உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, January 13, 2021

மகா பெரியவா!

 

தெய்வம் மனித வடிவில் பூமியில் அவதரித்து வந்தது பற்றிய புராணக் கதைகளைப் படித்திருக்கிறோம். நம் வாழ்நாளிலும் அப்படியொரு தெய்வத்துடனே வாழ்ந்திருக்கிறோம், வளர்ந்திருக்கிறோம், அந்த தெய்வத்தின் அன்பு ஆசிகளுக்குப் பாத்திரமாகியிருக்கிறோம் என்பது நமக்கான வாழ்நாள் கொடுப்பினை.

ஆம்... சிவபெருமானின் அவதாரமாகவே கருதப்பட்டவர் ‘மகா பெரியவா’ என்று பக்தர்களால் போற்றப்பட்ட மகாஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். நடமாடும் தெய்வமாக நமக்கெல்லாம் அருள்பாலித்து வந்த அந்த மகான் தம் பூதவுடலைத் துறந்து, மீண்டும் சிவனோடு ஐக்கியமாகிவிட்ட தினம் இன்று.

மகா பெரியவாளைப் பற்றி ரா.கணபதியும், ரமணி அண்ணாவும், என் இனிய நண்பர் பி.என்.பரசுராமனும், இன்னும் பல ஆன்மிகப் பெரியோர்களும், அவரோடு பழகிய பிரபலங்களும் சொல்லாத விஷயங்களையா நான் சொல்லிவிடப் போகிறேன்? பெரியவா பற்றி எழுதுகிற அளவுக்கு எனக்கு யோக்கியதை இருப்பதாக நான் கருதவில்லை. இந்தப் பதிவையேகூடத் தயங்கித் தயங்கித்தான், இதில் ஒரு சின்ன வார்த்தைகூட அதிகப்பிரசங்கித்தனமாக இருந்துவிடக்கூடாதே என்கிற பயத்தோடுதான் எழுதுகிறேன்.

விழுப்புரத்தில் அவதரித்த மகான் அவர். விழுப்புரம் சங்கர மடத்தில் அவர் முகாமிட்டிருந்தபோது, குடும்பத்தாரோடு நானும் சென்று அவரை தரிசித்தது ஒரு கனவுபோல் என் ஞாபக அடுக்குகளில் படிந்திருக்கிறது. நானும் விழுப்புரத்தான் என்பதால், அவரின் அருள்மழையில் ஒரு சொட்டேனும் என்மீது விழுந்திருக்கும் என்று ஏதோ ஓர் உள்ளுணர்வு சொல்கிறது. இது குழந்தைத்தனமான உணர்வுதான் என்பது புத்திக்குப் புரிந்தாலும், அதை வலுக்கட்டாயமாக ஒதுக்கிவிட்டு, அந்த உணர்வை வலுவாக நம்பவே என் மனம் விழைகிறது.

மகா பெரியவா தம் கடைசி காலத்தில் தங்கியிருந்த தேனம்பாக்கம் இல்லத்துக்கு என் அம்மாவை சில ஆண்டுகளுக்கு முன் அழைத்துப் போயிருந்தேன். மிகச் சிறிய எட்டுக்கு எட்டு அறை அது. குனிந்துதான் உள்ளே செல்ல வேண்டும். உள்ளே சென்று தரிசித்தோம். இருளாக இருந்தது. அந்த மகானின் சந்நிதியில் நின்றிருந்தபோது, சாந்நித்தியம் மிகுந்த ஒரு திருத்தலத்தின் கருவறைக்குள் நின்றிருக்கும் உணர்வு ஏற்பட்டது. சுவர் ஓரமாக பெரியவா படம் வைத்து, ஒரு விளக்கு மட்டும் ஏற்றப்பட்டிருந்தது. முன் வலது பக்கத்தில் பாத்திரங்கள் கழுவும் சிறு தொட்டிமித்தம்போல் ஓர் இடம். பெரியவா தினமும் அங்கு அமர்ந்துதான் ஸ்நானம் செய்வார் என்று அங்கிருந்த அணுக்கத் தொண்டர்கள் சொன்னார்கள்.

