனர்களில் இந்தத் தவறு திருத்தப்பட்டு ‘புத்தகக் காட்சி’ என்று சரியாக வருகிறது.) போய்த் தலையைக் காண்பித்துவிட்டு வந்துகொண்டு இருக்கிறேன் - ஏதோ சுற்றுலாப் பொருட்காட்சிக்குப் போய் வருவது போல! புத்தகம் எதுவும் வாங்குவதில்லை. காரணம், முன்பே பலமுறை சொல்லியிருக்கிறேன், நான் இலக்கியவாதி இல்லை; சாமானியன்! தவிர, ஐந்நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் செலவழித்துப் புத்தகங்கள் வாங்கும் அளவுக்கு நான் வசதியானவன் இல்லை. கையில் இருக்கிற புத்தகங்களையே முழுசாகப் படித்துக் கிழித்தபாடில்லை; இதில் காசு போட்டு வேறு வாங்கி அறிவை விருத்தி செய்துகொண்டு விடப்போகிறோமாக்கும் என்கிற எண்ணமும் உண்டு.

காயிதே மில்லத் கல்லூரியில் புத்தகக் காட்சி நடந்த சமயத்தில் ஒரு முறை போய் வந்தபோது, ‘எப்படி இருந்தது உங்க எக்ஸ்பீரியன்ஸ்?’ என்று ஒரு நண்பர் ஆர்வத்தோடு கேட்க, “ப்ச்... நினைச்ச அளவுக்கு ஒண்ணும் பிரமாதமா இல்லே. ரொம்ப எதிர்பார்ப்போட போனேன். சுமாராதான் இருந்துது எல்லா அயிட்டங்களும்!” என்று பதில் சொன்னேன் யதார்த்தமாக. ‘என்ன சொல்றீங்க?’ என்று நண்பர் விழிக்க, “அறுசுவை நடராஜன் கேண்ட்டீனாச்சே! கை மணம் அபாரமா இருக்குமேன்னு நாக்கைச் சப்புக்கொட்டிக்கிட்டுப் போனேன். தோசை, இட்லி, பொங்கல்னு எல்லாமே சுமார் ரகம்தான்! இதுக்கு சரவணபவனே எவ்ளோ தேவலாம்!” என்று நான் மும்முரமாக விளக்க, தலையிலடித்துக் கொண்டார் நண்பர். என்ன செய்வது, என்னுடைய இலக்கிய ஆர்வம் அந்த லட்சணத்தில் இருக்கிறது!

இந்த 33-வது புத்தகக் காட்சிக்குப் போனபோதும் அதே கதைதான்! நான் முதலில் நுழைந்தது கிருஷ்ணா ஸ்வீட்ஸாரின் கேண்ட்டீனில்தான்! மசால் தோசை, மொறுமொறு வடை, போளி, குஜராத் வேர்க்கடலை மசாலா போட்டது/ வெஜிடபிள் போட்டது, அம்மணி கொழுக்கட்டை, காபி என ஒரு வெட்டு வெட்டினேன். காபி மட்டும் சுமார் ரகம். மற்ற அயிட்டங்கள் ஓகோ! சட்னி, சாம்பார் எல்லாம் ஏ-கிளாஸ்! வெளியே விலைப் பட்டியலே வித்தியாசமாக இருந்தது. அயிட்டங்களைப் போட்டு அதன் அருகில் இன்ன விலை என்று எழுதாமல், 30 ரூபாய், 35 ரூபாய், 40 ரூபாய் என தலைப்பில் எழுதி, அந்தக் காசுக்கு என்னென்ன அயிட்டங்கள் சாப்பிடலாம் என்று வரிசைப்படுத்தியிருந்தார்கள்.

டிபனை முடித்துக்கொண்டு வரும்போது, ஒதுங்க இடம் தேடி, கூட்டம் (நாற்காலிகளில் நாலைந்து பேரே உட்கார்ந்திருந்தாலும் அதைக் கூட்டம் என்றுதானே குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது!) நடந்துகொண்டு இருந்த இடத்துக்குப் பக்கவாட்டில், தடுப்புக்குப் பின்னால் கட்டைகளைத் தாண்டிக் குனிந்து, உள்ளே நுழைந்து சென்றால், ஏதோ ஜெயில் வளாகத்துக்குள் வந்துவிட்ட ஓர் உணர்வு. இடிபாடான கட்டடங்கள், புதர்க் காடுகள் ஒருபுறம்; மறுபுறம் மெஜந்தா கலரில் டிஸ்டெம்பர் அடித்த கட்டடங்கள். சினிமாக்களில் கைதிகள் கம்பங்களி வாங்கிக் கொள்ள கையில் நசுங்கிய அலுமினியத் தட்டுடன் வரிசையாக நின்றுகொண்டு இருப்பார்களே, அது போன்ற ஒரு இடம் மாதிரி இருந்தது அது. கைதிகள் கலவரக் காட்சி ஏதாவது படம் பிடிக்க வேண்டுமென்றால் கச்சிதமாக இருக்கும் (ஒருவேளை, ஏற்கெனவே எந்தப் படத்திலாவது இப்படி அந்த இடம் உபயோகப்பட்டிருக்கவும் கூடும்!).

இடிந்த சுவர் அருகே சிரம பரிகாரம் செய்துகொண்டு வெளியே வரும்போது மணி 4. மாநாட்டு மேடையில் பேசுவதற்காக இருந்தவர்களைவிட நாற்காலிகளில் அமர்ந்திருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஒருவர் மைக் பிடித்து, கூட்டம் இல்லாததைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலையே படாமல், அவர் பாட்டுக்கு முழங்கிக்கொண்டு இருந்தார். சமூகம், பொறுப்பு உணர்வு, எழுத்து, பேனா முனை, வரலாறு போன்ற வார்த்தைகள் காதில் விழுந்தன. இன்னதுதான் பேசுகிறார் என்று தொகுத்து அறிய முடியவில்லை.

புத்தகக் காட்சி உள்ளே நுழைந்தேன். முதலில் தென்பட்டவர்(கள்) எழுத்தாளர்(கள்) சுபா. ‘ஹாய்...’, ‘ஹாய்...’ ‘எங்கே இப்படி? இப்பத்தான் வந்தீங்களா?’ போன்ற அசட்டுக் கேள்விகளுக்குப் பிறகு, நான் என் வழி பார்த்துக் கொண்டு நடந்தேன். எந்த ஒரு ‘ரோ’வையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக நேரே கடைசி வரிசைக்குச் சென்று, அதன் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை நடந்து, அங்கே யூ டர்ன் எடுத்து, அடுத்த ‘ரோ’வில் புகுந்து, இந்த முனையில் மறுபடி யூ டர்ன் போட்டு... என் திட்டம் பிரமாதம் என்று எனக்கு நானே சர்ட்டிபிகேட் கொடுத்து முடிப்பதற்குள்ளாக ஓரிடத்தில் சொதப்பிவிட்டது.

ஸ்டால்களில் இரட்டை ஸ்டால், ஒற்றை ஸ்டால் என்று வகைகள் உள்ளன. இரட்டை ஸ்டால்கள் எனப்படுபவை சற்றுப் பெரிதாக இருப்பதோடு, இரண்டு பக்கமும் திறந்திருக்கின்றன. (விகடன் ஸ்டாலை மட்டும் ஒருபுறம் அடைத்து இருந்தனர்.) இதனால், என் திட்டப்படி ஒரு ஸ்டாலில் உள்ளே புகுந்தவன் மறு புறமாக வெளியேறிவிட, அந்த ‘ரோ’ பார்த்ததா பார்க்காததா, அடுத்து எந்தத் திக்கில் செல்லவேண்டும் என்றெல்லாம் குழப்படியாகிவிட்டது.

அநுராகம், பாரதி, நர்மதா, வானதி, கிழக்கு என விதம் விதமான பதிப்பகங்கள்; சமீபத்தில் உதயமான சூரியகதிரும், திரிசக்தியும்கூட ஸ்டால் போட்டிருந்தன. நான் பார்த்த வரையில் அதிகம் கூட்டம் காணப்பட்டது சந்தேகமில்லாமல் விகடன் ஸ்டாலில்தான். விகடனில் வேலை செய்கிறேன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. உண்மையாகவே விகடன் ஸ்டால்தான் பரபரப்பாக இருந்தது. அதற்கு அடுத்தபடியாக நர்மதா, உயிர்மை ஆகியவை பிஸியாக இருந்தன.

அமைச்சர் துரைமுருகன் அதிக பரிவாரங்கள் இன்றி, ஒவ்வொரு ஸ்டாலாகப் பார்த்துக்கொண்டு போனார். நடிகர் நாசர் ஒரு கேஷுவல் டிரஸ்ஸில், தன்னந்தனியாக விறுவிறுவென்று அங்கேயும் இங்கேயும் வேக நடையில் ஓடிக்கொண்டிருந்தார். மனுஷ்யபுத்திரன், சாரு நிவேதிதா, தம்பதி சமேதராக நகைச்சுவை எழுத்தாளர் ஜே.எஸ்.ராகவன் (காட்சி ஆரம்பித்த நாளிலிருந்து தினமுமே வந்து போய்க்கொண்டு இருக்கிறாராம்!) ஆகியோரைப் பார்த்தேன்.

சுற்றி வந்தபோது நான் ரசித்த சுவாரசியமான காட்சி ஒன்று... ஒரு சின்ன குழந்தையை (அநேகமாக அது எல்.கே.ஜி. படிக்கிற குழந்தையாக இருக்கலாம்) கையைப் பிடித்து நடத்தி அழைத்து வந்துகொண்டு இருந்தார், சுடிதார் அணிந்த அதன் அம்மா. மழலை மொழியில் அந்தக் குழந்தை புத்தகக் காட்சியைப் பற்றி ஏதேதோ கேள்விகள் கேட்டபடியே வந்தது. திடீரென்று ஒரு ஸ்டால் எதிரே நின்று, “அம்மா! புக்ஸ்..!” என்று கை காட்டியது. “ஏய்... போதும்! நிறைய புக்ஸ் வாங்கித் தந்துட்டேன் உனக்கு இன்னிக்கு!” என்றார் அம்மா. உடனே அந்தக் குழந்தை, “ஐயே! எனக்கில்லம்மா! உனக்கு ஒண்ணுமே புக்ஸ் வாங்கிக்கலையேன்னு சொன்னேன்!” என்றது மழலையாக.

சட்டென்று நின்று அந்தக் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சினேன். சிரித்தார் அதன் அம்மா. “என்ன படிக்கிறா குழந்தை?” என்று விசாரித்தேன். “இன்னும் ஸ்கூல்ல போடலை! அதுக்குள்ளே இத்தனை வாய்!” என்றார் பெருமிதக் குரலில்.

பள்ளியிலேயே இன்னும் சேர்க்காத குழந்தையை அழைத்துக்கொண்டு புத்தகக் காட்சிக்கு வந்து சுற்றிக் காண்பித்து, சில புத்தகங்களையும் அதற்கென வாங்கித் தந்திருக்கும் அந்தப் பெண் நிச்சயமாகப் பாராட்டுக்குரியவர்.

சரி, நான் என்ன புத்தகங்கள் வாங்கினேன் என்று சொல்லவில்லையே? ரொம்ப எதிர்பார்க்காதீர்கள். பிரமாதமாக ஒன்றும் இல்லை. அ.மார்க்ஸின் ‘ஈழத் தமிழ் சமூக உருவாக்கமும் அரசியல் தீர்வும்’, ஜான் பெர்கின்ஸின் ‘அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு’, சாதத் ஹசன் மண்டோ எழுதிய ‘அங்கிள் சாமுக்கு மண்டோ எழுதிய கடிதங்கள்’, பிரம்ம ராஜனின் ‘வார்த்தையின் ரசவாதம்’ என்று அறிவுஜீவித்தனமாக எதுவும் வாங்காமல், பிரேமா பிரசுரத்தின் உள்ளே நுழைந்து, ‘விக்கிரமாதித்தன் கதைகள்’, ‘போதிசத்துவர் கதைகள்’, சந்திரமோகன் எழுதிய மர்ம நாவல்கள் இரண்டு, சிந்தைக்கு விருந்தாகும் குட்டிக் கதைகள் ஆகியவற்றை வாங்கினேன். ஆங்கிலத்திலும் ஏதாவது வாங்கினால்தானே பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியும் என்று ‘ஆக்ஸ்ஃபோர்டு’ ஸ்டாலில் நுழைந்து English-English-Tamil Dictionary புத்தகத்தை வாங்கினேன். மனசு திருப்தியாகவில்லை. மீண்டும் ஒரு ரவுண்டு வந்தேன்.

ஒரு ஸ்டாலில் 50 Detective Stories, 50 Crime Stories, 50 Horror Stories, 50 Ghost Stories... என வரிசையாக அடுக்கியிருந்தார்கள். இந்த நான்கினையும் வாங்கினேன். பழுத்தது ஆயிரத்து நானூத்துச் சொச்சம் ரூபாய்!

இரவு எட்டு மணி போல் வெளியேறினேன். பந்தலின் கீழே கணிசமான கூட்டம் இருந்தது. (புத்தகக் காட்சியைச் சுற்றிப் பார்த்ததில் கால் வலி கண்டவர்களோ!) பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் நகைச்சுவையாக (அப்படித்தானே இருக்க வேண்டும்!) ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். அதைக் கடந்து, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கேண்ட்டீனில் ஒரு காபி சாப்பிடலாம் என்று ஒதுங்கினேன். ஜே.எஸ்.ராகவன் தம்பதி அங்கே தட்டுப்பட்டனர். எழுத்தாளர்கள் சுபாவும். விடை பெற்றேன். “வீட்டுக்குப் புறப்பட்டாச்சா? வாங்களேன், நம்ம காரிலேயே போயிடுவோம்!” என்று அன்பாக அழைத்தார் ராகவன். அவரது வீடு மாம்பலத்தில்.

பிகுவேதும் செய்யாமல் உடனே ஒப்புக்கொண்டு, ராகவன் தம்பதியோடு அரட்டை அடித்தபடி, அவர்களின் ஃபோர்டு ஐகான் காரில், ஏசி குளுமையில் சௌகரியமாக வீடு வந்து சேர்ந்தேன்.

நன்றி: துளசிதளம் வலைப்பூ! புகைப்படம் ஒன்றைக் கேட்காமல் கொள்ளாமல் அங்கிருந்து சுட்டுக்கொண்டதற்காக! துளசி கோபால் கோபிக்க மாட்டார் என்று நம்புகிறேன். பட்டர்ஃப்ளை சூர்யாவுக்கு தாராளமாக அனுமதித்தாரே என்கிற தைரியம்தான்! :-)
.

26 comments:

இன்று எல்லாமே பெருமைக்கு தான். புத்தகக் காட்சியும் தப்பிக்கவில்லை. ்என் நண்பர் வருடாவருடம் புத்தகக்காட்சிக்கு போவார். ஆயிரம் ரூபாயக்கு என் நண்பர் வருடாவருடம் புத்தகக்காட்சிக்கு போவார். ஆயிரம் ரூபாயக்கு 25 சதவிதம் பேர் இப்படி தான் என்று கருதுகிறேன்.
 
நல்லா எளிமையா எழுதியிருக்கீங்க...
 
//‘வார்த்தையின் ரசவாதம்’ என்று அறிவுஜீவித்தனமாக எதுவும் வாங்காமல்,

இந்த ட்விஸ்ட்ல ஏமாந்துட்டேன் :)
 
துளசி டீச்சர் எதுவும் சொல்ல மாட்டார்.

வெளியூர் நண்பர்களுக்காக புத்தகங்கள் வாங்க இன்றும் சென்று வந்தேன்.

உங்கள் ஸ்டைலில் பகிர்விற்கு நன்றி.
 
புத்தகக் காட்சி என சொல்லி, எல்லாவற்றிலும் எள்ளளவும் மிகையில்லாமல் எதார்த்தமாய் இருந்தது.

உங்களின் அனுபவங்கள் எங்களுக்கு பாடம்.

பிரபாகர்.
 
புக் ஃபேர் கவரேஜ்களில் என்ன வருந்தம்னா.. “நேத்து செம பார்ட்டிடா மச்சி! ஃபுல்லா சரக்கடிச்சுட்டு... புக் ஃபேர் போயி ஃபோட்டோ எடுத்துட்டு வந்தோம்' என்ற ரேஞ்சுக்கு பதிவுகள் அதிகமாக காணப்படுவதுதான். :)
 
புக் ஃபேர் கவரேஜ்களில் என்ன வருந்தம்னா.. “நேத்து செம பார்ட்டிடா மச்சி! ஃபுல்லா சரக்கடிச்சுட்டு... புக் ஃபேர் போயி ஃபோட்டோ எடுத்துட்டு வந்தோம்' என்ற ரேஞ்சுக்கு பதிவுகள் அதிகமாக காணப்படுவதுதான். :)
 
//அறிவுஜீவித்தனமாக எதுவும் வாங்காமல், பிரேமா பிரசுரத்தின் உள்ளே நுழைந்து, ‘விக்கிரமாதித்தன் கதைகள்’, ‘போதிசத்துவர் கதைகள்’, சந்திரமோகன் எழுதிய மர்ம நாவல்கள் இரண்டு, சிந்தைக்கு விருந்தாகும் குட்டிக் கதைகள் ஆகியவற்றை வாங்கினேன்//

நிறைய பேர் இந்த உண்மையினை சொல்லுவதில்லை. உங்களின் நகைச்சுவையான எழுத்து நடை
அருமை.
 
என்ன சார், கொஞ்ச நாளா ஒரு பதிவும் இல்லையே? ரொம்ப பிஸியா? உலக புத்தக காட்சி தில்லியில் 30 ஜனவரியிலிருந்து 7 பிப்ரவரி வரை நடக்க இருக்கிறது. விகடன் ஸ்டால் உண்டா?

வெங்கட் நாகராஜ்
புது தில்லி
www.venkatnagaraj.blogspot.com
 
அடடே, நீங்கள் சொன்ன நேரத்தில் நான் அங்குதான் இருந்தேன் சார் (கேன்டீனில் ஜே. எஸ். ராகவன், சுபா-வைக்கூடப் பார்த்தேன்) ஜஸ்ட் மிஸ் :)

- என். சொக்கன்,
பெங்களூரு.
 
அடடா! நெம்ப மிஸ் பண்ணிட்ட உணர்வு ஏற்படுது. மசால் தோசையும், மொரு மொறு வடையும் போளியும் நினைக்க நினைக்க வாய் நம நமங்குதே!
 
அடடா! நெம்ப மிஸ் பண்ணிட்ட உணர்வு ஏற்படுது. மசால் தோசையும், மொரு மொறு வடையும் போளியும் நினைக்க நினைக்க வாய் நம நமங்குதே!
 
புத்தக காட்சி பார்த்த அனுபவத்தையே சுவையாக கட்டுரை முச்சூடும் மெல்லிய நகைச்சுவை இழையோட விவரித்தது ஏதோ நாங்களும் உங்களுடனே வந்தது போன்ற உணர்வை தந்தது. நன்றி.
 
@ தமிழ் உதயம்! வரி ஏதோ விட்டுப் போயிருக்கிறது. மற்றபடி தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி!

@ நன்றி அண்ணாமலையான்!

@ பின்னோக்கி! என்ன ஏமாந்தீங்கன்னு சரியா புரியலை!

@ நன்றி சூர்யா!

@ என்னது... பாடமா?! இதெல்லாம் ரெம்ம்ம்ப ஓவர் பிரபாகர்!

@ ‘பீர்’ என்ற பெயரில் இப்படியொரு பின்னூட்டம் இட்டிருப்பது ஓர் இனிய முரண்!

@ சைவக் கொத்துப் பரோட்டா! பெயரைக் கேட்டதும் கொஞ்சம் பயந்துகொண்டேதான் தங்கள் பின்னூட்டத்தைப் படித்தேன். நல்லவேளை, என் பதிவைக் கொத்துப் பரோட்டா எதுவும் போடவில்லை தாங்கள்! :)
 
@ வி.நா.வெங்கடராமன், விசாரிப்புக்கு நன்றி! விகடன் ஸ்டால் அங்கே அநேகமாக இருக்காது.
 
புத்தக காட்சிக்கு போகாமலேயே போய் வந்த மாதிரி இருந்தது உங்கள் பதிவை படித்ததும்.

ரேகா ராகவன் .
 
@ சொக்கன்! உங்களை நான் அங்கு பார்க்கவில்லையே? (உங்கள் முகம் எனக்குத் தெரியும். பார்த்தால் அடையாளம் கண்டிருப்பேன்!) வந்திருந்தீர்களா! சந்திக்க இயலாமற் போனதில் வருத்தம்தான்!
 
@ லதானந்த்! உங்களையும் புத்தகக் காட்சிக்கு அவசியம் எதிர்பார்த்தேன்!
 
@ நன்றி ராஜாராமன்!
 
@ நன்றி ரேகா ராகவன்!
 
pls send your postal address for vellinila's readers group - sharfudeen
 
புத்தகக் காட்சிக்கு நீங்கள் தனியாகப் போய் வரவில்லை, எங்களையும் கையைப் பிடித்து அழைத்துச் சென்றிருக்கிறீர்கள். வெகு இயல்பான நடையில் அழகிய பதிவு!
 
//நான் இலக்கியவாதி இல்லை; சாமானியன்//

இதை நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்கிறேன்.

//ஐந்நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் செலவழித்துப் புத்தகங்கள் வாங்கும் அளவுக்கு நான் வசதியானவன் இல்லை//

என்ன சார், வசதியானவர்கள் மட்டும் தானா இப்படி அதிக விலை கொடுத்து புத்தகம் வாங்குகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? இல்லவே இல்லை...

நல்ல இயல்பான பதிவு. பதிவின் மூலம் உங்கள் மனதைப் படிக்க முடிந்தது.
 
//நான் இலக்கியவாதி இல்லை; சாமானியன்//

இதை நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்கிறேன்.

//ஐந்நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் செலவழித்துப் புத்தகங்கள் வாங்கும் அளவுக்கு நான் வசதியானவன் இல்லை//

என்ன சார், வசதியானவர்கள் மட்டும் தானா இப்படி அதிக விலை கொடுத்து புத்தகம் வாங்குகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? இல்லவே இல்லை...

நல்ல இயல்பான பதிவு. பதிவின் மூலம் உங்கள் மனதைப் படிக்க முடிந்தது.
 
பின்னோக்கி said...
//‘வார்த்தையின் ரசவாதம்’ என்று அறிவுஜீவித்தனமாக எதுவும் வாங்காமல்,

இந்த ட்விஸ்ட்ல ஏமாந்துட்டேன் :)

January 6, 2010 11:09 PM

ரீப்பீட்ட்டே......ய்.....! நல்ல பதிவு சார்!
 
அன்பு ரவி பிரகாஷ் ,
வணக்கம் ... மிக அருமை .. ஒன்று விடாமல் எளிமையாக இனிமையாக எடுத்து சொல்கிறிர்கள் .. நானும் சுஜாதாவின் , விகடனின் தீவிர வாசகன் .. உங்கள் பெயர் அடிக்கடி சாவி , விகடன் நிறைய பார்த்திருக்கிறேன் .. பத்திரிக்கை காரர்கள் என்றால் ( நீங்கள் ஒரு பதிவில் குறிப்பிட்ட மாதிரி ) பின் மண்டையில் 1000w விளக்கு இருப்பது போல் தான் இருப்பார்கள் என்போன்று பலரும் நினப்பார்கள் .. அந்த நினைப்பை தகர்த்து எறிந்து வீட்டிர்கள் .. எழுத்துதான் முக்கியம் , அதிலும் இனிமையும் எளிமையும் தான் அதிமுக்கியம் என்று உங்கள் ஒவ்வொரு பதிவும் எடுத்து காட்டுகிறது ... குறிப்பாக மகளையும் மகனையும் வைத்து தாங்கள் தொடங்கிய ப்ளாக் பற்றிய பதிவு உண்மையிலேயே நேர்மையான இனிமையான பதிவு.... வாழ்க வளமுடன்.. வருகிறேன்
பத்மநாபன்

( நானும் வலை பதிவு உலகில் சின்னதாக கால் ( இல்லை கை ) பதித்துள்ளேன் .. வந்து வாழ்த்தினால் ஊக்கமாக இருக்கும் aanandhavaasippu.blogspot.com .... நன்றி )