அந்த அறையில், கம்பியில்லாத ஜன்னல் போன்று ஓரடிக்கு ஓரடி அளவில் ஒரு சின்ன துவாரம் இருந்தது. ‘இது எதற்காக?’ என்று அங்கிருந்தவர்களைக் கேட்டேன். பெரியவா தமது கடைசி காலத்தில், தம்மைத் தாமே சிறைப்படுத்திக்கொண்டாற்போன்று இந்தச் சின்ன அறையில்தான் இருந்தாராம்; இதைவிட்டு அவர் வெளியே வரவே மாட்டாராம். “அவருக்கு இந்தச் சிறிய ஜன்னல் திட்டின் வழியாகத்தான் நாங்கள் உணவு கொடுப்போம். அதை அவர் எடுத்து உண்டுவிட்டு, பாத்திரங்களைச் சுத்தமாகக் கழுவி மீண்டும் அங்கேயே வைத்துவிடுவார்” என்றார்கள். வாசலை மறித்தாற்போல் ஒரு கிணறு. பெரும்பாலும் சுவாமிகள் தாமேதான் ஒரு சிறிய வாளியில் இந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் குளிப்பாராம்.

பாரதப் பிரதமர் இந்திரா காந்தி ஒருமுறை பெரியவாளை தரிசிக்க வந்து, இந்தக் கிணற்றுக்கு மறுபுறம் ரொம்ப நேரம் காத்துக்கொண்டிருந்து, தரிசனம் பெற்றுச் சென்றாராம். அவர் தேர்தலில் தோற்றுப் பதவியை இழந்திருந்த நேரம் அது. பெரியவாள் கை உயர்த்தி இந்திராவை ஆசீர்வதிக்க, அந்தப் புனித கரத்தையே அடுத்த தேர்தலில் தனது இந்திரா காங்கிரஸ் கட்சிக்கான ‘கை’ சின்னமாக அறிவித்து வென்றதாகச் சொல்வார்கள்.

என் அம்மாவுக்கு ஏழெட்டு வயதாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தைப் பின்னாளில் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது திருக்கழுக்குன்றத்தில் இருந்தது அவர்களின் வீடு. அம்மாவின் அம்மா, அதாவது என் பாட்டி போலியோவால் பாதிக்கப்பட்டவர். சட்டென்று எழுந்து நடந்து வர முடியாது. ஒரு நாள் அவர் வீட்டின் நடை, தாழ்வாரம், முற்றம் எனப் பல கட்டுகளுக்குப் பின்னால், தோட்டத்துக் கதவு அருகில் அமர்ந்திருந்தார். வாசலில் மேளச் சத்தமும் அணுக்கத் தொண்டர்களின் ‘ஹர ஹர சங்கர’ கோஷமுமாக, பெரியவா மேனாவில் செல்வது தெரிந்தது. தரிசிக்க வேண்டும் என்ற அவா இருந்தும், பாட்டி எழுந்திருப்பதற்குள் வாசலில் மேனா நகர்ந்துவிட்டது. தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் அப்படியே அமர்ந்து, வாசல் தெருவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாராம் பாட்டி.

அப்போது, மேனாவைச் சுமந்து சென்றவர்களைக் கொஞ்சம் நிற்கச் சொல்லியிருக்கிறார் பெரியவா. பின்னோக்கி சற்று தூரம் நடந்து வரச் சொல்லியிருக்கிறார். என் பாட்டியின் வீட்டு வாசலுக்கு எதிரே வந்ததும் மேனா நின்றது. பெரியவா மேனாவிலிருந்தபடியே வீட்டுக்குள் பார்த்துக் கையை அசைத்து என் பாட்டிக்கு ஆசியளித்த பின்பு, மேனா மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்ததாம்.

ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர..! 

 - 8.01.2021

0 comments: